பாதிப்புக்கு உள்ளாகும் அத்தனை பேருமே பிராமணர் அல்லாத மக்கள். எனில், ஏன் அவர்கள் அத்தனை பேரையும் ஒற்றைக் குடையின்கீழ் திரட்டக் கூடாது? சங்கம் வைத்துத் தமிழைத்தான் வளர்க்க வேண்டுமா என்ன? உரிமைப் போர்களையும் நடத்தலாம். உரிமைகளைப் பெறவேண்டும் என்றால் ஒருங்கிணைவதைத் தவிர வேறு வழியில்லை. ஒருங்கிணைக்க நாங்கள் தயார் என்று சொன்னார்கள் சென்னையைச் சேர்ந்த இரண்டு வழக்கறிஞர்கள். பி. சுப்பிரமணியம், எம். புருஷோத்தம நாயுடு. அந்த நொடியில் உருவான இயக்கம், சென்னை பிராமணர் அல்லாதார் சங்கம். ஆங்கிலத்தில், The Madras NonBrahmin Association.
சங்கம் தொடங்கப்பட்டது என்னவோ 1909ல்தான். ஆனால் அதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்னரே பிராமணர் அல்லாதாரின் பிரச்னைகள் குறித்து வேறு சிலரும் யோசித்திருந்தனர்.
அதற்கு சாட்சியாக இருப்பவை 1893ல் வெளியான இரண்டு புத்தகங்கள். பிராமணர் அல்லாதார் இனங்களும் இந்திய அரசுப் பணியும் (The Non – Brahmin Races and Indian Public Service) என்பது முதல் புத்தகத்தின் பெயர். பிராமணர் அல்லாதார் இனங்கள் தெளிவு பெறுவதற்கான வழிவகைகள் (The Ways and Means for the Amelioration of Non – Brahmin Races) என்பது இரண்டாவது புத்தகத்தின் பெயர். இரண்டிலுமே நூலாசிரியர் பெயர் Fair Play என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
நூற்றைம்பது ஆண்டுகளாகப் பெயருக்குத்தான் ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்கிறார்கள். உண்மையில் இங்கே பிராமணர்களின் ஆட்சிதான் நடந்துவருகிறது. பிராமணர்களின் நலனுக்காக மட்டுமே காங்கிரஸ் கட்சி இயங்குகிறது. இந்திய அரசுப் பணிகள் அனைத்தும் பிராமணர்களுக்கு மட்டுமே என்ற நிலைதான் இன்னமும் நீடித்துவருகிறது. இவைதான் முதல் புத்தகத்தின் சாரம்.
அனைத்து அரசுப் பணிகளுமே பிராமணர்களுக்கு என்ற நிலையை மாற்றவேண்டும் என்றால் வேலைவாய்ப்பு என்பதை மட்டுமே மையமாகக் கொண்டு புதிய இயக்கம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும். அதற்கு பிராமணர் அல்லாதார் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும். புரிதலையும் விழிப்புணர்வையும் உத்வேகத்தையும் ஏற்படுத்தும் வகையில் பிராமணர் அல்லாதார் தங்களுக்கென்றே சில பத்திரிகைகளைத் தொடங்க வேண்டும். இவை இரண்டாவது புத்தகத்தின் அம்சங்கள்.
பிரச்னைகளை விளக்கும் வகையில் முதல் புத்தகமும் அவற்றுக்கான தீர்வுகளைச் சொல்லும் வகையில் இரண்டாவது புத்தகமும் அமைந்திருந்தன.
1909ல் சென்னை பிராமணர் அல்லாதார் சங்கத்தைத் தொடங்கிய இரண்டு வழக்கறிஞர்களும் அதன் கொள்கைத் திட்டங்களை செய்தித்தாள்களில் வெளியிட்டனர். ஒவ்வொரு திட்டமும் பிராமணர் அல்லாத மக்களின் பிரச்னைகள் பற்றிப் பேசியது. எதிர்காலம் குறித்து ஏங்கியது. முன்னேற்றம் குறித்து விவாதித்தது.
