தீவிரமாகும் மத மாற்ற பிரசாரம்


கேள்வி பதில் குமுதம் ஜோதிடம் 
திருமதி. உமா ஆனந்த்,
நுங்கம்பாக்கம், சென்னை.
மேலும் பலர்.


கேள்வி :
 15.1.2011 சனிக்கிழமை அன்று காலை சரியாக 11 மணிக்கு கிறிஸ்தவ மதபோதகர்களான அர்னால்ட் என்பவரும், அவரது மனைவி சோன்ஜா என்பவரும்,அவர்கள் குழுவைச் சேர்ந்தவர்கள் என்று கூறிக்-கொண்டு பலரும் எங்கள் வீட்டிற்கு வந்தனர்.அன்று புனித பொங்கல் தினம் என்பதால், குடும்பத்தினர் அனைவரும் சூரியனுக்குப் பூஜை செய்து கொண்டிருந்தோம். இவர்கள் அனைவரும் வீட்டிற்குள் நுழைந்து, ‘‘நாங்கள் இங்கு உங்கள் நன்மைக்காக ஜெபம் செய்யப்போகிறோம்.நாங்கள் அயனாவரத்தில், 47 பில்கிங்டன் ரோடிலுள்ள ஜெபகூடத்திலிருந்து இங்கு வந்துள்ளோம்’’ என்று கூறி, வரவேற்பறையில் அமர்ந்துகொண்டு விட்டார்கள்.

எங்களுக்கு அதிர்ச்சி. ‘‘நாங்கள் இந்துக்கள். இன்று எங்கள் பண்டிகை தினம். எங்களுக்கென்று பூஜை நெறிமுறைகள் உள்ளன. உங்கள் ஜெபம் எங்களுக்கு வேண்டியதில்லை. தயவுசெய்து வெளியே போய்விடுங்கள்’’ என்று கூறினோம். ஆனால் அவர்கள் பிடிவாதமாக உட்கார்ந்துகொண்டு அவர்கள் வழியில் ஜெபம் செய்வதைப் போல் நடந்துகொண்டனர். நாங்கள் எவ்வளவோ கூறியும் அவர்கள் கேட்கவில்லை.

‘உங்கள் கிறிஸ்துமஸ் பண்டிகை தினத்தன்று இந்துக்களோ அல்லது முஸ்லிம்களோ உங்கள் வீட்டிற்குள் எவ்வித அனுமதியுமின்றி நுழைந்து, அவர்களது மதக்கொள்கைகளின்படி பூஜை செய்கிறார்களா அல்லது வழிபாடு செய்கிறார்களா? நீங்கள் மட்டும் ஏன் இவ்விதம் நடந்துகொள்ள வேண்டும்?குடும்பத்தினர் வசிக்கும் வீடுகளில் அனுமதியின்றி நுழைவதும், வெளியில் செல்ல மறுப்பதும், பலாத்காரம்தான்’ என்று எவ்வளவோ எடுத்துக் கூறியும் அவர்கள் ஜெபம் செய்வதைத் தொடர்ந்ததால் வேறு வழியின்றி நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் செய்தோம்.

காவல்துறையினர் எங்கள் வீட்டிற்கு வந்து,அந்த மத பிரசாரகர்களைக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.நாங்கள் புகார் பதிவு செய்துள்ளோம். 

இதே பொங்கல் தினத்தில் நுங்கம்பாக்கத்தின் மற்றொரு பகுதியான திருமூர்த்தி நகர் மற்றும் பெசண்ட் நகர்,அடையாறு பகுதிகளிலும் இத்தகைய நிகழ்ச்சிகள் அன்றைய தினம் நடந்துள்ளன.நுங்கம்பாக்கம் பகுதியில் மட்டும் அன்றைய தினம் 30கிறிஸ்தவ மத பிரசார குழுக்களாக அமைத்துக்

கொண்டு,துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்தும்,இந்து மத நம்பிக்கை-களைப் பழித்துக் கூறியும் பல வீடுகளில் பலாத்காரமாக நுழைந்து, ஜெபம் செய்வதாக கூறி, நிகழ்த்திய நிகழ்ச்சிகளும் நடந்துள்ளன.

மதச்சார்பில்லா நாட்டில் கிறிஸ்தவர்களுக்கு இத்தகைய சட்டத்திற்குப் புறம்பான தீவிர மதமாற்ற முயற்சிகளுக்குத் துணிவு ஏற்பட்டுள்ளதற்கு ஒரு காரணம் இருக்கவேண்டுமல்லவா? எவ்விதமாவது இந்திய நாட்டை கிறிஸ்தவ நாடாக மாற்றிவிடும் முயற்சிக்கு வெளிநாடுகளிலிருந்து கோடிக்கணக்கில் பணம் குவிந்து வருகிறது. இதுபற்றி அரசாங்கமோ அல்லது அரசியல் கட்சிகளோ கவலைப்படவில்லை.

தேசப்பற்று மற்றும் தெய்வப் பற்று ஆகியவற்றின் அவசியத்தைத் துணிவுடன் எடுத்துக் கூறிவரும் தங்கள் பத்திரிகையில் இந்நிகழ்ச்சியை வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். 

சென்ற சில மாதங்களாக கிறிஸ்தவ மதமாற்ற போதகர்கள் ஒரு புதுவித பிரசார முறையைக் கடைப்பிடித்து வருகின்றனர். குடும்பத்தினர் வசிக்கும் பகுதிகளில் (Residential areas) பல மடங்கு அதிக விலை கொடுத்து ஒரு கட்டடத்தை வாங்கி அதனை வெளிப்பார்வைக்கு Multi Purpose Hall என்று கூறிக்கொண்டு, கிறிஸ்தவ ஜெப வீடுகளாக மாற்றி மதமாற்றம் செய்து வருகின்றனர்.இவ்விதம் செயல்படும் ஜெப வீடுகளில் ஒன்றுதான் அடையாறு தபால் நிலையத்துக்கு அருகில் உள்ள  ‘கார்னர் ஸ்டோன்’ என்ற பெயரில் செயல்பட்டுவரும் Multi Purpose Hall ஆகும். 

16.1.2011 மாலை 5.30 மணிக்கு Joy Eternal Indian Church என்று சொல்லிக்கொண்டு ஒரு ஜெபக்கூட்டம் நடந்தது.அதில் இந்துக்களின் பழக்க வழக்கங்கள்,நம்பிக்கைகள் ஆகியவற்றைப் பற்றி இழிவாகப் பேசப்பட்டது (Verified with authentic sources who were present at the meeting).

பதில் : பணபலம், அரசியல் கட்சிகளின் ஆதரவு ஆகியவற்றைக் கொண்டு இந்து சமூகத்தை மற்ற மதத்தினர் அழித்துக்கொண்டு வருவதைப் பார்த்துக்கொண்டு வரும் இம்மாபெரும் சமூகம், இந்துக்களாகப் பிறந்து வளர்ந்த அரசியல் தலைவர்கள், இந்துக்களின் நலனுக்காகப் பாடுபடுவதாகத் தங்களை விளம்பரப்-படுத்திக்கொள்ளும் கட்சிகள், மடங்கள் ஆகியவை, தங்களுக்கும், கிறிஸ்தவ மதமாற்ற பிரசாரகர்களுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பதுபோல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது நமது சமூகத்தின் கையாலாகாதனத்தை எடுத்துக்காட்டுகிறது.

நாங்கள் கிறிஸ்தவ மதத்திற்கு எதிரானவர்கள் அல்ல.மற்ற மதங்களைப் போலவே கிறிஸ்தவ மதத்தையும் மதிக்கிறோம். ஆனால் இந்து மதத்தை அழிக்கும் இத்தகைய தீவிரவாத முயற்சிகளை இனியும் அனுமதிக்க முடியாது. எந்தவொரு இந்துவும், முஸ்லிமும், கிறிஸ்தவர்களின் வீடுகளில் நுழைந்து ‘எங்கள் மதம்தான் உயர்ந்தது.உங்கள் வீட்டில் நாங்கள் வழிபாடு செய்வோம்’ என்று கூறுவதில்லை.

இத்தகைய அக்கிரமங்களைக் கண்ட பிறகாவது இந்துக்களுக்குத் தன்மான உணர்ச்சி வருமா? ரத்தத்தில் சிறிதளவாவது
வீர உணர்ச்சி ஏற்படுமா என்று ஏங்குகிறோம்!

நன்றி: குமுதம் ஜோதிடம் 04 /02 /2011

ரூ.70 லட்சம் கோடி கறுப்புப்பணம் கைமாறியது எப்படி?

இந்தியாவில் வாழும் பெரும் பணக்காரர்கள், அரசியல் தலைவர்கள், மாபியா கூட்டாளிகள் வருமானத்துக்கு அதிகமாக சேர்த்த பணத்தை, வெளிநாட்டு வங்கிகளில் முதலீடு செய்கின்றனர். சுவிட்சர்லாந்து, ஜெர்மன் மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் வங்கிகளில் இந்தியர்களின் கறுப்புப்பணம் அதிகமாக முதலீடு செய்யப்படுகிறது.


"வெளிநாட்டு வங்கிகளில் 70 லட்சம் கோடி ரூபாய், இந்தியர்களால் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இவற்றின் கணக்கை காட்ட முடியாது' என மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்துவிட்டது. இந்நிலையில், கறுப்புப்பணம் எப்படி கைமாறுகிறது; இதில், யார், யாரெல்லாம் ஈடுபடுகிறார்கள் என்பது குறித்து விசாரித்தால், தலை கிறு கிறுக்கிறது. ஏனெனில், அந்தளவிற்கு, "ஹைடெக்' முறையிலும், பல்வேறு "குறியீடுகள்' மூலமும் இந்த தொழில் நடக்கிறது.

இது குறித்த பரபரப்பு தகவல்கள்:வெளிநாட்டு வங்கிகளில் முதலீடு செய்ய இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் ஏராளமான ஏஜன்டுகள் கள்ளத்தனமாக செயல்படுகின்றனர். இந்திய ஏஜன்டுகள் பெரும்பாலும் ஹவாலா மோசடி செய்யும் தொழிலில் கை தேர்ந்தவர்கள். இவர்கள், சென்னை, மதுரை, ராமநாதபுரம், தஞ்சாவூர் ஆகிய இடங்களில் இருந்து இயங்குகின்றனர்.இதேபோல், கேரள மாநிலம் கண்ணூர், பாலக்காடு, கொச்சி மற்றும் மும்பை ஆகிய நகரங்களிலும் ஹவாலா ஏஜன்டுகள் பெருமளவில் உள்ளனர். வெளிநாட்டு வங்கியில் முதலீடு செய்ய விரும்புவோர், முதலில் மாநிலத்தில் உள்ள சப்-ஏஜன்டுகள் மூலம், மெயின் ஏஜன்டை பிடித்து பணம் கொடுக்கின்றனர். இவர்கள், வெளிநாடுகளில் உள்ள தங்கள் ஏஜன்டுகளுக்கு தகவல் அளித்து, எவ்வளவு பணம், எந்த வங்கியில் கட்ட வேண்டும் என தெரிவிப்பர்.அதன்படி, அவர்கள் அங்கே சம்பந்தப்பட்ட வங்கியில் பணத்தை முதலீடு செய்வர். வெளிநாட்டு வங்கிகளின் அதிகாரப்பூர்வ வெளிநாட்டு பிரதிநிதிகள், வெளிநாட்டில் இருக்கும் இந்திய ஏஜன்டுகளுக்கு, முதலீட்டு தொகைக்கு ஏற்ப அதிக அளவு கமிஷன் தருகின்றனர்.

இந்தியாவில் பணம் வாங்கிய ஏஜன்ட், வெளிநாட்டிலிருந்து இந்தியாவில் உள்ளவர்களுக்கு தர வேண்டிய பணத்தை, வெளிநாட்டு ஏஜன்டுகளின் கட்டளைக்கு ஏற்ப இங்கேயே பிரித்து கொடுக்கிறார். இம்முறை "உண்டியல்' என்ற ரகசிய பெயரால் அழைக்கப்படுகிறது. இதில், பெரும்பாலும் படித்து வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் தான் ஈடுபடுத்தப்படுகின்றனர். ஒரு குறிப்பிட்ட முகவரிக்கு சென்று பணத்தை பத்திரமாக சப்ளை செய்தால், 1,000 ரூபாய் முதல் 1,500 வரை கமிஷன் தரப்படுகிறது. ரயில், பஸ்களில் பயணித்து இவர்கள் ரொக்கப்பணத்தை சப்ளை செய்கின்றனர். பண சப்ளையின் போது, கொள்ளையர்களிடமோ, போலீஸ், உளவுத்துறை, லஞ்ச ஒழிப்பு, வருமான வரித்துறை, அமலாக்கத்துறையிடம் மாட்டினால் பணத்தை அனாதையாக விட்டு, தப்பி விடுவர்.இந்த ஏஜன்டுகள் "குருவிகள்' என ரகசிய குறியீட்டுடன் அழைக்கப்படுகின்றனர். தற்போது கூரியர் மேன், பார்சல் பாய் என்றெல்லாம் புதிய, புதிய சங்கேத பெயர்களையும் பயன்படுத்த துவங்கியுள்ளனர். பண பறிமாற்றத்தில் "குருவிகள்' முகவரி மாற்றி பணத்தை தராமல் இருக்க, சிறிய கைக்குட்டை, டோக்கன், மொபைல் எண், வித விதமான பொம்மைகள் என பலவற்றை பயன்படுத்துகின்றனர். வெளிநாட்டில் பணம் கட்டுபவருக்கு ஒரு டோக்கன் அல்லது ரகசிய அடையாளம் கொண்ட பொருள் தரப்படும்.

