என். முருகன் IAS
இந்திய ஜனநாயகம் இதுவரை கண்டிராத வகையில் அதன் முக்கிய ஓர் அங்கமான நாடாளுமன்றம் அமளிதுமளியால் செயல்படாமல் முடக்கப்பட்டுவிட்டது. இதுவரை நம் நாட்டில் நடந்தேறிய ஊழல்களில் மிகவும் அருவருக்கத்தக்கது 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் என்றும், அதன் முழுப் பரிமாணங்களும் மக்கள் மன்றத்தின் முன்வைக்கப்பட வேண்டும் எனவும், அது நிறைவேற ஜே.பி.சி. எனப்படும் நாடாளுமன்றக் கூட்டுக்குழுஅமைத்து தீர விசாரிப்பது ஒன்றே வழி எனவும் எதிர்க்கட்சிகள் கூறுகின்றன.
""நாடாளுமன்றக் கூட்டுக்குழுவுக்கு அவசியமே இல்லை.
நாடாளுமன்றத்தின் பி.ஏ.சி. எனப்படும் பொதுக்கணக்குக் குழு இருக்கவே இருக்கிறது. அது தணிக்கைக் கட்டுப்பாட்டு அதிகாரியின் இந்த ஆண்டு அறிக்கையில் 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடுகள் பற்றிக் கூறியுள்ள விரிவான குற்றச்சாட்டுகள் பற்றி ஆய்வுசெய்து தனது அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கும்'' என ஆளும் கட்சி கூறுகிறது.
கொழுந்துவிட்டு எரியும் இந்தப் பிரச்னையில் நம்மில் பலருக்கு ஜே.பி.சி. எனப்படும் நாடாளுமன்றக் கூட்டுக்குழு பற்றிய முழுவிவரங்களும் தெரிந்திருக்கவில்லை. மேலும், நமது நாடாளுமன்றம், அதன் உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு நடவடிக்கைகள் பற்றிய முழு விவரங்களும் தெரியாத காரணத்தால், இக்கால இளைஞர்களுக்கு மக்களின் வரிப்பணம்
நாடாளுமன்ற முடக்கத்தால் வீணடிக்கப்படுவதும்,
அமைச்சர்களும் அதிகாரிகளும் ஜனநாயகத்தின் ஆணிவேர் அசையும்படியான ஊழல்களில் ஈடுபட்டு நம் நாட்டின் முன்னேற்றம் பாதிக்கப்படுகிறது என்பதும் தெரியாமல் இருக்கிறார்கள்.
முதலாவதாக, ஜே.பி.சி. எனப்படும் நாடாளுமன்றக் கூட்டுக்குழு என்றால் என்ன எனப் பார்ப்போம்.
ஒரு குறிப்பிட்ட விஷயத்தை முழு நாடாளுமன்றமும்
விவாதத்தின் மூலம் முழுமையாகப் புரிந்துகொண்டு தேவையான நடவடிக்கைகளை எடுத்துவிட முடியாது என்ற காரணத்துக்காக எல்லா கட்சிகளும் பிரதிநிதித்துவம் பெறும் வகையில் அமைக்கப்படும் குழு, நாடாளுமன்றக் கூட்டுக்குழு. நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் ஏதேனும் ஒன்று அதற்கான தீர்மானத்தை நிறைவேற்ற, மற்றோர் அவை அத்தீர்மானத்தை
அங்கீகரிக்கவோ அல்லது இரு அவைகளின் தலைவர்களும் கலந்துபேசி முடிவெடுப்பதன் மூலமாகவோ நாடாளுமன்றக் கூட்டுக்குழுவை அமைக்கலாம்.
