தலையைக் காப்பாற்றத்தான் வால் ஆடுகிறதோ?


பழ. நெடுமாறன்

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்வதில் அரசுக்கு ஏற்பட்ட இழப்பீடு 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் என ஆய்ந்து மதிப்பீடு செய்தவர் இந்தியக் கணக்காய்வர் - தலைமைத் தணிக்கையர் ஆவார்.

 அரசியல் சட்டத்தின் கீழ் இவர் நியமிக்கப்பட்டவர். இந்தியக் குடியரசுத் தலைவர் தமது கையொப்பமும் முத்திரையும் கொண்ட அதிகார ஆணையின் வழி அவரை அமர்த்துவார்.
 மேலும், உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி ஒருவரை அகற்றுவதுபோல் அதேமுறையில் அதே காரணங்களின் மீது மட்டுமே அவர் பதவியிலிருந்து அகற்றப்பெறுவார் என அரசியல் சட்டத்தின் ஐந்தாம் அத்தியாயத்தின் 148-வது பிரிவு(1) என்பதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 இந்திய ஒன்றிய அரசு மாநில அரசுகள் பிற அதிகார அமைப்பு அல்லது குழுமம் ஆகியவற்றின் கணக்குகள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் இயற்றப்படும் சட்டத்தாலோ அதன் வழியாலோ வகுத்து உரைக்கப்படும் கடமைகளைக் கணக்காய்வர் - தலைமைத் தணிக்கையர் புரிவார்; அதிகாரங்களைச் செலுத்துவார். அதன்பொருட்டு அவ்வாறு வகைசெய்யப்படும் வகையில் இந்திய ஒன்றியம், மாநிலங்கள் ஆகியவற்றின் கணக்குகள் தொடர்பாக இந்திய அரசமைப்பின் தொடக்கநிலையை ஒட்டி முன்பு இந்திய தலைமைத் தணிக்கையருக்கு முறையே ஒன்றிய மாநிலங்கள் ஆகியவற்றின் கணக்குகள் தொடர்பாக வழங்கப்பட்டதான அல்லது அவரால் செலுத்தத் தகுமான கடமைகளைப் புரிந்தும் அதிகாரங்களையும் செலுத்தியும் வருவார் என அதே அத்தியாயத்தின் 149-வது பிரிவு தெளிவாகக் கூறுகிறது.
 151-வது பிரிவு (1)ல் ஒன்றியத்தின் கணக்குகளைப் பொறுத்தவரை இந்திய கணக்காய்வர் - தலைமைத் தணிக்கையரின் அறிக்கைகள் குடியரசுத் தலைவருக்குப் பணிந்து அனுப்பப்படுதல் வேண்டும். அவற்றை அவர் நாடாளுமன்ற அவை ஒவ்வொன்றின் முன்பும் வைக்கும்படி செய்வார் என திட்டவட்டமாக அரசியல் சட்டம் கூறுகிறது.
 அதாவது, இந்தியக் கணக்காய்வர் - தலைமைத் தணிக்கையரை மத்திய அரசே நியமிப்பதில்லை. அவர் குடியரசுத் தலைவரால் மட்டுமே நேரடியாக நியமிக்கப்படுகிறார். மத்திய-மாநில அரசுகளின் வரவு-செலவுக் கணக்குகளை அவர் ஆராய்ந்து தயாரிக்கும் அறிக்கைகளை நேரடியாகக் குடியரசுத் தலைவருக்கு மட்டுமே அனுப்புவார். அவர் அதை நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் பரிசீலனைக்காக அனுப்பி வைப்பார்.
 மத்திய அரசின் வரவு-செலவு குறித்து நாடாளுமன்றம் முடிவுசெய்யும். ஆனால், அந்த வரவு-செலவு சட்டப்பூர்வமாகவும், நேர்மையாகவும் நடைபெற்றிருக்கிறதா என்பதைக் கண்காணிக்கும் பொறுப்பு இந்தியக் கணக்காய்வர் - தலைமைத் தணிக்கையரின் கடமையாகும். இவ்வாறு செய்வதற்கு அவருக்கான அதிகாரத்தை அரசியல் சட்டம் வழங்கியுள்ளது. அவர் மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்கு உள்பட்டவர் அல்லர்.
