அன்னை மீனாட்சி அருள்தளத்தில் ஆன்மீக அமுத மழை.

சென்ற பல நூற்றாண்டுகளாக,பாரத புண்ணிய பூமிக்கும், வேதநெறி-முறைக்கும் அன்னிய தேசங்களிலிருந்து வந்த பகைவர்களினால் ஏற்பட்ட பல கடும்  சோதனைகளிலிருந்தும் தப்பிப் பிழைத்து நம் நாடு இன்று சுடர்விட்டு ஒளிவீசி பிரகாசிப்பதற்குக் காரணம்,நமது புனித பூமியை அலங்கரிக்கும் மகான்களும் அருளாளர்களுமே ஆகும். இம்மகான்களின் ஆத்ம பலத்தினாலும்,அறிவுரைகளினாலும் இந்து தர்மம் இன்று பிழைத்துள்ளது.சென்ற சுமார் ஏழு நூற்றாண்டுகளில் உலகில் பல மதங்கள் அழிக்கப்பட்டுவிட்டன.இருப்பினும் நமது பாரத நெறிமுறை மட்டுமே தப்பிப் பிழைத்துள்ளது.
மிகச் சோதனையான கட்டத்தில் நம் வேத தர்மம் அழிந்துவிடாமல் காப்பாற்றுவதற்காக அவதரித்த மகான்கள் ஸ்ரீ ராமகிருஷ்ணரும், அவரது தேவியான அன்னை சாரதா தேவியாரும் மற்றும் ஸ்வாமி விவேகானந்தருமாகும்.



ஸ்ரீ ராமகிருஷ்ண பகவானின் உபதேசங்கள்!
இந்து மதம் பல சோதனைகளுக்கு ஆளாகியிருந்த சமயத்தில்தான், பாரத மக்கள் செய்த புண்ணியத்தின் பலனாக அவதரித்தருளினர் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரும், அவரது தேவியரான உத்தமி அன்னை சாரதா தேவியாரும். மக்களிடையே ஒழுக்கம், மனத்தூய்மை, தெய்வ பக்தி, தேசபக்தி, பிற ஜீவன்களிடம் கருணை என்று, மனித பிறவிக்குத் துணையிருக்கும் வாழ்க்கை நெறிமுறையை உபதேசித்தருளினர். உயர்ந்த படிப்பு,பணம்,அந்தஸ்து ஆகியவற்றால் சமூகத்தில் உயர்ந்திருந்தவர்-களிடம் செல்லாமல், சாதாரண ஏழை, எளிய மக்களிடம் சென்று தர்மநெறியை உபதேசித்ததால், மிகக் குறுகிய காலத்திலேயே ஏராளமான மக்கள் இம்மஹாபுருஷரையும்,அவரது தேவியாரையும் தெய்வத்திற்குச் சமமாகப் பூஜித்து வரலாயினர். 

ஸ்ரீ ராமகிருஷ்ணரின் உபதேசங்கள் மிகமிக எளிதானவை.சாதாரண மக்கள்கூட அவற்றைப் புரிந்துகொண்டு அவற்றின்படி நடக்கலாயினர்.

பிற்காலத்தில் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் பெயரில் ஏற்பட்டதே இன்று உலகளாவிய புகழ்பெற்ற ஸ்ரீ ராமகிருஷ்ண மடமாகும். இம்மடத்தின் அருளாளர்கள் செய்துவரும் ஆன்மிக,மற்றும் சமூக சேவைகளை உலகம் அறியும்.

தமிழகத்தில் ஸ்ரீ ராமகிருஷ்ண மடம்!
தமிழகத்தில் சென்னை மடத்தைத் தலைமைப் பீடமாகக் கொண்டு முக்கியமான ஊர்களில் பல அருளாளர்களும்,தொண்டர்களும் ஈடிணையற்ற தெய்வீகப் பணிகள் செய்து வருகின்றனர். 

ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம்!
ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் சென்னைக் கிளை தினமும் பஜனைகள், ஆன்மிகச் சொற்பொழிவுகள்,அருளாளர்களின் அறிவுரைகள் ஆகியவற்றை நடத்தி வருகின்றது. இதனால் தங்கள் தவறான பழக்க வழக்கங்களை விட்டு ஒழுக்கம் நிறைந்த நன்னெறிக்கு மாறிய மக்கள் ஏராளம் ஏராளம்.



பல காரணங்களினால் மடத்திற்கு நேரில் வர இயலாதவர்களுக்கு தர்மநெறிமுறைகளைத் தாங்கிச் செல்கிறது மடத்தின் பிரபல சஞ்சிகையான ஸ்ரீராமகிருஷ்ண விஜயம்.பல ஆண்டுகளுக்கு முன் சொற்ப பிரதிகளே விநியோகிக்கப்பட்ட இப்பத்திரிகைக்கு இன்று பல லட்சம் வாசக அன்பர்கள் உள்ளனர். இரவு பகல் ஊண், உறக்கமின்றி இப்பத்திரிகையே தனது உயிர்மூச்சென அரும்பாடுபட்டு,ஒரு குழந்தையை அதன் தாய் எவ்விதம் கவனத்துடனும், கவலையுடனும் வளர்ப்பாளோ, அதேபோன்று இப்பத்திரிகையை ஆரம்பகாலத்திலிருந்தே வளர்ந்த பெருமை இதன் ஆசிரியராக இருந்த பூஜ்யஸ்ரீ கமலாத்மானந்தரையே சேரும்.

