மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் .....

Loading...

இதுவல்ல சுதந்திரம்

கடந்த நூற்றாண்டில் உலகில் எத்தனை எத்தனையோ நாடுகளில் சுதந்திரப் போராட்டங்கள் நடந்தன. போராட்டம் வெற்றியடைந்து சுதந்திரம் கிடைத்த நாடுகள் பல. ஆனால், இந்திய சுதந்திரப் போராட்டத்தைப்போல வித்தியாசமான போராட்டம் அமையவில்லை. இந்த அளவுக்குக் கனவுகளுடனும், லட்சியங்களாலும் அமைந்த ஒரு சுதந்திர தேசமும் கிடையாது.
அனைவருக்கும் பேச்சுரிமை என்கிற அடிப்படைக் கோட்பாடின்மேல் ஓர் அரசியல் சட்டம் உருவாக்கப்பட்டது. ஏனைய நாடுகளில் பத்திரிகைகளுக்கு என்று தனியாக சில உரிமைகள் தரப்பட்டுள்ளன. இந்திய அரசியல் சட்டத்தில் ஒவ்வோர் இந்தியக் குடிமகனுக்கும் அந்த உரிமைகள் வழங்கப்பட்ட அதிசயத்தை உலகமே பார்த்து வியந்தது. பரிபூரண பேச்சுரிமையும், எழுத்துரிமையும் ஒவ்வோர் இந்தியக் குடிமகனுக்கும் அளிக்கப்பட்டிருக்கிறது.
அரசியல் நிர்ணய சபையின் விவாதங்களைப் படித்துப் பார்த்தால் அந்த மாமேதைகள் வருங்கால இந்தியா பற்றி எந்த அளவுக்கு நம்பிக்கை வைத்திருந்தார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளும்போது வெட்கத்தில் தலைகுனிந்து நிற்கத்தான் முடிகிறது.
கட்டுப்பாடு இல்லாத சுதந்திரத்தை, அதிகம் கல்வி அறிவு இல்லாத ஓர் ஏழை நாட்டு மக்களுக்கு அளிக்கும்போது அந்தச் சுதந்திரம் தவறாகப் பயன்படுத்தப்படும் என்று கவலைப்படாமல், அதனால் உறுதி செய்யப்படும் என்று அவர்கள் நம்பினார்கள். அந்த நம்பிக்கையை நாம் தகர்த்துக்கொண்டு வருகிறோம் என்பதைப் பார்க்கும்போது மனம் கூனிக் குறுகுகிறது.
எந்தவிதத் தணிக்கையும் இல்லாமல், இந்தக் கருத்தை வெளியிட்டால் என்ன ஆகுமோ என்கிற தயக்கமோ, பயமோ இல்லாமல் பேசவும், எழுதவும் முடிவதற்குப் பெயர்தான் சுதந்திரம். ஆனால், கருத்து சுதந்திரம் அளிக்கப்படுவது சமுதாயத்தின் வளர்ச்சிக்காகவும், நன்மைக்காகவும் அமைய வேண்டும். சுதந்திரத்தின் ஆதார சுருதியே நன்மையும், வளர்ச்சியுமாக மட்டும்தான் இருக்க வேண்டுமே தவிர, துவேஷமும், வன்முறையைத் தூண்டுவதும், தனிமனிதத் தாக்குதலுமாக இருக்க முடியாது.
கையிலே பேனா இருக்கிறது, காட்சி ஊடகம் தனிச் சொத்தாக அமைந்துவிட்டது என்பதற்காகத் தனிநபர் தாக்குதலில் ஈடுபடும் தரக்குறைவைத் தனிமனித சுதந்திரம் என்கிற அரசியல் சட்டம் அளிக்கும் பாதுகாப்பின் பின்னால் ஒளிந்துகொண்டு செய்ய முற்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. கருத்து சுதந்திரம் என்பது ஆரோக்கியமான விவாதத்துக்கு வழிகோலுவதாக இருப்பதற்காகத்தானே தவிர, தரக்குறைவான தாக்குதலுக்குப் பயன்படுத்துவதற்காக அல்ல.
