தோண்டத் தோண்ட இனி தொல்லைகள்தான்!

அருண் நேரு
 ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஊழல் விவகாரத்தில் நாடாளுமன்றத்தின் கூட்டுக்குழு விசாரணையைவிட உச்ச நீதிமன்ற கண்காணிப்பின் கீழான சி.பி.ஐ. விசாரணையே அதிக நம்பிக்கைக்குரியது என்பது என்னுடைய கருத்து. இந்த ஊழல் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் சில கருத்துகள் அரசியல் கண்ணோட்டத்தைக் கடந்தவை, மிகவும் ஆணித்தரமானவை.
 2001-ம் ஆண்டு முதல் நடந்த அலைக்கற்றை ஒதுக்கீடு குறித்து விசாரணை நடத்தினாலும் ஆ. ராசா விவகாரம் நீர்த்துப்போய்விடாது. 1999 முதலே விசாரிக்க வேண்டும் என்பது என்னுடைய கருத்து.
 இந்த விவகாரத்தில் உண்மையிலேயே என்ன நடந்தது, யாரெல்லாம் பணம் சம்பாதித்தார்கள் என்று தெரிந்துகொள்வது தேசிய நலனுக்கு உகந்தது.
 அலைக்கற்றை ஒதுக்கீட்டை ""முதலில் வந்தவருக்கே முன்னுரிமை'' என்ற அடிப்படையில் ஒதுக்க வேண்டாம் என்று சட்ட அமைச்சகமும் நிதி அமைச்சகமும் கடிதங்கள் எழுதிய பிறகும், வேறு வழிகளில் விற்பனையை மேற்கொள்வது குறித்து ஆராயுமாறு பிரதமரிடமிருந்து உத்தரவு வந்த பிறகும் அவற்றைப் புறக்கணித்துவிட்டு, எங்களுக்கு முன்பு பதவியில் இருந்தவர்கள் எடுத்த முடிவையே நாங்களும் எடுத்தோம் என்று கூறுவதன் மூலம் நடந்த ஊழல்களிலிருந்து ராசாவோ திமுகவோ தப்பிக்க முடியாது.
 ஆ. ராசா, அவருடன் அமைச்சகத்தில் பணிபுரிந்தோர், சில உறவினர்கள் ஆகியோருடைய வீடுகளிலும் அலுவலகங்களிலும் நடந்துள்ள சி.பி.ஐ. சோதனைகள் மூலம் எல்லோருக்கும் ஏற்கெனவே தெரிந்த விஷயங்கள், பத்திரிகைகளில் ஏற்கெனவே பிரசுரமான தகவல்கள் ஆகியவைதான்  மேலும் உறுதிப்படுத்தப்படும்.
 என்ன நடந்தது என்பதையே வெளி உலகு அறியாமல் மூடி மறைக்க யாராவது முயற்சித்தால் அது அவர்களைப் பொறுத்தவரை தற்கொலை முடிவாகவே அமைந்துவிடும்.
இந்த ஒரு அமைச்சகத்தின் செயலால் முழு அரசியல் அமைப்புமே இப்போது சந்தேகத்துக்கு உரியதாகிவிட்டது என்பதுதான் வருத்தம் தருகிற விஷயமாகும். ஒரு சின்ன அமைச்சகம் எத்தனைபேரைப் பிணையாகப் பிடித்து வைத்திருந்திருக்கிறது.
 இந்த விவகாரத்தை உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையில் சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று நான் ஏற்கெனவே கூறியிருந்தேன். இந்த ஊழலின் வேர் நாம் நினைப்பதைவிட ஆழமானது என்பதை நீரா ராடியாவுடனான பலரது தொலைபேசி உரையாடல்கள் உணர்த்துகின்றன.
 இந்த விவகாரத்தில் நேர்மையாக எல்லாம் நடக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் முயற்சி செய்தும் கடந்த 2 ஆண்டுகளில் அப்படி ஏதும் நடக்கவில்லை. இந்த ஊழலின் கரங்கள் பல இடங்களை வளைத்துப்பிடித்துள்ளன. ஊழலைத் தோண்டித் துருவிக் கண்டுபிக்க மத்தியப் புலனாய்வுக்கழகமும் (சி.பி.ஐ.) வேறு பல அமைப்புகளும் அரசின் வசம் உள்ளன. அத்துடன் 24 மணிநேரமும் செய்திகளைத் தரும் தொலைக்காட்சி நிறுவனங்கள் இப்படிப்பட்ட விவகாரங்களை அம்பலப்படுத்த சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக எதிர்க்கட்சிகள் கண்கொட்டாமல் எல்லாவற்றையும் கவனித்து வருகின்றன. எனவே அரசின் மேல் நிலையில் உள்ளவர்கள் தவறு செய்தாலும் ஊழல் செய்தாலும் அதைக் கண்டுபிடித்து வெளியில் சொல்ல பலர் தயாராக இருப்பதால் எந்த ஊழலும் வெளியே தெரியாமல் மறைந்து மண்ணோடு மண்ணாகிவிடாது.
