ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு மற்றும் வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்களின் முதலீடு -எஸ்.குருமூர்த்தி

எஸ். குருமூர்த்தி : ஸ்பெக்ட்ரமுக்கும், வெளிநாட்டுப் பணத்திற்கும் தொடர்பு உள்ளது. ஆகையால், இரண்டையும் இணைத்துத்தான் பேசியாக வேண்டும். முதலில் இந்தப் பிரச்சனை கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது தலை தூக்கியது. ஆனால், வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்களின் பணம் எந்த அளவுக்கு உள்ளது என்பது பற்றிய ஒரு கற்பனை கூட அந்த நேரத்தில் இல்லை.


ஸ்விஸ் வங்கிகளின் அசோஸியேஷன் வெப்சைட்டில் இதுபற்றி பார்த்தபோது, 1.4 ட்ரில்லியன் டாலர் – கிட்டத்தட்ட 70 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் வெளிநாட்டு வங்கிகளில் நம் நாட்டுப் பணம் முடங்கியுள்ளது தெரிய வந்தது. அதைத் திரும்ப இங்கு கொண்டு வர வேண்டும் என்று பா.ஜ.க. முயற்சி எடுத்தபோது, காங்கிரஸைச் சேர்ந்த ஜெய்ராம் ரமேஷ், ‘வெளிநாட்டு வங்கிகளில் இதுபோல பணம் எல்லாம் கிடையவே கிடையாது; இது பூச்சாண்டி காட்டும் வேலை’ என்று கூறி, முழுப் பூசணிக்காயை மறைக்கப் பார்த்தார்.

தற்போது குளோபல் ஃபைனான்ஸியல் இன்ட்டெக்ரெட்டி என்ற சுயசார்பு நிறுவனம், இந்த நாட்டின் பணம் 21 லட்சம் கோடி ரூபாய் வெளிநாட்டு வங்கிகளில் உள்ளது என்று, புள்ளி விவரங்களுடன் கடந்த மாதம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், உலகத்திலுள்ள பல நாடுகளில் இந்தக் கறுப்புப் பணத்தை கொண்டு போய் வைப்பதற்கு, வரி செலுத்த வேண்டிய அவசியமில்லாத பனாமா போன்ற சில நாடுகள் இருக்கின்றன. அங்கெல்லாம் யார் இந்தப் பணத்தைப் போட்டது? யார் இந்தப் பணத்தை வைத்திருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள முடியாத ஒரு முறை கடந்த 50, 60 ஆண்டுகளில் உருவாகியுள்ளது.

இது சில நாடுகளின் பொருளாதாரத்தையே பாதிக்கும் அளவுக்கு வளர்ந்துள்ளது. அது அமெரிக்கப் பொருளாதாரமாகவும் இருக்கலாம், ஃபிரான்ஸ் நாட்டு பொருளாதாரமாகவும் இருக்கலாம். எல்லா நாடுகளின் பொருளாதார அமைப்புகளையும் இந்த பதுக்கல் பாதிப்பதால், இந்த நாடுகள் இதில் தீவிர கவனம் எடுத்துக் கொண்டு, அப்படி பதுக்கப்பட்ட பணத்தை எப்படியாவது திரும்பக் கொண்டு வர வேண்டும் என்று முயற்சி எடுத்துக் கொண்டிருக்கின்றன.

