நம்பிக்கை நட்சத்திரம்

நாம் விரும்புகிறோமோ இல்லையோ, ராகுல் காந்தி, நரேந்திர மோடி, மாயாவதி ஆகிய மூவர்தான் எதிர்காலத்தில் அரசியல் நாயகர்களாக இருப்பார்கள். இந்த மூவருக்குமே 2012-ம் ஆண்டு முக்கியமானதாக இருக்கும். அவர்களின் அரசியல் செல்வாக்கு என்ன என்பது அப்போது தெரியவரும். உ.பி. தேர்தல் ராகுல் காந்தியின் அரசியல் செல்வாக்கை நிர்ணயிக்கும் என்று தெரிய வருகிறது.

 இதேபோல, தற்போதைய உ.பி. முதல்வர் மாயாவதியின் அரசியல் எதிர்காலமும் அதில்தான் அடங்கியிருக்கிறது என்று சொன்னால் மிகையாகாது. குஜராத் முதல்வர் நரேந்திர மோடி அரசியல் வானில் நட்சத்திரமாகத் தொடர்ந்து ஜொலிப்பாரா அல்லது அவரது செல்வாக்கு சரிந்து விடுமா என்பதும் 2012-ல் தெரிந்துவிடும்.

சமீபத்தில் குஜராத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் 6 மாநகராட்சிகளிலும் பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது. இது பாஜகவுக்கு மட்டுமல்ல; எதிர்க்கட்சிகளுக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தேர்தலில் நரேந்திர மோடி எதிர்க்கட்சியினரை மட்டுமல்லாது, கட்சியின் அதிருப்தியாளர்களையும் சந்திக்க வேண்டியிருந்தது. ஷேக் சொராபுதீன் போலி என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம், இதுதொடர்பாக மோடிக்கு நெருக்கமானவரும் முன்னாள் அமைச்சருமான அமீத் ஷா கைது செய்யப்பட்ட விவகாரத்தை முன்வைத்து காங்கிரஸ் பிரசாரம் செய்தபோதிலும், அது உள்ளாட்சித் தேர்தலில் எடுபடவில்லை. உள்ளாட்சித் தேர்தலை சவாலாக எடுத்துக் கொண்டு மோடி பிரசாரத்தில் ஈடுபட்டார். தினமும் பத்துக்கும் மேலான பேரணியில் கலந்து கொண்டு உள்ளூர்ப் பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் தராமல், தேசியப் பிரச்னைகளை முன்வைத்து பிரசாரத்தில் ஈடுபட்டார். பல்வேறு எதிர்ப்புகளையும் மீறி உள்ளாட்சித் தேர்தலில் மோடி வெற்றிவாகை சூடியுள்ளார். நரேந்திர மோடி மெல்ல மெல்ல செல்வாக்கை இழந்து வருகிறார் என்ற பிரசாரம் இதன் மூலம் பொய்த்துவிட்டது எனலாம். குஜராத் மாநிலம், ஹிந்துத்துவா கொள்கைப் பிடிப்பாளர்களின் சோதனைக் களமாக இருந்து வருகிறது.

மேலும் மற்ற மாநிலங்கைவிட வேகமான வளர்ச்சி அடைந்து வருகிறது. குஜராத் மாநிலத்தில் தனது அரசியல் உத்திகள் மூலம் காங்கிரஸ் கட்சியைப் பலவீனப்படுத்த முயன்று அதில் வெற்றியும் பெற்றுள்ளார் முதல்வர் நரேந்திர மோடி. முஸ்லிம்கள் அதிகம் உள்ள ஜுனாகத்தில் மட்டும் காங்கிரஸ் வெற்றிபெற முடியாவிட்டாலும், கணிசமான வாக்குகளைப் பெற்றுள்ளது. இல்லையெனில், காங்கிரஸ் உள்ளாட்சித் தேர்தலில் படுதோல்வியைத் தழுவியிருக்கும்.