அரசின் கொள்கை முடிவுகளை, செயல்திட்டங்களை, முறைகேடான நிர்வாகத்தை எதிர்த்துக் குரல் கொடுப்பதற்காக, விமர்சனம் செய்வதற்காக, இடித்துரைப்பதற்காகச் சுதந்திரம் பயன்படுத்தப்படும்போது அது அரசியல் சட்டத்தின் ஆதார சுருதியைச் சார்ந்ததாக இருக்கும். அதே சுதந்திரத்தை இழிவான முறையில் தனிநபர் தாக்குதலில் ஈடுபடப் பயன்படுத்தும்போது அதைவிடக் கீழ்த்தரமான கயமைத்தனம் வேறெதுவும் இருக்க முடியாது.
அரசியல்வாதிகளுக்கு, அதிகாரவர்க்கத்தைச் சேர்ந்தவர்களுக்கு, நீதித்துறையினருக்கு இல்லாத கடமையுணர்வும் பொறுப்புணர்வும் பத்திரிகையாளர்களுக்கு உண்டு. இவர்கள் சிந்தனாவாதிகள். சமுதாயம் இவர்களை வழிகாட்டிகளாகப் பார்க்கிறது. மேலே சொன்ன மூன்று பிரிவினரின் முடிவுகளையும் தவறுகளையும் சுட்டிக்காட்டி வழிநடத்தும் பொறுப்பைத் தங்களுக்குத் தாங்களே எடுத்துக்கொண்டவர்கள் இவர்கள். அதனால்தான் “படித்தவன் தவறு செய்தால் அய்யோ அய்யோவென்று போவான்’ என்று மகாகவி பாரதி சொன்னார்.
இறந்துபோன இருவரிடம் காலம்சென்ற ஒருவர் எப்போதோ சொன்னதாக ஓர் ஆதாரமற்ற அவதூறுச் செய்தியை அட்டைப்படச் செய்தியாக்கித் தனது பத்திரிகை விற்பனையை அதிகரித்துக்கொள்ள நினைப்பது என்பதே தவறு. அதைவிடப் பெரிய தவறு, பொறுப்பான பதவியில் இருப்பவரைத் தனிப்பட்ட முறையில் இழிவுபடுத்தி அவரது பெயருக்குக் களங்கம் கற்பிக்க விரும்புவது. இப்படிச் செய்பவர்களைப் பத்திரிகையாளர்கள் என்று ஏற்றுக்கொள்வதே அவமானம்.
“சீ, இதுவும் ஒரு பிழைப்பா?’ என்று ஏனைய பிரிவினர் கேட்கிறார்களோ இல்லையோ நிச்சயமாகப் பத்திரிகையாளர்கள் அவர்களிடம் கேட்க வேண்டும். அதுபோன்ற பத்திரிகைகளையும், பத்திரிகையாளர்களையும் தனிமைப்படுத்தி அகற்றி நிறுத்த வேண்டும். அதுதான் பத்திரிகை தர்மம்.
சரி, இப்படித் தரக்குறைவாக எழுதுபவர்களை எப்படி எதிர்கொள்வது? அதிலும் ஆளும்கட்சியாக இருக்கும் ஓர் அரசியல் இயக்கம், மக்கள் மத்தியில் மிகப்பெரிய செல்வாக்குள்ள, தொண்டர்கள் பலமும் உள்ள இயக்கம் இந்தப் பிரச்னையை எதிர்கொள்வது எப்படி?
