திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் 18ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா ஊர்வலம் முத்துப்பேட்டை ஒன்றிய நகர இந்து முன்னணி சார்பில், ஒன்றிய தலைவர் ராஜேந்திரன் தøமையில், மாநில பொதுக்குழு உறுப்பினர் ரங்கசாமி முன்னிலையில் ஊர்வலத்தை சக்திராம சிதம்பர தேவர் துவக்கி வைத்தார்.
அதில், முத்துப்பேட்டைவடகாடு சிவன் கோவில், உப்பூர், கல்லடிக்கொல்லை, கீழ நம்மங்குறிச்சி, அரமங்காடு உட்பட 16 இடங்களில் இருந்து விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு முத்துப்பேட்டை பழைய பஸ் ஸ்டாண்டு வழியாக பாமணி ஆற்றில் கரைக்க கொண்டு செல்லப்பட்டது.
விழாவில், மாநில துறவிகள் பேரவை செயலாளர் ராகவானந்தா சாமி பங்கேற்று பேசியதாவது: தர்மம், கலாச்சாரம், பண்பாடு ஆகியவை மற்ற மதங்களை விட இந்து மதத்தில் அதிகம் உள்ளது. பக்தி பூர்வமாக ஆரம்ப காலத்தில் இருந்தே பஞ்சபூதங்களை இயற்கையை ஒட்டி வழிபட்டு வந்தோம். இது தேசிய ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக விளங்கியது. விநாயகர் சிலை ஊர்வலம் தேசிய திருவிழாவாக நடத்தப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
பா.ஜ., மாநில செயலாளர் முருகானந்தம் பேசியதாவது: நடப்பாண்டு விநாயகர் சிலை ஊர்வலம் பல்வேறு நெருக்கடியைத் தாண்டி நடத்தப்படுகிறது. பாதுகாப்பு என்ற பெயரில் போலீஸார் அச்சுறுத்தி வருகின்றனர். பல்வேறு சாதிகளில் பல்வேறு பிரிவு உள்ள இந்துக்கள் அனைவரையும் ஒன்றுபடுத்தும் விழா விநாயகர் சதுர்த்தி விழாவாகும். இது இந்துக்கள் ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாகும். இதை மாவட்ட நிர்வாகம் பல்வேறு நெருக்கடி கொடுத்து நடத்தினாலும், நாம் அமைதியாக விநாயகர் சிலை ஊர்வலத்தை ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக நடத்தி முடிப்போம். இவ்வாறு அவர் பேசினார்.
பாதுகாப்பு ஏற்பாடுகளை ஐ.ஜி., கரண்சின்ஹா உத்தரவின் பேரில், தஞ்சை டி.ஐ.ஜி., திருஞானம், நேரடிப்பார்வையில், எஸ்.பி.,க்கள், திருச்சி கலியமூர்த்தி, தஞ்சை செந்தில்வேலன், திருவாரூர் மூர்த்தி, நாகை சந்தோஸ்குமார், கரூர், பிரவீன் குமார் அபினபு, அரியலூர் நஜ்மல் ஹோடா, கடலூர் அஸ்வின் கோட்னிஸ், ஏ.டி.எஸ்., துரைராஜ், உட்பட 3,000 போலீஸார் ஈடுபட்டனர்.
வெடிகுண்டு சோதனை அதிகாரிகள், நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் முக்கியமான இடங்களில் கண்காணிப்பு காமிராக்கள் பொறுத்தப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். நேற்று மாலை 3.30 மணிக்கு துவங்கிய விநாயகர் சிலை ஊர்வலம் 6.30 மணிக்கு பாமணி ஆற்றில் விநாயகர் சிலை இறக்கப்பட்டு கரைக்கப்பட்டது. எவ்வித அசம்பாவிதமும் இன்றி முத்துப்பேட்டை விநாயகர் சிலை ஊர்லம் அமைதியான முறையில் நிறைவுபெற்றது குறிப்பிடத்தக்கது.ஊர்வலத்தில் சுமார் 10000 க்கு அதிகமான ஹிந்துக்கள் பங்கேற்றனர்.