மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் .....

Loading...

விவேகானந்தர் கண்ட கனவை ஆர்.எஸ்.எஸ். நனவாக்குகிறது : அகில பாரத தலைவர் மோகன்ஜி பாகவத்

நாகர்கோவில் : விவேகானந்தர் கண்ட கனவை ஆர்.எஸ்.எஸ். நனவாக்கி வருகிறது என குமாரபுரத்தில் நடந்த நிகழ்ச்சியில் அகில பாரத தலைவர் மோகன்ஜி பாகவத் கூறினார்.
ஆரல்வாய்மொழி அருகே குமாரபுரம் பகுதியில் ஆர்.எஸ்.எஸ். சங்க நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது. நிகழ்ச்சிக்கு ஓய்வு பெற்ற நீதிபதி ராமலிங்கம் தலைமை வகித்தார். குமரி மாவட்ட செயலாளர் ஸ்ரீனிவாசகண்ணன் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அகில பாரத தலைவர் மோகன்ஜிபாகவத் பேசியதாவது;- பாரததாயின் பாதபூமியாக விளங்கும் பகுதியில் சுவாமி விவேகானந்தரின் 150 ஆண்டு விழாவை கொண்டாடிகொண்டு இருக்கிறோம். பலர் விழாக்கள் சுய நலத்திற்காக நடத்துகின்றனர். ஆனால் நாம் நடத்தும் இந்த விழா ஏதோ சம்பிரதயத்திற்காக நடத்தவில்லை. நாம் விவேகானந்தரின் வாழ்க்கையை திரும்ப பார்க்கும் விதமாகவும், சிந்தனையை எடுத்து கூறும் விதமாகவும் நடத்துகிறோம். சிலர் இது சுயநலம் என கூறுகின்றனர். நமது வாழ்வில் இதனை செயல்படுத்தவே நாம் நடத்துகிறோம்.
இன்று உலக வாழக்கையானது பௌத்தவாழ்க்கையை முன்னிறுத்தி வருகிறது. சுவாமி விவேகானந்தர் ராமகிருஷ்ணரின் சீடராக இருந்தவர். அவர் வாழ்க்கையில் தேசம்பற்றியும், மக்களை பற்றியும் சிந்தித்து வாழ்ந்தவர். அதற்கு ஒரு எடுத்துக்காட்டு தான் சுவாமி கால்நடையாக பாரதம் முழுவதும் பாதயாத்திரை செய்தார். அப்போது அவருக்கு ஒரு தெளிவு கிடைத்தது. நல்லபண்புகள் உடைய இயக்கம் தேவை. அதற்கு பலமுயற்சிகள் எடுத்தார். இயக்கத்திற்கு நல்ல வலுவான மக்கள் சக்தி வேண்டும் என கருதினார்.அதன் அடிப்படையில் தான் ஆர்.எஸ்.எஸ் இயக்கம் 1925ல் தோற்றுவிக்கப்பட்டது. அதனை டாக்டர் ஹெக்டேவர் துவக்கினார். நேர்வழியில் உள்ள இளைஞர்கள் தேவை என்பதை கருத்தில் கொண்டு, வீரசவார்க்கர் போன்ற தேசபக்தர்களை உருவாக்கினார். சுதேசி பொருட்களை வாங்க ஏற்பாடு செய்தார். விவேகானந்தர் கண்ட கனனை நனவாக்கும் விதமாக நல்ல ஒரு இந்து சக்தி தேவை என்பதை உணர்ந்து, தேசத்திற்கு இந்துத்துவம் தேவை என்ற அடிப்படையில் தனது கருத்துக்களை தெளிவு படுத்தினார். இந்துக்கள் தன்மானமாக வாழவும் இந்துக்கள் பாதுகாப்பாக வாழவேண்டும் என்பதை கருத்தில் கொண்டும் இந்து தர்மத்தை காப்பற்றவும், மனரீதியாகவும், புத்திரீதியாகவும் யோகா பயிற்சி ஆர்.எஸ்.எஸ்.,லால் கொடுக்கப்பட்டு வருகிறது, ஒருதாய், ஒரு மக்கள் என்ற எண்ணத்தை கொடுக்கும் விதமாக ஒருமணி நேரம் யோகா பயிற்சிகள் நடத் வருகிறது.
சமுதாயத்தில் 87 ஆண்டுகள் ஆர்.எஸ்.எஸ்., தேசம் முழுவதும் ஷாகா பணி மூலம் நடந்து வருகிறது. இயற்கை சீற்றங்கள், பேரிடர்கள், மனிதனால் ஏற்படும் அழிவுகள், நிலநடுக்கங்கள் போன்றவ்றால் பாதிப்பு ஏற்படும் போது, முதலில் சென்று ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்கள் மக்களுக்கு தேனைவயான வசதிகள் தங்கள் பணத்தால் செய்து வருகின்றனர். தற்போது ஒருலட்சத்து 75 ஆயிரம் பகுதிகளில் ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்கள் தங்கள் பணியை செய்து வருகின்றனர். தேசத்தில் உள்ள பல்வேறு பிரச்சனைகளை தீர்க்க பாடுபட்டு வருகின்றனர்.இதனை தான் சுவாமி விவேகானந்தர் கடந்த காலத்தில் கனவு கண்டார். இதனை ஆர்.எஸ்.எஸ்., நிறைவேற்றி வருகிறது. அவரது கனவை நனவாக்கி வருகிறது.