கட்சித் தொண்டர்கள் கொதித்தெழுவார்கள். எழுந்தார்கள். உண்மை. அப்படிக் கொதித்தெழும் தொண்டர் கூட்டத்தைத் தடுத்து நிறுத்திச் சட்டம் தனது கடமையைச் செய்யும் என்று அமைதிப்படுத்தும் கடமை அரசியல் தலைமைக்கு உண்டு. அதிலும், ஆட்சி அதிகாரத்தில் இருக்கும்போது கட்சித் தொண்டர்களைவிட நிர்வாகம் விரைந்து செயல்பட்டிருக்க வேண்டும்.
அப்படிச் செய்யாமல் போகும்போது, ஏதோ நமது தலைமைக்கு இதுபோன்ற அராஜகமும், வன்முறையும் பிடிக்கிறது போலிருக்கிறது என்று தொண்டர்கள் கருதவும், உன்னைவிட நான்தான் அதிகமான விசுவாசி என்று தலைமைக்குக் காட்ட வேண்டும் என்கிற வேகம் எழுவதற்கும் வாய்ப்பளித்ததாகி விடும். நல்லவேளை உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படாமல் போனது யார் செய்த புண்ணியமோ? அப்படி நடந்திருந்தால் தீராப்பழி தொண்டர்களுக்கு ஏற்பட்டிருக்காது, கட்சித் தலைமைக்கு, அதாவது முதல்வருக்கு ஏற்பட்டிருக்கும்.
ஈழத்தமிழர் படுகொலைக்குக் காரணம் இலங்கை அதிபர் ராஜபட்ச என்பதுதான் நமது கருத்தும். அதற்காக அவரது உறவினர் ராமேசுவரத்துக்கு சுவாமி தரிசனத்துக்கு வந்தால் கும்பலாகப் போய் தாக்குவது என்ன நியாயம்?
முல்லைப் பெரியாறு பிரச்னையில் கேரள அரசின் நிலைப்பாட்டை நாம் வன்மையாக எதிர்க்கிறோம்தான். அதற்கெனப் புத்தகக் கண்காட்சியில் மலையாளப் பத்திரிகையான “மலையாள மனோரமா’ அரங்கம் அமைக்கக்கூடாது என்று ஒரு கும்பல் ஆர்ப்பாட்டம் செய்வதும் அந்த அரங்கம் மூடப்படுவதும் என்ன நியாயம்?
சுதந்திரம் இங்கே தவறாகப் பயன்படுத்தப்படுகிறது. சுதந்திரம் என்கிற பெயரில் பத்திரிகைகள் பொறுப்பற்றதனமாகத் தரம்கெட்ட முறையில் தனிமனிதத் தாக்குதலில் ஈடுபடுவது எந்த அளவுக்குக் கண்டிக்கத் தக்கதோ அதே அளவு கண்டனத்துக்கு உரியது வன்முறைக் கும்பல்கள் சட்டம் ஒழுங்கைக் கையில் எடுத்துக் கொள்வதை அனுமதிப்பதும்!
பத்திரிகைகள், அரசியல்வாதிகள், ஆட்சியாளர்கள், பொதுமக்கள் இவர்கள் அனைவரும் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டிய உண்மை ஒன்று இருக்கிறது. அது “இதுவல்ல சுதந்திரம்’ என்பதை!

மேற்கண்ட கட்டுரை இன்றைய (11/01/2012) தினமணி நாளிதழ் தலையங்கமாகும் 

ஆரியம் திராவிடம் ஓர் ஆராய்ச்சி – சுப்பு

கடந்த நூற்றைம்பது ஆண்டுகளில் தமிழக அரசியலில் அதிகமாகப் பயன்படுத்தப்பட்ட வார்த்தை எது என்று ஆராய்ந்து பார்த்தால் அது திராவிடமாக இருக்கும் அல்லது ஆரியமாக இருக்கும்.
கடந்த நூற்றைம்பது ஆண்டுகளில் தமிழர் புழக்கத்தில் பொருள் மாறிப் போன வார்த்தைகள் எவை என்று பார்த்தால் அவை திராவிட இனமாக இருக்கும். அல்லது ஆரிய இனமாக இருக்கும்.