இப்போது சில பேர், மனசாட்சியின் உந்துதல் காரணமாக, இப்படி பதுக்கப்பட்ட பணத்தைப் பற்றி துப்புக் கொடுக்கத் தொடங்கியுள்ளனர். அப்படி ஒருவர், லெக்ஸ்டன்ஸ்டைன் பேங்க் என்ற அமைப்பில் யார் யார் ரகசியக் கணக்கு வைத்திருக்கிறார்களோ, அவர்களைப் பற்றிய விவரங்களைக் கொடுத்திருக்கிறார். நம் நாட்டைச் சேர்ந்த 250 பேர் அங்கு பணம் வைத்திருக்கிறார்கள். ஜெர்மன் நாட்டின் நிதியமைச்சரும் இதுபற்றிக் கூறி, யார் வேண்டுமானாலும், இந்தக் கணக்கு வைத்திருப்பவர்களின் பெயர்களை எங்களிடம் கேட்டால் கொடுத்து விடுகிறோம் என்று சொன்னார். ஆனால், அவர் அப்படி சொன்ன பிறகும், இந்தப் பட்டியலைத் தாருங்கள் என்று நம் நாட்டிலிருந்து கேட்கவே இல்லை. எல்லோருக்கும் ஒரே ஆச்சரியம். உலகத்தில் பல நாடுகள், இந்த விவரங்களைக் கேட்கின்றன. ஆனால், கொடுக்கிறோம் என்று அவர்களே சொன்ன பிறகும், எங்களுக்கு அந்தப் பட்டியலைக் கொடுங்கள் என்று கடிதம் எழுதக் கூட இந்த அரசுக்கு நாதி இல்லையே என்று டைம்ஸ் ஆஃப் இண்டியா போன்ற பத்திரிகைகள் எழுதின (கைதட்டல்). பிறகு அரைகுறை மனதுடன் எங்களுக்கு அதைக் கொடுங்கள் என்று கேட்டார்கள். எப்படி கேட்டார்கள் என்றால், நமக்கும் அவர்களுக்கும் இடையில் உள்ள வருமான வரி தொடர்பான ஒப்பந்தத்தில் ஒரு ரகசிய ஷரத்து இருக்கிறது. அவர்கள் கொடுக்கிற எந்த விவரத்தையும் நாம் ரகசியமாக வைத்துக் கொள்ள வேண்டும். ஆனால், அவர்கள் வெளிப்படையாகத் தருகிறோம் என்று கூறியதை, ‘நீங்கள் ரகசியமாகக் கொடுங்கள்’ என்று கேட்டு வாங்கி, அந்த 250 பேர்களைப் பற்றிய விவரங்களை இந்த அரசு ரகசியமாகவே வைத்திருக்கிறது. அவர்கள் யார் யார் என்று நமக்குத் தெரியாது. அந்த 250 நபர்களின் பெயரில் இருக்கும் பணத்திற்கு அரசு வரி போடுகிறதா, அதை இங்கு கொண்டு வருவதற்கு முயற்சி செய்கிறதா என்பதைப் பற்றி இன்று வரை ஒரு விவரமும் இல்லை.


பூனாவைச் சேர்ந்த ஹசன் அலி என்பவர் வெளிநாட்டிலிருந்து குதிரைகளை இறக்குமதி செய்து, இங்கே அவற்றை விற்பனை செய்யும் தொழில் செய்பவர். அவருக்கு வருடத்திற்கு மிஞ்சிப் போனால், இரண்டு அல்லது மூன்று கோடி ரூபாய் லாபம் வரலாம். இவருடைய இடத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்தி, அவருடைய கணக்குகளை ஆராய்ந்த போது, அவருக்கு வெளிநாட்டில் 1,50,000 கோடி ரூபாய் இருப்பதாக பல தஸ்தாவேஜுகள் கிடைத்தன. அப்போது நிதியமைச்சராக இருந்தவர் ப.சிதம்பரம்.

இது ஒரு பெரிய பிரச்சனையாக உருவெடுத்தவுடன், ஆளும் கட்சிப் புள்ளிகள் பலருடைய விவரங்கள் இத்துடன் தொடர்புடையவையாக இருந்ததால், இது அப்படியே மறைக்கப்பட்டது. அவருடைய பெயரில் 76,000 கோடி ரூபாய் வரி போடப்பட்டு, அந்த வரித் தொகை அரசுக்குக் கிடைக்க வேண்டியது என்று டிமாண்ட் தயார் செய்திருக்கிறார்கள். ஆனால், அவர் பெயரில் இருந்த 1,50,000 கோடி ரூபாய் நம் நாட்டுக்குத் திரும்ப வருமா, வரி மூலமாக வருமா, இந்த விவரங்கள் எல்லாம் மூடி மறைக்கப்பட்டுள்ளன.