மாநிலங்களவை மற்றும் மக்களவை ஆகிய இருசபைகளும் ஜே.பி.சி.யின் உறுப்பினர்களைத் தேர்வு செய்யலாம் அல்லது தங்கள் கட்சியின் குறிப்பிட்ட உறுப்பினர்களை கூட்டுக்குழு உறுப்பினர்களாகப் பரிந்துரை செய்யலாம். குழுவின் உறுப்பினர் எண்ணிக்கை எவ்வளவு என்பதை இரு அவைகளின்
தலைவர்களும் கலந்துபேசி முடிவு செய்வார்கள். இவ்வளவு உறுப்பினர்கள்தான் என்ற விதி எதுவும் கிடையாது. இதுவரை ஏற்படுத்தப்பட்ட நாடாளுமன்றக் கூட்டுக்குழுக்களை ஆராய்ந்தால் ஒரு குழுவில் 15 உறுப்பினர்களும், இரண்டு குழுக்களில் தலா 30 உறுப்பினர்களும் இருந்தது தெரிகிறது. ஆனால், கீழ்சபை உறுப்பினர்களின் எண்ணிக்கை மேல்சபை உறுப்பினர்களின் எண்ணிக்கையின் இரண்டு மடங்காக இருப்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட வழிமுறை. நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவைக்கு எப்போதுமே முன்னுரிமை உண்டு என்பது எழுதப்படாத விதி.
இவ்வாறு அமைக்கப்பட்ட ஜே.பி.சி.யின் அதிகாரம் என்ன? எந்த ஒரு தனிமனிதர், அதிகாரி, அரசியல்வாதி, நிறுவனம் மற்றும் பொது அமைப்பு ஆகியவற்றின் வாக்குமூலத்தை சாட்சியமாகப் பெறலாம். யாரையும் சாட்சியாக அழைக்கும் அதிகாரம் ஒரு நீதிமன்றத்துக்கு எவ்வளவு உண்டோ அந்த அளவுக்கு நாடாளுமன்றக் கூட்டுக்குழுவுக்கும் உண்டு. காரணம், இக்குழு
அனுப்பும் சம்மன்களுக்குப் பணிந்து சாட்சியமளிக்க
வராதவர்களை நாடாளுமன்றத்தை அவமதித்ததாகக் கூறி மேல் நடவடிக்கை தொடரவும் குழுவுக்கு அதிகாரம் உண்டு.
இக்குழுவின் விசாரணையை ரகசியமான முறையிலும்
நடத்தலாம் அல்லது விசாரணையின் விவரங்களைக் குழுத் தலைவர் பத்திரிகைகளுக்குப் பேட்டியாகவும் அளிக்கலாம். ஆரம்பகாலங்களில் அமைச்சர்களை இக்குழு விசாரணைக்கு அழைப்பதில்லை என்ற வழக்கம் இருந்தது. ஆனால், பிற்காலங்களில் மக்களவைத் தலைவரின் அனுமதியுடன் அமைச்சர்களையும் விசாரணைக்கு அழைக்கலாம் என்ற நடைமுறை ஏற்றுக்கொள்ளப்பட்டு வழக்கமாகிவிட்டது.
நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணைக்குத் தேவைப்படும் சில ஆவணங்கள் ரகசியத் தன்மையுடையன எனவும், அவை நாட்டின் பாதுகாப்பு சம்பந்தப்பட்டது எனவும் அரசு கருதினால், இதுபோன்ற
ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டுமா எனும் இறுதி முடிவை எடுக்கும் அதிகாரம் மக்களவைத் தலைவருக்கு உண்டு.