சமூக அளவில் மிகவும் தாழ்ந்த நிலையில் இருக்கும் பிராமணர் அல்லாத மக்களை முன்னேற்ற வேண்டும் என்பதுதான் சங்கத்தின் முதன்மையான நோக்கம். சமூக ஏணியில் முன்னேற்றம் அடைவதற்கானத் தகுதிகளைப் பெற அவர்களுக்கு உதவி செய்ய சங்கம் தயாராக இருக்கிறது.
நல்ல புத்திக் கூர்மையும், கல்வி கற்கும் ஆர்வமும் இருக்கிறது, மேற்கொண்டு படிப்பதற்கு வசதியில்லை என்ற நிலையில் இருக்கும் பிராமணர் அல்லாத பிள்ளைகளை மேற்படிப்பு படிக்க வைக்க சங்கம் தேவையான உதவிகளைச் செய்யும்.
பிராமணர் அல்லாத இளைஞர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று தொழில்நுட்பக் கல்விப் பயிற்சி பெற சங்கம் உதவும். அப்படிப் பயிற்சி பெற்ற இளைஞர்கள் தாய்நாடு திரும்பி, புதிய தொழில்களைத் தொடங்க விருப்பம் தெரிவித்தால், அவர்களுக்கு அனைத்து விதமான உதவிகளையும் ஊக்கத்தையும் சங்கம் கொடுக்கும்.
பிராமணர் அல்லாத மக்களின் முன்னேற்றத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படத் தொடங்கியுள்ள சென்னை பிராமணர் அல்லாத சங்கம் முழுக்க முழுக்கச் சமுதாய முன்னேற்ற அமைப்பாகச் செயல்படும். அரசியல் சார்பற்ற முறையில் தொடர்ந்து இயங்கும்.
சங்கத்துக்கு உறுப்பினர்களைச் சேர்க்கும் பணிகள் தொடங்கின. செய்தித்தாள்களில் விளம்பரம் செய்தால் அதிக அளவில் உறுப்பினர்கள் சேரக்கூடும் என்று நினைத்தனர். இந்த இடத்தில்தான் முதல் சிக்கல் தொடங்கியது. சங்கத்தைத் தொடங்கிய இரண்டு வழக்கறிஞர்களுமே பொருளாதார ரீதியாகப் பலவீனமாக இருந்தனர். ஆற்றல் இருந்தது. ஆர்வம் இருந்தது. நிதி ஆதாரம் இல்லை. சங்கம் வளர்ச்சி அடைவதில் சுணக்கம் ஏற்பட்டது.
போதாக்குறைக்கு சென்னை மாகாணத்தைச் சேர்ந்த சில முக்கியப் பிராமணத் தலைவர்கள் புதிய சங்கத்தைக் கண்டிக்கத் தொடங்கினர். வகுப்புவாதத்தைத் தூண்டுகிறார்கள்; இனவெறியைப் பரப்புகிறார்கள்; நான் பிராமின் அசோசியேசனை ஊக்குவிக்கக்கூடாது; உடனடியாகக் கடிவாளம் போட்டே தீரவேண்டும்; வெறுமனே பேசுவதோடு நிறுத்திக் கொள்ளவில்லை. மாகாணத்தில் இருக்கும் முக்கியப் பத்திரிகைகளுக்குக் கடிதங்கள் எழுதினர். கிடுக்கிப்பிடி போடுவதற்கான முயற்சிகள் தொடங்கின.
எதிர்ப்பு வரும் என்பது இரண்டு பேருக்குமே நன்றாகத் தெரியும். அதைச் சமாளிக்கும் வித்தையும் அவர்களுக்குத் தெரியும். தெரிந்து என்ன செய்ய? பொருளாதாரப் பிரச்னை இடிக்கிறதே? திட்டமிட்டபடி சங்கத்தை வளர்த்தெடுக்கும் பணியில் அவர்களால் ஈடுபட முடியவில்லை. ஆயிரம் உறுப்பினர்கள் சேரும்வரை சமாளித்துவிட்டால் போதும்; பிறகு வளர்ந்துவிடலாம் என்று நினைத்தனர். ஆனால் அது எடுபடவில்லை. மெல்ல மெல்ல அடங்கிப் போனது முதல் நெருப்பு.
