கல்வி உதவித் தொகை – ஏன் இந்த பாரபட்சம் ? – பொன். ராதாகிருஷ்ணன்


சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த ஏழை மாணவர்களுக்கு படிப்பு, உணவு, உறைவிடத்திற்காக உதவித் தொகை வழங்கும் மத்திய அரசு, அதேபோல் ஹிந்து மதத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கும் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறார் பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன்.


பொன். ராதாகிருஷ்ணன்

இந்திய நாட்டின் இணையற்ற மாமனிதர் முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம், நமது நாட்டின் மூலை முடுக்கெல்லாம் சுற்றி பள்ளி, கல்லூரி மாணவர்களைச் சந்தித்து ‘நன்கு படியுங்கள்; நம் நாட்டிற்கும், உம் வீட்டிற்கும் பயன் உள்ளவராக வாருங்கள். அதை அடையும் வகையில் கனவு காணுங்கள்’ என்று ஊக்கப்படுத்தி வருகிறார். ஔவை பாட்டி துவங்கி டாக்டர் அப்துல்கலாம் வரை, பல பெரியோர்கள் ‘படி படி’ என்று மாணவர்களை உற்சாகமூட்டினர். ஆனால், மத்தியில் ஆண்டு கொண்டிருக்கும் காங்கிரஸ் – தி.மு.க.வின் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம், படிக்கின்ற குழந்தைகள் மத்தியிலும் கூட பாரபட்சம் காட்டி வருவது மிகவும் வருத்தத்திற்குரியது.

பிரதமர் மன்மோகன் சிங், சிறுபான்மையோர் நலனுக்கான 15 அம்சத் திட்டத்தை 2006–ஜூன் மாதம் அறிவித்தார். இத்திட்டத்தின் அடிப்படையில் சிறுபான்மை குழந்தைகளின் கல்வி முன்னேற்றத்திற்காகவும், அவர்களின் பெற்றோரின் பணச் சுமையைக் குறைப்பதற்காகவும், கல்வி உதவித் தொகை கொடுக்க மத்திய காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி அரசு முடிவு செய்தது.

இத்திட்டத்தின் அடிப்படையில் கிறிஸ்தவர், முஸ்லிம், சீக்கியர், பௌத்தர் மற்றும் பார்ஸி மதத்தைச் சார்ந்தவர்கள் கல்வி உதவித் தொகை பெறும் தகுதி பெறுகின்றனர். இவர்களில் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கடைசி மூன்று மதத்தவரும் பெயரளவிற்குக்கூட இல்லை.

நமது நாட்டின் அரசு உதவி பெறும் தனியார் கல்வி நிறுவனங்களில் பெரும்பாலானவை, கிறிஸ்தவ மதத்தவரால் நடத்தப்படுபவை என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த குழந்தைகள் கல்வியில் பின் தங்கி உள்ளனர் என்பதை, அந்த மதத்தைச் சேர்ந்தவர்களே ஒப்புக் கொள்ள மாட்டார்கள். இருந்தாலும் அந்த மதத்திலும் ஏழைக் குழந்தைகள் இருக்கின்றனர் என்பதை ஏற்கத்தான் வேண்டும். அவர்களுடைய கல்விக்காகவும் அரசு உதவத்தான் வேண்டும்.

முஸ்லிம் குழந்தைகள் கல்வியில் பின்தங்கி உள்ளனர் என்று காங்கிரஸ் அரசு கூறுகிறது. இக்குழந்தைகள் கல்வியில் பின்தங்கி நிற்க யார் காரணம்? சுதந்திரம் பெற்று 63 ஆண்டுகள் ஆகின்றன. அதில் 50 ஆண்டுகளுக்கு மேல் நாட்டை ஆண்டவர்கள் காங்கிரஸ் கட்சியினர்தான். முஸ்லிம் குழந்தைகள் மட்டுமல்லாமல் மற்ற குழந்தைகளும் பயிலாமல் போனார்கள் என்றால், அதற்கு முழு காரணம் காங்கிரஸ் கட்சியின் ஆட்சிதான். எனவே காங்கிரஸ், தான் செய்த தவறை திருத்தும் வகையில் முஸ்லிம் மதத்தைச் சார்ந்த குழந்தைகளுக்கும், கல்வி உதவிப் பணம் கொடுக்கத்தான் வேண்டும்.

