இளைஞர்கள் நினைத்தால் ஊழலை ஒழிக்க முடியும்-: அப்துல்கலாம்



''ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள இளைய சமுதாயத்தினர், ஊழலுக்கு எதிராக தங்கள் குடும்பத்தில் மாற்றத்தை கொண்டு வந்தால் நல்ல சமுதாயம் உருவாகும். நாடு மாறவேண்டும் என்றால் ஒவ்வொரு வீடும் மாற வேண்டும். இதை கருத்தில் கொண்டு தான், இளைய சமுதாயத்திற்காக ஒரு இயக்கத்தை ஆரம்பித்துள்ளேன்,'' என்று முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பேசினார்.

தாம்பரத்தை அடுத்த ராஜகீழ்ப்பாக்கத்தில் சி.பி.எஸ்.சி. மற்றும் வேதபாடச்சாலையுடன் கூடிய ஸ்ரீ காஞ்சி மகாசுவாமி வித்யா மந்தீர் பள்ளி திறப்பு விழா நடந்தது. முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பள்ளியை திறந்துவைத்து பேசியதாவது:

நல்லொழுக்கம் இருந்தால் அனைத்தும் நல்லதாக நடக்கும். பெற்றோர், ஆரம்ப பள்ளி ஆசிரியர் ஆகியோரால் நல்லொழுக்கத்தை கொடுக்க முடியும். தற்போது, ஊழல் என்பது நாட்டில் மிகப்பெரிய வியாதியாக இருக்கிறது. அதை எப்படி ஒழிக்க வேண்டும் என நான் செல்லும் இடமெல்லாம் இளைஞர்கள் என்னிடம் கேள்வி கேட்கின்றனர். இ-மெயில்களும் வருகின்றன. ஊழலை ஒழிப்பதற்காக பல சட்டங்கள் உள்ளன. பலர் கைது செய்யப்படுகிறார்கள். சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு, சிலர் தண்டிக்கப்படுகிறார்கள். லஞ்சம் எங்கிருந்து ஆரம்பிக்கிறது. நம் வீட்டில் இருக்கும் ஆண், பெண்கள் தான் லஞ்சத்தை தங்கள் பணியில் ஈடுபடுத்துகிறார்கள். "ஊழல் என்பது எனக்கு இழுக்கு' என்று ஒவ்வொருவரும் நினைக்கின்ற சூழல் வரவேண்டும். இந்தியாவில் 200 மில்லியன் வீடுகளில் 80 மில்லியன் வீடுகள் லஞ்சத்தில் ஈடுபடுகிறது என வைத்துக்கொண்டால் கூட அந்த வீடுகளில் எப்படி லஞ்சத்தை ஒழிப்பது. ஒவ்வொரு வீடுகளில் இருக்கும் இளைஞர்கள் இப்படிப்பட்ட சூழ்நிலையில் வளரும்போது அவர்களின் மனநிலை எப்படி இருக்கும். ஊழலால் வந்த பணத்தால் எங்களுக்கு எந்த வசதியும் வேண்டாம் என்று முடிவெடுத்தால், அவர்களால் பெற்றோர்களை ஊழலில் இருந்து மாற்ற முடியும் என்பது எனது நம்பிக்கை.

அன்பு, பாசம் என்ற மிகப்பெரிய ஆயுதம் இளைய சமுதாயத்தின் கையில் இருக்கிறது. அதை அவர்கள் லஞ்சம் வாங்கும் பெற்றோர்கள் மீது செலுத்தினால் லஞ்சத்தை விட்டு பெற்றோர்களால் கண்டிப்பாக வெளியே வர முடியும். ஏனென்றால் தான் பெற்ற பிள்ளையே அவமானமாக நினைப்பதை, ஒரு இழிவான செயலான ஊழலை செய்ய எந்த ஒரு பெற்றோருக்கும் மனது வராது. ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள இளைய சமுதாயத்தினர் லஞ்சத்திற்கு எதிராக தங்கள் குடும்பத்தில் இந்த மாற்றத்தை கொண்டு வந்தால் நல்ல சமுதாயம் உருவாகும். சமூக உணர்வோடு கூடிய நல்ல தலைவர்கள் கிடைப்பார்கள். நாடு ஊழலில் இருந்து விடுபடும். நாடு மாறவேண்டும் என்றால் ஒவ்வொரு வீடும் மாற வேண்டும். இதற்காக இளைய சமுதாயத்திற்காக ஒரு இயக்கத்தை ஆரம்பித்துள்ளேன். இந்த இயக்கத்தில் 15 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்கள் உறுப்பினராகலாம். தலைவர் என்று யாரும் இல்லை. "என்னால் எதை கொடுக்க முடியும் அல்லது உங்களுக்கு நான் என்ன செய்ய வேண்டும்' என்ற எண்ணத்தை இளைஞர்களிடம் உருவாக்குவது தான் இந்த இயக்கத்தின் முக்கிய நோக்கம். எனக்கு வேண்டும் என்ற சுயநல எண்ணம்தான் லஞ்சம் வாங்க தூண்டுகிறது. நாம் ஒவ்வொருவரும் நமது மனதை, வீட்டை, குடும்பத்தை தூய்மையாக மாற்றுவேயானால் நாடு மாறும். எல்லோரும் இதில் ஈடுபட்டு சமூகமாற்றத்தை ஏற்படுத்துவோம்.

இவ்வாறு அப்துல்கலாம் பேசினார்.