தமிழக சட்டப்பேரவையில் அண்மையில் இரு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இரண்டுமே கருத்துமாறுபாடின்றி பாராட்டுக்குரியவை. இரண்டுமே இலங்கை தொடர்பானவை. முதலாவது தீர்மானம், கச்சத்தீவை மீட்கும் முயற்சி. இரண்டாவது தீர்மானம், இலங்கைத் தமிழர் வாழ்வை மீட்டெடுக்கும் முயற்சி.
1974, 1976 ஒப்பந்தங்களின் அடிப்படையில் கச்சத்தீவு இந்தியாவின் எல்லையிலிருந்து பிரிக்கப்பட்டு இலங்கையில் சேர்க்கப்பட்டது. கச்சத்தீவில் உள்ள அந்தோனியார் கோயிலுக்குச் சென்று வருவதும், தமிழக மீனவர்கள் தங்கள் மீன்பிடி வலைகளை உலர்த்துவதும் எப்போதும்போல, இலங்கை அரசின் அனுமதியோ, விசாவோ இல்லாமல் நடைபெறலாம் என்று இந்த ஒப்பந்தத்தில் சொல்லப்பட்டிருந்தாலும், இது வெறும் எழுத்தில் இருக்கிறதே தவிர, நடைமுறையில் இல்லை.
1956-ல் இலங்கை கடற்படை வீரர்களுக்கு கச்சத்தீவில் பயிற்சி அளித்தபோதே இந்தப் பிரச்னை எழுந்தது. இருப்பினும், அப்போது அதை அன்றைய இந்தியப் பிரதமர் பண்டித நேரு பெரிதுபடுத்த விரும்பவில்லை. இதெல்லாம் ஒரு பிரச்னையா என்பதுபோல பேசித் தட்டிக் கழித்துவிட்டார். கச்சத்தீவு ராமநாதபுரம் மன்னருக்குச் சொந்தமானது என்பது பிரிட்டிஷாரின் ஆவணங்களிலேயே தெளிவாக உள்ளது. ராமநாதபுரம் மன்னருக்குச் சொந்தமான கடலோர ஊர்கள் 69 மற்றும் 9 தீவுகளில் கச்சத்தீவும் ஒன்று. ஆனால், அதை நேரு வலியுறுத்தவில்லை.
1974-ல் இந்திய அரசு அணுகுண்டு வெடித்தபோது, ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியாவின்மீது கண்டன தீர்மானம் கொண்டுவர பாகிஸ்தான் முயன்றபோது, அப்போது முக்கிய பதவியில் இருந்த இலங்கை மூலம் இத்தீர்மானம் முறியடிக்கப்பட்டது என்பதால், நன்றிக்கடனாக இதனை இந்தியா வழங்கியது என்று சொல்லப்படுகிறது.
நியாயமாகப் பார்த்தால், இந்திய அரசு இத்தீவை இலங்கை அரசுக்குக் குத்தகைக்கு விட்டிருக்க வேண்டுமே தவிர, அவர்களுக்கே சொந்தமாக்கியிருக்கக்கூடாது. இதுபற்றி எதிர்த்துப் போராடி இருக்கவேண்டிய அன்றைய தமிழக அரசு - எதிர்க்கவில்லை. அப்போது தமிழக முதல்வராக இருந்தவர் மு. கருணாநிதி என்பதுதான் வேடிக்கை.
அந்த நேரத்தில் இதன் அவசியம் உணரப்படாமல் இருந்திருக்கலாம். ஆனால், தொடர்ந்து மீனவர்கள் தாக்கப்படுவதும், மீன்பிடி வலைகள் உலர்த்தவும்கூட அனுமதிக்கப்படாமல், விரட்டியடிக்கப்படுவதும் தொடர்ந்தபோது, தமிழக அரசு மிகப்பெரும் எதிர்ப்பைத் தெரிவித்திருக்க வேண்டும். ஆனால், இப்போது தமிழக முதல்வர் குறிப்பிடுவதைப்போல, அன்றைய திமுக அரசு வேதனை தெரிவித்ததே தவிர, எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை.
நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் இந்தத் தீவை இலங்கைக்கு வழங்கியது செல்லாது என்று ஜெயலலிதா தொடுத்த வழக்கில், தமிழக அரசு தன்னையும் சேர்த்துக்கொண்டு இருந்தாலும்கூட, இந்நேரம் இந்த வழக்கு ஒரு முடிவுக்கு வந்திருக்கும். ஆனால், அரசியல் கருத்துமாறுபாடு காரணமாக இந்த வழக்கைத் தமிழக அரசு கண்டும் காணாமல் இருந்துவிட்டது. அதிலும் குறிப்பாக, மத்திய கூட்டணி அரசில் மிக முக்கிய இடம்பெற்றிருந்தும்கூட, திமுக இதில் அதிக அக்கறை கொள்ளவில்லை.