மேலே கூறிய அதிகாரங்களுடன் இதுவரை நம் நாட்டில் நான்கு நாடாளுமன்றக் கூட்டுக்குழுக்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
முதல் ஜே.பி.சி. 1987-ம் ஆண்டு, ஆகஸ்ட் 6-ம் தேதி
அமைக்கப்பட்டது. போஃபர்ஸ் ஒப்பந்த முறைகேடு என்று
கூறப்பட்ட குற்றச்சாட்டுகளை ஜே.பி.சி. மூலம் விசாரிக்க
வேண்டும் என்ற தீர்மானத்தை அன்றைய பாதுகாப்பு அமைச்சர் கே.சி. பந்த் நாடாளுமன்றத்தில் முன்மொழிந்தார். இந்தத் தீர்மானத்தை மாநிலங்களவை ஒருவாரத்தில் அங்கீகரித்ததால் உருவானது முதல் ஜே.பி.சி. இக் குழுவின் தலைவராக ஆளும் கட்சியைச் சார்ந்த பி. சங்கரானந்த் இருந்தார். 50 முறை கூட்டங்கள் நடந்து 1988-ம் ஆண்டு ஏப்ரல் 26-ம் தேதி குழு தன் அறிக்கையைச் சமர்ப்பித்தது. இக்குழுவின் கூட்டங்களுக்கு இதன் எதிர்க்கட்சி உறுப்பினர்கள்
செல்லாமல் பகிஷ்கரித்தனர். காரணம், இதன் பெரும்பான்மை உறுப்பினர்கள் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்தவர்களாக இருந்ததாகக் குற்றச்சாட்டு. நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குழுவின் அறிக்கை எதிர்க்கட்சிகளால் நிராகரிக்கப்பட்டது.
இரண்டாவது, நாடாளுமன்றக் கூட்டுக்குழு, மூத்த காங்கிரஸ் தலைவரும் மத்திய அமைச்சருமான ராம் நிவாஸ் மிர்தாவின் தலைமையில் ஹர்ஷத் மேத்தா ஊழல் என்றழைக்கப்பட்ட பங்குச்சந்தை மற்றும் வங்கிகளில் நடந்த முறைகேடுகளை விசாரிக்க அமைக்கப்பட்டது. அன்றைய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் குலாம்நபி ஆசாத், 1992-ம் ஆண்டு ஆகஸ்ட் 6-ம் தேதி கொண்டுவந்த தீர்மானத்தின்கீழ் அமைக்கப்பட்ட இக் குழு, அடுத்த நாளே
மாநிலங்களவையால் அங்கீகரிக்கப்பட்டது. இக் குழுவின்
அறிக்கையையும் நாடாளுமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை.
மூன்றாவது நாடாளுமன்றக் கூட்டுக்குழு 2001-ம் ஆண்டு, ஏப்ரல் 26-ம் தேதி அன்றைய மத்திய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரமோத் மகாஜன் கொண்டுவந்த தீர்மானத்தின்படி பங்குச்சந்தையின் முறைகேடுகள் பற்றி விசாரிக்க அமைக்கப்பட்டது. மூத்த பா.ஜ.க. எம்.பி. ஓய்வுபெற்ற லெஃப்டினன்ட் ஜெனரல் பிரகாஷ்மணி திரிபாதி இக்குழுவின் தலைவராக இருந்து 105 கூட்டங்களில் விசாரணையும் விவாதங்களும் மேற்கொள்ளப்பட்டு, குழு தன் அறிக்கையை 2002-ம் ஆண்டு டிசம்பர் 19-ம் தேதி சமர்ப்பித்தது.
பங்குச்சந்தை நடைமுறையில் கடுமையான கட்டுப்பாட்டு விதிகளை அமல்படுத்த வேண்டும் என்ற பல சிபாரிசுகளை குழுவின் அறிக்கை பட்டியலிட்டது. ஆனால், இவை எதுவும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. கடைசியாக, 4-வது ஜே.பி.சி. 2003-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஏற்படுத்தப்பட்டது.
நம் நாட்டில் தயாரித்து விற்பனை செய்யப்படும் குளிர்பானங்களில் பூச்சிக்கொல்லி மருந்துகள்
கலந்துள்ளன; சரியான ரசாயன முறையில் அவை
பிரித்தெடுக்கப்பட்டு இக்குளிர்பானங்களை அருந்தும் மக்களின் உடல் நலன் பாதிக்கப்படாத வகையில் இவை தயார் செய்யப்படுவதில்லை எனும் பரவலான குற்றச்சாட்டை விசாரிக்க இக்குழு ஏற்படுத்தப்பட்டது.
