யார் செய்த குற்றம்....?

யார் செய்த குற்றம்....?

அகவை ஆறு ஆனதும்......
ஆரம்பப்பள்ளியில்
அடியெடுத்து வைத்தான் ஆறுமுகம்

அங்கே அவனுக்கு...
அலியும் அந்தோணியும்
அறிமுகம் ஆனார்கள்

வறுமை அவர்களை வாட்டிய போதும்
தம் மன வலிமையினால் 
வறுமையின் வலியினை 
வெறுமையாக்கினர் அவர்கள்

வீதி வரை மட்டுமே வந்த 
அவர்களின் நட்பு
வீடு வரைக்கும் விரிவடைந்தது-பின்
குழந்தைகளின் நட்பு 
குடும்பங்களின் நட்பாய் மாறியது

அறியா வயதில் ஆரம்பித்து 
அகம் கொண்ட அவர்கள் நட்பு
அகவை பல கடந்து
ஆலமரமாய் ஆழ வேரூன்றியது

ஆரம்பபள்ளியில் ஆரம்பித்து
மேல்நிலைப்பள்ளி வரை
ஒன்றாய் ஒரேப் பள்ளியில் பயின்றனர்

மேல்நிலைக் கல்வி முடிந்து 
உயர் படிப்பிற்கும் ஒன்றாய் 
பயணிக்க முற்ப்பட்டனர்....

காசு இருந்தால் தான் 
கல்லூரிகளில் கால் வைக்க முடியும்
எனும் நிலைமை இங்கிருக்க
பாவம் இவர்களோ அரைப்பட்டினிகள்
காசு இல்லாமல்...
காளையர் மூவரும் கலங்கினர்

ஒரு நாள் காலைப் பொழுதியில்
அலியும் அந்தோணியும் அரக்கப்பரக்க
ஆறுமுகம் வீட்டிற்கு வந்தனர்

எலேய் ஆறுமுகம் நம்ம படிப்பிற்கு 
அரசாங்கம் கசு தருதாம்
நாமும் இனி கல்லூரிக்கு போகலாம்
சந்தோசத்தால் திக்குமுக்காடினர் மூவரும்

எட்டாதோ என நினைத்த 
மேற்படிப்பு எட்டி விட்டது என்ற
மகிழ்ச்சியில் திளைத்தனர் மூவரும்

கல்லூரிக் கனவுகளோடு 
காளையர் மூவரும் தன் தகப்பன்களோடு
ஊருக்கு வேளியே உள்ளக்கல்லூரிக்கு
விண்ணப்பிக்க ஒன்றாய் போனார்கள்

அலியையும் அந்தோணியையும்
தனியாக அழைத்த கல்லூரி நிர்வாகம்
ஆறுமுகத்தை கண்டுகொள்ளவே இல்லை
ஆறுமுகத்தின் அப்பா ஆவல் மிகுதியால்
அதிகாரியை அனுகினார்...

அதிகாரியோ.....
ஆறுமுகத்தின் அப்பாவிடம் சொன்னார்
மன்னிச்சிடுங்க....
எங்களால ஓண்ணும் செய்ய முடியாது
அலிக்கும் அந்தோணிக்கும் தான்
கல்விக்கட்டணம் தருவதா 
கட்டளை போட்டிருக்கிறது அரசாங்கம்

அதிர்ந்தே போனான் ஆறுமுகம்...ஆனாலும்
அப்பாவியாய் அதிகாரிகளிடம் கேட்டான் 
எங்கள் மூவரின்...
மதிப்பெண்களும் பொருளாதர சூழ்நிலையும்
ஒன்றாய் இருக்க எனக்கு மட்டும்
கல்விக்கட்டணம் ஏன் தரதாம் அரசாங்கம் 

காரணம் தெரிந்ததும்...
கலங்கிபோனான் ஆறுமுகம்
ஏழையாய் பிறந்தது என் குற்றமா...
கலங்கிய கண்களோடு
அப்பாவியாய் தன் அப்பாவிடம் கேட்டான்

இல்லை மகனே...
ஏழையாய் பிறந்தது உன் குற்றமில்லை
இந்த ஏழை இந்துவுக்கு...
மகனாய் பிறந்தாய் அது தான் 
நீ செய்த குற்றம்

ஆறுமுகத்துக்கு....
அடி மனதில் ஒரு கேள்வி
என்னைப் போன்ற மாணவர்கள்
மத்தியில் மனிதத்தைப் பார்க்காமல்
மதம் பார்த்து ஏன் சலுகை வழங்குகிறது
மதிக்கெட்ட இந்த அரசாங்கம்

ஆனாலும் பரவாயில்லை
எனக்கு கிடைக்காத கல்வி 
என் நண்பர்களுக்காவது கிடைக்கிறதே
என ஆறுதல் அடைந்தான் ஆறுமுகம்

இது என்னுடைய கேள்வி
நாம் இந்த ஆறுமுகங்களின்
கண்ணீருக்கு என்ன கைமாறு
செய்யப்போகிறோம் அல்லது 
ஆறுமுகங்கள்....
அலியாகவோ அந்தோணியாகவோ மாறவேண்டுமா
பதில் சொல்லுங்கள் தமிழ் கூறும் நல்லுலகமே....

ஜே.பி.சி. : காங்கிரஸ் ஏன் தயங்குகிறது?

என். முருகன் IAS
இந்திய ஜனநாயகம் இதுவரை கண்டிராத வகையில் அதன் முக்கிய ஓர் அங்கமான நாடாளுமன்றம் அமளிதுமளியால் செயல்படாமல் முடக்கப்பட்டுவிட்டது. இதுவரை நம் நாட்டில்  நடந்தேறிய ஊழல்களில் மிகவும் அருவருக்கத்தக்கது 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் என்றும், அதன் முழுப் பரிமாணங்களும்  மக்கள் மன்றத்தின் முன்வைக்கப்பட வேண்டும் எனவும், அது  நிறைவேற ஜே.பி.சி. எனப்படும் நாடாளுமன்றக் கூட்டுக்குழு
அமைத்து தீர விசாரிப்பது ஒன்றே வழி எனவும் எதிர்க்கட்சிகள் கூறுகின்றன.

""நாடாளுமன்றக் கூட்டுக்குழுவுக்கு அவசியமே இல்லை.
நாடாளுமன்றத்தின் பி.ஏ.சி. எனப்படும் பொதுக்கணக்குக் குழு  இருக்கவே இருக்கிறது. அது தணிக்கைக் கட்டுப்பாட்டு  அதிகாரியின் இந்த ஆண்டு அறிக்கையில் 2ஜி ஸ்பெக்ட்ரம்  முறைகேடுகள் பற்றிக் கூறியுள்ள விரிவான குற்றச்சாட்டுகள்  பற்றி ஆய்வுசெய்து தனது அறிக்கையை நாடாளுமன்றத்தில்  சமர்ப்பிக்கும்'' என ஆளும் கட்சி கூறுகிறது.

கொழுந்துவிட்டு எரியும் இந்தப் பிரச்னையில் நம்மில் பலருக்கு  ஜே.பி.சி. எனப்படும் நாடாளுமன்றக் கூட்டுக்குழு பற்றிய  முழுவிவரங்களும் தெரிந்திருக்கவில்லை. மேலும், நமது  நாடாளுமன்றம், அதன் உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு  நடவடிக்கைகள் பற்றிய முழு விவரங்களும் தெரியாத  காரணத்தால், இக்கால இளைஞர்களுக்கு மக்களின் வரிப்பணம்
நாடாளுமன்ற முடக்கத்தால் வீணடிக்கப்படுவதும்,
அமைச்சர்களும் அதிகாரிகளும் ஜனநாயகத்தின் ஆணிவேர்  அசையும்படியான ஊழல்களில் ஈடுபட்டு நம் நாட்டின்  முன்னேற்றம் பாதிக்கப்படுகிறது என்பதும் தெரியாமல்  இருக்கிறார்கள்.

முதலாவதாக, ஜே.பி.சி. எனப்படும்  நாடாளுமன்றக் கூட்டுக்குழு என்றால் என்ன எனப் பார்ப்போம்.
ஒரு குறிப்பிட்ட விஷயத்தை முழு நாடாளுமன்றமும்
விவாதத்தின் மூலம் முழுமையாகப் புரிந்துகொண்டு தேவையான  நடவடிக்கைகளை எடுத்துவிட முடியாது என்ற காரணத்துக்காக  எல்லா கட்சிகளும் பிரதிநிதித்துவம் பெறும் வகையில்  அமைக்கப்படும் குழு, நாடாளுமன்றக் கூட்டுக்குழு.  நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் ஏதேனும் ஒன்று அதற்கான  தீர்மானத்தை நிறைவேற்ற, மற்றோர் அவை அத்தீர்மானத்தை
அங்கீகரிக்கவோ அல்லது இரு அவைகளின் தலைவர்களும்  கலந்துபேசி முடிவெடுப்பதன் மூலமாகவோ நாடாளுமன்றக்  கூட்டுக்குழுவை அமைக்கலாம்.

மாநிலங்களவை மற்றும் மக்களவை ஆகிய இருசபைகளும்  ஜே.பி.சி.யின் உறுப்பினர்களைத் தேர்வு செய்யலாம் அல்லது  தங்கள் கட்சியின் குறிப்பிட்ட உறுப்பினர்களை கூட்டுக்குழு  உறுப்பினர்களாகப் பரிந்துரை செய்யலாம். குழுவின் உறுப்பினர் எண்ணிக்கை எவ்வளவு என்பதை இரு அவைகளின்
தலைவர்களும் கலந்துபேசி முடிவு செய்வார்கள். இவ்வளவு  உறுப்பினர்கள்தான் என்ற விதி எதுவும் கிடையாது. இதுவரை ஏற்படுத்தப்பட்ட நாடாளுமன்றக் கூட்டுக்குழுக்களை  ஆராய்ந்தால் ஒரு குழுவில் 15 உறுப்பினர்களும், இரண்டு  குழுக்களில் தலா 30 உறுப்பினர்களும் இருந்தது தெரிகிறது.  ஆனால், கீழ்சபை உறுப்பினர்களின் எண்ணிக்கை மேல்சபை உறுப்பினர்களின் எண்ணிக்கையின் இரண்டு மடங்காக இருப்பது  ஏற்றுக்கொள்ளப்பட்ட வழிமுறை. நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட  மக்களவைக்கு எப்போதுமே முன்னுரிமை உண்டு என்பது  எழுதப்படாத விதி.

