கப்பலோட்டிய தமிழன் யார்?


நாட்டின் விடுதலை இயக்கத்திலே பெரும் பங்கேற்று செயலாற்றி வந்தவர் சிதம்பரம் பிள்ளை அவர்கள். வ.உ.சி என்ற மூன்றெழுத்து பெயர் பெற்றவர். வெள்ளையருக்கு எதிராக மரக்கலம் (கப்பல்) விடுக்க முன் வந்தவர். அதற்கு உரிய திட்டங்கள் தீட்டினார். அதை நிறைவேற்ற பெரும் பொருள் தேவையாக இருந்தது அவருக்கு.
“தேசிய இயக்கத்தில் ஈடுபட்ட வ.உ.சி. வெறும் பிரச்சாரத்தோடு நின்றுவிடவில்லை. அன்று தூத்துக்குடிக்கும் இலங்கையிலுள்ள கொழும்புவுக்கும் இடையே கப்பலை நடத்திக் கொண்டிருந்தது ஒரு பிரிட்டிஷ் கம்பெனி. அதற்கு போட்டியாக ஒரு கம்பெனியின் மூலம் கப்பல் ஓட்டவேண்டுமென்ற எண்ணம் ஏற்பட்டது வ.உ.சிக்கு
ஓட்டப்பிடாரத்தில் அவருக்கு ஒரு சிறிய பூமிதான் சொந்தம். அந்த நிலத்தை விற்று கிடைத்த தொகையை “சுதேசி ஸ்டீம் நாவிகேசன் கம்பெனி” என்ற கப்பல் கம்பெனியின் மூலதனப் பங்குகளாகப் போட்டார்” என்று “விடுதலைப் போரும் திராவிட இயக்கமும்” என்ற தமது நூலின் பக். 27 ல் தோழர் பி.இராமமூர்த்தி குறிப்பிட்டுள்ளார்.

இந்த உண்மையான செய்தியை(!) பின்பற்றி அறிஞர் பலரும் எழுதியுள்ளனர்.
அன்று சிறிய பூமியை விற்றதில் எவ்வளவு பணம் கிடைத்திருக்கும்? ஆயிரக்கணக்கான பணம் தேவையல்லவா?
வரலாற்றில் நடைபயின்று, தம் வாழ்க்கையையே நாட்டு வரலாறாக ஆக்கிக் கொண்ட தோழர் இராமமூர்த்தி அவர்கள் இளைய தலைமுறையினருக்கு உண்மை வரலாறுகளை எடுத்துக்காட்டும் வலிமையான ஊன்றுகோல் தான் இதுவா! ஊறுவிளைவிக்கும் கோலாகுமல்லவா!
தூத்துக்குடியில் சாதாரண வழக்குரைஞராக இருந்த வ.உ.சி. அவர்களுக்குப் பெரும் பொருள் தேடுவது எளிதாக இல்லை. அப்பொழுது, பாலவநத்தம் குறுநில மன்னர், செந்தமிழ்க் குரிசில் வள்ளல் பாண்டித்துரைத் தேவர் அவர்களது கொடைச் சிறப்பினை அறிந்தார்.
1906ம ஆண்டு ஜூலைத் திங்கள் 25ம் நாள் முகவை சென்று வள்ளல் பாண்டித்துரைத் தேவர் அவர்களைக் கண்டார். தமது எண்ணங்களைத் தெரிவித்தார். பொருள் உதவியும் வேண்டினார்.
தெய்வீகப் பற்றும் தேசிய உணர்வும் பொங்கிக் ததும்பி நின்ற வள்ளல் தேவர் அவர்கள் சிதம்பரம் பிள்ளை அவர்களது கருத்துக்களை முழுமையான ஏற்றுக் கொண்டார். அவரைப் பாராட்டி ஊக்குவித்தார். இரண்டு இலட்சம் வெண்பொற்காசுகள், கடனாக அல்ல, நன்கொடையாக வழங்கினார். இந்தக் கப்பல் கம்பனி மூலமாக கிடைக்கும் வருவாயை மதுரைத் தமிழ்ச் சங்கம் பெற ஏற்பாடுகளும் செய்திருந்தார். மேலும் தனது நண்பர்களை எல்லாம் பங்கு பெறச் செய்து பெரும் பொருள் உதவி செய்தார்.
“சுதேசி ஸ்டீம் நேவிகேசன் கம்பெனி” என்ற பெயரில் மரக்கலப்பணி உருவானது. வெள்ளையர்களுக்கு எதிராக எவரும் முன்வராது அஞ்சி நின்ற நிலையில், வள்ளல் பாண்டித்துரைத் தேவர் அவர்கள் மரக்கால அணிக்குத் தலைமையும், செயலாளர் பொறுப்பும் ஏற்றுக் கொண்டார். 1906ம் ஆண்டு அக்டோபர் திங்கள் 16ம் நாள் கம்பனி பதிவு செய்யப்பட்டது. – “தேவர் முரசு”, செப்டம்பர் 1981.
(வள்ளல் பாண்டித்துரைத் தேவர் தான் 1911ம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 14 ம் நாள் தமிழ்க்கோவில் என்னும் தமிழ்ச் சங்கத்தை மதுரையில் தோற்றுவித்தார். உக்கிரப் பெருவழுதி பாண்டியன் காலம் 3ம் தமிழ்ச் சங்கம் அழிந்தது. மீண்டும் உக்கிரப் பாண்டியன் என்ற வள்ளல் பாண்டித்துரைத் தேவரால் 4ம் சங்கம் தோற்றுவிக்கப் பட்டது.)
என்றாலும், தொடர்ந்து இதர கம்பெனிகளுடன் போட்டியிட முடியா நிலையினாலும் ஆங்கில ஏகாதிபத்தியத்தின் இன்னல்களாலும் விரைவில் மூடப்பட்டது.
வெள்ளையர்களுக்குக் கட்டுப்பட்டிருந்த குறுநில மன்னர் வள்ளல் பாண்டித்துரைத் தேவர் அவர்கள், அவர்களுக்கு எதிராகத் துவக்கப்பட்ட சிதம்பரம் பிள்ளை மரக்கலப்பணிக்கு உதவியதால், தலைமையும் ஏற்று தாமே ஏற்றுக் கொண்டதால் அடைந்த இன்னல்கள் ஏராளம், ஏராளம். எழுதத்தரமன்று அவையாவையும் இங்கே. பாலவநத்தம் ஜாமீனே அழிந்தது, என்பது எல்லாம் இங்கே மறைக்கப்பட்டு விட்டது ஏன்?
சிதம்பரம் பிள்ளை அவர்கள் நேரடியாக வள்ளல் தேவர் அவர்களைக் கண்டும் இரண்டு இலட்ச வெண்பொற்காசுகள் நன்கொடையாகப் பெற்றுக் கொண்டும், அவர்களே தலைமையாகவும் ஏற்றுக் கொண்டுள்ள ஒரு செய்தியை தோழர் இராமமூர்த்தி மறைப்பதன் நோக்கம் என்ன? ஏன்?
தேசியச் செம்மல்:
1901ம் ஆண்டு மே திங்கள் 21,22,23 ஆகிய நாட்களில் சென்னை மாகாண அரசியல் மாநாடு திரு . அனந்தா சாரலு தலைமையில் மதுரையில் நடைபெற்றது. வள்ளல் தேவர் அவர்கள் வரவேற்ப்புக் குழு தலைவராக இருந்து அரும்பணிகள் ஆற்றினார்கள். அம்மாநாட்டில் தாம், அறிவிக்கப்பட்ட படியே மதுரையில் தமிழ்ச் சங்கம் என்னும் தமிழ்க் கோவில் நிறுவினார்கள்.
இந்தச் தமிழ்ச் சங்கம் தான் வடக்கு வெளிவீதியில் கலையுலகு போற்றும் கன்னித் தமிழ் கோயிலாகக் காட்சி தருகிறது. தமிழ்க் கொண்டல் வள்ளல் தேவர் அவர்களது நூற்றாண்டு விழா நடத்தியும் மலர் ஒன்றும் வெளியிட்டது. (வள்ளல் பாண்டித்துரைத் தேவர் பைந்தமிழ் பேரவை, அதன் பொதுச் செயலாளர் தான், தமிழ்த் தொண்டன் வி.ஆ.ஆண்டியப்பத்தேவர் அவர்கள் இக்கட்டுரையின் ஆசிரியர்).
