மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் .....

Loading...

மஞ்சளின் மகிமைகள்

மஞ்சள் கிழங்கில் இருந்து தயாரிக்கப்படும் "குர்குமின்' மாத்திரை கேன்சர் நோயாளிகளுக்கு உற்ற நண்பன் என விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர்.
உலகளவில், புற்றுநோய் மருத்துவர்களும், பல்வேறு ஆராய்ச்சி நிறுவனங்களும் தலை மற்றும் கழுத்துப் பகுதிகளில் ஏற்படும் கேன்சர் நோய்க்கு மஞ்சள் சார்ந்த பொருட்களின் பயன்பாடு குறித்து தீவிர ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், பெங்களூரு மஜும்தார் ஷா கேன்சர் சென்டரின் பயோ-டெக்னாலஜி துறை மருத்துவர்கள், வாய்ப்புற கேன்சர் நோயாளிகளுக்கு, "குர்குமின்' மாத்திரையால் ஏற்படும் விளைவுகள் குறித்து ஆய்வு நடத்தினர்.கடந்த மூன்று ஆண்டுகளாக நடந்த ஆய்வு விவரங்கள் தொகுக்கப்பட்டு வருகின்றன. வாய்ப்புற கேன்சர் உள்ள நோயாளிகள் 220 பேர், ஆய்வில் கலந்து கொண்டனர்.அனைவருக்கும், மஞ்சள் கிழங்கில் இருந்து தயாரிக்கப்பட்ட, "குர்குமின்' மாத்திரை (1.2 கிராம்), பல வேளைகளில் சிகிச்சை காலம் முழுவதும் கொடுக்கப்பட்டது. ஆரம்பத்திலேயே பலருக்கு வியத்தகு முன்னேற்றங்கள் இருந்தாலும், சிகிச்சை தொடர்ந்து நடந்தது.""முதலில், வெறும் மஞ்சளை குழைத்து நோயாளிகள் வாயில் தடவப்பட்டது. இதற்கு நல்ல பலன் இருந்தாலும், பற்களில் கறை ஏற்பட்டு பெரும் பிரச்னையாகி விட்டது. பின், "குர்குமின்' மாத்திரை கொடுக்கப்பட்டது.
இதுகுறித்த முழுமையான விவரங்கள் டிசம்பர் மாதத்தில் தான் தெரிய வரும்,'' என, ஆராய்ச்சித் தலைவர் மோனி ஆபிரகாம் தெரிவித்தார்."குர்குமின்' மாத்திரையின் விளைவுகள் குறித்து ஆய்வு செய்த பிரிட்டன் விஞ்ஞானிகளும், கேன்சர் செல்களை அழிப்பதில், "குர்குமின்' மாத்திரை தீவிரமாக செயலாற்றுவதாகக் கூறியுள்ளனர்.தற்போது, அமெரிக்க மற்றும் ஜப்பான் நாட்டு மக்களும், "குர்குமின்' மாத்திரைகளை, பாலில் கலந்து உட்கொள்கின்றனர். இந்தியாவில் அதிக ஆய்வுகள் நடந்ததில்லை என்றாலும், இப்போதைய ஆய்வுகளின் முன்னேற்றம் காரணமாக, "குர்குமின்' மாத்திரைகள் கேன்சர் நோய்க்கு பரிந்துரைக்கப்படுவது அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.அரை டீ ஸ்பூன் அளவு சாதாரண மஞ்சள் தூளை பால் அல்லது வெந்நீரில் கலந்து குடித்தால், கேன்சர் வருவதை முன்கூட்டியே தடுக்க முடியும் எனவும், ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.


நன்றி:தினமலர் 26.10.2010

நம்பிக்கை நட்சத்திரம்

நாம் விரும்புகிறோமோ இல்லையோ, ராகுல் காந்தி, நரேந்திர மோடி, மாயாவதி ஆகிய மூவர்தான் எதிர்காலத்தில் அரசியல் நாயகர்களாக இருப்பார்கள். இந்த மூவருக்குமே 2012-ம் ஆண்டு முக்கியமானதாக இருக்கும். அவர்களின் அரசியல் செல்வாக்கு என்ன என்பது அப்போது தெரியவரும். உ.பி. தேர்தல் ராகுல் காந்தியின் அரசியல் செல்வாக்கை நிர்ணயிக்கும் என்று தெரிய வருகிறது.

 இதேபோல, தற்போதைய உ.பி. முதல்வர் மாயாவதியின் அரசியல் எதிர்காலமும் அதில்தான் அடங்கியிருக்கிறது என்று சொன்னால் மிகையாகாது. குஜராத் முதல்வர் நரேந்திர மோடி அரசியல் வானில் நட்சத்திரமாகத் தொடர்ந்து ஜொலிப்பாரா அல்லது அவரது செல்வாக்கு சரிந்து விடுமா என்பதும் 2012-ல் தெரிந்துவிடும்.

சமீபத்தில் குஜராத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் 6 மாநகராட்சிகளிலும் பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது. இது பாஜகவுக்கு மட்டுமல்ல; எதிர்க்கட்சிகளுக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தேர்தலில் நரேந்திர மோடி எதிர்க்கட்சியினரை மட்டுமல்லாது, கட்சியின் அதிருப்தியாளர்களையும் சந்திக்க வேண்டியிருந்தது. ஷேக் சொராபுதீன் போலி என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம், இதுதொடர்பாக மோடிக்கு நெருக்கமானவரும் முன்னாள் அமைச்சருமான அமீத் ஷா கைது செய்யப்பட்ட விவகாரத்தை முன்வைத்து காங்கிரஸ் பிரசாரம் செய்தபோதிலும், அது உள்ளாட்சித் தேர்தலில் எடுபடவில்லை. உள்ளாட்சித் தேர்தலை சவாலாக எடுத்துக் கொண்டு மோடி பிரசாரத்தில் ஈடுபட்டார். தினமும் பத்துக்கும் மேலான பேரணியில் கலந்து கொண்டு உள்ளூர்ப் பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் தராமல், தேசியப் பிரச்னைகளை முன்வைத்து பிரசாரத்தில் ஈடுபட்டார். பல்வேறு எதிர்ப்புகளையும் மீறி உள்ளாட்சித் தேர்தலில் மோடி வெற்றிவாகை சூடியுள்ளார். நரேந்திர மோடி மெல்ல மெல்ல செல்வாக்கை இழந்து வருகிறார் என்ற பிரசாரம் இதன் மூலம் பொய்த்துவிட்டது எனலாம். குஜராத் மாநிலம், ஹிந்துத்துவா கொள்கைப் பிடிப்பாளர்களின் சோதனைக் களமாக இருந்து வருகிறது.

மேலும் மற்ற மாநிலங்கைவிட வேகமான வளர்ச்சி அடைந்து வருகிறது. குஜராத் மாநிலத்தில் தனது அரசியல் உத்திகள் மூலம் காங்கிரஸ் கட்சியைப் பலவீனப்படுத்த முயன்று அதில் வெற்றியும் பெற்றுள்ளார் முதல்வர் நரேந்திர மோடி. முஸ்லிம்கள் அதிகம் உள்ள ஜுனாகத்தில் மட்டும் காங்கிரஸ் வெற்றிபெற முடியாவிட்டாலும், கணிசமான வாக்குகளைப் பெற்றுள்ளது. இல்லையெனில், காங்கிரஸ் உள்ளாட்சித் தேர்தலில் படுதோல்வியைத் தழுவியிருக்கும்.

குஜராத்தில் காங்கிரஸ் கட்சி மெல்ல மெல்ல செல்வாக்கை இழந்துவருகிறது என்பதையே உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளன. இது காங்கிரஸ் தலைமைக்குக் கவலையை ஏற்படுத்தக்கூடிய விஷயமாகும். காங்கிரஸ் கோட்டையாகக் கருதப்படும் கத்லால் சட்டப்பேரவைத் தொகுதியையும் சமீபத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பா.ஜ.க. கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 கடந்த 50 ஆண்டுகளாக காங்கிரஸ் இத் தொகுதியைத் தக்கவைத்துக் கொண்டிருந்தது. உண்மை என்னவெனில், குஜராத்தில் பா.ஜ.க.வுக்கு மாற்றுச் சக்தியாக எப்படிச் செயல்படுவது எனத் தெரியாத நிலையில் காங்கிரஸ் உள்ளது. மோடிக்கு நிகரான தலைவர்கள் காங்கிரஸில் இல்லை; அவரது சவால்களைச் சமாளிக்கத் தெரிந்த அரசியல் தலைவர்களும் காங்கிரஸில் இல்லை.

கடந்த ஆண்டு கட்சியின் அகில இந்தியத் தலைவராக யாரைத் தேர்ந்தெடுப்பது என்ற கேள்வி எழுந்தபோது, பா.ஜ.க. இரண்டு பேரின் பெயரை ஆர்.எஸ்.எஸ். பரிசீலனைக்காக பரிந்துரைத்தது. ஒருவர் நிதின் கட்கரி. மற்றொருவர் நரேந்திர மோடி. நரேந்திர மோடி கட்சித் தலைவராக வர வேண்டும் என்றுதான் எல்.கே. அத்வானி விரும்பினார். ஆனால், யாரும் எதிர்பாராதவிதமாக கட்சித் தலைமைப் பதவியில் தனக்கு விருப்பமில்லை என்று மோடி தெரிவித்து விட்டார்.

அடுத்த பொதுத் தேர்தல் 2014-ம் ஆண்டில்தான். அதற்கான போராட்டக் களம் தொடங்குவது 2012-ல்தான். இதை உணர்ந்துகொண்டதால்தான் நரேந்திர மோடி, பா.ஜ.க. தலைவர் பதவியில் ஆர்வம் காட்டாமல் இருந்து விட்டார். 2012-ல் உத்தரப் பிரதேச மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெற உள்ளன. அதுதான் அரசியல் கட்சிகளுக்கு அரையிறுதிப் போட்டி போன்றது.

உ.பி. தேர்தலில் பா.ஜ.க. வெற்றி என்பது அவ்வளவு சுலபமான காரியமல்ல. நாட்டின் மிகப்பெரிய மாநிலமாக உள்ள உ.பி.தான் அரசியல் கட்சிகளின் சோதனைக் களமாகும். உ.பி. தேர்தலில் பா.ஜ.க.வுக்குப் படுதோல்வி ஏற்படும்பட்சத்தில், அடுத்த பொதுத் தேர்தலில் பா.ஜ.க.வுக்குத் தலைமையேற்று வழிநடத்தும் வாய்ப்புகள் நழுவிப் போய்விடும். இதை மோடி நன்கு உணர்ந்திருந்ததால்தான், கட்சித் தலைமைப் பதவியேற்க தற்போது விருப்பமில்லை என்று கூறிவிட்டார்.

பா.ஜ.க.வின் தற்போதைய தலைவர் நிதின் கட்கரியின் பதவிக் காலம் 2012-ம் ஆண்டு முடிவடைய உள்ளது. வரவிருக்கும் பஞ்சாயத்து மற்றும் நகராட்சித் தேர்தலிலும் பா.ஜ.க. வெற்றி பெற்று, குஜராத் மாநிலத்தில் அடுத்து நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் வென்று பா.ஜ.க. மீண்டும் ஆட்சியைப் பிடிக்குமானால், அடுத்த முறை கட்சித் தலைவர் பதவியை மோடி பெற வாய்ப்பு உள்ளது.

தான் முதன்முறையாக மாநில முதல்வராகப் பதவி வகித்தபோது ஏற்பட்ட களங்கத்தைப் போக்கும் முயற்சியிலேயே கடந்த இரண்டு ஆண்டுகளாக மோடி செயல்பட்டு வருகிறார்.  பாஜக தலைவர்களையும், ஆர்.எஸ்.எஸ்., விசுவ ஹிந்து பரிஷத் போன்ற அமைப்புகளில் உள்ள குஜராத்தைச் சேர்ந்த முக்கியத் தலைவர்களையும் மோடி மதிப்பதில்லை. அவர் தன்னிச்சையாகச் செயல்பட்டு வருகிறார் என்ற குற்றச்சாட்டு இருந்து வந்தது.

இதையடுத்து, இப்போது மோடி எந்த ஒரு விஷயமானாலும் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்வதில்லை. நான் கட்சியின் சாதாரணத் தொண்டன்தான். எதுவானாலும் கட்சித் தலைமைதான் முடிவு செய்யும் என்பதுபோல் பேசி வருகிறார். சமீபத்தில் உள்ளாட்சித் தேர்தலில் கிடைத்த வெற்றி எனது செல்வாக்குக்குக் கிடைத்த வெற்றியல்ல, பா.ஜ.க. தலைவர்களின் உழைப்புக்குக் கிடைத்த வெற்றி என்று மோடி கூறியுள்ளார்.
கோத்ரா கலவரச் சம்பவத்துக்குப் பிறகு சரிந்திருந்த தனது செல்வாக்கை மீட்டெடுப்பதிலேயே மோடி கவனம் செலுத்தி வருகிறார். இச் சம்பவத்துக்குப் பின் நாடு முழுவதும் நரேந்திர மோடியைப் பற்றிய தவறான எண்ணம் உருவாகியிருந்தது. மேலும் மேற்கத்திய நாடுகள்கூட மோடியின் வருகையை விரும்பவில்லை.

இதைத் தொடர்ந்தே அவர் மக்கள் பிரச்னையிலும், மாநிலத்தின் வளர்ச்சியிலும் அதிக கவனம் செலுத்தத் தொடங்கினார். சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் இடங்களில் அவர்களுக்குத் தேர்தலில் போட்டியிட வாய்ப்புக் கொடுத்தார். உள்ளாட்சித் தேர்தலில் அமோக வெற்றி பெற்றதும் முஸ்லிம்களின் வாக்குகள்தான் வெற்றிக்கு முக்கியக் காரணம் என்று மோடி கருத்துத் தெரிவித்தார். இதன் மூலம் முஸ்லிம்கள் வாக்கு இல்லாவிட்டால், இந்த வெற்றி சாத்தியமில்லை என்று அவர் மறைமுகமாகக் குறிப்பிட்டார்.

பா.ஜ.க.வில் தலைவர்கள் பலர் இருந்தாலும், நரேந்திர மோடிதான் மக்கள் ஆதரவைத் திரட்டக் கூடிய செல்வாக்கு மிகுந்த தலைவர் என்ற கருத்து ஆர்.எஸ்.எஸ். தலைவர்களிடம் உள்ளது.இதற்குக் காரணம் அவரது தேர்தல் வெற்றிதான். ஆனாலும், அவரை அடுத்த தேர்தலில் பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில், இதை பா.ஜ.க.வின் கூட்டணிக் கட்சியினரே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவர் நிதிஷ்குமாருக்கும் நரேந்திர மோடிக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. அவரை தேர்தல் பிரசாரத்துக்காக எந்தக் காரணத்தைக் கொண்டும் பிகார் மாநிலத்துக்குள் அனுமதிக்க முடியாது என்று திட்டவட்டமாகக் கூறி விட்டார்.