ஆரியம் என்றால் என்ன ? ஆரிய இனம் என்றால் என்ன? திராவிடம் என்றால் என்ன? திராவிட இனம் என்றால் என்ன? 
இலக்கியங்களில் வரும் பொருள் எது? அரசியல் மேடைகளில் உணர்த்தப்படும் பொருள் எது? கல்விக்கூடங்களில் சொல்லித்தரப்படும் கருத்து எது? இது தொடர்பாக சில சான்றுகளை முன் வைக்கின்றேன்.
முதலில் ஆரியம். 
நம்முடைய வரலாற்றில் தொன்மையானதாகக் கருதப்படும் வேதங்களில் ஆரியம் இருக்கிறதா?
ரிக் வேதத்தில் சொல்லப்படும்  போர்கள் ஆரிய இனத்தவருக்கு மற்றொரு இனத்தவருக்கும் இடையே நடந்தவை என்ற கருத்து திராவிட இயக்கத்தவரால் தொடர்ந்து சொல்லப்படுகிறது.
இது தவறான கருத்து. 
ரிக் வேதத்தில் சொல்லப்படும் போர்கள் இரண்டு இனங்களுக்கு இடையே நடந்த போர்களல்ல. அவை அந்த சமூகத்திற்கு உள்ளேயே நடந்த மோதல்கள்.
ஆரியர், அசுரர் மற்றும் தாசர் என்று ரிக்வேத சமூகம் மூன்று பிரிவுகளாகப்  பிரிந்திருந்தது. இதில் இனப்பிரிவே  இல்லை. இது தொடர்பாக பி.ஆர்.அம்பேத்கர் கூறியதை இங்கே குறிப்பிட வேண்டும். “ஆரிய இனம் பற்றிய எந்தக் குறிப்பும் வேதங்களில் இல்லை”. ஆரியர்கள் சிவப்பு நிறத்தவர்கள் திராவிடர்கள் கருப்பு நிறத்தவர்கள் என்றும் ஒரு நம்பிக்கை பரவலாக உள்ளது.
இதுவும் தவறு. 
வேத காலத்து முனிவர்களில் சிலர் கருப்பு நிரமுடையவர்கலாக இருந்திருகிறார்கள். கண்வ மகரிஷி கருப்பு நிறம் உடையவர் என்ற வருணனை ரிக் வேதத்தில் இருக்கிறது. (10:31:11)
இஷ்வாகு குலத்தைச் சேர்ந்த ராமனும், யாதவ குலத்தைச் சேர்ந்த கிருஷ்ணனும் கருப்பு. பாஞ்சாலியின் இயற்பெயரான “கிருஷ்ணா” கருப்பு நிறத்தைக் குறிக்கிறது.
வேதங்களில் திராவிட என்ற சொல் இல்லை. 
தமிழ் நூல்களில் குறுந்தொகையில் (7:3:5) மேள ஓசைக்கு ஏற்றபடி கயிற்றின் மேல் ஆடுபவர்கள் ஆரியர்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
……………………ஆரியர் கயிறாடு பரையிற் கால்பொரக் கலங்கி வாகைவென் நெற்றோலிக்கும்” என்கிறது குறுந்தொகை.
திருநாவுக்கரசர் தேவாரத்தில் (கி.பி.ஏழாம் நூற்றாண்டு) இறைவன் வடமொழும் தென்மொழித் தோத்திரங்களும் ஆகிய இசையாகத் திகழ்பவர்; சாத்விக  குணத்தோடு சிவா சிந்தனையோடு இருக்கும் ஞானிகளுடைய சொல்லாக விளங்குபவர் என்று எழுதப்பட்டுள்ளது. ஆரியம் தமிழோடிசையானவன் கூறிய குணத்தார் குறிநின்றவன்” என்பது திருநாவுக்கரசர் பாடல் (176).