இதைப் பல அரசியல் கட்சிகளுடனும் தொண்டர்களுடனும் நெருக்கமான தொடர்பு கொண்டிருந்த தோழர் இராமமூர்த்தி அறியாததா?
எந்த அடிப்படையில் எழுதினார்?
இளைய தலைமுறையினருக்கு வரலாறு எடுத்துக்காட்டும் முறையா? அவரது நினைவில் இல்லாமல் போய்விட்ட குறையா?
உண்மை வரலாறுகளை எடுத்க்காட்டத் தவறிவிட்டார் தோழர் இராமமூர்த்தி என்பதை சுட்டிக்காட்ட வேண்டியதிருக்கிறது.
(“செக்கிழுத்த செம்மல்” திரு.வ.உ.சி.அவர்களை குறைத்து மதிப்பிடும் நோக்கம் சிஞ்சிற்றும் இல்லாது இக்கட்டுரை இங்கே பதியப்படுகிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம், உண்மை விளம்ப வேண்டுதாயும், மறைக்கப்பட்ட உண்மை வரலாறு எம் தமிழர் புரியவேண்டுமாயும் இக்கட்டுரை பதியப்படுகிறது)
எனவே, கப்பலோட்டிய தமிழன் யாரென்றால் சேதுநாடு, செந்தமிழ்க் குரிசில், பாலவநத்தம் குறுநிலமன்னர், வள்ளல் பொன். பாண்டித்துரைத் தேவர் அவர்களேயாவர் என்பதை இமயத்தின் உச்சியில் நின்று கூறலாம்.
…நன்றி:தேவர் தளம் .

மருதுபாண்டிய மன்னர்களின் வரலாறு


வாஸ்கோட காமா கடல்வழிப் பயணமாக மேற்குக் கடற்கரையில் உள்ள கள்ளிக்கோட்டைக்கு அருகில் 20-5-1498ல் முதன்முதலில் வந்த பின்னர்தான், 
ஐரோப்பியர்கள் தென் இந்தியாவின் மேற்குக் கடற்கரையிலும், கிழக்குக் கடற்கரையிலும் வணிக நிமித்தமாக வரத் தொடங்கினார்கள்.
வணிக நிமித்தமாக வந்த ஐரோப்பியர்கள் இங்குள்ள அரசியல், சமூக, பொருளாதார நிலைமைகளைக் கணக்கில் எடுத்துக் கொண்டு, கொஞ்சம், கொஞ்சமாக இந்தப் பகுதியின் ஆட்சியையும், அதிகாரத்தையும், கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டார்கள். ஐரோப்பியர்களில் குறிப்பாக ஆங்கிலேயர்கள் பிரெஞ்சு, டச்சு, போர்ச்சுகீஸ் போன்ற  ஐரோப்பிய நாட்டவர்களைக் குறிப்பிட்ட சில எல்லைக்குள் கட்டுப்படுத்தி, பெரும்பாலான பகுதிகளைத் தங்களது ஆளுமைக்குள் கொண்டு வந்தனர்.

தென்னிந்தியப் பகுதிகளில் வலு இழந்திருந்த ஆற்காட்டு நவாப்பையும், சிற்றரசர்களையும், பாளையக்காரர்களையும் வெடிகுண்டு, பீரங்கி, துப்பாக்கி போன்ற நவீன ஆயுத பலத்தால் தங்களுடைய கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தார்கள். சில பகுதிகளில் அவர்களின் வாரிசு உரிமைகளிலும் தலையிட்டு தீராத உட்பகை உருவாவதற்கும் காரணமாக  இருந்தார்கள்.
ஆங்கில ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடுகிற உணர்வும், ஊக்கமும், உத்வேகமும்
பதினெட்டாம் நூற்றாண்டின் மத்தியிலேயே உருவாகிவிட்டது. இதனைத் தொடர்ந்து ஆங்கிலேயருக்கு எதிரான பல்வேறு கிளர்ச்சிகளும் ஆயுதப் போராட்டங்களும் தமிழ்நாட்டிலும், இந்தியாவின் தென்பகுதியிலும், நடைபெற்றதை யாரும் மறுக்க இயலாது. சொல்லப்போனால் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு எதிரான முதல் குரல் தென்னகத்திலிருந்துதான் எழுந்தது என்பது சரித்திரம் மறைத்துவிட்டிருக்கும் மறுக்க முடியாத உண்மை.
ஆனால், இந்தக் கிளர்ச்சிகளும் ஆயுதப் போராட்டங்களும், தங்களின் ஆட்சி, அதிகாரத்துக்கு ஆபத்து வந்தபொழுது ஏற்பட்டவை என்பதால் இவை மக்கள் விடுதலைக்கான போராட்டங்களாகவும், நாடு தழுவிய ஆங்கில ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டங்களாகவும் அமையவில்லையென இந்திய வரலாற்று ஆராய்ச்சிக் குழு (​IC​HR​ –  Indi​an Coun​cil of Histori​c​al Rese​ar​ch) கருத்துத் தெரிவிக்கிறது. இது அறியாமையின்பாற்பட்ட, உண்மை நிலைமை உணராத கூற்று என்பதை நம்மில் யாரும் ஏன் குரலெழுப்பி மறுக்கவில்லை என்பதுதான் வியப்பாக இருக்கிறது.
1800-1801ம் ஆண்டில் மாமன்னர் மருதுபாண்டியர்கள் தலைமையிலும், வழிகாட்டுதலிலும் உருவான புரட்சியும், போராட்டங்களும் தமிழ்நாட்டிலும், மலபார், கர்நாடகப் பகுதி வரையிலும் பரவி, குவாலியர் வரையிலும் எட்டியிருந்தது. இந்த ஆங்கிலேயருக்கு எதிரான ஆயுதம் ஏந்திய மக்கள் புரட்சியை இந்திய வரலாற்று ஆய்வுக்குழு (IC​HR)​ ஏற்றுக்கொள்ள மறுப்பது ஏன் என்பதுதான் புதிராக இருக்கிறது.
அவர்களுக்கு இந்த மாமன்னர்களின் சுதந்திர வேட்கையும், மக்களை ஆங்கிலேய
ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக அணிதிரட்டும் முயற்சியும் தெரியாமல்
போனதா?
இந்திய வரலாற்றில் மாமன்னர் மருதுபாண்டியர்கள் தலைமையில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக அனைத்துத் தரப்பு மக்களும் போர்க்களம் கண்ட அரிய, தீரமிக்க நிகழ்ச்சியை இந்திய மண்ணில் நிகழ்ந்த முதல் சுதந்திரப் போராட்டம் அல்ல என எந்தச் சூழ்நிலையிலும் மறுத்துவிட இயலாது.
பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியிலும், பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் (1800 -1801) நடைபெற்ற இந்த ஆங்கில ஏகாதிபத்திய எதிர்ப்புப் புரட்சி, ஏன் உரிய முறையில், இந்திய வரலாற்றில் பதிவு செய்யப்படவில்லை என்பதுதான் இன்றும் புதிராகவே உள்ளது.
இந்தியாவின் தென்பகுதியில்தான் ஆங்கிலேயர்கள் முதன்முதலில் அடியெடுத்து
வைத்தார்கள். பின்னர்தான் கொல்கத்தா சென்றார்கள்.எனவே, ஆங்கிலேயர்கள் முதன்முதலாக அடியெடுத்து வைத்த இந்தத் தென்பகுதியில் ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நடைபெற்ற ஆயுதம் தாங்கிய மக்கள் புரட்சியை முதல் சுதந்திரப் போராட்டமாகப் பதிவு செய்யாமல், இதற்குப் பின்னர் ஐம்பத்தாறு ஆண்டுகள் கழித்து வடக்கே நடைபெற்ற சிப்பாய்க் கலகத்தை (sepoy mutiny)​ இந்தியாவின் முதல் சுதந்திரப் போராட்டம் எனப் பதிவு செய்வது எந்த வகையில் நியாயம்…?
