திராவிட இயக்க வரலாறு-அத்தியாயம் 4: கொள்கை அறிக்கை

பிரெஞ்சுப் புரட்சி நடப்பதற்கு முன்னால் பிரான்ஸ் நாட்டில் சகல அதிகாரங்களும் பிரபுக்கள் வசமே இருந்தன. உயர்குடி மக்கள். பிரபுக்கள் அல்லாதோருக்கு எதுவும் கிடையாது. பள்ளிகளை நடத்துவதும் அவர்கள்தான். படிப்பதும் அவர்கள்தான். மற்றவர்களுக்கு நுழையக்கூட அனுமதி இல்லை.

எல்லாவற்றுக்கும் பிரபுக்கள் சொன்ன காரணங்கள் இவைதான். பிரபுக்களைப்போல அறிவும் ஆற்றலும் பிரபுக்கள் அல்லாத மற்ற வகுப்பு மக்களுக்குக் கிடையாது. அவர்கள் அனைவரும் கீழ்க்குலத்தினர். தாழ்ந்த வகுப்பினர். அவர்கள் ஆட்சியில் பங்கு பெற்றால் நாட்டுக்குத் தீமைதான் விளையும்.

சரி, பிரபுக்கள் சமுதாயத்துக்கு மட்டும் எப்படி எல்லாத் தகுதிகளும் இருக்கிறதாம்?

பிரபுக்கள் வகுப்பினரும் அரச குலத்தினரும் மட்டுமே கடவுளின் கடாட்சம் பெற்றவர்கள். மற்ற மக்களைப்போல கீழ்மையான நிலையோ பிறப்போ உடையவர் அல்லர். பிரபுக்கள் சமுதாயத்தினர் உயர்வாழ்வு வாழ்வதற்காகக் கடவுளால் படைக்கப்பட்டவர்களே கீழ்ச்சாதியினர். அனைத்து சமூகத்தினரும் பிரபுக்களுக்குக் கீழ்ப்பட்ட வாழ்வே வாழப் பிறந்தவர்கள். இதுதான் பிரபுக்கள் சொன்ன கருத்து.

பிரபுக்கள் வகுப்பினரின் ஆதிக்க வெறியை அடியோடு அழித்தொழிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் பிரபுக்கள் அல்லாத பிரெஞ்சு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து புதிய இயக்கம் ஒன்றை உருவாக்கினர். அதன் பெயர், ரேடிக்கல் ரிபப்ளிகன் கட்சி. பிரபுக்கள் அல்லாதார் கட்சி என்றும் இன்னொரு பெயர் உண்டு. பிரபுக்கள் வகுப்பைச் சேர்ந்த எவரையும் கட்சிக்குள் சேர்த்துக் கொள்ளக்கூடாது என்பதுதான் அந்தக் கட்சி தனக்குத்தானே விதித்துக்கொண்ட கட்டுப்பாடு. அந்த அளவுக்கு பிரபுக்கள் வகுப்பினரால் பிரபுக்கள் அல்லாதவர்கள் தொல்லைகளுக்கு ஆளாகியிருந்தனர்.

பலத்த போராட்டங்களுக்குப் பிறகு ரேடிக்கல் ரிபப்ளிகன் கட்சி பிரான்சில் நிலவிய பிரபுக்களின் ஆதிக்கத்தை அழித்தொழித்தது. புதிய மக்கள் அரசு உருவானது. அந்தச் வரலாற்றுத் திருப்புமுனையை நிகழ்த்திய ரேடிக்கல் ரிபப்ளிகன் கட்சியின் மீதும் அதன் புரட்சிகர கொள்கைகள் மீதும் தரவாத் மாதவன் நாயருக்கு ஒருவித ஈர்ப்பு. குறிப்பாக, அந்தக் கட்சியின் தலைவர்களுள் ஒருவரான ஜியோர்ஜஸ் கிளமென்ஸோ (Georges Clemenceau) மீது.

