திராவிட இயக்க வரலாறு-அத்தியாயம் 3: தென்னிந்திய நலவுரிமைச் சங்கம்

அயர்லாந்து. பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக சுதந்தர வேட்கையுடன் போராடிய வீரர்கள் நிறைந்த பூமி. அங்கிருந்து 1893ல் இந்தியாவுக்கு வந்தவர் டாக்டர் அன்னிபெசன்ட். கடவுள் மறுப்புக் கொள்கையில் ஆர்வம் உடையவர். வசீகரிக்கும் பேச்சாளர். தேசிய மதச்சார்பற்ற சங்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு சொற்பொழிவுகள் நடத்தத் தொடங்கினர். பெண்ணுரிமை, குடும்பக் கட்டுப்பாடு போன்ற விஷயங்கள் குறித்து மக்களுக்கு அவர் கொடுத்த ஆலோசனைகள் பலரது கவனத்தையும் கவர்ந்தன. பிறகு ஃபோபியன் சொசைட்டி என்கிற சோஷலிச இயக்கத்தில் இணைந்தார்.

திடீரென ஞான மார்க்கத்தின்மீது அவருக்கு ஆர்வம் ஏற்பட்டது. தியாசாபிகல் சொசைட்டி என்கிற பிரம்ம ஞான சபையின் உறுப்பினராகப் பணியாற்றத் தொடங்கினார். உலக சகோதரத்துவம்தான் அந்த இயக்கத்தின் உயிர்நாடிக் கொள்கை. தொண்டராகப் பணியைத் தொடங்கிய டாக்டர் அன்னிபெசன்ட், ஒரு நாட்டில் இரண்டு தேசிய இனங்கள் இருக்கமுடியாது என்ற கருத்தை முன்வைத்தார். ஒரு தேசம் ஒரு தேசிய இனத்துக்கு மட்டுமே சொந்தமாக இருக்க முடியும். ஆகவே, இந்தியாவில் இந்து முஸ்லிம் என்ற இரண்டு தேசிய இனங்களுக்கு வாய்ப்பில்லை என்றார் அன்னிபெசன்ட். இதுதான் இந்துக்களை, குறிப்பாக பிராமணர்களை அன்னிபெசண்ட் பக்கம் திருப்பியது.

1907ல் பிரம்ம ஞான சபையின் தலைமைப் பதவியை ஏற்றுக்கொண்டார். அந்தச் சங்கத்தின் தலைமையகம் சென்னை அடையாறில் இருந்ததால் அடிக்கடி சென்னை வரத் தொடங்கினார். சென்னையிலிருந்து இந்தியாவின் பல இடங்களுக்கும் சுற்றுப்பயணம் செய்தார்.

இந்து மதத்தின் பெருமைகள்தான் அவருடைய மேடைப்பொருள். இந்தியாவின் ஆன்மிகப் பண்பாடு, மேற்கத்திய ஆன்மிகப் பண்பாட்டைக் காட்டிலும் பல மடங்கு உயர்ந்தது என்று பிரசாரம் செய்தார். இந்துக்களின் புனித நூலாகக் கருதப்படும் பகவத் கீதையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தது பல இந்துக்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

இந்து மதத்தைப் புகழ்ந்து பேசுவதால் பிராமணர்கள் பலருக்கும் அவர் மீது ஈர்ப்பு ஏற்பட்டது. அவருடைய சொற்பொழிவு நிகழ்ச்சிகளில் அதிக அளவில் கலந்துகொள்ளத் தொடங்கினர்.

பிராமணர்களுக்குக் இந்திய தேசிய காங்கிரஸுடன் நெருக்கமான தொடர்பு உண்டு. அதன் அடிப்படையில் அன்னிபெசன்ட், பிராமணர்கள், காங்கிரஸ் என்ற மூன்று அமைப்புகளும் நெருக்கமாக இணைந்துப் பணியாற்றத் தொடங்கின. மெல்ல மெல்ல அன்னிபெசன்டுக்கு அரசியல் ஆர்வம் தொற்றிக்கொண்டது.