அந்தப் பொருள், கூரியர் மூலம் இந்தியாவில் பணம் பெறக்கூடியவருக்கு அனுப்பப்படும். அதேநேரம் அதேபோன்ற பொருள் அல்லது ரகசிய குறியீட்டு எண், இந்தியாவில் பணம் சப்ளை செய்யும் "குருவிகளுக்கும்' தரப்படும்."குருவிகள்' பண சப்ளை செய்யும் முகவரிக்கு சென்று, அவர்களிடம் இருக்கும் ரகசிய அடையாள பொருள் அல்லது எண்ணை சரிபார்த்து பணம் தருவர். இந்த முறை பல ஆண்டுகளாக இந்தியாவில் கடைபிடிக்கப்படுகிறது. தற்போது, மொபைல் போன் வசதி வந்து விட்டதால், மொபைல் எண் அடிப்படையில் மிக சுலபமாக பணம் சப்ளை செய்யப்படுகிறது.வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கிய பணத்தை மொத்தமாக கொண்டு வருவதற்கு, அன்னிய முதலீட்டு முறையும், தொண்டு நிறுவனங்கள் வழியாகவும், தங்கம் மற்றும் விலை மதிப்புள்ள பொருட்களை வாங்கி, சுங்கத்துறையை ஏமாற்றியும் பணத்தை இந்தியாவுக்குள் கொண்டு வருகின்றனர்.

தாராளமயமாக்கல், அன்னிய முதலீடு, வெளிநாட்டு இந்தியருக்கு வரிச்சலுகை போன்ற மத்திய அரசின் பல சலுகைகள் பொருளாதார முன்னேற்றத்திற்கு பயன்படுவதை விட, ஹவாலா, கறுப்புப்பண முதலைகளுக்கு மிக எளிதாக பயன்படுகிறது. இது மட்டுமின்றி, இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டினர் மற்றும் வெளிநாடு சென்று வரும் இந்தியர்கள் கொண்டு வரும் வெளிநாட்டு கரன்சி, விமான நிலையத்திலேயே சட்ட விரோதமாக இந்திய பணமாக மாறி விடும்.இந்தியாவில் கறுப்புப் பண ஏஜன்டுகளாக இருப்போர், விமான நிலையங்களில் தங்களது ஆட்களை இந்திய பணக்கட்டுடன் நிறுத்தி வைத்து, வெளிநாட்டு கரன்சி கொண்டு வருவோருக்கு, கூடுதல் விலை கொடுத்து இந்திய பணத்தால் அவற்றை வாங்கி விடுவர். இவ்வாறு பெறப்படும் பணம் மிக எளிதாக வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்குள்ள வங்கிகளில் முதலீடு செய்யப்படுகிறது.

இந்த ஹவாலா மோசடி, சென்னை, மும்பை, கொச்சி விமான நிலையங்களில் போலீஸ், சுங்கத்துறை, அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு தெரிந்தே நடக்கிறது. இந்தியாவில் இருந்து வெளிநாட்டில் பதுக்கப்பட்ட பணம், நல்ல பணமாக (ஒயிட் மணி) தொழில் துவங்க வரும் வெளிநாட்டினர் வழியே ஏஜன்டுகள் மூலம் இந்தியாவிற்குள் கொண்டு வரப்படுகிறது. இதேபோல், மலேசியா, சிங்கப்பூர் மற்றும் அந்தமான் வழியே பணத்தை கொண்டு வர சட்டத்தில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி கொள்கின்றனர். மேலும், வெளிநாடுகளில் வாழும் இந்தியர் (என்.ஆர்.ஐ.,) வங்கிக் கணக்கு வழியிலும் கறுப்புப்பணம் பெருமளவு கொண்டு வரப்படுவதாக தகவல்கள் கூறுகின்றன.இப்படி பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் ஒரு பக்கம் இருந்தாலும், கறுப்பு பணத்தை இந்தியாவிற்கு கொண்டு வர முடியுமா? முடியாதா, இந்திய அரசு நடவடிக்கை எடுக்குமா, எடுக்காதா என்பதைப் பற்றி ஆங்காங்கே பட்டிமன்றங்கள் நடத்தாத குறையாக விவாதிக்கப்படுகிறது. எனினும், வெளிநாடுகளில் முடங்கும் பணத்திற்கு இந்தியாவில் வரிச்சலுகை வழங்கி, அவற்றை இந்தியாவின் வளர்ச்சிக்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

வெளிநாட்டு பண வரவு சட்ட திருத்தத்தால் மோசடி : வெளிநாடுகளில் இருந்து கறுப்புப் பணத்தை நல்ல பணமாக கொண்டு வருவதில், தொண்டு நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. வெளிநாட்டு பணத்தை கொண்டு வர விரும்பும் தொண்டு நிறுவனங்கள், தங்களது தொண்டுகளை காட்டி, வெளிநாட்டு பணம் பெறுவதற்கான உரிமத்தை பெறுகின்றன. இந்த எண் பெற்றால், எவ்வளவு பணம் வேண்டுமென்றாலும், தடையின்றி, வரியின்றி கொண்டு வர முடியும். ஆனால், தொண்டு நிறுவனங்கள் உண்மையானவையா என இந்திய உளவுப்பிரிவான "ரா' விசாரித்து அனுமதி தரும்.எப்.சி.ஆர்.ஏ., எனப்படும், "பாரின் கான்ட்ரிபியூட்டட் ரெகுலேஷன் ஆக்ட்' என்ற வெளிநாட்டு பணப்பங்கு ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ், தடையில்லா எண் வழங்கும் முறை மாவட்ட கலெக்டரின் அதிகாரத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இதனால், சில போலியான தொண்டு நிறுவனங்கள், கலெக்டர் அலுவலக ஊழியர்களை வசப்படுத்தி தடையில்லா எண் பெற்று, வெளிநாடுகளிலிருந்து இந்தியர்களின் கறுப்புப் பணத்தை நன்கொடை என்ற பெயரில் கொண்டுவந்து, பின் கமிஷன் பெற்று உரியவர்களிடம் ஒப்படைக்கின்றன.இதை "ரா' அதிகாரிகள் கண்டுபிடித்து, தடையில்லா எண்ணை ரத்து செய்ய முயற்சித்தால், கோர்ட் மூலமே ரத்து செய்வதில் பல நடைமுறை சிக்கல்கள் ஏற்படுகின்றன. இதனால் கறுப்புப்பண நடமாட்டத்தை அரசு நினைத்தால் மட்டுமே கடுமையான சட்ட திட்டத்தால் தடுக்க முடியும் என்பதே உண்மை.
நன்றி :தினமலர் 30 /01/2011

தலையங்கம் ஆனந்த விகடன் 02 /02 /201


'ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லாவிட்டால், மாவோயிஸ்ட் இயக்கத்தில் சேரலாம்' என்று எதிர்க் கட்சிகளுக்கு 'அற்புதமான' அறிவுரை அளித்திருக்கிறார் மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விவகாரத்தில் நாடாளுமன்றக் கூட்டுக் குழு அமைக்கும்படி கேட்டு, குளிர்காலக் கூட்டத் தொடரை எதிர்க் கட்சிகள் மொத்தமாக முடக்கியதுதான் முகர்ஜியை இப்படி மூக்கு விடைக்க வைத்திருக்கிறது.

'குற்றச்சாட்டின் மையமாக இருந்தவர் அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துவிட்டார். சி.பி.ஐ-கூடப் பல இடங்களில் ரெய்டு நடத்திவிட்டது. இத்தனைக்குப் பிறகுமா எதிர்க் கட்சிகளுக்கு நம்பிக்கை பிறக்கவில்லை?' என்ற எண்ணம் நேற்று வரை யாருக்கேனும் இருந்திருக்கலாம்!
ஆனால், தொலைத் தொடர்புத் துறைக்குப் புதிதாகப் பொறுப்பேற்ற கபில் சிபல், 'மத்தியக் கணக்குத் தணிக்கைக் குழு தந்திருக்கும் இழப்பீட்டு விவரமே தவறு' என்று குண்டு போடுகிறார். முறைகேடாக ஒதுக்கீடு பெற்றதாகக் கூறப்படும் தனியார் நிறுவனங்களுக்கும் சேர்த்து வக்காலத்தும் வாங்குகிறார். இது போதாமல், தேர்தலை மனதில்கொண்டு 'கூட்டு அணி'கள் மேலும் நெருங்குகிற காட்சிகளும் பல உள் அர்த்தங்களை உணரவைக்கின்றன!
இவை எல்லாவற்றையும் பார்த்த பிறகு, 'நாடாளுமன்றக் கூட்டுக் குழு அமைப்பதுதான் உண்மைகளை அம்பலத்துக்குக் கொண்டுவர சரியான தீர்வு' என்று எதிர்க் கட்சிகளைப்போலவே சாமானியனும் சிந்திப்பதில் என்ன தவறு, மிஸ்டர் முகர்ஜி? இந்த விவகாரத்தில் தொடர்ந்து கிடுக்கிப்பிடி போட்டு வரும் உச்ச நீதிமன்றமே வெகுண்டு கண்டிக்கும் அளவில்தானே இருக்கிறது உங்கள் அரசின் அடுத்தடுத்த நடவடிக்கைகள்?
ஒருவேளை, மத்திய நிதி அமைச்சரும் உண்மையாகவே 'மாவோயிஸ்ட்'டுகளுக்கு ஆள் சேர்த்துக் கொடுக்கத்தான் வழி மொழிகிறாரோ?
'ஆமாம், அப்படித்தான் நாங்கள் அழிச்சாட்டியம் செய்வோம். நாடாளுமன்றக் கூட்டுக் குழு அமைக்க மாட்டோம். வேண்டுமானால், தீவிரவாதிகளாக மாறிப் போராடிக்கொள்ளுங்கள்' என்பதுதான் '2ஜி' புராணத்துக்கு பிரணாப்ஜி அளிக்கும் பொழிப்புரையோ?!