சென்னை ஐக்கியக் கழகம்
மூன்று ஆண்டுகள் அதிருப்தியாகவே நகர்ந்தன. பிராமணர் அல்லாத மக்கள் மத்தியில் மீண்டும் ஒரு எழுச்சி ஏற்பட்டது. பின்னணியில் இருந்தவர்கள்: அரசு வேலைகளில் இருந்த பிராமணர் அல்லாத பணியாளர்கள். அரசு அலுவலகங்களில் இருக்கும் பிராமணர்களுக்கும் பிராமணர் அல்லாதவர்களுக்கும் இடையே மோதல்கள் ஏற்படத் தொடங்கின. உயர் பதவிகளில் எல்லாம் பிராமணர்கள் இருந்தார்கள். அவர்களுக்குக் கீழே இருக்கும் பதவிகள் பிராமணர் அல்லாத மக்களுக்கு. உத்தரவு போடுவது பிராமணர்களின் உரிமை. அதைச் செய்துமுடிப்பது பிராமணர் அல்லாதாரின் கடமை. இந்த விதியில் இருந்து அணுவளவு பிசகினாலும் வேலைக்கு ஆபத்து.
தொடர்ந்து மிரட்டுகின்றனர். விடாமல் அதட்டுகின்றனர். அவமதிப்புக்கும் பஞ்சமில்லை. பிராமணர் அல்லாதார் என்ற ஒரே காரணத்துக்காகப் பணியிடங்களில் புறக்கணிக்கிறார்கள். பதவி உயர்வை மறுக்கிறார்கள். இனியும் கைகட்டி, வாய்ப்பொத்தி, மௌனம் காப்பது எதிர்காலத்தை ஊனப்படுத்திவிடும். அடங்கிக் கிடந்தால் அழுத்தப்பட்டுவிடுவோம். நிமிர்ந்து நிற்பதைத் தவிர வேறு வாய்ப்பு இல்லை என்று ஆவேசப்பட்டனர் அரசுப் பணியில் இருந்த பிராமணர் அல்லாதவர்கள்.
ஒருங்கிணைப்பு அவசியம் என்று உணர்ந்ததும் சரவண பிள்ளை, ஜி. வீராசாமி நாயுடு, துரைசாமி முதலியார், என். நாராயணசாமி நாயுடு போன்ற பிராமணர் அல்லாத பிரமுகர்கள் இணைந்து ஆலோசனை செய்தனர். விளைவு, 1912ல் சென்னை ஐக்கியக் கழகம் (The Madras United League) என்ற புதிய இயக்கம் உருவாக்கப்பட்டது. திராவிட இயக்கங்களின் பெயர்களில் 'கழகம்" என்ற சொல் இடம் பெறுவதற்கான தொடக்கப்புள்ளி இதுதான்.
வாருங்கள் பேசுவோம். குறைகளைக் கண்டறிவோம். ஒன்றுபட்டுக் குரல் கொடுப்போம். தீர்வை நோக்கி நகர்வோம். இவைதான் சென்னை ஐக்கியக் கழகத்தின் முழக்கங்கள். வடிகாலைத் தேடி ஏங்கிக்கொண்டிருந்த சமயத்தில் கழகம் உருவானதால் பிராமணர் அல்லாத பணியாளர்கள் பலரும் சென்னை ஐக்கியக் கழகத்துக்குத் தங்களுடைய ஆதரவைக் கொடுக்க முன்வந்தனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் வருவாய்த்துறையில் வேலை பார்ப்பவர்கள்.