 பாஜக தலைவர்களில் ஒருவரான சுஷ்மா ஸ்வராஜ் கூட்டணிக் கட்சிகளுடன் நெருக்கமான தொடர்பு வைத்திருக்கிறார். எதிர்க்கட்சித் தலைவர் என்ற அந்தஸ்தில் உள்ள அவர், பா.ஜ.க.வுக்கும் கூட்டணிக் கட்சியினருக்கும் பாலமாக இருந்து செயல்பட்டு வருகிறார்.
 நரேந்திர மோடி கட்சித் தலைவராவதற்கு அருண் ஜேட்லி ஆதரவு தெரிவித்து வருகிறார்.  ஒருவேளை மோடி தலைவராவதை ஏற்றுக்கொள்ள முடியாத சூழ்நிலை உருவானால், தனக்கு அந்த வாய்ப்பு உருவாகும்பட்சத்தில், தன்னை மோடி ஆதரிப்பார் என்ற எண்ணம் இதற்குக் காரணமாக இருக்கலாம்.

2012-ம் ஆண்டு குஜராத் தேர்தலுக்குப் பிறகு பா.ஜ.க.வின் தலைமைப் பொறுப்பை ஏற்க நரேந்திர மோடி முயற்சிகள் மேற்கொள்ளக்கூடும்.
உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் அவருக்கு வெற்றிப்படிக்கட்டாக அமைந்துள்ளது. இந்த வெற்றி அவருக்குக் கிடைத்துள்ள மிகப்பெரிய வெற்றியாகும். தனது அரசியல் ராஜதந்திரம் மூலம் கட்சிக்குள் இருக்கும் எதிரிகளை இருக்கும் இடம் தெரியாமல் செய்து விட்டார்.

நரேந்திர மோடி அரசியல் வானில் மிக உயர்ந்த இடத்தை எட்டிப் பிடிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். உள்ளாட்சித் தேர்தல் வெற்றி அவருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. கட்சிக்குள்ளேயே பலராலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய தலைவராக அவர் உருவாகி வருகிறார். நேரம் வரும்போதுதான் ஒரு சிறந்த அரசியல் தலைவர் என்பதை நிரூபிக்கக் காத்திருக்கிறார் மோடி என்றால் மிகையாகாது.

நன்றி: நீரஜா சௌத்ரி   தினமணி 22 Oct 2010

பாரதம் வழக்கற்றால், பாரதம் நிலைகுலையும்! – பழ.கருப்பையா

ரண்டாயிரத்தி ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னர் சீனத்தில் ஒரு மெய்யியல் பள்ளி(School of thought) தோன்றியது. அதற்கு தாவோயியம் (Taoism) என்று பெயர். அதைத் தோற்றுவித்தவன் லாவோட்சே (LaoTse). மனித அறிவுக்கு இயலக் கூடியதுதானா என்று வாய் பிளக்கச் செய்யும் தாவோயியத்தை நீக்கி விட்டுப் பார்த்தால், சீனா – மனிதர்களும், பன்றிகளும் பல்கிப் பெருத்த நாடு என்ற அளவோடு முடிந்து விடும்!பழ.கருப்பையா

அதுபோல் இந்தியாவின் வியப்பு புத்தன் – பொருள்களெல்லாம் சார்புக் காரணங்களால் தோன்றுவன (Dependent Origination) என்னும் கொள்கையைக் கண்டறிந்து, நம்முடைய துயங்களுக்கெல்லாம் முடிவு தேடினான் அப்பேரறிவாளன்! ‘செய்வோனில்லை; செயல் உண்டு’ என்றும், ‘ஓடுவோனில்லை; ஓட்டம் உண்டு’ என்றும் புத்தன் சொல்வதைப் புரிந்து கொள்ள முடியுமானால், எல்லா முடிச்சுகளும் அவிழ்ந்து விடும்! 

அதே காலகட்டத்தை ஒட்டிப் படைக்கப்பட்ட இதிகாசங்கள்தாம் மகாபாரதமும், இராமாயணமும். இவை இரண்டையும் மிஞ்சி ஒரு கதை உலக மொழிகள் எதிலும் இல்லை. தர்மத்தை நிலை நாட்ட பண்டைய முனிவர்கள், கேட்பதற்கும் படிப்பதற்கும் இன்பம் தரக் கூடிய கதை வடிவங்களைத் தேர்வு செய்து கொண்டார்கள். 

தாவோயியம் என்பதன் சாரமே எதிர் எதிர்க் கூறுகளின் ஒத்திசைவில்தான் (Harmony of opposites) உலகத்தின் இயக்கம் நிகழ்கிறது என்பது! முழுக்கத் தூய்மையானதும் இல்லை; முழுக்கத் தூய்மையற்றதும் இல்லை என்று தாவோயியம் கூறும். ஒரு வட்டத்தின் நடுவை வடிவு எழுதி அதை இரண்டாகப் பிளந்தால், இரு சம பகுதிகளில் ஒரு பகுதி முழு வெள்ளை; ஆனால் அதில் ஒரு சிறு கறுப்பு வட்டம்; இன்னொரு பகுதி முழுக் கறுப்பு; ஆனால் அதில் ஒரு சிறு வெள்ளை வட்டம்! 

இதைத்தான் சீன அரசு இலச்சினைகளில் பொறித்து, தன்னுடைய மண்ணின் அறிவு மேம்பாடு என்று உலகுக்குத் தம்பட்டம் அடித்துக் காட்டிக் கொள்கிறது. இது நியாயமான தம்பட்டமே! 

ஆனால், தாவோயியம் முழுமை பெற்ற தத்துவமாக இந்தியாவில் வளர்த்தெடுக்கப்படவில்லையே தவிர, அதன் கூறுகள் பட்டினத்தாரிலிருந்து மகாபாரதம் வரையிலும் ஆங்காங்கே வெளிப்படுகின்றன. 

தருமர், தருமத்தின் ஒட்டுமொத்த மனித வடிவம்! அவரிடமும் ஒரு சிறு அதருமக் கூறு வெளிப்படுகிறது என்று மகாபாரதம் சொல்கிறது. துரோணர் எல்லோருக்கும் ஆசிரியர். துரியோதனின் படைகளுக்குத் தலைமை தாங்கிக் களத்தில் பாண்டவர்களுக்கு எதிராக அணிவகுத்து நிற்கிறார்.

பீமன் அன்றையப் போரில் அஸ்வத்தாமன் என்னும் பெயருடைய ஒரு போர் யானையைக் கொன்று விட்டான்.

தேவைப்பட்டால் பொய்ச் சொல்லக் கூடிய திருடர்களே எல்லாரும் என்று எண்ணிய துரோணர், எதிரே நின்ற தருமரைப் பார்க்கிறார்.

துரோணர், தருமரைப் பார்ப்பதன் நோக்கத்தை அறிந்து கிருஷ்ணனும், ஆழ்ந்த கவலையோடு தருமரைப் பார்க்கிறான். எந்த நிலையிலும் மலை போல் அசைவற்றவராயிற்றே தருமர்!

“அஸ்வத்தாமன் இறந்து விட்டான்” என்று உரக்கச் சொல்லிய தருமர், ‘அஸ்வத்தாமன் என்கிற யானை’ என்று மிகத் தாழ்ந்த குரலில் சேர்த்துச் சொல்கிறார்!அதற்குப் பிறகு துரோணர் புத்திர பாசத்தால் நிலை குலைந்து போகிறார். அன்றையப் போர் துரியோதனனுக்குத் தோல்வியில் முடிந்தது என்பதெல்லாம் பின் விளைவுகள். அவை கிடக்கட்டும்!

தருமர் இப்படி ஒரு பொய்யைச் சொன்னதும், அதுவரையில் மண்ணின் மீது படாமல், அதற்குச் சிறிது மேலே சென்று கொண்டிருந்த தருமரின் தேர், ஒரு விமானம் கீழிறங்கி ஓடுபாதையைத் தொடும்போது, உள்ளிருப்பவர்களுக்கு ஒரு அதிர்வைத் தருவது போல, திடீரென்று மண்ணைத் தொட்டு அதிர்வைத் தந்து விட்டு, தொடர்ந்து தரை மீதே ஓடியதாம். தருமரின் வாய்மைக்காக அளிக்கப்பட்ட சலுகையைத் தருமம் ரத்து செய்து விட்டது. தருமத்திற்கு மனிதர்களைப் பற்றிக் கவலை இல்லை; செயல்களைப் பற்றித்தான் கவலை!

தருமமே வடிவான தருமர் போர் வெற்றிக்காகப் பொய்யுரைத்தது என்பது, தாவோயியக் கோட்பாட்டின்படி வெள்ளைத் தாளில் ஒரு கறுப்புப் புள்ளி!இதற்கு நேர்மாறாக துரியோதனன் தீமையே வடிவானவன்; கயவன்; அயலார் மனைவியை அவைக்கு இழுத்து வந்து அசிங்கப்படுத்தியவன். அவன் தேரோட்டி மகனான கர்ணனை அங்கதேசத்திற்கு மன்னனாக முடி சூட்டுவித்து, அரச கௌரவத்தை வழங்கி, தனக்குச் சமமாக்கி நட்புப் பூணுகிறான்.

ஒருநாள் துரியோதனனின் மனைவியும், கர்ணனும் சொக்கட்டான் ஆடிக் கொண்டிருக்கும்போது, கர்ணனுக்குப் பின்னாலிருந்த வாயிலின் வழியாகத் துரியோதனன் வருவதைப் பார்த்து விட்ட மனைவி எழுந்திருக்க, ஆட்டத்தில் தோல்வி அடையும் நிலையில் அவள் எழுந்திருக்கிறாள் என்று எண்ணிய கர்ணன், ‘எங்கே ஓடப் பார்க்கிறாய்?’ என்று அவளுடைய சேலையைப் பிடிக்க, அதிலுள்ள மணிகள் அறுந்து உருண்டோட...

பதறிய துரியோதனனின் மனைவி ஒருபுறம்; துரியோதனனைப் பார்த்து விட்டுத் திகைத்துத் தவித்துப் போன கர்ணன் இன்னொருபுறம்; இந்த நிலையில் குனிந்த துரியோதனன், ‘எடுக்கவோ, கோக்கவோ?’ என்று கேட்டுச் சூழலை எளிதாக்கி, நட்புக்கு இலக்கணம் வகுக்கிறானே! தாவோயியம் கூறும் கறுப்புத் தாளில் வெள்ளைப் புள்ளி அல்லவா இது!

பீஷ்மர், துரோணர், கர்ணன்... என்று எல்லோருடைய கதையும் முடிந்து விட்டது. இந்த நிலையில் கிருபர், துரியோதனனிடம் கூறுகிறார்: ‘பாண்டவர்களோடு சமாதானம் செய்து கொள்’!

துரியோதனன் கூறுகிறான் : ‘இது என்ன பேடித்தனம்? பிழைப்பது எந்த சுகத்தை அனுபவிக்க? பீஷ்மர், துரோணர், கர்ணன், உடன்பிறந்தோர், உறவினர்கள் என்று அனைவரும் மாண்டு விட்ட பிறகு, இந்த நாட்டைச் சமாதானத்தின் பேரில் காப்பாற்றிக் கொண்டு நான் யாரோடு அனுபவிப்பது? அது எந்த விதத்தில் பெருமையானது?’இவ்வாறு துரியோதனன் பேசியபோது, எஞ்சிய படைவீரர்கள் கை தட்டி ஆர்ப்பரித்துப் பாராட்டுகிறார்கள்! வானம் பூமாரிப் பொழிகிறது!

தனக்காக எல்லோரும் தங்களின் உயிரையும் நல்க வேண்டுமென்று எதிர்பார்த்த துரியோதனன், அவர்கள் இல்லாத பூமி தனக்குத் தேவையில்லை என்று நினைப்பதும், அவர்கள் போன வழியிலேயே தானும் இறுதிவரை போரிட்டு மரிக்க நினைப்பதும் மிக உன்னதமான மனநிலை!

மேற்கண்ட இரண்டு நிகழ்வுகளும் தாவோயியம் கூறும் கறுப்புத் தாளில் வெள்ளைப் புள்ளிகள்!

முற்றிலும் நல்லவனும் இல்லை; முற்றிலும் கெட்டவனுமில்லை. அதில் ஒரு சிறு புள்ளி அளவாவது எதிர்க் குணம் இருக்கும். அதனால்தான் பாண்டவர்கள் சில பொழுது நரகத்திலும், கௌரவர்கள் சில பொழுது சொர்க்கத்திலும் வசிக்க நேரிடுகிறது!

இந்தியாவில் தாவோயியம் தனியொரு பள்ளியாக அதன் அடிப்படைகள் உணரப்பட்டு முழுமையாக உருவெடுக்க முடியவில்லை என்றாலும், அதனுடைய கூறுகள் அறியப்பட்டே இருந்திருக்கின்றன. தருமர் மற்றும் துரியோதனன் பாத்திரப் படைப்பில் அதை நம்மால் உணர முடிகிறது.

லியோ டால்ஸ்டாய் ‘புத்துயிர்ப்பு’ (Resurrection) என்றொரு புதினத்தை எழுதினார். உலக அளவில் போற்றப்படும் நூல் அது. அதற்குக் காரணம் அந்தக் கதைத் தலைவன். அப்படி ஒரு கதைத் தலைவனை எவ்வளவு பெரிய கதாசிரியனும் படைக்க முடியாது. ஏனெனில் மிக உன்னதமாக வாழ்ந்த ஒரு கதாசிரியனால்தான் அவ்வளவு உன்னதமான கதைத் தலைவனைப் படைக்க முடியும். லியோ டால்ஸ்டாய், தன்னையே கதைத் தலைவனாக உருவகித்துக் கொண்ட உயர் நவீனம் அது!

அதுபோல் தருமரைப் படைக்க வியாசரால்தான் முடியும். தருமத்தையே அடிப்படையாகக் கொண்டு வாழ்ந்த அனுபவமுடைய ஒரு கதாசிரியனுக்குத்தான் தருமரைப் படைக்க முடியும். ஆகவே, அது வியாசர் போன்ற பேரறிவும், கற்பனை வளமும், மொழித் திறனும், பற்றற்ற வாழ்க்கையும் கொண்ட முனிவருக்கே இயலக் கூடியது.

மகாபாரதமும், ராமாயணமும் கடந்த பல நூறு ஆண்டுகளாகப் பல நாடகங்களுக்கும், கதைகளுக்கும், நவீன திரைப்படங்களுக்கும் உந்துவிசையாக இருந்து வந்துள்ளன.

இந்தியப் பண்பாட்டை உருவாக்கியதில் கணிசமான பங்கை வகிக்கும் ராமாயணமும், மகாபாரதமும் ஆரியர்கள் இந்தியாவுக்கு அளித்த இணையில்லாத கொடை! இன்னொரு கொடை – இதிஹாசங்கள் பேசும் தர்மத்தை நவீன அரசியலில் இணைத்து நடைமுறைப்படுத்திக் காட்டிய மூதறிஞர் ராஜாஜி!

2500 ஆண்டு காலமாக மொழி புரியத் தொடங்குகிற வயதில் ஒவ்வொரு பிள்ளையும் ‘கதை சொல்லும்மா’ என்று அடம்பிடிக்கும்! ஒவ்வொரு தாயும் பிள்ளையை மடியில் கிடத்திக் கொண்டு, பாரதக் கதையைப் பகுதி பகுதியாகச் சொல்லுவாள். பாதித் தூக்கத்தில் பிள்ளை ‘ஊம்’ கொட்டும்! பிள்ளையின் ஆழ்மனதில் (sub conscious mind) தருமம் குறித்த சிந்தனைகள் தன்னை அறியாமல் சென்று படியும்.

