செப்பு மொழி பதினெட்டுடையாள் எனில் சிந்தனை ஒன்றுடையாள் என மகாகவி பாரதி இந்தியத் திருநாட்டின் ஒருமைப்பாட்டை வலியுறுத்தியுள்ளார். ஆனால், பாரத நாடு சுதந்திரம் அடைந்த பிறகு மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட வேண்டிய சூழ்நிலை உருவானது. சுதந்திரத்துக்கு முன்பாக பாரத நாடு ஆங்கிலேயர்களால் ஒன்பது மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டு ஆட்சி செய்யப்பட்டது.பொதுவாக தென்னிந்தியா முழுவதும் சென்னை மாகாணம் என்று அழைக்கப்பட்டது. சென்னை மாகாணத்தில் இப்போதைய முழுத் தமிழகமும், ஆந்திர, கர்நாடக, கேரள மாநிலங்களின் பெரும்பகுதிகளும் இருந்தன. தமிழகத்தில் தனி திராவிட நாடு கோரும் இயக்கங்கள் வலுப்பெற்று வந்த காலகட்டம் அது. அதாவது, திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் ஆகிய அமைப்புகள் கோரிய தனி திராவிட நாடு வரைபடத்தில் தமிழகம், கேரளம், ஆந்திரம், கர்நாடகம், மராட்டியம் உள்ளிட்ட மாநிலங்கள் அடங்கியிருந்தன. இந்தியாவைப் பிரித்து பாகிஸ்தான் உருவாக்க வேண்டும் என போராட்டம் நடத்திய ஜின்னாவோடு பேச்சுவார்த்தை நடத்தினர். வடஇந்தியாவில் தனித்திராவிட கோரிக்கைக்கு ஆதரவாக ஜின்னா பிரசாரம் செய்வது என்றும் தென்னிந்தியாவில் பாகிஸ்தானுக்கு ஆதரவாகத் திராவிட இயக்கங்கள் பிரசாரம் செய்வது என்றெல்லாம்கூட திராவிட இயக்கத் தலைவர்களின் நடவடிக்கைகள் அமைந்திருந்தன. ஆனால், இவர்களுக்கு தமிழகம் தவிர, வேறு எந்தப் பகுதியிலும் ஆதரவு கிடைக்கவில்லை என்பது அப்பட்டமான உண்மை. ஆந்திரத்தில் தனித்தெலங்கானா இயக்கத் தலைவர்கள் ஆயுதம் தாங்கி தங்களது புரட்சிகர நடவடிக்கைகளைத் தொடங்கியிருந்தனர்.தமிழகம் உள்பட்ட தென்னிந்தியாவில் காங்கிரஸ் கட்சி அனைத்து மாநிலங்களிலும் ஆட்சி அதிகாரங்களைப் பெற்றிருந்தது. கேரளத்தில் கம்யூனிஸ்ட் கட்சி வலுப்பெறத் தொடங்கி இருந்தது. பொட்டி ஸ்ரீராமுலு என்கிற தலைவர் தனித்தெலுங்கு மாநிலம் அதாவது, ஆந்திர மாநிலம் மற்றும் மொழிவழி மாநிலங்கள் பிரிக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கைக்காக உண்ணாவிரதம் இருந்து உயிர்த்துறந்தார். நாடு முழுவதும் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கை வலுப்பெற்றது. வேறுவழியில்லாமல் அன்றைய பிரதமர் நேரு மொழிவாரி மாநிலப் பிரிவினைக்குச் சம்மதித்தார்.மொழிவாரி மாநிலங்களை உருவாக்குவதற்காக 1953-ல் பசல் அலி தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டு என்.கே. குன்சுரு, கே.என். பணிக்கர் ஆகியோர் அதன் உறுப்பினர்களாகச் செயல்பட்டனர். இவர்கள் 1955 மார்ச் 23-ம்தேதி தங்களது அறிக்கையைத் தாக்கல் செய்தனர். இதன்பிறகு மொழிவழி மாகாணங்கள் பிரிக்கப்பட்டன. மாநிலங்களின் எல்லைகள் நிர்ணயிக்கப்பட்டன.