1991 நவம்பர் 11-ல், அதாவது ராஜீவ் காந்தி மறைந்து சிறிது காலத்திற்குப் பிறகு, ஸ்விஸ் இல்லஸ்ட்டிரியேட் என்ற பத்திரிகையில் – வளர்ந்து வரும் நாடுகளின் 16 தலைவர்களின் படங்களைப் பிரசுரித்து, அவர்கள் எல்லாம் அந்தந்த நாடுகளில் லஞ்சம் வாங்கி, அந்த லஞ்சப் பணத்தை இங்கே கொண்டு வந்து பதுக்கியிருக்கிறார்கள் என்று எழுதியிருந்தது. அந்தத் தலைவர்களின் வரிசையில் ராஜீவ் காந்தியின் படத்தையும் பிரசுரித்திருந்ததோடு, 2.2 பில்லியன் டாலர் இவருடைய கணக்கில் மறைத்து வைக்கப்பட்டுள்ளது என்ற செய்தியையும், அப்போது (1991 நவம்பர் 11-ல்) வெளியிட்டிருந்தது.

1998-ல் ஸ்டேட்ஸ்மேன் பத்திரிகையில் ஏ.ஜி. நூரானி இதுபற்றி முதன் முதலாக எழுதினார். அதன் பிறகு சுப்ரமண்யம் ஸ்வாமியும் வெப்சைட்டில் அந்தப் பத்திரிகையின் பக்கங்களை அப்படியே பிரசுரித்து, அவர் இதற்கு ஒரு ‘லிங்க்’கும் கொடுத்தார். ரஷ்ய உளவு அமைப்பான கே.ஜி.பி.யின் தஸ்தாவேஜுகளை வெளியே கொண்டு வந்த டாக்டர் ஆல்பர்ட்ஸ் என்ற ஒரு இன்ஸ்வெஸ்டிகேட்டிவ் ஜேர்னலிஸ்ட், ‘ராஜீவ் காந்தி எப்படி கே.ஜி.பி.யிடம் இருந்து ரகசியமாகப் பணம் பெற்றார்; ரஷ்யாவுடன் வியாபார சம்பந்தத்தின் மூலம் எப்படி ராஜீவ் காந்தியின் குடும்பத்திற்கு ஏராளமான பணம் கிடைத்தது’ என்பதையும் வெளியிட்டிருந்தார். அந்தப் பணம்தான் அங்கு (வெளிநாட்டில்) வங்கியில் இருக்கிறது என்று சுப்ரமண்யம் ஸ்வாமி 2002-ல் வெப்சைட்டில் வெளியிட்டிருந்தார்.

2009-ல் நான் இது பற்றியெல்லாம் விளக்கமாக எழுதியிருந்தேன். அதற்குப் பிறகு இப்போது இண்டியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை, இதையெல்லாம் தொகுத்து கோர்வையாக எழுதியிருந்தது. இந்தப் பின்னணியில், இந்த விவரங்கள் எல்லாம் தவறு என்றோ, இவை எல்லாம் அவதூறு என்றோ, எனக்கு அவமானம் ஏற்படுத்தி விட்டது என்றோ, ஒரு அவதூறு வழக்கை தொடர்வதற்கு சோனியா காந்திக்குத் தைரியமில்லை (பலத்த கைதட்டல்).

காங்கிரஸ் கட்சியிலும் யாரும் இதுபற்றி வாய் திறக்கவில்லை. சோனியா காந்தியும் எதுவும் கூறவில்லை. மூடி மறைக்க முயற்சி மட்டுமே நடக்கிறது. இப்போது இந்த சூழ்நிலையில் அதாவது அந்த 250 பேர் அடங்கிய பட்டியலில் ஆளும் கட்சியோடு சம்பந்தப்பட்ட புள்ளிகளின் பெயர்கள் உள்ளன. ஹசன் அலியின் 1.5 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டின் பின்னணியிலும், ஆளும் கட்சியின் முக்கிய புள்ளிகள் இருக்கிறார்கள். சோனியா காந்தி சம்பந்தப்பட்ட 2.2 பில்லியன் டாலர் பணத்தை அமெரிக்க பங்கு பத்திரத்தில் போட்டு வைத்திருந்தால், இன்றைக்கு அது 9 பில்லியன் டாலராக மாறி 45,000 கோடி ரூபாயாக விசுவரூபம் எடுத்திருக்கும். அந்தப் பணமும் இப்போது வெளிநாட்டில் இருக்கிறது.
இந்தச் சூழ்நிலையில் எந்த அதிகாரி, அல்லது எந்த மந்திரி, எந்த பிரதம மந்திரி, இந்தப் பணத்தையெல்லாம் திரும்ப நம் நாட்டுக்குக் கொண்டு வர முயற்சி செய்ய முடியும்? சோ கூறியது போல, யார் பதுக்கி வைத்திருக்கிறார்களோ அவர்கள் பதவியில் இருக்கிறார்கள். அவர்கள் பதவியில் இருந்து விலக்கப்பட்டால்தான், அந்தப் பணம் நம் நாட்டுக்குத் திரும்ப வர முடியும் (கைதட்டல்).