தீவிர அரசியல்வாதியான கிளமென்ஸோ அடிப்படையில் தொழில்முறை மருத்துவர். பத்திரிகை நடத்துவதில் ஆர்வம் உள்ளவர். லீ டிரிவெயில், லீ மாட்டீன் என்ற இரண்டு பத்திரிகைகளை நடத்தினார் கிளமென்ஸோ. பிறகு 1880ல் La justice என்ற பத்திரிகையைத் தொடங்கினார். அந்தப் பெயர் டி.எம்.நாயரை வெகுவாகக் கவர்ந்துவிட்டது.

தாங்கள் புதிதாக உருவாக்கியிருக்கும் தென்னிந்திய நலவுரிமைச் சங்கத்துக்கும் ரேடிக்கல் ரிபப்ளிகன் கட்சிக்கும் நிறைய பொருத்தங்கள் இருக்கின்றன. அங்கே பிரபுக்கள் என்றால் இங்கே பிராமணர்கள். மற்றபடி பிரச்னைகள் எல்லாம் ஏறக்குறைய ஒன்றுதான். அந்தக் கட்சியின் முக்கிய நோக்கமே பிரபுக்கள் அல்லாதார் வாழ்க! பிரபுக்கள் அல்லாதார் உரிமைகள் ஓங்குக! என்பதுதான். அதைப்போலவே பிராமணர் அல்லாதார் வாழ்க! பிராமணர் அல்லாதார் உரிமைகள் ஓங்குக! என்று புதிய கட்சியின் கொள்கை முழக்கங்களை வைத்துக் கொள்ளலாம். முடிவு செய்துவிட்டார் டி.எம். நாயர்.

பிரான்ஸில் தேர்தல் நடைபெற்று, ரேடிகல் ரிபப்ளிகன் கட்சி ஆட்சிக்கு வந்ததும் மதவாதம் பேசுபவர்களுக்கு எதிராகத் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. தேவாலயத்துக்குச் சொந்தமான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கிட்டத்தட்ட இதேபோன்ற நிலையை தென்னிந்திய நலவுரிமைச் சங்கம் ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் டி.எம். நாயரின் திட்டம். சங்கத்துக்கு சட்ட திட்டங்கள் வகுத்துக் கொடுக்கும் பொறுப்பு டி.எம். நாயர் வசம் இருந்தது. ஆகவே, தென்னிந்திய நலவுரிமைச் சங்கத்தின் கொள்கைகள், சட்டத்திட்டங்கள் ஆகியவற்றில் ரேடிக்கல் ரிபப்ளிகன் கட்சியின் சாயல் கூடுதலாகவே இருந்தது.

இந்த இடத்தில் பிராமணர்கள் யார்? பிராமணர் அல்லாதார் யார்? என்பதைத் தெரிந்து கொள்வது அவசியம். ஏனெனில் பிராமணர் அல்லாதார் நலன்களை உத்தேசித்து கொள்கைத் திட்டங்களை அறிவிக்க இருக்கிறது தென்னிந்திய நலவுரிமைச் சங்கம்.

இந்து மதத்தின் சமூக ஏணியில் பிராமணர்களே உச்சத்தில் இருப்பவர்கள். உணவு முறையில் தொடங்கி உணவு, பழக்கவழக்கம், நம்பிக்கைகள், குணநலன்கள் எல்லமே மற்றவர்களிடம் இருந்து பெரிய அளவில் வேறுபட்டு இருக்கின்றன. பிராமணர்கள் ஆச்சாரமானவர்கள். மத நம்பிக்கைகளைக் கடைப்பிடிப்பவர்கள்.

நியோகி பிராமணர்கள். தெலுங்கு மொழி வழங்கும் பகுதிகளில் வசிக்கும் பிராமணர்கள். கர்ணம் என்ற கிராமக் கணக்கு அலுவலர்கள் என்ற பதவியை வகிப்பார்கள். தமிழ் வழங்கும் பகுதியில் பிராமணர்கள் இருவகை. ஸ்மார்த்த பிராமணர்கள் (அய்யர்). வைணவ பிராமணர்கள் (அய்யங்கார்) அய்யர்களுக்கு சங்கராச்சாரியார் வழிகாட்டி. அய்யங்கார்களுக்கு ராமனுஜர் வழிகாட்டி. நாட்டுப்புறக் கடவுள்களையோ அல்லது கிராம தேவதைகளையோ பிராமணர்கள் வழிபட மாட்டர்கள். தமிழ் பிராமணர்களைப் பொறுத்தவரை மூன்று பகுதிகளில் அதிகம் வசித்தனர். தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி மற்றும் திருநெல்வேலி.