சங்ககாலம் தொட்டே தமிழ்கூறும் நல்லுலகத்தின் தெற்கு எல்லையாகக் குமரியும், வடக்கு எல்லையாக வேங்கடமலையும் திகழ்ந்து வந்தது. ஆனால், நம் தலைநகர் சென்னைகூட ஆந்திர மாநிலத்தில் இணைக்கப்பட வேண்டும் என தெலுங்கு மக்களின் தலைவர்கள் சென்னையிலேயே மதராஸ் மனதே என்கிற கோஷத்துடன் போராட்டங்களைத் தொடங்கினர். குமரி மாவட்டம், இடுக்கி, மூணாறு, தேவிகுளம், பீர்மேடு ஆகிய பகுதிகள் கேரளத்துடன் இணைக்கப்பட வேண்டும் என கேரள மாநிலத்தில் உள்ள அன்றைய சோசலிஸ்ட், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் தலைவர்கள் அனைவரும் முயற்சிகளை மேற்கொண்டனர். கர்நாடகத்திலும், சாம்ராஜ் நகர் உள்ளிட்ட பகுதிகள் கர்நாடக மாநிலத்துடன் இணைக்கப்பட வேண்டும் என்கிற போராட்டங்கள் வலுப்பெற்றன.பொதுவாக ஒரு பகுதியில் எந்த மொழி பேசுகின்ற மக்கள் பெரும்பான்மையாக வசிக்கிறார்களோ அந்தப் பகுதி அந்த மொழி பேசுகிற மாநிலத்தோடு இணைக்கப்பட வேண்டும் என்பது கருத்தாக இருந்தது. தமிழகத்தில் முதுபெரும் சுதந்திரப் போராட்ட வீரரும், தமிழரசு கழகத்தின் தலைவருமான ம.பொ.சிவஞானம் தலைமையில் தமிழக எல்லை மீட்பு போராட்டம் தொடங்கியது. கிராமணியார், சிலம்புச் செல்வர் என்றெல்லாம் அன்போடு அழைக்கப்பட்ட ம.பொ.சி.யை தமிழகத்தின் தலைசிறந்த தலைவர்களில் ஒருவரும், கம்யூனிச சித்தாந்தியுமான ஜீவானந்தம், காங்கிரஸ் கட்சியில் திருவிதாங்கூர் சமஸ்தான எதிர்க்கட்சித் தலைவராக இருந்த தாணுலிங்க நாடார், பார்வர்டு பிளாக் கட்சியின் தலைவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஆகியோர் ஆதரித்தனர்.ம.பொ.சி. தலைமையில் நடைபெற்ற போராட்டம் காரணமாக ஆறுபடை வீடுகளில் ஒன்றாகத் திகழ்கிற தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கிற திருத்தணி தமிழகத்தோடு இணைக்கப்பட்டது. தலைநகர் சென்னையும் காப்பாற்றப்பட்டது. ஆனால், தமிழர்கள் பெரும்பான்மையாக வசித்த சித்தூர் பகுதி ஆந்திரத்தோடு இணைக்கப்பட்டது. அன்றைய மதுரை மாவட்டம் பெரியகுளம் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட இடுக்கி பகுதியில் வசிக்கும் தமிழர்கள் இடுக்கியைத் தமிழகத்தோடு இணைக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தினார்கள். இப்போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடைபெற்று ஆறு பேர் வரை உயிரிழந்தனர். இருந்தபோதும் இடுக்கி மாவட்டம் கேரளத்துடன் இணைக்கப்பட்டது.தமிழர்கள் பெரும்பான்மையாக வசித்த தேவிகுளம், பீர்மேடு, கண்ணகி கோவில் பகுதி ஆகியவையும் கேரளத்துடன் இணைக்கப்பட்டன. குமரி மாவட்டத்தை தமிழகத்துடன் இணைக்க வேண்டும் என்கிற நியாயமான கோரிக்கைக்காகப் போராட ஐவர் குழு அமைக்கப்பட்டது. குழுவில் தாணுலிங்க நாடார், சிதம்பரநாதன், குஞ்சுநாடார், டேனியல், நேசமணிநாடார் ஆகியோர் இடம்பெற்றனர். இவர்கள் செங்கோட்டையில் தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளைத் தமிழகத்துடன் இணைக்க வேண்டும் என செங்கோட்டையில் போராட்டம் நடத்தினர். இதில் நேசமணி நாடார் கைதாகவில்லை. ஏனைய நால்வரும் கைது செய்யப்பட்டு ஒன்பது மாத கால சிறைவாசம் அனுபவித்தனர். இதன் காரணமாக கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைக்கப்பட்டது. 