இவ்வாறு அமைக்கப்பட்ட ஜே.பி.சி.யின் அதிகாரம் என்ன? எந்த  ஒரு தனிமனிதர், அதிகாரி, அரசியல்வாதி, நிறுவனம் மற்றும்  பொது அமைப்பு ஆகியவற்றின் வாக்குமூலத்தை சாட்சியமாகப்  பெறலாம். யாரையும் சாட்சியாக அழைக்கும் அதிகாரம் ஒரு  நீதிமன்றத்துக்கு எவ்வளவு உண்டோ அந்த அளவுக்கு  நாடாளுமன்றக் கூட்டுக்குழுவுக்கும் உண்டு. காரணம், இக்குழு
அனுப்பும் சம்மன்களுக்குப் பணிந்து சாட்சியமளிக்க
வராதவர்களை நாடாளுமன்றத்தை அவமதித்ததாகக் கூறி மேல்  நடவடிக்கை தொடரவும் குழுவுக்கு அதிகாரம் உண்டு.

இக்குழுவின் விசாரணையை ரகசியமான முறையிலும்
நடத்தலாம் அல்லது விசாரணையின் விவரங்களைக் குழுத்  தலைவர் பத்திரிகைகளுக்குப் பேட்டியாகவும் அளிக்கலாம்.  ஆரம்பகாலங்களில் அமைச்சர்களை இக்குழு விசாரணைக்கு  அழைப்பதில்லை என்ற வழக்கம் இருந்தது. ஆனால்,  பிற்காலங்களில் மக்களவைத் தலைவரின் அனுமதியுடன்  அமைச்சர்களையும் விசாரணைக்கு அழைக்கலாம் என்ற  நடைமுறை ஏற்றுக்கொள்ளப்பட்டு வழக்கமாகிவிட்டது.

நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணைக்குத் தேவைப்படும் சில  ஆவணங்கள் ரகசியத் தன்மையுடையன எனவும், அவை நாட்டின்  பாதுகாப்பு சம்பந்தப்பட்டது எனவும் அரசு கருதினால், இதுபோன்ற
ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டுமா எனும் இறுதி முடிவை  எடுக்கும் அதிகாரம் மக்களவைத் தலைவருக்கு உண்டு.

மேலே கூறிய அதிகாரங்களுடன் இதுவரை நம் நாட்டில் நான்கு  நாடாளுமன்றக் கூட்டுக்குழுக்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

முதல் ஜே.பி.சி. 1987-ம் ஆண்டு, ஆகஸ்ட் 6-ம் தேதி
அமைக்கப்பட்டது. போஃபர்ஸ் ஒப்பந்த முறைகேடு என்று
கூறப்பட்ட குற்றச்சாட்டுகளை ஜே.பி.சி. மூலம் விசாரிக்க
வேண்டும் என்ற தீர்மானத்தை அன்றைய பாதுகாப்பு அமைச்சர்  கே.சி. பந்த் நாடாளுமன்றத்தில் முன்மொழிந்தார். இந்தத்  தீர்மானத்தை மாநிலங்களவை ஒருவாரத்தில் அங்கீகரித்ததால்  உருவானது முதல் ஜே.பி.சி. இக் குழுவின் தலைவராக ஆளும் கட்சியைச் சார்ந்த பி.  சங்கரானந்த் இருந்தார். 50 முறை கூட்டங்கள் நடந்து 1988-ம்  ஆண்டு ஏப்ரல் 26-ம் தேதி குழு தன் அறிக்கையைச் சமர்ப்பித்தது.  இக்குழுவின் கூட்டங்களுக்கு இதன் எதிர்க்கட்சி உறுப்பினர்கள்
செல்லாமல் பகிஷ்கரித்தனர். காரணம், இதன் பெரும்பான்மை  உறுப்பினர்கள் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்தவர்களாக  இருந்ததாகக் குற்றச்சாட்டு. நாடாளுமன்றத்தில் தாக்கல்  செய்யப்பட்ட குழுவின் அறிக்கை எதிர்க்கட்சிகளால்  நிராகரிக்கப்பட்டது.

இரண்டாவது, நாடாளுமன்றக் கூட்டுக்குழு, மூத்த காங்கிரஸ்  தலைவரும் மத்திய அமைச்சருமான ராம் நிவாஸ் மிர்தாவின்  தலைமையில் ஹர்ஷத் மேத்தா ஊழல் என்றழைக்கப்பட்ட  பங்குச்சந்தை மற்றும் வங்கிகளில் நடந்த முறைகேடுகளை  விசாரிக்க அமைக்கப்பட்டது. அன்றைய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் குலாம்நபி  ஆசாத், 1992-ம் ஆண்டு ஆகஸ்ட் 6-ம் தேதி கொண்டுவந்த தீர்மானத்தின்கீழ் அமைக்கப்பட்ட இக் குழு, அடுத்த நாளே
மாநிலங்களவையால் அங்கீகரிக்கப்பட்டது. இக் குழுவின்
அறிக்கையையும் நாடாளுமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை.

மூன்றாவது நாடாளுமன்றக் கூட்டுக்குழு 2001-ம் ஆண்டு, ஏப்ரல்  26-ம் தேதி அன்றைய மத்திய நாடாளுமன்ற விவகாரத் துறை  அமைச்சர் பிரமோத் மகாஜன் கொண்டுவந்த தீர்மானத்தின்படி  பங்குச்சந்தையின் முறைகேடுகள் பற்றி விசாரிக்க  அமைக்கப்பட்டது. மூத்த பா.ஜ.க. எம்.பி. ஓய்வுபெற்ற  லெஃப்டினன்ட் ஜெனரல் பிரகாஷ்மணி திரிபாதி இக்குழுவின்  தலைவராக இருந்து 105 கூட்டங்களில் விசாரணையும் விவாதங்களும் மேற்கொள்ளப்பட்டு, குழு தன் அறிக்கையை  2002-ம் ஆண்டு டிசம்பர் 19-ம் தேதி சமர்ப்பித்தது.

பங்குச்சந்தை நடைமுறையில் கடுமையான கட்டுப்பாட்டு  விதிகளை அமல்படுத்த வேண்டும் என்ற பல சிபாரிசுகளை  குழுவின் அறிக்கை பட்டியலிட்டது. ஆனால், இவை  எதுவும்    நடைமுறைப்படுத்தப்படவில்லை. கடைசியாக, 4-வது ஜே.பி.சி. 2003-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஏற்படுத்தப்பட்டது.

நம் நாட்டில் தயாரித்து விற்பனை செய்யப்படும் குளிர்பானங்களில் பூச்சிக்கொல்லி மருந்துகள்
கலந்துள்ளன; சரியான ரசாயன முறையில் அவை
பிரித்தெடுக்கப்பட்டு இக்குளிர்பானங்களை அருந்தும் மக்களின்  உடல் நலன் பாதிக்கப்படாத வகையில் இவை தயார்  செய்யப்படுவதில்லை எனும் பரவலான குற்றச்சாட்டை விசாரிக்க  இக்குழு ஏற்படுத்தப்பட்டது.

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரின் தலைமையில்  அமைந்த இக் கூட்டுக்குழு, 17 முறை கூடி விசாரணைகளையும், விவாதங்களையும் மேற்கொண்டு 2004-ம் ஆண்டு பிப்ரவரி 4-ம்  தேதி தனது அறிக்கையைச் சமர்ப்பித்தது. குளிர்பானங்களிலுள்ள  பூச்சிக்கொல்லி மருந்துகளின் கலவை, இக் குளிர்பானங்கள்  தயாரிக்கப் பயன்படுத்தப்படும் நீரில் உள்ளவை என்பதால் குடிநீர்
ஆதாரங்களில் பல கடுமையான நடவடிக்கைகளை எடுத்து  தூய்மையை நிலைநிறுத்த வேண்டும் என்ற மழுப்பலான  சிபாரிசுகளை அளித்தது இக்குழுவின் அறிக்கை. ஆக, கூட்டுக்குழு அமைவதால் மிகப்பெரிய நன்மைகள் எதுவும்  ஏற்பட்டுவிட்டனவா, எந்தக் குறைபாடுகளைக் களைய  இதுபோன்ற குழுக்கள் அமைக்கப்பட்டனவோ அக்குறைகள்  களையப்பட்டனவா என்ற கேள்விகளுக்கு "இல்லை' எனும்  துரதிருஷ்டமான பதிலைத்தான் கூற முடிகிறது. அதுமட்டுமல்ல,
நாடாளுமன்றக் கூட்டுக்குழுவில் பெரும்பான்மை
உறுப்பினர்களும், அந்த விசாரணைக் குழுவின் தலைவரும்  ஆளும் கட்சியையோ, கூட்டணியையோ சார்ந்தவர்களாகத்தான்  இருப்பார்கள் என்பதும் தெளிவு.

அப்படியிருந்தும் நாடாளுமன்றம்  முழு அளவில் முடக்கப்பட்டாலும் பரவாயில்லை என்ற அளவுக்கு
ஆளும் காங்கிரஸ் கூட்டணி, ஜே.பி.சி. அமைக்கத் தயாராக  இல்லை எனும் நிலைப்பாட்டை எடுப்பது ஏன்?
காரணம் அரசியல்தான். அதாவது அடுத்த ஆண்டு நான்கு
மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் நடக்க இருக்கின்றன.

தமிழ்நாடு, கேரளம், மேற்கு வங்கம் மற்றும் அசாம் ஆகிய
மாநிலத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியின் நிலைமை
இக்கட்டான சூழ்நிலையில் உள்ளதாக அக்கட்சி கருதுகிறது. அசாம் மாநிலத்தின் ஆளும் கட்சியான காங்கிரஸ் 2011-ம்  ஆண்டு தேர்தலில் மூன்றாவது முறையாகத் தொடர்ந்து  தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என விரும்பிக் காய் நகர்த்துகிறது.