1914ல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் காங்கிரஸ் மகாநாடுகளில் கலந்துகொண்டார். காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் மிதவாதிகள், தீவிரவாதிகள் என்ற இரண்டு கூறுகளாகப் பிரிந்து செயல்பட்டுக் கொண்டிருந்த காலகட்டம் அது. கட்சியில் சேர்ந்ததும் மெட்ராஸ் ஸ்டேண்டர்டு என்ற பெயரில் வெளியான பத்திரிகையை விலை கொடுத்து வாங்கினார். அதற்கு 'நியூ இந்தியா" என்று பெயர் வைத்து வெளியிட்டார். வழக்கம்போல இந்து மதப் பெருமைகளைப் பற்றிப் பேசிய அவரது பத்திரிகை அரசியல் கருத்துகளுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்தது.

ஹோம் ரூல்

முதல் உலகப்போர் உருவாக்கியிருக்கும் பதற்றம் நிறைந்த சூழலில் இந்தியாவின் உதவி, இந்தியர்களின் உதவி இங்கிலாந்துக்குத் தேவை. ஆகவே, கிடைத்த தருணத்தை இந்தியாவுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். சுயாட்சி கோரிக்கையை வலியுறுத்த வேண்டும் என்றார் அன்னிபெசன்ட். சுயாட்சி குறித்து தொடர்ந்து பிரசாரம் செய்தார். அத்துடன் மிதவாதிகளையும் தீவிரவாதிகளையும் இணைத்து வைக்கும் முயற்சியிலும் ஈடுபட்டிருந்தார். குறிப்பாக, பால கங்காதர திலகரின் ஆதரவு அன்னிபெசன்ட்டுக்கு இருந்தது.

1915ல் லக்னோவில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தின் திருந்திய அமைப்பில் இந்தியா சம அந்தஸ்துடைய சுயாட்சி பெறவேண்டும் என்பதுதான் அந்தத் தீர்மானம். கடந்த ஆண்டு நடந்த பம்பாய் மாநாட்டில் அன்னிபெசன்ட் கொண்டுவந்த தீர்மானம்தான். அப்போது நிராகரிக்கப்பட்டு, பிறகு விவாதிக்கப்பட்டு, தற்போது ஏற்கப்பட்டிருந்தது.

அதன் தொடர்ச்சியாக 12 செப்டெம்பர் 1916 அன்று ஹோம் ரூல் என்ற புதிய இயக்கத்தைத் தொடங்கினார் அன்னிபெசன்ட். உண்மையில் காங்கிரஸ் கட்சியையே ஹோம் ரூல் இயக்கமாக மாற்றுங்கள் என்று கோரிக்கை விடுத்தார் அன்னிபெசன்ட். அது ஏற்கப்படாததால் தனது தலைமையில் புதிய இயக்கத்தைத் தொடங்கிவிட்டார். காங்கிரஸ் கட்சிக்கு மாற்றாக அல்லாமல், அதன் ஆதரவுடன் இயங்கும் வகையில் உருவான இயக்கம் அது. பிரிட்டிஷ் ஆட்சிக்கு விசுவாசம் கொண்ட சுயாட்சி பெற்ற சுதந்தர இந்தியா என்ற கோரிக்கையை முன்வைத்தது அவரது ஹோம் ரூல் இயக்கம்.

காங்கிரஸ் கட்சியுடன் ஒப்புதலுடன் தொடங்கப்பட்ட இந்த இயக்கத்தில் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்கள் பலரும் இணைந்து கொண்டனர். நாடு தழுவிய அளவில் ஹோம் ரூல் இயக்கத்துக்கான கிளைகள் தொடங்கப்பட்டன. இதே நோக்கத்துடன் மராட்டியப் பகுதிகளில் பால கங்காதரத் திலகர் ஹோம் ரூல் லீக் என்ற இயக்கத்தை முன்கூட்டியே தொடங்கியிருந்தார். இரண்டு ஹோம் ரூல் இயக்கங்களால் ஏற்படும் குழப்பங்களைத் தவிர்க்க மராட்டியப் பகுதிகளில் மட்டும் தன்னுடைய இயக்கம் செயல்படும் என்றும் இந்தியாவின் ஏனைய பகுதிகள் அன்னிபெசண்டின் ஹோம் ரூல் இயக்கம் செயல்படும் என்றும் அறிவித்தார் திலகர்.

