பழ.கருப்பையா
அதுபோல் இந்தியாவின் வியப்பு புத்தன் – பொருள்களெல்லாம் சார்புக் காரணங்களால் தோன்றுவன (Dependent Origination) என்னும் கொள்கையைக் கண்டறிந்து, நம்முடைய துயங்களுக்கெல்லாம் முடிவு தேடினான் அப்பேரறிவாளன்! ‘செய்வோனில்லை; செயல் உண்டு’ என்றும், ‘ஓடுவோனில்லை; ஓட்டம் உண்டு’ என்றும் புத்தன் சொல்வதைப் புரிந்து கொள்ள முடியுமானால், எல்லா முடிச்சுகளும் அவிழ்ந்து விடும்!
அதே காலகட்டத்தை ஒட்டிப் படைக்கப்பட்ட இதிகாசங்கள்தாம் மகாபாரதமும், இராமாயணமும். இவை இரண்டையும் மிஞ்சி ஒரு கதை உலக மொழிகள் எதிலும் இல்லை. தர்மத்தை நிலை நாட்ட பண்டைய முனிவர்கள், கேட்பதற்கும் படிப்பதற்கும் இன்பம் தரக் கூடிய கதை வடிவங்களைத் தேர்வு செய்து கொண்டார்கள்.
தாவோயியம் என்பதன் சாரமே எதிர் எதிர்க் கூறுகளின் ஒத்திசைவில்தான் (Harmony of opposites) உலகத்தின் இயக்கம் நிகழ்கிறது என்பது! முழுக்கத் தூய்மையானதும் இல்லை; முழுக்கத் தூய்மையற்றதும் இல்லை என்று தாவோயியம் கூறும். ஒரு வட்டத்தின் நடுவை S வடிவு எழுதி அதை இரண்டாகப் பிளந்தால், இரு சம பகுதிகளில் ஒரு பகுதி முழு வெள்ளை; ஆனால் அதில் ஒரு சிறு கறுப்பு வட்டம்; இன்னொரு பகுதி முழுக் கறுப்பு; ஆனால் அதில் ஒரு சிறு வெள்ளை வட்டம்!
இதைத்தான் சீன அரசு இலச்சினைகளில் பொறித்து, தன்னுடைய மண்ணின் அறிவு மேம்பாடு என்று உலகுக்குத் தம்பட்டம் அடித்துக் காட்டிக் கொள்கிறது. இது நியாயமான தம்பட்டமே!
ஆனால், தாவோயியம் முழுமை பெற்ற தத்துவமாக இந்தியாவில் வளர்த்தெடுக்கப்படவில்லையே தவிர, அதன் கூறுகள் பட்டினத்தாரிலிருந்து மகாபாரதம் வரையிலும் ஆங்காங்கே வெளிப்படுகின்றன.
தருமர், தருமத்தின் ஒட்டுமொத்த மனித வடிவம்! அவரிடமும் ஒரு சிறு அதருமக் கூறு வெளிப்படுகிறது என்று மகாபாரதம் சொல்கிறது. துரோணர் எல்லோருக்கும் ஆசிரியர். துரியோதனின் படைகளுக்குத் தலைமை தாங்கிக் களத்தில் பாண்டவர்களுக்கு எதிராக அணிவகுத்து நிற்கிறார்.
பீமன் அன்றையப் போரில் அஸ்வத்தாமன் என்னும் பெயருடைய ஒரு போர் யானையைக் கொன்று விட்டான்.
தேவைப்பட்டால் பொய்ச் சொல்லக் கூடிய திருடர்களே எல்லாரும் என்று எண்ணிய துரோணர், எதிரே நின்ற தருமரைப் பார்க்கிறார்.
துரோணர், தருமரைப் பார்ப்பதன் நோக்கத்தை அறிந்து கிருஷ்ணனும், ஆழ்ந்த கவலையோடு தருமரைப் பார்க்கிறான். எந்த நிலையிலும் மலை போல் அசைவற்றவராயிற்றே தருமர்!