மலையாளம் மொழி வழங்கும் பகுதியில் இருக்கும் பிராமணர்களுக்கு நம்பூதிரி பிராமணர்கள் என்று பெயர். மலபார் பகுதியில் நம்பூதிரி பிராமணர்கள் அதிகம். பட்டர் பிராமணர்கள் திருவாங்கூர் மற்றும் கொச்சி பகுதியில் அதிகம். ஆங்கிலக் கல்வியில் அதிகம் ஆர்வம் அவர்களுக்கு.

பிராமணர்களுக்கு அதிகம் நிலங்கள் உண்டு. ஆனால் நிலங்களை உழுது, பயிர் செய்யும் வேலையில் அவர்கள் ஈடுபட மாட்டார்கள். ஆகவே, நிலங்களை பிராமணர் அல்லாதவர்களை குறிப்பாக ஆதி திராவிடர்களைக் கொண்டு விவசாயம் செய்வார்கள் அல்லது வேறு யாரிடமேனும் குத்தகைக்கு விட்டு அதற்கான தொகையைப் பணமாக அல்லது தானியங்களாகப் பெற்றுக்கொள்வார்கள்.

பிராமணர் அல்லாதவர்கள்

சென்னை மாகாணத்தில் பிராமணர் அல்லாதவர்களை மூன்று வகைகளில் அடக்கலாம். வர்த்தகர்கள். விவசாயிகள். வினைவலர்கள்.

முதல் பிரிவான வர்த்தகர்களில் செட்டியார்களே அதிகம். உதாரணமாக, நாட்டுக்கோட்டை செட்டியார்கள், பேரி செட்டியார்கள், கோமுட்டி செட்டியார்கள், வாணிய செட்டியார்கள் என்று பல பிரிவினர்.

இரண்டாவது பிரிவான விவசாயிகள் பிரிவில் வேளாளர்கள், ரெட்டிகள், கம்மா நாயுடுகள், பலிஜா நாயுடுகள், மலையாள நாயர்கள் ஆகியோர் அடங்குவர். வேளாளர்களைப் பொறுத்தவரை தொண்டை மண்டல வேளாளர்கள், கார்காத்த வேளாளர்கள், கொங்கு வேளாளர்கள் என்று பல பிரிவுகள்.

மூன்றாவது பிரிவான வினைவலர்கள் பிரிவில் பொற்கொல்லர்கள், கருமார்கள், ஆசாரிகள்.

இந்த மூன்று பிரிவுகளுக்கு அடுத்தபடியாக தாழ்த்தப்பட்ட (தீண்டப்படாத) சாதியினர் வருகிறார்கள். பஞ்சமர்கள் என்றும் இவர்களுக்குப் பெயர் உண்டு. அட்டவனைச் சாதியினர் என்பதுதான் இந்திய அரசு ஆவணப்பெயர். தமிழ்ப் பகுதிகளில் பறையர் என்றும் மலையாளப் பகுதிகளில் புலையர்கள் என்றும் தெலுங்குப் பகுதிகளில் மடிகாஸ் என்றும் பெயர். ஊருக்குள் வசிக்க அவர்களுக்கு அனுமதியில்லை. சேரிப்பகுதிகளில்தான் ஒதுங்கி வசிப்பார்கள். கழிப்பறை கழுவுவது, தெருக்களைக் கூட்டுவதுதான் இவர்களுக்கான பணிகள்.

20 டிசம்பர் 1916 அன்று பிராமணர் அல்லாதார் கொள்கை அறிக்கை (The Non – Brahmin Manifesto December வெளியானது. அறிக்கையில் கையெழுத்து போட்டவர் சங்கத்தின் செயலாளர் பிட்டி. தியாகராய செட்டியார். விரிவான, விளக்கமான அறிக்கை அது.