இப்போது தமிழக அரசின் வருவாய்த் துறை, இந்த வழக்கில் தன்னையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியிருப்பதன் மூலம், ஏற்கெனவே உள்ள வழக்கு வலிமை பெறுகிறது. மேற்கு வங்க மாநில முதல்வராக இருந்த பி.சி ராய் முயற்சியில் பெருபாரி தீவு எப்படி மீட்கப்பட்டதோ அதேபோல, கச்சத்தீவை நாடாளுமன்ற ஒப்புதல் இல்லாமல் வழங்கியது தவறு என்று நீதிமன்றத் தீர்ப்பைப் பெறுவதற்கான வாய்ப்புகளும் நியாயங்களும் தமிழக அரசுக்கு நிறையவே இருக்கின்றன.
இந்த முயற்சி வெற்றி பெற வேண்டும் என்று தினமணி சார்பில் வாழ்த்துகிறோம்.
இரண்டாவது தீர்மானம், இலங்கைத் தமிழர்களுக்கு இன்னல் இழைத்துவரும் இலங்கை அரசைக் கட்டுப்படுத்த இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று இந்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது. இந்த நோக்கம் நல்லது என்றாலும் இத்தகைய தடை எந்த அளவுக்கு எதிர்பார்க்கும் பலனைத் தரும் என்று புரியவில்லை. நாம் பொருளாதாரத் தடை விதித்தாலும், ஏற்கெனவே இலங்கையுடன் நெருக்கமான நல்லுறவு பாராட்டிவரும் சீனா அவர்களுக்கு உதவி செய்ய ஓடோடி வரும். அப்படியொரு உதவி கிடைக்குமானால், தமிழர்கள் மீதான இன்னல் மேலும் கூடுமே தவிர, குறையாது.
ஆனால், தமிழக அரசு இலங்கைத் தமிழர் வாழ்வுக்காகச் செய்யவேண்டிய, செய்யக்கூடியது ஒன்று உண்டு. அதாவது, இலங்கைத் தமிழர் மறுவாழ்வுப் பணிகளைத் தன்பொறுப்பில் ஏற்று நடத்துவது என்பதுதான் அது.
இலங்கைத் தமிழர் மறுவாழ்வுக்காக இந்திய அரசு பல ஆயிரம் கோடி ரூபாயைப் படிப்படியாக அளித்து வருகிறது. இந்தத் தொகை தமிழருக்குச் செலவிடப்படாமல், சிங்கள மக்கள் அதிகம் வாழும் பகுதிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்த பயன்படுத்தப்படுகிறது என்கிற புகார்கள் எழுந்துள்ளன. மேலும், இந்தத் தொகை எவ்வாறு செலவிடப்படுகிறது, இதன் பயனாளிகள் அனைவரும் தமிழர்கள்தானா என்பதைக் கண்காணிக்கும் அமைப்பு எதுவும் இல்லை. புள்ளிவிவரங்களும் தரப்படுவதோ, பெறப்படுவதோ இல்லை. ஆகவே, இலங்கைத் தமிழர்களுக்காக இந்தியப் பணம் செலவிடப்படும் விதத்தைக் கண்காணிக்கவும், பயனாளிகளை நேரில் அறிந்துகொள்வதுமான உரிமையை தமிழக அரசு கேட்டுப் பெற வேண்டும். இந்திய நிதியுதவி நேரடியாக இலங்கைத் தமிழர்களை மட்டுமே சென்றடைவதை உறுதிப்படுத்தியாக வேண்டும்.
இலங்கைவாழ் தமிழர்களுக்குச் சமஉரிமை கிடைக்க வேண்டுமென்றால், முதலில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் சிங்களவர்களைக் குடியேற்றுவதைத் தடுத்தாக வேண்டும். தமிழர்களுக்குத் தன்னாட்சி உரிமை தரப்பட்டாக வேண்டும். குறைந்தபட்சம், இந்தியாவில் இருப்பதுபோல மாநில உரிமைகள் வரையறுக்கப்பட்டு இலங்கையில் பாராளுமன்ற ஆட்சிமுறை ஏற்படாத வரையில், தமிழர்களுக்குப் பாதுகாப்பும் இல்லை, சுயமரியாதையுடன் தலைநிமிர்ந்து சரிசமமாக வாழும் வாய்ப்பும் இல்லை. இந்த அடிப்படை உண்மை இந்திய அரசுக்குப் புரியவும் இல்லை. மத்திய ஆட்சியில் கடந்த ஏழு ஆண்டுகளாகப் பங்குபெறும் திமுக அதைப் புரிய வைத்ததாகவும் தெரியவில்லை!

நன்றி: தினமணி தலையங்கம் 11 .06 .2011