“அஸ்வத்தாமன் இறந்து விட்டான்” என்று உரக்கச் சொல்லிய தருமர், ‘அஸ்வத்தாமன் என்கிற யானை’ என்று மிகத் தாழ்ந்த குரலில் சேர்த்துச் சொல்கிறார்!அதற்குப் பிறகு துரோணர் புத்திர பாசத்தால் நிலை குலைந்து போகிறார். அன்றையப் போர் துரியோதனனுக்குத் தோல்வியில் முடிந்தது என்பதெல்லாம் பின் விளைவுகள். அவை கிடக்கட்டும்!
தருமர் இப்படி ஒரு பொய்யைச் சொன்னதும், அதுவரையில் மண்ணின் மீது படாமல், அதற்குச் சிறிது மேலே சென்று கொண்டிருந்த தருமரின் தேர், ஒரு விமானம் கீழிறங்கி ஓடுபாதையைத் தொடும்போது, உள்ளிருப்பவர்களுக்கு ஒரு அதிர்வைத் தருவது போல, திடீரென்று மண்ணைத் தொட்டு அதிர்வைத் தந்து விட்டு, தொடர்ந்து தரை மீதே ஓடியதாம். தருமரின் வாய்மைக்காக அளிக்கப்பட்ட சலுகையைத் தருமம் ரத்து செய்து விட்டது. தருமத்திற்கு மனிதர்களைப் பற்றிக் கவலை இல்லை; செயல்களைப் பற்றித்தான் கவலை!
தருமமே வடிவான தருமர் போர் வெற்றிக்காகப் பொய்யுரைத்தது என்பது, தாவோயியக் கோட்பாட்டின்படி வெள்ளைத் தாளில் ஒரு கறுப்புப் புள்ளி!இதற்கு நேர்மாறாக துரியோதனன் தீமையே வடிவானவன்; கயவன்; அயலார் மனைவியை அவைக்கு இழுத்து வந்து அசிங்கப்படுத்தியவன். அவன் தேரோட்டி மகனான கர்ணனை அங்கதேசத்திற்கு மன்னனாக முடி சூட்டுவித்து, அரச கௌரவத்தை வழங்கி, தனக்குச் சமமாக்கி நட்புப் பூணுகிறான்.
ஒருநாள் துரியோதனனின் மனைவியும், கர்ணனும் சொக்கட்டான் ஆடிக் கொண்டிருக்கும்போது, கர்ணனுக்குப் பின்னாலிருந்த வாயிலின் வழியாகத் துரியோதனன் வருவதைப் பார்த்து விட்ட மனைவி எழுந்திருக்க, ஆட்டத்தில் தோல்வி அடையும் நிலையில் அவள் எழுந்திருக்கிறாள் என்று எண்ணிய கர்ணன், ‘எங்கே ஓடப் பார்க்கிறாய்?’ என்று அவளுடைய சேலையைப் பிடிக்க, அதிலுள்ள மணிகள் அறுந்து உருண்டோட...
பதறிய துரியோதனனின் மனைவி ஒருபுறம்; துரியோதனனைப் பார்த்து விட்டுத் திகைத்துத் தவித்துப் போன கர்ணன் இன்னொருபுறம்; இந்த நிலையில் குனிந்த துரியோதனன், ‘எடுக்கவோ, கோக்கவோ?’ என்று கேட்டுச் சூழலை எளிதாக்கி, நட்புக்கு இலக்கணம் வகுக்கிறானே! தாவோயியம் கூறும் கறுப்புத் தாளில் வெள்ளைப் புள்ளி அல்லவா இது!
பீஷ்மர், துரோணர், கர்ணன்... என்று எல்லோருடைய கதையும் முடிந்து விட்டது. இந்த நிலையில் கிருபர், துரியோதனனிடம் கூறுகிறார்: ‘பாண்டவர்களோடு சமாதானம் செய்து கொள்’!