இந்து சமுதாயத்தின் பலகீனத்தை போக்கும் விதமாக தான் யோகா பயிற்சி நடத்தப்பட்டு வருகிறது. இதனை கிராமங்கள் தோறும் நடத்தப்பட வேண்டும். யோகா இல்லாத கிராமம் இல்லாதஅளவு நாம்நடத்தவேண்டும். இதன் மூலம் கட்டுப்பாடான ஒன்றுபட்ட சமுதாய மாற்றம் உருவாக வேண்டும். வாழ்க்கையில சுய நலம் இல்லாத மக்கள் சக்தி உருவாக்க வேண்டும். ஒவ்வொரு வார்டுகளிலும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும். ஜாதி இல்லாத நிகழ்ச்சியாக நடத்த வேண்டும். விவேகானந்தரின் 150வது ஆண்டு விழா நம் வாழ்க்கையில் பிரதிபலிப்பை ஏற்படுத்த வேண்டும். அவரது சிந்தனையை நாம் செயல்படுத்தி பலம் வாய்ந்த உள்ளத்தோடும் வாழ வேண்டும். இந்த பயிற்சியை தாய்மார்களுக்கும் கொடுக்க வேண்டும். தேசத்தில் நலனை காப்பது அரசின் கடமை. ஆனால் அரசுகள் மாறிக்கொண்டே இருக்கிறது. அரசில் கட்சிகளுக்கு பொறுப்பு கொடுக்கிறோம். அதை அரசுகள் செயல்படுத்தவில்லை. ஆட்சிகள் மாறினாலும் எந்த மாற்றமும் நிகழவில்லை.
தேசம் நல்ல முறையில் மாற வேண்டுமானால் மக்கள் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். மக்களை தயார்படுத்தும் விதமாக பல்வேறு பயிற்சிகள் கொடுக்கப்பட்டு வருவதை அனைவருக்கும் கிடைக்கும் வகையில் செய்ய வேண்டும். நல்லதொரு நல்ல தலைமையிலான சமுதாயம் தேசத்தை எழுந்து நிற்கும் விதமாக நாம் மாற்று உருவாக்க வேண்டும்.
விவேகானந்தரின் மனக்கண் முன் தோன்றிய, உலகத்தை வழிநடத்தக்கூடிய பாரதமாதாவை பிரசித்தப்படுத்த வேண்டும். பாரத தாயின் வழிகளை உலகே பின்பற்றும் என விவேகானந்தர் கனவு கண்டதை போன்று நாம் பாரதத்தை உலகத்தின் மகா சக்தியாக உருவாக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
ஓய்வு பெற்ற நீதிபதி ராமலிங்கம் பேசியதாவது: கடமை, கட்டுப்பாடு, தனிமனி ஒழுக்கம் குறித்த நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்த சங்கம செயல்பாடு நடக்கும் நல்ல வேளையில் நாட்டில் நல்லோரை உருவாக்கவும், நல்லாட்சி நடத்தவும், பயன்படும் விதமாக இதன் பொறுப்பாளர்கள் திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும். இந்த சங்கம் மென்மேலும் பலம் அடைய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் இந்து முன்னணி நிறுவன தலைவர் ராமகோபாலன், மாநில பா.ஜ. தலைவர் பொன் ராதாகிருஷ்ணன், முக்கிய தலைவர் இல.கணேசன், மாநில ஆர்.எஸ்.எஸ். தலைவர் மாரிமுத்து, வரவேற்பு குழு தலைவர் ரவீந்திரன், துறவிகள், ஆன்மீக மடத்தலைவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் 25 ஆயிரம் ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்கள் சீருடையுடன் வந்து யோகா பயிற்சி செய்தனர். மேலும் தென்தமிழக பகுதிகளில் இருந்து ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள், தொண்டர்கள், ஆதரவாளர்கள் ஆண்கள், பெண்கள் உட்பட ஒரு லட்சம் பேர் கலந்து கொண்டனர்.