இன்னொன்று – வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கப்பட்டுள்ள 21 லட்சம் கோடி ரூபாயில் நான்கில் ஒரு பங்கு இங்கு திரும்பக் கொண்டு வரப்பட்டால், நம் நாட்டின் வளர்ச்சி 14 முதல் 15 சதவிகிதம் வரை உயரும் (கைதட்டல்). நம் நாட்டில் பணத் தட்டுப்பாடு நீங்கும். நம் நாட்டுக்கு இப்போதே பெரிய அளவில் வெளிநாட்டு முதலீடு தேவையில்லை.

அடுத்தது, இந்த 2-ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பற்றி எளிமையாகச் சொல்வதென்றால், கபில்சிபல் ஒரு வாதத்தை முன்வைத்துள்ளார். அதாவது, ‘பா.ஜ.க. அரசு கடைப்பிடித்த நடைமுறையைத்தான் தற்போதைய அரசு பின்பற்றியுள்ளது’ என்கிறார். இது முழுப் பூசணிக்காயை மறைக்கும் முயற்சி என்பது மட்டுமல்ல, இந்த அளவுக்கு கபில்சிபல் தன்னுடைய தரத்தைத் தாழ்த்திக் கொண்டு (கைதட்டல்), இந்த நாட்டுக்கே நிகழ்ந்துள்ள அவமானகரமான ஒரு விஷயத்தை, லஞ்ச ஊழலை மூடி மறைத்து வைத்துப் பேசுவார் என்று நான் நினைக்கவில்லை (கைதட்டல்). அவர் என்னுடைய நண்பர்.

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விஷயத்தில், பா.ஜ.க. அரசு கடைப்பிடித்த அணுகுமுறையில் எனக்கு ஒரு கருத்து வேறுபாடு உண்டு. 1994–ல் மெட்ரோவில் மட்டும் செல்லுலர் லைசென்ஸ்கள் கொடுக்கப்பட்டன. 1995–ல் ஏல முறைக்கு விட்டு, அதிக விலை நிர்ணயிக்கப்பட்டு, அதன் மூலம் பலர் லைசென்ஸ் பெற்றனர். அந்த நிறுவனங்கள் நஷ்டமடைய ஆரம்பித்தன. 1999–ல் பா.ஜ.க. ஆட்சியில் இருந்தபோது, கிட்டத்தட்ட 3700 கோடி ரூபாயை அந்த நிறுவனங்களால் அரசுக்குச் செலுத்த முடியாத நிலை இருந்தது. அந்நிறுவனங்களுக்குக் கொடுத்த கடனை வங்கிகளாலும் திரும்பப் பெற முடியவில்லை.

அதனால் அந்தச் சமயத்தில் ஏலத்தின் மூலம் இவ்வளவு பணத்தை நிர்ணயித்து, அதை அரசாங்கத்தால் பெற முடியாத சூழ்நிலை இருந்ததால், வருவாய் அடிப்படையில் என்ற முறையை அரசு கொண்டு வந்தது. அதாவது செல்லுலர் கம்பெனிகள் எவ்வளவு சம்பாதிக்கின்றனவோ, அந்த வருவாயில் எட்டு சதவிகிதத்தை அரசுக்குக் கொடுக்க வேண்டும் என்று நிர்ணயித்தது. மேலும், அந்தக் கம்பெனிகள் கொடுக்க வேண்டியிருந்த மீதித் தொகையை நுழைவுக் கட்டணமாக அரசு மாற்றியது. அப்படி முடிவெடுத்ததன் மூலமாகத்தான் செல்ஃபோன் சேவையில் ஒரு வளர்ச்சி ஏற்பட ஆரம்பித்தது (கைதட்டல்).