துரியோதனன் கூறுகிறான் : ‘இது என்ன பேடித்தனம்? பிழைப்பது எந்த சுகத்தை அனுபவிக்க? பீஷ்மர், துரோணர், கர்ணன், உடன்பிறந்தோர், உறவினர்கள் என்று அனைவரும் மாண்டு விட்ட பிறகு, இந்த நாட்டைச் சமாதானத்தின் பேரில் காப்பாற்றிக் கொண்டு நான் யாரோடு அனுபவிப்பது? அது எந்த விதத்தில் பெருமையானது?’இவ்வாறு துரியோதனன் பேசியபோது, எஞ்சிய படைவீரர்கள் கை தட்டி ஆர்ப்பரித்துப் பாராட்டுகிறார்கள்! வானம் பூமாரிப் பொழிகிறது!
தனக்காக எல்லோரும் தங்களின் உயிரையும் நல்க வேண்டுமென்று எதிர்பார்த்த துரியோதனன், அவர்கள் இல்லாத பூமி தனக்குத் தேவையில்லை என்று நினைப்பதும், அவர்கள் போன வழியிலேயே தானும் இறுதிவரை போரிட்டு மரிக்க நினைப்பதும் மிக உன்னதமான மனநிலை!
மேற்கண்ட இரண்டு நிகழ்வுகளும் தாவோயியம் கூறும் கறுப்புத் தாளில் வெள்ளைப் புள்ளிகள்!
முற்றிலும் நல்லவனும் இல்லை; முற்றிலும் கெட்டவனுமில்லை. அதில் ஒரு சிறு புள்ளி அளவாவது எதிர்க் குணம் இருக்கும். அதனால்தான் பாண்டவர்கள் சில பொழுது நரகத்திலும், கௌரவர்கள் சில பொழுது சொர்க்கத்திலும் வசிக்க நேரிடுகிறது!
இந்தியாவில் தாவோயியம் தனியொரு பள்ளியாக அதன் அடிப்படைகள் உணரப்பட்டு முழுமையாக உருவெடுக்க முடியவில்லை என்றாலும், அதனுடைய கூறுகள் அறியப்பட்டே இருந்திருக்கின்றன. தருமர் மற்றும் துரியோதனன் பாத்திரப் படைப்பில் அதை நம்மால் உணர முடிகிறது.
லியோ டால்ஸ்டாய் ‘புத்துயிர்ப்பு’ (Resurrection) என்றொரு புதினத்தை எழுதினார். உலக அளவில் போற்றப்படும் நூல் அது. அதற்குக் காரணம் அந்தக் கதைத் தலைவன். அப்படி ஒரு கதைத் தலைவனை எவ்வளவு பெரிய கதாசிரியனும் படைக்க முடியாது. ஏனெனில் மிக உன்னதமாக வாழ்ந்த ஒரு கதாசிரியனால்தான் அவ்வளவு உன்னதமான கதைத் தலைவனைப் படைக்க முடியும். லியோ டால்ஸ்டாய், தன்னையே கதைத் தலைவனாக உருவகித்துக் கொண்ட உயர் நவீனம் அது!
அதுபோல் தருமரைப் படைக்க வியாசரால்தான் முடியும். தருமத்தையே அடிப்படையாகக் கொண்டு வாழ்ந்த அனுபவமுடைய ஒரு கதாசிரியனுக்குத்தான் தருமரைப் படைக்க முடியும். ஆகவே, அது வியாசர் போன்ற பேரறிவும், கற்பனை வளமும், மொழித் திறனும், பற்றற்ற வாழ்க்கையும் கொண்ட முனிவருக்கே இயலக் கூடியது.
மகாபாரதமும், ராமாயணமும் கடந்த பல நூறு ஆண்டுகளாகப் பல நாடகங்களுக்கும், கதைகளுக்கும், நவீன திரைப்படங்களுக்கும் உந்துவிசையாக இருந்து வந்துள்ளன.