மேற்கு வங்கம் மற்றும் கேரள மாநிலங்களில் ஆட்சியிலிருக்கும்  இடதுசாரி கம்யூனிஸ்ட் கூட்டணிகள் தோற்றுப்போகும்
சூழ்நிலையில் இருக்கின்றன. இவ்விரு மாநிலங்களிலும்
வெற்றிக்கூட்டணியில் தாங்கள் இருப்பதாகக் காங்கிரஸôர்  நினைக்கின்றனர்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தனியாக ஒரு மூன்றாவது  அணியை உருவாக்கி, 43 ஆண்டுகளாகப் பதவியை எட்டிப்  பார்க்காத நிலைமையை மாற்ற வேண்டும் என்ற முயற்சியை  ஆரம்பித்துவிட்டு, குறைந்தபட்சம் இன்றைய வாக்கு வங்கியையும்
இழந்துவிடக் கூடாது என்ற நிலைமைக்கு காங்கிரஸ்
தள்ளப்பட்டுவிட்டது. தமிழ்நாட்டில் ராகுல் காந்தியின் இளைஞர்  காங்கிரஸின் ஆள் சேர்க்கும் பணியின் தனியாவர்த்தனத்தில்  தொடங்கப்பட்ட முயற்சிகள், பிகாரில் இம் முயற்சி தோற்றபின்,  தில்லியின் தமிழ்நாட்டு அரசியல் கொள்கை பழையபடி திமுக
கூட்டணியே சிறந்தது என்ற நிலைமைக்குத்
தள்ளப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.

இதுபோன்ற தேர்தல் சூழ்நிலைகள் நான்கு மாநிலங்களில்
நிலவும்போது ஒரு நாடாளுமன்றக் கூட்டுக்குழு 2ஜி ஸ்பெக்ட்ரம்  முறைகேடுகளை விசாரிக்கும்போது பல கூட்டங்களை நடத்தி,  தேவைப்பட்டால் முன்னாள் அமைச்சர் ராசாவில் தொடங்கி, நீரா  ராடியா, சி.வி.சி. தாமஸ் மற்றும் பிரதமர் அலுவலக அதிகாரிகள்  வரை சாட்சிகளாக சம்மன் செய்யப்படலாம். யார் கண்டது?

பிரதமர் மன்மோகன் சிங்கும், காங்கிரஸ் தலைவி சோனியா  காந்தியும்கூட விசாரணைக்கு அழைக்கப்படலாம். அவர்களிடம்  மிகவும் தர்மசங்கடமான ஊழல், நிர்வாகச் சீர்கேடுகள் பற்றிய பல
கேள்விகள் தொடுக்கப்படலாம். அவர்கள் கூறும் பதில்கள்  பத்திரிகைகளுக்குக் கசியலாம்.

இப்போது வெளிவந்துள்ள தொலைபேசி உரையாடல் பல
ரகசியங்களைவிட சுவாரசியமான தகவல்கள் வெளிவந்து தேர்தல்  நேரத்தில் காங்கிரஸýக்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும்  தர்மசங்கடத்தை உருவாக்கித் தேர்தல் தோல்வியில் முடியலாம். ஏற்கெனவே காங்கிரஸ் தனது ஒரே ஆளும் மாநிலமான
ஆந்திரத்தை இழக்கும் சூழ்நிலை தென்னிந்தியாவில் உருவாகி வருகிறது.

மிச்சம் மீதியுள்ள கேரளம், தமிழகத்தின் கூட்டணி வெற்றிகளும்,  எடியூரப்பாவின் நிலஎடுப்பு ஊழல்களால் கர்நாடகத்தில்  உருவாகியுள்ள சாதகமான சூழ்நிலைகளும் பாதிக்கப்படுவதைத்  தவிர்க்கவே ஜே.பி.சி. எனும் நாடாளுமன்றக் கூட்டுக்குழு உருவாவதை மத்தியில் ஆளும் காங்கிரஸ் எதிர்க்கிறது.
முதல் நாடாளுமன்றக் கூட்டுக்குழுவைத் தாங்களாகவே
ஏற்படுத்திய ஆளும் காங்கிரஸ், இன்று கூட்டணியினரை நம்பி  அதுபோன்ற ஒரு குழுவை ஏற்படுத்த முடியாது.
காரணம், இக்குழுவில் காங்கிரஸ் பெரும்பான்மையுடன் இருக்க  முடியாது.

அதைவிடவும் மேலாக 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில்
காங்கிரஸ் கட்சியும் பலனடைந்திருக்கிறது என்ற தகவலும்,  தேவைப்பட்டால் சோனியா காந்தி மற்றும் பிரதமர் மன்மோகன்  சிங்கையும்கூட விசாரணைக்கு அழைத்து பல தர்மசங்கடமான  கேள்விகளைக் குழு கேட்கலாம் என்கிற சூழ்நிலையை மனதில்
கொண்டுதான் காங்கிரஸ் கட்சிக்கு ஜே.பி.சி. சிம்ம சொப்பனமாகத்  தெரிகிறது.

நாடாளுமன்றக் கூட்டுக்குழு அமைப்பதைத் தவிர்த்திருப்பதன்  மூலம் இப்போது உச்ச நீதிமன்றமே நேரடியாக விசாரணையை  மேற்பார்வையிடும் சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. இதன் மூலம்  பிரதமரையும், சோனியா காந்தியையும் நேரடி  விசாரணையிலிருந்து காப்பாற்ற முடியுமே தவிர, ஸ்பெக்ட்ரம் முறைகேடுகளில் அவர்களுக்குத் தொடர்பிருந்தால் காப்பாற்ற  முடியாத சூழ்நிலையல்லவா ஏற்பட்டுவிட்டிருக்கிறது!
நன்றி:தினமணி 22 .12 .2010

ஊழலின் சிகரம் தொட்ட தி.மு.க.