2001-ல் நம் நாட்டில் 1.3 கோடி பேர்தான் செல்ஃபோன் வைத்திருந்தார்கள். இந்த எண்ணிக்கை 2008-ல் 58 கோடியாக உயர்ந்துள்ளது. 2013-ல் கிட்டத்தட்ட 93 கோடியாக உயரப் போகிறது. ஆனால் 2003-ல் ஒரு தவறு நடைபெற்றது. அந்தத் தவறு அரசாங்கத்தால் அல்ல. ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு ஃபிக்ஸைட் ஃபோன் லைசென்ஸ்தான் கிடைத்தது. அப்போது செல்லுலர் லைசென்ஸுக்கு அவர்கள் போகவில்லை. ஆனால், அந்த நிறுவனம் ஒயர் இல்லாத ஃபோனை (கார்ட்லெஸ் போன்) வீட்டுக்குள் பயன்படுத்துவது போல, வெளியிலும் பயன்படுத்துகிற வகையில் அத்தகைய ஃபோன்களை விற்க ஆரம்பித்தார்கள். செல்லுலர் லைசென்ஸ் இல்லாமலேயே இப்படி செய்தார்கள். சட்டப்படி அரசால் இதை நிறுத்த முடியவில்லை. கோர்ட்டும் நிறுத்த முடியவில்லை. கிட்டத்தட்ட 50 லட்சம் சந்தாதாரர்களை அந்த நிறுவனம் சேர்த்து விட்டது.

அவர்களையும் இந்த செல்லுலர் லைசென்ஸ் முறையின் கீழ் கொண்டு வருவதற்காக 2003–ல்அருண்ஷோரி – நாணயமான அமைச்சர் (கைதட்டல்) – அவருடைய நாணயத்தைப் பற்றி யாரும் குறை சொல்ல முடியாது. அவருக்கும் எனக்கும் கருத்து வேறுபாடு உண்டு. அதை இண்டியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் முதல் பக்கத்திலேயே அவர் செய்தது தவறு என்று எழுதியிருக்கிறேன். ரிலையன்ஸ் நிறுவனத்திடம் 10,000 கோடி ரூபாயை அபராதமாக வசூலித்திருக்க வேண்டும் என்பது என் கருத்து. ஆனால், 1,500 கோடி ரூபாயைத்தான் அபராதமாக அவர் விதித்தார். அதில்தான் நான் தவறு காண்கிறேன்.
மற்றபடி அந்த அரசாங்கம் செய்த எந்த முடிவும் தவறானதல்ல. மேலும், பா.ஜ.க. ஆட்சியின்போது மந்திரிசபை கூட்டத்தின் மூலம்தான் முடிவுகள் எடுக்கப்பட்டன (கைதட்டல்). எந்தத் தனி மந்திரியும் எந்த முடிவும் எடுக்கவில்லை (கைதட்டல்). யாரையும் விரல் சுட்டி இன்னார் தப்பு செய்தார் என்று கூற முடியாது. இன்னார் லஞ்சம் வாங்கினார் என்று கூற முடியாது. இதை என்னால் அறுதியிட்டுச் சொல்ல முடியும். அப்போது எடுக்கப்பட்ட ஒரு முடிவில் கருத்து வேறுபாடு எனக்கு இருந்தாலும், அதில் லஞ்சம் இருந்தது என்றோ, முறைகேடுகள் நடந்தது என்றோ சொல்வதற்கு இடமில்லை.