ஹோம் ரூல் இயக்கத்தின் தலைவராக டாக்டர் அன்னிபெசண்ட். ஒருங்கிணைப்புச் செயலாளர் அருண்டேல். பொதுச்செயலாளர் பொறுப்புக்கு சி.பி. ராமசாமி அய்யர். பொருளாளர் பொறுப்புக்கு சி.பி. வாடியா. இவர்கள் தவிர மோதிலால் நேரு, சி.ஆர். தாஸ், தேஜ்பகதூர் சாப்ரு, எம்.ஆர். ஜெயகர், முகமது அலி ஜின்னா போன்ற முக்கியத் தலைவர்கள் ஹோம் ரூல் இயக்கத்துக்கு ஆதரவளித்தனர்.

ஏற்கெனவே பிரம்ம ஞான சபையுடன் தொடர்பு கொண்டவர் என்பதால் அவருடன் தொடர்பில் இருந்த பிராமணர்கள் ஹோம் ரூல் இயக்கத்தின் மீது ஆர்வம் செலுத்தத் தொடங்கினர். காங்கிரஸ் கட்சியில் இருந்து ஒதுங்கியும் ஒதுக்கப்பட்டும் இருந்த தீவிரவாத சிந்தனை கொண்ட தலைவர்கள் அன்னிபெசன்டின் ஹோம் ரூல் இயக்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். குறிப்பாக, மாணவர்கள். அந்த இயக்கத்துக்கு மக்கள் மத்தியில் நல்ல எழுச்சியும் விளம்பரமும் கிடைத்தது.

அன்னிபெசண்டின் வார்த்தைகளில் அரசுக்கு எதிரான கருத்துகள் வெளிப்படும். எழுத்திலும் அப்படியே. விளைவு, அவருடைய பத்திரிகைக்கு அடிக்கடி நெருக்கடிகள் வந்தன. ஜாமீன் தொகை கட்டவேண்டும் என்று அரசாங்கம் அவ்வப்போது உத்தரவிட்டது. தொகையைக் கட்டிய மறுநாளே அரசை எதிர்த்து மீண்டும் கட்டுரை எழுதுவார் அன்னிபெசண்ட். மீண்டும் ஜாமீன் தொகை கட்டுங்கள் என்று உத்தரவு வரும். ஜாமீன் கட்டுவதும் பிறகு எதிர்த்து எழுதுவதும் அன்றாட நடவடிக்கையாக மாறியிருந்தன. அவருடைய சுற்றுப்பயணங்களுக்குத் தடை விதித்தது அரசு.

ஆதரவு, எதிர்ப்பு என்று இரண்டு வகைகளிலும் ஹோம் ரூல் இயக்கம், அன்னிபெசன்ட் பற்றிய செய்திகள் பத்திரிகைகளில் தொடர்ச்சியாக இடம்பெற்றன. நாளுக்கு நாள் பிரபலமாகிக் கொண்டிருந்தார் அன்னிபெசண்ட். இனியும் அவரை வெளியே விட்டுவைப்பது நல்லதல்ல என்ற முடிவுக்கு வந்தது பிரிட்டிஷ் அரசு. கைது செய்யப்பட்டார் அன்னிபெசண்ட். அதுவும் அவருக்கு விளம்பரத்தையே கொடுத்தது.

சிறையில் இருந்து வெளிவந்த பிறகு மீண்டும் வேத பாராயணம் செய்பவர்களும் பஜனை கோஷ்டி நடத்துபவர்களும் அன்னிபெசண்டைப் பின்தொடர்ந்தனர். அடையாறு வாசியான டாக்டர் அன்னிபெசண்ட் அம்மையாருக்கு மயிலாப்பூர் வழக்கறிஞர்களின் ஆதரவு இருந்தது. தங்கள் தலைவரான வி. கிருஷ்ணசாமி அய்யர் மரணம் அடைந்துவிட்டதால் மயிலாப்பூர் வழக்கறிஞர்களுக்குக் கொழுகொம்பாகப் பயன்பட்டார் அன்னிபெசண்ட். சர். சி.பி. ராமசாமி அய்யரும் டாக்டர் பெசண்டைப் பின்பற்ற முன்வந்தார். டாக்டர் பெசன்டின் பங்களிப்பு காரணமாக மயிலாப்பூர் வக்கீல்களின் மிதவாதப் போக்கிலேயும் சிறிது மாறுதல் ஏற்பட்டது என்று தன்னுடைய விடுதலைப் போரில் தமிழகம் என்ற புத்தகத்தில் எழுதியிருக்கிறார் ம.பொ.சிவஞானம்.