அவன் வளர்ந்து பின்னாளில் நீதிபதியாக வருவான்; நீதி வழுவாது நடப்பான்! தப்பான நீதிபதியைத் தண்டிக்கச் சட்டத்தில் வழி இல்லாதபோது, ‘நீ விடுமுறையிலாவது போய்த் தொலை’ என்று உச்ச நீதிமன்றம் சொல்லும் நிலையும், இவன் ‘முடியாது’ என்று அடம் பிடிக்கும் கேவலமான நிலையும் ஒருநாளும் ஏற்படாது. 

அவன் வளர்ந்து பொறியாளனாக வருவான். குளத்தைத் தூர்த்துக் குடிசை மாற்று வாரியம் வீடு கட்டினால், குளம் அழிவதோடு, அந்த அடுக்குமாடி வீடுகளும் மணலில் புதைந்து, பைசா நகரத்துச் சாய்ந்த கோபுரமாகி விடுவதோடு, ஒருநாள் அவற்றில் வசிக்கும் மக்களுக்கு அந்தக் குளமே புதைகுழியாகி விடும் என்று, சட்டை முழுவதும் ‘பையாக’ வைத்திருக்கிற புத்தியில்லாத மந்திரிக்கு எடுத்துச் சொல்லி, முன்கூட்டியே தடுத்து விடுவான்!

அவன் வளர்ந்து வழக்கறிஞனானால், எதிரியோடு கள்ள நட்பு வைத்துக் கொண்டு சொந்தக் கட்சிக்காரனைக் கவிழ்க்க மாட்டான்! ஆட்சியாளனானால் சுரண்டுவதே பிறப்பின் நோக்கம் என்று அலைய மாட்டான். ஆசிரியனானால் வகுத்து வைத்த பாடத் திட்டத்திற்கு ஒருபடி மேலே மாணவர்களை அழைத்துச் சென்று, அவர்களை அறிவு நாட்டமுடையவனாக ஆக்குவான்! எதிலும் எந்த நிலையிலும் பிறழ்ச்சி என்பதே இருக்காது.

இப்போது மொழி புரியத் தொடங்கும் வயதில், பிள்ளையும் கதை சொல்லச் சொல்லி அம்மாவைப் பிறாண்டுவதில்லை. அம்மாவும் கதை சொல்லத் தயாராக இல்லை.

தொலைக்காட்சியில் பிள்ளை கேலிப்படம் (cartoon pictures) பார்க்க வேண்டும் என்கிறது; அம்மா நெடுந்தொடர் (mega serial) பார்க்க வேண்டும் என்கிறாள்!

பாரதம் வழக்கற்றுப் போகும் ஒரு காலகட்டத்தில், பாரதம் நிலைகுலைந்து போகும்!

நன்றி: துக்ளக் 15_04_2010

‘இன்றைய பொருளாதார நிலை’ -திரு. எஸ். குருமூர்த்தி

திரு. குருமூர்த்தியை பேச அழைக்குமுன் ஆசிரியர் சோ கூறியது :

அடுத்து பேச வருகிறவர் எப்போதாவது சென்னைக்கு வருகிற என் நண்பர். டெல்லிக்குப் போவார். அடுத்த நாள் கரூருக்குப் போவார். பிறகு கோயமுத்தூருக்குப் போவார். ஒருநாள் தயானந்த சரஸ்வதி ஸ்வாமி பின்னால் இருப்பார். இன்னொரு நாள் கட்காரி எதிரே இருப்பார். இப்படி 24 மணி நேரம் எப்படி இவரால் உழைக்க முடிகிறது? எப்படி இவரால் இத்தனை விஷயங்களைப் படிக்க முடிகிறது? என்ற திகைப்பை ஏற்படுத்தும் திரு. குருமூர்த்தி அவர்களை (பலத்த கைதட்டல்), பொருளாதாரம் பற்றி பேச அழைக்கிறேன். 

இதையடுத்து ‘இன்றைய பொருளாதார நிலை’ என்ற தலைப்பில் திரு. எஸ். குருமூர்த்தி பேசியதிலிருந்து : 
எஸ். குருமூர்த்தி

நான் பல விஷயங்களைப் பற்றி ‘துக்ளக்’கில் எழுத நினைக்கும்போது, ‘சோ’ என்னிடம் ‘நீங்கள் பொருளாதாரம் பற்றி மட்டுமே எழுதுங்கள்; மற்ற விஷயங்கள் பற்றி வேண்டாம்’ என்பார். ‘மசூதி, சர்ச் – இதையெல்லாம் விட்டு விடுங்கள் சார்’ என்பார். ஏனென்றால் இந்தப் பொருளாதாரத்துறையில் எனக்குத் தேர்ச்சி இருக்கிறதோ இல்லையோ, தனக்கு தேர்ச்சி இல்லை என்று அவர் நினைக்கிறார். பொருளாதாரத்தை புரியாத ஒரு விஷயமாகச் செய்த பெருமை, பொருளாதார நிபுணர்களையே சாரும் (சிரிப்பு, கைதட்டல்). எந்த அளவுக்குப் பொருளாதார நிபுணர்கள் இதை புதிராக மாற்றி விட்டார்கள் என்றால், இன்றைக்குப் பொருளாதார நெருக்கடியா அல்லது பொருளாதார தத்துவமே ஒரு நெருக்கடியா என்ற பெரிய கேள்விக்குறி எழுந்துள்ளது. நம் நாட்டில் இந்தப் பொருளாதார நெருக்கடிகள் பற்றி வெளிவருகிற செய்திகளையோ, கட்டுரைகளையோ பார்த்தால், உலக அளவில் பொருளாதாரம் பற்றியும், அதன் யதார்த்த நிலை பற்றியும், பொருளாதார சிந்தனைப் போக்குகள் பற்றியும் அங்கு எப்படி ஆழ்ந்து கவலைப்படுகிறார்களோ, அந்த அளவு கவலை நம் நாட்டில் இல்லை. 

பொதுவாகப் பார்த்தால், இது ஏதோ ஒரு சாதாரண பொருளாதார நெருக்கடி; இருபது மாதங்களுக்கு முன் பங்கு மார்க்கெட் நிலவரம் எப்படி இருந்ததோ, அப்படி உயர்ந்து விட்டது. அதனால் மறுபடியும் பொருளாதார நிலை உயர்கிறது. உலக அளவிலேயே ஸ்திரமான நிலை வந்து கொண்டிருக்கிறது – என்ற ஒரு மாயையான கருத்து உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இன்றுள்ள நிலை என்னவென்றால், இது ஒரு சாதாரண பொருளாதார நெருக்கடி இல்லை. இந்தப் பொருளாதார நெருக்கடி, ஒரு வாழ்க்கை முறையைப் பின்பற்றுகிற போக்கின் மூலமாக ஏற்பட்டுள்ள சமுதாய நெருக்கடி, கலாச்சார நெருக்கடி. இதை உலக அளவில் பொருளாதார நிபுணர்கள் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்.

உதாரணமாக ஒன்று சொல்கிறேன். ‘எகானமிஸ்ட்’ பத்திரிகைதான் உலகத்திலேயே பொருளாதார நிலையை, சிந்தனையை மிகவும் ஆழ்ந்துக் கவனித்து, பொருளாதார நிபுணர்களே புரிந்து கொள்ள முடிகிற ஒரு பத்திரிகை. அந்தப் பத்திரிகையின் தலையங்கத்தில், 2009 ஜூலை 18-ஆம் தேதி இதழில் ‘பொருளாதாரத்தின் மதிப்பு குறைந்து விட்டது. 30 வருடங்களாக பொருளாதாரத்துறையில் எந்தெந்த சிந்தனைகள் விரும்பப்பட்டதோ, எந்தெந்த கொள்கைகள் அரசாங்கத்தால் விரும்பப்பட்டதோ, அந்தக் கொள்கைகள் எல்லாம் பல நாடுகளுக்கும் கெடுதலை ஏற்படுத்தி இருக்கின்றன. பொருளாதார முறை என்று நாம் நினைத்தது தவறோ என்று கருதும் அளவுக்கு, பொருளாதாரத்தில் ஒரு சீரழிவு ஏற்பட்டுள்ளது’ என்று அந்தப் பத்திரிகையின் ஆசிரியர் எழுதியிருக்கிறார்.

பொருளாதாரம் என்பது – சமுதாயத்தையும், கலாச்சாரத்தையும், மக்களுடைய வாழ்க்கை முறையையும் தாண்டி அப்பாற்பட்ட ஒன்று; அதற்கும் சாதாரண வாழ்க்கை முறைக்கும் சம்பந்தமில்லை என்கிற அளவிற்கு பொருளாதார நிபுணர்களால் ஒரு கருத்து உருவாக்கப்பட்டது.

பொருளாதார நெருக்கடி ஏற்பட்டவுடன் ஜெர்மனியில் ‘டெர் ஸ்பைகல்’ என்ற பத்திரிகையில், ஐந்து நோபல் பரிசு பெற்ற பொருளாதார மேதைகளை அழைத்து, ‘இந்த நெருக்கடி ஏன் ஏற்பட்டது? இதற்கு என்ன விமோசனம்?’ என்று கேட்டார்கள். அவர்களது பெயர் பால் சாமுவல்ஸன், ரெய்னட் ஸெல்டன், எட்மன்ட் ஃபிலிப்ஸ், ராபர்ட் லுக்கர்ஸ், ஜோஸப் ஸ்டிக்கிஸ் – இந்த ஐவரும் பொருளாதாரத்தில் நோபல் பரிசு பெற்றவர்கள். அவர்களிடம் கேட்டதற்கு அவர்கள் சொன்ன பதிலில், இந்த ஐந்து பேருக்கும் கருத்து ஒற்றுமை இல்லை. ஒருவர் கூறுகிற கருத்தை மற்றவர் ஏற்கவில்லை. அந்த ஐந்து பேரும் சொன்ன ஒருமித்த கருத்து, ‘இந்த நெருக்கடியிலிருந்து எப்படி வெளியே வருவது என்று தெரியவில்லை’ என்பதுதான்.

நோபல் பரிசு பெற்ற அந்த நிபுணர்களாலேயே இந்தப் பொருளாதார நெருக்கடியில் இருந்து வெளியே வருவதற்கான உபாயம் கூற முடியவில்லை என்றால், பொருளாதார நிபுணர்களால் உருவாக்கப்பட்ட பொருளாதாரக் கொள்கைகள்தான் அதற்குக் காரணம்.

இப்போது உலகத்தில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு அடிப்படைக் காரணமே, அமெரிக்கா அதிகமாகக் கடன் வாங்கியதுதான். அமெரிக்கா ஏன் கடன் வாங்கியது? உலகத்திலேயே எல்லா நாடுகளுக்கும் 1980 வரை, மிக அதிகமாகக் கடன் கொடுக்கும் முதலாளி நாடான அமெரிக்கா, எப்படி உலகத்திலேயே பெரிய கடனாளி நாடாக மாறியது? இன்று அமெரிக்கா 12.5 ட்ரில்லியன் டாலர் பிற நாடுகளிடம் கடனாக வாங்கியுள்ளது. ஒவ்வொரு நாளும் 10,000 கோடி கடனாக வாங்கினார்கள். கடந்த ஆண்டு மட்டும் (கடந்த அக்டோபர் முதல் இந்த செப்டம்பர் வரை – அதுதான் அவர்களது நிதியாண்டு) அந்தக் காலகட்டத்தில் 3.2 ட்ரில்லியன் டாலர், கிட்டத்தட்ட 150 லட்சம் கோடி ரூபாய் கடன் வேண்டும் என்ற நிலை. அது அவர்களுடைய பட்ஜெட்டில் விழுந்த துண்டு.

நம் நாட்டில் பட்ஜெட் பற்றாக்குறை ஏற்படும்போது, வங்கிகளில் இருந்து நம் அரசு கடன் வாங்கும். ஏனென்றால் நம் நாட்டு மக்கள் பணத்தை சேமித்து, வங்கியில் போட்டு வைக்கிறார்கள். இந்த ஆண்டு மட்டும் நம் குடும்பங்களால் வங்கிகளில் 7,50,000 கோடி ரூபாய் சேமிக்கப்பட்டுள்ளது (கைதட்டல்). இந்தப் பணத்தில் அரசு 4 லட்சம் கோடி ரூபாயை கடனாகப் பெறப் போகிறது. அதனால் அரசுக்கு பற்றாக்குறை ஏற்படுகிறபோது, அதை ஈடுகட்டுவதற்கு நம் நாட்டிலேயே சேமிப்பில் பணம் இருக்கிறது. ஆனால் அமெரிக்காவில் சேமிப்பு கிடையாது. அதனால் வெளிநாட்டில் இருந்தெல்லாம் கடன் வாங்கியாக வேண்டும். சீனா கடன் தர வேண்டும், ரஷ்யா கடன் தர வேண்டும், ஜப்பான் கடன் தர வேண்டும், நம் நாட்டில் இருந்தும் கொடுக்க வேண்டும். அப்போதுதான் அமெரிக்க அரசாங்கம் செயல்படும்.

அமெரிக்கா கடன் வாங்கியதால்தான் அமெரிக்கப் பொருளாதாரத்தில் நெருக்கடி ஏற்பட்டது. அதன் விளைவாகத்தான் உலகப் பொருளாதாரத்திலும் நெருக்கடி ஏற்பட்டது. ஆனால் இதில் இருந்து விமோசனம் உண்டா என்றால், அமெரிக்கா இன்னும் கடன் வாங்க வேண்டும் என்ற நிலைதான். எதனால் பிரச்சனை ஏற்பட்டதோ, அதனால்தான் விமோசனமும் என்கிற அளவுக்கு பொருளாதாரத்தில் இன்று ஒரு அர்த்தமற்ற நிலை ஏற்பட்டுள்ளது. 

எந்த அளவு அமெரிக்காவில் – சமுதாய, பொருளாதார குடும்பச் சீரழிவு ஏற்பட்டுள்ளதோ, அதன் பிரதிபலிப்புதான் இன்றைய பொருளாதார நெருக்கடி (பலத்த கைதட்டல்). குடும்பம் என்ற கலாச்சார அமைப்பு இல்லாவிட்டால், சேமிப்பு என்ற விளைவு ஏற்பட முடியாது. அதற்கு ஒரு உதாரணம் அமெரிக்கா (கைதட்டல்). ஐரோப்பாவில் இது இன்னும் அதிகமாக இருக்கிறது. ஆனால், மற்றவர்கள் உடனே நோக்குகிற அளவிற்கு அமெரிக்காதான் பொருளாதாரத்தில் சக்தியாக இருக்கிறது; அமெரிக்கப் பொருளாதாரத்தில் ஏற்படுகிற மாறுதல், உலகப் பொருளாதாரத்தில் விளைவை ஏற்படுத்துகிறது; அமெரிக்காவுடைய பொருளாதாரத் திட்டங்களையும் அதன் கொள்கைகளையும், மற்றவர்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் இருப்பதால், அதன் பொருளாதாரத்தை சரியாகப் புரிந்து கொள்ளாமல், ஒவ்வொரு நாடும் சரியான பொருளாதாரக் கொள்கையை வகுத்துக் கொள்ள முடியாது.

நம் நாட்டில் பதினைந்து வருடங்களாக இருக்கும் ஒரு பெரிய சிந்தனைத் தாக்கம் – என்னவென்றால், அமெரிக்கா மாதிரி நாமும் வளர்வதற்கு, அதே பொருளாதாரத் திட்டம், அதே பொருளாதாரக் கொள்கைகள், அதே மாற்றங்கள் வர வேண்டுமென்ற ஒரே அபிப்ராயம்தான். பல பேருக்கு ஒன்று தெரியாது. அமெரிக்காவில் கடந்த 30 ஆண்டுகளில் எப்படி வளர்ச்சி ஏற்பட்டது என்றால், அதை ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால், ‘அமெரிக்கர்கள் குடும்ப அமைப்பு முறையைச் சீரழித்து, தேசத்தின் பொருளாதாரத்தை வளர்த்தார்கள்’ (பலத்த கைதட்டல்).