மாணிக்கவாசகர் (கி.பி.எட்டாம் நூற்றாண்டு) ஆசாரியன் என்ற பொருள்பட சிவ புராணத்தில் பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே (64) என்று பாடுகிறார்.
பிறகு, கம்பராமாயணம் (கி.பி. பனிரெண்டாம் நூற்றாண்டு) யுத்த காண்டத்தில் “இற்றைநாள்வரை முதளியான் முன்செய்தன குற்றமுமுளவெனிற் பொறுத்தி கொற்றவர் அற்றதான் முதகத்தினில் விழித்தல் ஆரிய! பெற்றனன் விடையெனப் பெயர்த்து போயினான். (க.ரா.யு.கா. கும்பகர்ணன் வதைப் படலம்) என்று வருகிறது. இந்த இடத்தில் உரையாசிரியர்கள் ஆரிய என்பதைத் தலைவன் என்று எழதுகிறார்கள்.
இதைத் தொடர்ந்து மணவாள மாமுனிகள் (1370-1443) வாய்த்ததிரு மந்திரத்தின் மத்திம மாம்பதம்போல் சீர்த்த மதுரகவி செய்கலையை ஆர்த்த புகழ் ஆரியர்கள் தாங்கள் அருளிச் செயல்படுவே செர்வித்தார் தாற்பரியம் தேர்ந்து” (உபதேசரத்தின மாலை) என்று எழுதுகிறார் வேதாந்த தேசிகர் (1269-1370) கான்பனவு முரைப்பனவு  மற்றோன்றிக் கண்ணனையே கண்டுரைத்த கடிய தாதற் பான்பெருமாளருள் செய்த பாடல் பத்தும் பழமறையின் பொருளென்று பரவுகின்றோம் வேண்பெரிய விரிதிரை நீர் வைத்துள்ளே வேதாந்த ஆரியன் என்றியம்ப நின்றோம் நம் பெரியோமல்லோம் நான் நன்றுந்தீதும் நமக்குரைப்பாள ரென்று நாடுவோமே (அம்ருதாஸ்வாதி 37) என்கிறார். இங்கே ஆரியன் என்பதை சிறப்புடையவன் என்பதாகப் பொருள் கொள்ள வேண்டும்.
இப்படியெல்லாம் சிறப்பு மொழியாகப் பயன்படுத்தப்பட்ட ஆரியம், ஒரு பாதிரியாரால் பாதை மாற்றப்பட்டது. திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் (1856) என்ற புத்தகத்தை எழுதிய ராபர்ட் கால்டுவெல் என்ற பாதிரியார் இதை இன அடியாளமாக மாற்றினார். 
கால்டுவெல் வழியில் வந்த சி.என்.அண்ணாதுரை “ஆரிய மாயை (1943) என்ற புத்தகத்தில் நர்மதை ஆறு நமக்கும் ஆரியத்துக்கும் இடையே மிக்க ரமணீயமாக ஓடிக் கொண்டிருக்கிறது என்பதைச் சரித்திரம் படிப்போர் அனைவரும் நன்று அறிவர்” (பக்.26) என்று எழுதினார்.
பூகோளப் படத்தைப் பார்த்தாலே மத்திய பிரதேசத்தின் தெற்குப் பகுதி, குஜராத்தின் தெற்குப் பகுதி, மகாராஷ்டிரம் ஆகியவை நர்மதையின் தெற்க்கே உள்ளன என்று தெரிந்துவிடும் சத்திரபதி சிவாஜியும் நரேந்திர மோதியும் திராவிடர்கள்ள என்பதை அண்ணாவின் தம்பிகள்தான் விளக்க வேண்டும்.
அடுத்தது திராவிடம். 
“திராவிடம்” என்ற பொருளில் த்ராமிடம் என்ற சொல் பாகவதத்தில் (8.5.49) வருகிறது.