கரப்ஷன் காங்கிரஸ்! ஆறு அதிர்ச்சிகள்


சோ
னியாவை 'சொக்கத் தங்கம்’ என்ற அடைமொழியுடன்தான் அழைப்பார் முதல்வர் கருணாநிதி. ஆனால், 'ஊழல் உலோகம்’ என்று சோனியாவை அழைக்க ஆரம்பித்திருக்கிறார்கள் டெல்லிப் பத்திரிகையாளர்கள்.
125 ஆண்டுகளைக் கடந்த காங்கிரஸ் கட்சி, இன்று நித்தமும் ஊழல், முறைகேடுகளுக்கு விளக்கம் சொல்வதை மட்டுமே தனது வேலையாக வைத்திருக்கிறது. வெள்ளையர் களை விரட்டியதே இவர்கள் பங்கு பிரிக்கத் தானோ என்று அச்சம்கொள்ளும் அளவுக்கு ஊழல் குற்றச்சாட்டுகள் குவிய ஆரம்பித்து இருக்கின்றன. ஊழலே நடக்காமல் தடுக்க, சோனியாவால் முடியாது. ஆனால், அது வெளிச்சத்துக்கு வந்த பிறகேனும், உறுதியான நடவடிக்கை களை எடுத்திருக்க வேண்டும். நடவ டிக்கை எடுக்காதது மட்டுமல்ல; அதை மறைக்கும் காரியங்களும் சோனியா ஆசீர்வாதங்களுடன் நடப்பதுதான் இந்திரா காங்கிரஸுக்கு 'கரப்ஷன் காங்கிரஸ்’ என்று பட்டம் சூட்டக் காரணமாகிறது!
'ஊழலைப் பொறுத்துக்கொள்ளவே முடியாது. ஊழல் மற்றும் தவறான நடவடிக்கை எதுவாக இருந்தாலும், காங்கிரஸ் கட்சி அதைப் பொறுத்துக் கொள்ளாது. அதிகப்படியான எளிமை யும் கட்டுப்பாடும் நம்முடைய வழி களாக இருக்க வேண்டும். அதிகப்படியான சொத்துக்கள் மற்றும் வசதி வாய்ப்பைவெளிப் படுத்தும் வகையில் காங்கிரஸ்காரர்கள் நடந்து கொள்ளக் கூடாது. அதன் மூலம் மற்றவர்கள் கண்களை உறுத்துவதையோ, மற்றவர்க்குப் பொறாமை ஏற்படுத்துவதையோ அனுமதிக்கக் கூடாது. பொது வாழ்வில் ஈடுபடுவோர், அரசியல் வாதிகள் மீதான அனைத்து ஊழல் வழக்கு களும் குறிப்பிட்ட காலத்துக்குள்விசாரிக்கப் பட வேண்டும்!’ - சொன்னவர் மகாத்மா காந்தி அல்ல; சோனியா காந்தியேதான்!
30 நாட்களுக்கு முன் நடந்த அகில இந்திய  காங்கிரஸ் மாநாட்டில்தான் இப்படி முழங்கி னார் சோனியா. ஆனால், இந்த ஒரு மாதத்துக் குள் காங்கிரஸுக்கு எதிரான அத்தனை வழக்குகளையும் முடிந்த அளவுக்கு ஆறப் போட்டுவைக்கவும் காரணம், இதே சோனியாவே! 
நம்பர் 10, ஜன்பத் வீட்டு ஊறுகாய்ப் பானைக்குள் ஊறப்போடப்பட்டுவிட்ட வழக்குகளின் கதையைவைத்து ஊழல் பாரதம் படைக்கலாம். ஸ்பெக்ட்ரம் முதல் போஃபர்ஸ் வரை அனைத்தும் நம் கண்ணுக்கு முன்னால் தேய்பிறை ஆகிக்கொண்டே இருக்கின்றன!
புஸ் ஆகும் ஸ்பெக்ட்ரம்!
இந்திய தேசம் இதுவரை சந்திக்காத மிகப் பெரிய அவமானம்... ஸ்பெக்ட்ரம் 2ஜி அலை வரிசை ஒதுக்கீட்டு ஊழல். அரசாங்கக் கணக்குக்கு வந்தாக வேண்டிய பணத்தைச் சில தனி மனிதர்கள் தங்களது சொந்த சுக போகங் களுக்குத் திருப்பிக்கொண்டார்கள் என்ற குற்றச்சாட்டை மத்திய ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு ஆணையம் தன்னுடைய தாக்கீ தாக பிரதமர் மன்மோகன் சிங்குக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் தந்தது.
'சுமார் 22 ஆயிரம் கோடி ரூபாய் பணம் கைமாறி உள்ளது!’ என்று அவர்கள் குற்றம்சாட்ட... அதில் முகாந்திரம் இருப்பதாகச் சந்தேகப்பட்ட பிரதமர், வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்த சி.பி.ஐ-க்குக் கட்டளை இட்டார். ஓர் ஆண்டு காலம் அவர்கள் 'அமைதியாக’ விசாரித்து வந்தார்கள். அதற்குள் மத்தியக் கணக்கு மற்றும் தணிக்கைத் துறை தன்னுடைய அறிக்கையை வெளியிட்டது. 'முறைப்படி, விதிமுறைகளை ஒழுங்காகப் பின்பற்றி இந்த அலைக்கற்றைகளைக் கொடுத்து இருந்தால்,  1.76 லட்சம் கோடி வரை அரசாங்கத்துக்கு லாபம் கிடைத்திருக்கும்!’ என்று சி.ஏ.ஜி. கூறியது. எதிர்க் கட்சிகள் இதைச் சிக்கெனப் பிடித்துக்கொண்டன.
நாடாளுமன்றத்தை நடத்த முடியாத அளவுக்கு ஸ்பெக்ட்ரம் நாறியது. அந்தத் துறை அமைச்சராக இருந்த ஆ.ராசாவை ராஜினாமா செய்யவைத்தார்கள். எதிர்க் கட்சிகளையும் உச்ச நீதிமன்றத்தையும் இதன் மூலம் அமைதியாக்கிவிட காங்கிரஸ் நினைத்தது. ஆ.ராசா முதல் அவரது பினாமிகள் வீடுகள் வரை சி.பி.ஐ. ரெய்டு போனது. அவரே கடுமையான விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். இவை எல்லாமே டிசம்பர் சீஸனாக முடிந்து போனது.
''அலைக்கற்றை ஒதுக்கீட்டால் அரசாங்கத் துக்கு ஒரு பைசாகூட இழப்பு இல்லை!'' என்று பேச ஆரம்பித்தார், ராசாவுக்குப் பிறகு அந்தத் துறைக்குப் பொறுப்பேற்றுக்கொண்ட மத்திய அமைச்சர் கபில்சிபல். ஒதுக்கீடு பெற்ற நிறுவனங்களின் உரிமம் ரத்தாகும், அவர்கள் மீது  நடவடிக்கை பாயும் என்று நவம்பர் மாதம் மீடியாக்களிடம் கர்ஜித்த கபில்சிபலின் வார்த்தைகள் ஜனவரியில் தேய்ந்தன. இந்த நிறுவனங்களுக்கு ரகசிய சுற்றறிக்கை அனுப்பி ஃபைன் போடப்பட்டதாகவும், அதை அவர் கள் உடனே செலுத்தியதாகவும் கணக்குக் காட்டினார் கபில்சிபல். 'ஃபைன் கட்டியதால் பிரச்னை முடிந்தது’ என்றார்.
இது குறித்து விசாரிக்க உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சிவராஜ் பாட்டீல் தலைமை யில் விசாரணைக் கமிஷனை அமைத்தார் பிரதமர். நீதிபதிக்குத் தரப்பட்ட கால எல்லை முடிந்த பிறகும் அறிக்கை வரவில்லை. இந்த லைசென்ஸை வாங்கித் தரும் புரோக்கராகச் செயல்பட்ட நீரா ராடியாவின் பேச்சுகள் அடங்கிய டேப்புகள்பற்றி, அமைச்சரவைச் செயலாளர் கே.எம்.சந்திரசேகரிடம், அறிக்கை தாக்கல் செய்ய பிரதமர் உத்தரவிட்டார். அந்த அறிக்கையும் வந்ததாகத் தெரியவில்லை. ரெய்டு அடித்த களைப்பில் இருந்து இன்னமும் சி.பி.ஐ. அதிகாரிகள் மீளவில்லை. அவர்கள் மத்தியிலும் சுணக்கம் ஏற்பட்டுவிட்டது.
தி.மு.க-வுடன் காங்கிரஸ் கூட்டணி முடிவானதால், இந்த வழக்கு முடக்கப்பட்டதா அல்லது சுப்பிரமணியன் சாமி சொல்வதைப்போல, சோனியாவின் சகோதரிகளுக்கும் இதில் பங்கு உள்ளதா என்ற கேள்வியில் புஸ் ஆகிக்கொண்டு இருக்கிறது ஸ்பெக்ட்ரம்!
காணாமல் போகும் காமன்வெல்த்!
உலகம் முழுக்க நம் புகழ் பரப்ப நடத்தப் பட்ட காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி யால், இந்தியாவில் ஊழல் முறைகேடுகள் எந்த அளவுக்குத் தலை விரித்து ஆடுகின்றன என்பதை வெளிச்சப்படுத்திக்கொண்டோம். டெல்லியை அழகுபடுத்துவதில் ஆரம்பித்து, விளையாட்டு வீரர்கள் தங்கும் இடத்தின் கழிவறைகள் வரை எல்லாவற்றிலும் கரன்சியை அமுக்கினார்கள்.
இந்தப் போட்டிகளின் பொறுப்பாளராக இருந்த சுரேஷ்கல்மாடி முதல், டெல்லி மாநில முதல் அமைச்சர் ஷீலா தீட்சித் வரை அனைத்துமே காங்கிரஸ் தலைகள் பெயரே அடிபட்டது. ஒரு பாலம் கட்டுவதற்கு சுமார்  300 கோடி ஆகும் என்றால், இவர்கள் கணக்குப்படி ஒரு பாலத்தைச் சீரமைக்கவே  500 கோடி வரை செலவானது.  விளையாட்டு வீரர்கள் பயன்படுத்தும் அத்தனை பொருட் களையும், அடக்க விலையைக் காட்டிலும், 60 முதல் 100 மடங்கு வரை அதிக வாடகைக்கு எடுத்தார்கள். எல்லாமே கமிஷன்... எங்கு திரும்பினாலும் பினாமிகள்... என்ற குற்றச் சாட்டுகள் காமன்வெல்த் போட்டி தொடங்கும் முன்பே வெளியில் வந்தன. அமைதி காத்த சோனியா, போட்டிகள் முடிந்த பிறகு சுரேஷ் கல்மாடி மீது நடவடிக்கை எடுத்தார். சிலர் கைதாகினர். ஆனால், கல்மாடி கைதாகவில்லை. அனைத்துக்கும் காரணமான அவர் காப்பாற்றப்பட்டார். இன்று வரை காங்கிரஸ் எம்.பி-யாகவே அவர் தொடர்கிறார். இத்தனைக்குப் பிறகும், 'நான் நிரபராதி’ என்று பேட்டிகள் தந்துகொண்டு இருக்கிறார்.
அவரை மட்டுமல்ல; அந்த வழக்கையே ஒன்றும் இல்லாமல் ஆக்குவதற்காகத் திரை மறைவுக் காரியங்கள் நடக்கின்றன. அதில் முக்கியமானது, காமன்வெல்த் தொடர்பான ஆவணங்களையே காணாமல் அடித்துவிட்டது!
ஊழல் நடந்ததை நிரூபிக்கத் தேவையான டெண்டர் கோருதல், பட்ஜெட் ஒதுக்கீடு, ஒப்பந்த விவரம் ஆகிய மூன்று ஆவணங்களையும் காணவில்லை. பிறகு, எதைவைத்து குற்றச்சாட்டை நிரூபிப்பார்கள்? 'அமெரிக்காவில் இருக்கும் தன்னுடைய உறவினர் வீட்டுக்கு இந்த ஆவணங்களை கல்மாடி அனுப்பிவைத்துவிட்டார்’ என்று பெயர், முகவரியுடன் டெல்லி பத்திரிகைகள் எழுதிய பிறகும் காங்கிரஸ் அமைதி காக்கிறது!
'தாமஸ் நல்லவர்!’
ஊழல் தடுப்புக் கண்காணிப்பு ஆணையம் எனப்படும் விஜிலென்ஸ் கமிஷனர்தான் இந்தியாவின் எந்தப் பாகத்திலும் எந்த முறைகேடும் நடக்காமல் கண்காணிக்க வேண்டிய பெரும் பொறுப்புகொண்டவர். அந்தத் துறை ஒழுங்காகச் செயல்பட்டு இருந்தால், நாட்டில் இந்த அளவுக்கு முறை கேடுகள் நடக்க வாய்ப்பே இல்லை. அந்த ஆணையத்தின் கமிஷனராக தாமஸ் என்பவரை நியமித்தபோது, நண்டைச் சுட்டு நரியைக் காவல்வைத்த கதைதான் நினைவுக்கு வந்தது. கேரள மாநிலத்தின் சிவில் சப்ளைஸ் கமிஷனராக இருந்தபோது, பாமாயில் இறக்குமதி தொடர்பாக இவர் மீது குற்றச் சாட்டு வந்தது. சிங்கப்பூரில் இருந்து பாமாயில் இறக்குமதி செய்ய கேரள அமைச்சரவை ஒப்புதல் தருவதற்கு ஒன்பது நாட்களுக்கு முன்ன தாகவே வெளிநாட்டு கம்பெனியில் இருந்து இவர் வாங்கிவிட்டதாக சந்தேக ரேகை படிந்தது. அது தொடர்பாக வழக்குப் பதியப்பட்டது. அப்படிப்பட்டவரை விஜிலென்ஸ் கமிஷனராக எப்படி நியமிக்கலாம் என்பதுதான் உச்ச நீதிமன்றம் எழுப்பிய கேள்வி.
இந்தப் பதவிக்கு வரக்கூடியவரை பிரதமர், உள்துறை அமைச்சர், நாடாளுமன்ற எதிர்க் கட்சித் தலைவர் ஆகிய மூவரும் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். எதிர்க் கட்சித் தலைவராக இருந்த சுஷ்மா ஸ்வராஜ், தாமஸின் நியமனத்தை எதிர்த்தார். ஆனாலும், மீறி நியமிக்கப்பட்டார் தாமஸ். உச்ச நீதிமன்றம் கேள்வி கேட்ட பிறகாவது, அவரை நீக்கி வேறு ஒருவரை நியமித்து இருக்கலாம். ஆனால், சோனியாவின் பாதுகாவலரான ஜார்ஜ் மூலமாகப் பதவியைப் பிடித்தவர் தாமஸ் என்பதால், அது நடக்காமல் போனது. 'தாமஸ் சிறந்த நிர்வாகி. இம்மாதிரியான பதவியில் நியமிக்கப்படுபவரின் தகுதிகள் குறித்து உச்ச நீதிமன்றம் கேள்விகள் கேட்க முடியாது!’ என்று மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது. ஓர் அரசாங்கத்தின் நியாய தர்மங்கள் எந்த அளவுக் குத் தரம் தாழ்ந்துகொண்டு இருக்கின்றன என்பதற்கு தாமஸ் நியமனம் ஒரு சாட்சி!
வீட்டை இடித்தால் மட்டும் போதுமா?
நாட்டைக் காக்க உயிரைக் கொடுத்த தியாகி களின் வயிற்றில் அடித்த விவகாரம்தான் ஆதர்ஷ் வீடு ஒதுக்கீட்டு ஊழல்!
கார்கில் போரில் உயிர் இழந்த வீரர்களுக்கு மும்பை கொலபா கடற்கரையில் வீடுகள் கட்ட அனுமதி தரப்பட்டது. 31 வீடுகள் ராணுவ வீரர்களுக்கும், ஒன்பது வீடுகள் பொதுமக்களுக்கும் கட்ட அனுமதி தரப்பட்டது. ஆறு மாடிகளுக்கு மேல் கட்டக் கூடாது என்பது விதி. அதை மீறி, வீட்டு எண்ணிக்கையை 71 ஆக்கினார்கள். அதன் பிறகு 91 ஆகக் கூட்டினார்கள். 6 மாடிகளை 31 மாடி களாக உயர்த்தினார்கள். மகாராஷ்டிர காங்கிரஸ் அரசு இந்தக் காரியங்களைத் தடையில்லாமல் செய்துகொடுத்தது. அரசியல்வாதிகள், ராணுவ உயர் அதிகாரிகள், ராணுவத் தளபதிகளின் உறவினர்கள், காங்கிரஸ் முதல்வர் அசோக் சவானின் சொந்தங்கள் என்று உள்ளே புகுந்து வீடுகளைக் கைப்பற்றி னார்கள். கடற்கரை மேலாண்மை விதிகள் மீறப்பட்டதைவிட... தார்மீக நெறிமுறைகள் காற்றில் பறந்தன. பத்திரிகைகள் தொடர்ச்சியாக எழுதியதற்குப் பிறகு, அசோக் சவான் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். விதிமுறைகளை மீறியது உண்மைதான் என்பதை உணர்ந்து, 31 மாடிக் கட்ட டத்தை முழுமையாக இடிக்க மத்திய அமைச்சர் ஜெயராம் ரமேஷ் உத்தரவிட்டு இருக்கிறார்.
'விதிமுறைகளை மீறிக் கட்டப்பட்ட கட்டடங்களை இடித்த பிறகு, அவ்வளவுதானே... இந்த விசாரணைகளை நிறுத்தி விட வேண்டியதுதானே?’ என்று காங்கிரஸ் தலைவர்கள் மெதுவாக முணு முணுக்கத் துவங்கி இருக்கிறார்கள்!
காப்பாற்றப்படும் கறுப்பு மனிதர்கள்!
நேர்மையாளர் என்ற மன்மோகன் சிங்கின் முகத்திரை கறுப்புப் பணக் குவிப்பு விஷயத்தில் கிழிந்தது. மேற்கு ஐரோப்பிய நாடான வீக்டென்ஸ்டைன், வரி ஏய்ப்பாளர்களின் சொர்க்கம் என்று சொல்லப்படும். அங்கு இருக்கும் சுவிஸ், ஜெர்மன் நாட்டு நிறுவனங்கள் மற்றும் வங்கிகளில் யாரும் எவ்வளவு முதலீடும் செய்யலாம். அதற்கு கணக்குக் கேட்க மாட்டார்கள். அங்கு உள்ள எல்.டி.ஜி. வங்கியில் பணம் போட்டு உள்ளவர்களின் விவரங்களை ஜெர்மன் நாடு வாங்கி உள்ளது. அவர்களிடம் இருந்து நம்முடைய மத்திய அரசு பெற்றுள்ளது. அந்தத் தகவல்களை வெளியிட வேண்டும் என்று மூத்த வக்கீல் ராம் ஜெத்மலானி வழக்குப் போட்டார். 'நாட்டின் வளத்தைச் சூறை யாடிப் பதுக்கியவர்களின் பெயர்களை எப்படி மறைக்கலாம்?’ என்று கேட்கிறது நீதிமன்றம். 'பெயரை வெளியிட மாட்டோம் என்ற உத்தர வாதத்தின் அடிப்படையில்தான் வாங்கி இருக் கிறோம்!’ என்று மழுப்புகிறது மத்திய அரசு.
'வரி வசூல் செய்வதற்காகத்தான் இந்தப் பெயர்கள் வாங்கப்பட்டுள்ளன!’ என்று நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியிருக்கிறார். கறுப்புப் பணத்தைப் பதுக்கியவர்களை வெளியில் சொல்ல இவர்களால் முடியாது. ஏனென்றால், அந்த மனிதர் களின் தயவில்தான் காங்கிரஸ் கட்சியே இயங்கி வருகிறது என்று ராம் ஜெத்மலானி போன்றவர்கள் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்.
போஃபர்ஸ் பீரங்கியும் இத்தாலி மாஃபியாவும்!
ராஜீவ் படத்தை வரைந்து 'பீரங்கித் திருடன்’ என்று தி.மு.க. பிரசாரம் செய்த இந்த வழக்குக்கு வயது 20. ஆனால், வழக்கு இன்னும் முதல் படியைக்கூடத் தாண்டவில்லை. போஃபர்ஸ் பீரங்கி பேர ஊழல் வழக்கில் கமிஷன் பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டார் இத்தாலி நாட்டைச் சேர்ந்த தொழிலதிபர் குவாத்ரோச்சி. இவர் மீதான குற்றச்சாட்டை நிரூபிக்க ஆதாரம் இல்லை என்று சொல்லி, வழக்கை கடந்த மாதம் திரும்பப் பெற்றுக்கொண்டது சி.பி.ஐ.
இதைக் கேட்டதும் நீதிபதி வினோத் யாதவ் ஆடிப்போய்விட்டார். 'சி.பி.ஐ. இப்படிச் செய்வதற்குத் தவறான உள்நோக்கம் இருக்க வேண்டும்!’ என்றார். எந்தக் குற்றச்சாட்டுக்குப் பதில் சொல்ல முடியாமல் ராஜீவ் காந்தி இந்தியா முழுவதும் தேர்தலில் தோற்றாரோ... அந்த வழக்கு இன்று அநாதையாக நின்றுகொண்டு இருக்கிறது. அஜய் அகர்வால் என்ற ஒரு தனி மனிதர் மட்டுமே இதைப் பேசிக்கொண்டு இருக்கிறார்.
இந்த வழக்கை மறைக்கக் காரணம், ராஜீவ் மீதான குற்றச்சாட்டு மட்டும் அல்ல. சோனியாவுக்கு நெருக்கமானவர் குவாத்ரோச்சி என்பதும் ஓர் அடிப்படைக் காரணம். 'ஆதாரம் இல்லை’ என்று சி.பி.ஐ. சொல்வதும் இதனால்தான்.
ஒரு காலத்தில் இத்தாலிதான் மாஃபியாக்களின் தலைமையிடம் என்பார்கள். சமீப கால இந்திய நிகழ்வுகள் அதை உண்மை என்று நம்பத் தூண்டுகிறது!
நன்றி:ஆனந்த விகடன்  02 /02 /2011