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரின் தலைமையில் அமைந்த இக் கூட்டுக்குழு, 17 முறை கூடி விசாரணைகளையும், விவாதங்களையும் மேற்கொண்டு 2004-ம் ஆண்டு பிப்ரவரி 4-ம் தேதி தனது அறிக்கையைச் சமர்ப்பித்தது. குளிர்பானங்களிலுள்ள பூச்சிக்கொல்லி மருந்துகளின் கலவை, இக் குளிர்பானங்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் நீரில் உள்ளவை என்பதால் குடிநீர்
ஆதாரங்களில் பல கடுமையான நடவடிக்கைகளை எடுத்து தூய்மையை நிலைநிறுத்த வேண்டும் என்ற மழுப்பலான சிபாரிசுகளை அளித்தது இக்குழுவின் அறிக்கை. ஆக, கூட்டுக்குழு அமைவதால் மிகப்பெரிய நன்மைகள் எதுவும் ஏற்பட்டுவிட்டனவா, எந்தக் குறைபாடுகளைக் களைய இதுபோன்ற குழுக்கள் அமைக்கப்பட்டனவோ அக்குறைகள் களையப்பட்டனவா என்ற கேள்விகளுக்கு "இல்லை' எனும் துரதிருஷ்டமான பதிலைத்தான் கூற முடிகிறது. அதுமட்டுமல்ல,
நாடாளுமன்றக் கூட்டுக்குழுவில் பெரும்பான்மை
உறுப்பினர்களும், அந்த விசாரணைக் குழுவின் தலைவரும் ஆளும் கட்சியையோ, கூட்டணியையோ சார்ந்தவர்களாகத்தான் இருப்பார்கள் என்பதும் தெளிவு.
அப்படியிருந்தும் நாடாளுமன்றம் முழு அளவில் முடக்கப்பட்டாலும் பரவாயில்லை என்ற அளவுக்கு
ஆளும் காங்கிரஸ் கூட்டணி, ஜே.பி.சி. அமைக்கத் தயாராக இல்லை எனும் நிலைப்பாட்டை எடுப்பது ஏன்?
காரணம் அரசியல்தான். அதாவது அடுத்த ஆண்டு நான்கு
மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் நடக்க இருக்கின்றன.
தமிழ்நாடு, கேரளம், மேற்கு வங்கம் மற்றும் அசாம் ஆகிய
மாநிலத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியின் நிலைமை
இக்கட்டான சூழ்நிலையில் உள்ளதாக அக்கட்சி கருதுகிறது. அசாம் மாநிலத்தின் ஆளும் கட்சியான காங்கிரஸ் 2011-ம் ஆண்டு தேர்தலில் மூன்றாவது முறையாகத் தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என விரும்பிக் காய் நகர்த்துகிறது.
மேற்கு வங்கம் மற்றும் கேரள மாநிலங்களில் ஆட்சியிலிருக்கும் இடதுசாரி கம்யூனிஸ்ட் கூட்டணிகள் தோற்றுப்போகும்
சூழ்நிலையில் இருக்கின்றன. இவ்விரு மாநிலங்களிலும்
வெற்றிக்கூட்டணியில் தாங்கள் இருப்பதாகக் காங்கிரஸôர் நினைக்கின்றனர்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தனியாக ஒரு மூன்றாவது அணியை உருவாக்கி, 43 ஆண்டுகளாகப் பதவியை எட்டிப் பார்க்காத நிலைமையை மாற்ற வேண்டும் என்ற முயற்சியை ஆரம்பித்துவிட்டு, குறைந்தபட்சம் இன்றைய வாக்கு வங்கியையும்
இழந்துவிடக் கூடாது என்ற நிலைமைக்கு காங்கிரஸ்
தள்ளப்பட்டுவிட்டது. தமிழ்நாட்டில் ராகுல் காந்தியின் இளைஞர் காங்கிரஸின் ஆள் சேர்க்கும் பணியின் தனியாவர்த்தனத்தில் தொடங்கப்பட்ட முயற்சிகள், பிகாரில் இம் முயற்சி தோற்றபின், தில்லியின் தமிழ்நாட்டு அரசியல் கொள்கை பழையபடி திமுக
கூட்டணியே சிறந்தது என்ற நிலைமைக்குத்
தள்ளப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.
