லோக்பால் மசோதா

லோக்பால் என்றசொல்லுக்கு ‘மக்கள் மன்றம்’ அல்லது ‘மக்கள் நீதிமன்றம்’ என்று பொருள் கொள்ளலாம், தவறிழைக்கும் அரசியல்வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் முன்மொழியப்பட்டதுதான் இந்த லோக்பால் மசோதா. இந்தியாவில் அனைத்து மட்டங்களிலும் மலிந்திருக்கும் ஊழலை அறவே ஒழிக்கும் வகையிலும், அடிமட்ட ஊழியர் முதல் பிரதம மந்திரி வரை ஊழல் புரியும் அனைவரையும் விசாரணைக்கு உட்படுத்தும் வகையில் லோக்பால் சட்டத்தில் உரிய திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும் என்பதுதான் இப்போது எழுந்துள்ள கோரிக்கை.


இந்த கோரிக்கையை வலியுறுத்திதான் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டிருந்தார் சமூக சேவகர் அண்ணா ஹசாரே அவர்கள். அவரது முக்கியமான கோரிக்கை என்னவென்றால் லோக்பால் சட்டத்தின் திருத்த வடிவை உண்டாக்க ஒரு கூட்டுக்குழுவை அமைக்க வேண்டும் என்பதும், அந்தக் கூட்டுக்குழுவில் பாதிபேர் மக்களின் பிரதிநிதிகளாக இருக்க வேண்டும் என்பதுவும்தான். வரும் ஆகஸ்டு 15ம் தேதிக்குள், அதாவது சுதந்திர தினத்திற்குள், லோக்பால் மசோதா நிறைவேற்றப்பட்டு லோக்பால் சட்டம் கொண்டுவரப்படும் என்று அரசு உறுதி கூறியுள்ளது.

அரசுத்துறை அதிகாரிகள் மீது சுமத்தப்படும் ஊழல், மெத்தனம், பாரபட்சம் போன்றகுற்றச்சாட்டுகளை விசாரிக்கும் கோர்ட் போன்றஅமைப்புதான் லோக்பால் என்பது. லோக்பாலின் செயல்பாடுகள், அதிகாரங்கள் போன்றவற்றை நிர்ணயிக்கும் சட்டம்தான் லோக்பால் சட்டம். லோக்பால் சட்டம் என்பது இன்று நேற்று முளைத்த பிரச்சனை அல்ல, பல்லாண்டு கால பிரச்சனை. 1966-ல் முதன்முதலாக நிர்வாகச் சீர்திருத்த கமிஷன் சில பரிந்துரைகளை அரசுக்கு அளித்தது. அந்தப் பரிந்துரையில் மத்திய அரசுக்கு லோக்பால் அமைப்பும் மாநில அரசுகளுக்கு லோக் ஆயுத்தா என்றஅமைப்பும் தேர்தல் ஆணையம் போல சுயேச்சையாக செயல்பட்டு ஊழல் புகார்களை விசாரிக்க ஏற்படுத்தப்பட வேண்டும் என்று சொல்லப்பட்டது. லோக் ஆயுக்தா என்பது மாநில அளவில் லோக்பாலுக்கு இணையான அமைப்பு. 1968ல் லோக்பால் மசோதா மக்களவையில் கொண்டு வரப்பட்டது. அது சட்டமாக மாற மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட வேண்டும். ஆனால் அந்த மசோதா கிடப்பில் போடப்பட்டது. அதன் பிறகு 1971, 1977, 1985, 1989, 1998, 2001 ஆண்டுகளில் 8 முறை தாக்கல் செய்யப்பட்ட மசோதா இதுவரை சட்ட வடிவம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஹசாரேவின் உண்ணாவிரதத்துக்கு முந்தைய சட்ட வடிவில் உள்ள மசோதாவில் பல குறைபாடுகள் உள்ளன. பொதுமக்களிடமிருந்து நேரடியாக புகார்களை பெறஅதிகாரம் இல்லை, புகார்களை பெறுவதற்கென நியமிக்கப்படும் எம்,பி,-க்கள் மூலமாகத்தான் புகார்களை பெறவேண்டும். புகார்களை விசாரித்து நடவடிக்கை எடுக்க முடியாது, சிபாரிசு மட்டுமே செய்ய முடியும். ஊழல் குற்றம் நிரூபிக்கப்பட்டு, சிறைத் தண்டனைப் பெற்றாலும், ஊழல் செய்தவர் ஊழல் மூலமாக சம்பாதித்த சொத்துக்களை அனுபவிக்க தடை ஏதும் விதிக்கப்படவில்லை.