இயக்கத்தை வழிநடத்தும் செயலாளர் பொறுப்பை பிரபல மருத்துவரான டாக்டர் சி. நடேச முதலியார் ஏற்றுக்கொண்டார். எஸ்.ஜி. அரங்க ராமானுஜம் சென்னை ஐக்கியக் கழகத்தின் துணைச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டார். அடிக்கடி சந்திக்கவேண்டும். ஆக்கப்பூர்வப் பணிகள் பற்றிப் பேசவேண்டும். ஐக்கிய கழகத்தின் கூட்டங்களை எங்கள் வீட்டிலேயே வைத்துக் கொள்ளலாம் என்றார் நடேச முதலியார்.
சென்னை திருவல்லிக்கேணி பெரிய தெருவில் இருந்த நடேச முதலியாரின் வீட்டிலேயே கழகத்தின் கூட்டங்கள் அடிக்கடி நடைபெற்றன. பிராமணர் அல்லாத அரசுப் பணியாளர்கள் அதிகளவில் பாதிப்புக்கு இலக்காகியிருந்ததால் கழகக் கூட்டங்களில் அவர்கள் அதிகம் கலந்துகொண்டனர். அந்தக் கூட்டங்களில் விவாதிக்கப்படும் விஷயங்கள் வாய்வழியாகவே பரவத் தொடங்கின. கழகம் வளரத் தொடங்கியது.
தொடக்கத்தில் கழகத்தின் முக்கியப்பணிகள் இரண்டு. முதியோர் கல்வி இயக்கம் நடத்துவது முதல் பணி. கழகத்தில் இணைந்து செயல்பட்ட அரசுப் பணியாளர்களே அந்தப் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர். பட்டப்படிப்பு முடித்துவரும் பிராமணர் அல்லாத இளைஞர்களுக்குப் பாராட்டு விழாக்கள் நடத்தி, அவர்களை ஊக்கப்படுத்தி, சமுதாயப் பணிகளைச் செய்வதற்கு அவர்களைத் தயார்ப்படுத்தும் பணியிலும் கழகம் தன்னை ஈடுபடுத்திக்கொண்டது.
சென்னை திராவிடர் சங்கம்
கழகம் தொடங்கிய ஓராண்டு முடிவில் ஓரளவுக்கு வளர்ந்திருந்தது. ஆனால் வேகம்தான் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. வளர்ச்சியின் வேகத்தை அதிகரிக்க வேண்டும், இயக்கம் முன்பைக் காட்டிலும் வேகமாக வளர்ச்சி அடைய வேண்டும். என்ன செய்யலாம்? இயக்கத்தின் பெயரை மாற்ற வேண்டும் என்றொரு குரல் எழுந்தது. புதிதாக வைக்கப்படும் பெயர், பிராமணர் அல்லாத மக்கள் அனைவரையும் வசீகரிக்கும் வகையில் இருக்கவேண்டும் என்றது இன்னொரு குரல்.
பெயர் அழகாக இருக்கிறதா, ஈர்ப்புடன் இருக்கிறதா என்பது முக்கியமில்லை. துடிப்புடன் இருக்கிறதா என்பது முக்கியம். பெயரைக் கொண்டே இயக்கத்தின் நோக்கங்கள் புரியவேண்டும் என்பது முக்கியம். எனில், பிராமணர் அல்லாதார் சங்கம் என்ற பெயர்தான் பொருத்தமாக இருக்கும். பலருக்கும் அந்தப் பெயரில் மகிழ்ச்சி. ஏற்கெனவே அந்தப் பெயரைப் போலவே 1909ல் ஒரு இயக்கம் உருவாகி, மறைந்துவிட்டது. அதையே வைத்துக் கொள்ளலாம். என்ன ஒன்று, எதிர்மறைப் பெயராக இருக்கிறது. வாதங்கள் நீடித்தன. இறுதியில் திராவிடர் சங்கம் (Dravidian Association) என்று பெயர் வைத்துவிடலாம் என்று முடிவு செய்தார்கள்.