சிறந்த நிர்வாகத் திறமையும்,இந்து தர்ம நெறிமுறையில் ஆழ்ந்த ஞானமும் இருந்ததால் இம்மகானை வேத தர்மநெறிமுறைக்காக மேலும் பயன்படுத்திக்கொள்ள விரும்பிய ராமகிருஷ்ண மடம்,அன்னை ஸ்ரீமீனாட்சியின் அரும்பெரும் தெய்வீக நகரமான மதுரையில் விளங்கும் ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் கிளைக்குத் தலைவராக மாற்றினர். இம்மகானின் நிர்வாக திறமையும், செயலாற்றும் ஆற்றலும் மதுரை கிளைக்கு கிடைத்ததால் மதுரை மடம் மின்னல் வேகத்தில் முன்னேற்றம் அடைந்துள்ளது.

இம்மகானுக்குப் பின்பு,ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயத்தின் ஆசிரியர் பொறுப்பை பூஜ்யஸ்ரீ விமுர்த்தானந்த மகராஜ் அவர்கள் ஏற்று,மிகத் திறமையுடன் அதனை நிர்வகித்து வருகிறார்.

ஸ்வாமி ஸ்ரீ விவேகானந்தர்!
இந்துக்களுக்கு சத்தியம், தர்மம், ஒழுக்கம், நேர்மை, பண்பு, கலாசாரம் ஆகியவை இருந்தால் மட்டும் போதாது.தங்கள் வாழ்க்கை நெறிமுறைகளைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமானால்,அதற்கு துணிவும், தியாகம் செய்யும் மனஉறுதியும், வீரமும், தைரியமும் மிக மிக அவசியம் என வலியுறுத்தினார் ஸ்வாமி ஸ்ரீவிவேகானந்தர்.

தர்மம் என்பது மிகவும் சூட்சுமமானது அதனை நம்பிக்கையினால் கடைப்பிடிப்பதைவிட, அதன் பொருளைப் புரிந்துகொண்டு கடைப்பிடிப்பதே விவேகம் என்பதை வலியுறுத்தினார் ஸ்வாமி. ‘‘அஹிம்சா பரமோ தர்ம:’’ என்பதை இந்துக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்பதையும், அதன் உண்மையான அர்த்தத்தை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும் என்பதையும் அடிக்கடி கூறிவந்தார் ஸ்வாமி ஸ்ரீ விவேகானந்தர். மூர்க்கர்கள், தர்மத்தில் நம்பிக்கை இல்லாதவர்கள், கொடூர மனம் படைத்தவர்கள் ஆகியவர்களிடம் அஹிம்சா தர்மத்தை எடுத்துக் கூறுவதில் எவ்வித பயனுமில்லை என்பதை ஒவ்வொரு இந்துவும் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதை விளக்கினார் ஸ்வாமி. சாதுக்களாகவும், கோழைகளாகவும் இருந்துவரும் இந்து சமூகத்தை நினைத்து நினைத்துக் கலங்கினார் ஸ்வாமி ஸ்ரீ விவேகானந்தர். பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரும், அன்னை ஸ்ரீசாரதாதேவியாரும் உபதேசித்த தர்மநெறிமுறையுடன், பராக்கிரமத்தையும் (வீரம்) இந்துக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்பதே ஸ்வாமி விவேகானந்தரின் உபதேசமாகும்.



அவதாரபுருஷர் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரும் அன்னை ஸ்ரீசாரதா தேவியாரும், ஸ்வாமி விவேகானந்தரும் அவர்களது ஸ்தூல சரீரத்தில் இப்போது இல்லை. ஆனால் அவர்களது ஆத்மபலம் - அவர்களது உபதேசங்கள்-அவர்கள் தங்கள் வாழ்வில் வாழ்ந்து காட்டிய தர்மநெறிமுறைகள் இன்றும் இந்து சமூகத்திற்கு வழிகாட்டி வருகின்றன.
மதுரை மாநாடு!