மாநிலத்தின் மக்கள் தொகை நாலரை கோடி. அதில் நாலு கோடிக்குக் குறையாதவர்கள் பிராமணர் அல்லாத மக்கள். வரி செலுத்துவோரில் பெரும்பான்மையோர் அவர்களே. ஆனாலும் அரசியலைத் தம் வாழ்க்கைக்கு வருவாய் தரும் தொழிலாக உடைய அரசியல் வணிகர்களும் மக்களிடையே செல்வாக்கு இல்லாத தான்தோன்றிகளும் நாட்டின் தலைவர்கள் என்றும் மக்களின் பிரதிநிதிகள் என்றும் கூறிக்கொண்டு நாட்டில் உலவிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களைத் தடுத்து நிறுத்தும் ஆற்றல் கொண்ட எந்த அமைப்பையும் பிராமணர் அல்லாத மக்கள் உருவாக்கவில்லை என்ற ஆதங்கத்தை முதலில் தெரிவித்துக் கொண்டது தென்னிந்திய நலவுரிமைச் சங்கம்.

அரசின் வேலைவாய்ப்புகள் எப்படி பிராமணர்களுக்கு மட்டுமே அதிக அளவில் பங்கீடு செய்யப்படுகிறது என்பது சென்னை எக்ஸிக்யூட்டிவ் கவுன்சில் உறுப்பினராக இருந்த சர் அலெக்சாண்டர் கார்டியூ 1913ல் பப்ளிக் சர்வீஸ் கமிஷனிடம் அளித்த சாட்சியத்தைக் கொண்டு கொள்கை அறிக்கையில் விளக்கப்பட்டது. அவர் கொடுத்த சாட்சியம் இதுதான்.

‘இந்தியன் சிவில் சர்வீஸுக்கென இங்கிலாந்திலும் இந்தியாவிலும் ஒரே சமயத்தில் வைக்கப்படும் தேர்வுகளில் பிராமணர்களே முழுவதும் வெற்றி பெறுகின்றனர். 1892 முதல் 1904 வரை நடைபெற்ற போட்டித் தேர்வுகளில் வெற்றிபெற்ற பதினாறு பேர்களில் பதினைந்து பேர் பிராமணர்கள். சென்னை மாகாணத்தில் உதவி கலெக்டர் 140 இடங்களில் பிராமணர்களுக்கு 77 இடங்கள். பிராமணர் அல்லாதவருக்கு 30 இடங்கள். ஆச்சரியம் என்னவென்றால், போட்டித் தேர்வு வைக்காத ஆண்டுகளிலும்கூட ஆட்களை நியமனம் செய்வதில் பெரும் பகுதி, பிராமணர் கையில்தான் இருந்தது.’

அரசாங்க அலுவலகங்களில் காணப்பட்ட நிலையே நகரவை, மாவட்டக் கழகம் முதலிய நிறுவனங்களிலும் இருந்துவந்தது. பிராமண வாக்காளர்கள் அதிகமாக இருந்த தொகுதிகளில் பிராமணர் அல்லாதார் போட்டியிட்டு வெற்றிபெற முடியாது. பிராமணர் அல்லாத வாக்காளர்கள் எல்லோரும் ஒற்றுமையாக ஒருவரை ஆதரிப்பது கிடையாது. ஆனால், பிராமணர்கள், யார் போட்டியிட்டாலும் பிராமணர்களையே ஆதரிப்பர். இதுதான் அப்போதைய அரசியல் சூழ்நிலை.

1914க்குரிய சென்னைச் சட்டமன்ற மேலவைக்கூட்டத்தில் காலஞ்சென்ற குஞ்ஞராமன் நாயர் (குன்கிராமன் நாயர்) கேட்ட கேள்விக்கு, ‘சென்னைப் பல்கலைக் கழகத்தில் பதிவு செய்யப்பட்ட பட்டதாரிகள் 650 பேரில் பிராமணர்கள் 452 பேர், பிராமணர் அல்லாத இந்துக்கள் 12 பேர், பிற இனத்தினர் 74 பேர்’ என்று பதில் கூறப்பட்டது.