நம் நாட்டில் குடும்பங்கள் என்னென்ன பொறுப்பை ஏற்கின்றனவோ, அதை அமெரிக்காவில் அரசாங்கமே ஏற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அரசாங்கம் அதை விரும்பி ஏற்கவில்லை. அரசாங்கத்தின் மீது அந்தப் பொறுப்பு திணிக்கப்பட்டுள்ளது. காரணம் என்னவென்றால், ஒரு வயோதிகரையோ, ஒரு வேலையில்லாத வாலிபரையோ, ஒரு சகோதரியையோ பாதுகாக்கிற பொறுப்பு குடும்பத்திற்குக் கிடையாது என்கிற ஒரு சமுதாயச் சூழ்நிலை, கலாச்சார சூழ்நிலை அங்கு உருவாக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, ‘சமூகப் பாதுகாப்புத் திட்டம்’ என்ற ஒரு திட்டத்தை ஏற்படுத்தி, அவரவர் வருமானத்தில் 16 சதவிகிதத்தை அரசுக்கு வரியாகக் கட்டி விட்டால் போதும். நீங்கள் நோய்வாய்ப்பட்டாலும், விபத்து ஏற்பட்டாலும், வேலை செய்ய முடியாத நிலை ஏற்பட்டாலும் அரசாங்கம் பார்த்துக்கொள்ளும் என்கிற முறையில், கடந்த 30 வருடங்களாக அந்தப் பணத்தைக் கொண்டு அரசு செலவழித்து விட்டது.

இன்று இந்த முறையினால் அரசினால் 104 ட்ரில்லியன் டாலர் கடன் ஏற்பட்டுள்ளது என்று ‘நியூஸ் வீக்’ பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு ட்ரில்லியன் டாலர் என்றால், 48 லட்சம் கோடி ரூபாய். இந்த 104 ட்ரில்லியன் டாலர் கடன், அரசின் பேலன்ஸ் ஷீட் நிதிக் கணக்கில் வராத கடன். ஏன் இந்த நிலை ஏற்பட்டது என்றால், அங்கே குடும்பங்கள் தேசிய மயமாக்கப்பட்டதுதான்.

குடும்பங்கள் என்ற அமைப்பே அங்கு இல்லாமல் போனதால், சேமிப்பு இல்லாமல் போனதால் அந்த நிலை. ஆனால், நம் நாட்டில் இந்த நிலை இல்லை. அங்கு குடும்பங்கள் தேசிய மயமாக்கப்பட்டதால் அரசாங்கம் தனியார் மயமானது. அங்கு அரசாங்கத்தின் பொறுப்புகள் தனியாரிடம் கொடுக்கப்பட்டதன் காரணம் – ரோடு போடுவதற்கோ, குடிநீர் வழங்குவதற்கோ, பாலம் கட்டுவதற்கோ தனியாரிடம் கொடுக்கப்பட்டதற்குக் காரணம் – குடும்பங்களை காக்கும் பொறுப்பை அரசாங்கம் ஏற்றுக் கொண்டதுதான். இதனால் அவர்கள் தனியார் மயத்தை நாட வேண்டிய நிலை ஏற்பட்டது.

அந்த தனியார் மயக் கொள்கையை, இங்கே நாம் பொருளாதாரக் கொள்கையாக அமல்படுத்தினோம். இதை காப்பி அடிப்பதற்கு முன் அமெரிக்காவின் நிலை இங்கு இல்லை என்பதை நாம் உணரவில்லை. பொருளாதார நிபுணர்களின் சிந்தனையோ, பத்திரிகைகளின் கருத்தோ அங்கு இருப்பதை காப்பி அடிக்கத்தான் தெரிந்ததே தவிர, இங்குள்ள சூழ்நிலைக்கும் அங்குள்ள நிலைமைக்கும் இடையே உள்ள மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் யாருக்கும் புரியவில்லை. 

1994-ல் இதுபற்றி நாங்கள் கூறிய போது, ‘வெளிநாடுகளில் இருந்து முதலீடுகள் வராமல் நாம் முன்னேற முடியாது. இந்த நாட்டின் அடிப்படை வசதிகள் மேம்படாது’ என்றெல்லாம் கூறி, ஒரு நிர்வாக இயல் கல்லூரியில் என்னை ஒரு தேசத் துரோகியாக சித்தரித்தார்கள். இப்போது 16 வருடங்களுக்குப் பிறகு, உலக மயமாக்கல், தாராள மயமாக்கல் ஆன பிறகு, வெளிநாட்டிலிருந்து நம் நாட்டிற்கு வந்துள்ள முதலீடு, மொத்த முதலீட்டில் இரண்டு சதவிகிதம்தான் (பலத்த கைதட்டல்). மீதி 98 சதவிகித முதலீடு நம் நாட்டிற்கு உள்ளேயிருந்தே கிடைத்தது. இதற்கு என்ன காரணம்? நம் நாட்டின் குடும்பத்தினர் சேமிக்கும் முறைதான் (பலத்த கைதட்டல்).

கோல்டு மேன் சேக்ஸ் என்ற வங்கி, உலகத்திலேயே பெரிய வங்கி, ஆலோசனை நிறுவனம். அந்த நிறுவனம் ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டது. ‘2025 வரை இந்திய நாட்டில் அந்நாட்டினரின் சேமிப்பு, அந்நாட்டின் வளர்ச்சி விகித்தில் 40 சதவிகித அளவிற்கு இருக்கும். அதனால் அந்த நாட்டின் வளர்ச்சிக்காக ஒரு டாலர் கூட வெளிநாட்டிலிருந்து பெற அவசியம் இருக்காது’ (பலத்த கைதட்டல்) என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளார்கள். இதை ஏன் நான் குறிப்பிடுகிறேன் என்றால், வெளிநாடுகளிலிருந்து பெறும் முதலீட்டினால் நம்மை வளர்த்துக் கொள்ளத் தேவையில்லை. மற்றவர்களுடன் உறவை வளர்த்துக் கொள்ள வேண்டுமானால் அது தேவையாக இருக்கலாம்.

நாம், வளர்ச்சிக்காக ஏற்றுமதியை அடிப்படையாகக் கொண்டிருக்கவில்லை. உள்நாட்டு உற்பத்தி மற்றும் வர்த்தகம்தான் நம் பொருளாதாரத்தின் அடிப்படை. அதனால்தான் நம் நாட்டின் பொருளாதாரத்திற்கு ஒரு ஸ்திரத் தன்மை உள்ளது. நம் பொருளாதாரம், உலகப் பொருளாதாரத்திலிருந்து மாறுபட்டிருப்பதால், உலகப் பொருளாதாரத்தில் இன்று ஏற்பட்டுள்ள பெரிய தாக்குதல், நமது பொருளாதாரத்தை ஸ்திரமில்லாதபடி ஆக்காமல் இருப்பதற்குக் காரணம், நம்முடைய கலாச்சார, சமுதாய முறையே (பலத்த கைதட்டல்). இதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இதை அதிகாரிகள் புரிந்து கொள்ள வேண்டும். இதைப் பொருளாதார நிபுணர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இதைப் பத்திரிகையாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் நமது பொருளாதாரத்தில் ஒரு தெளிவு ஏற்படும் (பலத்த கைதட்டல்). http://www.youtube.com/watch?v=l6XoVsUquc0


http://www.youtube.com/watch?v=qzjqElS8yBk&feature=related


துக்ளக் 40 ம ஆண்டு  விழாவில்  திரு . எஸ் .குருமூர்த்தி பேசியது ...

தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு -பொன். ராதாகிருஷ்ணன் பேட்டி -

                                                                                  


கேள்வி : தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியில் தொழில் வளர்ச்சி, அரசின் சாதனை இவற்றால் மக்களின் வாழ்க்கை முன்னேறியுள்ளதாக, தி.மு.க.வினர் பிரச்சாரம் செய்து வருவதைப் பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன?

பொன். ராதாகிருஷ்ணன் : மக்களுக்குத் தேவையான நீராதார வசதி, கட்டமைப்பு வசதிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதியைத் தவறான முறையில் இலவச டி.வி., கேஸ் அடுப்புக்குப் பயன்படுத்தி உள்ளனர். முதல்வர் போலித்தனமான பொருளாதாரச் சித்தாந்தத்தை முன்வைக்கிறார். மக்கள் இவர்களிடம் டி.வி. வேண்டும் என்று கேட்டார்களா? தமிழகத்தில் நிர்வாகம் சீர்குலைந்து விட்டது. அரசு, மக்களைக் குடிகாரர்களாக, கொலைகாரர்களாக மாற்றியுள்ளது. பயங்கரவாதிகள், தீவிரவாதிகளை ஊக்குவிக்கிறது. 

அமைச்சர்கள், அதிகாரிகள் முன்னிலையில் நடந்த ஆழ்வார்குறிச்சி எஸ்.ஐ. படுகொலை, முத்துப்பேட்டையில் மத மோதலுக்கு வழிவகுக்கும் வகையில் பா.ஜ.க. நிர்வாகி மீது நடந்த தாக்குதல் – ஆகிய சம்பவங்கள் கவலை அளிக்கின்றன. பொதுவாக சட்டம் – ஒழுங்கு நிலை திருப்தி அளிப்பதாக இல்லை. 

நன்றி :  துக்ளக்  11_02_2010

ஆர்.எஸ்.எஸ்.ஸின் தேசியம் பாராட்டுக்குரியது
‘மராத்தியர்களின் மாநிலமாகிய மும்பையில் வட இந்தியர்களுக்கு இடமில்லை; வேலைவாய்ப்புகள் தரப்படக் கூடாது...’ என்றெல்லாம் பேசி, சட்ட விரோதமாக ஒரு துவேஷப் பிரச்சாரத்தைச் செய்து வருகிற ராஜ்தாக்கரேயை, மஹாராஷ்ட்ர அரசு கடுமையுடன் அணுகவில்லை. ராஜ்தாக்கரே, சிவசேனையின் ஓட்டைப் பிளப்பார் என்பதாலும், அவர் பாதையில் குறுக்கிட்டால், மாநில வெறி ஓட்டுக்களில் சரிவு ஏற்படலாம் என்பதாலும், மஹாராஷ்ட்ர மாநில காங்கிரஸ் அரசு, அவருடைய அட்டூழியங்களை அனுமதித்தே வந்தது.

தனது ஓட்டை ராஜ்தாக்கரே பாதிக்கிறாரே என்கிற கோபத்தில், அவரைவிடத் தீவிரமாக சிவசேனை தனது பழைய பாணியில் பேச ஆரம்பித்தது. பார்த்தது காங்கிரஸ் அரசு; மாநில வெறி ஜோதியில் கலந்தது. மராத்தி மொழி தெரிந்தவர்களுக்குத்தான் மும்பையில் டாக்ஸி ஓட்ட அனுமதி – என்று அறிவித்தது. இதற்கு பீஹார் போன்ற மாநிலங்களில் பலத்த எதிர்ப்புக் கிளம்ப, ‘ஹிந்தி, குஜராத்தி’ தெரிந்தாலும் போதும் – என்று முதல்வர் திருத்தல் அறிக்கை வெளியிட்டார்.

இப்படி மாநில வெறியை ராஜ்தாக்கரே கட்சியும், பால்தாக்கரே கட்சியும் கொஞ்சமும் கூசாமல் கிளப்பி விட்டுக் கொண்டிருக்க, எந்தக் கட்சியுமே அவர்களை எதிர்த்துப் பிரச்சாரம் செய்யத் தயங்கி வந்தன. டெண்டுல்கர், ‘மும்பை எல்லா இந்தியர்களுக்கும் சொந்தம்’ என்று கூற, மேலும் அரசியலுக்கு அப்பாற்பட்ட ஒரு சில குரல்கள் அதையே எதிரொலிக்க – அவர்களையும் மிரட்டியது மாநில வெறிக் கூட்டம். அந்த நிலையில் கூட, அரசியல் கட்சிகள் தாக்கரேக்களின் துவேஷப் பிரச்சாரத்தை நேரடியாக எதிர்கொள்ளத் தயங்கின.

இந்தக் கட்டத்தில், ஆர்.எஸ்.எஸ். தலைவர் ‘மும்பையில் வட இந்தியர்களுக்கு ஆர்.எஸ்.எஸ். பாதுகாப்பு அளிக்கும்’ என்று அறிக்கை விட்டதுடன் நில்லாமல், மும்பையில் வட இந்தியர்கள் தாக்கப்பட்டால், அவர்களுக்குப் பாதுகாப்பு தருமாறு ஆர்.எஸ்.எஸ்.காரர்களுக்கு உத்திரவும் இட்டார்.

உடனே பத்திரிகைகள் ஆர்.எஸ்.எஸ்.ஸைப் பாராட்டவில்லை. ‘ஹோ! இதனால் பா.ஜ.க.விற்கு தர்மசங்கடம். சிவசேனைக் கூட்டு என்ன ஆவது?’ என்று கேலி செய்தன. பா.ஜ.க. தலைவரோ, ‘இந்தியாவில் எந்தப் பகுதியிலும், எல்லா இந்தியர்களுக்கும் உரிமை உண்டு என்பதே பா.ஜ.க.வின் நிலை’ என்று அறிக்கை வெளியிட்டார். பத்திரிகைகளால் இதையும் ஜீரணிக்க முடியவில்லை. ‘உத்திரப் பிரதேசம், பீஹார் போன்ற ஹிந்தி பேசுகிற மாநிலங் களில், ஓட்டு இழப்பு ஏற்படக் கூடாதே என்ற பயத்தில், பா.ஜ.க. இப்படிப் பேசுகிறது’ என்று விமர்சனம் செய்யப்பட்டது.

ஆனால், இதையெல்லாம் அடுத்து, பலர் எதிர்த்தாகி விட்டது என்ற நிலையில் – ராகுல் காந்தி, மும்பை பற்றியும், மஹாராஷ்ட்ரம் பற்றியும் பேசி, மாநில வெறியைக் கண்டித்தார். பத்திரிகைகள் பாராட்டி மகிழ்ந்தன. இன்னமும் பாராட்டிக் கொண்டிருக்கின்றன. ‘இது, உத்திரப் பிரதேச ஓட்டுக்காக’ என்று பத்திரிகைகள் விமர்சிக்கவில்லை. ராகுலைத் தொடர்ந்து, சிதம்பரம் உட்பட பல கட்சிகளின் முக்கியஸ்தர்கள், தாக்கரேக்களின் பிரச்சாரத்தைக் கண்டிக்கத் தொடங்கி விட்டனர். காங்கிரஸின் ‘தேசியப் பார்வை’ உறுதிப்படுத்தப்பட்டு விட்டது.