தமிழக மக்கள் காலம் காலமாக இறைபக்தியில் திளைத்தவர்கள். பலவிதங்களிலும் மாறுபட்டுவரும் இன்றைய சமுதாயத்தில் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர், ஸ்ரீ சாரதா தேவியார், ஸ்ரீ விவேகானந்தர் ஆகியவர்களின் அருமையும், பெருமையும், அந்த அருளாளர்களின் உபதேசங்களும் முக்கியமாக நம் குழந்தைகளிடம் சென்றடைய வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு நம் வேத நெறிமுறையின் உயர்வு தெரியவரும். ஸ்ரீராமகிருஷ்ணர் போன்ற அவதார புருஷர்களின் உபதேசங்கள் குடிசைகளில் வாழும் ஏராளமான எளிய மக்களிடம்கூட சென்றடைய வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன் டிசம்பர் மாதம் 3, 4, 5 - 2010 தேதிகளில் அன்னை மீனாட்சி அமர்ந்திருக்கும் ஆலவாய் (மதுரை) திருத்தலத்தில் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர், அன்னை ஸ்ரீசாரதா தேவியார், ஸ்ரீ விவேகானந்தர் பக்தர்களின் 18-வது மாநாடு வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.வார்த்தைகளால் வர்ணிக்க இயலாத அளவுக்குப் பிரம்மாண்டமான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர் பூஜ்யஸ்ரீ கமலாத்மானந்தர் தலைமையில். பல லட்சம் பக்தர்கள் அணி திரண்டு வந்து இம்மாநாட்டில் பங்கேற்று,மறக்கமுடியாத அந்த மூன்று  தினங்களிலும் ஆன்மிக அமுதத்தைப் பருகிப் பருகித் திளைத்தனர். ஏராளமான பேரருளாளர்களை ஒரே இடத்தில் தரிசிக்கும் பேற்றினை அன்று பல லட்சம் மக்கள் பெற்று, மெய்சிலிர்த்து மகிழ்ந்தனர்.
வான் மழையும், ஆன்மிக அமுத மழையும்!

அந்த மூன்று நாட்களும் மதுரையம்பதியில் அடைமழை.ஆனால், அருளாளர்கள் ஆற்றிய அமுத உரை மழையில்,மக்கள் வானம் பொழிந்த அந்த மழையைச் சிறிதும் பொருட்படுத்தவில்லை!

மாநாட்டின் ஒவ்வோர் அம்சத்திலும் பூஜ்யஸ்ரீ கமலாத்மானந்தரின் நிர்வாகத்திறமை பளிச்சிட்டது. சிறுசிறு ஏற்பாடுகளைக்கூட கவனத்துடன் செய்திருந்ததைப் பாராட்டுவதற்குத் தகுந்த வார்த்தைகள் இல்லை. மதுரையைச் சேர்ந்த பெரியோர்கள், அறிஞர்கள், அதிகாரிகள் மற்றும் தமிழகத்தின் மரியாதைக்குரிய அருட்செல்வர் பொள்ளாச்சி திரு.மகாலிங்கம், சென்னை தொழிலதிபர் திரு.நல்லி குப்புசாமி மற்றும் மதுரை தொழிலதிபரும், ஸ்ரீ ராமகிருஷ்ணரின் பரமபக்தருமான திரு. விஸ்வாஸ் சங்கர சீதாராமன் அவர்கள்,பட்டிமன்றங்களில் தனக்கென ஒரு தனி இடம் பெற்றுத் திகழும் திரு.சாலமன் பாப்பையா போன்ற அறிஞர்கள் பலரும் இம்மகாநாட்டில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

பூஜ்யஸ்ரீ கௌதமானந்த மகராஜ்!
சென்னை ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் தலைவரும்,தெய்வீகப் பெருமையும் பெற்ற பூஜ்யஸ்ரீ கௌதமானந்த மகராஜ் அவர்கள் தலைமை தாங்கி அருளாசி வழங்கினார்.



கொல்கத்தா பேலூர் ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் தலைமை பீடத்திலிருந்து அருளாளர் பூஜ்யஸ்ரீ ஸ்மரணானந்த மகராஜ் அவர்கள் இம்மகாநாட்டில் கலந்துகொண்டு வந்திருந்த மக்கள் அனைவரையும் ஆசீர்வதித்தருளினார். 
அம்மூன்று தினங்களிலும் பஜனைகள்,தெய்வீக நடன நிகழ்ச்சிகள், டாக்டர் சீர்காழி சிவசிதம்பரம் அவர்களின் இன்னிசை கச்சேரி ஆகியவை மாநாட்டின் சிறப்பிற்கு மேலும் மெருகேற்றின.

ஆன்மிகத்திற்கு அரும் பணியாற்றிவரும் அன்பர்களுக்கு ஸ்வாமி விவேகானந்தரின் அழகான திருவுருவச்சிலை பரிசாக அளிக்கப்பட்டது.

கிடைத்தற்கரிய இத்தெய்வீக வாய்ப்பினை தமிழக மக்களுக்கு அளித்தருளிய மதுரை ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் அருளாளர்களுக்கும், அதன் தலைவர் பூஜ்யஸ்ரீ கமலாத்மானந்த மகராஜ் அவர்களுக்கும் முழுமையாக நன்றி கூற வார்த்தைகளில்லை. 
நன்றி : குமுதம் ஜோதிடம் 31 /12/2010