ஆனால், 2001–ல் 1.3 கோடி பேர் மட்டும் செல்ஃபோன் பயன்படுத்தி வந்த நேரத்தில், என்ன விலைக்கு உரிமத்தைக் கொடுத்தார்களோ, அதே முறையில் 58 கோடி பேராகப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து விட்ட நிலையில், இன்னும் இரண்டு மடங்கு அந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்று வளர்ச்சி இருந்த நேரத்தில், ஏன் பழைய முறை? அதுவும் 2006–க்குப் பிறகு, எல்லா செல்ஃபோன் கம்பெனிகளுக்கும் நல்ல லாபம் என்பதை மறந்து விடக் கூடாது. அந்தக் கம்பெனிகளின் பங்குகளின் விலையெல்லாம் உயர ஆரம்பித்தன. நம் நாட்டுக்குச் செல்ஃபோன்களை விற்பதற்கும் சரி, இங்கு முதலீடுகளைச் செய்வதற்கும் சரி, வெளிநாட்டு நிறுவனங்கள் வரிசையில் நின்று கொண்டிருந்த நேரம் அது.

செல்ஃபோன் வியாபாரமும் அதிகமாகி விட்டது, லாபமும் அதிகமாகி விட்டது. ஆனால், லைசென்ஸ்களை மட்டும் பழைய விலைக்கே அதாவது சுமார் 1,600 கோடி ரூபாய்க்கே விற்று விட்டார்கள். ஏன் இந்த முடிவு? இது ஏதோ ரகசியமாக நடக்கவில்லை. எப்படி நடந்தது என்று கூறுகிறேன்.

சென்னையில் உள்ள ஒரு நிறுவனத்தைச் சேர்ந்தவர், என்னிடம் வந்து கேட்டார். ‘அரசாங்கம் குறிப்பிட்ட அந்த 25–ஆம் தேதிக்கு முன் என்னால் அப்ளிகேஷன் போட முடியவில்லை. 1,600 கோடி ரூபாய்க்கு இந்த லைசென்ஸை கொடுக்கிறார்களே, இதனுடைய விலை கிட்டத்தட்ட 13,000 கோடி ரூபாய்’ என்று சொன்னார். ‘எப்படி ஸார் இப்படி சொல்கிறீர்கள்’ என்று கேட்டேன். அவர் இந்தத் தொழில் சம்பந்தப்பட்ட அட்டவணையையெல்லாம் போட்டுக் காண்பித்தார். அவர் 13,000 கோடி ரூபாய் கொடுத்தால் கூட வெளிநாட்டுக்காரர்கள், அந்த விலைக்கு முதலீடு செய்ய தயாராக இருப்பது பற்றி விவரங்களுடன் எனக்குச் சுட்டிக் காட்டினார். இதன் பிறகு, அவர் நவம்பர் 2007–ல் அரசுக்கு ஒரு கடிதம் எழுதினார். ‘நான் 13,600 கோடி ரூபாய் கொடுக்கத் தயார்’ என்று. எதை அரசு 1,600 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ததோ, அதற்கு 13,600 கோடி ரூபாய் தரத் தயார் என்று கூறி பேங்க் கேரண்டியும் கொடுத்தார். அதற்குப் பிறகு ஜனவரி 2008-ல் இதே லைசென்ஸை 1,600 கோடி ரூபாய்க்கு விற்கிறோம் என்று பிடிவாதமாக விற்றார்கள்.