2 ஜி அலைக்கற்றை ஊழல் குறித்து விசாரணை நடத்தி வரும் உச்ச நீதிமன்றம் இதுவரை வரலாறு காணாத நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறது.
இந்தியாவின் தலையாய குற்றப் புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ.யின் நடவடிக்கைகளில் தனது அதிருப்தியை வெளிப்படையாக உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
அலைக்கற்றை ஊழல் குறித்து கடந்த 16 மாதங்களுக்கு மேலாக விசாரணை நடத்தியும் எந்தவிதமான நடவடிக்கையையும் சம்பந்தப்பட்ட அமைச்சர் மீதோ, அதிகாரிகள் மீதோ இதுவரை எடுக்காதது ஏன் - என்ற கேள்வியை முதலில் எழுப்பியது. இவ்வாறு செய்யவிடாமல் சி.பி.ஐ.யைத் தடுத்தது யார் - என்றும் கேட்டுள்ளது. இந்தக் கேள்விகளுக்கு வெளிப்படையான பதில் எதையும் சி.பி.ஐ.யால் தெரிவிக்க முடியவில்லை.
இறுதியாக 16-12-10 அன்று உச்ச நீதிமன்றம் அதிரடியான சில நடவடிக்கைகளை மேற்கொண்டது. உச்ச நீதிமன்ற நேரடிக் கண்காணிப்பில் சி.பி.ஐ. மற்றும் அமலாக்கப்பிரிவினர் விசாரணை நடத்தவேண்டும். 2001-ம் ஆண்டிலிருந்து 2008-ம் ஆண்டு வரை விசாரணை நடத்த வேண்டும். அரசுக்கு ஏற்பட்ட இழப்பு எவ்வளவு? தகுதியில்லாத நிறுவனங்களுக்கு உரிமைகொடுக்கப்பட்டதன் பின்னணி என்ன என்பனவற்றையும் தீவிரமாக ஆராய்ந்து கண்டறிய வேண்டும். 2ஜி அலைக்கற்றை அனுமதி குறித்த அறிவிப்பு 19-10-2007-ல் வெளியான நிலையில், அதற்கு ஒரு நாள் முன்னதாகவே சில நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது குறித்தும், அலைக்கற்றை ஒதுக்கீடு கிடைக்க வாய்ப்புள்ளது என்ற ஊகத்தின் அடிப்படையில் பல நிறுவனங்களுக்கு அரசுத்துறை வங்கிகள் பெருமளவில் கடன் வழங்கியுள்ளது குறித்தும் விசாரிக்க வேண்டும். எத்தகைய நபரும், அவர் எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும், அவரோ அல்லது ஏதாவதொரு அமைப்போ விசாரணையில் தலையிட சி.பி.ஐ. இடம் கொடுக்கக்கூடாது.
மேற்கண்ட ஆணைகளைப் பிறப்பித்த உச்ச நீதிமன்றம் பிப்ரவரி 10-ம் தேதிக்குள் இறுதி அறிக்கையை அளிக்க வேண்டும் என்றும் காலக்கெடு நிர்ணயித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் இந்த ஆணை, சி.பி.ஐ.யின் செயல்பாடுகளில் திருப்தியில்லாததால் பிறப்பிக்கப்பட்ட ஆணை மட்டுமல்ல, மத்திய அரசின் செயல்பாடுகளுக்குச் சாட்டையடி கொடுத்த ஆணையுமாகும்.
சி.பி.ஐ. அமைப்பு மத்திய உள்துறை அமைச்சரான ப. சிதம்பரத்தின் கட்டுப்பாட்டில் இயங்குவதாகும். 16 மாதங்களாக சி.பி.ஐ. சரிவர விசாரணை நடத்தவில்லை என்றால் அதற்குத் தடையாக இருந்தது யார் - என்ற கேள்விக்கு நேரடியாக உள்துறை அமைச்சரே பதில்கூறக் கடமைப்பட்டவர். அது மட்டுமல்ல, அவர் கண்காணிப்பில் சி.பி.ஐ. இயங்குவதிலிருந்து மாற்றி நேரடியாக தனது கண்காணிப்புக்கு உச்ச நீதிமன்றம் எடுத்துக் கொண்டது இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத ஒன்றாகும்.
உள்துறை அமைச்சர் மீது மட்டுமல்ல, பிரதமர் மீதும் உச்ச நீதிமன்றம் நேரடியாகக் குற்றம் சாட்டவில்லையே தவிர, அதன் ஆணைகளின் பொருள் அதுதான். இந்த ஆணை வெளிவந்தவுடனேயே பிரதமர், உள்துறை அமைச்சரைப் பதவிநீக்கம் செய்திருக்க வேண்டும் அல்லது குறைந்தபட்சம் சி.பி.ஐ.யைத் தனது பொறுப்பில் எடுத்துக்கொண்டு உச்ச நீதிமன்றத்திடம் மன்னிப்புக் கேட்டிருக்க வேண்டும்.
சி.பி.ஐ. விசாரணை என்பது மதிப்பிழந்துபோய் நீண்டகாலமாகிவிட்டது. அரசியல் எதிரிகளைப் பழிவாங்கவும், அச்சமூட்டிப் பணியவைக்கவும் ஆளுங்கட்சியினரால் பயன்படுத்தப்படும் ஓர் அமைப்பாகத்தான் சி.பி.ஐ. இயங்கி வருகிறது. நேர்மையும் துணிவும் நிறைந்த அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் சி.பி.ஐ. இருந்தபோது, சில நடவடிக்கைகள் ஒழுங்கானமுறையில் எடுக்கப்பட்டுள்ளன.
1994-ம் ஆண்டில் தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்த சுக்ராம் என்பவர் "அட்வான்ஸ்டு ரேடியோ மாஸ்ட்' என்ற நிறுவனத்துக்கு,ரூ. 1.68 கோடிக்கு அனுமதி அளித்துச் சலுகைகாட்டினார். இதன்மீது புகார்கள் எழுப்பப்பட்டபோதிலும், அவர் காங்கிரஸ் கட்சியில் முக்கியமானவராக இருந்ததால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 1995-ம் ஆண்டு மே மாதம் சி.பி.ஐ.யின் இயக்குநராக ஜோகிந்தர் சிங் பொறுப்பேற்றார். அப்போது இது சம்பந்தமான கோப்புகளை அவர் ஆராய்ந்தபோது, சுக்ராம் தவறான முறையில் செயல்பட்டுள்ளார் என்பதற்கான ஆதாரங்கள் இருந்தன. எனவே, அப்போது பிரதமராக இருந்த தேவகவுடாவின் கவனத்துக்கு அவர் இதை எடுத்துச் சென்றார். ஜனதா கட்சியைச் சேர்ந்த தேவகவுடா காங்கிரஸ் ஆதரவுடன் பதவியில் இருந்தபோதிலும் மேற்கொண்டு நடவடிக்கைகளைத் தொடர்வதற்கும், வழக்குத் தொடுப்பதற்கும் அனுமதி கொடுத்தார். அதற்கிணங்க தில்லியில் இருந்த முன்னாள் அமைச்சர் சுக்ராம் வீட்டில் 2.45 கோடி ரூபாய்களும், மண்டி என்ற ஊரில் இருந்த அவரது வீட்டில் 1.6 கோடி ரூபாய்களும் ஆக 4.05 கோடி ரூபாய்கள் கைப்பற்றப்பட்டன. ஆனால் சுக்ராம் லண்டனுக்குத் தப்பிச் சென்றுவிட்டார். ஆனாலும் 48 மணிநேரத்தில் அவர் நாடு திரும்பாவிட்டால் அவரது கடவுச் சீட்டு ரத்து செய்யப்படும் என சி.பி.ஐ. எச்சரித்தது. அதற்குப்பிறகே அவர் நாடு திரும்பினார். அவர் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது.
ஆனால் அதே தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக இருந்த ஆ. ராசா கையாண்ட முறைகளின் விளைவாக மத்திய அரசுக்கு 1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்ட பிறகும், அதைப் பொதுக்கணக்குத்துறை சுட்டிக்காட்டிய பிறகும் எவ்வித நடவடிக்கையும் எடுக்க பிரதமர் மன்மோகன் சிங் முன்வரவில்லை. நாடாளுமன்றத்தில் இப் பிரச்னையை எதிர்க்கட்சிகள் எழுப்பி, நாடாளுமன்றத்தை முடக்கியபிறகும் பிரதமர் அசையவில்லை. உச்ச நீதிமன்றத்தில் சில தன்னார்வ நிறுவனங்களும் சுப்பிரமணியன் சுவாமியும் வழக்குகள் தொடுத்தபிறகு உச்ச நீதிமன்றம் இப் பிரச்னையைத் தனது கையில் எடுத்துக்கொண்டு கடும் கண்டனம் தெரிவித்தது.
2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்வதை சில நாள்களுக்கு ஒத்திவைக்குமாறு அமைச்சர் ராசாவுக்குப் பிரதமர் கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தை ராசா அலட்சியப்படுத்தியதோடு அலைக்கற்றை ஒதுக்கீடு செய்வது தொடர்பாக அமைச்சர்கள் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டு, அட்டார்னி ஜெனரலின் ஆலோசனையும் பெறவேண்டும் என சட்ட அமைச்சகம் தெரிவித்த கருத்து தொடர்பாகப் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், "நியாயமற்றது, பாரபட்சமானது, தன்னிச்சையானது' என்ற வார்த்தைகளைப் பயன்படுத்தியுள்ளார். இத்தகைய வார்த்தைகளைப் பயன்படுத்தி பிரதமருக்குக் கடிதம் எழுதியதன் மூலம் பிரதமரையே ராசா அவமதித்திருக்கிறார் என்று உச்ச நீதிமன்றம் பகிரங்கமாகக் கண்டித்தது.
ஆனால், தன்னை அவமதிக்கும் வகையில் நடந்துகொண்ட ராசா மீது எத்தகைய நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் பிரதமர் பதுங்கிக்கொண்டது ஏன்? பிரதமருக்கும் மேலான சக்திகள் ராசாவுக்கு ஆதரவாகத் தலையிட்டனவா? பிரதமரையே அலட்சியம் செய்யும் துணிவு ராசாவுக்கு வந்த பின்னணி என்ன? என்பன போன்ற கேள்விகள் எழுகின்றன.
2 ஜி அலைக்கற்றையை அடிமாட்டு விலையில் பெற்ற 122 நிறுவனங்களில் 85 நிறுவனங்கள் வெறும் பெயர்ப்பலகை மட்டுமே வைத்திருந்த போலி நிறுவனங்கள் ஆகும். அலைக்கற்றை உரிமத்தை வாங்கும் நிறுவனம் அதை மூன்றாண்டுகளுக்கு யாருக்கும் விற்கக்கூடாது என்பது தொலைத்தொடர்புத்துறை விதித்த நிபந்தனையாகும். அந்த நிபந்தனைகளை இந்த நிறுவனங்கள் தூக்கியெறிந்துவிட்டு, தங்கள் பங்குகளில் 45 முதல் 60 சதவீதம் வரை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்று, பல ஆயிரம் கோடிகளை ஆதாயமாக அடைந்தன. இந்த விதிமீறல்களைப் பார்த்தும் பார்க்காததுபோல தொலைத்தொடர்புத்துறை கண்ணை மூடிக்கொண்டது ஏன்?
அமைச்சர் ராசா பதவி விலகியபிறகு, அந்தப் பொறுப்பை ஏற்ற கபில்சிபல் அந்தத்துறையில் ராசாவின் வலதுகரமாகத் திகழ்ந்த அதிகாரிகளை - சந்தோலியா, ஏ.கே. ஸ்ரீவஸ்தவா ஆகியோரையும் சட்ட ஆலோசகரான சந்தோக்சிங் என்பவரையும் உடனடியாக தொலைத்தொடர்புத் துறையிலிருந்து தூக்கியடித்தது ஏன்? ராசாவின் ஊழல்களுக்கு இவர்கள் துணையாக இருந்தார்கள் என்பதுதானே இந்த நடவடிக்கைக்குப் பொருளாகும். இவ்வளவு நடந்தபின்னாலும் நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணை வேண்டும் என அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து நாடாளுமன்றத்தில் போராடியபோது, கூட்டம் நடக்காவிட்டாலும் பரவாயில்லை என மத்திய அரசு பிடிவாதமாக நடந்துகொண்டதன் மூலம், ஜனநாயகத்தின் ஆணிவேரை ஊழல் கத்தியைக்கொண்டு அறுக்க முயன்றது மன்னிக்க முடியாததாகும்.
நாடாளுமன்றக் கூட்டுக்குழு அமைக்கப்பட்டால், பிரதமர் உள்பட உயர்நிலைப் பதவிகள் வகிக்கும் பலரும் அதன் முன்னால் விசாரணைக்கு அழைக்கப்படுவார்கள். எனவே அதைத் தவிர்த்ததாக காங்கிரஸ் தரப்பில் சொல்லப்படுகிறது.
1992-ம் ஆண்டு ஆகஸ்டு முதல் 93-ம் ஆண்டு டிசம்பர் வரை வங்கிப் பணபரிமாற்றங்களிலும் முதலீடுகளிலும் முறைகேடுகள் நடைபெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தபோது, நாடாளுமன்றக் கூட்டுக்குழு அமைக்கப்பட்டு, அப்போது மத்திய அரசில் நிதியமைச்சராக இருந்த இன்றைய பிரதமர் மன்மோகன்சிங் நாடாளுமன்றக் கூட்டுக்குழுவின் முன்னால் ஆஜராக மறுக்கவில்லை. 2002-ம் ஆண்டில் முன்னாள் நிதியமைச்சராக இருந்த கட்டத்திலும் அவர் பங்குச் சந்தை ஊழல் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட நாடாளுமன்றக் கூட்டுக்குழுவுக்கு முன்னால் ஆஜராகி சாட்சியம் வழங்கத் தயங்கவில்லை. ஆனால் இப்போது ஏன் பின்வாங்குகிறார்? நேர்மையாளர் எனப் பெயர்பெற்ற பிரதமரை நாடாளுமன்றக் கூட்டுக்குழுவுக்கு எதிர்நிலை எடுக்கவைத்ததற்குப் பின்னணியில் இருந்த சக்திகள் எவை?
இன்னமும் பிரச்னையைத் திசைதிருப்பவே மத்திய அரசு முயற்சி செய்கிறது. ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதியான சிவராஜ் பாட்டீல் என்பவரை 2ஜி அலைக்கற்றை ஊழல் விசாரணையை நடத்தும்படி நியமித்துள்ளது. ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் நேரடியாக இந்த விசாரணையில் ஈடுபட்டிருக்கும்போது ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதியை நியமித்து விசாரணை நடத்துவது மரபுகளுக்கு மட்டுமல்ல, நீதிக்கும் எதிரானதாகும். பிரச்னையைத் திசைதிருப்பவும், காலம்கடத்தவுமே இது பயன்படுமே தவிர, இதனால் முழு உண்மையும் வெளிவராது.
ராசாவை இனி மத்திய அரசு காப்பாற்றாது என்னும் நிலை வந்தபிறகு, அவரது கட்சியின் தலைவரான மு. கருணாநிதி அவரைக் காப்பாற்றவும் தனது குடும்பத்தினரைப் பாதுகாக்கவும் படாதபாடு படுகிறார். லஞ்சம் ஊழலுக்கு எதிரான நெருப்புப் போன்றவன் தான் எனக் கூறி, தனக்குத்தானே சான்றிதழ் வழங்கிக்கொள்கிறார்.
"தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி 16 அடி பாயும்' என்பது பழமொழி. முதல்வராக இருந்து தமிழகத்தில் இவர் நடத்திய ஊழல்கள் குறித்து மத்திய அரசு 1975-ம் ஆண்டு சர்க்காரியா கமிஷனை அமைத்து விசாரணை நடத்தியது. எடுத்துக்காட்டாக, வீராணம் திட்டத்திலும், கூவம்நதியை மணக்க வைக்கும் திட்டத்திலும் இவரது அரசு நடத்திய ஊழல் விஞ்ஞானப்பூர்வமான ஊழல் என சர்க்காரியா கமிஷன் குற்றம்சாட்டியதை யாரும் மறந்திருக்க முடியாது. இந்த ஊழல்கள் சில கோடி பெறுமானவை மட்டுமே. நாளடைவில் தி.மு.க.வின் ஊழல் பெருகி, நூறு கோடிகளாகவும், ஆயிரம் கோடிகளாகவும் விரிவடைந்து கருணாநிதியின் சீடர் ராசாவின் காலத்தில் ஊழலின் சிகரத்தையே தொட்டுவிட்டது.
கழகத்தில் ராசாவைவிட மூத்தவர்கள், பாடுபட்டவர்கள் பலர் இருந்தபோதும், அவர்களைப் புறந்தள்ளி அனைவருக்கும் இளையவரான ராசாவுக்குக் கோடிகோடியாகப் பணம்புரளும் தொலைத்தொடர்புத்துறையைப் பெற்றுக்கொடுக்க கருணாநிதியும் அவரது குடும்பத்தில் சிலரும் போராடியதன் பின்னணி பளிச்செனப் புரிகிறது. நீரா ராடியா என்ற அரசியல் தரகரின் ஒலிப்பதிவுகள் இந்த உண்மையை அம்பலப்படுத்துகின்றன.
காலங்கடந்தேனும் உச்ச நீதிமன்றம் தனது நேரடியான கண்காணிப்பில் இந்த ஊழல் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்துவதன்மூலம், உண்மையான குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படுவார்கள் என்று நம்பலாம். ஆனாலும் இந்த ஊழலுக்குப் பின்னணியில் மறைந்து செயல்படும் நிழல் குற்றவாளிகளையும் கண்டுபிடித்துக் குற்றவாளிக்கூண்டில் நிறுத்தவேண்டும்.
சுதந்திர இந்தியாவில், இதுவரை நடைபெற்ற பல்வேறு ஊழல்களில் மிகப்பெரிய ஊழல் அலைக்கற்றை ஊழல்தான். தமிழக அளவில் ஊழல் புரிந்த தி.மு.க. இந்திய அளவிலும் ஊழல் செய்து இமாலய சாதனை புரிந்துவிட்டது.