சில தேசிய தலைவர்களின் நாட்டுப்பற்றில் சந்தேகம்: ஜெயலலிதா

சென்னை : ""ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் மத்திய அரசு மவுனம் காத்து வருவதன் மூலம், சில தேசிய தலைவர்களின் நாட்டுப்பற்றில் சந்தேகமும், பல கேள்விகளும் எழுந்துள்ளது,'' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா கூறியுள்ளார்.


அவரது அறிக்கை: ஸ்பெக்ட்ரம் ஊழல், நாட்டின் பாதுகாப்பிற்கு பெரிய ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த இமாலய ஊழலை நிகழ்த்தியவர்களும், அதன் பின்னணியில் உள்ளவர்களும், தேசத் துரோக செயலுக்காக கோர்ட்டில் விசாரிக்க வேண்டும். அடிமாட்டு விலைக்கு ஸ்பெக்ட்ரம் உரிமத்தை பெற்ற நிறுவனங்களில், ஒரு நிறுவனத்தை கூர்ந்து கவனித்தால், நாட்டின் நலனுக்கு எதிராக சர்வதேச அளவில் சதித்திட்டம் தீட்டப்பட்டு இருப்பது, இந்திய நாட்டின் அரசியல் தலைமை எந்த அளவிற்கு, எதிரிகளிடம் சரணடைந்து இருக்கிறது, சர்வதேச சதிகாரர்களால் விரிக்கப்பட்ட ஆதாய மாய வலையில் எப்படி விழுந்து இருக்கிறது என்பன போன்ற அச்சுறுத்தக்கூடிய பல தகவல்கள் வெளிவரும். ராஜாவால் பயனடைந்த நிறுவனங்களில் ஒரு நிறுவனம், பாகிஸ்தான், சீனா மற்றும் தாவூத் இப்ராகிம் ஆகியோர் மூலம் இந்திய நாட்டின் பாதுகாப்பிற்கு பல முனைகளில் மிகப் பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி தந்துள்ளது. இந்தியாவிற்கு ஏற்பட்ட ஒரு லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு என்பது மட்டும் தற்போது கேள்வி அல்ல; இந்திய நாட்டின் பாதுகாப்பு, இறையாண்மை மற்றும் நாட்டின் ஒற்றுமை தான் தற்போதைய முக்கியமான கேள்வி.

இதில் உள்ள விசித்திரம் என்னவெனில், மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனைத்தும் தெரிந்திருந்தும், பல்வேறு காலகட்டங்களில் பல எதிர்ப்புகளைத் தெரிவித்திருந்தும், ராஜாவின் கீழ் இருந்த தொலைத்தொடர்புத் துறை அனைத்திற்கும் ஒப்புதல் அளித்து விட்டது தான். இதன் பின், மத்திய உள்துறை அமைச்சகம் தொடர்ந்து தீவிர மவுனத்தை கடைபிடித்து வருவது ஏன்? தவறான கொள்கை மூலம் முறைகேடாக வழங்கப்பட்ட, "2ஜி' உரிமங்களை உடனடியாக கபில் சிபல் ரத்து செய்ய வேண்டும். தொலைத் தொடர்பு அலைவரிசை என்பது, மதிப்புமிக்க, நாட்டின் அரிதான வளம். இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்பதால், பகைமை நாடுகளின் கைகளில் இந்த வளம் சென்றடையக் கூடாது. இந்தப் பிரச்னைகளில் செவிடன் காதில் ஊதிய சங்கு போல் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் மத்திய அரசு மவுனம் சாதிப்பது, இந்திய நாட்டின் சில தேசிய தலைவர்களின் தேசப்பற்று குறித்த முக்கியமான கேள்விகளையும், சந்தேகங்களையும் எழுப்புகிறது. இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.

நன்றி: தினமலர் 29 /01 /2011

உலகக் கோப்பையில் சாதிப்பார் அஸ்வின்!

உலகக் கோப்பையில் பங்கேற்க உள்ள இந்திய அணியில் ஒரு தமிழக வீரருக்கு இடம் கிடைத்துள்ளது என்றால், அது சாதாரண விஷயமில்லை.

தேவையான நேரத்தில், தேவையான ஒற்றை வார்த்தையை பயண்படுத்தினால் அது எந்த அளவுக்கு மாற்றம் ஏற்படும் என்பதில் அஸ்வினே ஒரு முன் உதாரணம்.

டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டியில் போதுமான அளவுக்கு இடம்பெறாவிட்டாலும், இருபது ஓவர் போட்டியில் அஸ்வின் சாதித்த அந்த ஒரு ஆட்டம் தான் இன்று இந்திய அணியில் இடம் கிடைக்க வாய்ப்பாக அமைந்துவிட்டது.

அப்படி என்ன ஒரு வார்த்தை அஸ்வின் உதிர்த்தார் என்பது தானே உங்கள் கேள்வி? அது 'நான் பந்து வீசுகிறேன்' என்பது மட்டுமே.

ஐபிஎல் 3-ல் சாம்பியம் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, அடுத்து பங்கேற்ற சாம்பியன் லீக்கில் தான் அஸ்வின் இந்த வார்த்தை கூறியுள்ளார். இத்தொடரில் விக்டோரியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் இரு அணிகளும் சம எண்ணிக்கையில் ரன்கள் எடுத்ததால் ஆட்டம் டையில் முடிந்தது. இருபது ஓவர் போட்டியில் ஆட்டம் டையானால் சூப்பர் ஓவர் வைத்து அதில் யார் அதிகம் ரன் அடிக்கிறார்களோ அவர்களே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவர்.

அந்த வகையில் விக்டோரியா அணி முதலில் சூப்பர் ஓவரை விளையாட அனுமதிக்கப்பட்டது. விவகாரமே இங்குதான் ஆரம்பமானது. அதிக பணம் கொடுத்து வாங்கப்பட்ட வெளிநாட்டு வேகப்பந்து வீச்சாளர்களான போலிங்கர், கெம்ப் ஆகியோர் அமைதி காக்க, சூழற் பந்து வீச்சாளார்களில் முரளிதரன் யோசிக்க, அந்த ஒரு தருணத்தில் 'நான் பந்து வீசுகிறேன்' என்று முன் வந்தார் அஸ்வின். இதை சற்றும் எதிர்பாராத கேப்டன் தோனி அஸ்வினையே பந்து வீச அனுமதித்தார்.

இந்த துணிச்சல் போதாதா இந்திய அணிக்கு? அந்தப் போட்டியில் சென்னை அணி தோற்றாலும் அஸ்வீனின் மன உறுதிக்கு தோனி சில வாய்ப்புகள் வழங்கினார். அதில் அஸ்வின் பங்கேற்ற அனைத்து போட்டிகளிலும் தான் நல்ல ஒரு பந்து வீச்சாளர் என்பதை நிருபித்தார்.

அதிலும் டெஸ்ட் போட்டியில் நிரந்திரமாக விளையாடி வந்த பிரஜன் ஓஜாவை பின்னுக்கு தள்ளிவிட்டு அஸ்வின் உலகக் கோப்பை அணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது முக்கிய காரணமே  அஸ்வினின் விதவிதமான பந்து வீச்சே.கேரம், ஆப் ஸ்பின், கூக்ளி என பந்தை லாவகமாக கையாளுகிறார். அதுவும் சமீப காலத்தில் இலங்கை வீரர் மேண்டிஸுக்கு படு போட்டியாக உருவாகிவிட்டார்.