திராவிடர் என்பது ஓர் இனத்தைக் குறிக்கும் பெயர். சென்னை, கேரளம், கர்நாடகம், ஆந்திரம் ஆகிய இந்தியாவின் தென்பகுதியைச் சேர்ந்த பிராமணர் அல்லாத மக்களுக்கான பொதுவான பெயராக திராவிடர் என்ற சொல் பயன்படுத்தப்பட்டது. உண்மையில் திராவிடர் என்ற சொல்லை சென்னை ஐக்கியக் கழகத்தினர் பயன்படுத்திக் கொள்வதற்கு முன்பே இன்னொரு இயக்கம் பயன்படுத்தியிருந்தது. 1892ல் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த அயோத்திதாசப் பண்டிதர் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் தங்களுடைய இயக்கத்துக்கு திராவிட ஜன சபை என்று பெயர் வைத்திருந்தனர். இனி, சென்னை ஐக்கியக் கழகத்தின் பெயர், சென்னை திராவிடர் சங்கம்.
10 நவம்பர் 1912 முதல் செயல்படத் தொடங்கிய திராவிடர் சங்கத்துக்குத் தலைவர் என்ற பதவி உருவாக்கப்படவில்லை. சிறப்பு செயலாளர் என்ற பதவியே தலைமைப் பதவி. டாக்டர் சி. நடேச முதலியார் அந்தப் பொறுப்பை ஏற்றுச் செயல்படத் தொடங்கினார். மாகாணம் தழுவிய அளவில் பொதுக்கூட்டங்களையும் ஆலோசனைக் கூட்டங்களையும் கருத்தரங்குகளையும் தொடர்ச்சியாக நடத்தியது திராவிடர் சங்கம். அரசியலுக்குக் கொடுத்த அளவுக்கு இலக்கியத்துக்கும் முக்கியத்துவம் தரப்பட்டது.
பிராமணர் அல்லாத சமூகத்தைச் சேர்ந்த பிரபலமானவர்கள், படித்தவர்கள், இளைஞர்கள் அந்தக் கூட்டங்களில் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். சங்கத்தின் முதல் ஆண்டுவிழா நடந்த/போது சர். பிட்டி. தியாகராயர், ராமராய நிங்கார் உள்ளிட்ட பிராமணர் அல்லாத பிரபல மனிதர்கள் கலந்துகொண்டனர். அவர்களில் முக்கியமானவர், தரவாத் மாதவன் நாயர் என்கிற டி.எம். நாயர்.
தரவாத் மாதவன் நாயர் அடிப்படையில் ஒரு மருத்துவர். இங்கிலாந்தில் படிப்பை முடித்தபிறகு இந்தியா திரும்பிய அவர், மருத்துவப் பணிகளைச் செய்யத் தொடங்கினார். ஆண்ட்டிசெப்டிக் என்ற மருத்துவப் பத்திரிகை ஒன்றையும் நடத்தினார். அரசியல் ஆர்வம் ஏற்பட்டபோது காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். சென்னை நகராட்சி மன்ற உறுப்பினராக இருந்த அவர் மக்களின் பிரச்னைகளைக் கச்சிதமாகப் புரிந்துகொண்டு, அதை எல்லோருக்கும் புரியும் வகையில் மன்றங்களில் பேசினார்.
டி.எம். நாயர் என்ற பெயருடன் அரசியல் வட்டாரத்தில் பிரபலமடையத் தொடங்கி, சென்னை மாநகராட்சியின் சார்பாக சென்னை சட்டமன்றத்துக்குத் தேர்வு செய்யப்பட்டார் (1904). காங்கிரஸ் கட்சியில் உறுப்பினராக இருந்தபோதே பிராமணர் அல்லாத மக்களின் வாழ்க்கை நிலை குறித்துப் பேசியும் எழுதியும் வந்தார் நாயர். சென்னை திராவிடர் சங்கத்தின் முதலாம் ஆண்டுவிழாவில் சிறப்புரை ஆற்றிய டி.எம். நாயர், 'விழி, எழு, இன்றேல் என்றும் வீழ்ந்துபட்டோர் ஆவீர்" என்று உரத்தகுரலில் பேசினார்.