நன்றி :தினமணி  29 .12 .2010

வெங்காயம் வாங்க வங்கிக் கடன் கேட்ட ம.பி. முதல்வரின் மனைவி!

போபால்: வெங்காய விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதில் மத்திய அரசின் நடவடிக்கையை விமர்சிக்கும் வகையில், வெங்காயம் வாங்க வங்கியில் கடன் கேட்டு விண்ணப்பித்துள்ளார் மத்தியபிரதேச மாநில முதல்வரின் மனைவி.

வெங்காய விலை விஷம்போல் ஏறியுள்ளது. இதனால் நாடு முழுவதும் மக்கள் வெங்காயத்தால் கடும் பாதிப்பை சந்தித்துள்ளனர். கால் கிலோ வெங்காயம் வாங்கவே பெரும் பணம் தர வேண்டியுள்ளது. இதனால் சாமானிய மக்களின் நிலை பெரும் அவலமாகியுள்ளது.

மத்திய பிரதேச மாநில முதல்வர் ஷிவ்ராஜ் சிங் சவுகானின் மனைவி சாதனா சிங். அவர் அம்மாநில பாஜக மகளிர் அணியின் துணை தலைவராக உள்ளார். அவர் அன்மையில் வங்கியில் கடன் கேட்டு விண்ணப்பித்துள்ளார். எதற்கென்று தெரியுமா, வெங்காயம் வாங்கத்தான். வெங்காய விலை விண்ணைத் தொட்டுள்ளது குறி்த்து ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு தெரிவிக்கத் தான் இந்த நூதன போராட்டம்.அவர் அன்மையில் வெங்காய விலை உயர்வை எதிர்த்து போராட்டம் நடத்தினார். அப்போது தான் கிலோ ரூ. 60 முதல் 70 வரை விற்கும் வெங்காயம் வாங்க வங்கிக் கடன் கேட்டு விண்ணப்பித்தார். இந்த நூதன போராட்டம் போபாலில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் டிடி நகர் கிளை முன் நடந்தது.

காய்கறிகளின் விலை உயர்ந்து கொண்டே போவதால் எங்கள் வீட்டு பட்ஜெட் பெரிதும் இடிக்கிறது என்று

 அவர் கூறினார்.
  

மனசாட்சி இல்லாததால் மண்டியிடுகிறதா தி.மு.க?

20 வயது அன்பழகனை திருவாரூருக்கு அழைத்து வந்து 18 வயது கருணாநிதி கூட்டம் போட்டார். திராவிட இயக்கத்தின் 70 ஆண்டு கால அரசியல் சக்கரத்துக்கு இவர்கள் இருவரும் தான் தொடர்ச்சியாக எண்ணெய் வார்த்தவர்கள்!