இந்திய ஆடுகளங்கள் அனைத்தும் சூழற் பந்து வீச்சுக்கு நன்கு ஒத்துழைக்கும் என்பதால் பகுதி நேர சூழற்பந்து வீச்சாளார் இருந்தும் அஸ்வின் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பலருக்கு அஸ்வின் ஒரு பந்து வீச்சாளராக தெரிந்தாலும், அவர் ஒரு சிறந்த பேட்ஸ்மேன் என்பது பலருக்கு தெரியவில்லை.

7 ஒரு நாள் போட்டியில் பங்கேற்று 14 விக்கெட்களை கைப்பற்றியுள்ள அஸ்வின், இந்த உலகக் கோப்பையிலும் சாதிப்பார் என்று தேர்வாளார்கள் முடிவே இந்த வாய்ப்புக்கு இன்னொரு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.

தேர்வாளர்களின் தேர்வை தமிழக வீரர் அஸ்வின் நியாயப்படுத்த கடுமையாக போராடுவார் என்பது மட்டும் நிச்சயம். மொத்தத்தில் இளைஞர்களுக்கு ரோல் மாடலாக உறுவாகியுள்ள அஸ்வின் இந்த உலகக் கோப்பையில் சாதிப்பார் என எதிர்பார்க்கலாம்.
நன்றி: விகடன்.காம்

தலையைக் காப்பாற்றத்தான் வால் ஆடுகிறதோ?


பழ. நெடுமாறன்

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்வதில் அரசுக்கு ஏற்பட்ட இழப்பீடு 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் என ஆய்ந்து மதிப்பீடு செய்தவர் இந்தியக் கணக்காய்வர் - தலைமைத் தணிக்கையர் ஆவார்.

 அரசியல் சட்டத்தின் கீழ் இவர் நியமிக்கப்பட்டவர். இந்தியக் குடியரசுத் தலைவர் தமது கையொப்பமும் முத்திரையும் கொண்ட அதிகார ஆணையின் வழி அவரை அமர்த்துவார்.
 மேலும், உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி ஒருவரை அகற்றுவதுபோல் அதேமுறையில் அதே காரணங்களின் மீது மட்டுமே அவர் பதவியிலிருந்து அகற்றப்பெறுவார் என அரசியல் சட்டத்தின் ஐந்தாம் அத்தியாயத்தின் 148-வது பிரிவு(1) என்பதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 இந்திய ஒன்றிய அரசு மாநில அரசுகள் பிற அதிகார அமைப்பு அல்லது குழுமம் ஆகியவற்றின் கணக்குகள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் இயற்றப்படும் சட்டத்தாலோ அதன் வழியாலோ வகுத்து உரைக்கப்படும் கடமைகளைக் கணக்காய்வர் - தலைமைத் தணிக்கையர் புரிவார்; அதிகாரங்களைச் செலுத்துவார். அதன்பொருட்டு அவ்வாறு வகைசெய்யப்படும் வகையில் இந்திய ஒன்றியம், மாநிலங்கள் ஆகியவற்றின் கணக்குகள் தொடர்பாக இந்திய அரசமைப்பின் தொடக்கநிலையை ஒட்டி முன்பு இந்திய தலைமைத் தணிக்கையருக்கு முறையே ஒன்றிய மாநிலங்கள் ஆகியவற்றின் கணக்குகள் தொடர்பாக வழங்கப்பட்டதான அல்லது அவரால் செலுத்தத் தகுமான கடமைகளைப் புரிந்தும் அதிகாரங்களையும் செலுத்தியும் வருவார் என அதே அத்தியாயத்தின் 149-வது பிரிவு தெளிவாகக் கூறுகிறது.
 151-வது பிரிவு (1)ல் ஒன்றியத்தின் கணக்குகளைப் பொறுத்தவரை இந்திய கணக்காய்வர் - தலைமைத் தணிக்கையரின் அறிக்கைகள் குடியரசுத் தலைவருக்குப் பணிந்து அனுப்பப்படுதல் வேண்டும். அவற்றை அவர் நாடாளுமன்ற அவை ஒவ்வொன்றின் முன்பும் வைக்கும்படி செய்வார் என திட்டவட்டமாக அரசியல் சட்டம் கூறுகிறது.
 அதாவது, இந்தியக் கணக்காய்வர் - தலைமைத் தணிக்கையரை மத்திய அரசே நியமிப்பதில்லை. அவர் குடியரசுத் தலைவரால் மட்டுமே நேரடியாக நியமிக்கப்படுகிறார். மத்திய-மாநில அரசுகளின் வரவு-செலவுக் கணக்குகளை அவர் ஆராய்ந்து தயாரிக்கும் அறிக்கைகளை நேரடியாகக் குடியரசுத் தலைவருக்கு மட்டுமே அனுப்புவார். அவர் அதை நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் பரிசீலனைக்காக அனுப்பி வைப்பார்.
 மத்திய அரசின் வரவு-செலவு குறித்து நாடாளுமன்றம் முடிவுசெய்யும். ஆனால், அந்த வரவு-செலவு சட்டப்பூர்வமாகவும், நேர்மையாகவும் நடைபெற்றிருக்கிறதா என்பதைக் கண்காணிக்கும் பொறுப்பு இந்தியக் கணக்காய்வர் - தலைமைத் தணிக்கையரின் கடமையாகும். இவ்வாறு செய்வதற்கு அவருக்கான அதிகாரத்தை அரசியல் சட்டம் வழங்கியுள்ளது. அவர் மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்கு உள்பட்டவர் அல்லர்.
 அரசு நிர்வாகத்தில் உள்ள முறைகேடுகளையும், ஊழல்களையும் சுட்டிக்காட்டுவதையும் அவற்றைத் திருத்துவதற்குரிய அறிவுரைகளையும் கூறுவது மட்டுமே இந்தியக் கணக்காய்வர் - தலைமைத் தணிக்கையரின் அதிகாரத்துக்கு உள்பட்டதாகும். ஆனால், அவற்றின்மீது உரிய நடவடிக்கைகளை எடுக்கும் பொறுப்பும், கடமையும் நாடாளுமன்றக் குழுக்களுக்கு மட்டுமே உண்டு.
 இந்திய நாடாளுமன்றத்தின் செயலர் - நாயகமாக 1984-90 வரை பணியாற்றியவரும், ஜெனீவாவைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படும் சர்வதேச நாடாளுமன்றச் சங்கத்தில் பணியாற்றியவரும் அரசியல் சட்ட மற்றும் நாடாளுமன்ற ஆய்வு நிலையத்தின் இயக்குநராக இருந்தவருமான முனைவர் சுபாஷ் சி. காசியப் நமது நாடாளுமன்றம் என்ற தலைப்பில் எழுதியுள்ள நூலில் நாடாளுமன்றக் குழுக்கள் செயல்படும் விதம், அவற்றுக்கான அதிகாரம் என்பவை குறித்தும் விரிவாக எழுதியுள்ளார்.
 அதில், நாடாளுமன்றக் குழு ஒன்றின் பரிசீலனையில் இருக்கும் எந்தப் பிரச்னை குறித்தும் அமைச்சர்களோ, நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாருமோ எவ்விதக் கருத்தும் கூறக்கூடாது எனத் திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.
 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் அரசுக்கு ஏற்பட்ட இழப்புக் குறித்து கணக்காய்வர்-தலைமைத் தணிக்கையரின் அறிக்கையை நாடாளுமன்றப் பொதுக்கணக்குக் குழு ஆராய்ந்து வருகிறது. இக்குழுவின் கூட்டங்களில் அதற்கு உதவுவதற்காக இந்தியக் கணக்காய்வர் - தலைமைத் தணிக்கையர் கலந்து கொள்வார். ஏனெனில், அவர்தான் இந்தக் குழுவுக்கு வழிகாட்டி, தத்துவாசிரியர் மற்றும் நண்பர் ஆவார். பொதுக்கணக்குக் குழுவின் தலைவருக்கு அவர் வலதுகரமாக விளங்கி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் விவரங்களுக்கு உரிய விளக்கங்களை அளிப்பார். குழுவின் உறுப்பினர்கள் குழுவால் விசாரிக்கப்படும் சாட்சிகளிடம் பயனுள்ள கேள்விகளைக் கேட்பதற்கும் உதவுவது அவருடைய கடமையாகும்.
 ஆக, பொதுக்கணக்குக் குழுவும் இந்தியக் கணக்காய்வர் - தலைமைத் தணிக்கையர் ஆகிய இருவரும் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ளும் தன்மை படைத்தவர்கள் ஆவார்கள்.
 இந்த அரசியல் சட்டப்பூர்வமான உண்மைகளை மிகச்சிறந்த வழக்கறிஞர் என்ற முறையில் நன்கு அறிந்திருந்தும், மத்திய அமைச்சர் கபில்சிபல் கடந்த 7-1-11 அன்று கணக்காய்வர் - தலைமைத் தணிக்கையரின் மதிப்பீடு தவறானது என்றும் அரசுக்கு எத்தகைய இழப்பும் ஏற்படவில்லை என்றும் பகிரங்கமாக அறிவித்திருக்கிறார்.
 மேலும், அந்த அறிக்கை அடிப்படையில் தவறானது என்றும் பரபரப்பை ஊட்டுவதற்காக வெளியிடப்பட்டது என்றும் குற்றம் சாட்டும் அளவுக்குச் சென்றிருக்கிறார்.
 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் அரசுக்கு ஏற்பட்ட இழப்பை மதிப்பீடு செய்வதில் கணக்காய்வர் - தலைமைத் தணிக்கையர் தவறான முறையைக் கையாண்டிருக்கிறார் என்றும் குற்றம்சாட்டியிருக்கிறார். அவர் மட்டுமல்ல, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் காங்கிரஸ் கட்சியின் பேச்சாளர்களுமான மனிஷ் திவாரி, ஜெயந்தி நடராசன் ஆகியோரும், கணக்காய்வர் - தலைமைத் தணிக்கையரைக் குறை கூறி அறிக்கை விடுத்துள்ளனர்.
 இவர்களின் அறிக்கைக்கு நாடாளுமன்றப் பொதுத்தணிக்கைக் குழுவின் தலைவர் முரளி மனோகர் ஜோஷி, இந்திய மார்க்சிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே. ரங்கராஜன் போன்ற பலரும் ஆதாரப்பூர்வமான பதில் கூறி அவர்களைக் கண்டித்துள்ளனர்.
 கணக்காய்வர் - தலைமைத் தணிக்கையர் மதிப்பீடு செய்த முறை நியாயமானது என்பதை அவர்களின் அறிக்கைகளில் தெளிவாகச் சுட்டிக்காட்டியுள்ளனர். எனவே, அந்த விவரத்துக்குள் மறுபடியும் செல்ல நான் விரும்பவில்லை.
 ஆனால், அரசியல் சட்டப்படியான குற்றச்சாட்டு ஒன்றை நான் எழுப்ப விரும்புகிறேன். ஜனநாயகத்தை ஏற்றுக்கொண்ட நாடுகள் அனைத்தும் அரசுகளின் வரவு-செலவு ஆய்வு செய்யப்படுவது தவிர்க்கமுடியாத ஒன்று என்பதை ஏற்றுக்கொண்டுள்ளன. நிர்வாகமும் கணக்காய்வும் இணைந்து ஒன்றுக்கொன்று முரண் இல்லாமல் செயல்படுவதன் மூலமே தவறுகளையும், ஊழல்களையும் களைந்தெறிய முடியும்.
 மக்களின் பணம் செலவிடப்படுவதில் மிகக்கடுமையான கண்காணிப்பு நிலவ வேண்டும் என்பதை ஜனநாயக நாடுகள் அனைத்தும் ஏற்றுக்கொண்டிருக்கின்றன. ஆனால், சர்வாதிகார முறையில் செயல்படும் நாடுகளில்தான், ஆள்பவர் செய்யும் எந்தத் தவறையும் யாரும் தட்டிக் கேட்க முடியாது. அவ்வாறு தட்டிக்கேட்பவர்களும் சுட்டிக்காட்டுபவர்களும் சிறைகளில் அடைக்கப்படுவார்கள் அல்லது தீர்த்துக்கட்டப்படுவார்கள்.
 இந்தியாவின் நிர்வாகத்தின்மீது இருக்கக்கூடிய இந்தக் கண்காணிப்பு விரிவாகவும் அற்புதமாகவும் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கண்காணிப்பு அமைப்புகள் திறமையாகச் செயல்பட்டால் ஆட்சியில் இருப்பவர்கள் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதை உறுதியாகக் குறைக்க முடியும். ஆனால், இந்தக் கண்காணிப்பு அமைப்புகள் எவ்வளவு விழிப்புடன் செயல்பட்டாலும் அவைகளால் நிர்வாகத்தைச் செம்மையாகக் கண்காணிக்க வேண்டுமென்றால் அதற்கு தலைமை அமைச்சரும், அமைச்சரவையும் முழுமையான ஒத்துழைப்புத் தரவேண்டும். நாடாளுமன்ற அமைப்புகளின் வெற்றி என்பது இவர்களைப் பொறுத்தே அமைந்திருக்கிறது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போன்ற உண்மையாகும்.
 ஆனால், 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டுப் பிரச்னையில் கணக்காய்வர் - தலைமைத் தணிக்கையர், உச்ச நீதிமன்றம் ஆகியவை தலையிட்டு அதிர்ச்சிகரமான உண்மைகளை வெளிவரச் செய்திருக்கின்றன. இந்திய வரலாற்றில் இதுவரை நடைபெற்றிராத நிகழ்ச்சியாக இந்த ஊழல் விசாரணையை நடத்திவரும் சி.பி.ஐ.யைத் தனது நேரடி கண்காணிப்புக்குள் உச்ச நீதிமன்றம் எடுத்துக்கொண்டிருக்கிறது.
 அதாவது, ஓராண்டு காலமாக இந்த ஊழல் குறித்து விசாரித்து வரும் சி.பி.ஐ. உருப்படியான நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை எனவும். அவ்வாறு அதைச் செயல்படவிடாமல் தடுத்தது யார் எனவும், உச்ச நீதிமன்றம் எழுப்பியுள்ள கேள்விகள் ஆட்சியாளரைக் குற்றவாளிகளாகக் கூனிக்குறுக வைத்துள்ளன.
 மேலும், இதற்கெல்லாம் பதில்கூற வேண்டிய பிரதமர் மன்மோகன்சிங் மௌனம் சாதிப்பதும் கபில் சிபல் போன்ற அமைச்சர்களும் மற்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் அரசியல் சட்டப்படி செயல்படும் அமைப்புகளைச் சாடிவருவதும் நாடாளுமன்ற ஜனநாயகத்தின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கிவிட்டன.
 கபில் சிபல், மனிஷ்திவாரி, ஜெயந்தி நடராசன் போன்றவர்கள் முன்னாள் அமைச்சர் இராசாவைக் காப்பாற்றுவதற்காகவோ அல்லது கூட்டணிக்கட்சியான தி.மு.க.வை இக்கட்டான சூழ்நிலையிலிருந்து மீட்பதற்காகவோ இந்திய கணக்காய்வர் - தலைமைத் தணிக்கையரைச் சாடியதாகக் கருத முடியாது.
 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி, மும்பை ஆதர்ஷ் வீடுகள் ஒதுக்கீடு போன்றவற்றில் குற்றம்சாட்டப்பட்ட சுரேஷ் கல்மாடி, முன்னாள் முதல்வர் அசோக் சவாண் போன்றவர்களுக்கு வக்காலத்து வாங்க எந்த மத்திய அமைச்சரும் அல்லது காங்கிரஸ் தலைவரும் முன்வரவில்லை. அந்த ஊழல்களுடன் ஒப்பிடும்போது 2ஜி அலைக்கற்றை ஊழல் பல ஆயிரம் மடங்கு அதிகமானதாகும்.
 ஆனால், இதை மூடி மறைக்க காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் முயற்சி செய்வது ஏன்? இந்த ஊழலில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மிகப்பெரிய தலைகளும் சம்பந்தப்பட்டிருப்பதால்தான் இவர்கள் அரசியல் சட்டத்தையும் நாடாளுமன்ற மரபுகளையும் துச்சமாக மதித்துத் துள்ளிக் குதிக்கிறார்களோ என்ற ஐயம் இயற்கையாகவே மக்கள் உள்ளங்களில் எழுகிறது.
 அரசியல் சட்டப்படி அமைத்த இந்திய கணக்காய்வர் - தலைமைத் தணிக்கையரை எதிர்த்தும், அலைக்கற்றை ஊழல் குறித்து நாடாளுமன்றப் பொதுக்கணக்குக் குழு நடத்திவரும் விசாரணையைக் கொஞ்சமும் பொருள்படுத்தாமலும் அதை அவமதிக்கும் வகையிலும் பேசிவரும் அமைச்சர் கபில் சிபல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மனிஷ்திவாரி, ஜெயந்தி நடராசன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க இந்தியக் குடியரசுத் தலைவரும் நாடாளுமன்றப் பேரவைத் தலைவரும் முன்வர வேண்டும். இல்லையெனில், அரசியல் சட்டமும் நாடாளுமன்ற மரபுகளும் எதிர்காலத்தில் மதிப்பிழந்து போகும்.
 இத்தகைய நடவடிக்கைகளை அவர்கள் எடுப்பதற்கு முன்வராவிட்டால், ஊழல்களை ஒழிக்கவும் நாட்டின் ஜனநாயக மரபுகளை நிலைநிறுத்தவும் மக்கள் கிளர்ந்தெழுந்து போராடும் நிலை தானாக உருவாகிவிடும். முன்பே குறிப்பிட்டபடி, இந்தியாவில் நாடாளுமன்ற ஜனநாயகத்தின் எதிர்காலமே.
நன்றி : தினமணி 25 /01 /2011