1946 முதல் 1952 வரை இடைக்கால அரசாங்கத்தில் தமிழக முதலமைச்சர்களாக இருந்த ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், குமாரசாமி ராஜா ஆகிய இருவருக்கோ, 1952 முதல் 1954 வரை முதல்வராக இருந்த ராஜாஜிக்கோ, 1954-க்குப் பிறகு தமிழகத்தின் தனிப்பெரும் தலைவராகத் திகழ்ந்த காமராஜருக்கோ மொழிவழி மாகாணங்கள் பிரிக்கப்படுவதில் உடன்பாடு இல்லை. இவர்கள் அப்பழுக்கற்ற தேசியவாதிகளாகத் திகழ்ந்தார்கள். ஆனாலும், மொழிவழி மாகாணங்கள் பிரிக்கப்பட்டன.இந்தியத் தேசிய உணர்வு கொண்ட காங்கிரஸ் கட்சியும் அப்போது வலுப்பெறத் தொடங்கியிருந்த திராவிட இயக்கங்களும், தமிழகத்தின் கம்யூனிஸ்ட் தலைவர்களும், ம.பொ.சி.யை ஆதரித்திருந்தால் தமிழர்கள் பெரும்பான்மையாக வசித்த மாவட்டங்கள் தமிழகத்துடன் இணைக்கப்பட்டிருக்கும். ஆனால், இவர்கள் இதுவிஷயத்தில் தமிழக நலனில் போதிய கவனம் செலுத்தவில்லை என்கிற வருத்தம் இன்றும் நமக்குள்ளது. தெலங்கானா புரட்சியை வழிநடத்திய ஆந்திர மாநிலத்தவர்கள் பொதுவுடைமை சித்தாந்தத்தில் நம்பிக்கை உள்ளவர்கள். சர்வதேசிய வாதத்தில் நம்பிக்கை உள்ள இவர்கள் மொழிவழி உரிமை என்று வருகிறபொழுது சென்னையைக்கூட ஆந்திரத்துடன் இணைக்கக் கோரினார்கள். அதேபோல கேரளத்தில் செல்வாக்குப் பெற்ற பொதுவுடைமைத் தலைவர் ஏ.கே.கோபாலன் தமிழர்களை வந்தேறிகள், அவர்கள் கேரளத்தை விட்டு வெளியேற வேண்டும் என்றெல்லாம் கூறினார். ஆனால், தமிழகத்தைச் சார்ந்த பொதுவுடைமைவாதிகளில் ஒருவரான ஜீவானந்தத்தைத் தவிர, தமிழகப் பொதுவுடமைவாதிகள் யாரும் தமிழ்மாநில எல்லை காக்கும் போராட்டத்தை ஆதரிக்கவில்லை. "அடைந்தால் திராவிட நாடு, அடையாவிட்டால் சுடுகாடு, தம்பி வா ஒன்றாகக் கூடி இன்ப திராவிடம் தேடி, திண்ணையிலே படுத்தாவது திராவிட நாடு வாங்குவோம் என்றெல்லாம் வீரவசனம் பேசி இந்தியாவைப் பிரித்து பாகிஸ்தானை உருவாக்கியதுபோல நாங்கள் திராவிடஸ்தானை உருவாக்குவோம் என திராவிட நாடு கோரிக்கையை திராவிட இயக்கத்தவர்கள் வெகு தீவிரமாகப் பரப்பி வந்தனர். அப்பொழுது திராவிடர் கழகமோ, தி.மு.க.வோ தமிழக எல்லை காக்கும் போராட்டத்துக்குப் போதிய ஆதரவு தரவில்லை.தமிழகத்தில் பிரிவினை கோரும் திராவிட இயக்கங்கள் வலுப்பெற்று வருகிற காரணத்தால் இவர்கள் எப்படியாவது ஆயுதம் தாங்கிப் போராடவும் துணிவார்கள். அதற்கு தமிழகத்தைச் சுற்றியிருக்கக்கூடிய மலைப்பகுதிகள் மற்றும் வனப்பகுதிகளைப் பயன்படுத்திக் கொள்வார்கள் என அன்றைய உளவுத்துறை தமிழகத்தில் திராவிட தனி நாடு கோருவோர் குறித்து தகவல்களை மத்திய அரசிடம் பதிவு செய்திருந்தது.இதன் காரணமாக மத்திய அரசும் மலை மற்றும் வனப்பகுதிகளை தமிழகத்துடன் இணைப்பது குறித்து மிகுந்த எச்சரிக்கை உணர்வுடன் செயல்படும்படி மொழிவழி மாகாண பிரிவினை குழுவுக்கு ஆலோசனை வழங்கியிருந்தது. பொதுவாக ஆரம்பகாலத்திலிருந்தே அதாவது 1948 ஜுன் 17 அரசியலமைப்பை உருவாக்கும் குழுத்தலைவராக இருந்த டாக்டர்.