கடந்த சனிக் கிழமை அன்று தனது 89-வது பிறந்த நாளைக் கொண்டாடினார் அன்பழகன். 87 வயதான கருணாநிதி, அவரது இல்லம் தேடிச் சென்று வாழ்த்தினார். இருவரும் தனிமையில் உரையாடினர்.
தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றத்தை திருவாரூரில் தான் தொடங்கிய காலக் கதையை கருணாநிதியோ... அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தான் கட்சி வளர்த்த கதையை அன்பழகனோ... அப்போது அளவளாவி இருக்க வாய்ப்பு இல்லை.
'எப்படி எல்லாம் வளர்த்த கட்சி, இப்படி ஒரு நிலைக்கு வந்துவிட்டதே!’ என்று நிச்சயம் வருத்தப்பட்டு இருப்பார்கள். வெளியே ஒப்புக்கொள்ளாவிட்டாலும், அவர்களின் மனசாட்சிகள் அதையே வழிமொழியும்!
'மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே... உங்கள் ஆட்சியில் ஊழலின் முகம் தெரிய ஆரம்பித்துவிட்டது..’ என்று முதலமைச்சர் அண்ணா முன், காங்கிரஸ் உறுப்பினர் சொல்லி முடிக்கவில்லை. எழுந்த அண்ணா, 'இதை நிரூபித்தால், இந்த நிமிடமே பதவியில் இருந்து விலகத் தயார்!’ என்றார். அண்ணாவுக்கும் 'அதற்கும்’ சம்பந்தம் இல்லை என்பதால், மேலே எதுவும் சொல்லாமல் காங்கிரஸ் உறுப்பினர் உட்கார்ந்தார். பின்னால், தனியே வந்து அண்ணாவிடம் விஷயத்தைத் தெரிவித் தார். 'நான் இதைச் சொன்னபோது அண்ணா வின் முகம் அவமானத்தால் கறுத்துப் போனது’ என்று அந்த காங்கிரஸ்காரர் சொன்னாராம்.
அந்தரங்கத்தில் அண்ணாவிடம் சொன்னதைப்போல் அல்ல... இன்று அகில இந்திய மீடியாக்களில், உலகப் புகழ்பெற்ற பத்திரிகைகளில் ஸ்பெக்ட்ரம் 2ஜி முறைகேடுகளின் மூலமாக, தி.மு.க. மீது கறை பூசப்படுகிறது. எந்தக் குற்றச்சாட்டுக்களை எல்லாம் ஆளும் கட்சிகளின் மீது, ஒரு ஆக்ரோஷமான எதிர்க்கட்சியாக தி.மு.க. வீசியதோ... எதையெல்லாம் எதிர்த்துப் போர்க் குரல் கொடுத்து, அதன் தொண்டன் அந்தக் கட்சியை வளர்த்தானோ... அந்தக் குற்றச்சாட்டுகள் எல்லாம் இன்று தன் கட்சி மீதே வீசப்படும்போது, எந்தச் சுகமும் காணாத அந்தத் தொண்டனின் உள்ளம் எவ்வளவு பாடுபடும்!
'பதவி என்பது தோளில் கிடக்கும் துண்டு; கட்டியிருக்கும் வேட்டிதான் மானம். துண்டு பற்றிக் கவலை இல்லை. மானமே மகத்தானது!’ என்று சொல்லிச் சொல்லியே மக்களின் மனதில் வேரூன்றிய கட்சியின் இன்றைய நிலை என்ன?
'1.76 லட்சம் கோடி ரூபாய் வருமான இழப்பை அரசுக்கு ஏற்படுத்தி, மிகப் பெரிய முறைகேட்டுக்கு ஆ.ராசா காரணமாக இருந்திருக்கிறார்’ என்று மத்திய கணக்கு மற்றும் தணிக்கைத் துறை, அறிக்கை தாக்கல் செய்து உள்ளது. ஆ.ராசாவை, அவர் வகித்து வந்த தொலை தொடர்புத் துறை அமைச்சர் பதவியில் இருந்து, ஏகத்துக்கும் கட்டாயப்படுத்தி... மிகுந்த பிரயாசைக்குப் பிறகே ராஜினாமா செய்யவைத்தது மத்திய அரசு.
அதுவரையில், 'குற்றம் நிரூபிக்கப்பட்டால், கட்டாயம் ராஜினாமா செய்வார் ராசா' என்றே அந்த பதவியைப் பிடித்துக்கொண்டு இருந்தது கட்சி. சி.பி.ஐ. அவரது வீட்டுக்குள் புகுந்து இருக்கிறது. அவரது உறவினர்கள், நண்பர்களின் இடங்கள் சோதனை செய்யப் பட்டு உள்ளன.
ஆ.ராசா குறித்து உச்ச நீதிமன்றம் பல்வேறு கேள்விகளைக் கேட்டுத் துளைக்கிறது. 'ஏலம் இல்லாத இந்த ஏலத்தின்' முக்கிய தொடர்பாளராகச் செயல்பட்டதோடு அல்லாமல்... அந்நிய தேசங்களின் உளவாளியாக உலா வந்தாரோ என்ற சந்தேகத்துக்கும் ஆளாகியுள்ள நீரா ராடியா, இன்று தி.மு.க -வின் ஒவ்வொரு தொண்டனுக்கும் அறிமுகம் ஆகிவிட்டார், மிகக் கசப்பாக!
முதலமைச்சர் கருணாநிதியின் துணை வியார் ராசாத்தி அம்மாள், மகள் கனிமொழி, முன்னாள் அமைச்சர் ஆ.ராசா, மாநில அமைச்சர் பூங்கோதை ஆகியோர் தொடர்ந்து இந்த நீரா ராடியாவுடன் தொடர்பில் இருந்திருக்கிறார்கள். தொலைபேசிப் பதிவுகளைப் பார்த்தால், அந்தப் பெண்மணியுடன் இவர்களெல்லாம் தேச சேவை பற்றிப் பேசியதாகத் தெரியவில்லை. சி.பி.ஐ தொடங்கி, செல்போன் எஸ்.எம்.எஸ். வரை இதை எல்லாம் தினந்தோறும் அலசிக் கிண்டலடிப்பதைப் பார்த்துத் துடிக்கிறான் தி.மு.க-வின் தொண்டன்! சுண்டு விரல் சும்மா சீண்டிவிட்டாலே சீறிக் கிளம்பிப் பதிலடி கொடுக்கிற தங்கள் தலைவர், இத்தனை பூகம்பங்களுக்குப் பிறகும் ஏன் மௌனம் காக்கிறார் என்று எண்ணிக் குமைகிறான்!
'சித்த மருத்துவம்’ பத்திரிகையில் சிறு விமர்சனம் வந்தால்கூட அறிக்கை விடும் கருணாநிதி, ஜெயின் கமிஷன் அறிக்கையில் அரசியல்ரீதியான விமர்சனங்கள் வந்த நிலையில், 'ஒரு நிமிஷம்கூட மத்திய அமைச்சர் பதவியில் இருந்து விலகியிருக்க மாட்டோம்’ என்று சொல்லிய கருணாநிதி... 2ஜி விஷயத்தில் சாந்தசொரூபியாக மாறிப் போனார்.
இந்த விஷயத்தில், ஆ.ராசாவின் நேர்மை மட்டுமல்ல; கருணாநிதியே கேள்விக்கு உள்ளாக்கப்பட்டார். 'கோபாலபுரம் இல்லம் தவிர, எனக்கு எந்தச் சொத்துக்களும் இல்லை’ என்று அறிவித்த கருணாநிதியால், 'என்னைப்போல்தான் என் உறவினர்களும் நேர்மையானவர்கள், என் அமைச்சரவை சகாக்களும் அப்பழுக்கற்றவர்கள்’ என்று ஏனோ சொல்ல முடியவில்லை. 'என் உறவினர்கள் சம்பாதிக்க, தொழில் தொடங்க நான் எந்த உதவியும் செய்யவில்லை’ என்று பட்டும் படாமலும் சொல்ல வேண்டிய நிலைமைக்கு என்ன காரணம்? தி.மு.க-வின் முகம் இப்படி மாறிப் போனதற்கு என்ன காரணம்?
''தட்டிக் கொடுத்துப் பாராட்டவும், குட்டுவைத்துச் சீர்தூக்கவும் இரண்டு கைகள் இருப்பதுதான் நல்ல நிர்வாகத் துக்கு அழகு! இப்போது அது இல்லை. ஜால்ராக்கள் மட்டும் தலைவரை அணுக முடிகிறது. உள்ளதை உள்ளபடி மட்டுமே பார்க்கவும், தவறான பாதையில் யார் சென்றாலும் தயங்காமல் தோலுரித்துக் காட்டவும் தலைவருக்கு ஒரு மனசாட்சியாகச் செயல்பட இப்போது யாரும் இல்லை'' என்கிறான் உண்மைத் தொண்டன்.
எத்தனையோ குறைபாடுகள் இருந்தாலும், 'முரசொலி’ மாறன் மறையும் வரை தனது கையில் சாட்டையை வைத்திருந்தார். கட்சியின் பொதுக் குழு, செயற் குழு கூடினாலே மந்திரிகளும் மாவட்டச் செயலாளர்களும் உள்காய்ச்சலில் உருளுவார்கள். 'ஆற்காடு வீராசாமி சொல்லும் ஆளைத் தேர்ந்தெடுத்து அனுப்பும் தேர்தலுக்கு ஜனநாயகத் தேர்தல் என்றா பெயர்?’ என்று கேட்டார். 'ஆலடி அருணா, மக்களையும் தொண்டனையும் எப்போது மதிக்கப்போகிறார்?’ என்று தாளித்தார். 'டி.ஆர்.பாலுவுக்கு ஏதோ டெல்லியையே ஆள்வதாக நினைப்பு?’ என்று கர்ஜித்தார். 'தமிழ்க்குடிமகன் கட்சியில் இருக் கும் வரை தமிழ் வளராது’ என்று காரணத் தோடு கிண்டல் அடித்தார். பொன்முடியின் தவறுகளைச் சாடினார். ஸ்டாலின் மந்தப் போக்கு காட்டியபோதும் தயங்காமல் விமர்சித்தார். ஏன்... கருணாநிதியையேகூட முரசொலி மாறன் சுருக்கென்று குத்திப் பேசியதும் உண்டு.
'மாறன் சொல்வது அவரது குரல் மட்டும்அல்ல; அவர் எனது மனசாட்சியாக இருந்து பேசுகிறார். நான் சொல்ல வேண்டியதை அவர் சொல்கிறார்’ என்று கருணாநிதியே ஒப்புக்கொண்டார். 'மாறனுக்கு ஒரு விஷயம் தெரிந்தால், அது மறு நிமிஷமே தலைவருக்குத் தெரிந்துவிடும். அதை பொதுக் குழுவில், ஆயிரம் பேர் முன்னால் போட்டு உடைத்து அவமானப்படுத்திவிடுவார்கள்’ என்ற பயம் எல்லா முன்னணித் தலைவர்களுக்கும் இருந் தது. குறிப்பாக, டெல்லிக்கு அனுப்பப் படும் பிரதிநிதிகள் பற்றி கட்சித் தலைமை கவலையே பட வேண்டாம் என்கிற அளவுக்குக் கட்டி மேய்த்தார் முரசொலி மாறன். ஆனால், இன்றோ அங்கே தலைக்குத் தலை சட்டாம் பிள்ளைத்தனம் என்பதே காட்சியாகி... அது இந்த நிலை வரை கொண்டுவந்து இருக்கிறது!
'கருணாநிதியின் காதுக்கு வராமல் எதுவும் நடந்தது இல்லை’ என்கிற அளவுக்கு இருந்த நிலைமை மாறி, புதிய புதிய ஆட்ட நாயகர்கள் வந்து கேப்டனையே கவிழ்த்துவிட்டார்கள். 'டெல்லியில் என்னென்னவோ நடந்திருக்கிறது. எதையுமே என்னிடம் ஏன் சொல்லவில்லை?’ என்று எல்லாம் முடிந்த பிறகு டி.ஆர்.பாலுவிடம் கருணாநிதி வருத்தப்படுகிறார். 'எனக்கு வர வேண்டிய விஷயத்தை துரைமுருகன், பொன்முடி, எ.வ.வேலு சேர்ந்து மறைச்சிட்டாங்க’ என்று கோபப்படுகிறார். 'யாருமே என்னை நம்பாம, யார் யாரையோ நம்பி இருக்காங்க’ என்று நொந்துகொள்கிறார். ஆ.ராசா குறித்த விளக்கங்களை கருணாநிதி சொல்வதற்குப் பதிலாக, 'ஆ.ராசா குற்றமற்றவர்’ என்று குஷ்பு வந்து மீடியாக்களில் விளக்கம் அளிக்கும் அளவுக்குத்தான் அங்கே அதிகார எல்லைகள் இப்போது வகுக்கப்பட்டு இருக்கின்றன!
உள்ளதைக் காட்டும் மனசாட்சிகள் தேவை இல்லை. குறைகளுக்கு அரிதாரம் பூசி மறைக்கக்கூடிய கவர்ச்சி முகங்கள்தான் கட்சிக்குத் தேவை என்று முடிவு எடுத்த மாதிரிதான் தி.மு.க-வின் அண்மைக் கால நடப்புகள் இருப்பதாக அடிமட்டத் தொண்டன் கருதுகிறான்! அரசின் திட்டங்களும்கூட வாக்காளனை மயக்கி 'போதை'யில் வைக்கும் கவர்ச்சித் திட்டங்களுக்கே முன்னுரிமை கொடுக்கின்றன.
ஆக, மாறன் தி.மு.க. என்ற காலம் மறைந்து... குஷ்பு தி.மு.க-வாகக் காலம் தன் லீலையைக் காட்டுகிறதா என்று கலங்கி நிற்கிறான் அந்தத் தொண்டன்.
'இந்தக் கட்சியை வேறு யாராலும் அழிக்க முடியாது. நம்மவர்களால் மட்டுமே முடியும்’ என்றார் அண்ணா!
'நம்மவர்கள்' என்று 'அ’ சொன்னது 'ஆ’-வைத்தானா?
நன்றி:ஆனந்த விகடன் 29 /12 /2010

இனியும் மௌனமாக இருக்கலாமா ?