இத்தகைய சரித்திரப் பதிவு தென்பகுதி மக்களின் உச்சபட்ச தியாகத்தையும், போராட்டத்தையும் சிறுமைப்படுத்திவிட்டதாகவே கருத வேண்டி இருக்கிறது. இந்த உண்மை நிலைமைகளை வெளிப்படுத்துவதால், 1857ம் ஆண்டு நடைபெற்ற
ஆங்கிலேயர் எதிர்ப்புப் போராட்டத்தைச் சிறுமைப்படுத்துவதாகக் கருதக்கூடாது. ஆனால், சரித்திர நிகழ்வுகளை காலத்தவறின்றி (​Chronologi​c​al re​cording)​ வரிசைப்படுத்திப்  பதிவு செய்ய வேண்டும் என்பது சரித்திர ஆசிரியர்கள் பின்பற்ற வேண்டிய அடிப்படைக் கோட்பாடாகும்.
தவறான பதிவை நாம் திருத்தி எழுதியாக வேண்டும். தமிழன் செய்த தியாகம் பதிவு செய்யப்படாமல் மறைக்கப்படுவதை நாம் வாய்மூடி அங்கீகரிப்பது ஏன்? இதில் சில சரித்திர ஆசிரியர்களும், இந்திய சரித்திர ஆராய்ச்சிக் குழுவும் (IC​HR)​ தவறிழைத்துவிட்டதாகவே கருத வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டைச் சார்ந்த புகழ்பெற்ற வரலாற்றுப் பேராசிரியர் இராஜய்யன்தான் தன்னுடைய வரலாற்று நூலான “தென்னாட்டுக் கிளர்ச்சிகள்” (South Indian Rebellion:- The first war of Independence, 1800 – 1801) என்கிற ஆங்கில வரலாற்று நூலில் இதுபற்றி சரியாகப் பதிவு செய்துள்ளார்.
அதுமட்டுமல்ல, இந்தக் கிளர்ச்சியும், புரட்சியும்தான் இந்தியாவின் முதல் சுதந்திரப்  போராட்டமாக அறிவிக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கும்  தொடர்ந்தார். (ர.ட.சர். 36714/2006) பின்னர் தீர்ப்பின் அடிப்படையில் இந்திய வரலாற்று ஆய்வுக் குழுவினரிடம் (ICHR)​ தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார்.
அந்த ஓய்வறியாத வரலாற்றுப் பேராசிரியர் இராஜய்யனை, மாமன்னர் 
மருதுபாண்டியர்கள் நினைவு நாளில், வாழ்த்துவதும், வணங்குவதும் தமிழ்
மக்களின் கடமையாகும்.

இந்திய சரித்திர ஆராய்ச்சிக் குழு (IC​HR)​1800 – 1801ம் ஆண்டில் நடைபெற்ற ஆங்கில ஏகாதிபத்திய எதிர்ப்புப் புரட்சி பற்றியும், ஆயுதப் போராட்டங்கள் பற்றியும், போராடியவர்களின் நோக்கங்கள், சிந்தனைகள், தேசியப்பற்று, இந்திய ஒற்றுமை, மதச்சார்பற்ற தன்மை ஆகியவற்றை ஆழ்ந்து பரிசீலிக்கவில்லை என்றே அறிய முடிகிறது.
1800 – 1801ம் ஆண்டில் ஆங்கிலேய எதிர்ப்புப் போராட்டத்தின் உச்சகட்டமாக,
ஆங்கில ஏகாதிபத்தியத்துக்கு எதிராக மாமன்னர் மருதுபாண்டியர்கள், திருச்சி
மலைக்கோட்டை ஆற்காடு நவாப்பு அரண்மனை வாயிலிலும், திருவரங்கம் கோயில்
வாசலிலும் 1801ம் ஆண்டு ஜூன் 16ம் நாள் ஒட்டிய போர் பிரகடனம் (War De​cl​
ar​ation) வரலாற்றில் பிரசித்தி பெற்றதாகும்.
ஆங்கிலேயருக்கு எதிரான இந்த யுத்தப் பிரகடனத்தில் மருதுபாண்டியர்கள், ஜாதி, மதம், பிராந்தியம் ஆகிய வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு, அனைத்து மக்களும் ஆயுதமேந்தவும் வெள்ளையர்களுக்கு எதிராகப் போராடவும் தயாராக வேண்டுமென அழைப்பு விடுக்கிறார்கள்.
தன்னுடைய ஆளுகைப் பகுதிக்காகவோ அல்லது தன்னிடம் நட்புக் கொண்டவர்களுக்காகவோ மட்டும் அவர்கள் போராடவில்லை. மாறாக, இந்த மண்ணுக்கும், தங்கள் தங்கள் பகுதிக்கும் உரிமை பெற்றவர்களுக்கும் சேர்த்தே போராடத் தயாரானார்கள் என்பதுதான் சரித்திர உண்மை. அவர்களது உரிமைகளை மீட்டுக் கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டார்கள்.
தங்களது போராட்டங்களுக்கு ஆதரவளிக்காதவர்களைக்கூட, அவர்கள் கலந்துகொள்ள
வேண்டும் என மருதுபாண்டிய மன்னர்கள் வற்புறுத்தவில்லை. மாறாக, அவர்கள்
யுத்த களத்துக்குச் செல்லும் தங்களை வாழ்த்தினால் மட்டும் போதும் எனத்
தெரிவிக்கிறார்கள்.
ஆங்கிலேயர்களின் அத்துமீறிய நடவடிக்கைகளால் நாட்டு மக்கள் பசி, பட்டினியால் வாடுகிறார்கள், பசிக்குச் சோறு இல்லாமல் சோற்றுக் கஞ்சியே சாப்பிடுகிறார்கள், நம்முடைய கலாசாரமும், பண்பாடும் சீரழிந்து கொண்டிருக்கிறது என நாட்டு மக்களுக்குப்  பிரகடனப்படுத்தினார்கள் சிவகங்கைச் சீமையை ஆண்ட அந்தக் குறுநில மன்னர்கள்.
இந்தியாவின் தென்கோடி முனையிலிருந்து குவாலியர் வரையிலும், தூதுவர்களை
அனுப்பி ஆங்கில எதிர்ப்புப் போராட்டத்துக்கு ஆதரவு திரட்டினார்கள். போர்ப் பிரகடனத்தின் இறுதியில் ஆங்கிலேயர்களின் “அசைக்க முடியாத எதிரி” என்றுதான் கையொப்பமிடுகிறார்  மன்னர் மருது.
இத்தகைய அம்சங்களைக் கொண்ட ஆங்கிலேயருக்கு எதிரான ஒரு போர்ப்பிரகடனம்
பதினெட்டாம் நூற்றாண்டிலோ அல்லது பத்தொன்பதாம் நூற்றாண்டிலோ ஆங்கில
ஏகாதிபத்தியத்துக்கு எதிராகப் பதிவு செய்யப்படவில்லை என்பதே உண்மையாகும்.
மாமன்னர் மருதுபாண்டியர்களால் அறிவிக்கப்பட்ட இந்தப் போர்ப் பிரகடனம்
பற்றிய செய்தியையும், ஆங்கிலேயர்கள் மருதுபாண்டியர்களையும் அவர்களது
வாரிசுகளையும், சிறுவர்கள் என்றுகூடப் பார்க்காமல் போராளிகள் 500 பேருடன்
திருப்பத்தூர் கோட்டையில் கொடூரமாகத் தூக்கிலிட்ட துயரமான செய்திகளையும்,
அப்பொழுது இங்கு பணியாற்றிய இராணுவ அதிகாரி ஒருவர் மூலம் அறிந்து, அவரது
வேண்டுகோளின்படி 1813ம் ஆண்டு இங்கிலாந்தில், ஜே.கோர்லே என்பவர்
புத்தகமாக வெளியிட்டுள்ளார். (M​A​H​R​A​DU AN IN​D​IAN ST​O​RY OF THE
BE​G​I​N​N​I​NG OF THE NI​N​E​T​E​E​N​TH CE​N​T​​URY By J.GO​U​R​L​AY )
இந்தப் புத்தகத்தில், மருதுபாண்டியர்களின் குடும்பத்தாரையும், சிறுவர்களையும் போராளிகள் 500 பேரையும் ஆங்கில இராணுவத்தினர், எந்தவிதமான அடிப்படை வழிமுறைகளையும் பின்பற்றாமல் கொடூரமாகத்  தூக்கிலிட்டுக் கொன்றார்கள் என்கிற கொடுமையான செய்தியை இராணுவ அதிகாரி என்பதால் என்னால் வெளி உலகத்துக்குத் தெரிவிக்க முடியாது.
