தலையங்கம் ஆனந்த விகடன் 02 /02 /201


'ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லாவிட்டால், மாவோயிஸ்ட் இயக்கத்தில் சேரலாம்' என்று எதிர்க் கட்சிகளுக்கு 'அற்புதமான' அறிவுரை அளித்திருக்கிறார் மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விவகாரத்தில் நாடாளுமன்றக் கூட்டுக் குழு அமைக்கும்படி கேட்டு, குளிர்காலக் கூட்டத் தொடரை எதிர்க் கட்சிகள் மொத்தமாக முடக்கியதுதான் முகர்ஜியை இப்படி மூக்கு விடைக்க வைத்திருக்கிறது.

'குற்றச்சாட்டின் மையமாக இருந்தவர் அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துவிட்டார். சி.பி.ஐ-கூடப் பல இடங்களில் ரெய்டு நடத்திவிட்டது. இத்தனைக்குப் பிறகுமா எதிர்க் கட்சிகளுக்கு நம்பிக்கை பிறக்கவில்லை?' என்ற எண்ணம் நேற்று வரை யாருக்கேனும் இருந்திருக்கலாம்!
ஆனால், தொலைத் தொடர்புத் துறைக்குப் புதிதாகப் பொறுப்பேற்ற கபில் சிபல், 'மத்தியக் கணக்குத் தணிக்கைக் குழு தந்திருக்கும் இழப்பீட்டு விவரமே தவறு' என்று குண்டு போடுகிறார். முறைகேடாக ஒதுக்கீடு பெற்றதாகக் கூறப்படும் தனியார் நிறுவனங்களுக்கும் சேர்த்து வக்காலத்தும் வாங்குகிறார். இது போதாமல், தேர்தலை மனதில்கொண்டு 'கூட்டு அணி'கள் மேலும் நெருங்குகிற காட்சிகளும் பல உள் அர்த்தங்களை உணரவைக்கின்றன!
இவை எல்லாவற்றையும் பார்த்த பிறகு, 'நாடாளுமன்றக் கூட்டுக் குழு அமைப்பதுதான் உண்மைகளை அம்பலத்துக்குக் கொண்டுவர சரியான தீர்வு' என்று எதிர்க் கட்சிகளைப்போலவே சாமானியனும் சிந்திப்பதில் என்ன தவறு, மிஸ்டர் முகர்ஜி? இந்த விவகாரத்தில் தொடர்ந்து கிடுக்கிப்பிடி போட்டு வரும் உச்ச நீதிமன்றமே வெகுண்டு கண்டிக்கும் அளவில்தானே இருக்கிறது உங்கள் அரசின் அடுத்தடுத்த நடவடிக்கைகள்?
ஒருவேளை, மத்திய நிதி அமைச்சரும் உண்மையாகவே 'மாவோயிஸ்ட்'டுகளுக்கு ஆள் சேர்த்துக் கொடுக்கத்தான் வழி மொழிகிறாரோ?
'ஆமாம், அப்படித்தான் நாங்கள் அழிச்சாட்டியம் செய்வோம். நாடாளுமன்றக் கூட்டுக் குழு அமைக்க மாட்டோம். வேண்டுமானால், தீவிரவாதிகளாக மாறிப் போராடிக்கொள்ளுங்கள்' என்பதுதான் '2ஜி' புராணத்துக்கு பிரணாப்ஜி அளிக்கும் பொழிப்புரையோ?!