டந்த 6-ம் தேதி! சென்னையிலுள்ள பிரசித்திபெற்ற மருத்துவமனை ஒன்றிற்குச் சென்றிருந்தேன்.எனது நெருங்கிய உறவினர் ஒருவர் அறுவைசிகிச்சைக்காக அங்கு அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரிடம் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு வெளியே வந்தேன்.
அந்த மருத்துவமனையிலிருந்த ஜெனரல் வார்டில் (General ward) பல நோயாளிகள் படுத்திருந்தனர்.அப்போது அங்கு வந்திருந்த மதமாற்ற போதகர்கள் 10 பேர் இரண்டு குழுக்களாகப் பிரிந்து, நோயாளிகளின் கட்டில்களுக்கு அருகில் அமர்ந்துகொண்டு,அவர்கள் குணமடைவதற்காகத் தாங்கள் ஜெபம் செய்வதாகக் கூறினர். சுமார் 10 நிமிடங்கள் ஜெபம் செய்வதாகச் சொல்லிவிட்டு, பின்பு நோயாளிகளின் கைகளில் அவர்களது மதப் பிரசார கையடக்க புத்தகம் ஒன்றையும் கொடுத்ததைக் கண்டேன்.

‘‘எங்கள் ஜெபத்தின் பலனாக நோயிலிருந்து விரைவில் குணமடைந்து விடுவீர்கள்.அப்படி குணமடைந்து வீடு திரும்பியபின்பு,எங்கள் வழிபாட்டுத் தலத்திற்கு வாருங்கள்...’’என்று கூறிவிட்டு,அடுத்த அறைக்குச் சென்றனர்.

‘இவ்விதம் மருத்துவமனையில் மதமாற்ற பிரசாரம் செய்வதை எவ்விதம் அனுமதித்தீர்கள்?’ என்று அந்த மருத்துவமனையின் நிர்வாகத்தினரைச் சந்தித்துக் கேட்டேன்.நான் கூறியதைக் கேட்டவுடன் மருத்துவமனை அதிகாரிகள் வியப்பும், அதிர்ச்சியும் அடைந்தனர்.

‘எங்கள் அனுமதியைக் கேட்காமல் அவர்களாகவே வந்திருக்க வேண்டும்’ என்று அவர்கள் பதில் கூறினார்கள்.

சென்ற சில மாதங்களாகவே எந்த அளவிற்கு இத்தகைய மதமாற்ற முயற்சிகள் தீவிரமடைந்துள்ளன என்பதற்கு மற்றுமோர் உதாரணம் இது! இத்தகைய முயற்சிகள் தீவிரமடைந்து வருவதைக் கண்டும் நமது மதத் தலைவர்களும், மடாதிபதிகளும், இந்து சமூகத்திற்கு ஆதரவாகச் செயல்படுவதாகப் பறைசாற்றிக்கொள்ளும் அரசியல் கட்சிகளும் மௌனமாக இருப்பதைக் கண்டு மனம் வேதனை அடைகிறது.

உடல் உபாதைகளினால் ஏற்கெனவே வேதனையை அனுபவித்துக்-கொண்டிருக்கும் நோயாளிகளிடம்,அவர்களது உடல் வேதனையைப் பயன்படுத்திக்கொண்டு மதமாற்றம் செய்ய முயல்வது கொடுமையிலும் கொடுமை ஆகும்.இவர்கள் தங்கள் மதக் கொள்கைகளைப் பற்றிக் கூறுவதற்குமுன்,இந்து மதக் கொள்கைகள்,நம்பிக்கைகள் ஆகியவற்றைப் பற்றி இழிவாகப் பேசுவதுடன்,துண்டுப் பிரசுரங்களையும் விநியோகிக்-கின்றனர்.

கொடிய குற்றங்களுக்காகச் சிறைத் தண்டனை அனுபவித்துவரும் கைதிகளைக்கூட மதமாற்றம் செய்து வருகின்றனர்!

இந்நிலையைக் கண்டாவது நமது மதத் தலைவர்களும்,ஆன்மிகப் பெரியோர்களும் ஒன்றுதிரண்டு இத்தகைய அநீதிக்கு எதிராகக் குரல் கொடுக்க முன்வருவார்களா?

கவலையுடன்,

உங்கள் ஏ.எம்.ஆர்.

நன்றி :குமுதம் ஜோதிடம் 31 .12 .2010  

அன்னை மீனாட்சி அருள்தளத்தில் ஆன்மீக அமுத மழை.

சென்ற பல நூற்றாண்டுகளாக,பாரத புண்ணிய பூமிக்கும், வேதநெறி-முறைக்கும் அன்னிய தேசங்களிலிருந்து வந்த பகைவர்களினால் ஏற்பட்ட பல கடும்  சோதனைகளிலிருந்தும் தப்பிப் பிழைத்து நம் நாடு இன்று சுடர்விட்டு ஒளிவீசி பிரகாசிப்பதற்குக் காரணம்,நமது புனித பூமியை அலங்கரிக்கும் மகான்களும் அருளாளர்களுமே ஆகும். இம்மகான்களின் ஆத்ம பலத்தினாலும்,அறிவுரைகளினாலும் இந்து தர்மம் இன்று பிழைத்துள்ளது.சென்ற சுமார் ஏழு நூற்றாண்டுகளில் உலகில் பல மதங்கள் அழிக்கப்பட்டுவிட்டன.இருப்பினும் நமது பாரத நெறிமுறை மட்டுமே தப்பிப் பிழைத்துள்ளது.
மிகச் சோதனையான கட்டத்தில் நம் வேத தர்மம் அழிந்துவிடாமல் காப்பாற்றுவதற்காக அவதரித்த மகான்கள் ஸ்ரீ ராமகிருஷ்ணரும், அவரது தேவியான அன்னை சாரதா தேவியாரும் மற்றும் ஸ்வாமி விவேகானந்தருமாகும்.



ஸ்ரீ ராமகிருஷ்ண பகவானின் உபதேசங்கள்!
இந்து மதம் பல சோதனைகளுக்கு ஆளாகியிருந்த சமயத்தில்தான், பாரத மக்கள் செய்த புண்ணியத்தின் பலனாக அவதரித்தருளினர் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரும், அவரது தேவியரான உத்தமி அன்னை சாரதா தேவியாரும். மக்களிடையே ஒழுக்கம், மனத்தூய்மை, தெய்வ பக்தி, தேசபக்தி, பிற ஜீவன்களிடம் கருணை என்று, மனித பிறவிக்குத் துணையிருக்கும் வாழ்க்கை நெறிமுறையை உபதேசித்தருளினர். உயர்ந்த படிப்பு,பணம்,அந்தஸ்து ஆகியவற்றால் சமூகத்தில் உயர்ந்திருந்தவர்-களிடம் செல்லாமல், சாதாரண ஏழை, எளிய மக்களிடம் சென்று தர்மநெறியை உபதேசித்ததால், மிகக் குறுகிய காலத்திலேயே ஏராளமான மக்கள் இம்மஹாபுருஷரையும்,அவரது தேவியாரையும் தெய்வத்திற்குச் சமமாகப் பூஜித்து வரலாயினர். 

ஸ்ரீ ராமகிருஷ்ணரின் உபதேசங்கள் மிகமிக எளிதானவை.சாதாரண மக்கள்கூட அவற்றைப் புரிந்துகொண்டு அவற்றின்படி நடக்கலாயினர்.

பிற்காலத்தில் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் பெயரில் ஏற்பட்டதே இன்று உலகளாவிய புகழ்பெற்ற ஸ்ரீ ராமகிருஷ்ண மடமாகும். இம்மடத்தின் அருளாளர்கள் செய்துவரும் ஆன்மிக,மற்றும் சமூக சேவைகளை உலகம் அறியும்.

தமிழகத்தில் ஸ்ரீ ராமகிருஷ்ண மடம்!
தமிழகத்தில் சென்னை மடத்தைத் தலைமைப் பீடமாகக் கொண்டு முக்கியமான ஊர்களில் பல அருளாளர்களும்,தொண்டர்களும் ஈடிணையற்ற தெய்வீகப் பணிகள் செய்து வருகின்றனர். 

ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம்!
ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் சென்னைக் கிளை தினமும் பஜனைகள், ஆன்மிகச் சொற்பொழிவுகள்,அருளாளர்களின் அறிவுரைகள் ஆகியவற்றை நடத்தி வருகின்றது. இதனால் தங்கள் தவறான பழக்க வழக்கங்களை விட்டு ஒழுக்கம் நிறைந்த நன்னெறிக்கு மாறிய மக்கள் ஏராளம் ஏராளம்.



