பாரத சமுதாயம் என்ன பாபம் செய்ததோ, அதனை வழி நடத்திச் செல்லும் பொறுப்பு மன் மோகன் சிங் என்னும் அந்நியரின் கைப்பாவையிடம் சிக்கிக் கொண்டுள்ளது.
இந்த அந்நியருக்கு பாரதத்தின் நலன் மீது ஆத்மார்த்தமாக எவ்வித ஈடுபாடும் இருப்பது சாத்தியமில்லை. பாரதத்தின் நிலப்பரப்பு ஆக்கிரமிக்கப்பட்டாலும், கை மாறிப் போனாலும், பாரதத்தின் மீது பகைமை பாராட்டும் நாடுகள் பல மாறு வேடங்களில் உள்ளே புகுந்து பொருளாதாரச் சீர்குலைவையும், உயிர்ச் சேதமும் பொருட் சேதமும் விளைவிக்கும் நாச வேலைகளையும் செய்தாலும் அதுபற்றிச் சிறிதளவும் கவலைப்படாமல் அகப்பட்டவரை சுருட்டுவதிலேயே குறியாக இருக்கும் அந்நிய சக்திக்குத் துணை போகிறோமே என்கிற உறுத்தல்கூட இல்லாமல் காலந் தள்ளிக்கொண்டிருக்கும் ஒருவரின் கையில் இன்று நாட்டின் நிர்வாகம் மாட்டிக்கொண்டுள்ளது.
மிகச் சிறந்த பொருளாதார நிபுணர் என்று அறியப்பட்ட மன்மோகன் சிங்கின் நிர்வாகத்தில்தான் என்றுமே காணாத வகையில் இன்று மிகப் பெரும் பொருளாதார வீழ்ச்சிக்கு பாரதம் ஆளாகியிருக்கிறது. நேர்மையான வழியில் பொருளீட்டும் எவராலும், அவர்களின் வருமானம் பல்லாயிரங்களாகவே இருந்தாலுங் கூட விலைவாசிக்கு ஈடு கொடுக்க இயலவில்லை. இந்நிலையில் சாமானிய மக்களின் நிலைமை எம்மாத்திரம்? தெருவில் இறங்கிப் பிச்சை எடுக்கத் தொடங்காத குறைதான்!
ஊழல் செய்து லஞ்சம் வாங்கிப் பழகியவர்களைத் தவிர வேறு எவராலும் இன்று நிம்மதியாக வாழ முடியவில்லை என்பதுதான் நிதர்சனம்.
நிர்வாகத் திறனோ, அமைச்சரவை சகாக்கள் மீதான ஆளுமையோ, சுய மரியாதையோ, நாட்டு நடப்பு பற்றிய கவலையோ சிறிதும் இல்லாத, மிகவும் நம்பகமான பினாமியாகத் தனக்கு ஒருவர் வேண்டும் என்று சோனியா காந்தி தேடியதில் அகப்பட்டவர்தான் மன்மோகன் சிங் என்பது இப்போது புரிகிறது. இதன் விளைவாக நாடு அனுபவிக்கப் போகும் பேராபத்தை நினைத்தால்தான் அச்சமாக இருக்கிறது.
மன்மோகன் சிங் எது குறித்தும் கவலைப்படாமல் பினாமிப் பிரதமராக இருப்பதிலேயே சுகம் கண்டு வருகிறார் என்று மட்டுமே எண்ணிக்கொண்டிருந்த நமக்கு அது போதாது என்று மிகப் பெரிய அதிர்ச்சியையும் கொடுத்துவிட்டார், மன்மோகன் சிங். முன்பின் யோசியாமல், என்ன பேசுகிறோம் என்கிற பிரக்ஞையுமின்றி தேசிய உணர்வையே அவமதிக்கத் தொடங்கியிருக்கிறார், அவர்.
கஷ்யப முனிவர் பெயரால் அமைந்த காஷ்மீர பூமி ஹிந்துஸ்தானத்தின் பிரிக்க முடியாததோர் அங்கம் என்பதை நினைவூட்டி, தேசிய உணர்வை நாடெங்கிலும் புதிய எழுச்சியுடன் தோற்றுவிக்க வேண்டியே பாரதிய ஜனதா கட்சியின் இளைஞர் அணி கிழக்கே சியாமா பிரசாத் முகர்ஜி பிறந்த மேற்கு வங்கத்திலிருந்து புறப்பட்டு தேசத்தின் குறுக்காக எட்டு மாநிலங்களைக் கடந்து குடியரசு தினத்தன்று மேற்கே காஷ்மீர் மாநிலத்தின் தலைநகர் ஸ்ரீநகரில் நமது மூவண்ண தேசியக் கொடியை ஏற்றிவைக்கும் செயல் திட்டத்தை மேற்கொள்ள நேர்ந்தது.
