பொருத்தமானவரைத் தேர்ந்தெடுங்கள்

மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையராக இருந்த பிரத்யூஷ் சின்ஹாவுக்குப் பதிலாக பி.ஜே. தாமஸ் அண்மையில் பதவியேற்றுக் கொண்டார். இந்தப் பதவிக்கு தாமஸ் தேர்ந்தெடுக்கப்பட்ட நடைமுறைகளுக்குப் பின்னால் பல நாடகங்கள் நடந்திருக்கின்றன. இந்த விவகாரம் ஊடகங்கள் வழியாகப் பரபரப்பாகப் பேசப்பட்டாலும், இதிலிருக்கும் சில ÷முக்கிய விஷயங்கள் பலராலும் கண்டுகொள்ளப்படவில்லை என்பதே உண்மை.


1998-ம் ஆண்டில் ஊழல் கண்காணிப்பு ஆணையர் பதவியானது, ஒரு அவசரச் சட்டத்தின் மூலமாக சட்டப்பூர்வமாக்கப்பட்டது. புதிய முக்கியத்துவம் கிடைத்த அந்தப் பதவிக்கு என்.விட்டல் முதலாவதாக நியமிக்கப்பட்டார். ஊழல் கண்காணிப்பு ஆணையர் தவிர, குறைந்தபட்சம் மேலும் இரு ஆணையர்களும் கூடுதலாக நியமிக்கப்பட வேண்டும் என்று அந்த அவசரச் சட்டத்தில் கூறப்பட்டிருந்தது. சில ஆண்டுகளில் அந்தச் சட்டம் காலாவதியானது.
அதன் பிறகு 2003-ல் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையச் சட்டம், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையரை பிரதமர், இன்னொரு அமைச்சர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் அடங்கிய 3 நபர் குழு தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று வினீத் நரேன் வழக்கில் உச்ச நீதிமன்றம் வழிகாட்டியது.
இதற்கிணங்க, மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர் பதவி காலியான சில நாள்களில் இந்தக் குழு கூடியது. அமைச்சரவைச் செயலாளர் தயாரித்த மிகத் திறமையான அதிகாரிகளின் பட்டியல் இந்தக் குழுவின் பார்வைக்கு வைக்கப்பட்டது.
அந்தப் பட்டியலில் மூன்று அதிகாரிகள் பெயர்கள் இருந்தன. தொலைத்தொடர்புத்துறை செயலாளராக இருந்த பி.ஜே.தாமஸ் பெயரும் அதில் அடக்கம். எதிர்க்கட்சித் தலைவர் என்கிற முறையில் குழுவில் இடம்பெற்றிருந்த சுஷ்மா ஸ்வராஜுக்கு, தாமஸ் மீது அதிருப்தி இருந்ததாகத் தெரிகிறது. ஆனால், குழுவில் இருந்த பிரதமரும், உள்துறை அமைச்சரும் தாமஸýக்கு ஆதரவு தெரிவித்ததால், சுஷ்மாவின் கருத்து நிராகரிக்கப்பட்டது. அவரது எதிர்ப்பு பதிவு செய்யப்பட்ட நிலையில், 2-1 என்கிற வாக்கு அடிப்படையில் தாமஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதுதான் உண்மையில் நடந்தது. தற்போது வெளியாகிவரும் தகவல்கள் உண்மைக்குச் சம்பந்தமில்லாமல் இருக்கின்றன.
÷இன்னொரு விஷயத்தையும் இதில் கவனித்தாக வேண்டும். தாமஸ் தவிர, பட்டியலில் இருந்த மற்ற இருவருக்கும் எந்தவித ஆட்சேபத்தையும் சுஷ்மா தெரிவிக்கவில்லை. அப்படியிருக்கும்போது, அந்த இருவரையும் பரிசீலனை செய்யாமல் தாமûஸயே தேர்வு செய்ய வேண்டும் என பிரதமரும், உள்துறை அமைச்சரும் பிடிவாதமாக இருந்தது ஏன் என்பது தெளிவாகத் தெரியவில்லை.
÷இவரைத்தான் தேர்வு செய்ய வேண்டும் என அரசு முன்கூட்டியே ஒரு முடிவுக்கு வந்திருக்குமானால், அவரது பெயரை மட்டுமே பட்டியலில் காட்டிவிட்டு, அவரையே ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கும்படி செய்திருக்கலாம். அதைவிட்டுவிட்டு, மூன்று பேரின் பெயர்களைக் கொடுத்துவிட்டு அதில் ஒருவரைத் தேர்வு செய்வதில் பிடிவாதமாக இருந்தது ஏன் என்று கேள்வி எழுந்திருக்கிறது. முதல் பட்டியலில் இருந்த மற்ற இருவர் மீதும் பிரதமருக்கும், உள்துறை அமைச்சருக்கும் ஆட்சேபம் இருந்தால், இன்னொரு பட்டியலைப் பரிசீலிப்பதற்கும் தாம் தயாராக இருப்பதாகவும் சுஷ்மா தெரிவித்திருக்கிறார்.