கல்வி கற்பதில் பிராமணர்களுக்கு அதிக வாய்ப்புகள் இருந்ததற்கும் பிராமணர் அல்லாதவர்களுக்கு அந்த வாய்ப்புகள் இல்லாததற்கும் சில காரணங்களைச் சொன்னது அந்த அறிக்கை.

‘பிராமண ஆதிக்கத்துக்குக் காரணம் கூறுபவர்கள், பிராமணர் அல்லாதார்களைவிடக் கல்லூரிப் படிப்பு பெற்ற பிராமணர்கள் அதிகமாக இருப்பதால்தான் அரசாங்க அலுவலகங்களிலும் பிற நிறுவனங்களிலும் அவர்கள் அதிகமாக இருக்கின்றனர் என்பர். இதை யாரும் மறுக்கவில்லை. பழங்காலந்தொட்டே பிராமணர்களால் உருவாக்கப்பட்ட பாரம்பரியம், இந்துக்களிலே உயர்ந்த, புனிதமான சாதி என்று கருதும் தன்மை, நிலையான நம்பிக்கை, இவற்றை நூல்கள் வாயிலாகவும் வாய்மொழியாகவும் சொல்லி சொல்லித் தாங்களே ஏனையோரைவிட உயர்ந்தவர்கள், தாங்களே கடவுளின் நேரடிப் பிரதிநிதிகள் என்ற எண்ணத்தை உருவாக்கிவிட்டனர். இவையெல்லாம் ஏனைய இனத்தாரைவிட அவர்களுக்கு ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்திலும் செல்வாக்கைத் தேடித்தந்தன.’

அதேசமயம் பிராமணர் அல்லாதவர்களும் கணிசமான அளவுக்குக் கல்வியறிவைப் பெற்றிருந்தார்கள் என்பதையும் எடுத்துச் சொன்னது அந்த அறிக்கை.

‘கல்வியைப் பொறுத்தமட்டிலும்கூடப் பிராமணர்கள் தாம் படித்தவர்கள் என்றும் கூறமுடியாது. வெகுகாலத்துக்குப் பின்பு படிக்கத் தொடங்கினாலும் பிராமணர் அல்லாதாரும் அத்துறையில் முன்னேறி வருகின்றனர். ஒவ்வொரு இனத்தினரும் ஒவ்வொரு நிலையில் இருக்கின்றனர். செட்டியார், கோமுட்டி, நாயுடு, நாயர், முதலியார் முதலிய வகுப்பினர் மிக விரைவாக முன்னேறி வருகின்றனர். மிகப் பின்தங்கியவர்கள்கூட மிக அக்கறையுடன் முன்னேறுவதற்காக உழைத்து வருகின்றனர். படிக்க வேண்டும் என்ற எண்ணம் எல்லோருக்கும் ஏற்பட்டுவிட்டது.

‘அறிவுத் துறையில் போட்டி அதிகமாக இருக்கும் இக்காலத்தில் தேர்வுகளில் தேறுவதற்கு ஒரு தனித் திறமை வேண்டும் என்பதை நாம் மறுக்கவில்லை. எங்களால் புரிந்து கொள்ள முடியாதது என்னவெனில், ஆங்கிலம் படித்த சிறுபான்மையான ஒரு வகுப்பினர் மட்டும் அரசாங்க அலுவல்களில் உயர்ந்தது, தாழ்ந்தது ஆகிய எல்லாவற்றையும் ஏகபோகமாக உரிமையாக்கிக் கொண்டு, பெரும்பான்மை வகுப்பினர்களில் படித்த ஒரு சிலருக்குக்கூட இடங்கொடுக்காமல் இருந்துவருவதுதான்.’

பிரிட்டிஷாரின் ஆட்சி பற்றிய தங்களுடைய எண்ணங்களையும் பதிவுசெய்தது கொள்கை அறிக்கை.

