திராவிட இயக்க வரலாறு-அத்தியாயம் 1:

  எங்கும் ஆங்கிலம்



நாற்பத்தியெட்டு வீடுகள் மட்டுமே கொண்ட சின்னஞ்சிறு அக்ரஹாரம் அது. உத்தமதானபுரம் என்று பெயர். தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்துக்கு அருகில் இருக்கிறது. அக்ரஹாரவாசிகள் செய்யும் தொழில்கள் வெகு சொற்பம். வேதம் சொல்லிக் கொடுப்பார்கள். பாடம் சொல்லிக்கொடுப்பார்கள். திருமணம் செய்துவைப்பார்கள். நல்ல காரியங்கள், துக்க காரியங்களுக்கு புரோகிதம் செய்யப் போவார்கள். ஜாதகம் பார்ப்பார்கள். அக்கம்பக்கத்து ஊர்களில் நடக்கும் அனைத்து வைதிகக் காரியங்களுக்கும் அங்கிருந்துதான் அந்தணர்களை அழைத்துச் செல்லவேண்டும்.

அந்த அக்ரஹாரத்தில் வசித்த அண்ணா ஜோஸ்யர் என்ற பிராமணருக்கு ஜோதிடம் பார்ப்பது தொழில். முறையாகக் கற்றுக்கொண்ட தொழிலை முழுமூச்சுடன் செய்யக்கூடியவர். கணிசமாக வருமானம் தரக்கூடிய தொழில்தான். என்ன ஒன்று, அடிக்கடி வெளியூர் சென்று தொழில் செய்யவேண்டியிருக்கும். அன்றும் அப்படித்தான், தொழில் நிமித்தமாக வெளியூர் சென்றுவிட்டு அக்ரஹாரத்துக்குத் திரும்பிக்கொண்டிருந்தார்.

பாபநாசத்துக்கு அருகில் வந்துகொண்டிருக்கும்போது யாரோ அவரைக் கூப்பிடும் சத்தம் கேட்டது. திரும்பிப் பார்த்தால் எதிர்த்திசையில் ஒருவர். அரசாங்க அலுவலர் போன்ற தோற்றம். கலெக்டரின் உதவியாளர் என்று தன்னை அறிமுகம் செய்துகொண்டார்.

'தஞ்சாவூர் கலெக்டர் இங்கே முகாம் போட்டிருக்கிறார். உங்களை அழைத்துவரச் சொன்னார்."

என்னவாக இருக்கும்? யோசித்தபடி போனார்.

'உமக்கு எழுதப் படிக்கத் தெரியுமா?"

ஜோதிடரைப் பார்த்து கலெக்டர் கேட்ட முதல் கேள்வி இதுதான்.

'தெரியும்." கணீர்க்குரலில் பதில் கொடுத்தார் ஜோதிடர். கலெக்டர் முகத்தில் லேசான புன்னகை.

'கணக்கு வழக்குகள் பார்க்கத் தெரியுமா?"

'ஜோதிடம் பார்க்கக் தெரியும். கணக்கும் போடத் தெரியும்."

'கிராமத்துக் கணக்கு வேலைகளைப் பார்ப்பீர்களா?"

நல்ல பதிலை எதிர்பார்த்து அந்தக் கேள்வியைக் கேட்டார் கலெக்டர். கடந்த கேள்விகளுக்குச் சொன்னதைப் போலவே கொஞ்சமும் தயக்கம் இல்லாமல் பதில் சொன்னார் ஜோதிடர்.

'கொடுத்தால் பார்ப்பேன்."

கலெக்டர் தன் உதவியாளரைப் பார்த்தார். அந்தப் பார்வையில் அண்ணா ஜோஸ்யருக்கு அரசாங்க வேலை கிடைத்தது.

விண்ணப்பம் இல்லை. கோரிக்கை இல்லை. போட்டி இல்லை. படிக்கத் தெரியும். கணக்கு தெரியும். போதாது? வேலை வாய்ப்புகள் பிராமணர்களின் மடியில் தாமாக வந்து விழுந்தன.

உத்தமதானபுரம் ஜோதிடருக்குக் கிடைத்தது போலத்தான் எல்லா பிராமணர்களுக்கும் வேலை கிடைத்ததா என்றால் இல்லை. ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு முறையில். சிலருக்குப் படிப்பைப் பார்த்து. சிலருக்குப் பேச்சைப் பார்த்து. சிலருக்குத் திறமையைப் பார்த்து. எல்லாவற்றுக்கும் அடிப்படை கல்வி. அது அவர்களிடம் அதிகமாகவே இருந்தது.