ஆனால் உண்ணாவிரதத்தின் வாயிலாக வலியுறுத்தப்படும் லோக்பால் சட்டம் உருவானால் ஊழல் செய்யும் அரசு அதிகாரிகள் மீது பொதுமக்கள் புகார் கொடுக்கலாம். அந்தப் புகாரை விசாரித்து லோக்பால் விரைந்து நடவடிக்கை எடுக்கும். யாரிடமும் அனுமதி பெறவேண்டிய அவசியம் இல்லை. ஊழல் நிரூபிக்கப்பட்டால், ஊழலில் சம்பந்தப்பட்ட அனைவரிடமிருந்தும் இழப்பீடு பெறப்பட்டு, அரசுக்கு ஏற்பட்ட இழப்பை சரிகட்ட முடியும்.

தற்போது அரசு அதிகாரிகள் மீதான ஊழல் வழக்குகளில் ‘இந்திய தண்டனை சட்டம் 1860′ மற்றும் ‘ஊழல் தடுப்பு சட்டம் 1988′ ஆகியன பயன்படுத்தப்படுகின்றன. ஊழல் புரிந்தோர் மீது காவல் துறையோ, வேறு புலனாய்வுத்துறையோ நடவடிக்கை எடுக்க மாநில மற்றும் மத்திய அரசுகளிடமிருந்து அனுமதி பெறவேண்டும். அரசின் நிர்வாகத்துறையைப் பொறுத்தவரை மத்திய புலனாய்வு துறை மற்றும் ஊழல் கண்காணிப்பு துறை ஆகிய இரண்டு மட்டுமே ஊழல் வழக்குகளை கையாள்வதில் பிரதானமாக செயல்படுகின்றன.

இந்த லோக்பால் சட்டம் நிறைவேற்றப் பட்டால், இச்சட்டம் அரசின் சட்டத்துறை மற்றும் நிர்வாகத்துறையின் கலவையாக இருக்கும். புகார்களைப் பெற்று விசாரணை நடத்துவதில் நிர்வாகத் துறையைப் போன்றும், தண்டனைக் கொடுப்பதில் நீதித் துறையைப் போன்றும் செயல்படும். காலதாமதம், அலைக்கழிப்பு ஏதும் இல்லாமல் ஒரே இடத்தில் தீர்வு கிடைக்கும்.

இன்னும் எளிமையாகச் சொல்ல வேண்டுமானால், லோக்பால் அமைப்புக்கு காவல்துறை அந்தஸ்து வேண்டும் என்று ஹசாரேயின் வரைவு மசோதா வலியுறுத்துகிறது. ஒருவர் மீது குற்றம்சாட்டி, கைது செய்து, அவர்கள் மீது வழக்கு தொடுக்க இந்தியாவில் இரண்டு அமைப்புகளிடம்தான் அதிகாரம் உள்ளது. ஒன்று மாநில காவல் துறை, மற்றொன்று மத்திய சி.பி.ஐ. லோக்பால் மசோதா நிறைவேற்றப்பட்டால் லோக்பால் இந்த வரிசையில் மூன்றாவது அமைப்பாக இருக்கும்.

லோக்பால் மசோதா தயாரிப்புக்காக கூட்டுக்குழு அமைக்கப்பட்டு உள்ளது. அரசு தரப்பில் ஐந்து பேரும், பொதுமக்கள் தரப்பில் ஐந்து பேரும் அங்கம் வகிப்பர். அரசு தரப்பில் அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி (தலைவர்), சிதம்பரம், வீரப்ப மொய்லி (ஒருங்கிணைப்பாளர்), கபில்சிபில், சல்மான் குர்ஷித் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். பொதுமக்கள் பிரதிநிதிகளாக அன்னா ஹசாரே, சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி சந்தோஷ் ஹெக்டே, முன்னாள் சட்ட அமைச்சர் சாந்தி பூஷன் (இணைத்தலைவர்), வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் மற்றும் தகவல் உரிமை சட்ட ஆர்வலர் அர்விந்த் கெஜ்ரிவால் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்தக்குழு ஜுன் மாதம் 30ம் தேதிக்குள் மசோதா தயாரிப்பு பணிகளை முடிக்கும்.