அதே நேரம் ஹிந்து மதத்தைச் சார்ந்த ஏழைக் குழந்தைகள் அனைவரும் பணச் சிரமம் இன்றி படிக்கிறார்களா? மலையிலும் காடுகளிலும் வாழும் மலைவாழ் ஏழை ஹிந்து குழந்தைகளும், தாழ்த்தப்பட்ட தலித் சமுதாயத்தைச் சார்ந்த ஏழை ஹிந்து குழந்தைகளும், பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட ஜாதிகளைச் சார்ந்த ஏழை ஹிந்து குழந்தைகளும், மற்ற ஜாதி ஏழை ஹிந்து குழந்தைகளும் கல்வி கற்க அவர்களது பெற்றோர் பணத்தை மூட்டை கட்டி தயாராக வைத்துள்ளார்களா? படிக்கப் பணம் இல்லாத காரணத்தால் ஏழை ஹிந்து குழந்தைகள், தங்கள் படிப்பை பாதியில் நிறுத்தும் அவலம் காங்கிரஸ், தி.மு.க. அரசுகளுக்குத் தெரியாமல் உள்ளதா? 
அரசாங்கத்தின் கணக்குப்படி 1–ஆம் வகுப்பு முதல் 5–ஆம் வகுப்பு வரை படிக்கின்ற மாணவர்களில் 25 சதவிகிதம் பேர் படிக்க வசதி இல்லாததால், தங்கள் படிப்பை பாதியில் நிறுத்துகின்றனர். 6 –ஆம் வகுப்பு முதல் 10–ஆம் வகுப்பு வரை படிக்கின்ற மாணவர்களில் 44 சதவிகிதம் பேர் படிக்க வசதி இல்லாத காரணத்தால், தங்கள் படிப்பை பாதியில் விடுகின்றனர். இந்த கணக்கில் வரும் 25 சதவிகிதம் மற்றும் 44 சதவிகிதக் குழந்தைகளும் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர்களா? பெரும்பான்மை ஹிந்து குழந்தைகள் இதில் ஒருவர் கூட இல்லையா?

2007–ஆம் ஆண்டு முதல் கிறிஸ்தவ, முஸ்லிம் சிறுபான்மை மாணவர்களின் படிப்பு, உணவு மற்றும் உறைவிடத்திற்காக அரசாங்கம் பணம் கொடுத்து வருகிறது. மத்திய காங்கிரஸ் தி.மு.க. கூட்டணி அரசின் இந்தத் திட்டத்தின்படி, ஒன்றாம் வகுப்பு படிக்கும் குழந்தையில் இருந்து ஆராய்ச்சி படிப்பு படிக்கும் மாணவர் வரை, ஆண்டுக்கு ரூ.1000 முதல் ரூ.2.5 லட்சம் வரை பெறுகிறார்கள்.

இதைப் பெறுவதற்கான தகுதி: 1) அந்தக் குழந்தை கட்டாயமாக கிறிஸ்தவ, முஸ்லிம், சிறுபான்மை மதத்தவராக இருக்க வேண்டும். 2) தனது முந்தைய இறுதித் தேர்வில் 50 சதவிகித மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். 3) 1 முதல் 12–ஆம் வகுப்பு வரையிலும் படிக்கும் மாணவனின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் ரூ.1 லட்சம்; பட்டப்படிப்பு படிக்கும் மாணவனின் பெற்றோர் ரூ.2 லட்சம்; மேல்படிப்பு படிக்கும் மாணவனின் பெற்றோர் ரூ.2.5 லட்சத்துக்கு உட்பட்ட ஆண்டு வருமானம் உள்ளவராக இருக்க வேண்டும்.

இத்திட்டத்தின்படி ஒன்றாம் வகுப்பு படிக்கும் சிறுபான்மை சமூகக் குழந்தைக்கு ஆண்டுக்கு ரூ.1000 வழங்குகிறார்கள்.

மத்திய – மாநில அரசுகளின் விளம்பரங்களில் 1–ஆம் வகுப்பு முதல் 12–ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களில், 2008–09–ஆம் ஆண்டில் 5.12 லட்சம் மாணவர்களுக்கும்; 2009–10–ல் 17.29 லட்சம் மாணவர்களுக்கும் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டதென்றும் கூறப்பட்டுள்ளது. அதேபோல் பட்டப் படிப்பு படிக்கும் மாணவர்களையும் பட்டியலிட்டு (கிறிஸ்தவ, முஸ்லிம்), சிறுபான்மை குழந்தைகள் இந்த உதவியைப் பெற உடனே விரைந்து வருமாறு அழைக்கப்படுகின்றனர்.