ராஜேந்திர பிரசாத், ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.கே.தார் தலைமையில் அமைத்த கமிட்டியில் இடம்பெற்ற கேரள மாநிலத்தைச் சேர்ந்த அதிகாரிகளும், ஐக்கிய கேரளம் உருவாக்கும் நோக்கத்துடன் எஸ்.கே.தாஸ் கமிஷன் சென்னை வந்து நேசமணியைச் சந்தித்தபோதும் கேரள மாநிலத்தைச் சார்ந்த அதிகாரிகள் கேரளத்துக்குச் சாதகமான முடிவுகளையே எடுத்தார்கள்.1953 பசல் அலி தலைமையிலான மொழிவழி மாகாண பிரிவினைக் கமிட்டியில் எம்.கே.கும்சுரு, கே.என்.பணிக்கர் ஆகியோர் இடம்பெற்றனர். இதில் கேரள மாநிலத்தைச் சார்ந்த கே.என். பணிக்கர் தமிழகத்துக்கு விரோதமான முடிவுகளையே எடுத்தார். தமிழர்கள் பெரும்பான்மையாக வசித்த பல தாலுகாக்களை பிற மாநிலங்களோடு இணைத்து மொழிவழி மாநிலங்களை உருவாக்கினர்.இப்போதும் மத்திய அரசின் அதிகார மையங்களில் பதவி வகிக்கும் கேரள மாநிலத்தைச் சேர்ந்து உயர்அதிகாரிகள் 35-க்கும் மேற்பட்டோர் மிகுந்த சக்தி வாய்ந்த பொறுப்புகளில் இருக்கிறார்கள். இவர்கள் தொடர்ந்து தமிழகம், தமிழர்கள் தொடர்பான பிரச்னைகளில் தமிழகத்துக்கும், தமிழர்களுக்கும் விரோதமாகவே செயல்பட்டு வருகின்றனர் என்கிற குற்றச்சாட்டு பரவலாக எழுந்துள்ளது.ஈழத்தமிழர், கச்சத்தீவு, தமிழக மீனவர், முல்லைப் பெரியாறு ஆகிய பிரச்னைகளில் உண்மைகளை மறைத்து தமிழகத்துக்குப் பாதகமான முடிவுகளையே எடுத்து வருகின்றனர் என்கிற குற்றச்சாட்டும் இங்கு உண்டு.அன்றைய காலகட்டத்தில் தமிழகத்தில் செயல்பட்ட திராவிட இயக்கங்களும், காங்கிரஸ் பேரியக்கமும் கம்யூனிச இயக்கங்களும் விழிப்புணர்வுடன் இல்லாத காரணத்தால் தமிழகத்தின் எல்லைகள் சுருங்கிப் போய்விட்டது என்பது உண்மை. இதன் காரணமாகவே காவிரி, பாலாறு, முல்லைப் பெரியாறு, நெய்யாறு, பரம்பிக்குளம் ஆழியாறு, சிறுவாணி ஆகிய நதிகளில் நமது பாரம்பரிய உரிமையை இழந்துள்ளோம். முல்லைப் பெரியாறு விவகாரம் வலுத்திருக்கும் இப்போதைய சூழ்நிலையிலாவது மேற்கண்ட இயக்கங்கள் தமிழக நலன் கருதி ஒன்றுபட்டு செயல்பட வேண்டுகிறோம். வளமான தமிழகம் வலிமையான பாரதம் உருவாகிட உரிய சட்டப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொண்டு நமது உரிமைகளை நிலைநாட்ட வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கிறோம்.பதவியைக் காப்பாற்றிக் கொள்வதில் இவர்கள் காட்டும் அக்கறையைத் தமிழக நலனில் காட்டினால் எவ்வளவு நன்றாக இருக்கும்? மற்றவர்களை தில்லிக்குக் காவடி தூக்குகிறார்கள் என்று நையாண்டி செய்தவர்கள்இப்போது தில்லிக்குக் கைகட்டி சேவகம்செய்வது அவர்கள் விருப்பம். அதற்காகத்தமிழ், தமிழன் என்று பேசித் தங்களை வளர்த்துக் கொண்டவர்கள் தமிழகத்தின் நலனைத் தங்கள் சுயநலத்துக்காக பலி கொடுக்கிறார்களே, என்னே இவர்களது தமிழ்ப் பற்று!
நன்றி : தினமணி 30 Dec 2011