ஆனால், இந்த ‘தேசிய’ அணுகுமுறை தைரியமாக வெளிப்பட்டதற்கு, ஆர்.எஸ்.எஸ்.ஸின் தெளிவான அணுகுமுறைதான் காரணம் என்பதை, யாரும் சுட்டிக்காட்டுவதாகத் தெரியவில்லை. அதுவரை தயங்கி வந்த கட்சிகள் – பா.ஜ.க. உட்பட– உறுதியாக தேசியம் பேசியது, ஆர்.எஸ்.எஸ். பேச்சுக்குப் பின்னர்தான். ராகுல் காந்தி, சிதம்பரம் உட்பட, மாநில வெறிக்கு எதிராகப் பேசத் தொடங்கியது, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்தின் அறிவிப்பிற்குப் பிறகுதான். மத்திய – மாநில அரசுகள் உட்பட அனைவரும் தயங்கிக் கொண்டிருந்தபோது, தெளிவான நிலையை அறிவித்த, ஆர்.எஸ்.எஸ்.ஸின் தேசியம் பாராட்டுக்குரியது. 
ராத்தியர்களின் மாநிலமாகிய மும்பையில் வட இந்தியர்களுக்கு இடமில்லை; வேலைவாய்ப்புகள் தரப்படக் கூடாது...’ என்றெல்லாம் பேசி, சட்ட விரோதமாக ஒரு துவேஷப் பிரச்சாரத்தைச் செய்து வருகிற ராஜ்தாக்கரேயை, மஹாராஷ்ட்ர அரசு கடுமையுடன் அணுகவில்லை. ராஜ்தாக்கரே, சிவசேனையின் ஓட்டைப் பிளப்பார் என்பதாலும், அவர் பாதையில் குறுக்கிட்டால், மாநில வெறி ஓட்டுக்களில் சரிவு ஏற்படலாம் என்பதாலும், மஹாராஷ்ட்ர மாநில காங்கிரஸ் அரசு, அவருடைய அட்டூழியங்களை அனுமதித்தே வந்தது. 

தனது ஓட்டை ராஜ்தாக்கரே பாதிக்கிறாரே என்கிற கோபத்தில், அவரைவிடத் தீவிரமாக சிவசேனை தனது பழைய பாணியில் பேச ஆரம்பித்தது. பார்த்தது காங்கிரஸ் அரசு; மாநில வெறி ஜோதியில் கலந்தது. மராத்தி மொழி தெரிந்தவர்களுக்குத்தான் மும்பையில் டாக்ஸி ஓட்ட அனுமதி – என்று அறிவித்தது. இதற்கு பீஹார் போன்ற மாநிலங்களில் பலத்த எதிர்ப்புக் கிளம்ப, ‘ஹிந்தி, குஜராத்தி’ தெரிந்தாலும் போதும் – என்று முதல்வர் திருத்தல் அறிக்கை வெளியிட்டார். 

இப்படி மாநில வெறியை ராஜ்தாக்கரே கட்சியும், பால்தாக்கரே கட்சியும் கொஞ்சமும் கூசாமல் கிளப்பி விட்டுக் கொண்டிருக்க, எந்தக் கட்சியுமே அவர்களை எதிர்த்துப் பிரச்சாரம் செய்யத் தயங்கி வந்தன. டெண்டுல்கர், ‘மும்பை எல்லா இந்தியர்களுக்கும் சொந்தம்’ என்று கூற, மேலும் அரசியலுக்கு அப்பாற்பட்ட ஒரு சில குரல்கள் அதையே எதிரொலிக்க – அவர்களையும் மிரட்டியது மாநில வெறிக் கூட்டம். அந்த நிலையில் கூட, அரசியல் கட்சிகள் தாக்கரேக்களின் துவேஷப் பிரச்சாரத்தை நேரடியாக எதிர்கொள்ளத் தயங்கின. 

இந்தக் கட்டத்தில், ஆர்.எஸ்.எஸ். தலைவர் ‘மும்பையில் வட இந்தியர்களுக்கு ஆர்.எஸ்.எஸ். பாதுகாப்பு அளிக்கும்’ என்று அறிக்கை விட்டதுடன் நில்லாமல், மும்பையில் வட இந்தியர்கள் தாக்கப்பட்டால், அவர்களுக்குப் பாதுகாப்பு தருமாறு ஆர்.எஸ்.எஸ்.காரர்களுக்கு உத்திரவும் இட்டார். 

உடனே பத்திரிகைகள் ஆர்.எஸ்.எஸ்.ஸைப் பாராட்டவில்லை. ‘ஹோ! இதனால் பா.ஜ.க.விற்கு தர்மசங்கடம். சிவசேனைக் கூட்டு என்ன ஆவது?’ என்று கேலி செய்தன. பா.ஜ.க. தலைவரோ, ‘இந்தியாவில் எந்தப் பகுதியிலும், எல்லா இந்தியர்களுக்கும் உரிமை உண்டு என்பதே பா.ஜ.க.வின் நிலை’ என்று அறிக்கை வெளியிட்டார். பத்திரிகைகளால் இதையும் ஜீரணிக்க முடியவில்லை. ‘உத்திரப் பிரதேசம், பீஹார் போன்ற ஹிந்தி பேசுகிற மாநிலங் களில், ஓட்டு இழப்பு ஏற்படக் கூடாதே என்ற பயத்தில், பா.ஜ.க. இப்படிப் பேசுகிறது’ என்று விமர்சனம் செய்யப்பட்டது. 

ஆனால், இதையெல்லாம் அடுத்து, பலர் எதிர்த்தாகி விட்டது என்ற நிலையில் – ராகுல் காந்தி, மும்பை பற்றியும், மஹாராஷ்ட்ரம் பற்றியும் பேசி, மாநில வெறியைக் கண்டித்தார். பத்திரிகைகள் பாராட்டி மகிழ்ந்தன. இன்னமும் பாராட்டிக் கொண்டிருக்கின்றன. ‘இது, உத்திரப் பிரதேச ஓட்டுக்காக’ என்று பத்திரிகைகள் விமர்சிக்கவில்லை. ராகுலைத் தொடர்ந்து, சிதம்பரம் உட்பட பல கட்சிகளின் முக்கியஸ்தர்கள், தாக்கரேக்களின் பிரச்சாரத்தைக் கண்டிக்கத் தொடங்கி விட்டனர். காங்கிரஸின் ‘தேசியப் பார்வை’ உறுதிப்படுத்தப்பட்டு விட்டது. 

ஆனால், இந்த ‘தேசிய’ அணுகுமுறை தைரியமாக வெளிப்பட்டதற்கு, ஆர்.எஸ்.எஸ்.ஸின் தெளிவான அணுகுமுறைதான் காரணம் என்பதை, யாரும் சுட்டிக்காட்டுவதாகத் தெரியவில்லை. அதுவரை தயங்கி வந்த கட்சிகள் – பா.ஜ.க. உட்பட– உறுதியாக தேசியம் பேசியது, ஆர்.எஸ்.எஸ். பேச்சுக்குப் பின்னர்தான். ராகுல் காந்தி, சிதம்பரம் உட்பட, மாநில வெறிக்கு எதிராகப் பேசத் தொடங்கியது, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்தின் அறிவிப்பிற்குப் பிறகுதான். மத்திய – மாநில அரசுகள் உட்பட அனைவரும் தயங்கிக் கொண்டிருந்தபோது, தெளிவான நிலையை அறிவித்த, ஆர்.எஸ்.எஸ்.ஸின் தேசியம் பாராட்டுக்குரியது. 


‘வந்தே மாதரம்’ என்போம் ! – பழ. கருப்பையா

‘வந்தே மாதரம் என்போம்’ என்று தொடங்கிய பாரதி, அடுத்த வரியிலேயே அதற்கு மொழிபெயர்ப்புச் செய்து விடுகிறான்; ‘மாநிலத் தாயை வணங்குதும் என்போம்’! 


பழ. கருப்பையா - thuglak.com
பழ. கருப்பையா

வந்தே மாதரம் என்னும் சொல்லுக்குத் தாய் நாட்டை வணங்குவோம் என்பதுதான் பொருள். வணக்கம் என்னும் சொல் பணிவு குறித்த ஒரு சொல். ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ளும்போது சொல்லப்படும் வணக்கம் வழிபாட்டைக் குறிக்காது. ஆனால் ஒரு நிகழ்ச்சி தொடங்கும்போது இறை வணக்கம் பாடப்படுகிறதே, அது வழிபாட்டைக் குறிக்கும். 

‘வந்தே’ என்கிற சொல் மரியாதை குறித்ததா, வழிபாடு குறித்ததா என்பது குறித்து இஸ்லாமியர்களிடையே ஒரு குழப்பம் நிலவுகிறது. மரியாதை குறித்ததுதான் என்று முடிவு கட்டி பள்ளிவாசலுக்கு முன்னரே வந்தே மாதரத்தைப் பாடச் செய்திருக்கின்றனர் ஒரு சாரார்; ஒருவேளை வழிபாடு குறித்ததாக இருக்குமானால், அது இறைக்குற்றம் (ஹராம்) ஆயிற்றே என்று தயங்கி நிற்கின்றனர் இன்னொரு சாரார்; அது வழிபாட்டைத்தான் குறிக்கிறது என்று உறுதியாக முடிவு செய்து கொண்டு ‘ஃபட்வா’ வெளிப்படுத்தி இருக்கின்றனர் மூன்றாவது சாரார். ‘ஃபட்வா’ என்பது கட்டுப்படாத முஸ்லிமுக்கு விதிக்கப்படும் தண்டனையையும் உள்ளடக்கிய கட்டளை. 

ஹிந்து சமூகத்தில் வழிபாடு என்பது தனிமனித விவகாரம். கணவன் காலையில் கோவிலுக்குப் போவான். மனைவி மாலையில் போவாள். காலையில் தொடங்கி இரவு வரை அவரவர்க்கு உகந்த நேரத்தில் வழிபட்டுக் கொள்ளலாம். சாத்தியிருக்கிற கோயிலுக்கு முன்னாலும் கும்பிடலாம்; ராஜாஜியைப் போல் ஒருவர் கோவிலுக்குப் போகாமலும் இருக்கலாம். இந்திய சமயங்கள் நெகிழ்ச்சிப் போக்குடையவை. ஆனால், இஸ்லாமிய சமயம் நெகிழ்வுத் தன்மை உடையதன்று. அங்கே எல்லாமே வரையறைக்கு உட்பட்டவை. 

தொழுகை நேரம் வந்துவிட்டால், தொடர் வண்டியிலோ, ஒட்டகத்திலோ, போர் முனையிலோ கூட வழிபடலாம் என்றாலும், கூடித் தொழுவதுதான் அந்தச் சமயத்தின் அடிப்படை. தொழுகை எத்தனை தடவை என்பதும், என்னென்ன நேரங்களில் என்பதும் கூட இஸ்லாத்தில் வரையறை செய்யப்பட்டிருக்கின்றன. அந்தந்த நேரங்களில் தொழுகையை நினைவூட்டி அழைப்பு விடுக்கும் பொறுப்பைப் பள்ளிவாசல் ஏற்கிறது. தொழும்போது எப்படிக் குனிவது; நிமிர்வது; பக்கவாட்டில் திரும்புவது; மண்டியிடுவது; மீண்டும் எழுவது என்பது வரையிலும் வரையறுக்கப்பட்ட சமயம் அது. அவர்களுடைய சமயம் ராணுவம் போல் கட்டிறுக்கம் உடையது. 

இறைவனுக்கு வடிவமில்லை என்கிறபோது, பள்ளிவாசலில் குவிமையம் (focus)கிடையாது என்றாகி விடுகிறது. வடிவமில்லாத இறைவனுக்குப் பள்ளிவாசலால் ஆகப் போவதென்ன என்னும் கேள்வி எழும். பள்ளிவாசல் மக்கள் குவிவதற்கான மையமாகத் திகழ்கிறது. கூட்டமாகக் கூடித் தொழுவதற்கான தேவையைப் பள்ளிவாசல் நிறைவு செய்கிறது. கூட்டமாகக் கூடித் தொழுவதன் மூலம்தான் ஓர் ‘உம்மா’வை உருவாக்க முடியும் என்று நபிகள் நாயகம் கருதுகிறார். உம்மா என்பது ஒரே மாதிரியான வார்ப்புடைய சமூகம். அந்தச் சமூகம் உலகு தழுவியது. 

ஒவ்வொரு முஸ்லிமுக்கும் விதிக்கப்பட்ட ஐந்து கடமைகளில் ஒன்று, அவன் வாழ்நாளைக்குள் ஒரு முறையாவது மெக்காவுக்குச் செல்ல வேண்டும் என்பது. மெக்காவில் ஈராக்கைச் சேர்ந்த ஈசாக்கும், லெபனானைச் சேர்ந்த ரசாக்கும், நம்முடைய இளையான்குடி புதூரைச் சேர்ந்த இபுராம்சா ராவுத்தர் மகன் அப்துல்லாவும் அருகருகே மண்டியிட்டுத் தொழும்போது, அவர்களின் தேச எல்லைகள் உடைபட்டுப் போகின்றன; ஒரு முழுமையான ‘உம்மா’ கட்டிறுக்கம் பெற்று விடுகிறது.

‘லா இலாஹ இல்லல்லாஹ்; முகம்மதுர் ரஸூலுல்லாஹ்’ – வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனே; முகம்மது நபிகள் இறைத் தூதர் என்பதை ஒப்புக் கொள்பவன்தான் இஸ்லாத்திற்கு மாற முடியும். ‘சுன்னத்’ என்பது இஸ்லாத்திற்கு ஒரு புறச்சடங்குதான்.

இஸ்லாத்தில் எல்லாமே அல்லாஹ்வின் வார்த்தைகள்தாம். அந்த வார்த்தைகள் வெளிப்பட்ட வாசல்தான் நபிகள் நாயகம். ஆகவே திருக்குரான் அல்லாஹ் பேசிய அரபு மொழியிலேயே, அல்லாஹ் பேசிய வார்த்தைகளிலேயே பாதுகாக்கப்படுகிறது. இஸ்லாத்திற்குள் இருந்து கொண்டு திருக்குரானைத் திறனாய்வு செய்வதோ, நபிகள் நாயகத்தை மறுப்பதோ அங்கே பொறுத்துக் கொள்ள முடியாத குற்றம்.

சாலமன் ருஷ்டி ஒரு இந்திய முஸ்லிம்; லண்டனில் வாழ்பவர். புகழ் பெற்ற ஒரு இலக்கியவாதி. நபிகள் நாயகத்தைக் குறித்து மதிப்பு குறைவாக எழுதிவிட்டார் என்பதற்காக, அவர் எழுதிய atanic Versus – என்ற நூலை, முஸ்லிம்களின் உணர்ச்சியை மதித்த இந்திய அரசு தடை செய்தது. அன்று அதிபர் கோமேனியின் தலைமையில் இயங்கிய ஈரானிய அரசோ, ‘ருஷ்டியைக் கொலை செய்துவிட்டு வருகிறவர் யாராயினும், அவருக்கு அரசின் சார்பாக ஒரு லட்சம் டாலர் (50 லட்சம் ரூபாய்) பரிசாக வழங்கப்படும், என்று ருஷ்டி மீது ‘ஃபட்வா’ பிறப்பித்தது. அது இன்னும் உயிர்ப்போடு இருக்கிறது. சாலமன் ருஷ்டியும் உயிரோடு இருக்கிறார்.

தன்னிடம் தஞ்சம் புகுந்துள்ள சாலமன் ருஷ்டியை உயிரோடு பாதுகாப்பதற்கு, இங்கிலாந்து அரசு இன்று வரை பல கோடிகளைச் செலவழித்து விட்டது.