தவிரவும் சமஸ்கிருத அறிவு. வேதங்களையும் சாஸ்திரங்களையும் அறிந்தவர்கள் என்ற பெயர். அதனாலேயே சமூகத்தில் இருந்த மரியாதை. அதனாலேயே ஏற்பட்டிருந்த அடக்கி ஆளும் சுபாவம்.

கல்வி கற்றவர்களை அருகில் வைத்துக்கொள்ளவேண்டும் என்று ஆட்சியாளர்கள் விரும்பிய சமயத்தில் அவர்களுடைய தேர்வு பிராமணர்கள்தான். தளவாய்கள், பிரதானிகள், ராயசங்கள் போன்ற கௌரவம் நிறைந்த பதவிகள் பிராமணர்களைத் தேடி வந்தன. கிடைத்த வாய்ப்புகளைக் கச்சிதமாகப் பிடித்துக்கொண்டனர். பிராமணர்கள் வீட்டுக் குழந்தைகள் வேதங்களையும் உபநிடதங்களையும் பயில்வதற்கான கல்வி நிலையங்களையும் மன்னர்கள் அமைத்துக் கொடுத்தனர். அதையும் பக்குவமாகப் பயன்படுத்திக்கொண்டனர்.

கல்வி. பட்டம். பதவி. எஞ்சியது பரிசு? அதுவும் கொடுத்தார்கள். நிலங்களாக. சோழ மன்னர்கள் காலத்தில் பிராமணர்களின் திறமையைப் பாராட்டும் வகையில் ஏராளமான நிலங்களைப் பரிசாகக் கொடுத்தனர். முதலாம் குலோத்துங்கச் சோழன் 108 பிராமணர்களுக்கு நிலங்களைப் பரிசாகக் கொடுத்துள்ளார். அந்த நிலங்களுக்கு பிராமணர்கள் எந்தவிதமான வரியையும் செலுத்த வேண்டியதில்லை. அந்த நிலங்களைக் கொண்டு பிராமணர்கள் வசிக்கக்கூடிய மங்கலங்களும் அக்ரஹாரங்களும் உருவாகின.

இந்திய மக்களுடன் பிரிட்டிஷ் அதிகாரிகள் பழகுவதற்கு நிறைய தடைகள் இருந்தன. புதிய மண். புதிய மனிதர்கள். முக்கியமாக, மொழி. அந்தத் தடையை உடைக்க அவர்களுக்கு ஒத்தாசையாக இருந்தவர்கள் பிராமணர்கள்தான்.

சூசகமாகச் சொல்வதைக்கூட சுலபத்தில் புரிந்துகொண்டார்கள் பிராமணர்கள். ஆங்கிலம் தெரியாத மக்களுக்கு நேரடியாக உத்தரவு போடுவதைக் காட்டிலும் பிராமணர்கள் மூலமாக உத்தரவு போடுவது பிரிட்டிஷாருக்கு எளிதாக இருந்தது. ஆங்கிலம்தான் எதிர்காலம் என்றதும் அதைக் கற்றுக்கொள்வதில் ஆர்வம் செலுத்திய பிராமணர்கள், எளிதில் தங்களை பிரிட்டிஷாருடன் இணைத்துக்கொண்டார்கள்.

படித்த மனிதர்கள் என்றால் பிரிட்டிஷாருக்கு மிகவும் பிடிக்கும். தங்களைச் சுற்றிலும் படித்த மனிதர்கள் இருக்கவேண்டும். அவர்களுடன் விவாதிக்கவேண்டும். அதேசமயம் குறைந்த எண்ணிக்கையில் படித்தவர்கள் எண்ணிக்கை இருப்பது பிரிட்டிஷாருக்கு உறுத்தலாகவே இருந்தது. இந்தியர்கள் கல்வி கற்கிறார்கள். ஆனால் சொற்ப எண்ணிக்கையில். அதுவும் பிராமணர்கள் மாத்திரமே அதிகம் கற்கிறார்கள். மற்றவர்கள் எல்லாம் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள்? பிராமணர்கள் மட்டும் படித்தவர்களாக இருந்தால் போதாது. மற்ற சமூகத்தினரின் கல்வித் தரமும் உயரவேண்டும். அது கம்பெனிக்கு லாபம். பிரிட்டிஷாருக்கு லாபம். எனில், எப்படி அவர்களுக்குக் கல்வியைப் புகட்டுவது?