தேசிய உணர்வை அவமதிக்கும் பிரதமர்!


பாரத சமுதாயம் என்ன பாபம் செய்ததோ, அதனை வழி நடத்திச் செல்லும் பொறுப்பு மன் மோகன் சிங் என்னும் அந்நியரின் கைப்பாவையிடம் சிக்கிக் கொண்டுள்ளது.
இந்த அந்நியருக்கு பாரதத்தின் நலன் மீது ஆத்மார்த்தமாக எவ்வித ஈடுபாடும் இருப்பது சாத்தியமில்லை. பாரதத்தின் நிலப்பரப்பு ஆக்கிரமிக்கப்பட்டாலும், கை மாறிப் போனாலும், பாரதத்தின் மீது பகைமை பாராட்டும் நாடுகள் பல மாறு வேடங்களில் உள்ளே புகுந்து பொருளாதாரச் சீர்குலைவையும், உயிர்ச் சேதமும் பொருட் சேதமும் விளைவிக்கும் நாச வேலைகளையும் செய்தாலும் அதுபற்றிச் சிறிதளவும் கவலைப்படாமல் அகப்பட்டவரை சுருட்டுவதிலேயே குறியாக இருக்கும் அந்நிய சக்திக்குத் துணை போகிறோமே என்கிற உறுத்தல்கூட இல்லாமல் காலந் தள்ளிக்கொண்டிருக்கும் ஒருவரின் கையில் இன்று நாட்டின் நிர்வாகம் மாட்டிக்கொண்டுள்ளது.
மிகச் சிறந்த பொருளாதார நிபுணர் என்று அறியப்பட்ட மன்மோகன் சிங்கின் நிர்வாகத்தில்தான் என்றுமே காணாத வகையில் இன்று மிகப் பெரும் பொருளாதார வீழ்ச்சிக்கு பாரதம் ஆளாகியிருக்கிறது. நேர்மையான வழியில் பொருளீட்டும் எவராலும், அவர்களின் வருமானம் பல்லாயிரங்களாகவே இருந்தாலுங் கூட விலைவாசிக்கு ஈடு கொடுக்க இயலவில்லை. இந்நிலையில் சாமானிய மக்களின் நிலைமை எம்மாத்திரம்? தெருவில் இறங்கிப் பிச்சை எடுக்கத் தொடங்காத குறைதான்!
ஊழல் செய்து லஞ்சம் வாங்கிப் பழகியவர்களைத் தவிர வேறு எவராலும் இன்று நிம்மதியாக வாழ முடியவில்லை என்பதுதான் நிதர்சனம்.
நிர்வாகத் திறனோ, அமைச்சரவை சகாக்கள் மீதான ஆளுமையோ, சுய மரியாதையோ, நாட்டு நடப்பு பற்றிய கவலையோ சிறிதும் இல்லாத, மிகவும் நம்பகமான பினாமியாகத் தனக்கு ஒருவர் வேண்டும் என்று சோனியா காந்தி தேடியதில் அகப்பட்டவர்தான் மன்மோகன் சிங் என்பது இப்போது புரிகிறது. இதன் விளைவாக நாடு அனுபவிக்கப் போகும் பேராபத்தை நினைத்தால்தான் அச்சமாக இருக்கிறது.
மன்மோகன் சிங் எது குறித்தும் கவலைப்படாமல் பினாமிப் பிரதமராக இருப்பதிலேயே சுகம் கண்டு வருகிறார் என்று மட்டுமே எண்ணிக்கொண்டிருந்த நமக்கு அது போதாது என்று மிகப் பெரிய அதிர்ச்சியையும் கொடுத்துவிட்டார், மன்மோகன் சிங். முன்பின் யோசியாமல், என்ன பேசுகிறோம் என்கிற பிரக்ஞையுமின்றி தேசிய உணர்வையே அவமதிக்கத் தொடங்கியிருக்கிறார், அவர்.
bjp-ekta-yatra-posterகஷ்யப முனிவர் பெயரால் அமைந்த காஷ்மீர பூமி ஹிந்துஸ்தானத்தின் பிரிக்க முடியாததோர் அங்கம் என்பதை நினைவூட்டி, தேசிய உணர்வை நாடெங்கிலும் புதிய எழுச்சியுடன் தோற்றுவிக்க வேண்டியே பாரதிய ஜனதா கட்சியின் இளைஞர் அணி கிழக்கே சியாமா பிரசாத் முகர்ஜி பிறந்த மேற்கு வங்கத்திலிருந்து புறப்பட்டு தேசத்தின் குறுக்காக எட்டு மாநிலங்களைக் கடந்து குடியரசு தினத்தன்று மேற்கே காஷ்மீர் மாநிலத்தின் தலைநகர் ஸ்ரீநகரில் நமது மூவண்ண தேசியக் கொடியை ஏற்றிவைக்கும் செயல் திட்டத்தை மேற்கொள்ள நேர்ந்தது.
காஷ்மீரம் ஹிந்துஸ்தானத்தின் அங்கம்; அதனுள் பிரவேசிப்பது ஒவ்வொரு ஹிந்துஸ்தானப் பிரஜையின் உரிமை என்பதை நிலைநாட்டுவதற்கென்றே புறப்பட்டுச் சென்று, தடையை மீறிச் சிறையில் அடைபட்டு, ஷேக் அப்துல்லாவின் வஞ்சகச் சதியால் சிறையிலேயே உயிரிழந்த தியாக சீலர் சியாமா பிரசாத்தின் மகத்தான தேசப் பற்றுக்கு அஞ்சலி செலுத்துவது போலவும் மேற்கொள்ளப்பட்ட பாரதிய ஜனதா இளைஞர் அணியின் திட்டத்தை அரசியல் காரணங்களுக்கான நடவடிக்கை என்றும் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல் என்றும் கொச்சைப் படுத்தியிருக்கிறார், மன்மோகன்.
bjp-anurag_thakur_shahnawaz_hussainகுடியரசு தினத்தனறு பாரத தேசத்தின் ஒரு பகுதியில் தேசியக் கொடியை ஏற்றுவது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் செயல் என்று நாட்டின் பிரதமரே விமர்சிப்பாரேயானால் அது பிரிவினைச் சக்திகளுக்குக் கொண்டாட்டமாகி விடாதா? சிறு குழந்தைக்குக்கூட எளிதில் புரியக் கூடிய இந்த உண்மை மன்மோகனுக்குத் தெரியாமலா போகும்? தெரிந்தே அவர் செய்த இந்த விமர்சனம் தேசிய உணர்வையே அவமதிக்கும் செயல் அல்லவா? அதிலும் குடியரசு தின சந்தர்ப்பத்தில் தேசிய உணர்வை ஊட்ட வேண்டிய பிரதமர் பதவியில் இருக்கும் நபர் இப்படிப் பேசலாமா? இந்த அவலத்தை எங்கே சொல்லி ஆற்றிக்கொள்வது?
குடியரசு தினத்தன்று பிரிவினைச் சக்திகளின் நடமாட்டம் மிகுந்த பகுதியில் தேசியக் கொடியேற்றி தேசிய உணர்வைத் தூண்டும் பாரதிய ஜனதா இளைஞர்களின் கடமையுணர்வைப் பாராட்ட மனமில்லாவிடினும் அதற்கு அரசியல் நோக்கமா கற்பிப்பது? உமக்குத்தான் அதற்குத் துணிவு இல்லை, கொடியேற்றத் தடை விதிக்கும் ஜம்மு-காஷ்மீர் மாநில அரசை கண்டிக்கவும் திராணியில்லை, தடையை மீறி தேசியக் கொடியேற்றச் செல்லும் தேச பக்தர்களை அவமதிக்காமலாவது இருக்க வேண்டாமா நாட்டின் பிரதமர்? இதிலுமா அரசியல் பண்ணுவது?
இன்று மன்மோகன் பொறுப்பில், சோனியா காங்கிரஸ் தலைமையில் குப்பை கொட்டும் கூட்டணி ஆட்சியில் நடைபெறும் அலங்கோலங்கள் ஆயிரமாயிரம் இருக்க, அரசியல் பண்ணுவதற்கு பா.ஜ.க.வுக்கு விஷயத்துக்கா பஞ்சம்? போயும் போயும் குடியரசு தினத்தன்று தேசியக் கொடியேற்றும் தேசியக் கடமையை வைத்தா அது அரசியல் பண்ணும்?
ஒரு தேசியத் திருநாளன்று தேசியக் கொடியை தேசத்தின் ஒரு பகுதியில் ஏற்றுவது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் செயல் என்றும் பிரதமர் நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு பேசுவது வெட்கங்கெட்ட பேச்சு என்பது மட்டுமல்ல, தேசிய உணர்வுக்கே அவம்ரியாதை என்கிற பிரக்ஞை கூட இல்லாத ஒருவரை இன்னும் எத்தனை காலத்திற்கு பிரதம மந்திரியாக இந்த நாடு சகித்துக்கொண்டிருக்கப் போகிறது?
தேசப் பற்றும் பொறுப்புணர்வும் மிக்க மக்கள்தான் இதற்கு விடை கூற வேண்டும்.
நன்றி:தமிழ் ஹிந்து 

