கடந்த நூற்றாண்டில் உலகில் எத்தனை எத்தனையோ நாடுகளில் சுதந்திரப் போராட்டங்கள் நடந்தன. போராட்டம் வெற்றியடைந்து சுதந்திரம் கிடைத்த நாடுகள் பல. ஆனால், இந்திய சுதந்திரப் போராட்டத்தைப்போல வித்தியாசமான போராட்டம் அமையவில்லை. இந்த அளவுக்குக் கனவுகளுடனும், லட்சியங்களாலும் அமைந்த ஒரு சுதந்திர தேசமும் கிடையாது.
அனைவருக்கும் பேச்சுரிமை என்கிற அடிப்படைக் கோட்பாடின்மேல் ஓர் அரசியல் சட்டம் உருவாக்கப்பட்டது. ஏனைய நாடுகளில் பத்திரிகைகளுக்கு என்று தனியாக சில உரிமைகள் தரப்பட்டுள்ளன. இந்திய அரசியல் சட்டத்தில் ஒவ்வோர் இந்தியக் குடிமகனுக்கும் அந்த உரிமைகள் வழங்கப்பட்ட அதிசயத்தை உலகமே பார்த்து வியந்தது. பரிபூரண பேச்சுரிமையும், எழுத்துரிமையும் ஒவ்வோர் இந்தியக் குடிமகனுக்கும் அளிக்கப்பட்டிருக்கிறது.
அரசியல் நிர்ணய சபையின் விவாதங்களைப் படித்துப் பார்த்தால் அந்த மாமேதைகள் வருங்கால இந்தியா பற்றி எந்த அளவுக்கு நம்பிக்கை வைத்திருந்தார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளும்போது வெட்கத்தில் தலைகுனிந்து நிற்கத்தான் முடிகிறது.
கட்டுப்பாடு இல்லாத சுதந்திரத்தை, அதிகம் கல்வி அறிவு இல்லாத ஓர் ஏழை நாட்டு மக்களுக்கு அளிக்கும்போது அந்தச் சுதந்திரம் தவறாகப் பயன்படுத்தப்படும் என்று கவலைப்படாமல், அதனால் உறுதி செய்யப்படும் என்று அவர்கள் நம்பினார்கள். அந்த நம்பிக்கையை நாம் தகர்த்துக்கொண்டு வருகிறோம் என்பதைப் பார்க்கும்போது மனம் கூனிக் குறுகுகிறது.
எந்தவிதத் தணிக்கையும் இல்லாமல், இந்தக் கருத்தை வெளியிட்டால் என்ன ஆகுமோ என்கிற தயக்கமோ, பயமோ இல்லாமல் பேசவும், எழுதவும் முடிவதற்குப் பெயர்தான் சுதந்திரம். ஆனால், கருத்து சுதந்திரம் அளிக்கப்படுவது சமுதாயத்தின் வளர்ச்சிக்காகவும், நன்மைக்காகவும் அமைய வேண்டும். சுதந்திரத்தின் ஆதார சுருதியே நன்மையும், வளர்ச்சியுமாக மட்டும்தான் இருக்க வேண்டுமே தவிர, துவேஷமும், வன்முறையைத் தூண்டுவதும், தனிமனிதத் தாக்குதலுமாக இருக்க முடியாது.
கையிலே பேனா இருக்கிறது, காட்சி ஊடகம் தனிச் சொத்தாக அமைந்துவிட்டது என்பதற்காகத் தனிநபர் தாக்குதலில் ஈடுபடும் தரக்குறைவைத் தனிமனித சுதந்திரம் என்கிற அரசியல் சட்டம் அளிக்கும் பாதுகாப்பின் பின்னால் ஒளிந்துகொண்டு செய்ய முற்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. கருத்து சுதந்திரம் என்பது ஆரோக்கியமான விவாதத்துக்கு வழிகோலுவதாக இருப்பதற்காகத்தானே தவிர, தரக்குறைவான தாக்குதலுக்குப் பயன்படுத்துவதற்காக அல்ல.
அரசின் கொள்கை முடிவுகளை, செயல்திட்டங்களை, முறைகேடான நிர்வாகத்தை எதிர்த்துக் குரல் கொடுப்பதற்காக, விமர்சனம் செய்வதற்காக, இடித்துரைப்பதற்காகச் சுதந்திரம் பயன்படுத்தப்படும்போது அது அரசியல் சட்டத்தின் ஆதார சுருதியைச் சார்ந்ததாக இருக்கும். அதே சுதந்திரத்தை இழிவான முறையில் தனிநபர் தாக்குதலில் ஈடுபடப் பயன்படுத்தும்போது அதைவிடக் கீழ்த்தரமான கயமைத்தனம் வேறெதுவும் இருக்க முடியாது.
அரசியல்வாதிகளுக்கு, அதிகாரவர்க்கத்தைச் சேர்ந்தவர்களுக்கு, நீதித்துறையினருக்கு இல்லாத கடமையுணர்வும் பொறுப்புணர்வும் பத்திரிகையாளர்களுக்கு உண்டு. இவர்கள் சிந்தனாவாதிகள். சமுதாயம் இவர்களை வழிகாட்டிகளாகப் பார்க்கிறது. மேலே சொன்ன மூன்று பிரிவினரின் முடிவுகளையும் தவறுகளையும் சுட்டிக்காட்டி வழிநடத்தும் பொறுப்பைத் தங்களுக்குத் தாங்களே எடுத்துக்கொண்டவர்கள் இவர்கள். அதனால்தான் “படித்தவன் தவறு செய்தால் அய்யோ அய்யோவென்று போவான்’ என்று மகாகவி பாரதி சொன்னார்.