வந்தே மாதரம் பாடலுக்கு விதிக்கப்பட்ட ஃபட்வா இவ்வளவு கடுமையானது இல்லை என்றாலும், ஃபட்வாக்களை இந்தப் பின்னணியில்தான் பார்க்க வேண்டும். இறைவன் யாரென்ற கேள்வி முன்வைக்கப்பட்டபோது, அவன் மிகப் பெரியவன் என்று மொட்டையாகச் சொல்லாமல், பிள்ளைக்குப் பசி நேரம் வந்துவிட்டது என்று முன்னுணர்ந்து பாலூட்டுகிறாளே தாய், அவளை விடச் சாலவும் பெரியவன் என்று மாணிக்கவாசகர் சொல்லும்போது, தாயை நமக்குத் தெரிவதால், அவளை வைத்து இறைவனைப் பற்றிய விளக்கமும் முழுமையாகப் புரிந்து விடுகிறது.

போற்றத்தக்க எதையும் தாய்க்குச் சமமாக வைத்து போற்றுவது நம் இயல்பு. நாட்டைத் ‘தாய்நாடு’ என்கிறோம்; மொழியைத் ‘தாய்மொழி’ என்கிறோம். காவிரியை ‘காவிரித்தாய்’ என்றும், கங்கையை ‘கங்கை மாதா’ என்றும் சொல்கிறோம். பெற்ற தாய் பாலூட்டியது போக, நமக்கு எஞ்சிய காலமெல்லாம் பாலூட்டும் பசுவை இரண்டாம் தாயாகப் போற்றுகிறோம். பசு நமக்கு ‘கோமாதா’. தாயின் கருவறை தாங்கிய காலம் போக எஞ்சிய காலமெல்லாம் நம்மைத் தாங்கி, கடைசியில் தன்னோடு ஐக்கியப்படுத்திக் கொள்ளப் போகும் பூமியை ‘பூமித் தாய்’ என்கிறோம். 

ஆகவேதான் ‘வந்தே மாதரம்’ என்னும் சொல் நமக்கு வசியச் சொல்லானது. அந்த வசியம் ‘தாய்’ என்பதில்தான் இருக்கிறது. நபிகளும் மிகப்பெரிய அளவுக்கு தாயைப் போற்றுகிறார் என்றாலும், அல்லாஹ் மட்டுமே அவர்களுக்கு வணக்கத்திற்குரியவன். ‘பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப் பரிந்து நீ’ (திருவாசகம் – பிடித்த பத்து - 9) என்று தாய் வழியாகத் தாயோடு தொடர்புபடுத்தித்தான் நமக்குக் கடவுள் அறிமுகமாவதால், நமக்குத் தாயும் வணக்கத்திற்குரியவள்.

‘அவள் நொந்து சுமந்தாள்; நொந்து பெற்றாள்; நான் நோகாமல் இருக்கப் பால் சுரந்தாள்; என்னைக் கைக்குள்ளேயே வைத்துப் போற்றிக் காத்தாள்; அப்படிப்பட்டவளின் உடலைச் சுடும்படி சொல்கிறார்களே, எப்படிச் சுடுவேன்?’ என்று கண்ணீர் விட்டு கதறுகிறார் பட்டினத்தார்! எல்லாவற்றையும் துறந்து கோவணத்தை மட்டுமே உடமையாகக் கொண்ட ஞானத் துறவிக்கு, தாயின் செத்துப் போன உடலைச் சுடுவதற்கு இவ்வளவு தவிப்பாய் இருக்கிறது. ‘நொந்து சுமந்து பெற்று நோவாமல் ஏந்தி முலை தந்து வளர்த்தெடுத்து’ (பட்டினத்தார்-392).

தாயைப் பற்றி நமக்கு ஊட்டி வளர்க்கப் பெற்றிருக்கும் மன உணர்வு இத்தகையது என்றால், ‘வந்தே மாதரம்’ என்னும் சொல் நம்மை ஆவேசம் கொள்ளச் செய்வதில் வியப்பென்ன...?

கரிகாற் பெருவளத்தானின் மகள் ஆதிமந்தியின் காதற்பெருங் கணவனான ஆட்டணத்தியை காவிரியில் வந்த பெருவெள்ளம் அடித்துக் கொண்டு போய்விடுகிறது. ‘மகளின் துயரத்தைத் தாய் உணர மாட்டாயா? என் கணவனை எனக்குத் தந்துவிட மாட்டாயா?’ என்று காவிரிக் கரையெங்கும் ஓடி, காவிரிக் கடலில் சங்கமமாகும் இடத்தில் நின்று கண்ணீர் விட்டுக் கதறி நிலைகுலைந்து போகிறாள் ஆதிமந்தி! ‘கன்னவில் தோழாயோ’ (சிலம்பு – வஞ்சினமாலை-13). ஆதிமந்தி, காதல் கணவனைத் ‘தோழா’ என்று விளித்துக் கதறும் கதறல், ஈராயிரம் ஆண்டு கழித்துப் படிக்கும் நமக்கும் கண்ணீரை ஆறாய்ப் பெருக்குகிறதே!

ஒரு தாயே, தன் மகளின் வாழ்வைப் பறித்து விட்டாளே என்னும் தவிப்புத்தானே, நம்முடைய கண்ணீருக்குக் காரணம்?

நமக்கு வரும் கண்ணீர் காதர் மொய்தீனுக்கு வரவில்லையே என்று சண்டை போடுவதால் ஆகப் போவதென்ன? காதர் மொய்தீனுக்குக் காவிரி என்பவள் ஒரு தாயில்லை; அது வெறும் நீரோட்டமே!


வந்தே மாதரம் பாடலை ‘தாய் மண்ணே வணக்கம்’ என்று ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துப் பாடியபோது, கேட்ட நமக்கெல்லாம் மெய்சிலிர்த்தது.

ஒருவேளை அந்தப் பாடல் ஏ.ஆர். ரஹ்மானுக்கே எந்த உணர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கவில்லை என்றால் கூட, அது எந்த வகையில் குற்றம்?

பத்துக் கோடிப் பேர் சேர்ந்து பாட இசையாததால் அவர்களோடு சண்டை போடுவதிலேயே காலத்தைக் கழித்துக் கொண்டு, மீதமுள்ள தொன்னூறு கோடிப் பேர் ‘வந்தேமாதரம்’ என்கின்ற மந்திரச் சொல் ஏற்படுத்துகின்ற உணர்ச்சியை இழந்து விட வேண்டுமா?

வேண்டிய அளவு மோதி முடித்து விட்டோம்; வேண்டிய ரத்தம் இந்திய மண்ணை ஈரப்படுத்தி காய்ந்தும் விட்டது. வேண்டிய மண்ணை மாற்றார்க்குப் பிரித்தும் கொடுத்து விட்டோம். ஓராயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை பிறக்கும் எம்மான் காந்தி சிந்திய ரத்தமே கடைசி ரத்தமாக இருக்கட்டும்.

வந்தே மாதரம்! 

 நன்றி :துக்ளக் 19_11_2009

ஸ்பெக்ட்ராம் ஊழல் – நடந்தது என்ன ?

த்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆண்டிமுத்து ராசா – அதாவது ஆ. ராசா, இப்போது ‘அலைக்கற்றை முறைகேடு ராசா’ என்று அகில இந்தியப் பிரபலம் அடைந்திருக்கிறார். இந்திய அரசுக்கு சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்த ஊழல்தான், இதுவரையில் இந்தியாவில் நடந்த ஊழல்களுக்கு எல்லாம் ராஜா என்று வர்ணிக்கப்படுகிறது.


ராசா - thuglak.com


                                                                                          ராசா

மொபைல் ஃபோன் தொழில் நுட்பச் சேவை அளிக்கும் நிறுவனங்களுக்கு அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யும் பொறுப்பில், ராசாவின் தொலைத் தொடர்புத் துறை இருக்கிறது. 2008-ஆம் ஆண்டில் தனியார் சேவை நிறுவனங்களுக்குச் செய்யப்பட்ட 2-ஜி ஜி.எஸ்.எம். அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு, அப்போதே அம்பலத்திற்கு வந்தது. இப்போது அவரது துறை அலுவலகத்தில் ஸி.பி.ஐ. சோதனை, விசாரணை, வழக்குப் பதிவு என்ற அளவிற்கு வளர்ந்து, விச்வரூபம் எடுத்திருக்கிறது.

‘2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் எந்த முறைகேடும் நடக்கவே இல்லை. 2001-ஆம் ஆண்டில் எந்த முறை பின்பற்றப்பட்டதோ, அதே முறைதான் இப்போதும் பின்பற்றப்பட்டிருக்கிறது’ என்பது ராசாவின் வாதம்.

ஆனால், 2001-ஆம் ஆண்டில் மொபைல் இணைப்புகளின் எண்ணிக்கை வெறும் 50 லட்சங்கள்தான் இருந்தது. 2008 மார்ச்சில் அது 37.5 கோடியாக உயர்ந்தது. அரசு நடைமுறைப்படுத்திய சீர்திருத்தக் கொள்கைகளின் விளைவாக இந்த பிரமாண்ட உயர்வு நிகழ்ந்தது. மொபைல் சேவைத் துறையின் வர்த்தக வளம் 2001-ஆம் ஆண்டிற்கும், 2008-ஆம் ஆண்டிற்கும் இடையில் பல மடங்கு பெருகி விட்டது என்பது தெளிவு.

தவிர, 2001-ஆம் ஆண்டில், மொபைல் சேவைத் துறையை வளர்க்க வேண்டிய நிலையில் அரசாங்கம் இருந்தது. அதனால், ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ், ஏல முறையில் நிர்ணயிக்கப்படவில்லை. வரும் ஆண்டுகளில் மாபெரும் வளர்ச்சிக்கான வாய்ப்பு இருக்கிறது என்ற உண்மை, தனியார் சேவை நிறுவனங்களுக்கே கூட அப்போது தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. அதனால், தனியார் சேவை நிறுவனங்களை ஊக்குவித்து, ஈர்க்க வேண்டிய நிலையில் இருந்தது அரசாங்கம்.

ஆனால், 2008-ஆம் ஆண்டின் நிலை அதுவல்ல. உள்நாட்டு நிறுவனங்களும், வெளிநாட்டு நிறுவனங்களும் தொலைத் தொடர்புத் துறையில் முதலீடு செய்வதை மிகவும் லாபகரமானதாகக் கருதுகிற சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது. அந்தச் சூழ்நிலையில், 2001-ஆம் ஆண்டின் லைசென்ஸ் கட்டணமே 2008-லும் நிர்ணயிக்கப்படும் என்று எடுக்கப்பட்ட முடிவு, தெரிந்தே அரசாங்கத்திற்கு நஷ்டத்தை ஏற்படுத்தச் செய்த முடிவு என்ற கருத்து நிலவுகிறது.

டெலிகாம் ரெகுலேட்டரி அதாரிட்டி ஆஃப் இந்தியா (TRAI) எனும் தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம், டெலிகாம் துறையில் கட்டணம் மற்றும் கொள்கைகளை வகுப்பதில், அரசின் குறுக்கீடுகளைக் குறைப்பதற்காக அரசாங்கத்தால் 1995-ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட அமைப்பு. அந்த அமைப்பு, ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ்களை வழங்கும் விஷயத்தில் ஏல முறையை கடைப்பிடிக்க வேண்டும் என்ற பரிந்துரைகளை 2001, 2003, 2007-ஆம் ஆண்டுகளில் செய்திருக்கிறது. 
ராசாவின் டெலிகம்யூனிகேஷன்ஸ் துறை, ட்ராயின் (TRAI) பரிந்துரைகளுக்கு மாறாக, முதலில் விண்ணப்பிப்பவர்களுக்கு முன்னுரிமை என்று இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஒதுக்கீட்டைச் செய்திருக்கிறது. மேலும் 2008-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 10-ஆம் தேதி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு அறிவிப்புக்குப் பிறகு, ஜனவரி 14-ஆம் தேதி ட்ராயின் தலைவர் நிரூபேந்திர மிஸ்ரா, டெலிகாம் துறைக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். அதில், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ட்ராய் பரிந்துரைகளின் பல்வேறு தொடர்பு அம்சங்களைப் புறக்கணித்து விட்டு, பெயரளவில் பின்பற்றப்பட்டிருப்பதாக சுட்டிக்காட்டி இருக்கிறார்.

தவிர, இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை கோரும் விண்ணப்பங்களைப் பரிசீலிக்கும் கட்டத்தில், டெலிகாம் துறையின் அப்போதையச் செயலாளர் மாத்தூரும், நிதி நிர்வாக உறுப்பினர் மஞ்சுமாதவனும் ட்ராயின் பரிந்துரைகளைக் கருத்தில் கொண்டு, 2001-ஆம் ஆண்டின் விலைக் கொள்கையை மாற்றி, புதிய ஏலமுறையை கொண்டு வர வேண்டும் என்று துறைக்குள் நடைபெற்ற கடிதப் போக்குவரத்தில் குறிப்பிட்டிருக்கிறார்கள். அதில் ‘டெலிகாம் துறையில் தொடர்ந்து எடுக்கப்பட்ட சீர்திருத்த நடவடிக்கைகளால், உலக அளவில் வேகமாக வளரும் டெலிகாம் குழுமமாக, இந்திய டெலிகாம் துறை வடிவெடுத்திருக்கிறது. எனவே, தற்போதைய சந்தை நிலவரத்தின் அடிப்படையில், ஏல முறையில் நுழைவுக் கட்டணத்தை ஏற்படுத்த வேண்டும்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். இந்த குறிப்புக்கு எந்த முக்கியத்துவமும் தரப்படவில்லை. 2001-ஆம் ஆண்டுக் கட்டண முறையே பின்பற்றப்பட்டது.

இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஒதுக்கீடு கேட்டு விண்ணப்பிக்க, கடைசி தேதி 2007 அக்டோபர் 1 என்று செப்டம்பர் 24-ஆம் தேதி அறிவித்தது. ஆனால், செப்டம்பர் 25 – கடைசி நாள் என்று, 2008 ஜனவரி 10-ஆம் தேதி ஒருதலைப்பட்சமாக மாற்றப்பட்டது. இந்த மாற்ற அறிவிப்பின் காரணமாக ஏராளமான விண்ணப்பங்கள் நிராகரிப்புக்கு உள்ளாகின. இந்த நடவடிக்கையும் கூட ‘எந்தவொரு சேவைப் பகுதியிலும் சேவை நிறுவனங்களின் எண்ணிக்கைக்கு உச்சவரம்பு கூடாது’ என்ற ட்ராயின் தெளிவான பரிந்துரைக்குப் புறம்பானதுதான்.

எல்லா பரிந்துரைகளையும் புறக்கணித்து டேடாகாம் சொலுசன்ஸ், எஸ்டெல், ஷ்யாம் டெலிலிங்க், லூப் டெலிகாம், ஸ்பைஸ், ஐடியா செலுலார், டாடா டெலிசர்வீசஸ், ஸ்வான் மற்றும் யுனிடெக் ஆகிய நிறுவனங்களுக்கு இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை லைசென்ஸ் வழங்கப்பட்டது. அதற்காக, இந்த ஒன்பது நிறுவனங்களின் மூலம் அரசாங்கத்திற்குக் கிடைத்த லைசென்ஸ் கட்டணம் 10,772.68 கோடி ரூபாய்.