இது போஃபர்ஸ் போல ஏதோ ஒரு இருட்டறையில் உட்கார்ந்து கொண்டு செய்யப்பட்டது அல்ல. வெளிப்படையாக எல்லோர் எதிரிலும் நடந்துள்ள ஒரு விஷயம். 2007–ஆம் ஆண்டு நவம்பர் 3– ஆம் தேதி அமைச்சர் ராசாவுக்கு பிரதமர் கடிதம் எழுதுகிறார். நீங்கள் செய்வது தவறு என்று தெரிந்த பிறகு, இப்படிச் செய்யக் கூடாது என்று கடிதம் எழுதுகிறார். அன்று இரவே ராசா அதற்கு பதில் எழுதுகிறார். ‘நான் செய்வது சரி என்றுதான் எனக்குத் தோன்றுகிறது’ என்று. சோ கூறியது போல, பிரதமர் தவறு என்று சுட்டிக் காட்டியதை, ஒரு அமைச்சர் எனக்குச் சரி என்றுதான் தோன்றுகிறது என்று நான்கு மணி நேரத்திற்குள் பதில் எழுதுகிறார். அந்தக் கடிதத்தை எழுதிக் கொடுத்தது யார் என்றால், இப்போது அட்டர்னி ஜெனரலாக இருப்பவர், அப்போது ஸொலிட்டர் ஜெனரலாக இருந்தார். அவர்தான் அந்தக் கடிதத்தைத் தயாரித்துக் கொடுத்தார். சட்ட அமைச்சகம், இதைத் தவறு என்று கூறுகிறது. ஆனால், அதே துறையைச் சேர்ந்த சட்ட வல்லுனர்கள் ‘நடந்தது சரிதான்’ என்று எழுதிக் கொடுக்கிறார்கள். இதெல்லாம் வெளிப்படையாக நடக்கிறது.

பிறகு இரண்டு மாதங்கள் பிரதமர் அமைதியாக இருக்கிறார். திடீரென்று ஜனவரி நான்காம் தேதி பிரதமர் முழித்துக் கொண்டு, ‘உங்கள் கடிதத்தைப் பார்த்தேன்’ என்று மட்டும் எழுதியிருக்கிறார் (சிரிப்பு, கைதட்டல்). இதற்கு என்ன அர்த்தம் என்று தெரியவில்லை. இதன் பிறகு பத்தாம் தேதி வாக்கில் எல்லாவற்றையும் அமைச்சர் முடித்து விட்டார். ஆக, பிரதமருக்குத் தெரியாமல், பிரதம மந்திரியிடம் கூறாமல், அவருக்குப் பின்னால் எதுவும் நடக்கவில்லை. பத்திரிகைகளுக்குப் பின்னால் எதுவும் நடக்கவில்லை. பாராளுமன்றத்தின் பார்வையில் படாமல் எதுவும் நடக்கவில்லை. இந்தக் கொள்ளை வெளிப்படையாக, பகற்கொள்ளையாகத்தான் நடந்துள்ளது (கைதட்டல்).

2009 அக்டோபர் 29-ஆம் தேதி தொலைத் தொடர்புத் துறை அலுவலகத்தை ஸி.பி.ஐ. சோதனையிடுகிறது. அப்போது ராசாவை பதவி விலகுமாறு கோருகிறார்கள். ‘நான் ஏன் ராஜினாமா செய்ய வேண்டும்? பிரதமரிடம் கலந்து ஆலோசித்துத்தான் நான் இதைச் செய்திருக்கிறேன்’ என்று ராசா கூறினார். இதுபற்றி பிரதம மந்திரி வாயே திறக்கவில்லை. கடைசியாக – ஐந்து மாதம் கழித்து – பத்திரிகையாளர்களை அவர் சந்தித்தபோது, ‘நான் பிரதமரைக் கலந்து பேசித்தான் செய்தேன்’ என்று ராஜா கூறுகிறாரே’ என்ற கேள்வியைக் கேட்டார்கள். அப்போது பிரதமர், ‘அவர் இதுபற்றி என்னிடம் பேசினார்’ என்றார். அதாவது பிரதம மந்திரியைக் கலந்துதான் ராஜா இப்படிச் செய்திருக்கிறார் என்று பிரதமர் ஒப்புக் கொண்டிருக்கிறார். இந்த ஊழலில் எந்த அளவுக்கு பணம் பண்ணியிருக்கிறார்கள் என்பதற்கு ஒரு உத்தேச மதிப்பீட்டைப் பார்ப்போம்.
லைசென்ஸ் பெற்றுள்ள ஆறு கம்பெனிகளுக்கும், தொலைத் தொடர்புத் துறைக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அந்தக் கம்பெனிக்காரர்கள் செய்வது கட்டிடம் கட்டுவது, புரோக்கர் தொழில் போன்றவை. தொலைத் தொடர்புத் துறைக்குச் சம்பந்தமில்லாதவர்கள். இவர்கள் ஒவ்வொருவரும் 300 கோடி ரூபாய் கொடுக்க வேண்டும் என்று பேரம் பேசப்பட்டது.