இந்தியப் பண்பாட்டை உருவாக்கியதில் கணிசமான பங்கை வகிக்கும் ராமாயணமும், மகாபாரதமும் ஆரியர்கள் இந்தியாவுக்கு அளித்த இணையில்லாத கொடை! இன்னொரு கொடை – இதிஹாசங்கள் பேசும் தர்மத்தை நவீன அரசியலில் இணைத்து நடைமுறைப்படுத்திக் காட்டிய மூதறிஞர் ராஜாஜி!
2500 ஆண்டு காலமாக மொழி புரியத் தொடங்குகிற வயதில் ஒவ்வொரு பிள்ளையும் ‘கதை சொல்லும்மா’ என்று அடம்பிடிக்கும்! ஒவ்வொரு தாயும் பிள்ளையை மடியில் கிடத்திக் கொண்டு, பாரதக் கதையைப் பகுதி பகுதியாகச் சொல்லுவாள். பாதித் தூக்கத்தில் பிள்ளை ‘ஊம்’ கொட்டும்! பிள்ளையின் ஆழ்மனதில் (sub conscious mind) தருமம் குறித்த சிந்தனைகள் தன்னை அறியாமல் சென்று படியும்.
அவன் வளர்ந்து பின்னாளில் நீதிபதியாக வருவான்; நீதி வழுவாது நடப்பான்! தப்பான நீதிபதியைத் தண்டிக்கச் சட்டத்தில் வழி இல்லாதபோது, ‘நீ விடுமுறையிலாவது போய்த் தொலை’ என்று உச்ச நீதிமன்றம் சொல்லும் நிலையும், இவன் ‘முடியாது’ என்று அடம் பிடிக்கும் கேவலமான நிலையும் ஒருநாளும் ஏற்படாது.
அவன் வளர்ந்து பொறியாளனாக வருவான். குளத்தைத் தூர்த்துக் குடிசை மாற்று வாரியம் வீடு கட்டினால், குளம் அழிவதோடு, அந்த அடுக்குமாடி வீடுகளும் மணலில் புதைந்து, பைசா நகரத்துச் சாய்ந்த கோபுரமாகி விடுவதோடு, ஒருநாள் அவற்றில் வசிக்கும் மக்களுக்கு அந்தக் குளமே புதைகுழியாகி விடும் என்று, சட்டை முழுவதும் ‘பையாக’ வைத்திருக்கிற புத்தியில்லாத மந்திரிக்கு எடுத்துச் சொல்லி, முன்கூட்டியே தடுத்து விடுவான்!
அவன் வளர்ந்து வழக்கறிஞனானால், எதிரியோடு கள்ள நட்பு வைத்துக் கொண்டு சொந்தக் கட்சிக்காரனைக் கவிழ்க்க மாட்டான்! ஆட்சியாளனானால் சுரண்டுவதே பிறப்பின் நோக்கம் என்று அலைய மாட்டான். ஆசிரியனானால் வகுத்து வைத்த பாடத் திட்டத்திற்கு ஒருபடி மேலே மாணவர்களை அழைத்துச் சென்று, அவர்களை அறிவு நாட்டமுடையவனாக ஆக்குவான்! எதிலும் எந்த நிலையிலும் பிறழ்ச்சி என்பதே இருக்காது.
இப்போது மொழி புரியத் தொடங்கும் வயதில், பிள்ளையும் கதை சொல்லச் சொல்லி அம்மாவைப் பிறாண்டுவதில்லை. அம்மாவும் கதை சொல்லத் தயாராக இல்லை.
தொலைக்காட்சியில் பிள்ளை கேலிப்படம் (cartoon pictures) பார்க்க வேண்டும் என்கிறது; அம்மா நெடுந்தொடர் (mega serial) பார்க்க வேண்டும் என்கிறாள்!
பாரதம் வழக்கற்றுப் போகும் ஒரு காலகட்டத்தில், பாரதம் நிலைகுலைந்து போகும்!
நன்றி: துக்ளக் 15_04_2010