இந்த ஒன்பது நிறுவனங்களில் ஸ்வான், யுனிடெக் ஆகிய இரண்டு நிறுவனங்கள் மொபைல் ஃபோன் சேவையோ, இணைப்புகளோ அதற்கான கட்டமைப்போ, தொழில் அனுபவமோ இல்லாத நிறுவனங்கள். ஸ்வான் டெலிகாம் நிறுவனம், அகில இந்திய அளவில் பதினான்கு சர்க்கிள்களுக்கான ஸ்பெக்ட்ரம் லைசென்ஸை 1537.01 கோடி ரூபாய் கட்டணத்தில் பெற்றது. யுனிடெக் நிறுவனம் வயர்லெஸ் நிறுவனம், 22 சர்க்கிள்களுக்கு 1651 கோடி ரூபாய் கட்டணத்தில் லைசென்ஸைப் பெற்றது.

லைசென்ஸ் பெற்ற ஆறு மாதங்களுக்குள், இந்த இரண்டு நிறுவனங்களும் தங்களது பங்குகளின் ஒரு பகுதியை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்று விட்டன. ஸ்வான் நிறுவனம் தனது மொத்தப் பங்குகளில் 45 சதவிகிதப் பங்குகளை, ஐக்கிய அரபு எமிரேட்டைச் சேர்ந்த எடிசலாட் நிறுவனத்திற்கு 4050 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்து விட்டது. அதன் மூலம் ஸ்வான் நிறுவனத்தின் மதிப்பு 9990.56 கோடி ரூபாய் அளவிற்கு உயர்ந்து விட்டது.

யுனிடெக் நிறுவனம், தனது மொத்தப் பங்குகளில் 60 சதவிகிதப் பங்குகளை நார்வே நாட்டைச் சேர்ந்த டெலனர் என்ற நிறுவனத்திற்கு, 6120 கோடி ரூபாய்க்கு விற்று விட்டது. அதன் மூலம் யுனிடெக் நிறுவனத்தின் மதிப்பு 10731.5 கோடி ரூபாயாக உயர்ந்து விட்டது. ‘ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ்’ என்ற துண்டுக் காகிதத்தின் மூலம் ஸ்வான் மற்றும் யுனிடெக் ஆகிய நிறுவனங்கள் தங்களது முதலீட்டைப்போல் 700 சதவிகிதம் லாபத்தை – அதுவும் ஆறு மாதங்களுக்குள் – அடைந்து விட்டன.
ராசாவின் அமைச்சகம் ஒன்பது நிறுவனங்களுக்கு லைசென்ஸ் வழங்கி திரட்டிய கட்டணம் 10,772.65 கோடி ரூபாய். ஸ்வான் மற்றும் யுனிடெக் ஆகிய நிறுவனங்கள் தங்கள் பங்குகளின் பாதியளவை மட்டும் விற்று, தாங்கள் பெற்றிருக்கும் லைசென்ஸின் மதிப்பு 20 ஆயிரம் கோடிக்கும் மேல் என்று காட்டிவிட்டன. இந்த இரண்டு நிறுவனங்களின் பங்கு விற்பனை விலையை சந்தை விலையாகக் கொண்டு கணக்கிட்டால், ராசா ஒதுக்கீடு செய்த ஒன்பது நிறுவனங்கள் மூலம் அரசுக்கு 70,022.42 கோடி ரூபாய் லைசென்ஸ் கட்டணமாக கிடைத்திருக்க வேண்டும். அந்த வகையில் ராசாவின் இந்த ஒரு நடவடிக்கையால் மட்டும் நாட்டிற்கு 60,000 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது.

இதைத் தவிர, சி.டி.எம்.ஏ. மொபைல் ஃபோன் வகை சேவையாளர்கள், ஜி.எஸ்.எம். முறைக்கு மாறுவதற்கு அளிக்கப்பட்ட லைசென்ஸ்களைக் குறைவான மதிப்பீட்டில் வழங்கியது; ஏற்கெனவே சேவை அளித்து வரும் ஜி.எஸ்.எம். சேவையாளர்களுக்கு கூடுதலாக ஸ்பெக்ட்ரம் வழங்கியது – ஆகிய வகையில், சுமார் 40,000 கோடி ரூபாய் அளவுக்கு அரசுக்கு நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது என்ற குற்றச்சாட்டும் வலுவாக வைக்கப்படுகிறது.

2-ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகளைப் பற்றி, மத்திய விஜிலென்ஸ் கமிஷன் 2008-ஆம் ஆண்டு நவம்பர் 15-ஆம் தேதி டெலிகாம் துறை செயலருக்கு ஒரு கடிதம் அனுப்புகிறது. அதில் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறித்து அதிருப்தி தெரிவித்து, முறைகேடுகளைப் பட்டியலிட்டுக் கேள்விகளை எழுப்பியிருக்கிறது.

இத்தனைக்குப் பிறகும், அலைக்கற்றை ஒதுக்கீட்டு முறைகேடு பற்றி 2008 டிசம்பர் 15-ஆம் தேதி பாராளுமன்ற மக்களவையில் உறுப்பினர்கள் கேட்ட கேள்விக்குப் பதில் அளித்த ராசா, ‘முதலில் விண்ணப்பித்தவர்களுக்கு முதலில் ஒதுக்கீடு என்ற முறையில் இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்ட விஷயத்தில் மத்திய விஜிலென்ஸ் கமிஷனோ, டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையமோ (ட்ராய்) எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை’ என்று உண்மைக்கு மாறான தகவலை தந்தார்.

ட்ராய் அமைப்பின் தலைவர் நிரிபேந்த்ர மிஸ்ரா 2008-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அளித்த பேட்டியில், “முதலில் விண்ணப்பிக்கிறவர்களுக்கு முதலில் விநியோகம் என்ற வாசகமே தங்களது பரிந்துரையில் இல்லை” என்று தெரிவித்தார்.

தலைமை விஜிலென்ஸ் கமிஷனர் பிரத்யுஷ் சின்ஹா 2009-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒரு பேட்டி அளித்தார். 2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் அப்பட்டமான முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், முறைகேட்டிற்குக்காரணமானவர்களை அதற்குப் பொறுப்பேற்கச் செய்யும் பணியில் ஈடுபட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

இவ்வளவுக்குப் பிறகும் காங்கிரஸ் கட்சியும், பிரதமரும், மத்திய நிதியமைச்சரும் 2ஜி அலைக்கற்றை முறைகேட்டைப் பூசிமெழுகப் பார்ப்பது – நடந்த ஊழலை விட பெரிய அதிர்ச்சியாக இருக்கிறது. 
* அலைக்கற்றை (ஸ்பெக்ட்ரம்) – பல அலைவரிசைகளின் தொகுப்பு

* 2-ஜி Second Generation Wireless Telephone technology) – இரண்டாம் தலைமுறை மொபைல் ஃபோன் தொழில்நுட்பம்

GSM (Global System for mobile communications) – மொபைல் தொடர்புக்கான உலக அளவிலான முறை

CDMA (Code Division Multiple Access) – குறியீட்டை பலவாக பகிர்ந்தளிக்கும் வசதி 
நன்றி : துக்ளக் 05 /11 /2010

பாகிஸ்தான் பயணம் – எல்.கே. அத்வானி

என் தேசம், என் வாழ்க்கை - 35

மே – ஜூன் 2005-ல் என்னுடைய பாகிஸ்தான் பயணம், மனித முயற்சிகளை மர்பி விதிக்கு உதாரணம் ஆக்கியது. சில நேரங்களில் எதைச் செய்தாலும் தவறாகப் போகக் கூடிய விதியை நினைவுபடுத்தியது. 

...நான் பாகிஸ்தான் போனபோது, அமைதியின் தூதுவனாக இரு நாட்டு உறவுகளும் மேம்பட வேண்டும் என்ற மனப்பூர்வமான ஆவலுடன்தான் சென்றேன். என்னுடைய பயணம் அதற்கு முடிந்தவரை உதவியிருக்கிறது என்றுதான் நான் மனப்பூர்வமாக நம்புகிறேன். முகமது அலி ஜின்னாவின் நினைவகத்துக்குப் போயிருந்தேன். ஜின்னா 1947-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11-ஆம் தேதி பேசியவற்றின் சாரம் தொனிக்கும் சில கருத்துக்களை நான் அப்போது வெளியிட்டேன். ஜின்னாவின் பேச்சு, பாகிஸ்தான் அரசியல் அமைப்பு நிர்ணய சபையில் அப்போது பேசியது. ஆனால் அது இந்தியாவில், அதுவும் என் கட்சியினரிடையே பெரிய சலசலப்பை ஏற்படுத்தி விட்டிருந்தது. நான் ‘ஹிந்துத்துவா’வைப் புறக்கணித்து, கொள்கை ரீதியாகத் தடம் மாறிவிட்டேன் என்று விமர்சிக்கப்பட்டேன். நான் துரோகி என்றும் கூட பேசப்பட்டது. 

இந்தப் பிரச்சனை நான் பாகிஸ்தானில் இருக்கும்போது ஆரம்பித்து, நான் அங்கிருந்து திரும்பி டெல்லி வரும்போது உச்சக்கட்டத்தை எட்டியிருந்தது. 2005 டிசம்பரில் நான் பி.ஜே.பி. தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டேன். எனக்கு அப்பதவி கிடைத்து ஓராண்டே ஆகியிருந்தது. இந்த நிகழ்ச்சி கட்சியினரிடையே பிளவை ஏற்படுத்தும் சூழ்நிலையாக மாறி, பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை தோற்றுவித்திருந்தது. இவை என் மனதில் தீராத வலியையும் ஆழமான சோகத்தையும் ஏற்படுத்தி விட்டன. 

...என்னுடைய பாகிஸ்தான் பயணம் தனிப்பட்டதும் அரசியல் முக்கியத்துவமும் வாய்ந்ததுமாகும். என்னுடைய பிறந்த ஊர் கராச்சி. 57 ஆண்டுகளுக்கு முன் பிரிக்கப்படாத இந்தியாவின் ஒரு பகுதி அது. பிரிவினைக்குப் பின் அங்கு செல்லும் என்னுடைய இரண்டாவது பயணம் அது. இந்தியாவின் செய்தி ஒலிபரப்புத்துறை அமைச்சராக இருந்த காலத்தில் 1979-ல் அங்கு சென்றிருந்தேன். அது கராச்சியை மட்டும் பார்த்த மிகக் குறுகிய பயணம். தவிர, நான் அப்போது தனியாகப் போயிருந்தேன். என்னுடைய மனைவி கராச்சியில் பிறந்து வளர்ந்த சிந்து பெண்ணாக இருந்தாலும், பிரிவினைக்குப் பிறகு அவள் அங்கு போனதே இல்லை. என் மகன் ஜெயந்த், அவன் மனைவி கீதிகா, மகள் பிரதிபா ஆகியோருக்கு இதுவே முதல் பயணம். ஆகவே சிந்து சென்று அங்கு வாழும் சிந்திக்களோடு பழக வேண்டும் என்பது அவர்கள் தணியாத ஆவல். 

பாகிஸ்தான் பிரிவினையால் பாதிக்கப்பட்டவர்களாக எங்களை எண்ணியதால், சிந்து பயணம் எங்களுக்கு ஆர்வம் மிக்கதாகவும் தோன்றியதில் வியப்பில்லை. மேலும் எனது பயணத்தின் மூலம் தனிப்பட்ட முறையில் நம் அண்டை நாட்டுடன் உள்ள தற்போதைய உறவு நிலையை மாற்ற முடியும் என்று நான் எண்ணினேன். இடம் பெயர்ந்து வந்த அகதிகள் தான் பிரிவினையின் கொடுமையை உணர முடியும். பிரிவினைக்குப் பின் பல ஹிந்து மற்றும் சீக்கிய குடும்பங்கள் தாங்கள் பிறந்த மண்ணை ஒருமுறை கூட மிதிக்க முடியவில்லை. அதே போன்று ஆயிரக்கணக்கான முஹாஜிர்கள் தங்கள் பிறந்த மண்ணான உத்திரப் பிரதேசம், பீஹார், டெல்லி, மும்பை, போபால், ஹைதராபாத் மற்றும் இந்தியாவில் உள்ள பல இடங்களைக் காண்பதை கனவாகவே எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். 

...விமர்சனம் என்பது ஜனநாயகத்தின் இதயம். அந்த இதயம் எப்போதும் ஆரோக்கியமான சூழ்நிலையில் இருந்து வர வேண்டும். அப்போதுதான் அது தன் சக்தியை நல்ல முறையில் பேணி காக்க முடியும். குறை கூறப்படுவதை வெறுக்கும் அரசியல்வாதி ஜனநாயகவாதியாக நீடிக்க முடியாது. சர்வாதிகாரியாகத்தான் உருமாறித் தீர வேண்டும். ஆனால் இந்தக் குறை கூறல் நிலைத்து நிற்க வேண்டுமானால், சாட்டப்படும் குற்றம் அசைக்க முடியாத ஆதாரத்தைக் கொண்டதாக இருக்க வேண்டும். ஆதாரத்தை அளிக்க அதிகப்படி யான முயற்சி எடுத்துக் கொண்டு, பிறகு குற்றம் சாட்ட வேண்டும். 

..என்னைச் சுற்றி எழுந்த கருத்து வேறுபாடு, நான் பாகிஸ்தான் சென்ற போது பாகிஸ்தானின் தோற்றத்துக்குக் காரணமாக இருந்தவரும், பாகிஸ்தானின் முதல் கவர்னர் ஜெனரலுமான முகமதுஅலி ஜின்னா பற்றியது. நான் அவருடைய நினைவிடத்திற்குச் சென்றிருந்தபோது, அவருடைய முந்தைய நிலை பற்றி தெரிவித்த ஒரு கருத்தே பரபரப்பிற்குக் காரணம்.

...ஜின்னா அவர்களுக்கு என் அஞ்சலியைச் செலுத்தியபின் பார்வையாளர்கள் புத்தகத்தில் கீழ்கண்டவாறு குறிப்பிட்டேன் :


ஜின்னா - thuglak.com
ஜின்னா

“பல மனிதர்கள் சரித்திரத்தில் அழிக்க முடியாத முத்திரையை பதிப்பதுண்டு. ஆனால் வெகு சிலராலேயே சரித்திரம் படைக்க முடியும். காயிதே ஆஸாம் முகமது அலி ஜின்னா அவர்கள் அத்தகைய அபூர்வமான மனிதர். இந்தியாவின் கவிக்குயில் சரோஜினி நாயுடு இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கு பெற்ற ஒப்பற்ற தலைவர். அவர் ஜின்னாவை ‘ஹிந்து முஸ்லிம் ஒற்றுமைத் தூதுவர்’ என்றார். ஜின்னா 1947 ஆகஸ்ட் 11-ல் அரசியல் நிர்ணய சபையில் உரையாற்றியபோது, ‘பாகிஸ்தானை மதச்சார்பற்ற நாடாக உருவாக்க, ஒவ்வொரு குடிமகனும் தன் மதத்தை உண்மையாக பின்பற்றுவது மட்டுமின்றி, பிற மதத்தவர்களின் மத நம்பிக்கைக்கும் அதே மதிப்பு அளிக்க வேண்டும்’ என்றார். அந்த உயர்ந்த மனிதருக்கு என் மதிப்பு மிக்க அஞ்சலி”. 