 அரசு நிர்வாகத்தில் உள்ள முறைகேடுகளையும், ஊழல்களையும் சுட்டிக்காட்டுவதையும் அவற்றைத் திருத்துவதற்குரிய அறிவுரைகளையும் கூறுவது மட்டுமே இந்தியக் கணக்காய்வர் - தலைமைத் தணிக்கையரின் அதிகாரத்துக்கு உள்பட்டதாகும். ஆனால், அவற்றின்மீது உரிய நடவடிக்கைகளை எடுக்கும் பொறுப்பும், கடமையும் நாடாளுமன்றக் குழுக்களுக்கு மட்டுமே உண்டு.
 இந்திய நாடாளுமன்றத்தின் செயலர் - நாயகமாக 1984-90 வரை பணியாற்றியவரும், ஜெனீவாவைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படும் சர்வதேச நாடாளுமன்றச் சங்கத்தில் பணியாற்றியவரும் அரசியல் சட்ட மற்றும் நாடாளுமன்ற ஆய்வு நிலையத்தின் இயக்குநராக இருந்தவருமான முனைவர் சுபாஷ் சி. காசியப் நமது நாடாளுமன்றம் என்ற தலைப்பில் எழுதியுள்ள நூலில் நாடாளுமன்றக் குழுக்கள் செயல்படும் விதம், அவற்றுக்கான அதிகாரம் என்பவை குறித்தும் விரிவாக எழுதியுள்ளார்.
 அதில், நாடாளுமன்றக் குழு ஒன்றின் பரிசீலனையில் இருக்கும் எந்தப் பிரச்னை குறித்தும் அமைச்சர்களோ, நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாருமோ எவ்விதக் கருத்தும் கூறக்கூடாது எனத் திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.
 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் அரசுக்கு ஏற்பட்ட இழப்புக் குறித்து கணக்காய்வர்-தலைமைத் தணிக்கையரின் அறிக்கையை நாடாளுமன்றப் பொதுக்கணக்குக் குழு ஆராய்ந்து வருகிறது. இக்குழுவின் கூட்டங்களில் அதற்கு உதவுவதற்காக இந்தியக் கணக்காய்வர் - தலைமைத் தணிக்கையர் கலந்து கொள்வார். ஏனெனில், அவர்தான் இந்தக் குழுவுக்கு வழிகாட்டி, தத்துவாசிரியர் மற்றும் நண்பர் ஆவார். பொதுக்கணக்குக் குழுவின் தலைவருக்கு அவர் வலதுகரமாக விளங்கி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் விவரங்களுக்கு உரிய விளக்கங்களை அளிப்பார். குழுவின் உறுப்பினர்கள் குழுவால் விசாரிக்கப்படும் சாட்சிகளிடம் பயனுள்ள கேள்விகளைக் கேட்பதற்கும் உதவுவது அவருடைய கடமையாகும்.
 ஆக, பொதுக்கணக்குக் குழுவும் இந்தியக் கணக்காய்வர் - தலைமைத் தணிக்கையர் ஆகிய இருவரும் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ளும் தன்மை படைத்தவர்கள் ஆவார்கள்.
 இந்த அரசியல் சட்டப்பூர்வமான உண்மைகளை மிகச்சிறந்த வழக்கறிஞர் என்ற முறையில் நன்கு அறிந்திருந்தும், மத்திய அமைச்சர் கபில்சிபல் கடந்த 7-1-11 அன்று கணக்காய்வர் - தலைமைத் தணிக்கையரின் மதிப்பீடு தவறானது என்றும் அரசுக்கு எத்தகைய இழப்பும் ஏற்படவில்லை என்றும் பகிரங்கமாக அறிவித்திருக்கிறார்.
 மேலும், அந்த அறிக்கை அடிப்படையில் தவறானது என்றும் பரபரப்பை ஊட்டுவதற்காக வெளியிடப்பட்டது என்றும் குற்றம் சாட்டும் அளவுக்குச் சென்றிருக்கிறார்.