எனவே, தாங்களாவது  உலகத்துக்குத் தெரிவியுங்கள் என்று கேட்டுக் கொண்டதற்கு ஏற்பத்தான், இந்த நூலை வெளியிடுகிறேன் என்று நூலாசிரியர் ஜே.கோர்லே முன்னுரையில் தெரிவிக்கிறார்.
மேலும் மாமன்னர் மருதுபாண்டியர்களின் போர்ப் பிரகடனத்தைக் குறிப்பிடுகிறபொழுது,  கி.பி.85ல் ரோமானியத் தளபதி அக்கிரிகோலா இங்கிலாந்து நாட்டை முற்றுகையிட்டிருந்த நிலையில் பிரிட்டானியப் படைகளை ஒருங்கிணைத்து, ரோமானிய ஆக்கிரமிப்புப் படையை எதிர்த்துப் போர்க்களத்தில் அணிவகுத்து நின்ற பிரிட்டானியப் படையிடம், ஆற்றல்மிக்க தளபதிகளில் ஒருவரான கால்காகஸ் (A.D.85 Calg​a​cus’ spe​ech to his troops)​ தன்னுடைய படை வீரர்களைப் பார்த்து வீரம் செறிந்த உரை நிகழ்த்துகிறான்.
உணர்ச்சிப் பிரவாகமாக மாறுகிறது பிரிட்டானியப் படை. அந்த வீரம் செறிந்த உரைக்கு மருதுபாண்டியர்களின் போர்ப் பிரகடனத்தை நூலாசிரியர் ஒப்பிடுகிறார். அதுமட்டுமல்ல, உலகம் முழுவதும் நேர்மையும், நெஞ்சுரமும், விடுதலை வேட்கையும், நாட்டுப்பற்றும் கொண்ட மாவீரர்கள் ஒரே மாதிரியாகத்தான் சிந்திக்கிறார்கள் என்பதற்கு மருதுபாண்டியர்களின் போர்ப் பிரகடனத்தையும், பிரிட்டானியத் தளபதி கால்காகஸ் இராணுவ வீரர்களிடம் ஆற்றிய உரையையும் அவர் ஒப்பிடுகிறார்.
1813ல் ஆங்கில நாட்டைச் சேர்ந்த ஜே. கோர்லே மருதுபாண்டியர்களின் போர்ப்
பிரகடனத்தை கி.பி. 85ம் ஆண்டில் பிரிட்டானியத் தளபதியின் உரைக்கு ஒப்பிட்டு இருவரின் சுதந்திர வேட்கையையும், நாட்டுப் பற்றையும், நெஞ்சுரத்தையும் பாராட்டி அந்தச் செய்தியை உலகம் அறிய வேண்டும் என்பதற்காகப் பதிவு செய்கிறார்.
ஆனால், இந்தியாவில் உள்ள இந்திய வரலாற்று ஆய்வுக் குழு (IC​HR)​ 1800 – 1801ல் நடைபெற்ற ஆங்கில எதிர்ப்புப் போராட்டத்தை முறைப்படி அங்கீகரித்துப் பதிவு செய்ய மறுக்கிறது.
வேதனையானது, வினோதமானது, வேடிக்கையானது என்றெல்லாம் கூறுவதைவிட மாமன்னர் மருதுபாண்டியர்கள் தமிழர்களாகப் பிறந்ததுதான் இதற்குக் காரணமானது
என்றுதான் நம்மால் கூறமுடிகிறது. எந்தநாடு இந்தச் செய்தியை இருட்டடிப்புச் செய்யும் என்று எதிர்பார்த்தோமோ அந்த நாட்டில் இந்தச் செய்தி உரிய முறையில் வெளியாகி உள்ளது.
ஆனால், எந்த நாட்டில் இந்தச் செய்தி அங்கீகரிக்கப்பட்டு ஆவணப்படுத்தப்பட
வேண்டுமோ அந்த நாட்டில், இந்தியத் திருநாட்டில், இந்தச் செய்தி இருட்டடிப்புச் செய்யப்படுகிறது. தென்னகத்துத்  தியாக வேள்வியை இரும்புத்திரை போட்டு மறைக்கும் இந்த முயற்சியை நாமும் முறியடிக்க மனமில்லாமல் மௌனம் சாதிக்கிறோம்.
இன்று மாமன்னர் மருதுபாண்டியர்களின் நினைவு நாள் (October 24 (அ) 27,1801).
இந்த மண்ணை நேசிக்கும்,ஏன், இந்த மண்ணின் சுதந்திரம் பறிக்கப்பட்டால், உயிரைத் துச்சமென மதித்துப் போராடும் மருதுபாண்டியர்களின் வழிவந்தவர்களின் உணர்வுகள் முற்றிலும் மறைந்து போய்விடவில்லை. அவர்கள் சார்பாக தெரிவிப்பதெல்லாம், மாமன்னர் மருதுபாண்டியர்களின் நிகரற்ற, உலகம் போற்றும் வீரத்தை போர்க்களத்தில் எதிர்கொண்ட ஆங்கில இராணுவத்தின் தளபதி ஜெனரல் வெல்ஸ் மனம் திறந்து பல படப் பாராட்டினார் – பதிவும் செய்து வைத்திருக்கிறார். (Milit​ary Reminis​cen​ces of Gen.​ Welsh)
அவர்களின் உயர்ந்த நாட்டுப்பற்றையும், வீரத்தையும், விவேகத்தையும் சுயமரியாதையையும் கி.பி. 85ம் ஆண்டில் வாழ்ந்த பிரிட்டானியத் தளபதியின்
உரையோடு ஒப்பிட்டுப் பாராட்டுகிறார் ஆங்கில நாட்டைச் சார்ந்த நூலாசிரியர்
கோர்லே.
எப்படி உதயசூரியனைத் திரையிட்டு மூடமுடியாதோ, அதேபோல, மருதுபாண்டிய
மன்னர்களின் வீரத்தையும், விடுதலை உணர்வையும், நாட்டுப்பற்றையும்,சுயமரியாதை உணர்வையும் இந்திய வரலாற்று ஆய்வுக் குழுவல்ல, எந்த ஆய்வுக் குழுவாலும் மறக்கடிக்க முடியாது.
மக்களின் சுவாசத்துடனும், மண்ணின் மணத்துடனும் கலந்துவிட்ட வீர வரலாறு,
இந்திய சுதந்திரத்துக்கு முதல் குரல் எழுப்பிய மருதுபாண்டிய மன்னர்களின்
வரலாறு!
நன்றி: தேவர் தளம் 

மற(றை)க்கப் பட்ட சுதந்திரப் போராட்ட வீரர்கள்

இந்திய சுதந்திர விடுதலைப் போர்களில் பங்கு பெற்ற தென்னாட்டு மன்னர்களில்பலரும் பிரபலம் அடைந்தாலும், முதல் முதல் சுதந்திரப் போருக்கு வித்திட்டவன் ஆன”மாவீரன் பூலித் தேவன்” பற்றி இன்றைய தலைமுறையினருக்கு அதிகம் அறிந்திருக்கவாய்ப்பில்லை.
இனி இந்தத் தலைப்பில் சுதந்திரப்போராட்டத்தில் ஈடுபட்ட சிலமுக்கியமான ஆனால் மறக்கடிக்கப் பட்ட/ மறந்து போன தலைவர்கள் பற்றி நேரம்இருக்கும்போது எழுதலாம் என்ற எண்ணம்.
பொதுவாக 1857-ல் தான் இந்திய விடுதலைப்போர் ஆரம்பித்ததாய்ச் சொன்னாலும் நூறாண்டுகளுக்கு முன்பே தென்னாட்டில்புரட்சிக்கான வித்து இடப்பட்டது. அதை முதன் முதலில் செய்தவர். 1750- ம் ஆண்டில்பூலித்தேவன் என்ற பாளையக் காரர் ஆவார்.