இதிலிருந்து மத்திய கண்காணிப்பு ஆணையர் பதவிக்கான தேர்வு நடைமுறையை வெறும் சம்பிரதாயமாகவே அரசு நடத்தியிருக்கிறதே தவிர, திறமையையும் நேர்மையையும் பரிசீலித்து முடிவெடுக்கும் நிகழ்வாக நடத்தவில்லை.






÷கடந்த இரண்டு ஆண்டுகளாக தொலைத்தொடர்புச் செயலாளராக இருந்த காரணத்தினாலேயே தாமஸின் தேர்வுக்கு, சுஷ்மா ஆட்சேபம் தெரிவித்திருக்கக்கூடும். 2-ஜி ஸ்பெக்டரம் ஒதுக்கீட்டில் நடந்த ஊழல், இதுவரை இந்தியாவில் நடந்த ஊழல்களிலேயே மிகப் பெரியதும் மோசமானதும் என்று கருதப்படுகிறது.

அப்படியொரு ஊழல் நடந்த சமயத்தில் தொலைத்தொடர்புச் செயலாளராக தாமஸ் இல்லை. ஆயினும், தொலைத் தொடர்புத் துறையில் நடந்திருக்கும் ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து அவர் தலைமையில் நியாயமான விசாரணை நடத்தப்படுமா என்கிற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்திருப்பதையும் ஒதுக்கிவிட முடியாது.

÷அரசின் கொள்கை முடிவுகளில் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையமோ, பொது தணிக்கை அதிகாரியோ தலையிட முடியாது என்கிற கருத்து மத்திய சட்ட அமைச்சகத்தால் இப்போது உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்தச் சூழலில், ஊழல் குற்றச்சாட்டுகள் கூறப்படும் ஒரு துறையின் செயலாளரே விசாரணை மேற்கொள்ளும் அதிகாரியாக இருந்தால், குற்றச்சாட்டுகளை மிக எளிதாகத் தடுத்துவிடமுடியும். இந்த எண்ணமேகூட தாமûஸ தேர்ந்தெடுப்பதில் அரசு பிடிவாதமாக இருப்பதற்குக் காரணமாக இருக்கக்கூடும். அதனால், வேறொரு அதிகாரியை ஊழல் கண்காணிப்பு ஆணையர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கலாம் என சுஷ்மா எடுத்திருக்கும் நிலை நியாயமானதே.


நல்லது செய்தால் மட்டும் போதாது, அது மக்கள் பார்வைக்கும் நல்லவிதமாகத் தெரிய வேண்டும் என்பதே நிர்வாகவியலின் அடிப்படைக் கோட்பாடு. ஆனால், மத்திய அரசு இந்தக் கோட்பாட்டை பொருள்படுத்தவில்லை. தாமஸ் மிகவும் திறமையான, நேர்மையான அதிகாரி என அரசு கருதுமேயானால், அவருக்கு வேறொரு முக்கியத்துவம் வாய்ந்த பதவியைக் கொடுக்கலாம். அதைவிடுத்து, பரவலான எதிர்ப்பு எழுந்திருக்கும் நிலையில், அவரை ஊழல் கண்காணிப்பு ஆணையராக நியமித்தே தீரவேண்டும் என்பதில் பிடிவாதமாக, இருப்பது சரியல்ல.