ஒரு சராசரி இந்தியக் குடிமகனின் மனக்குமுறலை அண்ணா ஹசாரே வெளிப்படுத்தியிருக்கிறார். மக்கள் குரலே மகேசன் குரல். அந்த வகையில் பார்த்தால் அண்ணா ஹசாரேவின் குரல் மக்கள் குரலே. அண்ணா ஹசாரே மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்தவர். இந்திய ராணுவத்தில் ஓட்டுனராக பணிபுரிந்தவர். ராணுவத்திலிருந்து விருப்ப ஓய்வு பெற்று முழு நேர சமூக சேவகராக உள்ளார். ‘ஊழலுக்கு எதிராக மக்கள் இயக்கம்’ என்றஅமைப்பை ஏற்படுத்தி பல போராட்டங்கள் நடத்தியவர். தகவல் பெறும் உரிமைச் சட்டத்தை செயல்படுத்த அரும்பாடுபட்டவர். இவருக்கு சொத்து இல்லை, வங்கியில் சேமிப்பு இல்லை.

இந்தியாவின் ஊழல் வரலாறு சுதந்திரம் பெற்றசில மாதங்களிலேயே அதாவது 1948ம் ஆண்டே தொடங்கிவிட்டது. ராணுவத்திற்காக ஜீப் வாங்கியதில் முறைகேடு நடந்ததாக இங்கிலாந்தில் இந்தியத் தூதராக இருந்த வி,கே,கிருஷ்ணமேனன் மீது குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் அந்தக் குற்றச்சாட்டு விசாரிக்கப்படவேயில்லை. அவரை 1956ல் மத்திய அமைச்சரவையில் இலாகா இல்லாத மந்திரியாக நியமித்தது இந்திய அரசு. அன்று முதல் இன்று வரை 1981 போபர்ஸ் பீரங்கி பேர ஊழல், 1990 ஹர்ஷத் மேத்தா பங்குச் சந்தை ஊழல், 1996 கார்கில் சவப்பெட்டி ஊழல், 2ஜி அலைக்கற்றை ஊழல், காமன்வெல்த் போட்டிகள் ஊழல், ஆதர்ஷ் வீடு ஒதுக்கல் ஊழல் என ஊழல் தொடர்கதையாகி விட்டது.

இந்தியா விடுதலை பெற்று 60 ஆண்டுகளுக்கு மேலாகியும் ஊழலுக்காக தண்டனை பெற்றஅமைச்சர்கள், உயர் அதிகாரிகள், நீதிபதிகள் ஒரு சிலர் மட்டுமே. பெரும்பாலான அமைச்சர்கள் அடிப்படையில் ஏழ்மையிலிருந்து அரசியலுக்கு வந்தவர்கள். ஆனால் இன்று அவர்கள் பல கோடி ரூபாய் சொத்துக்கு அதிபதிகள். இவ்வளவு சொத்துக்கள் எப்படி வந்தது என்பதை கேட்கவோ, தடுக்கவோ முறையான சட்டம் தற்போது இல்லை. ஊழலில் ஈடுபடுபவர்களைத் தட்டிக் கேட்கவும் வழியில்லாமல், தண்டிக்கவும் முடியாமல் போனால் ஜனநாயகம் கேள்விக்குறியாகி விடும்.

இந்தியாவை ஒரு ஜனநாயக நாடாக வடிவமைத்த நேரு அப்போது சொன்னார், “ஜனநாயகம் என்பது மிகச் சிறந்த தேர்வு என்று நாங்கள் நினைக்கவில்லை. ஆனால் இருப்பதிலேயே இதுதான் பலவீனங்கள் குறைந்த தேர்வு. இந்த நாட்டை உலகின் வலுவான ஜனநாயக நாடாக மாற்றுவது இனி இந்த நாட்டின் மக்களிடம்தான் இருக்கிறது” என்று. அவரின் கருத்து இந்த இடத்தில் சுட்டிக் காட்டுவது மிகவும் பொருத்தமானது. லோக்பால் மசோதா என்பது வரலாற்று சிறப்பு மிக்க ஒன்று. பொதுமக்கள் தரப்பும், அரசு தரப்பும் லோக்பால் மூலம் இணைந்து செயல்படுவது ஜனநாயகத்துக்கு வலிமை சேர்க்கக் கூடிய ஒன்றாகும். ஊழலுக்கு எதிரான இந்தப் பயணம் வெற்றி பெற்றால் இந்திய நாட்டுக்கு நிச்சயம் ஒரு விடிவுகாலம் பிறக்கும்.