முதல் ஆங்கிலத் தளபதி ஆன “இன்னிஸ்”என்பவரை எதிர்த்துக் குரல் கொடுத்துப்போர்க்களமும் சென்றார்.”திருநெல்வேலிச் சீமையிலேயே அதிக சுதந்திரப் போராளிகள் இருந்திருக்கின்றனர்என்பதும் ஒரு முக்கியமான உண்மை ஆகும்.
இந்தத் திருநெல்வேலிச் சீமையிலே, சங்கரன்கோவில்லுக்குத் தென்மேற்கே, “நெற்கட்டான் சேவல்” என்னும் ஊரின் பாளையக் காரர்ஆன பூலித் தேவனின் தந்தை பெயர் சித்திரபுத்திரத் தேவன், தாயார் சிவஞானம்நாச்சியார். 1715-ல் பிறந்த இவர், மனைவி பெயர் கயல்கன்னி நாச்சியார். மூன்றுமக்கட்செல்வங்கள். கோமதி முத்து தலவச்சி, என்ற பெண்ணும், சித்திரபுத்திரத்தேவன், சிவஞான பாண்டியன் என்ற இரு ஆண் மகவுகளும் உண்டு. அப்போதுபாஞ்சாலங்குறிச்சியை ஆண்டு வந்தது கட்டபொம்மனின் தாத்தா, பின்னர் கட்டபொம்மனின்தந்தை ஜெகவீர பாண்டியன் ஆகியோர்.
கட்டபொம்மன் பிறக்கும் முன்னாலேயே ஆற்காடுநவாபுக்கும், ஆங்கிலக் கம்பெனியாருக்கும் கப்பம் கட்ட மறுத்துக் குரல் கொடுத்தமுதல் பாளையக் காரர் பூலித் தேவன்.
உண்மையில் இவர்தான், என் அப்பன், பாட்டன், பூட்டன் வாழ்ந்த இந்தப் பூமியில்வாழ்ந்து வரும் நான் எங்கிருந்தோ வந்த வெள்ளையர்களுக்கு ஏன் கப்பம்கட்டவேண்டும் என்று உரத்துக் குரல் கொடுத்தார்.
1755-ம் ஆண்டு, கப்பம் வசூல்செய்ய வந்த ஆங்கிலத் தளபதி அலெக்சாண்டர் ஹெரானோடு யுத்தத்தில் வெற்றி பெற்றார்.இந்திய விடுதலைப் போரின் முதல் வெற்றியும் இதுவே. ஆனால் இந்தப் போர் இத்துடன்முடியாமல் தொடர்ந்து 15 ஆண்டுகள் நடந்தது. விடுதலைப் போராட்ட வரலாற்றிலேயேஇத்தனை நீண்ட போரோ, அல்லது முதல் கூட்டணியை அமைத்தோ யாரும் போர் தொடுத்ததாய்இல்லை. இவரே முதலில் அத்தகைய சாதனை புரிந்தார். போரில் பூலித் தேவனை வெற்றிகொள்ள முடியாத கும்பினியார், தங்கள் சார்பாகப் பூலித் தேவனுடன் சண்டை போடகான்சாகிபு (மருத நாயகம்) என்னும் தமிழனை அனுப்பி வைத்தனர்.
மூன்று ஆண்டுகள்கான்சாகிபு, பூலித் தேவனுடன் சண்டை போட்டார். தொடர்ந்து வெற்றி பெற்ற பூலித்தேவன் இறுதியில் 1761-ல் கான் சாகிபிடம் தோல்வி அடைந்தார். எனினும்கடலாடிக்குத் தப்பிய பூலித் தேவனைப் பிடிக்க முடியாமல் கோபம் கொண்ட கான்சாகிபு,பாளையூர், நெற்கட்டான் சேவல், வாசுதேவ நல்லூர், ஆகிய ஊர்களில் இருந்த பூலித்தேவனின் கோட்டைகளை இடித்துத் தரை மட்டமாக்கினார்.
ஆனால் காரணம் சரிவரத்தெரியாமலேயே கான்சாகிபு வெள்ளையர்களால் 1764-ல் தூக்கிலிடப் பட்டான்.
ஆகவே அவன் இறந்ததும் திரும்பி வந்த பூலித் தேவன், ஆட்சியைக் கைப்பற்ற, கோபம்கொண்ட கும்பினியார், 1767-ல் டொனால்டு காம்பெல் என்பவரை அனுப்பி பூலித் தேவனின் வாசுதேவ நல்லூர்க் கோட்டையைக் கைப்பற்றித் தாக்க முற்பட்டனர்.
தொடர்ந்து பெய்த பெருமழையாலும், ஏராளமான வீரர்கள் இறந்ததாலும், எஞ்சிய படையுடன் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் சென்று மறைந்து கொண்டார் பூலித் தேவன். மனைவ, மக்கள் உயிருடன் கொளுத்தப் பட்டனர் கும்பினியாரால்.
மனைவி மரணம் அடைய, தீக்காயங்களுடன், மக்கள் காப்பாற்றப் பட்டு கும்பினியாருக்குத் தெரியாமல் வளர்க்கப் பட்டனர். பின்னரும் மனம் கலங்காமல் கும்பினியாரை எதிர்த்துக் கொண்டே வந்தார் பூலித் தேவன். மக்கள் சக்தி அவர் பக்கமே இருந்தது.
நுண்ணறிவுடனும், நிதானத்துடனும், படைகளை நடத்திச் செல்லும் அறிவு கொண்ட பூலித் தேவன் ஆற்காடு நவாபின் சகோதரன் மாபூஸ்கான் தன்னிடம் சரண் அடைந்தபோது அவனை இரு கரம் நீட்டி வரவேற்று அவனுக்காகப் பள்ளி வாசல் கட்டிக் கொடுத்தார்.
எனினும் தலைமறைவாக இருந்த பூலித் தேவனைக் கைப்பற்றிச் சிறை எடுத்துப் பாளையங்கோட்டைக்குக் கொண்டு சென்ற போது, இறை வழிபாடு செய்யவேண்டி சங்கரன் கோவிலுக்குள் நுழைந்த பூலித் தேவன் பின்னர் திரும்பவில்லை என்று உறுதியாய்த் தெரியாத தகவல்கள் சொல்லுகின்றன.
இதற்கு ஒரே அத்தாட்சி சங்கரன் கோயிலில் அம்மன் சன்னதிக்கு அருகே உள்ள “பூலித்தேவன் அறை” ஒன்றே ஆகும். ஒருவேளை 1767-ல் நடைபெற்ற கடைசி யுத்தத்தில் பூலித் தேவன் கொல்லப் பட்டிருக்கலாம் என்பவர்களும் உண்டு. இந்த விடுதலைப் போரைப் பற்றிய ஆவணங்கள், சென்னை, எழும்பூர், ஆவணக் காப்பகத்தில் உள்ளன.
பெருமளவு குறிப்புகள் ஸ்டாலின் குணசேகரனின் புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டது. மேலும் ஆதாரங்கள் தேடப் படுகின்றன,.
“வரிக்குப் பதிலாக நெல்லாவது கொடு” என்று கேட்ட போது, “வரி என்று நீ கேட்டால், ஒரு மணி நெல்லைக் கூட நான் உனக்குத் தர முடியாது” என்று பூலித்தேவர் மறுத்துக் கூறினார். ஒரு மணி நெல் கூட தரமுடியாது-கட்ட முடியாது என்று சொன்ன காரணத்தால்தான் “நெல் கட்டான் செவல்” என்று இந்த ஊருக்கே பெயர் வந்தது. நெல் கட்டான் செவல் என்பதுதான் திரிந்து நெல் கட்டும் செவல் என்று ஆகிவிட்டது என்பார்கள்.
1750 முதல் 1767 வரை ஏறத்தாழ 17 ஆண்டுகளில் பலமுறை வெள்ளைக்காரர்களோடு பூலித்தேவன் யுத்தம் செய்திருக்கிறார்.
*திருச்சியில் ராபர்ட் கிளைவ் உடன் போர் புரிந்ததாகப் “பூலித்தேவன் சிந்து”கூறுகிறது.
*அலெக்சாண்டர் கெரானுடன் 1755இல் போர் நடத்தியிருக்கிறார்.