÷அரசுக்கு விசுவாசமாக நடந்துகொள்ளும் அதிகாரிகளுக்கு கைமாறு செய்யும் விதமாக ஓய்வுக்குப் பிறகு, நல்ல நல்ல பதவி வழங்கி கெüரவப்படுத்துவது வழக்கமான ஒன்றுதான். சிபிஐ, ஐபி, தேர்தல் ஆணையம் போன்ற அமைப்புகளின் முக்கிய பொறுப்புகளில் தங்களுக்குச் சாதகமாகச் செயல்படுவோரை அரசு நியமிக்க விரும்புவதும் அனைவருக்கும் தெரிந்ததுதான். இப்படி வளைந்து கொடுக்கக்கூடிய அதிகாரிகளை பெரிய பதவிகளில் நியமிக்கும் நடைமுறைதான் நமது நிர்வாக அமைப்பில் உள்ள மிகப் பெரிய ஓட்டை.
÷இதைத் தடுப்பதற்காகக்தான் சில பதவிகளுக்கு உரியவர்களைத் தேர்வு செய்வதில் எதிர்க்கட்சித் தலைவர்களையும் ஆலோசிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது. ஓரளவுக்கேனும் நியாயமான தேர்வு நடைபெறும் என்கிற நம்பிக்கையில்தான் இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. தற்போது ஊழல் கண்காணிப்பு ஆணையர் தேர்வில், உச்ச நீதிமன்றத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இந்த நடைமுறை அவமதிக்கப்பட்டிருக்கிறது.
÷திறமை, நேர்மை போன்ற தகுதிகளின் அடிப்படையிலேயே இதுபோன்ற பதவிகளுக்கு அதிகாரிகள் தேர்வு செய்யப்பட வேண்டும். ஆனால், தகுதிகள் இங்கே புறக்கணிக்கப்படுகின்றன. அரசியல் ரீதியாக, தங்களுக்கு யார் வளைந்து கொடுப்பார்கள் என்பதை மட்டுமே ஆளும்கட்சிகள் பார்க்கின்றன. அதனால், திறமையைப் பரிசீலித்து முடிவெடுக்க வேண்டிய இடத்தில் அரசியல் புகுந்துவிடுகிறது. நாடாளுமன்றத்தில் அரசியல் பெரும்பான்மை ரீதியாக முடிவுகள் எடுக்கப்படுவதைப் போல முக்கிய பதவிகளுக்கு அதிகாரிகள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
÷தவறான நபர்கள் மத்தியிலும் மாநிலத்திலும் பல முக்கிய பொறுப்புகளை வகிப்பதால்தான் நிர்வாகம் சீர்கெட்டுப் போகிறது. வளர்ச்சியை விரும்பும் ஒரு நாட்டுக்கு இது நல்லதல்ல. அரசியல் ஆதாயங்களை ஓரங்கட்டிவிட்டு, திறமையின் அடிப்படையில் முக்கிய பதவிகளுக்கு அதிகாரிகளைத் தேர்வுசெய்யும் நடைமுறையை உறுதியுடன் அமலாக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. வளைந்து கொடுக்கும் அதிகாரிகள், அரசியல்வாதிகளுக்கு வேண்டுமானால் பொருத்தமானவர்களாக இருக்கலாம். ஆனால், நல்ல நிர்வாகத்துக்கு அவர்கள் பொருந்த மாட்டார்கள். மக்கள் நலனுக்காக அவர்கள் பணியாற்ற மாட்டார்கள். நிர்வாகச் சீர்கேட்டுக்குக் காரணமான இது போன்ற அதிகாரிகள், முக்கிய பொறுப்புகளிலிருந்து தூக்கியெறியப்பட வேண்டும். மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர் பதவிக்கு உரியவரைத் தேர்வுசெய்த விதத்திலிருந்து, நல்ல நிர்வாகத்தின் மீது அரசுக்கு நாட்டமில்லை என்பது தெரிந்துவிட்டது. பிறகு, சீர்திருத்தத்தை மட்டும் இவர்களிடமிருந்து எப்படி எதிர்பார்க்க முடியும்?


நன்றி:தினமணி 17 .09 .2010