சென்னை திராவிடர் சங்கம் 1915ல் இரண்டு கருத்துவிளக்க நூல்களை வெளியிட்டது. அவற்றில் ஒன்று, பிராமணர் அல்லாதார் கடிதங்கள். (Non Brahmin Letters) எஸ்.என்.கே என்பவர் தொகுத்த அந்த நூலில் பிராமணர் அல்லாத தலைவர்கள் எழுதிய இருபத்தியோரு கடிதங்கள் இடம்பெற்றன. ஒவ்வொரு கடிதமும் அந்தக் காலத்தில் பிராமணர் அல்லாத மக்களின் மீது நடத்தப்பட்ட ஒதுக்கல்களையும் இழிவுகளையும் வெளிச்சம் போட்டுக் காட்டின. முக்கியமாக, திராவிட மகா சபை என்ற பெயரில் விரிவான அரசியல் அமைப்பு ஒன்றைத் தொடங்கி, மாவட்டம், மாநகரம், நகரம், கிராமம் என்று பல்வேறு மட்டங்களில் அந்த இயக்கத்தை வளர்த்தெடுக்க வேண்டும் என்ற கருத்து அந்தக் கடிதங்களில் இடம் பெற்றிருந்தது.
அடுத்தது, திராவிடப் பெருமக்கள் (Dravidian Worthies) என்ற நூல். சி. சங்கரன் நாயர் எழுதிய இந்தப் புத்தகத்தில் பிராமணர் அல்லாதாரின் கல்விநிலை குறித்து விவாதிக்கப்பட்டு இருந்தது. கல்வி கற்பதில் பிராமணர் அல்லாத மக்கள் கவனம் செலுத்துவதில்லை, பிராமணர் அல்லாத மக்களுக்குள் முறையான ஒருங்கிணைப்புகள் எதுவும் இல்லை, ஒற்றுமை இல்லை, பரம்பரைத் தொழிலைத் தொடர்வதில் மட்டுமே ஆர்வம் செலுத்துகின்றனர், அரசு வேலைகளில் சேர்வதற்குக் கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் தவறவிட்டுவிட்டனர், மனு தர்மத்தின் மீது ஏற்பட்ட மயக்கம் காரணமாக, தங்களுடைய இழிநிலைக்குத் தாங்களே காரணமாகிவிட்டார்கள், பிராமணர் அல்லாத மக்கள் சமூகத்தில் தங்களுக்குரிய இடத்தைப் பெறவேண்டும் என்றால் அமைப்பு ரீதியாக ஒன்றிணையவேண்டும் என்பன போன்ற பல கருத்துகள் இடம்பெற்றிருந்தன.
மேல் படிப்பு படிப்பதற்கு ஆர்வம் இருந்தும் அதற்கான வாய்ப்பு, வசதிகள் இல்லாதது பிராமணர் அல்லாத மாணவர்களை வெகுவாகப் பாதித்திருந்தது. சென்னை மற்றும் திருச்சி என்ற இரண்டு இடங்களில் மட்டுமே அப்போது முதல்தரக் கல்லூரிகள் இருந்தன. மாகாணம் முழுக்க இருக்கும் மாணவர்கள் மேல்படிப்புக்காக அந்த இரண்டு ஊர்களில் ஒன்றைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டும். அங்குதான் தங்கிப் படிக்கவேண்டும். பிரச்னை என்னவென்றால், கல்லூரிகள் சேர்ந்து படிக்கும் பிராமணர் அல்லாத மாணவர்கள் தாங்கள் தங்கியிருக்கும் பிராமணர் விடுதிகளில் சாப்பிடுவதற்கு அனுமதி இல்லை. வெளியே சென்று தனியார் கடைகளில் எடுப்பு சாப்பாடு எடுத்துவந்து சாப்பிட வேண்டும்.
