நாட்டையே கொள்ளையடித்து வெளிநாட்டு வங்கிகளில் குவித்துள்ளனர்-சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்

Supreme Courtடெல்லி: நாட்டையே சூறையாடி வெளிநாட்டு வங்கிகளில் கருப்புப் பணமாக குவித்து வைத்துள்ளனர். இப்படிச் செய்தவர்களின் பெயர்களை வெளியிட மத்திய அரசு ஏன் இவ்வளவு தயக்கம் காட்டுகிறது. இந்தியப் பொருளாதாரத்தையே சீர்குலைக்கும் விஷயம் இது. அத்தனை நாடுகளிலும் போட்டு வைக்கப்பட்டுள்ள கருப்புப் பணம் குறித்த விவரங்களை மத்திய அரசு தந்தேயாக வேண்டும் என உச்சநீதிமன்றம் கடுமையாக கூறியுள்ளது.

பாஜகவைச் சேர்ந்த ராம்ஜெட்மலானி உள்ளிட்டோர் வெளிநாட்டு வங்கிகளில் குறிப்பாக லிச்சன்ஸ்டைன் வங்கியில் போட்டு வைக்கப்பட்டுள்ள கருப்புப் பணம் குறித்த விவரங்களை மத்திய அரசு வெளியிட மறுப்பதாக கூறி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

அதில், லிச்சன்ஸ்டைன் வங்கியில் ரூ. 70 லட்சம் கோடி கருப்புப் பணத்தை குறிப்பிட்ட சில இந்தியர்கள் குவித்து வைத்துள்ளனர். இவற்றை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்காமல் உள்ளது. வெளிநாட்டு வங்கிகளில் எவ்வளவு கருப்புப் பணம் குவித்து வைக்கப்பட்டிருக்கிறது என்பதை மத்திய அரசு வெளியிட வேண்டும்.

ஜெர்மனியின் லிச்சன்ஸ்டைன் வங்கியில் குவித்து வைக்கப்பட்டுள்ள இந்தியர்களின் கருப்புப் பணம் குறித்த விவரத்தை அந்த வங்கிய மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளது. ஆனால் அதை வெளியிடாமல் மறைத்து வருகிறது மத்திய அரசு. அதை தகவலை மத்திய அரசு வெளியிட வேண்டும் என்று கோரியிருந்தனர்.

இந்த மனுவை கடந்த முறை உச்சநீதிமன்றம் விசாரித்தபோது, இதுகுறித்து பகிரங்கமாக தெரிவிக்க முடியாது. இதைத் தெரிவிப்பதும், தெரிவிக்காமல் இருப்பதும் அரசின் உரிமையாகும் என்று மத்திய அரசு கூறியது. ஆனால் இதற்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது.

கருப்புப் பணத்தைக் குவித்து வைத்திருப்போர் குறித்த விவரத்தை சொல்வதில் உங்களுக்கு என்ன அவ்வளவு கஷ்டம். உடனடியாக யார் யார் பணத்தைப் போட்டு வைத்திருக்கிறார்கள் என்ற விவரத்தை மத்திய அரசு வெளியிட வேண்டும். அதை உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இது மிகவும் முக்கியமான விஷயம் என்று கூறியது.

இதையடுத்து சீலிட்ட கவரில் ஒரு பெயர்ப் பட்டியலை வைத்து அதை உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு சமர்ப்பித்தது. ஆனால் இதை உச்சநீதிமன்றம் ஏற்கவில்லை. முழுமையான பட்டியலை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு இன்றும் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்தது உச்சநீதிம்ன்றம். 

நீதிபதிகள் சுதர்சன் ரெட்டி மற்றும் நிஜ்ஜார் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு வழக்கு விசாரணைக்கு வந்தபோது சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்ரமணியம் ஆஜராகி, இரட்டை வரி விதிப்பு தவிர்ப்புச் சட்டத்தின் கீழ் அரசு என்னவெல்லாம் நடவடிக்கை எடுத்துள்ளது என்பதை விலாவாரியாக விவரிக்க ஆரம்பித்தார். 

மேலும், லிச்சன்ஸ்டைன் வங்கியில் 26 பேர் போட்டு வைத்துள்ள வெறும் ரூ. 43 கோடி பணம் குறித்த விவரத்தை மட்டும் கோர்ட்டில் தாக்கல் செய்தது மத்திய அரசு. இதைக் கேட்டதும் கடும் அதிருப்தி அடைந்தனர் நீதிபதிகள்.

இதுதான் உங்களிடம் உள்ளதா, இதைத் தவிர வேறு எதுவுமே இல்லை என்று நீதிபதிகள் கோபத்துடன் கேட்டனர். தொடர்நது அவர்கள் கூறுகையில், அரசு இந்த விஷயத்தை சீரியஸாக எடுத்துக் கொள்ளாவிட்டால் இந்த மனு மீதான விசாரணையை நாங்கள் மேலும் விரிவபுடுத்த நேரிடும் என்றும் எச்சரித்தனர்.

மேலும் நீதிபதிகள் கூறுகையில், முழுப் பட்டியலையும் கொடுக்க மத்திய அரசு தயங்குவது கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும். யாரெல்லாம் கருப்புப் பணத்தைப் போட்டு வைத்துள்ளனர் என்ற விவரத்தை வெளியிட மத்திய அரசு தயங்குவது ஏன்.

இதை ஏதோ வரிப் பிரச்சினை என்பது போல பார்க்கிறது, பேசுகிறது மத்திய அரசு. ஆனால் இந்தியப் பொருளாதாரத்தை சுரண்டி எடுத்துள்ளனர். இந்திய பொருளாதாரத்தையே திருடியுள்ளனர். அப்பட்டமான கொள்ளை இது. இதில் மத்திய அரசுக்கு என்ன சந்தேகம் உள்ளது. நாட்டையே சூறையாடி, சுரண்டி வெளிநாட்டு வங்கிகளில் போய்க் குவித்து வைத்துள்ளனர்.

அனைத்து நாட்டு வங்கிகளிலும் இந்தியர்களுக்கு உள்ள கணக்கு வழக்குகள், எவ்வளவு பணம் குவிக்கப்பட்டுள்ளது என்பதை மத்திய அரசு தந்தேயாக வேண்டும்.

இதயத்தை சிதறடிக்கும் செயல் இது. இந்த செயலை மத்திய அரசு மறைக்க முயல்வதாக தெரிகிறது என்று நீதிபதிகள் கடுமையாக சாடினர்.
நன்றி : தட்ஸ் தமிழ் 19 /01 /2011