சிறுபான்மையினருக்கு கல்வி உதவித் தொகை கொடுக்க எவ்வளவு இலக்கு நிர்ணயித்தார்களோ, அதைவிட இரு மடங்கு கொடுத்து அவர்களை மகிழ்வித்து, இவர்களும் மகிழ்கிறார்கள். இது தவறு என்று பாரதிய ஜனதா கட்சி கூறவில்லை. ஆனால், இதே மகிழ்ச்சியை ஏழை ஹிந்து குழந்தைகளுக்கும் வழங்குங்கள் என்றுதான் கேட்கிறோம்.

நாடு முழுக்க உள்ள பட்டியல் நம்மிடம் இருந்தாலும், தமிழ்நாட்டின் நிலையை மட்டும் இங்கே குறிப்பிடுகிறேன்.



2009–10 –ஆம் கல்வி ஆண்டில் ஒன்றாம் வகுப்பு முதல், பட்ட மேல்படிப்பு வரை பயிலும் கிறிஸ்தவ, முஸ்லிம் சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை கொடுக்க நிர்ணயிக்கப்பட்ட இலக்கையும், உதவித் தொகை பெற்ற மாணவர்களின் எண்ணிக்கையையும் மேலே பட்டியலில் கொடுத்துள்ளேன்.

ஆக மொத்தம் 2009–10–ஆம் கல்வி ஆண்டில் மட்டும், தமிழகத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் மேல் படிப்பு வரை படிக்கும் 1,11,318 மாணவர்களுக்கு பல கோடி ரூபாய், அவர்களின் படிப்பிற்காகவும் உணவு மற்றும் உறைவிடத்திற்காகவும் வழங்கப்பட்டுள்ளது. இதில் ஒரு ஹிந்து மாணவருக்குக்கூட ஒரு காசு கூட வழங்கப்படவில்லை! இதுதான் சமூக நீதியா? இதுதான் சம நீதியா?

பெருந்தலைவர் காமராஜ் முதல்வராகப் பொறுப்பு ஏற்றதும், அனைத்து குழந்தைகளுக்கும் இலவசக் கல்வி என்று அறிவித்தார். உடனே அதிகாரிகள் காமராஜிடம் பணக்கார குழந்தைகளிடம் கட்டணம் வசூலிக் கலாம் என்றனர். தலைவர் காமராஜ் இதை ஏற்கவில்லை. மாடி வீட்டுக் குழந்தை கட்டும் பணத்தால், ஏழை வீட்டுக் குழந்தை படிக்கிறது என்ற ஏளனம் வந்து விடக் கூடாது என்று ஜாதி, மதம், ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடின்றி அனைத்து குழந்தைகளுக்கும் இலவசக் கல்வி என்று அறிவித்தார். அந்த ஏழைப் பங்காளனின் விருப்பப்படியே கல்வியில் தமிழ்நாடு முன்னேறியது.

அன்று காமராஜ் எதை நினைத்தாரோ அதில் சற்றும் வித்தியாசப்படாமல் பாரதிய ஜனதா கட்சியும் அதையே நினைக்கிறது. ஏழை முஸ்லிம், கிறிஸ்தவ சிறுபான்மை குழந்தைகளுக்கு வழங்கப்படும் கல்வி உதவித் தொகை எக்காரணம் கொண்டும் நிறுத்தப்படக் கூடாது என்று நாங்கள் கூறுகிறோம். அதை நிறுத்த அரசு நினைத்தால், அந்த ஏழை குழந்தைகளின் கல்வி உதவித் தொகைக்காகவும் குரல் கொடுக்கும் முதல் கட்சியாக பாரதிய ஜனதா கட்சி இருக்கும். அதேபோல் அறிவுப் பசியைப் போக்கத் துடிக்கும் ஏழை ஹிந்து குழந்தைகளுக்கும் உதவிப் பணம் கொடுங்கள் என்று பாரதி ஜனதா கட்சி போராடுகிறது.
நன்றி : துக்ளக் 04 /11 /2010