*களக்காட்டில் மாபுஸ்கானுடன் 1755இல் போர் நடத்தியிருக்கிறார். அந்தப் போரில் மாபுஸ்கான் தோல்வியுற்றார். மாபுஸ்கானை அழைத்துவந்து தன்னுடைய மாளிகையிலேயே விருந்தாளியாக வைத்து மரியாதையோடு நடத்தினார் என்று வரலாறு கூறுகின்றது
*திருவில்லிப்புத்தூரில் ரகீமுடன் 1755இல்போர் நடத்தினார்.
*திருநெல்வேலியில் 1756இல் போர் நடத்தினார்.
*நெல்கட்டும் செவலில் 1759இல் யூசுப்கான் என்று சொல்லப்படுகின்ற கான்சாகிப்போடு போர் நடத்தியிருக்கிறார்.
*வாசுதேவநல்லூரில் 1759 மற்றும் 1760 ஆகிய ஆண்டுகளில் யூசுப்கானுடன் மீண்டும் போர் நடத்தியிருக்கிறார்.
*1761இல் நெல்கட்டும் செவல், வாசுதேவநல்லூர் கோட்டைகளில் அதே யூசுப்கானுடன் மறுபடியும் போர் நடத்தினார்.
*1767இல் வாசுதேவநல்லூரில் ஆங்கிலத்தளபதி டோ னால்டு காம்பெல் உடன் நடத்திய போர்தான் இறுதிப் போராகும்.இவற்றைத் தவிர கங்கை கொண்டான், ஆழ்வார் குறிச்சி, சேத்தூர், கொல்லங்கொண்டான், ஊத்து மலை, சொக்கம்பட்டி, தலைவர் கோட்டை ஆகிய கோட்டைகளில் நடைபெற்ற போர்களிலும் பூலித் தேவன் பங்கு பெற்றார்.
மாவீரன் மருதநாயகம் என்ற கான்சாகிப்பின் வரலாற்றை அறிந்து கொள்ள ‘கான்சாகிப் சண்டை’ என்ற கதைப்பாடல் பேராசிரியர் நத்தர் ஷா அவர்களுக்கு மிகவும் உதவி புரிந்துள்ளது.
அதே போல் முனைவர் ந. இராசையா அவர்கள் பூலித்தேவனின் வரலாற்றை எழுத பூலித்தேவன் ஓயில் கும்மிப் பாடல், பூலித்தேவன் சிந்து, பூலித்தேவன் கதைப் பாடல் முதலியன மிகவும் உதவிகரமாக இருந்திருக்கின்றன.வட்டாரம் வாரியாக வாழ்ந்த குறுநில மன்னர்களின் வரலாறுகளைத் தொகுக்கவும்.
இன்றைக்கு நாட்டார் பாடல்களும், நாட்டார் சொல் கதைகளும்; கதைப் பாடல்களும் மிகவும் உதவுகின்றன.நெல்கட்டும் செவலைச் சுற்றி உள்ள குகைகளின் பெயர்களும், ஊர்களின் பெயர்களும், பாதைகளின் பெயர்களும், குளங்களின் பெயர்களும், ஊர்களின் பெயர்களும் கூட மாவீரன் பூலித் தேவனின் வரலாற்றைச் சொல்லாமல் சொல்லும் சான்றாதாரங்களாகத் திகழ்கின்றன. அத்தகைய சில சொற்றொடர்களையும், அத்தொடர்களோடு தொடர்புடைய வரலாற்றுச் செய்திகளையும் இனிப் பார்ப்போம்.
வாசு தேவ நல்லூருக்கு மேற்கே, மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள ஒரு குகையின் பெயர். பூலித்தேவர் குகை என்பதாகும். ஆங்கிலேயருடன் பூலித்தேவன் யுத்தம் செய்த காலத்தில் ஆங்கிலேயரின் படைகளை மறைந்திருந்து தாக்க, பூலித்தேவர், தன் படைகளுடன், இந்த இடத்தில் தங்கி இருந்தார். எனவேதான் இக்குகைக்கு பூலித்தேவர் குகை என்று பெயர் வந்தது என்று இப்பகுதி மக்கள் கூறுகின்றார்கள்.
இவ்வாறு ஊரை விட்டு வெகு தூரம் விலகி உள்ள இக்குகைக்கு அருகில் உள்ளபாறை ஒன்றின் பெயர், ‘சோறூட்டும் பாறை’ என்பதாகும். “பாறை எப்படிச் சோறூட்டும்?” என்று இப்பகுதி மக்களிடம் விசாரித்த போது பூலித்தேவனோடு தொடர்புடைய , ஒரு செய்தியை இப்பகுதியில் வாழும் மக்கள் சொன்னார்கள்.
பூலித்தேவரும், அவரது படையைச் சேர்ந்த போர் வீரர்களும், இக்குகையில் வாழ்ந்தபோது பகலெல்லாம் ஆயுதப் பயிற்சியில் ஈடுபட்டார்கள். இரவில் அடுப்பு அமைத்துத் தீமூட்டிச் சமையல் செய்தால் அத்தீயின் வெளிச்சம் எதிரிகளுக்கு, படைவீரர்கள் மறைமுகமாகத் தங்கி இருக்கும் இடத்தைக்காட்டிக் கொடுத்து விடும் என நினைத்து பாறையின் கிழக்குப் பகுதியில் உள்ள ஊர்களில் வாழ்கின்ற மக்களிடம், இன்ன இன்ன கிழமையில், இன்ன இன்ன ஊரில் வாழ்கின்ற மக்கள், சோறு சமைத்தும் குழம்பு வைத்தும், கரு, கரு என்று பொழுது மயங்கிய கருக்கல் நேரத்தில், சோற்றை, பெரிய, பெரிய நார்ப்பெட்டிகளில் தட்டியும், குழம்பை அந்த நார்ப்பெட்டியின் மேல் மண் சட்டிகளில் வைத்தும், குறிப்பிட்ட ஒரு பாறையின் மேல் வைத்துவிட வேண்டும் என்று மன்னர் பூலித்தேவர் உத்தரவிட்டிருந்தார்.
மன்னரின் உத்தரவுப்படியே, அப்பகுதி மக்களும், பகலெல்லாம் சமையல் செய்து, அந்திக் கருக்கல் நேரத்தில், சோற்றைப் பெரிய, பெரிய நார்ப்பெட்டிகளில் போட்டும், அதற்கு ஏற்ப குழம்பு கூட்டு முதலியவற்றை, பெரிய பெரிய மண்சட்டிகளில் ஊற்றியும் சுமந்து கொண்டு போய், குறிப்பிட்ட அப்பாறையின் மேல் வைத்துவிடுவார்கள்.
பொழுது இருட்டும் வரை, ஊர்க்காரர்களில் ஒன்றிரண்டு பேர், அச்சோற்றுக்குக் காவலும் இருப்பார்கள், காட்டில் வாழும் நரி, கரடி முதலிய மிருகங்கள் அச்சோற்றையோ, குழம்பையோ, கொட்டிவிடாமல் இருப்பதற்காக. பொழுது இருட்டிய பிறகு குகையில் தலைமறைவாகத் தங்கி இருக்கும். படை வீரர்களில் சிலர் வந்து பாறையின் மேல் ஊர் மக்களால் சமையல் செய்து வைக்கப்பட்டிருக்கும் சோற்றையும் குழம்பையும் தூக்கிக் கொண்டு செல்வார்களாம்.சோற்றுக்குக் காவலிருக்கும் ஆட்கள் தான் கொண்டு வந்திருந்த வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு, புகையிலை முதலியவைகளையும் படைவீரர்களிடம் கொடுத்து அனுப்புவார்களாம்.
இப்படியாக தலைமறைவாக வாழ்ந்து ஆயுதப்பயிற்சி பெற்ற பூலித்தேவருக்கும், அவரின் படை வீரர்களுக்கும், தேவையான, சாப்பாடும், தாம்பூலமும் வெற்றிலை, பாக்கு முதலியவை இப்பாறையின் வாயிலாக ஊர் மக்களிடம் இருந்து சென்றது. எனவே இப்பாறையை இன்றும் இப்பகுதி மக்கள் “சோறு ஊட்டும் பாறை” என்ற பொருத்தமான பெயரால் அழைக்கின்றார்கள்
நெற்கட்டான் செவ்வலுக்குத் தென்புறமும் பெரிய ‘மேடு’ போன்ற ஒரு பகுதி உள்ளது. அந்த இடத்தை, மக்கள் ‘கான்சா மேடு’ என்று அழைக்கின்றார்கள். ஏன் அப்பகுதிக்கு அப்பெயர் வந்தது என்று விசாரித்த போது; இந்த இடத்தில்தான் கான்சாகிப் சுமார் பதினெட்டு பவுண்டு எடையுள்ள பீரங்கிகளை அமைத்து, நெற்கட்டுஞ் செவல் கோட்டை மீது தாக்குதல் நடத்தினார். எனவே தான் இப்பகுதிக்கு, ‘கான்சா மேடு’ என்ற பெயர் வந்தது என்றார்கள்.
