சில தேசிய தலைவர்களின் நாட்டுப்பற்றில் சந்தேகம்: ஜெயலலிதா

சென்னை : ""ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் மத்திய அரசு மவுனம் காத்து வருவதன் மூலம், சில தேசிய தலைவர்களின் நாட்டுப்பற்றில் சந்தேகமும், பல கேள்விகளும் எழுந்துள்ளது,'' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா கூறியுள்ளார்.


அவரது அறிக்கை: ஸ்பெக்ட்ரம் ஊழல், நாட்டின் பாதுகாப்பிற்கு பெரிய ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த இமாலய ஊழலை நிகழ்த்தியவர்களும், அதன் பின்னணியில் உள்ளவர்களும், தேசத் துரோக செயலுக்காக கோர்ட்டில் விசாரிக்க வேண்டும். அடிமாட்டு விலைக்கு ஸ்பெக்ட்ரம் உரிமத்தை பெற்ற நிறுவனங்களில், ஒரு நிறுவனத்தை கூர்ந்து கவனித்தால், நாட்டின் நலனுக்கு எதிராக சர்வதேச அளவில் சதித்திட்டம் தீட்டப்பட்டு இருப்பது, இந்திய நாட்டின் அரசியல் தலைமை எந்த அளவிற்கு, எதிரிகளிடம் சரணடைந்து இருக்கிறது, சர்வதேச சதிகாரர்களால் விரிக்கப்பட்ட ஆதாய மாய வலையில் எப்படி விழுந்து இருக்கிறது என்பன போன்ற அச்சுறுத்தக்கூடிய பல தகவல்கள் வெளிவரும். ராஜாவால் பயனடைந்த நிறுவனங்களில் ஒரு நிறுவனம், பாகிஸ்தான், சீனா மற்றும் தாவூத் இப்ராகிம் ஆகியோர் மூலம் இந்திய நாட்டின் பாதுகாப்பிற்கு பல முனைகளில் மிகப் பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி தந்துள்ளது. இந்தியாவிற்கு ஏற்பட்ட ஒரு லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு என்பது மட்டும் தற்போது கேள்வி அல்ல; இந்திய நாட்டின் பாதுகாப்பு, இறையாண்மை மற்றும் நாட்டின் ஒற்றுமை தான் தற்போதைய முக்கியமான கேள்வி.

இதில் உள்ள விசித்திரம் என்னவெனில், மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனைத்தும் தெரிந்திருந்தும், பல்வேறு காலகட்டங்களில் பல எதிர்ப்புகளைத் தெரிவித்திருந்தும், ராஜாவின் கீழ் இருந்த தொலைத்தொடர்புத் துறை அனைத்திற்கும் ஒப்புதல் அளித்து விட்டது தான். இதன் பின், மத்திய உள்துறை அமைச்சகம் தொடர்ந்து தீவிர மவுனத்தை கடைபிடித்து வருவது ஏன்? தவறான கொள்கை மூலம் முறைகேடாக வழங்கப்பட்ட, "2ஜி' உரிமங்களை உடனடியாக கபில் சிபல் ரத்து செய்ய வேண்டும். தொலைத் தொடர்பு அலைவரிசை என்பது, மதிப்புமிக்க, நாட்டின் அரிதான வளம். இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்பதால், பகைமை நாடுகளின் கைகளில் இந்த வளம் சென்றடையக் கூடாது. இந்தப் பிரச்னைகளில் செவிடன் காதில் ஊதிய சங்கு போல் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் மத்திய அரசு மவுனம் சாதிப்பது, இந்திய நாட்டின் சில தேசிய தலைவர்களின் தேசப்பற்று குறித்த முக்கியமான கேள்விகளையும், சந்தேகங்களையும் எழுப்புகிறது. இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.

நன்றி: தினமலர் 29 /01 /2011