தமிழைக் குறிக்க சம்ஸ்க்ருதத்தில் “த்ரமிடம்” என்ற சொல்லைப் பயன்படுத்தி இருக்கலாம் என்று சிலர் கருதுகிறார்கள். கிரேக்க நாட்டைச் சேர்ந்த பெரிப்ளூஸ் என்ற வரலாற்று ஆசிரியர் தமிழகத்தை ‘தாமரி’ என்று எழுதினர். ரோமாபுரியைச் சேர்ந்த தாலமி என்ற அறிஞர் ‘தமிரிசி’ என்று எழுதினார். இந்தியாவின் மேற்குப் பகுதியிலிருந்து வந்த அரேபியர்கள் முதலில் மலபார் கடற்கரையில் இறங்கினார்கள். அவர்கள் அந்த இடத்தையும் தமிழகத்தையும் ‘மலபார்’ என்றே அழைத்தார்கள் எனவே தமிழ் திராவிடமாக ஒழிக்க வாய்ப்புகள் இருந்தன.
சங்க இலக்கியங்களில் திராவிடம் என்ற சொல்லைத் தேடிப்பார்த்தால் தென்படவில்லை. 
பழைய ஐம்பத்தாறு தேசப் பட்டியலில் திராவிட தேசமும் உள்ளது. இந்தத் திராவிட தேசம் கிருஷ்ணா நதிக்குத் தெற்கிலும் சோழ தேசத்திற்கு வடக்கிலும் கர்நாடக தேச எல்லை வரையிலும் பரவி இருந்தது. இதற்கும் பகுத்தறிவாளர்கள் கேட்ட திராவிட நாட்டிற்கும் ஏணி வைத்தாலும் எட்டாது.
வேதாந்த தேசிகர் ‘த்ரமிடோபநிஷத்’ தாத்பர்ய ரத்னாவளி என்ற நூலை எழுதியிருக்கிறார்.
தாயுமானவர் (பதினெட்டாம் நூட்றாண்டு)
“…………..வடமொழியிலே வல்லான் ஒருத்தன் வரவும் திராவிடத்திலே வந்ததா விவகரிப்பேன்” (சித்தர் கணம் 10) என்று எழுதுகிறார்.
வேதாந்த தேசிகரும், தாயுமானவரும்
‘திராவிடம்’ என்ற சொல்லை தமிழ் என்பதாகப் பயன்படுத்துகிறார்கள்.
ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில், தென்னிந்திய மொழிகளை, ‘திராவிட மொழிகள்’ என்று அழைக்கும் ஆய்வு வெளி வந்தது. பிரான்சிஸ் வைட் எல்லிஸ் என்ற கலெக்டர் (1777-1789) செய்த மொழி ஆராய்ச்சியின் விளைவு இது.
இவரைத் தொடர்ந்து வந்தவர்தான் ராபர்ட் கால்டுவெல். இந்தியர்களைப் பிரித்து, இந்தியாவை ஆள வேண்டும் என்ற ஆங்கிலேயரின் கொள்கைக்கு ஏற்றபடி இவர் ஆராய்ச்சி முடிவுகளை வெளியிட்டார். இவருடைய முயற்சியால்  திராவிட இனம் என்ற கருத்து பரவலாக்கப்பட்டது.
‘தென்னிந்திய நல உரிமைச் சங்கம்’ என்று தொடங்கி, சுய மரியாதை இயக்கம், நீதிக் கட்சி, திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம்  என்று பெருகி, இன்று மேலும் பிளவு பட்டு இருக்கும் திராவிட இயக்கங்களின் தத்துவ ஆசான் கால்டுவெல் தான். இந்த இயக்கங்களின் அடிப்படை. கால்டுவெல்லின் கற்பனையில் உருவான ‘திராவிட இனம்’ என்ற கருத்தாக்கம்தான். 
கால்டுவெல் செய்த மோசடி பற்றி ஈழத்து அறிஞர் ஒருவர் கூறுவதைப் பார்க்கலாம்.