சுவாமி விவேகானந்தர் வழியில் இளைஞர்கள்

விவேகானந்தர் யார்? கொல்கட்டாவில் வக்கீல் விசுவநாத் தத்தர்-புனவேஸ்வரி அம்மையார் தம்பதியருக்கு 1863 ஜன., 12ல் விவேகானந்தர் பிறந்தார். நரேந்திரநாதர் என்பது இளமை பருவ பெயர். அளவு கடந்த உடல், அறிவு மற்றும் மனச்சக்தி மிக்கவர். குழந்தை பருவத்திலேயே ஈகை குணமும், தலைமை பண்பும் கொண்டிருந்தார். ஸ்ரீ ராமகிருஷ்ணரிடம், ""நீங்கள் இறைவனை பார்த்திருக்கிறீர்களா? நான் பார்க்க முடியுமா?'' என கேள்வி எழுப்பினார் நரேந்திரநாதர். ""இறைவனை நானும் கண்டுள்ளேன். உனக்கும் காட்டுவேன்'' என்றார் ஸ்ரீ ராமகிருஷ்ணர். ஆறாண்டுகள் அவரிடம் பயின்ற நரேனிடம், ""மக்கள் சேவையே மகேசன் சேவை'' என ராமகிருஷ்ணர் உபதேசித்தார். 1886ல் ராமகிருஷ்ணர் உடலை நீத்தபின், ஆறு ஆண்டுகள் பாரத நாட்டை சுற்றி வந்தார் நரேன். மன்னர்களுடன் பேசி, மக்களுக்கு தொண்டு செய்யுங்கள் என வற்புறுத்தினார்.1892ல் டிச., 25, 26, 27 தேதிகளில் குமரியில் பாறையில் அமர்ந்து தவம் செய்தார்.அவர் கண்டது என்ன? விவேகானந்தருக்கு பாரத ரிஷி முனிவர்களும் காட்சி தந்தனர். இப்படைப்பு முழுவதும் பரம்பொருள் மயம். பரம்பொருள் ஒன்று. அதன் பெயர்கள் பல. அதை அடையும் வழிகள் பல. மனிதனுள் தெய்வ சக்தி இருக்கிறது. இதுவே பாரதம் கண்ட ஆன்மிக நெறி. யமன் நசிகேதனை தட்டி எழுப்பி, எழுமின் விழிமின் என உசுப்பியதை போல, பாரத மக்களை விழிப்புற செய்வதே தன் கடமை என்று உணர்ந்தார் நரேந்திரர். சிகாகோவில் 1893ல் நடந்த சர்வமத மாநாட்டுக்கு அவர் செல்ல வேண்டும் என ராமநாதபுரம் மன்னர் பாஸ்கர சேதுபதியும், ராஜஸ்தான் கேத்ரி மன்னர் அஜித் சிங்கும் வற்புறுத்தினர். கேத்ரி மன்னர், அவருக்கு சுவாமி விவேகானந்தர் என்ற பெயரையும் சூட்டினார்.1893ல் மே மாதம் மும்பையில் இருந்து புறப்பட்டு சிகாகோ சென்றார் விவேகானந்தர். அங்கு 1893 செப்., 11ல் துவங்கிய சர்வமத மாநாட்டில், ""சகோதர, சகோதரிகளே'' என துவங்கி அவர் ஆற்றிய உரை, அனைத்து மக்களையும் ஆரவாரிக்க செய்தது.




பாரதத்தை பாம்பாட்டிகளின் நாடு என நினைத்து கொண்டிருந்த மேற்கு நாட்டவர், சிலருக்கு விவேகானந்தர் உரைகள் வியப்பூட்டின. மூன்றரை ஆண்டுகள் 1897 ஜனவரி வரை, அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, பிரான்சு போன்ற தேசங்களில் பயணம் செய்து அறவுரைகள் ஆற்றினார் விவேகானந்தர். குட்வின் என்ற ஆங்கில சுருக்கெழுத்தாளர், விவேகானந்தரின் அறஉரைகளை, எழுச்சி உரைகளை எழுதி வைத்து, மனித குலத்திற்கு பெரும் தொண்டாற்றினார். பல மேலை நாட்டு அறிஞர்கள், பேராசிரியர்கள் என அனைத்து தரப்பினரும் விவேகானந்தரின் சீடராகி, அவர் பணி தொடர வழிவகுத்தனர். மார்க்கெரட் நோபல் என்ற ஐரிஷ் பெண்மணி, அவரது மாணவியாகி சகோதரி நிவேதிதை என பெயர் சூட்டப்பட்டு, பாரதம் வந்து, தன் கடைசி மூச்சு வரை தொண்டு புரிந்தார்.விவேகானந்தர் 1897 ஜனவரியில் இலங்கை வழியாக தாயகம் திரும்பினார். பானகர சேதுபதி ஆண்ட ராமநாதபுரம் சமஸ்தானத்தில் முதலடி எடுத்து வைக்க வேண்டும் என விவேகானந்தர் விரும்பினார்.

1897 ஜன., 26 ராமநாதபுரம் அருகே குந்துகாலில் விவேகானந்தர் கப்பலில் வந்து இறங்கினார். பாஸ்கர சேதுபதி தலைமையில் மக்கள் அவரை வரவேற்றனர். விவேகானந்தர் ஏறி வந்த சாரட்டு வண்டியின் குதிரைகளை அவிழ்த்து விட்டு தானே அதை இழுத்து மரியாதை செலுத்தினார். ராமேஸ்வரம், ராமநாதபுரம், பரமக்குடி, மானாமதுரை, மதுரை, குடந்தை வழியாக சென்னைக்கு ரயிலில் சென்றார் விவேகானந்தர். பாரதத்தின் எதிர்காலம், அதன் கடந்த காலத்தை விடஒளிமயமாக இருக்கும் என பேசினார். சென்னையில் இன்று விவேகானந்தர் இல்லம் என்று புகழ்பெற்ற, ஐஸ் ஹவுஸில் ஒன்பது நாட்கள் தங்கி வீர உரைகளை அவர் ஆற்றினார். 1897பிப்., கொல்கட்டா புறப்பட்டார். அவரது உரைகள், "இந்திய பிரசங்கங்கள்' என பெயரில் புகழ்பெற்றன. 1897ல் தொண்டும் துறவும் என்ற மைய சிந்தனையுடன், ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் என்ற ஆன்மிக தொண்டு நிறுவனம், சுவாமி விவேகானந்தரால் துவங்கப்பட்டது.

பஞ்சம், பிளேக் நேரத்தில் நிவாரண பணிகளையும் ஆற்றினார் விவேகானந்தர். இறுதி மூச்சு வரை தெய்வ பணி, மனித நேய பணி செய்து, 1902 ஜூலை 4ல் உடலை விட்டு சென்றார். ஆயிரக்கணக்கான இளைஞர்கள் அவரது உபதேசங்களை படித்து, தேச விடுதலை பணியில் ஈடுபடுகின்றனர். கல்வி, மருத்துவம், நிவாரண பணி மூலம் இறை வழிபாடு, தொண்டு மூலம் தேசபக்தி, தேசத்தை மறுமலர்ச்சி பெற செய்யும் பணிகளில் ஈடுபடுகின்றனர்.

நற்பணி செய்யும் விவேகானந்த கேந்திரம் : சுவாமி விவேகானந்தர் தவம் செய்த புனித பாறை கன்னியாகுமரியின் முக்கடல் சங்கமிக்கும் பகுதியில் உள்ளது. அதை விவேகானந்தர் பாறை என்றே அழைக்கின்றனர். 1963ல் ஏக்நாத் ரானடே என்பவர், நன்கொடை பெற்று, காரைக்குடி எஸ்.கே.ஆச்சாரி தலைமையில் இந்த நினைவுச் சின்னத்திற்கான பணி நடந்தது. 1970ல் ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் தலைவர், ஜனாதிபதி நினைவுச் சின்னத்தை தேசத்திற்கு அர்ப்பணித்தனர். சுவாமி விவேகானந்திற்கு உண்மையான நினைவுச் சின்னம் எதுவாக இருக்க முடியும்? அவரின் அறவுரைகளை நெஞ்சில் நிறுத்தி, மக்கள் பணிசெய்வதே அது. எனவே ஏக்நாத் ரானடே விவேகானந்த கேந்திரம் அமைப்பை நிறுவினார். அது கன்னியாகுமரியை தலைநகராகக் கொண்டு நாடு முழுவதும் நற்பணி செய்கிறது. பட்டதாரி இளைஞர்கள் ஆயுள்கால தொண்டர்களாக சேர்த்து செயல்படுகின்றனர்.

அருணாச்சல பிரதேசம், அஸ்ஸாம், அந்தமானில் 57 பள்ளிகளை நடத்துகிறது. மருத்துவமனைகள், கிராம முன்னேற்ற திட்டங்கள், இயற்கை வளஅபிவிருத்தி திட்டம், அஸ்ஸாமில் பண்பாட்டு வளர்ச்சி மையம், டில்லியில் பன்னாட்டு விவேகானந்த பவுண்டேஷன், கேரளா, கொடுங்கல்லூரில் வேத தரிசன மையம், காஷ்மீரில் ஒரு மையம், தமிழகம், மகாராஷ்டிரா, ஒடிசா,அசாம், அருணாச்சல மாநிலங்களில் கிராம முன்னேற்ற பணிகள் நடக்கின்றன. நம் பண்பாட்டை மையமாக கொண்ட வளர்ச்சி என்பதே விவேகானந்த கேந்திரத்தின் முக்கியப் பணி. இதன் 210 கிளைகள் இந்தியாவின் 18 மாநிலங்களில் பணியாற்றுகின்றன. இளையோர் நன்னூல் விவாதக்குழு, யோகா வகுப்பு, பஜனை வகுப்பு நடத்தப்படுகிறது. நன்னூல் விற்பனையும் கேந்திரத்தின் பணிகளில் ஒன்று. கேந்திர பத்திரிகை, யுவபாரதி ஆங்கில இதழ்கள், விவேகவாணி தமிழ் இதழ், சென்னை வெளியீடு, மராத்தி, குஜராத்தி, இந்தி, அஸ்ஸாம், மலையாள பத்திரிகைகள் வெளியாகின்றன. இப்பணிகள் பொதுமக்களின் பொருளாதார ஆதரவுடன் நடக்கின்றன.

தமிழகத்தில் விவேகானந்த கேந்திரம்: கன்னியாகுமரி விவேகானந்தபுர வளாகத்தில் உள்ள பயிற்சி மையம், ஆயுட்கால, முழுநேர தொண்டர்கள், பல்திறன் படைத்த செயல்வீரர்கள், சமூக தொண்டர்களுக்கு பயிற்சி அளிக்கிறது. அலையும் துறவி, சுவாமி விவேகானந்தர், ஏக்நாத்ஜி வாழ்க்கை வரலாறு, கிராமோதயம் பற்றிய கண்காட்சிகள் உண்டு. விடுதி வசதிகள், உணவுக் கூடம், மருத்துவமனை, வங்கி, அரங்கங்கள் தலைமையகத்தில் உள்ளன. ஆண்டுக்கு எட்டு முறை உடனுறை யோகப்பயிற்சி முகாம்கள் நடக்கிறது. சென்னை, மதுரை, கோவை பகுதிகளில் கிளை மையங்கள் உள்ளன. குறைந்த விலை வீடுகட்டுதல், தண்ணீர் சேமிப்பு, பயோகாஸ், சமையலறை கழிவு எரிவாயு உற்பத்தி, நீலப்பச்சை பாசி மூலம் பால்வளம் பெருக்குதல், ஆளுமை வளர்ச்சி முகாம்கள் இத்துறையின் சிறப்பு பணிகள். இதற்கு உலகத்தர அங்கீகாரம் கிடைத்துள்ளது. மேலும் விவேகானந்த கேந்திரத்தின் கிராம முன்னேற்ற திட்டம் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களில் செயல்படுகிறது. சத்துணவு, பாலர் பள்ளிகள், மருந்தகங்கள், முதியோரை தத்தெடுத்தல், கண்முகாம்கள் ஆகியவை செயல்படுத்தப்படுகிறது. ஆயிரக்கணக்கான பெண்கள் பங்கேற்கும் திருவிளக்குப் பூஜைகள், நூற்றுக் கணக்கில் கல்லூரி, பள்ளிகள் கலந்து கொள்ளும் பண்பாட்டு பயிற்சியும் இத்துறையின் பணிகள் .

விவேகானந்தர் பற்றி இவர்கள் :

ராஜாஜி : விவேகானந்தர் இந்து மதத்தை காப்பாற்றினார். அவர் இல்லாவிட்டால் நாம் நமது மதத்தை இழந்திருப்போம். சுதந்திரத்தை பெற்றிருக்க மாட்டோம். ஆகையால் நாம் சுவாமி விவேகானந்தருக்கு ஒவ்வொரு வகையிலும் கடமைப்பட்டிருக்கிறோம்.

