இனியும் மௌனமாக இருக்கலாமா ?
கடந்த 6-ம் தேதி! சென்னையிலுள்ள பிரசித்திபெற்ற மருத்துவமனை ஒன்றிற்குச் சென்றிருந்தேன்.எனது நெருங்கிய உறவினர் ஒருவர் அறுவைசிகிச்சைக்காக அங்கு அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரிடம் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு வெளியே வந்தேன்.
அந்த மருத்துவமனையிலிருந்த ஜெனரல் வார்டில் (General ward) பல நோயாளிகள் படுத்திருந்தனர்.அப்போது அங்கு வந்திருந்த மதமாற்ற போதகர்கள் 10 பேர் இரண்டு குழுக்களாகப் பிரிந்து, நோயாளிகளின் கட்டில்களுக்கு அருகில் அமர்ந்துகொண்டு,அவர்கள் குணமடைவதற்காகத் தாங்கள் ஜெபம் செய்வதாகக் கூறினர். சுமார் 10 நிமிடங்கள் ஜெபம் செய்வதாகச் சொல்லிவிட்டு, பின்பு நோயாளிகளின் கைகளில் அவர்களது மதப் பிரசார கையடக்க புத்தகம் ஒன்றையும் கொடுத்ததைக் கண்டேன்.
‘‘எங்கள் ஜெபத்தின் பலனாக நோயிலிருந்து விரைவில் குணமடைந்து விடுவீர்கள்.அப்படி குணமடைந்து வீடு திரும்பியபின்பு,எங்கள் வழிபாட்டுத் தலத்திற்கு வாருங்கள்...’’என்று கூறிவிட்டு,அடுத்த அறைக்குச் சென்றனர்.
‘இவ்விதம் மருத்துவமனையில் மதமாற்ற பிரசாரம் செய்வதை எவ்விதம் அனுமதித்தீர்கள்?’ என்று அந்த மருத்துவமனையின் நிர்வாகத்தினரைச் சந்தித்துக் கேட்டேன்.நான் கூறியதைக் கேட்டவுடன் மருத்துவமனை அதிகாரிகள் வியப்பும், அதிர்ச்சியும் அடைந்தனர்.
‘எங்கள் அனுமதியைக் கேட்காமல் அவர்களாகவே வந்திருக்க வேண்டும்’ என்று அவர்கள் பதில் கூறினார்கள்.
சென்ற சில மாதங்களாகவே எந்த அளவிற்கு இத்தகைய மதமாற்ற முயற்சிகள் தீவிரமடைந்துள்ளன என்பதற்கு மற்றுமோர் உதாரணம் இது! இத்தகைய முயற்சிகள் தீவிரமடைந்து வருவதைக் கண்டும் நமது மதத் தலைவர்களும், மடாதிபதிகளும், இந்து சமூகத்திற்கு ஆதரவாகச் செயல்படுவதாகப் பறைசாற்றிக்கொள்ளும் அரசியல் கட்சிகளும் மௌனமாக இருப்பதைக் கண்டு மனம் வேதனை அடைகிறது.
உடல் உபாதைகளினால் ஏற்கெனவே வேதனையை அனுபவித்துக்-கொண்டிருக்கும் நோயாளிகளிடம்,அவர்களது உடல் வேதனையைப் பயன்படுத்திக்கொண்டு மதமாற்றம் செய்ய முயல்வது கொடுமையிலும் கொடுமை ஆகும்.இவர்கள் தங்கள் மதக் கொள்கைகளைப் பற்றிக் கூறுவதற்குமுன்,இந்து மதக் கொள்கைகள்,நம்பிக்கைகள் ஆகியவற்றைப் பற்றி இழிவாகப் பேசுவதுடன்,துண்டுப் பிரசுரங்களையும் விநியோகிக்-கின்றனர்.
கொடிய குற்றங்களுக்காகச் சிறைத் தண்டனை அனுபவித்துவரும் கைதிகளைக்கூட மதமாற்றம் செய்து வருகின்றனர்!
இந்நிலையைக் கண்டாவது நமது மதத் தலைவர்களும்,ஆன்மிகப் பெரியோர்களும் ஒன்றுதிரண்டு இத்தகைய அநீதிக்கு எதிராகக் குரல் கொடுக்க முன்வருவார்களா?
கவலையுடன்,
உங்கள் ஏ.எம்.ஆர்.
நன்றி :குமுதம் ஜோதிடம் 31 .12 .2010