தென்னிந்திய நலவுரிமைச் சங்கம்:

பிராமணர்கள் மீண்டும் அணி திரள்கிறார்கள். அன்னிபெசண்ட் என்ற புதிய தலைவர் வேறு அவர்களுக்குக் கிடைத்திருக்கிறார். நடப்பதை எல்லாம் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்தார் டாக்டர் சி. நடேச முதலியார். கவனித்ததோடு நிறுத்திக்கொள்ளவில்லை. யோசிக்கவும் தொடங்கினார். பிராமணர்களின் அதிரடி தாக்குதல் எப்போது வேண்டுமானாலும் தொடங்கலாம். அதற்கு முன்னால் நாம் தயாராகிவிடவேண்டும். அப்போது அவருக்கு நினைவுக்கு வந்த பெயர்கள் இரண்டு. டி.எம். நாயர் மற்றும் பிட்டி. தியாகராய செட்டியார்.

இருவருமே தலைவர்கள். இருவருமே செயல்வீரர்கள். எனில், ஏன் அவர்களை இணைத்துப் புதிய பாதையைத் திறக்கக்கூடாது. சக்தி மிக்க கைகள் இணைவது நல்லதில்தான் முடியும். நினைத்த மாத்திரத்தில் இருவரையும் சந்தித்துப் பேசினார் நடேச முதலியார்.

20 நவம்பர் 1916 அன்று சென்னை வேப்பேரியில் இருக்கும் வழக்கறிஞர் டி. எத்திராஜுலு முதலியார் இல்லத்தில் பிராமணர் அல்லாத தலைவர்கள் மற்றும் பிரமுகர்களின் அமைப்புக் கூட்டம் ஒன்று கூடியது. சென்னை மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தலைவர்களும் பிரமுகர்களும் ஆர்வலர்களும் கலந்துகொண்டனர்.

திவான் பகதூர் பிட்டி. தியாகராய செட்டியார், டாக்டர் டி.எம். நாயர், திவான் பகதூர் பி. ராஜரத்தின முதலியார், டாக்டர் சி. நடேச முதலியார், திவான் பகதூர் பி.எம். சிவஞான முதலியார், திவான் பகதூர் பி. ராமராய நிங்கார், திவான் பகதூர் எம்.ஜி. ஆரோக்கியசாமிப் பிள்ளை, திவான் பகதூர் ஜி. நாராயணசாமி ரெட்டி, ராவ் பகதூர் ஓ. தணிகாசலம் செட்டியார், ராவ் பகதூர் எம்.சி. ராஜா, டாக்டர் முகமது உஸ்மான் சாகிப், ஜே.எம். நல்லுசாமிப் பிள்ளை, ராவ் பகதூர் கே. வேங்கட்டரெட்டி நாயுடு (கே.வி. ரெட்டி நாயுடு), ராவ் பகதூர் ஏ.பி. பாத்ரோ, டி. எத்திராஜுலு முதலியார், ஓ. கந்தசாமி செட்டியார், ஜே.என். ராமநாதன், கான் பகதூர் ஏ.கே.ஜி. அகமது தம்பி மரைக்காயர், அலர்மேலு மங்கைத் தாயாரம்மாள், ஏ. ராமசாமி முதலியார், திவான் பகதூர் கருணாகர மேனன், டி. வரதராஜுலு நாயுடு, எல்.கே. துளசிராம், கே. அப்பாராவ் நாயுடுகாரு, எஸ். முத்தையா முதலியார், மூப்பில் நாயர் உள்ளிட்ட தலைவர்கள் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் முக்கியமானவர்கள்.