நாமக்கல் கவிஞர் ராமலிங்கம்பிள்ளை : ஒருநூறு வருடங்கள் முன்னமே - செல்லஅமெரிக்கா சிகாகோ தன்னிலேநம்பெரும் இந்திய நாட்டவர் - கண்டஞானப் பெருமையைக் காட்டினான்.சத்திய வாழ்க்கையைப் பேசினான் - அருள்சாந்த தவக்கனல் வீசினான்யுத்தக் கொடுமையைச் சிந்திப்போம் - அந்தஉத்தமன் சொன்னதை வந்திப்போம்.

சுவாமி விபுலானந்தர் : "சீர்மருவு காசினியில் ஞானவொளி பரப்பத்தேயத்துட் பாரதமே சிறந்ததென விசைப்பஈரிருபா னாண்டுறைந்தா யெமதுதவக் குறையோஇளவயதி லெமைவிடுத்தா யளவிலருட் கடலே!.'

சுவாமி சித்பவானந்தர் : மானுடப் பிறவியின் முக்கிய நோக்கம் பரமனை அடைதல் என்னும் உயர்ந்த செய்தியை உலகிற்கு விவேகானந்தர் வழங்கினார். சண்முகனிடத்திருக்கின்ற ஷட் ஆதாரங்கள், ஷட் மகிமைகள், ஷட்தர்சனங்கள் இக்காலத்திற்கு ஏற்றவாறு விவேகானந்தர் வாயிலாக வெளியாகியிருக்கின்றன. அதனால் விவேகானந்தரை வேலவனது வரப்பிரசாதம் என மொழிவது முற்றிலும் பொருந்தும்.

பாரதியார் : 1893ம் ஆண்டில் விவேகானந்தர் யாரோ ஒரு சாதாரண சன்னியாசியாக வந்து தென்மாநிலங்களில் சஞ்சரித்துக் கொண்டிருந்த காலத்தில், அவருடைய மகிமையை கண்டுபிடித்து, நாட்டிற்கெல்லாம் பெருமை தேடித் தந்தவர் அழகிய சிங்கப் பெருமாளே. இவருடைய முயற்சிகளாலே விவேகானந்தர் அமெரிக்காவுக்கு போய், ஆரிய தர்மத்தை அந்நாட்டில் பிரகாசப்படுத்தும்படி ஏற்பட்டது.

கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை : சீர்பெருகு வங்கநிலம் சிறக்க வந்தோன்,ஸ்ரீராம கிருஷ்ணபதம் சிரமேற் கொண்டோன்;பார்புகழும் வேதாந்தப் பயிர்வ ளர்த்தோன்,
பாரதத்தின் பெருமையெங்கும் பரவச் செய்தோன்;வேர் பறிய எதிர்வாதம் விரித்துக் கூறிதார்புனைந்த தவயோகி விவேகா னந்தன்தாள்பணிந்து வாழ்வோமித் தரணி மீதே!.

குன்றக்குடி அடிகள் : வீறு புகழார் விவேகானந்தர்இமயம் போன்ற எழிலார் தோற்றமும்ஞானப் பேரொளி தவழ்திரு முகமும்தண்ணரு ளார்ந்த நெஞ்சமும், மன்னுயிர்மனத்திருள் போக்கும் ஞானச் செஞ்சொலும்பிணத்தையும் பேச வைத்தன; உயிர்களின்சோர்வினை யகற்றிச் சுறுசுறுப்பினைத்தந்தன; இதயத் தாமரை விரித்தன;சுதந்திரத்தின் சுவையை யூட்டின;ஞான மும்பர மோனமும் நல்கின;

முதல்வர் கருணாநிதி : ஒரு காலத்தில் சொல்லப்பட்டு, இடையிலே மறைந்து விட்ட "சத்தியமேவ ஜயதே' வாய்மையே வெல்லும் என்கிற இந்த வாசகத்தை முதல் முதல் மறுமுறை ஞாபகத்திற்கு கொண்டு வந்தவர், பாஸ்கர சேதுபதி மன்னர் என்றால் அது மிகையாகாது. அதற்கு காரணமாக இருந்தவர் விவேகானந்தர்.

கி.வா.ஜகன்னாதன் : விவேகானந்தரின் உபதேசங்களில் வீணையின் மெல்லிசை இல்லை. வீரமுரசே ஒலிக்கிறது. வில்லின் நாண் ஒலியைக் கேட்கிறோம். தூங்குகிறவர்களை எழுப்ப வந்தவர் அவர். பழைய உபநிடதங்களுக்குப் புதிய மெருகிட்டவர் அவர். பழைய முனிவர்களின் வழியைப் புதிய முறையில் எடுத்துக் காட்டியவர் அவர். அவரால் உலகமே இந்து மதத்தின் பெருமையை உணர்ந்தது.

ப.ஜீவானந்தம் : பாருலகை குலுக்கிய பாரதத் துறவி. துறவிகளிலும் தனக்கு நிகர் தானேயான அரசியல் துறவி. பாரத மணித்திருநாடே தான் என உருவகித்து வாழ்ந்த பரிபூரண தேசபக்தத் துறவி. நவீன இந்தியாவின் ஞானாசிரியர். பாரதீய ஆன்மிக ஞானமும் மேற்கத்திய விஞ்ஞானமும் சேம்மானம் பிசகாது கலந்து உறவாடி ஒளிவிட்ட கூட்டு மேதை.

சுப்பிரமணிய சிவம் : விவேகானந்தரை நினைக்கும் நேரமெல்லாம் எனக்கு புதிதுபுதிதாக ஊக்கமும், உற்சாகமும் உண்டாகிறது. எங்கிருந்தோ எனக்கு தெரியாமல் ஒரு சக்தியை அடைகிறேன். அறிவுப் பாலூட்டும் அன்னையாய், கொள்கைகளுக்கெல்லாம் ஆதாரமாய் என் புறத்தே நின்று கொண்டு, ஜீவிதத்துக்கொரு தூண்டுகோலாய் உள்ளது. அவருடைய சக்தி இருந்து வருகிறாரென்று திடமானதொரு எண்ணம் என் மனதில் பதிந்து கிடக்கிறது.

கவியோகி சுத்தானந்த பாரதியார் : பணியாலும் நினைப்பாலுந் தவத்தாலுங் குருவினிடம் பயின்ற ஞானம்அணியாக நிலவுலகிற் கருளாளுந் துணைவர்தமை யருகு சேர்த்தேதுணிவாகப் பயிற்றுவித்துத் துறவாகச் சுற்றுவழிதுன்னிச் சென்னைதனியாக, அறிவோர்கள் அனுப்பிடவே சம்வமதச்சங்கஞ் சென்றான்.

சவுந்தர கைலாசம் : வயிறதே உணவில் லாமல்வாடிடும் போது ஞானப்பயிரதோ வேர்பி டிக்கும்?பசியிலே வெற்று வாகும்உயிரது தழைக்க எண்ணிஉழைத்திடு முதலில்; தானேதுயரறும் எனவு ரைத்ததுறவிதாள் போற்றி! போற்றி!

நாட்டையே கொள்ளையடித்து வெளிநாட்டு வங்கிகளில் குவித்துள்ளனர்-சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்

Supreme Courtடெல்லி: நாட்டையே சூறையாடி வெளிநாட்டு வங்கிகளில் கருப்புப் பணமாக குவித்து வைத்துள்ளனர். இப்படிச் செய்தவர்களின் பெயர்களை வெளியிட மத்திய அரசு ஏன் இவ்வளவு தயக்கம் காட்டுகிறது. இந்தியப் பொருளாதாரத்தையே சீர்குலைக்கும் விஷயம் இது. அத்தனை நாடுகளிலும் போட்டு வைக்கப்பட்டுள்ள கருப்புப் பணம் குறித்த விவரங்களை மத்திய அரசு தந்தேயாக வேண்டும் என உச்சநீதிமன்றம் கடுமையாக கூறியுள்ளது.

பாஜகவைச் சேர்ந்த ராம்ஜெட்மலானி உள்ளிட்டோர் வெளிநாட்டு வங்கிகளில் குறிப்பாக லிச்சன்ஸ்டைன் வங்கியில் போட்டு வைக்கப்பட்டுள்ள கருப்புப் பணம் குறித்த விவரங்களை மத்திய அரசு வெளியிட மறுப்பதாக கூறி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

அதில், லிச்சன்ஸ்டைன் வங்கியில் ரூ. 70 லட்சம் கோடி கருப்புப் பணத்தை குறிப்பிட்ட சில இந்தியர்கள் குவித்து வைத்துள்ளனர். இவற்றை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்காமல் உள்ளது. வெளிநாட்டு வங்கிகளில் எவ்வளவு கருப்புப் பணம் குவித்து வைக்கப்பட்டிருக்கிறது என்பதை மத்திய அரசு வெளியிட வேண்டும்.

ஜெர்மனியின் லிச்சன்ஸ்டைன் வங்கியில் குவித்து வைக்கப்பட்டுள்ள இந்தியர்களின் கருப்புப் பணம் குறித்த விவரத்தை அந்த வங்கிய மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளது. ஆனால் அதை வெளியிடாமல் மறைத்து வருகிறது மத்திய அரசு. அதை தகவலை மத்திய அரசு வெளியிட வேண்டும் என்று கோரியிருந்தனர்.

இந்த மனுவை கடந்த முறை உச்சநீதிமன்றம் விசாரித்தபோது, இதுகுறித்து பகிரங்கமாக தெரிவிக்க முடியாது. இதைத் தெரிவிப்பதும், தெரிவிக்காமல் இருப்பதும் அரசின் உரிமையாகும் என்று மத்திய அரசு கூறியது. ஆனால் இதற்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது.

கருப்புப் பணத்தைக் குவித்து வைத்திருப்போர் குறித்த விவரத்தை சொல்வதில் உங்களுக்கு என்ன அவ்வளவு கஷ்டம். உடனடியாக யார் யார் பணத்தைப் போட்டு வைத்திருக்கிறார்கள் என்ற விவரத்தை மத்திய அரசு வெளியிட வேண்டும். அதை உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இது மிகவும் முக்கியமான விஷயம் என்று கூறியது.

இதையடுத்து சீலிட்ட கவரில் ஒரு பெயர்ப் பட்டியலை வைத்து அதை உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு சமர்ப்பித்தது. ஆனால் இதை உச்சநீதிமன்றம் ஏற்கவில்லை. முழுமையான பட்டியலை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு இன்றும் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்தது உச்சநீதிம்ன்றம். 

நீதிபதிகள் சுதர்சன் ரெட்டி மற்றும் நிஜ்ஜார் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு வழக்கு விசாரணைக்கு வந்தபோது சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்ரமணியம் ஆஜராகி, இரட்டை வரி விதிப்பு தவிர்ப்புச் சட்டத்தின் கீழ் அரசு என்னவெல்லாம் நடவடிக்கை எடுத்துள்ளது என்பதை விலாவாரியாக விவரிக்க ஆரம்பித்தார். 

மேலும், லிச்சன்ஸ்டைன் வங்கியில் 26 பேர் போட்டு வைத்துள்ள வெறும் ரூ. 43 கோடி பணம் குறித்த விவரத்தை மட்டும் கோர்ட்டில் தாக்கல் செய்தது மத்திய அரசு. இதைக் கேட்டதும் கடும் அதிருப்தி அடைந்தனர் நீதிபதிகள்.

இதுதான் உங்களிடம் உள்ளதா, இதைத் தவிர வேறு எதுவுமே இல்லை என்று நீதிபதிகள் கோபத்துடன் கேட்டனர். தொடர்நது அவர்கள் கூறுகையில், அரசு இந்த விஷயத்தை சீரியஸாக எடுத்துக் கொள்ளாவிட்டால் இந்த மனு மீதான விசாரணையை நாங்கள் மேலும் விரிவபுடுத்த நேரிடும் என்றும் எச்சரித்தனர்.

மேலும் நீதிபதிகள் கூறுகையில், முழுப் பட்டியலையும் கொடுக்க மத்திய அரசு தயங்குவது கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும். யாரெல்லாம் கருப்புப் பணத்தைப் போட்டு வைத்துள்ளனர் என்ற விவரத்தை வெளியிட மத்திய அரசு தயங்குவது ஏன்.

இதை ஏதோ வரிப் பிரச்சினை என்பது போல பார்க்கிறது, பேசுகிறது மத்திய அரசு. ஆனால் இந்தியப் பொருளாதாரத்தை சுரண்டி எடுத்துள்ளனர். இந்திய பொருளாதாரத்தையே திருடியுள்ளனர். அப்பட்டமான கொள்ளை இது. இதில் மத்திய அரசுக்கு என்ன சந்தேகம் உள்ளது. நாட்டையே சூறையாடி, சுரண்டி வெளிநாட்டு வங்கிகளில் போய்க் குவித்து வைத்துள்ளனர்.

அனைத்து நாட்டு வங்கிகளிலும் இந்தியர்களுக்கு உள்ள கணக்கு வழக்குகள், எவ்வளவு பணம் குவிக்கப்பட்டுள்ளது என்பதை மத்திய அரசு தந்தேயாக வேண்டும்.

இதயத்தை சிதறடிக்கும் செயல் இது. இந்த செயலை மத்திய அரசு மறைக்க முயல்வதாக தெரிகிறது என்று நீதிபதிகள் கடுமையாக சாடினர்.
நன்றி : தட்ஸ் தமிழ் 19 /01 /2011