""
சுவாமி தயானந்த சரஸ்வதி பேசியதாவது: "நம்மால் பிரச்னைகளைத் தீர்க்க முடியவில்லை; நம்மால் என்ன செய்ய முடியும்...' என, யாரும் வருத்தப்படத் தேவையில்லை. கிருஷ்ணர், ராமர் போன்ற அவதாரங்களால் கூட, பிரச்னைகளை முற்றிலும் துடைத்தெறிய இயலவில்லை. குறிப்பிட்ட காலத்தில் பிரச்னைகள் தானாகவே தீர்ந்துவிடும். இந்து தர்மங்கள், பத்மநாப சுவாமி கோவிலின் செல்வங்களைப் போல் அளவிட முடியாதவை; தோண்டத் தோண்ட நம்மை ஆச்சரியப்படுத்தும் ஏராளமான செய்திகள் இதில் உண்டு. வீடு, லட்சுமியின் அம்சம்; அதன் முன் இடும் கோலமும், லட்சுமியின் அம்சம்; இப்படி நம்முடைய கலாசாரத்தில், ஒவ்வொரு பொருளும் லட்சுமின் அம்சமாகவே பார்க்கப்படுகிறது.
ரங்கோலி எனப்படும் கோலமிடும் பழக்கம், உலகின் எந்த மூலையிலும் இல்லை. அதிகாலையில், சாலைகளில் கோலமிட்ட வீடு,கோலமிடாத வீடு இரண்டையும் கடக்க நேர்கையில் ஏற்படும் உணர்வுகள் வேறு வேறானவை. கோலம் நமது கலாசாரத்தின் மிகப் பெரிய அடையாளம். இதை அரிசி மாவால் தான் போட வேண்டும் என்பதும், அதன் மூலம் சிறு பறவைகள், எறும்புகள் போன்றவற்றுக்கு உணவளிக்கும் வாழ்க்கை முறையும், இந்த கலாசாரத்தின் அங்கமே. கோலமிடுவதை, யாரும் கற்றுக் கொடுத்து, எவரும் கற்றுக் கொள்வதில்லை. இது வழிவழியாக பார்த்தே கற்றுக் கொள்கிற ஒன்று. இமயம் முதல் குமரி வரை வாழும் நம் மக்கள் பின்பற்றுகிற கலாசார பழக்க வழக்கங்கள் அனைத்துமே, இப்படி கற்றுக் கொள்ளப்பட்டவை தான். இவை, எங்கு, எப்படி, யாரால் விதைக்கப்பட்டதென்று தெரியாமல், தொன்று தொட்டு நம் வாழ்வியலோடு இணைந்து பயணிக்கின்றன. வடிவங்களில் சில மாற்றங்கள் இருந்தாலும், இதன் மைய அமைப்பு மாறுவதில்லை. இன்றைக்கு உலகம் முழுக்க வாழும், "மாடர்ன் மக்கள்' அனைவரும், பழமையான பொருட்களை ஆர்வத்துடன் சேகரித்து பாதுகாக்கின்றனர். இந்த தேசம், தொன்மையின் அடையாளம்; காலங்களைக் கடந்து வாழுகிற நமது கலாசாரமும் தொன்மையானது. ஒட்டுமொத்த இந்திய தேசமே, வாழும் அருங்காட்சியகமாக காட்சி தருகிறது; இதை நாம் பாதுகாக்க வேண்டாமா?
இந்த மண்ணும், மலையும், நதிகளும் ஆசிர்வதிக்கப்பட்டவை. நம் அன்னை தேசம், சொர்க்கத்தை விட புனிதமானது. பணம், வீடு, திருமணம் உள்ளிட்ட அனைத்தையுமே, திருமகளின் மறு உருவமாகப் பார்க்கக் கற்றுக் கொடுத்தது, இந்த தேசத்தின் கலாசாரம் தான். இன்றைக்கு இன்டர்நெட்டில், திருமணம் பற்றிய ஏராளமான, "ஜோக்'குகள் காணக் கிடைக்கின்றன. நமக்கு திருமணம் என்பது வெறும் விளையாட்டல்ல; அது யோகா; கர்ம யோகா. இதற்கு இணையான, மாற்று என்பதே இல்லாத ஒரு வாழ்வியல் கட்டமைப்பு.
இந்த தேசத்தின் அன்னை போன்ற கலாசாரத்தை, இந்த கலாசாரத்தின் ஆணி வேராக இருக்கக் கூடிய மதத்தை, இந்த மதத்தின் ஊற்றுக் கண்ணாக விளங்குகிற ஆன்ம ஞானத்தை, நாம் உணர வேண்டும். இந்து தர்மம் என்பது பெரிய மரம்; பல கிளைகளும், விழுதுகளும் விட்டு வளர்ந்து நிற்கிற இதன் பூக்களில், பல்வேறு வண்ணங்கள் இருக்கலாம்; கிளைகள் பலவாய் இருக்கலாம். ஆனால், வேதம் என்னும் ஒற்றை வேரால் உயிர்த்திருக்கிறது, இந்த மரம். இதைப் பாதுகாப்பது நம்முடைய கடமை. இவ்வாறு, சுவாமி தயானந்த சரஸ்வதி பேசினார்.