‘ஆங்கிலேயர் ஆட்சியின் செல்வாக்கைக் குறைக்கும் எந்தத் திட்டத்தையும் நாங்கள் விரும்பவில்லை. இன்று நாடு இருக்கும் நிலையில் வெவ்வேறு சாதியினர், வகுப்பினர்களுக்கு நீதி கிடைக்கவும் அவர்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தவும் தேசிய ஒருமைப்பாட்டை உண்டாக்கவும் கூடியவர்கள் ஆங்கிலேயர்கள்தான். தவறினால், நாட்டில் தேசபக்தி இன்றி, ஒற்றுமையின்றி, ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டு, சீரழிய நேரிடும். யாதொரு தகுதியுமற்ற அரசியல் அமைப்பைத் தயார் செய்வதைச் சில அரசியல்வாதிகள் பொழுதுபோக்காகக் கொண்டுள்ளனர். அத்தகைய அரசியல் அமைப்பை நாங்கள் விரும்பவில்லை. மக்களிடத்தில் படிப்படியாக ஆட்சியை எப்படி ஒப்படைக்க வேண்டும் என்பதை முடிவுசெய்து, முன்யோசனையுடன், தாராளமாக உரிமைகளைக் கொடுத்து ஆட்சி நடத்த மக்களைத் தகுதியுடையவர்களாக ஆக்கவேண்டும்.

‘இந்தியாவின் உண்மையான நன்மையைக் கருதி, ஆங்கில ஆட்சி முறையைப் போன்று நீதியும் சம உரிமையும் விளங்கும் ஆட்சியே வேண்டுமென்று நாங்கள் விரும்புகிறோம். நாங்கள் ஆங்கில ஆட்சியில் பற்றுடையவர்கள். அவர்களுக்கு மிகவும் கடமைப்பட்டுள்ளோம். அவ்வாட்சியில் பல குறைபாடுகளும் குற்றங்களும் காணப்படினும் அது நேர்மையாகவும் அனுதாபத்துடனும் நடைபெறுகிறது.

‘போரில் வெற்றிகண்டவுடன் ஆங்கில அரசியல்வாதிகளும் பாராளுமன்றமும் இந்திய அரசியல் அமைப்பைப் பற்றிக் கவனிப்பார்கள். அரசியல் உரிமைகள் வேண்டும் என்று கோருவதற்கு இந்தியா உரிமை பெற்றுவிட்டது. அரசியல் அமைப்பு எப்படி இருக்க வேண்டும் என்றால் உண்மையான உரிமைகள் விரிவாக இருக்க வேண்டும். ஒவ்வொரு இனத்தினருக்கும், வகுப்பினருக்கும் அவரவர்களுக்கு நாட்டிலுள்ள செல்வாக்கு, தகுதி, எண்ணிக்கையை மனத்தில்கொண்டு அவரவர்களுக்கு உரிய பொறுப்பைக் கொடுக்க வேண்டும். உள்நாட்டு விவகாரங்களைப் பொறுத்தவரை முழு அதிகாரமும், நிதியைப் பயன்படுத்தும் உரிமையையும் கொடுக்கவேண்டும். சுயமரியாதைக்கு இழிவு இல்லாது, ஆங்கில சாம்ராஜ்ஜியத்துக்கு உட்பட்ட பிற சுதந்தர நாடுகளுக்கு ஒப்பான தகுதியைக் கொடுக்க வேண்டும்.’

அறிக்கையின் முடிவில் பிராமணர் அல்லாதாருக்கு சில அறிவுரைகளும் கோரிக்கைகளும் இடம்பெற்றன.

‘விழிப்படைந்த பிராமணர் அல்லாதார்கள் விரைந்து செயலாற்ற முன்வரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். அவர்களுடைய பிற்காலம் அவர்கள் கையில்தான் இருக்கின்றது. அவர்கள் செய்யவேண்டிய காரியம் மிகப்பெரிது. அத்துடன் மிக அவசரமானதுமாகும். முதல் வேலையாக, சிறுவர் சிறுமிகளை இன்னும் அதிகமான அளவில் நாம் படிக்கவைக்க வேண்டும். பல இடங்களில் சங்கங்களைத் தோற்றுவித்து, பிராமணர் அல்லாதாருக்கு எந்தெந்த சலுகைகள் உண்டு என்பதை எடுத்துக்கூறி, அதிகமானவர்களைப் படிக்கச் செய்ய வேண்டும். நிதி திரட்டி, ஏழைகள் படிப்பதற்கு உதவி செய்ய வேண்டும்.