மெக்காலே கல்வித்திட்டம்

1835ம் ஆண்டின் தொடக்கம் அது. லார்ட் தாமஸ் பாபிங்டன் மெக்காலே என்ற பிரிட்டிஷ் அதிகாரி இந்தியாவுக்கு அழைத்துவரப்பட்டார். இந்தியர்களுக்குக் கல்வி கொடுக்கவேண்டும். சாத்தியமா? எனில், எப்படிக் கொடுப்பது? எங்கே கொடுப்பது? கொஞ்சம் ஆய்வு செய்யுங்கள். ஆழமாகச் செய்யுங்கள். அறிக்கை கொடுங்கள். உத்தரவு போட்டார் பெண்டிங் பிரபு. ஆகட்டும் என்று சொல்லிவிட்டு உடனடியாகக் களம் இறங்கினார் மெக்காலே.

இந்தியர்களுக்கு அப்போது சமஸ்கிருதத்திலும் அரபியிலும் பாடம் சொல்லித்தரப்பட்டுவந்தன. ஆங்கிலக் கல்வியும் இருந்தது, அங்கொன்றும் இங்கொன்றுமாக. ஆய்வுப் பணியில் இறங்கியதுமே மெக்காலேவுக்குச் சில விஷயங்கள் பிடிபட்டுவிட்டன. இனியும் சமஸ்கிருத, அராபிய மொழிகளில் பாடம் சொல்லிக் கொடுப்பதில் பலன் இல்லை. இனியும் அந்த மொழிப் புத்தகங்களுக்காகப் பணம் செலவழிப்பதில் லாபம் இல்லை. எல்லாவற்øறையும் ஒதுக்கவேண்டும். இந்தியர்களை உயர்த்த ஒரே வழிதான் இருக்கிறது. ஆங்கிலக் கல்வி.

புதிய கல்வித் திட்டத்தின் மூலம் இந்தியர்களின் அடிப்படையே மாறப்போகிறது. நிறத்தாலும் ரத்தத்தாலும் மட்டுமே அவர்கள் இந்தியர்கள். கருத்து, விருப்பம், அறிவு, திறமை அனைத்திலும் அவர்கள் இனி பிரிட்டனைச் சேர்ந்தவர்கள். உரத்த குரலில் சொன்னார் மெக்காலே. 7 மார்ச் 1835 அன்று ஆங்கிலமே பிரிட்டிஷ் இந்தியாவின் அதிகாரபூர்வ மொழி என்ற அறிவிப்பை வெளியிட்டார் வில்லியம் பெண்டிங் பிரபு.

அதன் அர்த்தம், இனி அலுவலகங்களில் ஆங்கிலமே இருக்கும். ஆங்கிலப் பாடமுறையே பள்ளிகளில் இருக்கும். இனி கல்விக்காக ஒதுக்கப்படும் நிதி அனைத்தும் ஆங்கிலக் கல்விக்கே. அதே சமயம் பாரம்பரியமாக நடந்துவரும் சமஸ்கிருத கல்லூரிகள், அரபு மதரஸாக்கள் உடனடியாக மூடப்படாது. அவை ஒருபக்கம் இயங்கட்டும். பிறகு பார்த்துக்கொள்ளலாம். இப்போதைக்கு எங்கும் ஆங்கிலம்! எதிலும் ஆங்கிலம்!

மெக்காலேவின் திட்டத்தின்படி அமலுக்கு வந்த ஆங்கிலக் கல்வியைப் புன்னகை தவழ வரவேற்றவர்களில் முக்கியமானவர்கள் பிராமணர்கள். ஏற்கெனவே கல்வியின் அருமையைப் புரிந்தவர்கள். ஆங்கிலத்தின் அனுகூலங்களை அனுபவித்தவர்கள். அரசல் புரசலாகக் கற்றுக் கொண்ட ஆங்கிலமே நமக்கு ஏராளமான வாய்ப்புகளை வாரிக் கொடுத்திருக்கிறது. அதையே அதிகாரபூர்வமாகக் கற்றுக்கொடுக்கிறோம் என்று சொல்கிறார்கள். விட்டுவிட முடியுமா? சிந்தாமல் சிதறாமல் பயன்படுத்திக்கொள்ளவேண்டும் இல்லையா?