விக்கிலீக்ஸ் என்ற இணையதளக் கசிவு காரணமாக அமெரிக்க வல்லரசே ஆடிப்போனதைச் சமீபத்தில்தான் பார்த்தோம். அதற்கு இணையாக நம் நாட்டிலேயே ராடியா தொலைபேசி உரையாடல் பதிவுகள் கிடைத்துள்ளன. நம் நாட்டில் கூட்டணி அரசுக்குள்ள நிர்பந்தங்கள் என்ன, அதிகாரிகளுக்கும் அமைச்சர்களுக்கும் உள்ள நெருக்கம் எப்படிப்பட்டது, தொழில் அதிபர்கள் தங்களுடைய தேவைகளை எப்படி பூர்த்தி செய்துகொள்கிறார்கள் என்பதையெல்லாம் இந்த உரையாடல் ஓரளவுக்கு வெளிச்சம் போட்டுக்காட்டியது.
கூறியதையே திரும்பத்திரும்பக் கூறுவதை நான் வெறுப்பவன் என்றாலும், அரசியல் கட்சிகள் நிதி திரட்டுவதை வெளிப்படையாகச் செய்ய வேண்டும், ரகசியமாக, முறையாகக்  கணக்கு வைக்காமல் வாங்கினால் அந்தத் தொகையை வசூல் செய்கிறவர் தன்னுடைய செல்வாக்கை வளர்த்துக்கொண்டு பிரச்னைகளை ஏற்படுத்துவார் என்பதை மீண்டும்  வலியுறுத்த விரும்புகிறேன்.
 ஒரு சிறிய கும்பல் ஒரு கட்சியையே தன் கைக்குள் வைத்து ஆட்டுவது காங்கிரஸ் கட்சிக்குள் மட்டுமல்ல, எல்லா அரசியல் கட்சிகளிலும் நடைபெறுகிறது.
 அப்படி உண்மையை வெளிவராமல் தடுக்கும் ஊழல்பேர்வழிகளை அம்பலப்படுத்த வேண்டும்.
 சட்டம் பார்த்துக்கொள்ளட்டும் என்று ஆ. ராசாவையும் அவருடைய உறவினர்களையும் விட்டுவிட்டால் அவர்களால் திமுக தலைவருக்கும் அவருடைய குடும்பத்தாருக்கும்கூட பிரச்னைகள் ஏற்படலாம். காங்கிரஸ் மற்றும் அதன் தோழமைக் கட்சிகளுக்குக்கூட களங்கம் ஏற்படலாம்.
 புகார்களை விசாரித்து நடவடிக்கை எடுக்காவிட்டால் அரசியல் கட்சிகள் அனைத்தின் மீதும் மக்களுக்கு நம்பிக்கை அடியோடு போய்விடலாம். இந்தப் பணத்தால் பயன் அடைந்திருக்கக்கூடியவர்கள் ராசாவும் அவருடைய குடும்பத்தார் மட்டுமே அல்ல என்பது நிச்சயம்.
 உரிய நேரத்தில் ஊழல் புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படாததால் அனைவரின் மீதும் மக்கள் சந்தேகப்படும் அவல நிலை ஏற்பட்டுவிட்டது.
 இப்படிப்பட்ட ஊழல் புகார்கள் கூறப்படும்போதெல்லாம் அதைக் கவனமாக விசாரித்து நடவடிக்கை எடுத்திருந்தால் இப்படியொரு நிலைமை ஏற்பட்டிருக்காது.
 இனி எதிர்காலத்தில் சில தலைவர்கள் மட்டுமே நேர்மையாளர்களாக இருந்தால் போதாது; முடிவு எடுக்கும் இடத்தில் இருக்கும் முக்கியத் தலைவர்கள் அனைவருமே நேர்மையானவர்களாக இருந்தால்தான் நாட்டின் நிர்வாகத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும்.
 இப்போது அரசியல் சூழலில் நிச்சயமற்ற தன்மை நிலவுகிறது; ஊழல்களைத் தடுப்பதில் இந்த அரசுக்கு சக்தி இல்லை, நேர்மையாக இது செயல்படவில்லை என்ற எண்ணம் மக்களுடைய மனத்தில் ஆழமாகப் பதிந்துவிட்டது. அதேசமயம் இந்த விவகாரங்களால் யாராவது அரசியல்ரீதியாகப் பயன் அடைந்தார்களா என்றால் இல்லை.
 இந்த நாட்டின் அரசியல் நிர்வாக முறையைவிட 2 அடி முன்னதாக எடுத்துவைக்கும் மக்கள் இப்போது ""மாற்றத்தை'' விரும்புகிறார்கள் என்பது நிச்சயம்.
ஊழல்களை அம்பலப்படுத்திடாமல் இருக்க அரசியல் கட்சிகளோ, தொழில் குழுமங்களோ தங்களை எவ்வகையிலும் கட்டுப்படுத்திட முடியாது என்பதை தொலைக்காட்சி நிறுவனங்களும் பத்திரிகைகளும் நிரூபித்துவிட்டன. 2ஜி அலைக்கற்றை தொடர்பாக உச்ச நீதிமன்றம் கேட்ட சில கேள்விகள், ஊழலை அம்பலப்படுத்துகிறவர்களை ஊக்கப்படுத்தும் விதத்திலேயே இருந்தன.