P.Viii … Psamls of a Saiva Saint/ T Isacc Thabiah/London. Luzee& Co./ 1925
A matter of convenience became a factor of mischief; the application of the name ‘dravida’ which is peculiar to the Tamils, toallied people in inferior grades of culture.
The responsibility is Bishop Caldwell’s. The wrong done to those, to whom alone the dravidian language belongs, is aggregated by employing a philological convention as an
 Ethnological distinction. TheCaldwellterminology is unscientific and unsatisfactory.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் அரசர்கள் தங்களை ஆரிய சக்கரவர்த்திகளாக அழைத்துக் கொண்டனர் என்றும் இவர் கூறுகிறார்.
ஆங்கிலேயர்களின் அதிகார நோக்கங்களும், சுரண்டல் திட்டங்களும் கிறித்துவப் பாதிரிமார்களின் மதமாற்ற வேட்கையும் துவங்கி வைத்ததுதான் திராவிட இனவாதம். ஈ.வே.ராமசாமியின் அடாவடி அரசியல் இதை பெருமளவில் வளர்த்துவிட்டது. இனவாதம் இயக்கமானது.
ஒரு கட்டத்தில் மலிவான அரசியல் வாதங்களோடு வலுவான தொழில் நுட்பமும் சேர்ந்து கொண்டது. திரைப்படப் பாட்டுப் புத்தகங்களும் இசைத்தட்டுகளும் கிராமங்கள்தோறும் திராவிடப் பொன்னாடும் பெரும்பாலான தமிழர்களை மூளைச் சலவை செய்தன. ஆனால் கடந்த நாற்பது ஆண்டுகளில் மக்கள் விழிப்புணர்வு அடைந்து வருகிறார்கள். இனவாதம் இங்கே இனிமேல் எடுபடாது.
தொல்லியல் துறை ஆய்வுகளின்படி அடிப்படையில் ஆரிய திராவிட மோதல் பற்றிய வரலாறு இப்போது வலுவிழந்துவிட்டது. இருந்தாலும் அரசியல் காரணங்களுக்காக இன வாதம் தொடர்ந்து போதிக்கப்படுகிறது.
இலக்கியமல்லாத ஒரு சான்றையும் பதிவு செய்ய வேண்டும். இந்தியாவின் உச்ச நீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு மற்றும் நீதிபதி க்யான் சுதா மிஸ்ரா ஆகியோர் வழங்கிய தீர்ப்பில் திராவிட மொழி பேசிய மக்கள் அந்நிய பிரதேசங்களிலிருந்து வந்தவர்கள் . மக்கள் இன அமைப்பியல்படி நாகரிகம் பெற்ற திராவிடகள் என்போர் இனக்கலப்புகள் மூலம் உருவான மக்கள் இனத்தைக் குறிக்கும்.
ஜனவரி 5, 2011.
இது பற்றி மேலும் அறிய:
1) புராதன இந்தியா என்னும் 56 தேசங்கள், பி.வி.ஜகதீச ஐயர், 1918.
 சந்தியா பதிப்பகம் 2009.
2) மதம் மற்றும் தத்துவங்களில் தென்னிந்தியாவின் பங்கு
கே.வி.ராமகிருஷ்ண ராவ், திராவிடச் சான்றோர் பேரவை: 2009
ஆரியர் அசுரர் மற்றும் தாசர் என்று ரிக்வேத சமூகம் மூன்று பிரிவுகளாக பிரிந்திருந்தது. இதில் இனப்பிறிவே இல்லை. இது தொடர்பாக பி.ஆர்.அம்பேத்கர் கூறியதி இங்கே குறிப்பிட வேண்டு. “ஆரிய இனம் பற்றிய எந்தக் குறிப்பும் வேதங்களில் இல்லை”.
நன்றி:ஹிந்து சங்க செய்தி