பிராமணர் அல்லாதாரின் பிரச்சனைகள் குறித்த பேச்சுகள் தொடங்கின. பிறகு விவாதங்கள் நடந்தன. இறுதியில் ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டன. பிராமணர் அல்லாத மக்களின் நலன்களை வலியுறுத்தவேண்டும். அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும். இதுதான் அடிப்படை. எனில், பத்திரிகைகள் தொடங்குவதுதான் முதல்வேலை என்று முடிவு செய்யப்பட்டது.

தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் என்ற மூன்று மொழிகளில் மூன்று பத்திரிகைகளைத் தொடங்கலாம். ஆனால் மூன்றையும் பொதுவான நிர்வாக அமைப்புக்குள் கொண்டு வருவதுதான் சரியாக இருக்கும் என்ற கருத்து எழுந்தது. தென்னிந்திய மக்கள் சங்கம் (South Indian People's Association Ltd.,) என்ற கூட்டுப் பங்கு நிறுவனம் தொடங்கப்பட்டது. மூன்று பத்திரிகைகளையும் இந்தச் சங்கம் நிர்வகிக்கும் என்று தீர்மானிக்கப்பட்டது.

பத்திரிகை தொடங்கலாம் சரி. இயக்கம்? அதுதான் அடுத்த இலக்கு. பிராமணர் அல்லாத மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் ஒரு புதிய இயக்கத்தைத் தொடங்கியே தீரவேண்டும் என்ற தங்களுடைய விருப்பத்தைப் பலரும் பதிவு செய்தனர். ஏற்கெனவே சென்னை திராவிடர் சங்கம் இயங்கிவருகிறதே... அதையே தொடரலாமே?.

உண்மைதான். ஆனால் இன்று நிலைமை மாறியிருக்கிறது. எதிரிகள் அதிகரித்துள்ளனர். அவர்களுக்குத் தலைமை தாங்கப் புதியவர் ஒருவர் வந்திருக்கிறார். தவிரவும், நம்முடைய கூட்டத்துக்குப் புதிய பிரதிநிதிகள் பலரும் வந்திருக்கிறார்கள். புதிய சிந்தனைகள் வந்திருக்கின்றன. புதிய எண்ணங்கள் வந்திருக்கின்றன. ஆகவே, அனைத்தையும் ஒருங்கிணைக்கும் வகையில் புதிய இயக்கத்தைத் தொடங்குவதுதான் சரியாக இருக்கும். ஏற்றுக்கொண்டனர் தலைவர்கள்.

தென்னிந்திய நலவுரிமைச் சங்கம் (South Indian Liberal Federation) என்ற அரசியல் இயக்கம் தொடங்கப்பட்டது. புதிய இயக்கத்துக்கான கொள்கை விளக்க அறிக்கை விரைவில் வெளியிட வேண்டும் என்று அந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

புதிய இயக்கத்தின் கூட்டு நிறுவனர்களாக டி.எம். நாயரும் பிட்டி தியாகராய செட்டியாரும் இருந்தனர். தலைவராக ராஜரத்ன முதலியார், துணைத் தலைவர்களாக ராமராய நிங்கார், பிட்டி. தியாகராய செட்டியார், கே.ஜி. அகமது தம்பி மரைக்காயர், எம்.ஜி. ஆரோக்கியசாமி பிள்ளை ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். பி.எம். சிவஞான முதலியார், பி. நாராயணசாமி முதலியார், முகமது உஸ்மான், எம். கோவிந்தராஜுலு நாயுடு ஆகியோர் செயலாளர்களாகவும் ஜி. நாராயணசாமி செட்டியார் பொருளாளராகவும் செயல்பட்டனர். செயற்குழு உறுப்பினர்களுள் ஒருவராக டி.எம். நாயர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கட்சியின் அமைப்பு பொதுவாகத் தென்னிந்திய மாநிலங்கள் அனைத்தும் ஒன்றுபட்டு இணைந்து செயலாற்ற வேண்டுமென்ற குறிக்கோளைக் கொண்டதாக இருந்தது என்று பதிவு செய்திருக்கிறார் பி.டி. ராஜன்.

நன்றி:தட்ஸ்தமிழ்