பல காரணங்களினால் மடத்திற்கு நேரில் வர இயலாதவர்களுக்கு தர்மநெறிமுறைகளைத் தாங்கிச் செல்கிறது மடத்தின் பிரபல சஞ்சிகையான ஸ்ரீராமகிருஷ்ண விஜயம்.பல ஆண்டுகளுக்கு முன் சொற்ப பிரதிகளே விநியோகிக்கப்பட்ட இப்பத்திரிகைக்கு இன்று பல லட்சம் வாசக அன்பர்கள் உள்ளனர். இரவு பகல் ஊண், உறக்கமின்றி இப்பத்திரிகையே தனது உயிர்மூச்சென அரும்பாடுபட்டு,ஒரு குழந்தையை அதன் தாய் எவ்விதம் கவனத்துடனும், கவலையுடனும் வளர்ப்பாளோ, அதேபோன்று இப்பத்திரிகையை ஆரம்பகாலத்திலிருந்தே வளர்ந்த பெருமை இதன் ஆசிரியராக இருந்த பூஜ்யஸ்ரீ கமலாத்மானந்தரையே சேரும்.

சிறந்த நிர்வாகத் திறமையும்,இந்து தர்ம நெறிமுறையில் ஆழ்ந்த ஞானமும் இருந்ததால் இம்மகானை வேத தர்மநெறிமுறைக்காக மேலும் பயன்படுத்திக்கொள்ள விரும்பிய ராமகிருஷ்ண மடம்,அன்னை ஸ்ரீமீனாட்சியின் அரும்பெரும் தெய்வீக நகரமான மதுரையில் விளங்கும் ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் கிளைக்குத் தலைவராக மாற்றினர். இம்மகானின் நிர்வாக திறமையும், செயலாற்றும் ஆற்றலும் மதுரை கிளைக்கு கிடைத்ததால் மதுரை மடம் மின்னல் வேகத்தில் முன்னேற்றம் அடைந்துள்ளது.

இம்மகானுக்குப் பின்பு,ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயத்தின் ஆசிரியர் பொறுப்பை பூஜ்யஸ்ரீ விமுர்த்தானந்த மகராஜ் அவர்கள் ஏற்று,மிகத் திறமையுடன் அதனை நிர்வகித்து வருகிறார்.

ஸ்வாமி ஸ்ரீ விவேகானந்தர்!
இந்துக்களுக்கு சத்தியம், தர்மம், ஒழுக்கம், நேர்மை, பண்பு, கலாசாரம் ஆகியவை இருந்தால் மட்டும் போதாது.தங்கள் வாழ்க்கை நெறிமுறைகளைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமானால்,அதற்கு துணிவும், தியாகம் செய்யும் மனஉறுதியும், வீரமும், தைரியமும் மிக மிக அவசியம் என வலியுறுத்தினார் ஸ்வாமி ஸ்ரீவிவேகானந்தர்.

தர்மம் என்பது மிகவும் சூட்சுமமானது அதனை நம்பிக்கையினால் கடைப்பிடிப்பதைவிட, அதன் பொருளைப் புரிந்துகொண்டு கடைப்பிடிப்பதே விவேகம் என்பதை வலியுறுத்தினார் ஸ்வாமி. ‘‘அஹிம்சா பரமோ தர்ம:’’ என்பதை இந்துக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்பதையும், அதன் உண்மையான அர்த்தத்தை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும் என்பதையும் அடிக்கடி கூறிவந்தார் ஸ்வாமி ஸ்ரீ விவேகானந்தர். மூர்க்கர்கள், தர்மத்தில் நம்பிக்கை இல்லாதவர்கள், கொடூர மனம் படைத்தவர்கள் ஆகியவர்களிடம் அஹிம்சா தர்மத்தை எடுத்துக் கூறுவதில் எவ்வித பயனுமில்லை என்பதை ஒவ்வொரு இந்துவும் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதை விளக்கினார் ஸ்வாமி. சாதுக்களாகவும், கோழைகளாகவும் இருந்துவரும் இந்து சமூகத்தை நினைத்து நினைத்துக் கலங்கினார் ஸ்வாமி ஸ்ரீ விவேகானந்தர். பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரும், அன்னை ஸ்ரீசாரதாதேவியாரும் உபதேசித்த தர்மநெறிமுறையுடன், பராக்கிரமத்தையும் (வீரம்) இந்துக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்பதே ஸ்வாமி விவேகானந்தரின் உபதேசமாகும்.



அவதாரபுருஷர் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரும் அன்னை ஸ்ரீசாரதா தேவியாரும், ஸ்வாமி விவேகானந்தரும் அவர்களது ஸ்தூல சரீரத்தில் இப்போது இல்லை. ஆனால் அவர்களது ஆத்மபலம் - அவர்களது உபதேசங்கள்-அவர்கள் தங்கள் வாழ்வில் வாழ்ந்து காட்டிய தர்மநெறிமுறைகள் இன்றும் இந்து சமூகத்திற்கு வழிகாட்டி வருகின்றன.
மதுரை மாநாடு!

தமிழக மக்கள் காலம் காலமாக இறைபக்தியில் திளைத்தவர்கள். பலவிதங்களிலும் மாறுபட்டுவரும் இன்றைய சமுதாயத்தில் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர், ஸ்ரீ சாரதா தேவியார், ஸ்ரீ விவேகானந்தர் ஆகியவர்களின் அருமையும், பெருமையும், அந்த அருளாளர்களின் உபதேசங்களும் முக்கியமாக நம் குழந்தைகளிடம் சென்றடைய வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு நம் வேத நெறிமுறையின் உயர்வு தெரியவரும். ஸ்ரீராமகிருஷ்ணர் போன்ற அவதார புருஷர்களின் உபதேசங்கள் குடிசைகளில் வாழும் ஏராளமான எளிய மக்களிடம்கூட சென்றடைய வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன் டிசம்பர் மாதம் 3, 4, 5 - 2010 தேதிகளில் அன்னை மீனாட்சி அமர்ந்திருக்கும் ஆலவாய் (மதுரை) திருத்தலத்தில் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர், அன்னை ஸ்ரீசாரதா தேவியார், ஸ்ரீ விவேகானந்தர் பக்தர்களின் 18-வது மாநாடு வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.வார்த்தைகளால் வர்ணிக்க இயலாத அளவுக்குப் பிரம்மாண்டமான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர் பூஜ்யஸ்ரீ கமலாத்மானந்தர் தலைமையில். பல லட்சம் பக்தர்கள் அணி திரண்டு வந்து இம்மாநாட்டில் பங்கேற்று,மறக்கமுடியாத அந்த மூன்று  தினங்களிலும் ஆன்மிக அமுதத்தைப் பருகிப் பருகித் திளைத்தனர். ஏராளமான பேரருளாளர்களை ஒரே இடத்தில் தரிசிக்கும் பேற்றினை அன்று பல லட்சம் மக்கள் பெற்று, மெய்சிலிர்த்து மகிழ்ந்தனர்.
வான் மழையும், ஆன்மிக அமுத மழையும்!

அந்த மூன்று நாட்களும் மதுரையம்பதியில் அடைமழை.ஆனால், அருளாளர்கள் ஆற்றிய அமுத உரை மழையில்,மக்கள் வானம் பொழிந்த அந்த மழையைச் சிறிதும் பொருட்படுத்தவில்லை!

மாநாட்டின் ஒவ்வோர் அம்சத்திலும் பூஜ்யஸ்ரீ கமலாத்மானந்தரின் நிர்வாகத்திறமை பளிச்சிட்டது. சிறுசிறு ஏற்பாடுகளைக்கூட கவனத்துடன் செய்திருந்ததைப் பாராட்டுவதற்குத் தகுந்த வார்த்தைகள் இல்லை. மதுரையைச் சேர்ந்த பெரியோர்கள், அறிஞர்கள், அதிகாரிகள் மற்றும் தமிழகத்தின் மரியாதைக்குரிய அருட்செல்வர் பொள்ளாச்சி திரு.மகாலிங்கம், சென்னை தொழிலதிபர் திரு.நல்லி குப்புசாமி மற்றும் மதுரை தொழிலதிபரும், ஸ்ரீ ராமகிருஷ்ணரின் பரமபக்தருமான திரு. விஸ்வாஸ் சங்கர சீதாராமன் அவர்கள்,பட்டிமன்றங்களில் தனக்கென ஒரு தனி இடம் பெற்றுத் திகழும் திரு.சாலமன் பாப்பையா போன்ற அறிஞர்கள் பலரும் இம்மகாநாட்டில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

பூஜ்யஸ்ரீ கௌதமானந்த மகராஜ்!
சென்னை ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் தலைவரும்,தெய்வீகப் பெருமையும் பெற்ற பூஜ்யஸ்ரீ கௌதமானந்த மகராஜ் அவர்கள் தலைமை தாங்கி அருளாசி வழங்கினார்.



கொல்கத்தா பேலூர் ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் தலைமை பீடத்திலிருந்து அருளாளர் பூஜ்யஸ்ரீ ஸ்மரணானந்த மகராஜ் அவர்கள் இம்மகாநாட்டில் கலந்துகொண்டு வந்திருந்த மக்கள் அனைவரையும் ஆசீர்வதித்தருளினார். 
அம்மூன்று தினங்களிலும் பஜனைகள்,தெய்வீக நடன நிகழ்ச்சிகள், டாக்டர் சீர்காழி சிவசிதம்பரம் அவர்களின் இன்னிசை கச்சேரி ஆகியவை மாநாட்டின் சிறப்பிற்கு மேலும் மெருகேற்றின.

ஆன்மிகத்திற்கு அரும் பணியாற்றிவரும் அன்பர்களுக்கு ஸ்வாமி விவேகானந்தரின் அழகான திருவுருவச்சிலை பரிசாக அளிக்கப்பட்டது.

கிடைத்தற்கரிய இத்தெய்வீக வாய்ப்பினை தமிழக மக்களுக்கு அளித்தருளிய மதுரை ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் அருளாளர்களுக்கும், அதன் தலைவர் பூஜ்யஸ்ரீ கமலாத்மானந்த மகராஜ் அவர்களுக்கும் முழுமையாக நன்றி கூற வார்த்தைகளில்லை. 
நன்றி : குமுதம் ஜோதிடம் 31 /12/2010