பாதிரியார்களின் ஓரினச் சேர்க்கை
திருவனந்தபுரம் : கேரள கத்தோலிக்கத் திருச்சபையில், பாதிரியார்களிடையே இருக்கும் ஓரினச் சேர்க்கைப் பழக்கம், ஒழுக்கக் கேடுகள் போன்ற குற்றச்சாட்டுகளை மையமாக வைத்து, பாதிக்கப்பட்ட பாதிரியார் ஒருவர், தன் சுயசரிதையை புத்தகமாக எழுதி வெளியிட்டுள்ளார். இதனால் கேரள கத்தோலிக்கர்கள் மத்தியில் மீண்டும் பரபரப்பு எழுந்துள்ளது.
கடந்த ஆண்டு, ஜெஸ்மி என்ற கன்னியாஸ்திரி, கேரள கத்தோலிக்கத் திருச்சபையில் இளம் கன்னியாஸ்திரிகளுக்கு நிகழ்த்தப்படும் பாலியல் கொடுமைகளைப் பற்றியும், அதில் தான் பாதிக்கப்பட்டது பற்றியும் "ஆமென்' என்ற புத்தகம் எழுதி பரபரப்பைக் கிளப்பினார். தற்போது அதே கேரள கத்தோலிக்கத் திருச்சபையைச் சேர்ந்த பாதிரியார் ஒருவர், மீண்டும் அதே போன்ற பரபரப்பைக் கிளப்பி வருகிறார். கேரள மாநிலம் கொச்சி அருகிலுள்ள அங்கமாலியைச் சேர்ந்தவர் ஷிபு களம்பரம்பில் (39). இவர் கத்தோலிக்க மதகுருமார்களுக்கான பயிற்சிப் பள்ளியில் 13 ஆண்டுகள் பயிற்சி எடுத்து, பின் பாதிரியாரானவர். கேரள கத்தோலிக்கத் திருச்சபையில் உறுப்பினராக, கடந்த 24 ஆண்டுகளாக இருந்து வந்தவர். இவர் இந்த ஆண்டு மார்ச் மாதம், திடீரென தன் திருச்சபை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து விட்டார். பின், தோகாவுக்குச் சென்றவர், அங்குள்ள இந்தியப் பள்ளி ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். அங்கிருந்தபடியே, கத்தோலிக்கத் திருச்சபையில் பாதிரியார்கள் மத்தியில் நிலவி வரும் ஒழுக்கக்கேடுகள் பற்றியும், அதனால் தான் பாதிக்கப்பட்டது குறித்தும், சுயசரிதையாக, "ஹியர் இஸ் தி ஹார்ட் ஆப் ஏ பிரீஸ்ட்' என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டுள்ளார். தன் சொந்தக் காசை செலவழித்து முதல் பதிப்பாக 100 பிரதிகள் வெளியிட்டுள்ள இவர், அடுத்த பதிப்பில் 10 ஆயிரம் பிரதிகள் வெளியிட திட்டமிட்டுள்ளார். தன் பணி விடுமுறையில் இப்புத்தகத்தை வெளியிடத் தீர்மானித்துள்ளார்.
இவர் தன் புத்தகத்தில் எழுதியுள்ளதாவது: நான் மூன்று தடவை, சாலை விபத்தில் சிக்கினேன். பாதிக்கப்பட்ட என்னை திருச்சபை ஆதரிக்காததால், நானே என் சிகிச்சைக்கான செலவை செலுத்தினேன். அதேபோல், காசர்கோட்டில், திருச்சபைக்குச் சொந்தமான பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்த போது, மாணவர்கள் எனக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போதும், சபை என்னைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவில்லை. ஒரு பாதிரியாரை, தொடர்ந்து அவமானத்தைச் சந்திக்க வைத்து, "இயேசுவுக்காக ஒரு பாதிரியார் சகல துன்பங்களையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்' என, சபை கூறுவது எந்த விதத்தில் நியாயம்? புனேயில் உள்ள, "பபல் செமினரி'யில் நான் பயிற்சி பெற்ற போது, பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டேன். ஓரினச்சேர்க்கை என்பது அங்கு மிகவும் சகஜம். பாதிக்கப்பட்டவர்கள் அதை எதிர்த்து புகார் செய்ய முடியாது. அப்படிச் செய்தால், பாதிக்கப்பட்டவரும், குற்றம் சாட்டப்பட்டவரும் வெளியேற்றப்படுவர். அதற்கு பயந்து யாரும் புகார் அளிப்பதில்லை.பயிற்சிக் காலத்தில், இளம் துறவிகள் சைக்கிளில்தான் செல்ல வேண்டும். பள்ளிச் சிறுவர்களை அவர்கள் சைக்கிளில் கொண்டு போய் விடுவர். அப்போது, சிறுவர்களை இறுக்க கட்டிப் பிடித்துக் கொள்ளும்படி இளம் துறவிகள் வற்புறுத்துவர். இது போன்ற நடவடிக்கைகள் பாலியல் நோக்கத்தோடு வெளிப்படையாக நடக்கின்றன. பயிற்சிக் கல்லூரியின் மூத்த பயிற்சியாளர்கள், பாதிரியராக தங்களைக் காட்டிக் கொண்டு, பின் அதற்காக பாவமன்னிப்பும் கேட்டிருக்கின்றனர். பாதிரியார்கள் பலர், விதவைகள், கன்னியாஸ்திரிகளிடம் பாலியல் ரீதியில் தவறாக நடந்திருக்கின்றனர். மேலும் சிலர், சர்ச்சுக்கு வரும் நன்கொடைகளை, தங்கள் சொந்த விருப்பங்களுக்காகச் செலவிட்டுள்ளனர். இது தவிர்க்கப்பட வேண்டும் என்றால், சர்ச்சின் நிதி, அரசால் கையாளப்பட வேண்டும். இவ்வாறு ஷிபு, தன் புத்தகத்தில் எழுதியுள்ளார்.
நன்றி தினமலர் 08 09 2010