போபால்: வெங்காய விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதில் மத்திய அரசின் நடவடிக்கையை விமர்சிக்கும் வகையில், வெங்காயம் வாங்க வங்கியில் கடன் கேட்டு விண்ணப்பித்துள்ளார் மத்தியபிரதேச மாநில முதல்வரின் மனைவி.
வெங்காய விலை விஷம்போல் ஏறியுள்ளது. இதனால் நாடு முழுவதும் மக்கள் வெங்காயத்தால் கடும் பாதிப்பை சந்தித்துள்ளனர். கால் கிலோ வெங்காயம் வாங்கவே பெரும் பணம் தர வேண்டியுள்ளது. இதனால் சாமானிய மக்களின் நிலை பெரும் அவலமாகியுள்ளது.
மத்திய பிரதேச மாநில முதல்வர் ஷிவ்ராஜ் சிங் சவுகானின் மனைவி சாதனா சிங். அவர் அம்மாநில பாஜக மகளிர் அணியின் துணை தலைவராக உள்ளார். அவர் அன்மையில் வங்கியில் கடன் கேட்டு விண்ணப்பித்துள்ளார். எதற்கென்று தெரியுமா, வெங்காயம் வாங்கத்தான். வெங்காய விலை விண்ணைத் தொட்டுள்ளது குறி்த்து ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு தெரிவிக்கத் தான் இந்த நூதன போராட்டம்.அவர் அன்மையில் வெங்காய விலை உயர்வை எதிர்த்து போராட்டம் நடத்தினார். அப்போது தான் கிலோ ரூ. 60 முதல் 70 வரை விற்கும் வெங்காயம் வாங்க வங்கிக் கடன் கேட்டு விண்ணப்பித்தார். இந்த நூதன போராட்டம் போபாலில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் டிடி நகர் கிளை முன் நடந்தது.
காய்கறிகளின் விலை உயர்ந்து கொண்டே போவதால் எங்கள் வீட்டு பட்ஜெட் பெரிதும் இடிக்கிறது என்று
அவர் கூறினார்.