பிராமணர் அல்லாத மாணவர்களின் நிலையைப் புரிந்துகொண்ட டாக்டர் சி. நடேச முதலியார் புதிய திட்டம் ஒன்றைக் கொண்டு வந்தார். பிராமணர் அல்லாத மாணவர்கள் தங்குவதற்கும் சாப்பிடுவதற்கும் ஏற்றவகையில் திராவிடர் சங்க விடுதி (Dravidian Association Hostel) ஒன்றை சென்னை திருவல்லிக்கேணி அக்பர் சாகிப் தெருவில் தொடங்கினார். 1916 ஜூன் மாதத்தில் முதல் விடுதி தொடங்கப்பட்டது. அதை நிர்வகிக்கும் பொறுப்பை அவரே ஏற்றுக் கொண்டார். (திராவிடர் சங்க விடுதி 1914ல் தொடங்கப்பட்டதாகப் பதிவு செய்திருக்கிறார் The Justice Party – A Historical Perspective என்ற புத்தகத்தை எழுதிய P. ராஜாராமன்)
திராவிடர் சங்கத்தின் வளர்ச்சியை காங்கிரஸ் கட்சியில் இருந்த சர். பிட்டி. தியாகராய செட்டியார், டாக்டர் டி.எம். நாயர் உள்ளிட்ட தலைவர்கள் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்தனர்.
திடீரென டி.எம். நாயரின் அரசியல் வாழ்க்கையில் திருப்பத்தை ஏற்படுத்தக்கூடிய முக்கியச் சம்பவம் ஒன்று நிகழ்ந்தது.
1916 ஆகஸ்டு மாதத்தில் டெல்லி சட்டசபை என்கிற இம்பீரியல் லெஜிஸ்லேடிவ் கௌன்சிலுக்குத் தேர்தல் நடைபெற்றது. இரண்டு இடங்களுக்கான தேர்தலில் மொத்தம் ஏழு பேர் போட்டியிட்டனர். டி.எம். நாயர், வி.எஸ். சீனுவாச சாஸ்திரி, பி.என். சர்மா, சி. விஜயராகவாச்சாரியார், என். சுப்பாராவ் பந்துலு, சி. கருணாகர மேனன், நவாப் சையத் முகமது ஆகியோரும் போட்டியில் இருந்தனர்.
சென்னை மாகாணச் சட்டசபையில் இருக்கும் அதிகாரிகள் அல்லாத உறுப்பினர்கள் வாக்களித்துத் தேர்வு செய்யப்படுபவரே டெல்லி சட்டசபைக்குச் செல்லமுடியும். பிராமணர் அல்லாத உறுப்பினர்கள்தான் சென்னை மாகாண சட்டமன்றத்தில் பெரும்பான்மையாக இருந்தனர். ஆகவே, டி.எம். நாயருக்கு வெற்றி நிச்சயம் என்பதுதான் பிராமணர் அல்லாத மக்கள் மத்தியில் நிலவிய பொதுவான எதிர்பார்ப்பு. ஆனாலும் டி.எம். நாயர் தோல்வியடைந்தார். நாயரை எதிர்த்துப் போட்டியிட்ட சீனிவாச சாஸ்திரி என்ற பிராமணர் வெற்றிபெற்றார். இன்னொரு இடத்துக்கு பி.என். சர்மா தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.
டெல்லி சட்டசபைத் தேர்தலில் தோல்வியடைந்தது டி.எம். நாயரை வெகுவாகப் பாதித்துவிட்டது. பிராமணர்கள் தன்னைத் திட்டமிட்டுத் தோற்கடித்துவிட்டார்கள் என்று அதிருப்தி அடைந்தார். டி.எம். நாயரின் தோல்வி காங்கிரஸில் இருக்கும் பிராமணர் அல்லாத தலைவர்களுக்கான சாவுமணி என்றுதான் பிராமணர்கள் நினைத்தனர். ஆனால் அந்தத் தோல்வி திராவிட இயக்கத்தின் புதிய அத்தியாயத்துக்கான முரசொலியாக அமைந்தது. கூடவே, ஒரு எச்சரிக்கை மணியும் கேட்டது. அதனை ஒலிக்கச் செய்தவர், அன்னிபெசண்ட்!
நன்றி:தட்ஸ்தமிழ்.சங்கம் தொடங்கப்பட்டது என்னவோ 1909ல்தான். ஆனால் அதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்னரே பிராமணர் அல்லாதாரின் பிரச்னைகள் குறித்து வேறு சிலரும் யோசித்திருந்தனர்.