 கடந்த சில மாதங்களில் மட்டும் அடுக்கடுக்காக பல ஊழல்புகார்கள் வெளிவந்துள்ளன. மிரட்டுவதாலோ, நெருக்குதல் தருவதாலோ ஊழல்களை மறைத்துவிட முடியாது. ஆனால் இந்த நிலைமைக்கு எப்படி இறுதித் தீர்வு காண்பது என்று அரசியல்வாதிகள்தான் முடிவு செய்ய வேண்டும்.
 2ஜி அலைக்கற்றை ஊழல் ஆயிரம் கரங்களைக் கொண்ட பகாசுரன் போலத் தெரிகிறது. எல்லா அரசியல் கட்சிகளுமே இதில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்றும் தெரிகிறது. எனவே தொலைக்காட்சிகளின் அரசியல் விவாதங்களில் தங்களுடைய கட்சிகளின் சார்பில் பங்கேற்கும் எல்லா பிரதிநிதிகளுமே மேலிடத்தில் சொல்லிவிட்டு எங்காவது சென்று ஓய்வெடுத்தால் நல்லது என்று கூற விரும்புகிறேன்.
 இனி அடுத்த குழப்பம் திமுகவை ஆளும் முதல்வர் குடும்பத்தில் ஏற்படக்கூடும்; முதலமைச்சரின் 2 மனைவியர், அவர்களுடைய மகன்கள், மகள்கள், அக்கா பேரன்கள் என்று எல்லோருமே ஏராளமான சொத்துகளை வைத்திருப்பதால் அவை தொடர்பாகவே அவர்களுக்குள் பூசல் ஏற்பட்டு ஒருவர் மற்றவரை இப்படிப்பட்ட புகார்களில் சிக்கவைக்கலாம் என்று எண்ண இடம் இருக்கிறது.
 வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஆகிய இரண்டிலும் தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கும் மேலாக உறுப்பினராக இருக்கும் திமுக முக்கியமான துறைகளைக் கேட்டு வாங்கியிருப்பதால் அதிகம் தற்காத்துக்கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறது.
கட்சியைப் பொறுத்து இப்படி என்றால் அமைச்சர்களாக இருந்த தனி நபர்களைப் பற்றி பார்ப்பதாக இருந்தால் 1999-ல் இருந்த ராம்விலாஸ் பாஸ்வான் தொடங்கி பிரமோத் மகாஜன், அருண் செüரி, ஜக்மோகன், சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோர் அமைச்சர்களாகப் பதவி வகித்திருக்கிறார்கள். எனவே அவர்கள் ஆட்சிக்காலத்தில் கடைப்பிடிக்கப்பட்ட நடைமுறைகள், அதனால் ஏற்பட்ட வருவாய் இழப்புகள் ஆகியவற்றையும் விசாரிக்க வேண்டிய அவசியம் இருக்கிறது.
 காங்கிரஸýம் பாஜகவும் ஒருவரையொருவர் தாக்கிப் பேசத் தொடங்கியுள்ள இந்த இடைவெளியில், தனக்கு நேர்ந்துவிட்ட சேதத்தைச் சீர்படுத்தும் வேலையில் திமுக தீவிரம் காட்டக்கூடும்.
 பொதுப்பணம் சூறையாடப்பட்டிருப்பதால் இந்தத் துறையில் அமைச்சராக இருந்தவர் என்று எவருடைய பெயரைக் கூறினாலும் அவரும் நன்றாகச் சம்பாதித்திருப்பார் என்றுதான் மக்கள் நினைப்பார்கள்.
 மன்மோகன் சிங்கையும் காங்கிரûஸயும் குற்றஞ்சாட்ட நாடாளுமன்றக் கூட்டுக்குழு வேண்டும் என்று பாஜக கோரிக்கை விடுத்தால் பதிலுக்கு வாஜ்பாய், பாஜக மீது எதிர் குற்றச்சாட்டுகளுடன் காங்கிரஸ் கட்சியும் பாயலாம். இதனால் இரு கட்சிகளுக்கும் பலன் ஏதும் இல்லாமலும் போகலாம்.
 இனி முக்கியமான முடிவுகளை எடுப்பதற்குள் நிலைமையே வேகமாக மாறிக்கொண்டிருக்கலாம்.
 திமுகவினரைப்பற்றி பல புதிய புகார்கள் பகிரங்கமாகக் கூறப்படலாம்; திமுகவினருடைய குடும்பங்கள் மீதே பல திசைகளிலிருந்தும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படலாம். இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின்பாடுதான் திண்டாட்டம்; யாரோ ஏதோ சொல்லிக்கொள்கிறார்கள் என்று விட்டுவிடாமல் நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பு காங்கிரஸ் கட்சிக்குத்தான் இருக்கிறது.
நன்றி: தினமணி 13 /12 /2010