சுதந்திர போராட்டமும், வீரவாஞ்சியும் -இசக்கி ராஜன்

 
இந்திய விடுதலைப் போரில் பகத்சிங், சுகதேவ், ராஜகுரு இவர்களுக்கு எல்லாம் முன்னோடியாக இருந்தவர் விடுதலை போராட்ட தியாகியான தமிழகத்தின் வீர வாஞ்சிநாதன். ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின் அடையாளமாக நெல்லையில் கோலோச்சிய கொடுங்கோலன் ஆஷ் துரையை சுட்டுக் கொன்று தன் உயிரையும் மாய்த்துக் கொண்ட மாவீரன் வாஞ்சிநாதனின் வணக்கத்திற்குரிய தியாக நாள் ஜூன் 17.

பஞ்சாபில் வசிக்கும் கருவுற்ற பெண்கள் தங்கள் வாரிசுகள் வீரநடை போட்டு வெற்றி கொடி கட்ட வேண்டும், தேச பக்தியில் சிறந்து விளங்க வேண்டும் என்று மனதார வேண்டிக் கொண்டு பகத்சிங் தூக்கிலிடப்பட்ட கத்கார்கலனுக்கு சென்று அங்குள்ள மண்ணை அள்ளி தங்கள் வயிறுகளில் மீது பூசிக் கொள்வார்களாம். நாட்டின் விடுதலைக்காக உயிர் தியாகம் செய்த பஞ்சாப் சிங்கம் பகத் சிங்கிற்கு அவர்கள் தரும் பெருமை அது.

ஆனால் வீரவாஞ்சிநாதன் தியாகத்தை நாம் எப்படி நினைவு கூறுகிறோம், அவர் ஆஷ் துரையை சுட்டுக் கொன்று தானும் களசாவு அடைந்த மணியாச்சிக்கு வாஞ்சிமணியாச்சி என பெயர் சூட்டிவிட்டு, அவர் பிறந்த செங்கோட்டையில் ஒரு சிலை வைத்து விட்டு அப்படியே விட்டு விட்டோம். எனினும் வீரவாஞ்சி தோன்றிய நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் அமைக்கப்பட்டுள்ள வாஞ்சி இயக்கம் கடந்த 30 ஆண்டுகளாக வாஞ்சியின் நினைவைப் போற்றி அவரது தியாக நாளில் விழா எடுத்து அவருக்கு வீர வணக்கம் செலுத்தி வருகிறது.

கடந்த ஆண்டு சேவை நிறுவனங்களும், அரசியல் கட்சிகளும் வீரவாஞ்சியின் தியாகத்தை போற்றும் வகையில் அவரது திரு உருவ சிலைக்கு மலர் அஞ்சலி செலுத்தியது தான் வாஞ்சி இயக்கத்திற்கு ஆறுதலான விஷயம். வீரவாஞ்சியின் மரணம் இயற்கையானது அல்ல. இந்திய சுதந்திர போராட்டக் காலத்தில், களத்திலேயே நடந்த மரணம், களச்சாவு என இது இலக்கியங்களில் கூறப்படும்.

வீரவாஞ்சியின் நண்பர் செங்கோட்டை அழகப்ப பிள்ளை ஒரு நூலில் குறிப்பிட்டுள்ள நெகிழ்ச்சியான தகவல்,

கலெக்டர் ஆஷ் துரையை சுடுவதற்கு முன் வாஞ்சியை நான் சந்தித்தேன். அப்போது வாஞ்சி என்னிடம் நான் அமெரிக்கா செல்லப் போகிறேன் என்றார். வியப்படைந்த நான் மீண்டும் வற்புறுத்தி கேட்க ஆமாம் நான் அமெரிக்கா செல்லப் போகிறேன் என்று ஒரு வித சிரிப்புடன் கூறினார். அதன் பொருள் எனக்கு அப்போது விளங்கவில்லை. ஆனால் மறுநாள் மாலைதான் அதற்கு விளக்கம் தெரிந்தது.

ஆம் அன்றுதான் வாஞ்சிநாதன் மணியாச்சி ரயில் நிலையத்தில் ஆஷ் துரையை சுட்டுக்கொன்று விட்டு தானும் வீரமரணம் அடைந்து விட்டார். அவர் அமெரிக்கா செல்லப் போகிறேன் என்பதை சப்த ரீதியில் பிரித்து பார்த்தால் 'ஆம்-நான்-மரிக்கப்' போகிறேன் என்று கூறியிருக்கிறார் என்று உணர முடிந்தது.

சுதந்திர போராட்ட வரலாற்றில் எத்தனையோ உயிர் தியாகங்களும், வீரமரணங்களும் நிகழ்ந்திருக்கின்றன. தன் உயிரை துச்சமென மதித்து சுதந்திர போராட்ட களத்தில் களச்சாவு அடைந்த வீரவாஞ்சி நாதனை நினைவு கூர்வது நமது கடமை.