ஆங்கிலேயர்களை எதிர்த்து பூலித்தேவர் போரிட்ட காலத்தில், நெல்கட்டுஞ் செவலுக்கு அருகில் உள்ள பாளையக்காரரான கொல்லங் கொண்டான் ஜமீனைச் சேர்ந்த வாண்டாயத் தேவன், பூலித் தேவருக்கு மிகவும் உதவியாக இருந்தார். இதனால் ஆங்கிலேயர்கள் கொல்லங்கொண்டான் மீதும் படையெடுத்துச் சென்றார்கள்.
ஆங்கிலேயப் படைகளால் வாண்டாயத் தேவனின் கொல்லங்கொண்டான் கோட்டை முற்றுகை இடப்பட்டது. அப்போது வாண்டாயத் தேவனின் மனைவி கர்ப்பிணியாக இருந்தாள் தேவைப்பிள்ளையைக் கருவில் சுமந்திருந்தாள்.போர் நடைபெறும் போது ஒருவேளை தோல்வியைத் தழுவ நேரலாம், அல்லது வீர மரணத்தைத் தழுவ வேண்டிய நிலை வரலாம். எனவே, தன் குல வாரிசைக் கருவில் தாங்கி நிற்கும். தன் மனைவியை, அரண்மனையில் இருந்து வெளியேற்றி விட வேண்டும் என்று வாண்டாயத் தேவன் நினைத்தார்.
எனவே, தனக்கு மிகவும் நம்பிக்கைக்கு உரிய ஒருவரின் துணையுடன் தன்மனைவியை, ரகசிய வழி ஒன்றின் மூலம் அரண்மனையை விட்டு வெளியேறச் செய்தார்.இரவோடு, இரவாக, அரண்மனையை விட்டு வெளியேறிய வாண்டாயத் தேவனின் மனைவி, தன் நாட்டின் எல்லையில் உள்ள ஒரு ஊரில் போய் மக்களோடு மக்களாகக் குடியேறினார்.
எதிர்பார்த்தது போலவே, ஆங்கிலேயருடன் நடந்த யுத்தத்தில் வாண்டாயத் தேவன் கொல்லப்பட்டார். என்றாலும், அவரின் மனைவியான நாச்சியார், மனத்திடத்துடன் மக்களோடு மக்களாக எளிய வாழ்க்கை வாழ்ந்து, குறிப்பிட்ட காலத்தில் அழகான ஒரு ஆண் மகவைப் பெற்றெடுத்தாள்.
தாயையும் சேயையும், அவ்வூர் மக்கள் உதவிகள் புரிந்து பாதுகாத்து வந்தார்கள்.அரண்மனையில் பிறந்து வளர்ந்து ஒரு பாளையக்காரருக்கு மனைவியாக வாழ்க்கைப் பட்ட நாச்சியார், காலம் செய்த கோலத்தால் வெள்ளையரின் படை எடுப்பில் பஞ்சைப் பதாரி போல், ஏழைய, எளிய மக்களுடன் வாழ நேர்ந்த காரணத்தால், பிற்காலத்தில் அவ்வூரையே மக்கள் ‘பஞ்சம் பட்டி’ என்று அழைத்தார்கள் என்று அவ்வூரைச் சேர்ந்த தகவலாளர் ஒருவர் கூறினார்.கொல்லங்கொண்டான் பாளையக்காரரான வாண்டாயத் தேவனின் கோட்டைக்கு அருகில் இடர் தீர்த்த பெருமாள் கோயில் உள்ளது.
இக்கோயிலில் நாட்டியமாட மயிலாள், குயிலாள் என்ற இரண்டு தேவதாசிப் பெண்களை நியமித்திருந்தார் வாண்டாயத் தேவன்.ஆங்கிலேயர்களுடன் போர் தொடங்கிய காலத்தில், வெள்ளையர்களின் படை பலத்தை அறிந்து கொள்வதற்காகவும், உளவுபார்த்து வரவும் இவ்விரு நடன மங்கையர்களை வாண்டாயத் தேவன்.
அக்கம்பக்கத்துப் பாளையங்களுக்கும் அனுப்பி வைத்தார். இப்படி, கலைப்பணியையும், அரசியல் பணியையும் ஒருசேரச் செய்த சகோதரிகளுக்கு, இருகுளத்துப்பரவுகளை (குளத்துநீர் பாயும் வயல்களை) தானமாகக் கொடுத்துள்ளார்.
வாண்டாயத் தேவர் அக்குளங்கள் இன்றும் குயிலாள் குளம்; மயிலாள் குளம் என்று அவ்வூர் மக்களால் அழைக்கப்படுகின்றன.பூலித்தேவர் காலத்தில் இருந்து சிவகிரி உள்ளிட்ட தென்பகுதி பாளையக்காரர்கள் மேல் படை எடுத்து வர மருதநாயகம் என்ற கொமந்தான் கான்சாகிப், ஆற்காட்டு நவாப் மற்றும் ஆங்கிலேயர்கள், திருவில்லிபுத்தூர் கோட்டையைத்தான் ஒரு நுழைவு வாயிலாகப் பயன்படுத்தினார்கள். எனவே இன்றும் திருவில்லிபுத்தூரில் உள்ள அக்கோட்டை ‘தலைவாசல்’ என்று அப்பகுதி மக்களால் அழைக்கப்படுகிறது.
இக்கோட்டையைச் சுற்றிலும் உள்ள, கொம்மந்தான்புரம், மம்சாபுரம், கான்சா புரம் என்ற ஊரின் பெயர்கள், கொமந்தான்புரம் என்ற கான்சாகிப் என்ற முகம்மது யூசுப் கான் என்ற மருத நாயகம் இப்பகுதியில் படை எடுத்து வந்தபோது முகாமிட்டுத் தங்கி இருந்த காரணத்தால் சூட்டப் பட்டது என்று இப்பகுதியில் வாழும் தகவலாளர்கள் கூறுகின்றார்கள்.
பூலித்தேவர் படையின் தளபதியாக இருந்தார் ‘பெரிய காலாடி’ என்பவர். இவர் தேவந்திரகுல வேளாளர் குலத்தைச் சேர்ந்தவர். கான்சாகிப்பின் படைகள், காட்டில் முகாமிட்டிருந்த செய்தியை அறிந்த பெரிய காலடி சில வீரர்களுடன் சென்று அம்முகாமைத் தாக்கினார்.
அப்போது எதிரி வீரன் ஒருவன் மறைந்திருந்து தாக்கியதால் காயமுற்றார் என்றாலும் வயிறு கிழிக்கப்பட்டு, குடல் வெளியே வந்தநிலையிலும், தான் தலைப் பாகையாகக் கட்டியிருந்த துண்டை எடுத்து, வெளியே வந்த தன் குடலை மீண்டும் வயிற்றுக்குள் தள்ளி, தன் வயிற்றைத் துண்டால் கட்டிக் கொண்டு, தன் உயிர் போகும் வரை கடலாக எதிரிகளுடன் சண்டையிட்டு வீர மரணம் அடைந்தார்.