பிராமணக் குழந்தைகள் உற்சாகமாகப் பள்ளியில் சேர்க்கப்பட்டனர். ஆங்கிலக் கல்வியில்தான் எதிர்காலம் இருக்கிறது என்பது புரிந்தவர்கள் வீட்டுக் குழந்தைகள் அத்தனையும் ஆங்கிலப் பள்ளியில் சேர்க்கப்பட்டனர். தவிரவும், அரசாங்கத்தின் சாதாரண பொறுப்புகளுக்குக்கூட ஆங்கிலம் படித்தவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை தரப்படும் என்ற அறிவிப்பை பிரிட்டிஷ் அரசு வெளியிட்டது. வாழ்க ஆங்கிலம்! படித்து முடித்த பிராமண மாணவர்களுக்கு சுலபத்தில் அரசாங்க வேலைவாய்ப்புகள் கிடைத்தன. பல முக்கியப் பொறுப்புகளில் பிராமணர்கள் அமர்த்தப்பட்டனர். ஒரு கட்டத்தில் அரசு வேலை என்றாலே அது பிராமணர்களுக்கானது மட்டுமே என்ற அளவுக்கு நிலைமை சென்றது.

சென்னை மாகாணத்தின் அப்போதைய (1890) மொத்த மக்கள் தொகை நான்கரை கோடி. அவற்றில் ஏறக்குறைய நான்கு கோடி பேர் பிராமணர் அல்லாதவர்கள். அரை கோடிக்கும் குறைவான எண்ணிக்கையில் இருப்பவர்கள் பிராமணர்கள். ஆனால் 1892 முதல் 1904 வரை நடந்த இந்திய சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற 16 பேரில் 15 பேர் பிராமணர்கள். கடந்த இருபது ஆண்டுகளில் உதவிப் பொறியாளர் வேலைக்கு எடுக்கப்பட்ட 21 பேரில் 17 பேர் பிராமணர்கள். நான்கு பேர் மட்டுமே பிராமணர் அல்லாதவர்கள். உதவி கலெக்டர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட 140 பேரில் 77 பேர் பிராமணர்கள். நிலையான பதவிகளிலும் அவர்களே. கொஞ்சம் தாற்காலிகமான பதவிகளிலும் அவர்களே.

பிரிட்டிஷார் கொண்டுவந்த கல்வித் திட்டத்தைப் பயன்படுத்தி பிராமணர் மட்டும்தான் படித்தனரா? பதவிக்கு வந்தனரா? பிராமணர் அல்லாத மாணவர்கள் எவரும் படிக்கவில்லையா? அவர்களுக்கு வேலைவாய்ப்புகள் தரப்படவில்லையா? படித்தனர். வேலை வாய்ப்புகளும் கிடைத்தன. ஆனால் சதவீத இடைவெளி மிக அதிகம். அதிலும், பணக்காரக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வீட்டுக் குழந்தைகளுக்குத்தான் அந்த வாய்ப்பும் கிடைத்தது. மற்ற பிராமணர் அல்லாத குடும்பங்களுக்குக் கிடைக்கவில்லை.

விஷயம் புரிந்து, களத்தில் இறங்கி, படித்து முடித்து வேலைக்குத் தயாராகும்போது உரிய அரசுப் பதவிகள் அனைத்திலும் பிராமணர்களே இருந்தனர். ஆம். ஏற்கெனவே படித்துமுடித்து வேலைக்கு வந்தவர்கள்தான். பல தலைமுறைகளாகப் படித்த குடும்பங்களாக இருக்கும் பிராமணர் வீட்டுப் பிள்ளைகளுடன் புத்தம் புதிதாகப் படித்த பிராமணர் அல்லாத வீட்டுப் பிள்ளைகள் போட்டி போடும்போது அது பிராமணர்களுக்கே சாதகமாக இருந்தது.

அரசுப் பணிகளையும் கல்வியறிவும் ஆங்கில அறிவும் தேவைப்படும் அனைத்து இடங்களையும் ஆக்கிரமித்திருக்கும் பிராமணர்களுக்கு எதிராக பிராமணர் அல்லாதவர்கள் மத்தியில் அதிருப்தியும் ஆவேசமும் அதிகரிக்கத் தொடங்கின. அதன் காரணமாகப் புலம்பல்களும் அதிகரித்தன. வெறுமனே புலம்பிக்கொண்டிருப்பதில் அர்த்தம் இல்லை. மனத்துக்குள் புழுங்கிக் கொண்டிருப்பதிலும் பலன் இல்லை. துணிந்து களத்தில் இறங்கவேண்டும். ஆதிக்கத்துக்கு எதிராக. ஆக்கிரமிப்புக்கு எதிராக. யார் இறங்குவது?