இதுபோன்ற தேர்தல் சூழ்நிலைகள் நான்கு மாநிலங்களில்
நிலவும்போது ஒரு நாடாளுமன்றக் கூட்டுக்குழு 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடுகளை விசாரிக்கும்போது பல கூட்டங்களை நடத்தி, தேவைப்பட்டால் முன்னாள் அமைச்சர் ராசாவில் தொடங்கி, நீரா ராடியா, சி.வி.சி. தாமஸ் மற்றும் பிரதமர் அலுவலக அதிகாரிகள் வரை சாட்சிகளாக சம்மன் செய்யப்படலாம். யார் கண்டது?
பிரதமர் மன்மோகன் சிங்கும், காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியும்கூட விசாரணைக்கு அழைக்கப்படலாம். அவர்களிடம் மிகவும் தர்மசங்கடமான ஊழல், நிர்வாகச் சீர்கேடுகள் பற்றிய பல
கேள்விகள் தொடுக்கப்படலாம். அவர்கள் கூறும் பதில்கள் பத்திரிகைகளுக்குக் கசியலாம்.
இப்போது வெளிவந்துள்ள தொலைபேசி உரையாடல் பல
ரகசியங்களைவிட சுவாரசியமான தகவல்கள் வெளிவந்து தேர்தல் நேரத்தில் காங்கிரஸýக்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் தர்மசங்கடத்தை உருவாக்கித் தேர்தல் தோல்வியில் முடியலாம். ஏற்கெனவே காங்கிரஸ் தனது ஒரே ஆளும் மாநிலமான
ஆந்திரத்தை இழக்கும் சூழ்நிலை தென்னிந்தியாவில் உருவாகி வருகிறது.
மிச்சம் மீதியுள்ள கேரளம், தமிழகத்தின் கூட்டணி வெற்றிகளும், எடியூரப்பாவின் நிலஎடுப்பு ஊழல்களால் கர்நாடகத்தில் உருவாகியுள்ள சாதகமான சூழ்நிலைகளும் பாதிக்கப்படுவதைத் தவிர்க்கவே ஜே.பி.சி. எனும் நாடாளுமன்றக் கூட்டுக்குழு உருவாவதை மத்தியில் ஆளும் காங்கிரஸ் எதிர்க்கிறது.
முதல் நாடாளுமன்றக் கூட்டுக்குழுவைத் தாங்களாகவே
ஏற்படுத்திய ஆளும் காங்கிரஸ், இன்று கூட்டணியினரை நம்பி அதுபோன்ற ஒரு குழுவை ஏற்படுத்த முடியாது.
காரணம், இக்குழுவில் காங்கிரஸ் பெரும்பான்மையுடன் இருக்க முடியாது.
அதைவிடவும் மேலாக 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில்
காங்கிரஸ் கட்சியும் பலனடைந்திருக்கிறது என்ற தகவலும், தேவைப்பட்டால் சோனியா காந்தி மற்றும் பிரதமர் மன்மோகன் சிங்கையும்கூட விசாரணைக்கு அழைத்து பல தர்மசங்கடமான கேள்விகளைக் குழு கேட்கலாம் என்கிற சூழ்நிலையை மனதில்
கொண்டுதான் காங்கிரஸ் கட்சிக்கு ஜே.பி.சி. சிம்ம சொப்பனமாகத் தெரிகிறது.
நாடாளுமன்றக் கூட்டுக்குழு அமைப்பதைத் தவிர்த்திருப்பதன் மூலம் இப்போது உச்ச நீதிமன்றமே நேரடியாக விசாரணையை மேற்பார்வையிடும் சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. இதன் மூலம் பிரதமரையும், சோனியா காந்தியையும் நேரடி விசாரணையிலிருந்து காப்பாற்ற முடியுமே தவிர, ஸ்பெக்ட்ரம் முறைகேடுகளில் அவர்களுக்குத் தொடர்பிருந்தால் காப்பாற்ற முடியாத சூழ்நிலையல்லவா ஏற்பட்டுவிட்டிருக்கிறது!
நன்றி:தினமணி 22 .12 .2010