தன் தளபதி பெரிய கடலாடி எதிரிகளுடன் போரிட்டு வீர மரணம் அடைந்த இடத்தில், பிற்காலத்தில் பூலித்தேவர், வீரக்கல் (நடுகல்) ஒன்றை நட்டு வைத்தாராம். அந்த இடம் இன்றும் இப்பகுதி மக்களால் ‘காலாடி மேடு’ என்று அழைக்கப்படுகிறது.பூலித் தேவன் சிந்தும், காலாடியின் புகழை,
“கடமை வீரனப்பா;
காலாடி வீரனப்பா
சூராதி சூரனப்பா;
சூழ்ச்சியில் வல்லவனப்பா”
என்று பேசுகிறது.நாட்டுப் புறப்பாடல்களிலும், நாட்டுப்புறக்கதைப் பாடல்களிலும் தேடினால் நம் நாட்டு விளிம்பு நிலை மக்கள் வீரதீரத்துடன் எப்படி எல்லாம் நம் நாட்டின் விடுதலைக்காக உழைத்தார்கள் என்ற செய்திகளை நாம் அறிந்து கொள்ள முடியும்.
பூலித்தேவன் கும்மிப் பாடல்
“ஒண்டிவீரன் என்ற பூலித் தேவனின் தளபதி. தனி ஆளாகச் சென்று வெள்ளையர்களுக்கு எதிராக வீரதீரச் செயல்களைப் புரிந்து, கடைசியில் தானே தன் கையை வெட்டிக் கொண்டு செத்தான்” என்ற வரலாற்றைச் சொல்கிறது.பூலித்தேவன் மேல் படை எடுப்பதற்காக, கும்பினியர்கள் தென்மலை என்ற இடத்தில் முகாமிட்டிருந்தார்கள்.
கும்பினியர், புலீத் தேவனின் படை வீரர்கள் சண்டையிட வரும்போது அவர்கள் மீது பீரங்கியால் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டு அவற்றில் வெடி மருந்தும் நிரப்பி வைத்திருந்தார்கள்.
பரங்கியர்களின் நவீன யுத்த ஆயுதமான பீரங்கிகளை எதிர் கொள்வதுதான் அன்றைக்கு வெள்ளையர்களை எதிர்த்து யுத்தம் செய்யும் பாளைக்காரர்களுக்கு பெரும் சவாலாக இருந்தது. எனவே, வெள்ளையர்கள் தமிழ் வீரமறவர்களை அழித்து ஒழிக்கப் பயன்படுத்தும், பீரங்கியையே பரங்கிப் படைகளுக்கு எதிராகத் திருப்பிவிட வேண்டும் என்று நினைத்தார் பூலித்தேவர்.
அப்பணியைச் செய்வதற்குச் சரியான ஆள் ஒண்டிவீரன்தான் என்று முடிவு செய்து, பரங்கியரின் முகாமிற்கு ஒண்டி வீரரை அனுப்பி வைத்தார் பூலித்தேவர். இரவு வேளையில் மை இருட்டில் தென் மலையில் உள்ள பரங்கியரின் முகாமிற்குச் சென்றான் ஒண்டி வீரன்.கும்பினிப் படைவீரர்களின் கண்களில் மண்ணைத் தூவி விட்டு முகாம் ஓரமாய் உள்ள மலைச் சரிவில் ஒண்டி வீரன் பதுங்கிக் கிடந்தான்.
தான் பதுங்கி இருப்பதைப் பரங்கிப் படையினர் பார்த்து விடக்கூடாது என்பதற்காக, தன்மேல், இலைதளைகளையும், செத்தல் செருவில்களையும் தானே அள்ளிப் போட்டுக் கொண்டு படுத்துக் கிடந்தான்.அப்போது அங்கு வந்த கும்பினிப்படை வீரன் ஒருவன், குதிரை ஒன்றைக் கட்டுவதற்காக இரும்பாலான ஆப்பு ஒன்றைத் தரையில் அறைந்தான் பரங்கி வீரன், இருட்டில் ஆப்பை வைத்துச் சம்மட்டியால் அறைந்த இடம் ஒண்டி வீரனின் புறங்கையாக இருந்தது. பரங்கி வீரன் அடித்த ஆப்பு ஒண்டி வீரனின் கையைத் துழைத்துக் கொண்டு, இரத்தக் கசிவுடன், பூமிக்குள் பாய்ந்தது.ஒரு ஊசி குத்தினாலே தன்னை அறியாமல், நாம் சத்தம் போட்டுவிடுகிறோம்.
 வெள்ளைப் பரங்கி வீரன், ஒண்டி வீரனின் கை மேல் ஆப்பை வைத்து அறைந்தான். இப்போது, லேசாகச் சத்தம் கொடுத்தாலும், பீரங்கிப் படை வீரன் தன்னைக் கண்டுபிடித்துவிடுவான். கண்டுபிடித்தால் கொன்று விடுவான் என்பது நிச்சயம், ஆனால் மன்னர் பூலித்தேவன் தன்னிடம் ஒப்படைத்த வேலையைச் செய்ய முடியாமல் சாக வேண்டிய நிலைவரும் என்று எண்ணிய ஒண்டி வீரன் பல்லைக் கடித்துக் கொண்டு, ஆப்பு தன் கையைத் துளைக்கும் போது ஏற்பட்ட வலியைப் பொறுத்துக்கொண்டான்.
ஆப்பை ஒண்டி வீரனின் கையோடு சேர்த்து தரையில் அறைந்த வெள்ளையன் அந்த ஆப்பில் ஒரு குதிரையைப் பிடித்துக் கயிற்றால் கட்டி விட்டுத் தன் முகாமிற்குச் சென்றுவிட்டான்.
இப்போது ஆப்பில் இருந்து தன் கையை விடுவிக்க வேண்டும், என்ன செய்ய? மறுகையில் ஆப்பை அசைத்துப் பிடுங்கலாம் என்றால் ஆப்பு பூமியில் ஆழமாகப் புதைந்து உள்ளது. ஆப்பை அசைத்தால், புண்ணான அவனது இடது கை மேலும் வலிக்கும்.
எனவே வலது கையால், தன் இடுப்பில் சொறுகி இருந்த வாளை உருவி தன் இடது கையை முட்டுக்குக் கீழே, தானே ஓங்கி வெட்டுகிறான் ஒண்டி வீரன்.தன் கையைத் தானே ஒரே வெட்டில் வெட்டித் துண்டாக்கினால் எப்படி வலித்திருக்கும் என்பதை இந்த இடத்தில் வாசகர்கள் எண்ணிப் பார்த்துக் கொள்ளவும். இப்போதும் வலியால் சத்தம் கொடுத்தால், பரங்கிப் படை வீரர்கள், அவனைப் பிடித்துக்கொள்வார்கள். மன்னர் கொடுத்த வேலையைச் செய்து முடிக்க முடியாது போகலாம். எனவே, தானே தன் கையை வெட்டிய வலியையும் தாங்கிக் கொண்டு ஒண்டி வீரன். உதிரம் ஒழுகும் கையோடு, மெல்ல, மெல்ல, ஊர்ந்து பரங்கிப் படையினர் பீரங்கியை வைத்திருக்கும் இடத்திற்குப் பதுங்கிச் சென்று அப்பீரங்கியின் வாயை கும்பினியரின் படைகள் தங்கி இருக்கும். திசையை நோக்கிச் சரியாகத் திருப்பி வைத்து, அப்பீரங்கியை வெடிக்கச் செய்துவிட்டு, கும்பினியனின் குதிரை ஒன்றில் ஏறி, அங்கிருந்து தப்பித்து வரும் ஒண்டி வீரன்-
“என் அங்கக்கை போனால் என்ன- எனக்குத் தங்கக்கை தருவான் பூலிமன்னன்”
என்று பாடிக் கொண்டே வந்ததாக பூலித் தேவன் கும்மிப்பாடல் குறிப்பிடுகிறது.தான் செய்த தவறுக்காக, தன் கையையே வெட்டிக் கொண்டு, தன் சொந்தக் கைக்குப் பதில் பொன்னாலாகிய கையைப் பொருத்திக் கொண்டு வாழ்ந்த பொற்கைப் பாண்டியனை நாம் வரலாற்றின் ஏடுகளில் வாசித்திருக்கிறோம்.
இங்கே, நாட்டுக்காக, தேச விடுதலைக்காக, “தன் மன்னன் கொடுத்த பணியை, உயிரைக் கொடுத்தேனும் கனகச்சிதமாய்ச் செய்து முடிக்க வேண்டும்” என்று செயல் பட்டு தன் இடது கையைத் தானே துண்டித்துக்கொண்ட ஒரு மாவீரனை நாட்டார் பாடல்களில் நாம் தரிசிக்கின்றோம்.
நன்றி:தேவர் தளம்