 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் அரசுக்கு ஏற்பட்ட இழப்பை மதிப்பீடு செய்வதில் கணக்காய்வர் - தலைமைத் தணிக்கையர் தவறான முறையைக் கையாண்டிருக்கிறார் என்றும் குற்றம்சாட்டியிருக்கிறார். அவர் மட்டுமல்ல, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் காங்கிரஸ் கட்சியின் பேச்சாளர்களுமான மனிஷ் திவாரி, ஜெயந்தி நடராசன் ஆகியோரும், கணக்காய்வர் - தலைமைத் தணிக்கையரைக் குறை கூறி அறிக்கை விடுத்துள்ளனர்.
 இவர்களின் அறிக்கைக்கு நாடாளுமன்றப் பொதுத்தணிக்கைக் குழுவின் தலைவர் முரளி மனோகர் ஜோஷி, இந்திய மார்க்சிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே. ரங்கராஜன் போன்ற பலரும் ஆதாரப்பூர்வமான பதில் கூறி அவர்களைக் கண்டித்துள்ளனர்.
 கணக்காய்வர் - தலைமைத் தணிக்கையர் மதிப்பீடு செய்த முறை நியாயமானது என்பதை அவர்களின் அறிக்கைகளில் தெளிவாகச் சுட்டிக்காட்டியுள்ளனர். எனவே, அந்த விவரத்துக்குள் மறுபடியும் செல்ல நான் விரும்பவில்லை.
 ஆனால், அரசியல் சட்டப்படியான குற்றச்சாட்டு ஒன்றை நான் எழுப்ப விரும்புகிறேன். ஜனநாயகத்தை ஏற்றுக்கொண்ட நாடுகள் அனைத்தும் அரசுகளின் வரவு-செலவு ஆய்வு செய்யப்படுவது தவிர்க்கமுடியாத ஒன்று என்பதை ஏற்றுக்கொண்டுள்ளன. நிர்வாகமும் கணக்காய்வும் இணைந்து ஒன்றுக்கொன்று முரண் இல்லாமல் செயல்படுவதன் மூலமே தவறுகளையும், ஊழல்களையும் களைந்தெறிய முடியும்.
 மக்களின் பணம் செலவிடப்படுவதில் மிகக்கடுமையான கண்காணிப்பு நிலவ வேண்டும் என்பதை ஜனநாயக நாடுகள் அனைத்தும் ஏற்றுக்கொண்டிருக்கின்றன. ஆனால், சர்வாதிகார முறையில் செயல்படும் நாடுகளில்தான், ஆள்பவர் செய்யும் எந்தத் தவறையும் யாரும் தட்டிக் கேட்க முடியாது. அவ்வாறு தட்டிக்கேட்பவர்களும் சுட்டிக்காட்டுபவர்களும் சிறைகளில் அடைக்கப்படுவார்கள் அல்லது தீர்த்துக்கட்டப்படுவார்கள்.
 இந்தியாவின் நிர்வாகத்தின்மீது இருக்கக்கூடிய இந்தக் கண்காணிப்பு விரிவாகவும் அற்புதமாகவும் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கண்காணிப்பு அமைப்புகள் திறமையாகச் செயல்பட்டால் ஆட்சியில் இருப்பவர்கள் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதை உறுதியாகக் குறைக்க முடியும். ஆனால், இந்தக் கண்காணிப்பு அமைப்புகள் எவ்வளவு விழிப்புடன் செயல்பட்டாலும் அவைகளால் நிர்வாகத்தைச் செம்மையாகக் கண்காணிக்க வேண்டுமென்றால் அதற்கு தலைமை அமைச்சரும், அமைச்சரவையும் முழுமையான ஒத்துழைப்புத் தரவேண்டும். நாடாளுமன்ற அமைப்புகளின் வெற்றி என்பது இவர்களைப் பொறுத்தே அமைந்திருக்கிறது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போன்ற உண்மையாகும்.
 ஆனால், 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டுப் பிரச்னையில் கணக்காய்வர் - தலைமைத் தணிக்கையர், உச்ச நீதிமன்றம் ஆகியவை தலையிட்டு அதிர்ச்சிகரமான உண்மைகளை வெளிவரச் செய்திருக்கின்றன. இந்திய வரலாற்றில் இதுவரை நடைபெற்றிராத நிகழ்ச்சியாக இந்த ஊழல் விசாரணையை நடத்திவரும் சி.பி.ஐ.யைத் தனது நேரடி கண்காணிப்புக்குள் உச்ச நீதிமன்றம் எடுத்துக்கொண்டிருக்கிறது.