‘கல்வித்துறையில் நாம் முன்னரே கவனம் செலுத்தத் தவறிவிட்டோம். அதனால் இப்பொழுது நாம் அதில் தீவிரமாக ஈடுபடவேண்டும். கல்வியில் கவனம் செலுத்துவதுடன் சமுதாய முன்னேற்றம், அரசியல் முன்னேற்றம் முதலியவற்றுக்கும் நாம் தீவிரமாக உழைக்கவேண்டும். அதற்கான பல பத்திரிகைகளைத் தொடங்கி, சங்கங்களும் ஆங்காங்கே அமைக்க வேண்டும். உரிமைகளுக்காகப் போராட வேண்டும். இவைகளைச் செய்யாது நாம் இதுவரை வாளாவிருந்தோம். அதை சில சுயநலவாதிகள் தங்கள் நலத்துக்குப் பயன்படுத்திக் கொண்டனர்.

‘பிராமணர் அல்லாத மக்கள் முதலில் தங்களுக்குத் தாங்களே உதவி செய்துகொள்ள முன்வரவேண்டும். கல்வி, சமுதாயம், அரசியல், பொருளாதாரம் என்று பல துறைகளில் முன்னேற்றம் அடைவதற்குத் தேவையான அனைத்து செயல்களையும் மேற்கொள்வது அவசியம்.

‘இன்னும் சிறிது காலத்துக்காவது ஒவ்வொரு வகுப்பாரும் தங்களுடைய வளர்ச்சியை முதன்மையாகக் கருதவேண்டும். பிற வகுப்பினர்களுடன் சேர்ந்து பணியாற்றும்போது, தான் தாழ்ந்தவன் என்று கருதாது, சுயமரியாதையுடன், சம உரிமை பெற்றவன் என்று எண்ணவேண்டும். சுயமரியாதையுடன் சமநிலையில் இருந்து மற்றவர்களுடன் பணியாற்றுவதையே ஒவ்வொருவரும் குறிக்கோளாகக் கொள்ளவேண்டும்.’

Non Brahmin Manifesto என்கிற பிராமணர் அல்லாதார் கொள்கை விளக்க அறிக்கை வெளியானது. பிராமணர்கள் மத்தியில் பதற்றம் தொற்றிக் கொண்டது. ‘பிராமணர் அல்லாதார் கொள்கை விளக்க அறிக்கையை மிகவும் துயரத்துடனும் ஆச்சரியத்துடனும் நாங்கள் ஆய்வு செய்தோம். அந்த அறிக்கை தேசிய நலனுக்கு ஆபத்து விளைவிப்பது. இதன் காரணமாக, தேசிய முன்னேற்றத்தின் எதிரிகளுக்குத் துணைபோகும் நிலை உருவாகும்.’ என்றது, தி ஹிந்து பத்திரிகை.

தென்னிந்திய நலவுரிமைச் சங்கம் ஒரு விஷமத்தனமான இயக்கம். அந்தச் சங்கத்தின் நிறுவனர்களை இந்த தேசத்தின் நண்பர்களாகக் கருதமுடியாது என்பது டாக்டர் அன்னிபெசண்ட் நடத்திவந்த நியூ இந்தியா பத்திரிகையின் விமரிசனம்.

வெறுமனே எழுத்து அளவில்தான் தென்னிந்திய நலவுரிமைச் சங்கம் உருவாகியிருந்தது. நேரடியாகக் களத்தில் இறங்கவில்லை. உறுப்பினர் சேர்க்கும் படலம் கூட இனிமேல்தான் முறைப்படி தொடங்கப்பட வேண்டும். அதற்கு முன்பாகவே கண்டனக் கணைகள். பழுப்பதற்கு முன்பே கல்லடிகள், பழுத்துவிடும் என்பதால்!
நன்றி:தட்ஸ்தமிழ்