காஷ்மீரம் ஹிந்துஸ்தானத்தின் அங்கம்; அதனுள் பிரவேசிப்பது ஒவ்வொரு ஹிந்துஸ்தானப் பிரஜையின் உரிமை என்பதை நிலைநாட்டுவதற்கென்றே புறப்பட்டுச் சென்று, தடையை மீறிச் சிறையில் அடைபட்டு, ஷேக் அப்துல்லாவின் வஞ்சகச் சதியால் சிறையிலேயே உயிரிழந்த தியாக சீலர் சியாமா பிரசாத்தின் மகத்தான தேசப் பற்றுக்கு அஞ்சலி செலுத்துவது போலவும் மேற்கொள்ளப்பட்ட பாரதிய ஜனதா இளைஞர் அணியின் திட்டத்தை அரசியல் காரணங்களுக்கான நடவடிக்கை என்றும் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல் என்றும் கொச்சைப் படுத்தியிருக்கிறார், மன்மோகன்.
குடியரசு தினத்தனறு பாரத தேசத்தின் ஒரு பகுதியில் தேசியக் கொடியை ஏற்றுவது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் செயல் என்று நாட்டின் பிரதமரே விமர்சிப்பாரேயானால் அது பிரிவினைச் சக்திகளுக்குக் கொண்டாட்டமாகி விடாதா? சிறு குழந்தைக்குக்கூட எளிதில் புரியக் கூடிய இந்த உண்மை மன்மோகனுக்குத் தெரியாமலா போகும்? தெரிந்தே அவர் செய்த இந்த விமர்சனம் தேசிய உணர்வையே அவமதிக்கும் செயல் அல்லவா? அதிலும் குடியரசு தின சந்தர்ப்பத்தில் தேசிய உணர்வை ஊட்ட வேண்டிய பிரதமர் பதவியில் இருக்கும் நபர் இப்படிப் பேசலாமா? இந்த அவலத்தை எங்கே சொல்லி ஆற்றிக்கொள்வது?
குடியரசு தினத்தன்று பிரிவினைச் சக்திகளின் நடமாட்டம் மிகுந்த பகுதியில் தேசியக் கொடியேற்றி தேசிய உணர்வைத் தூண்டும் பாரதிய ஜனதா இளைஞர்களின் கடமையுணர்வைப் பாராட்ட மனமில்லாவிடினும் அதற்கு அரசியல் நோக்கமா கற்பிப்பது? உமக்குத்தான் அதற்குத் துணிவு இல்லை, கொடியேற்றத் தடை விதிக்கும் ஜம்மு-காஷ்மீர் மாநில அரசை கண்டிக்கவும் திராணியில்லை, தடையை மீறி தேசியக் கொடியேற்றச் செல்லும் தேச பக்தர்களை அவமதிக்காமலாவது இருக்க வேண்டாமா நாட்டின் பிரதமர்? இதிலுமா அரசியல் பண்ணுவது?
இன்று மன்மோகன் பொறுப்பில், சோனியா காங்கிரஸ் தலைமையில் குப்பை கொட்டும் கூட்டணி ஆட்சியில் நடைபெறும் அலங்கோலங்கள் ஆயிரமாயிரம் இருக்க, அரசியல் பண்ணுவதற்கு பா.ஜ.க.வுக்கு விஷயத்துக்கா பஞ்சம்? போயும் போயும் குடியரசு தினத்தன்று தேசியக் கொடியேற்றும் தேசியக் கடமையை வைத்தா அது அரசியல் பண்ணும்?
ஒரு தேசியத் திருநாளன்று தேசியக் கொடியை தேசத்தின் ஒரு பகுதியில் ஏற்றுவது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் செயல் என்றும் பிரதமர் நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு பேசுவது வெட்கங்கெட்ட பேச்சு என்பது மட்டுமல்ல, தேசிய உணர்வுக்கே அவம்ரியாதை என்கிற பிரக்ஞை கூட இல்லாத ஒருவரை இன்னும் எத்தனை காலத்திற்கு பிரதம மந்திரியாக இந்த நாடு சகித்துக்கொண்டிருக்கப் போகிறது?
தேசப் பற்றும் பொறுப்புணர்வும் மிக்க மக்கள்தான் இதற்கு விடை கூற வேண்டும்.
நன்றி:தமிழ் ஹிந்து