கிருஸ்துவர்கள் ஓட்டுக்காக இந்துக்களுக்குத் துரோகம் இழைத்த ஜெயலலிதா-ராம.கோபாலன்

சென்னை: மதமாற்றத் தடைச் சட்டத்தைக் கொண்டு வந்த ஜெயலலிதா, பின்னர் கிருஸ்தவர்களின் ஓட்டுக்காக அதைக் கைவிட்டு இந்துக்களுக்குத் துரோகம் இழைத்துவிட்டார் என்று இந்து முன்னணி நிறுவனர் ராம.கோபாலன் கூறினார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கிருஸ்துமஸ் விழாவில் கலந்துகொண்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும், முதல்வர் கருணாநிதியும் கிருஸ்தவர்களின் புகழாரத்தில் மயங்கி இந்து தாழ்த்தப்பட்டோர் சலுகையை மதம் மாறிய தாழ்த்தப்பட்டோருக்கும் வழங்குவோம் எனப் பேசியுள்ளனர். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இது இந்து தாழ்த்தப்பட்டோருக்கு இழைக்கப்படும் அநீதி!.

கிருஸ்தவர்கள் எங்கள் மதத்தில் தீண்டாமை, ஜாதிக் கொடுமை இல்லை என்று கூறித்தான் இந்துக்களை மதம் மாற்றுகின்றனர். ஆனால் இந்துக்களின் சமூக நீதிக்காக அளிக்கப்பட்ட தாழ்த்தப்பட்டோர் சலுகை மதம் மாறிய பின்னரும் வேண்டும் என்பது தன்மானத்தோடு, சுயமரியாதையோடு வாழ்கின்ற தாழ்த்தப்பட்ட இந்துக்களை மதமாற்ற நடக்கிற சதி!.

ஜெயலலிதா மதமாற்றத் தடைச் சட்டத்தைக் கொண்டு வந்தார். கிருஸ்தவர்களின் ஓட்டிற்காக அதனைக் கைவிட்டு இந்துக்களுக்குத் துரோகம் இழைத்தார்.

மதமாற்றத் தடைச் சட்டத்தின் அவசியத்திற்கு ஜெயலலிதா என்னென்ன காரணம் சொன்னாரோ அதுவெல்லாம் இன்றும் தொடர்கிறது!. ஆனால் இந்துக்களின் நலன் பற்றி இவர் எதுவும் பேசவில்லை!

முதல்வர் கருணாநிதியோ தற்போதைய அவரது ஆட்சியில், கடந்த 4 ஆண்டுகளில் சிறுபான்மையினருக்குக் கல்வி உதவித் தொகை என்ற பெயரில் அரசு நிதியைக் வாரிக் கொடுத்துள்ளார்.

இந்துக்களுக்குக் குறிப்பாக தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட இந்துக்களுக்கு எந்தச் சலுகையையும் கொடுக்கவில்லை!.

அரசின் உதவியால் நடைபெறும் சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் இந்துக்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படுவதில்லை.

லயோலா கல்லூரி உள்பட முஸ்லீம், கிருஸ்தவர்களின் 21 கல்லூரிகள் பற்றி சென்ற ஆண்டு வெளியான செய்தியில் விரிவுரையாளர் பதவியில்கூட தாழ்த்தப்பட்டோர் ஒருவரும் நியமிக்கப்படவில்லை.

இந்து முன்னணி அரசியல் இயக்கம் அல்ல. ஆனால் இந்துக்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராகப் போர்க் குரல் கொடுத்துப் போராடும் இயக்கம். வரும் தேர்தலில் இந்துக்களுக்கு எதிராகச் செயல்படும் இத்தகைய செயல்பாட்டை, திட்டங்களை மக்களுக்கு விளக்கி இந்து முன்னணி பிரச்சாரத்தில் இறங்கும்.

தாழ்த்தப்பட்ட இந்துக்களின் சலுகையை மதம் மாறிய கிருஸ்தவர்களுக்கு வழங்க இவர்கள் முயற்சித்தால், கிருஸ்தவ நிறுவனங்களில் இந்துக்களுக்கும் பங்குகொடுக்க வேண்டும்; கிருஸ்தவ பள்ளி, கல்லூரிகளில் இந்துக்களுக்கும் இட ஒதுக்கீடும், வெளிநாட்டிலிருந்து வரும் நன்கொடையை எல்லோருக்கும் பிரித்து வழங்கக் கோரியும் இந்துக்கள் சார்பாக இந்து முன்னணி போராட்டத்தில் இறங்கும் என்று எச்சரிக்கிறோம் என்று கூறியுள்ளார்.