நான் நினைவகத்தை விட்டு வெளியே வரும்போது, திரளான பத்திரிகை நிருபர்கள் காத்திருந்தனர். செய்தி பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்களுமாக நிறைந்திருந்தார்கள். அவர்களிடம் சில நிமிடங்களுக்கு முன் நான் பார்வையாளர் புத்தகத்தில் என்ன எழுதி விட்டு வந்தேனோ அதே கருத்தைக் கூறினேன். உடனே தொலைக்காட்சி நிறுவனங்கள் ‘முக்கிய செய்தி’ என்ற தலைப்பில் ‘ஜின்னாவை அத்வானி மதச்சார்பற்றவர்’ என்று கூறுகிறார். ‘ஹிந்து – முஸ்லிம் ஒற்றுமையின் தூதர் ஜின்னா என அத்வானி அறிக்கை’ என்று ஒளிபரப்பத் துவங்கின. அதற்கு வலு சேர்க்கும் விதமாக நான் ஜின்னா நினைவிடத்துக்குச் சென்ற காட்சியையும் ஒளிபரப்பினர். 

இந்த ஒளிபரப்பு இடைவிடாமல் தொடர்ந்தது. இதனுடன் பா.ஜ.க.வைச் சேர்ந்த சிலர் என்னை கடுமையாக விமர்சிப்பதையும் சேர்த்து ஒளிபரப்பினர். ‘ஜின்னாவின் துரோகத்தைப் பாராட்டுபவரும், துரோகியே’ என்று கடுமையாக என்னைச் சாடினர். ‘ஜின்னா மதச்சார்பற்றவராக இருந்தால், அத்வானி தன் குடும்பத்துடன் ஏன் இந்தியாவுக்கு ஓடி வர வேண்டும்? பா.ஜ.க.வின் தலைவர் தன்னுடைய உண்மையான சுபாவத்தை காட்டியுள்ளார்’ என்றும் கூறினர். 

அடுத்த சில நாட்களுக்கு இந்த குற்றச்சாட்டும், அதற்குக் காரணமான என் பேச்சுக்களுமே எல்லா பத்திரிகைகள், தொலைக்காட்சி ஒளிபரப்புகள் ஆகியவற்றின் முக்கிய செய்தியாகக் காணப்பட்டன. அன்று மாலை கட்சியின் சில சகாக்களோடு நான் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியபோதுதான், இந்த பிரச்சாரத்தின் கடுமையான தாக்கத்தை என்னால் தெரிந்து கொள்ள முடிந்தது. 

...நான் மனசாட்சிப்படி நடந்து கொண்டதற்கு ஆதரவாக, ஜின்னாவைப் பற்றி பலரும் அறியாத இரண்டு விஷயங்களை குறிப்பிட விரும்புகிறேன். ஏனென்றால் சுதந்திரம் பெறுவதற்கு முன் இந்தியா கொண்டிருந்த இணைந்த சரித்திரத்தை இந்திய மக்களும், பாகிஸ்தான் மக்களும் புரிந்து கொள்ள வேண்டும். அதேபோல் பாகிஸ்தான் சமயச்சார்பற்ற நாடு என்ற ஜின்னாவின் கொள்கையின் பார்வையையும் புரிந்து கொள்ள வேண்டும். அவர் கண்ட கனவு நிலைக்கு மாறாக தற்போது, பாகிஸ்தான் மதச்சார்பு கொண்ட நாடாக மாறி விட்டிருப்பதையும் கவனிக்க வேண்டும். ஜின்னாவின் எண்ணத்திற்கு மாறாக பாகிஸ்தானில் சிறுபான்மை மதத்தவர்கள் உதாசீனப்படுத்தப்பட்டு வருகிறார்கள் என்பதை கவனிக்க வேண்டும்.

வாழ்க்கையைப் புரிந்துகொள்ளும் முயற்சியும், மகிழ்ச்சியும்... – எல்.கே. அத்வானி

என் தேசம், என் வாழ்க்கை - 36

...நான் எனது எண்பது ஆண்டு கால வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கிறேன். சிந்துவில் ஹைதராபாத்தில் ஒரு டென்னிஸ் மைதானத்தில், நான் முதன் முதலாக ‘ராஷ்ட்ரிய சுயம் சேவக்’ என்ற பெயரைக் கேட்டேன். அப்போதே அதை என் வாழ்க்கையின் அழைப்பாகப் புரிந்து கொண்டேன். உடனே 1942-ல் அதில் ஒரு தொண்டனாக இணைந்து கொண்டேன். எல்.கே. அத்வானி - thuglak.com
எல்.கே. அத்வானி

...அந்தப் பயணம் இன்னும் முடிவடையவில்லை. பதினான்கரை வயதில் தொடங்கிய அந்தப் பயணம் ஒரே ஒரு குறிக்கோளைத்தான் என் வாழ்க்கைக்கு அளித்துள்ளது. அதுதான் தாய்நாட்டுச் சேவை. 
இந்தச் சேவைக்காக நான் பயணப்பட்டு வந்தபோது, என் கடமை, என் அர்ப்பணிப்பு, உள்ளத் தூய்மை, கடமைக்கான பங்களிப்பு ஆகியவை பலமுறை குறிப்பாக அரசியல் எதிரிகளை எதிர்கொண்டபோது சோதனைக்குள்ளாகி இருக்கிறது. பணிவுடனும், கடமை உணர்வுடனும் ஒன்றை மட்டும் கூற முடியும். என் மனசாட்சியின் கண்கள் என்னைத் தேடும்படி நான் விட்டதே இல்லை. எனது கணிப்புகளில் நான் பல தவறுகளைச் செய்ததுண்டு. என்னுடைய கடமையை நிறைவேற்றுவதிலும் தவறுகள் நடந்துள்ளன. ஆனால், என் சுய லாபத்துக்காகவோ, சுயநோக்கத்துடன் திட்டமிட்டோ அப்படிச் செய்தது கிடையாது. 

அதேபோல, தனிப்பட்ட என் சௌகரியத்துக்காகவும், பயன்களுக்காகவும் நான் அடிப்படைக் கொள்கைகளை ஒருபோதும் துறந்ததில்லை. நான் என் சுயமரியாதைக்கும், நாட்டு நலனுக்கும் எது நல்லதோ அதைச் செய்வதற்குத் தயங்கியதே கிடையாது. அப்படிப்பட்ட செயல்களைச் செய்யும்போது பல ஆபத்துகளை எதிர் கொண்டிருக்கிறேன். 

அவசர நிலை காலத்தின்போது சிறையில் இருக்க நேர்ந்தபோதோ, பொய்யான குற்றத்தைச் சுமத்தி ‘ஹவாலா’ பண மோசடியில் என் பெயரை இணைத்தபோதோ, அயோத்தி இயக்கத்தின்போது என் மீது ‘ஹிந்து வெறியன்’ என்று பழி சுமத்தி அழைக்கப்பட்டபோதோ, பாகிஸ்தான் பயணத்தின்போது என் கொள்கைகள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு அவதூறுகளுக்கு ஆளானபோதோ, நான் மனசாட்சியின் குரலைக் கேட்டுத்தான் தீர்க்கமாக நின்றேன். அது என்னைப் பலப்படுத்தியதோடு மட்டுமல்லாமல் எனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி, வாழ்வின் அர்த்தத்தையும் புரிந்து கொள்ள வைத்தது. 

...என் சகாக்களும், நான் சந்திக்க நேர்பவர்களும், நான் எப்போதுமே பிடிவாதமாக இருக்கிறேன் என்று விமர்சிக்கிறார்கள். ஆனால், நான் என் கட்சியை எப்போதும் தடுமாற்றம் இல்லாமல் நேசிக்கிறேன். என் நாட்டையும் அதே அளவு நேசிக்கிறேன். எனது கட்சி, இந்த நாட்டு நலனுக்காக எனக்கு விதித்த கடமையை என்னால் முடிந்த அளவு நிறைவேற்றி வருகிறேன். நான் பிடிவாதக்காரன் என்ற பலரது விமர்சனம் குறித்து, எனக்கு எந்த வருத்தமும் கிடையாது. நெருக்கடி கால நிலையில் அதை எதிர்த்து நான் மேற்கொண்ட போராட்டமும், மொரார்ஜி தேசாய் அரசில் செய்தி ஒளிபரப்பு அமைச்சராக இருந்தபோது என் பங்களிப்பு குறித்தும் நான் மனநிறைவே கொள்கிறேன். அதே அளவுக்கு இந்தியாவின் பன்முக வளர்ச்சிக்கும், குறிப்பாக உள்நாட்டுப் பாதுகாப்புக்கு ஒரு உதாரணமாக அதைப் பலப்படுத்துவதிலும், உள்துறை அமைச்சராகவும், பின் உதவிப் பிரதமராக அடல்ஜியின் அரசிலும் பணியாற்றினேன். 
வாஜ்பாய் - thuglak.com
வாஜ்பாய்

கட்சியில், அல்லது அரசாங்கத்தில் தீர்மானமான கூட்டு முயற்சியிலும் ஈடுபட்டு நான் ஆற்றிய பணி சிறிதளவே ஆகும். எங்கள் கட்சியின் நூற்றுக்கணக்கான ஒப்பில்லாத சகாக்களுடனும், கூட்டணிக் கட்சிகளுடனும் பணிபுரிந்ததைக் கௌரவமாக எண்ணுகிறேன். பொதுவான குறிக்கோளுடன் அவர்களுடன் பணியாற்றியது என்னுள்ளே மிக்க சந்தோஷத்தை ஏற்படுத்துகிறது. அதே போல, இரண்டு ஆட்சிகளிலும் நான் அமைச்சராகப் பணியாற்றியதும் எனக்குக் கிடைத்த கௌரவமே. 

...வழக்கமான பாணியில் கூறுவதானால் நான் மதம் சார்ந்தவன் அல்ல. நான் தினசரி பூஜைகள் செய்வதில்லை. வழக்கம் மாறாமல் கோவிலுக்குச் செல்பவனும் அல்ல. ஆனால், மதமும், ஆன்மீகமும் என் தோற்றத்திலும் அரசியல் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கின்றன. முரட்டுத்தனமாகவும், வஞ்சகமாகவும், ஊழல் நிறைந்தும் இருப்பது சுலபம். நான் அவற்றை தவிர்த்து விட முடிகிறதென்றால், நான் மத உணர்வுடனும், ஆன்மீக நெறியுடனும் வளர்க்கப்பட்டதே காரணம். நம்மை விட உயர்ந்த சக்தி உள்ளதென்றும், அதன் முன்பு மற்ற அனைத்தும் காணாமல் போய்விடக் கூடியதென்றும், அந்த மாபெரும் சக்திக்கு ஒருநாள் பதில் சொல்லியே ஆக வேண்டும் என்ற எண்ணமே நம்மிடம் பணிவையும், மனிதாபிமானத்தையும், தொலைநோக்குப் பார்வையையும் ஏற்படுத்தி விடுகிறது.

...இன்றைய இந்திய அரசியல், மஹாத்மா காந்தி, தீனதயாள் உபாத்யாயா ஆகியோர் கூறியவற்றிலிருந்து வெகுதூரம் விலகி வந்துவிட்டது. தர்மம் காட்டும் வழியிலிருந்து வெகுதூரம் விலகிவிட்டது. அரசாங்கம் தர்ம ராஜ்யத்திலிருந்து மாறுபட்டு நிற்கிறது. ஆனால், மனபூர்வமாக இந்த உண்மையைப் புரிந்து கொள்வோமேயானால், ஏற்பட்டுவிட்ட இடைவெளி தொலைவை குறைக்க முடியும். நான் என் அரசியல் வாழ்விலும், என் தனிப்பட்ட வாழ்க்கையிலும் இந்தப் பாதையில் சிறிய அடியாவது எடுத்து வைக்க முயன்று வருகிறேன். நான் தடுமாறி இருக்கலாம். ஆனால், முயற்சியை நிறுத்தி விடவில்லை. இதுகூட என் வாழ்க்கையில் நான் பெற்று வரும் மனம் நிறைந்த மகிழ்ச்சிக்கு ஒரு காரணமாக இருந்து வருகிறது.

....நான் அரசியலில் பங்கு கொண்ட அறுபதாண்டு காலமும், நாடு சுதந்திரக் காற்றை சுவாசித்து வரும் அறுபது ஆண்டுகளும் ஒன்றாக இருக்கின்றன. நமது நாட்டைப் பலப்படுத்தி, சர்வதேச அரங்கில் அதன் மதிப்பை உயர்த்த உதவியதாக நான் மூன்று சாதனைகளைக் குறிப்பிட விரும்புகிறேன். படிப்பறிவில்லாத பலரைக் கொண்டதாகவும், பலவிதமான மாறுபட்ட எண்ணங்கள் கொண்ட சமூகங்களையும், பல்வேறு பழக்கங்களையும் கொண்டதாகவும் உள்ள இந்தியா, ஒரே நாடாக இருக்கக் கூடாது என்ற வெளிநாட்டவரின் எண்ணத்தையும், ஆரூடத்தையும் பொய்யாக்கி ஒரே நாடாக இருந்து, நமது ஜனநாயகத்தைக் கண் போல் பாதுகாத்து வெற்றி பெறச் செய்து, அவர்களின் எதிர்பார்ப்பை தூள் தூளாக்கி விட்டோம்.

இந்தியா குடியரசு நாடாக இருக்கக் காரணம், அதன் புனிதமான ஹிந்து ஒழுக்க நெறி. ஜனநாயக நாடாக இருப்பது மட்டுமின்றி, மதச்சார்பற்ற தன்மையைப் பேணிக் காக்க உதவி வருவதும் அதன் ஹிந்து ஒழுக்க நெறியே.

இரண்டாவது காரணம் – 1998-ல் நமது முன்னாள் பிரதமர் வாஜ்பாய் எடுத்த துணிவான முயற்சியால், இந்தியா அணுஆயுத சக்தி வாய்ந்த நாடாக மாறியது. ...நமது மூன்றாவது வெற்றி, பொருளாதாரத்துறையில் ஏற்பட்டுள்ள பெருத்த முன்னேற்றம். உலக நாடுகள் இந்தியாவை, நாளைய பலம் பொருந்திய நாடாக எண்ணத் தொடங்கி இருக்கின்றன. இதன் காரணமாக, உலக சமுதாயம் இந்தியர்களை மதிப்புடனும், மரியாதையுடனும் எண்ணத் தொடங்கும் காலம் ஏற்பட்டிருக்கிறது. இத்தகைய நிலை முப்பது ஆண்டுகளுக்கு முன் இல்லாத ஒன்று.

ஒரு இந்தியன், ஒரு அரசியல்வாதி என்ற இரண்டு நிலைகளிலும், என்னை இந்த மூன்று வெற்றிகளும் பெருமைப்படவும், சந்தோஷப்படவும் வைத்துள்ளன. என்னுடைய கட்சி இந்த மூன்றிலும் பங்கு கொண்டிருப்பது கூடுதலான சந்தோஷம்.

.நான் என் அரசியல் வாழ்க்கையில் எனக்கு அளிக்கப்பட்ட ஒவ்வொரு கடமையையும், பொறுப்பையும், அது பெரியதாக இருப்பினும், சிறியதாக இருப்பினும் நேர்மையுடனும், அர்ப்பணிப்புடனும், ஈடுபாட்டுடனும் செய்து வருகிறேன். என் வாழ்வில் நான் பெற்ற பெருமையாக இதை எண்ணுகிறேன். இந்தியா மேலும் ஒற்றுமையானதாக, உறுதியும் பெருமையும் கொண்டதாக, பிரகாசமானதாகத் திகழ, வருங்காலத்திலும் தொடர்ந்து இதே போன்ற அர்ப்பணிப்புடன் எல்லாம் வல்ல இறைவனின் அருளால் எனது பணிவான சேவையைப் புரிவேன்.