த.மு.மு.க.மற்றும் தவ்ஹித் ஜமாஅத் மோதல் துப்பாக்கி சூட்டில் இரண்டு பேர் பலி

திருவாரூர் அருகே த.மு.மு.க.மற்றும் தவ்ஹித் ஜமாஅத் முஸ்லிம்களுக்குள் நடைபெற்ற மோதல் காரணமாக, துப்பாக்கியால் சுட்டதில் ஜமாத் தலைவர் உட்பட இரண்டு பேர் பலியான சம்பவத்தில் 17 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அடுத்த திருவிடைச்சேரி சின்னபள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த ஜமாத் தலைவர் முகம்மது இஸ்மாயில்(55). அதே ஊரைச் சேர்ந்தவர் குத்புதீன். திருவிடைச்சேரி கிராமத்தில் 300 முஸ்லிம் குடும்பத்தினர் உள்ளனர். இதில், பெரும்பான்மையானோர் ஒரு முஸ்லிம் அமைப்பினர். குத்புதீன் மற்றும் எட்டு குடும்பத்தினர் இன்னொரு முஸ்லிம் அமைப்பினர். இவர்கள், பள்ளிவாசலுக்கு வராமல், அதன் நடைமுறையை பின்பற்றாமல், கோஸ்பாப்பா என்பவர் வீட்டில் தொழுகை நடத்தினர். கடந்த 4ம் தேதி இரவு கோஸ்பாப்பா வீட்டில் தொழுகை நடந்தபோது, பெரும்பான்மை அமைப்பினர் தகராறு செய்தனர். இது பற்றி, ஜமாத் தலைவர் முகம்மது இஸ்மாயிலுக்கு புகார் வந்ததால், அவர், குத்புதீன் மற்றும் அவருடன் சேர்ந்தவர்களை அழைத்து சமாதானம் பேசினார். கடந்த 5ம் தேதி இரவு 9 மணிக்கு, குத்புதீன் மைத்துனர், தஞ்சை மாவட்டம் திருமங்கலக்குடியைச் சேர்ந்த ஹாஜ் முகம்மது மற்றும் சிலர் மூன்று காரில் திருவிடைச்சேரி வந்தனர். அங்கு, ஜமாத் தலைவர் முகம்மது இஸ்மாயிலுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது, குத்புதீன் ஆதரவாளர் ஒருவர், முகம்மது இஸ்மாயிலையும், வேறு சிலரையும் தாக்கினார். இதில், ஹாஜ் முகம்மது தான் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டதில், ஜமாத் தலைவர் முகம்மது இஸ்மாயில், அவருடன் இருந்த தர்கா தெருவைச் சேர்ந்த ஹக்கீம் முகம்மது(60) ஆகியோர் குண்டு காயம் பட்டு இறந்தனர்.

இப்பேச்சு வார்த்தையில் பங்கேற்ற மற்றும் வேடிக்கை பார்த்த திருவிடைச்சேரி ஹாஜா மைதீன்(40), சந்தியாகு(30), விழுதியூர் பால்ராஜ் (60), அவரது மகன் ராமதாஸ்(30) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். மேலும், எதிர் தரப்பைச் சேர்ந்த திருமெய்ச்சூர் ரவி என்பவரும் காயம் அடைந்தார். இச்சம்பவம் காரணமாக அப்பகுதியில் இருந்த கடை, வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. முக்கிய குற்றவாளி ஹாஜ் முகம்மது நேற்று முன்தினம் சிதம்பரம் நீதிமன்றத்தில் சரணடைந்தார். குத்புதீன், ரவி, ஜியாவுதீன், சலாவுதீன், அன்வர்தீன், பசீர் மைதீன், காஜா, முகம்மது பர்வா, முகம்மது இஸ்மாயில், பசீர் அகம்மது, முகம்மது அஜீஸ், முகம்மது அக்தர் உட்பட 17 பேர் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கின் முக்கிய குற்றவாளியான, சிதம்பரம் நீதிமன்றத்தில் சரணடைந்த தஞ்சை மாவட்டம் திருமங்கலக்குடி, குறிச்சிமலை மெயின் ரோட்டில் வசிக்கும் ஹாஜ் முகம்மது வீட்டில், திருவிடைமருதூர் போலீஸ் டி.எஸ்.பி., ரத்தினவேல் திடீர் சோதனை மேற்கொண்டார். அங்கு, ஒரு ரைபிள், ஒரு ரிவால்வர் கைப்பற்றப்பட்டது; இவை இரண்டுக்கும் லைசென்ஸ் இல்லை.


நன்றி தினமலர் 08 09 2010