பத்மநாப சுவாமி கோவிலில் நேதாஜி ஒளிந்திருந்தாரா?


 

சுதந்திர போராட்டக் காலத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், பத்மநாப சுவாமி கோவில் அருகே ஒளிந்திருந்ததாகக் கருதி, பிரிட்டிஷ் அரசு இந்த பகுதியை தீவிரமாக கண்காணித்து வந்ததாக, வரலாற்று ஆவணங்கள் தெரிவிக்கின்றன. திருவனந்தபுரம், பத்மநாப சுவாமி கோயில் பாதாள அறையில் இருந்து, லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள பொக்கிஷங்கள் சமீபத்தில் கண்டெடுக்கப்பட்டன. இதனால், இந்த கோவில் தற்போது அதிக பட்ச கண்காணிப்புக்கு உள்ளாகியுள்ளது. சுதந்திர போராட்டக் காலத்திலும் இந்த கோவில் அமைந்த பகுதி, பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் கண்காணிப்புக்கு ஆளானது என்பது, வரலாற்று ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது. பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். இந்திய தேசிய படையை தலைமை ஏற்று நடத்திய அவர், 1941ம் ஆண்டு ஜப்பான் மற்றும் ரஷ்யாவுக்கு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. வெளிநாடு சென்று திரும்பியதும், அவரால் பல அபாயம் ஏற்படும் என்று பயந்த பிரிட்டிஷ் அரசு, அவரது நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்தது. ஏதாவது ஒரு துறைமுகம் மூலம் அவர், நாட்டுக்குள் நுழையக்கூடும் என்பதால், துறைமுகப்பகுதிகள் உஷார் படுத்தப்பட்டன.
சுபாஷ் சந்திரபோஸ், திருவனந்தபுரம் மற்றும் ராமேஸ்வரம் பகுதியில் நடமாடுவதாக வந்த அனாமதேய கடிதத்தால், பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள், அப்போது சென்னை மாகாணத்தின் ராணுவ அதிகாரியாக விளங்கிய லெப்டினன்ட் கர்னல் ஜி.பி.மர்பிக்கு ஒரு கடிதத்தை அனுப்பினர். இந்த கடிதத்தை ராணுவ அதிகாரி,
திருவாங்கூர் சமஸ்தானத்தின் திவானாக இருந்த சி.பி.ராமசாமி அய்யருக்கு அனுப்பி, திருவாங்கூர் ஆளுகைக்கு உட்பட்ட திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலை கண்காணிக்கும்படி கூறினார்.
பிரிட்டிஷ் அரசின் இந்த உத்தரவை ஏற்று, திருவனந்தபுரத்தில் பத்மநாப சுவாமி கோவிலையொட்டிய அக்ரகார பகுதியில், தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டதாக, திவான் சி.பி.ராமசாமி அய்யர் பதில் கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதங்கள் தற்போது ஆவண காப்பகத்தில் உள்ளன. பிரிட்டிஷ் அரசின் கடிதத்தின் பேரில், பத்மநாப சுவாமி கோவிலிலும் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. கோவிலை சுற்றியுள்ள அனைத்து வீடுகளிலும் வீரர்கள், சுபாஷ் சந்திரபோசை தேடும் பணியில் ஈடுபட்டதாக வரலாற்று ஆவணங்கள் குறிப்பிட்டுள்ளன.

நன்றி:தினமலர் ஆகஸ்ட் 07,2011