வாஷிங்டன்: மும்பை பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னர், முஸ்லீம் வாக்கு வங்கியைக் கவருவதற்காக, இந்து அமைப்புகள் மீதும், இந்துத்வா மீதும் அவதூறு ஏற்படுத்தும் வகையில், மதவாத பிரசாரம் மற்றும் அரசியலில் ஈடுபட்டது காங்கிரஸ் என்று அமெரிக்கத் தூதர் டேவிட் முல்போர்ட் அமெரிக்க அரசுக்கு தகவல் அனுப்பியதை அம்பலப்படுத்தியுள்ளது விக்கிலீக்ஸ் இணையதளம்.
இந்த அவதூறுப் பிரசாரத்திற்கு தலைமை வகித்தவர் அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஏ.ஆர்.அந்துலே என்றும் முல்போர்ட் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அப்போது அமெரிக்க தூதராக இருந்த டேவிட் முல்போர்ட், 2008ம் ஆண்டு டிசம்பர் 23ம் தேதி அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்திற்கு அனுப்பிய ரகசியக் கடிதத்தில் கூறபியிருந்ததாவது...
மும்பை பயங்கரவாத தாக்குதலை தனது அரசியலுக்காக பயன்படுத்திக் கொண்டது காங்கிரஸ். இதற்காக இந்துத்வா குறித்தும், இந்து அமைப்புகள் குறித்தும் அது மதவாத நோக்கத்தில் தகவல் பரப்பியது, குற்றம் சாட்டியது. இதை முதலில் தொடங்கி வைத்தவர் ஏ.ஆர்.அந்துலே. இவர்அப்போது சிறுபான்மை நலத்துறை அமைச்சராக இருந்தார்.
முதலில் அந்துலே விவகாரத்தில் தலையிடாமல்தான் இருந்தது காங்கிரஸ். ஆனால் அந்துலே குற்றம் சாட்டிப் பேசிய 2 நாட்கள் கழித்து அந்த சதித் திட்டத்தில் காங்கிரஸும் தன்னை இணைத்துக் கொண்டது.
இந்திய முஸ்லீம் சமுதாயத்தினரை முழுமையாக காங்கிரஸ் பக்கம் ஈர்க்கும் வகையில், எந்தவிதமான ஆதாரமும் இல்லாத குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார் அந்துலே.
நாடாளுமன்றத் தேர்தலை மனதில் கொண்டே இந்த மதவாத அரசியை நடத்தியது காங்கிரஸ்.
அந்துலே பேச்சை உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் நிராகரித்து விட்ட போதிலும் கூட, இந்திய முஸ்லீம்கள், தங்களுக்கு பாதகமாக இந்திய அரசு நடந்து கொள்வதாக நினைத்து விட்டதால்தான், இந்த மதவாத அரசியலில் குதித்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முனைந்தது காங்கிரஸ்.
இதன் மூலம் தனக்கு அது பலனைத் தரும் என்றால், அதற்காக எந்த அளவுக்கும் இறங்கிப் போக காங்கிரஸ் தயாராக இருப்பதாகவே தெரிகிறது. மேலும், ஜாதி, மதவாத அரசியலை அது தனக்கு தேவைப்படும்போதெல்லாம் பயன்படுத்தும் என்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது.
மும்பை பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தில் தீவிரவாத தடுப்புப் பிரிவு தலைவர் ஹேமந்த் கர்கரே உள்ளிட்ட மூன்று முக்கிய உயர் அதிகாரிகள் கொல்லப்பட்ட சம்பவத்தை தனக்கு சாதகமாக மாற்றிக் கொள்ள முனைந்தது காங்கிரஸ். இதனால்தான் அந்துலே முதலில் சொன்னதற்கு மறுப்பு தெரிவித்த காங்கிரஸ் பின்னர் அவருடன் இணைந்து கொண்டது.
இதற்கு, அந்துலேவின் ஆதாரமற்ற கருத்துக்களுக்கு இந்திய முஸ்லீம்களிடம் ஆதரவு போக்கு ஏற்பட்டதை உணர்ந்ததே காரணம். இதை சுத்தமான அரசியல் சந்தர்ப்பவாதம் என்பதைத் தவிர வேறு வார்த்தையில் சொல்ல முடியாது.
மேலும் நாடாளுமன்றத் தேர்தலில் தனக்கு ஆதாயம் தேடுவதற்காக மும்பை தாக்குதல் சம்பவத்தையும், அந்துலேவின் பேச்சையும் பயன்படுத்திக் கொண்டு, முஸ்லீ்ம்களை தன் பக்கம் தக்க வைத்துக் கொள்ள இந்த அரசியல் நாடகத்தை நடத்தியது காங்கிரஸ்.
கடந்த காலங்களில் பாஜகவையும், இந்து அமைப்புகளையும் குறி வைத்து தான் பேசியது பலன் கொடுத்ததால்தான், இந்தமுறையும், சம்பந்தமே இல்லாமல் அவர்களைக் குறி வைத்து பிரசாரத்தில் குதித்தது காங்கிரஸ் என்று அது கூறியுள்ளது.
இந்தியா தொடர்பான அமெரிக்காவின் 1300 ரகசியத் தகவல்கள், ஆவணங்களை தாங்கள் வைத்துள்ளதாக விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது. இருப்பினும் இதுவரை அரை டஜன் ஆவணங்களை மட்டுமே அது வெளியிட்டுள்ளது.