அது தவிர, இந்தப் புது லைசென்ஸ் பெற்ற கம்பெனிகள் 20 சதவிகித பங்குகளை விட்டுத் தர வேண்டும். இந்த 20 சதவிகிதப் பங்குகளை ரூபாயில் பார்த்தால் இன்றைய மதிப்பு 2,500 முதல் 3,000 கோடி ரூபாய். ஆக, இந்த ஆறு கம்பெனிகளுக்கும் சேர்த்துப் பார்த்தால், பங்குகள் வழியாகக் கிடைத்த தொகை மற்றும் ஆரம்ப லஞ்சம், எல்லாமாகச் சேர்ந்து 25,000 கோடி ரூபாய் வருகிறது. மீதி ஐந்து பழைய கம்பெனிகளுக்குக் கொடுக்கப்பட்ட லைசென்ஸுக்கு எவ்வளவு என்று அனுமானம் இல்லை. இது ஒரு மிகப் பெரிய ஊழல்.

இதில் நிச்சயமாக சோனியா காந்திக்கு பங்கு இருக்கிறது (பலத்த கைதட்டல்). பிரதம மந்திரி இதைச் செய்யக்கூடாது என்று சொன்ன பிறகு, யாரோ அவரிடம் ‘நீங்கள் இதில் தலையிட வேண்டாம்’ என்று சொன்ன பிறகுதான் பிரதமர், ‘உங்கள் கடிதத்தை பார்த்து விட்டேன்’ என்று சொல்ல வேண்டி வந்தது.

அப்போது கூட அவரால், ‘நீங்கள் செய்வது சரியல்ல’ என்று திரும்பவும் எழுத முடியவில்லை. அதே சமயம், ‘சரி செய்யுங்கள்’ என்று சொல்லவும் அவருக்கு தைரியம் இல்லை. ஆசிரியர் சோ கூறியது போல யாரோ ஒருவர் பிரதம மந்திரியிடம் ‘நீங்கள் இதில் தலையிடாதீர்கள்’ என்று சொல்லியிருக்க வேண்டும். அப்படி சொல்லக் கூடியவர் ஒருவர், யாராவது அந்தக் கட்சியில் இருக்கிறார் என்றால், அது சோனியா காந்திதான். எனக்கு இதெல்லாம் கூட அனுமானம்தான்.

ஆனால், எப்போது கபில்சிபல் முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல, இதில் எந்தத் தவறும் நடக்கவில்லை என்று கூறினாரோ, அப்போதே சோனியா காந்திக்கும், காங்கிரஸுக்கும் இதில் பங்கு இருக்கிறது என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லாமல் போயிற்று (கைதட்டல்). இந்த ஊழலில் முதலில் பலியாகப் போவது தி.மு.க. அரசாங்கமானால், இதற்கு ஒரு வழி பிறக்கும் (கைதட்டல்). இல்லை யென்றால் இது அப்படியே மூடி மறைக்கப்படும். தி.மு.க. ஆட்சி இங்கு (தமிழ்நாட்டில்) மறுபடியும் வருவதற்கு வாய்ப்பு ஏற்பட்டு விட்டால், இந்த 2-ஜி ஊழல் அப்படியே மூடி மறைக்கப்படும். மாறாக, 2-ஜி ஊழல் காரணமாக தி.மு.க. அரசு பலியானால், நாட்டிலேயே 2-ஜி குறித்து பெரிய விழிப்புணர்வு ஏற்பட்டு, எப்படி போஃபர்ஸ் ஊழல் எல்லா இடங்களிலும் பரவி, அதன் காரணமாக ஒரு பிரதம மந்திரியின் ஆட்சியே முடிவடைந்ததோ, எப்படி காங்கிரஸே ஆட்சியை விட்டு இறங்கியதோ, அதுபோல இதிலும் வாய்ப்பிருக்கிறது. தமிழ்நாடுதான் 2-ஜிக்கு ஒரு டெஸ்ட் என்று கூறி விடைபெறுகிறேன். வணக்கம். 
நன்றி :துக்ளக் 10 /02 /2011