இறந்துபோன இருவரிடம் காலம்சென்ற ஒருவர் எப்போதோ சொன்னதாக ஓர் ஆதாரமற்ற அவதூறுச் செய்தியை அட்டைப்படச் செய்தியாக்கித் தனது பத்திரிகை விற்பனையை அதிகரித்துக்கொள்ள நினைப்பது என்பதே தவறு. அதைவிடப் பெரிய தவறு, பொறுப்பான பதவியில் இருப்பவரைத் தனிப்பட்ட முறையில் இழிவுபடுத்தி அவரது பெயருக்குக் களங்கம் கற்பிக்க விரும்புவது. இப்படிச் செய்பவர்களைப் பத்திரிகையாளர்கள் என்று ஏற்றுக்கொள்வதே அவமானம்.
“சீ, இதுவும் ஒரு பிழைப்பா?’ என்று ஏனைய பிரிவினர் கேட்கிறார்களோ இல்லையோ நிச்சயமாகப் பத்திரிகையாளர்கள் அவர்களிடம் கேட்க வேண்டும். அதுபோன்ற பத்திரிகைகளையும், பத்திரிகையாளர்களையும் தனிமைப்படுத்தி அகற்றி நிறுத்த வேண்டும். அதுதான் பத்திரிகை தர்மம்.
சரி, இப்படித் தரக்குறைவாக எழுதுபவர்களை எப்படி எதிர்கொள்வது? அதிலும் ஆளும்கட்சியாக இருக்கும் ஓர் அரசியல் இயக்கம், மக்கள் மத்தியில் மிகப்பெரிய செல்வாக்குள்ள, தொண்டர்கள் பலமும் உள்ள இயக்கம் இந்தப் பிரச்னையை எதிர்கொள்வது எப்படி?
கட்சித் தொண்டர்கள் கொதித்தெழுவார்கள். எழுந்தார்கள். உண்மை. அப்படிக் கொதித்தெழும் தொண்டர் கூட்டத்தைத் தடுத்து நிறுத்திச் சட்டம் தனது கடமையைச் செய்யும் என்று அமைதிப்படுத்தும் கடமை அரசியல் தலைமைக்கு உண்டு. அதிலும், ஆட்சி அதிகாரத்தில் இருக்கும்போது கட்சித் தொண்டர்களைவிட நிர்வாகம் விரைந்து செயல்பட்டிருக்க வேண்டும்.
அப்படிச் செய்யாமல் போகும்போது, ஏதோ நமது தலைமைக்கு இதுபோன்ற அராஜகமும், வன்முறையும் பிடிக்கிறது போலிருக்கிறது என்று தொண்டர்கள் கருதவும், உன்னைவிட நான்தான் அதிகமான விசுவாசி என்று தலைமைக்குக் காட்ட வேண்டும் என்கிற வேகம் எழுவதற்கும் வாய்ப்பளித்ததாகி விடும். நல்லவேளை உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படாமல் போனது யார் செய்த புண்ணியமோ? அப்படி நடந்திருந்தால் தீராப்பழி தொண்டர்களுக்கு ஏற்பட்டிருக்காது, கட்சித் தலைமைக்கு, அதாவது முதல்வருக்கு ஏற்பட்டிருக்கும்.
ஈழத்தமிழர் படுகொலைக்குக் காரணம் இலங்கை அதிபர் ராஜபட்ச என்பதுதான் நமது கருத்தும். அதற்காக அவரது உறவினர் ராமேசுவரத்துக்கு சுவாமி தரிசனத்துக்கு வந்தால் கும்பலாகப் போய் தாக்குவது என்ன நியாயம்?
முல்லைப் பெரியாறு பிரச்னையில் கேரள அரசின் நிலைப்பாட்டை நாம் வன்மையாக எதிர்க்கிறோம்தான். அதற்கெனப் புத்தகக் கண்காட்சியில் மலையாளப் பத்திரிகையான “மலையாள மனோரமா’ அரங்கம் அமைக்கக்கூடாது என்று ஒரு கும்பல் ஆர்ப்பாட்டம் செய்வதும் அந்த அரங்கம் மூடப்படுவதும் என்ன நியாயம்?
சுதந்திரம் இங்கே தவறாகப் பயன்படுத்தப்படுகிறது. சுதந்திரம் என்கிற பெயரில் பத்திரிகைகள் பொறுப்பற்றதனமாகத் தரம்கெட்ட முறையில் தனிமனிதத் தாக்குதலில் ஈடுபடுவது எந்த அளவுக்குக் கண்டிக்கத் தக்கதோ அதே அளவு கண்டனத்துக்கு உரியது வன்முறைக் கும்பல்கள் சட்டம் ஒழுங்கைக் கையில் எடுத்துக் கொள்வதை அனுமதிப்பதும்!
பத்திரிகைகள், அரசியல்வாதிகள், ஆட்சியாளர்கள், பொதுமக்கள் இவர்கள் அனைவரும் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டிய உண்மை ஒன்று இருக்கிறது. அது “இதுவல்ல சுதந்திரம்’ என்பதை!