 அதாவது, ஓராண்டு காலமாக இந்த ஊழல் குறித்து விசாரித்து வரும் சி.பி.ஐ. உருப்படியான நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை எனவும். அவ்வாறு அதைச் செயல்படவிடாமல் தடுத்தது யார் எனவும், உச்ச நீதிமன்றம் எழுப்பியுள்ள கேள்விகள் ஆட்சியாளரைக் குற்றவாளிகளாகக் கூனிக்குறுக வைத்துள்ளன.
 மேலும், இதற்கெல்லாம் பதில்கூற வேண்டிய பிரதமர் மன்மோகன்சிங் மௌனம் சாதிப்பதும் கபில் சிபல் போன்ற அமைச்சர்களும் மற்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் அரசியல் சட்டப்படி செயல்படும் அமைப்புகளைச் சாடிவருவதும் நாடாளுமன்ற ஜனநாயகத்தின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கிவிட்டன.
 கபில் சிபல், மனிஷ்திவாரி, ஜெயந்தி நடராசன் போன்றவர்கள் முன்னாள் அமைச்சர் இராசாவைக் காப்பாற்றுவதற்காகவோ அல்லது கூட்டணிக்கட்சியான தி.மு.க.வை இக்கட்டான சூழ்நிலையிலிருந்து மீட்பதற்காகவோ இந்திய கணக்காய்வர் - தலைமைத் தணிக்கையரைச் சாடியதாகக் கருத முடியாது.
 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி, மும்பை ஆதர்ஷ் வீடுகள் ஒதுக்கீடு போன்றவற்றில் குற்றம்சாட்டப்பட்ட சுரேஷ் கல்மாடி, முன்னாள் முதல்வர் அசோக் சவாண் போன்றவர்களுக்கு வக்காலத்து வாங்க எந்த மத்திய அமைச்சரும் அல்லது காங்கிரஸ் தலைவரும் முன்வரவில்லை. அந்த ஊழல்களுடன் ஒப்பிடும்போது 2ஜி அலைக்கற்றை ஊழல் பல ஆயிரம் மடங்கு அதிகமானதாகும்.
 ஆனால், இதை மூடி மறைக்க காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் முயற்சி செய்வது ஏன்? இந்த ஊழலில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மிகப்பெரிய தலைகளும் சம்பந்தப்பட்டிருப்பதால்தான் இவர்கள் அரசியல் சட்டத்தையும் நாடாளுமன்ற மரபுகளையும் துச்சமாக மதித்துத் துள்ளிக் குதிக்கிறார்களோ என்ற ஐயம் இயற்கையாகவே மக்கள் உள்ளங்களில் எழுகிறது.
 அரசியல் சட்டப்படி அமைத்த இந்திய கணக்காய்வர் - தலைமைத் தணிக்கையரை எதிர்த்தும், அலைக்கற்றை ஊழல் குறித்து நாடாளுமன்றப் பொதுக்கணக்குக் குழு நடத்திவரும் விசாரணையைக் கொஞ்சமும் பொருள்படுத்தாமலும் அதை அவமதிக்கும் வகையிலும் பேசிவரும் அமைச்சர் கபில் சிபல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மனிஷ்திவாரி, ஜெயந்தி நடராசன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க இந்தியக் குடியரசுத் தலைவரும் நாடாளுமன்றப் பேரவைத் தலைவரும் முன்வர வேண்டும். இல்லையெனில், அரசியல் சட்டமும் நாடாளுமன்ற மரபுகளும் எதிர்காலத்தில் மதிப்பிழந்து போகும்.
 இத்தகைய நடவடிக்கைகளை அவர்கள் எடுப்பதற்கு முன்வராவிட்டால், ஊழல்களை ஒழிக்கவும் நாட்டின் ஜனநாயக மரபுகளை நிலைநிறுத்தவும் மக்கள் கிளர்ந்தெழுந்து போராடும் நிலை தானாக உருவாகிவிடும். முன்பே குறிப்பிட்டபடி, இந்தியாவில் நாடாளுமன்ற ஜனநாயகத்தின் எதிர்காலமே.
நன்றி : தினமணி 25 /01 /2011