குஜராத்தில் காங்கிரஸ் கட்சி மெல்ல மெல்ல செல்வாக்கை இழந்துவருகிறது என்பதையே உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளன. இது காங்கிரஸ் தலைமைக்குக் கவலையை ஏற்படுத்தக்கூடிய விஷயமாகும். காங்கிரஸ் கோட்டையாகக் கருதப்படும் கத்லால் சட்டப்பேரவைத் தொகுதியையும் சமீபத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பா.ஜ.க. கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 கடந்த 50 ஆண்டுகளாக காங்கிரஸ் இத் தொகுதியைத் தக்கவைத்துக் கொண்டிருந்தது. உண்மை என்னவெனில், குஜராத்தில் பா.ஜ.க.வுக்கு மாற்றுச் சக்தியாக எப்படிச் செயல்படுவது எனத் தெரியாத நிலையில் காங்கிரஸ் உள்ளது. மோடிக்கு நிகரான தலைவர்கள் காங்கிரஸில் இல்லை; அவரது சவால்களைச் சமாளிக்கத் தெரிந்த அரசியல் தலைவர்களும் காங்கிரஸில் இல்லை.

கடந்த ஆண்டு கட்சியின் அகில இந்தியத் தலைவராக யாரைத் தேர்ந்தெடுப்பது என்ற கேள்வி எழுந்தபோது, பா.ஜ.க. இரண்டு பேரின் பெயரை ஆர்.எஸ்.எஸ். பரிசீலனைக்காக பரிந்துரைத்தது. ஒருவர் நிதின் கட்கரி. மற்றொருவர் நரேந்திர மோடி. நரேந்திர மோடி கட்சித் தலைவராக வர வேண்டும் என்றுதான் எல்.கே. அத்வானி விரும்பினார். ஆனால், யாரும் எதிர்பாராதவிதமாக கட்சித் தலைமைப் பதவியில் தனக்கு விருப்பமில்லை என்று மோடி தெரிவித்து விட்டார்.

அடுத்த பொதுத் தேர்தல் 2014-ம் ஆண்டில்தான். அதற்கான போராட்டக் களம் தொடங்குவது 2012-ல்தான். இதை உணர்ந்துகொண்டதால்தான் நரேந்திர மோடி, பா.ஜ.க. தலைவர் பதவியில் ஆர்வம் காட்டாமல் இருந்து விட்டார். 2012-ல் உத்தரப் பிரதேச மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெற உள்ளன. அதுதான் அரசியல் கட்சிகளுக்கு அரையிறுதிப் போட்டி போன்றது.

உ.பி. தேர்தலில் பா.ஜ.க. வெற்றி என்பது அவ்வளவு சுலபமான காரியமல்ல. நாட்டின் மிகப்பெரிய மாநிலமாக உள்ள உ.பி.தான் அரசியல் கட்சிகளின் சோதனைக் களமாகும். உ.பி. தேர்தலில் பா.ஜ.க.வுக்குப் படுதோல்வி ஏற்படும்பட்சத்தில், அடுத்த பொதுத் தேர்தலில் பா.ஜ.க.வுக்குத் தலைமையேற்று வழிநடத்தும் வாய்ப்புகள் நழுவிப் போய்விடும். இதை மோடி நன்கு உணர்ந்திருந்ததால்தான், கட்சித் தலைமைப் பதவியேற்க தற்போது விருப்பமில்லை என்று கூறிவிட்டார்.

பா.ஜ.க.வின் தற்போதைய தலைவர் நிதின் கட்கரியின் பதவிக் காலம் 2012-ம் ஆண்டு முடிவடைய உள்ளது. வரவிருக்கும் பஞ்சாயத்து மற்றும் நகராட்சித் தேர்தலிலும் பா.ஜ.க. வெற்றி பெற்று, குஜராத் மாநிலத்தில் அடுத்து நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் வென்று பா.ஜ.க. மீண்டும் ஆட்சியைப் பிடிக்குமானால், அடுத்த முறை கட்சித் தலைவர் பதவியை மோடி பெற வாய்ப்பு உள்ளது.

தான் முதன்முறையாக மாநில முதல்வராகப் பதவி வகித்தபோது ஏற்பட்ட களங்கத்தைப் போக்கும் முயற்சியிலேயே கடந்த இரண்டு ஆண்டுகளாக மோடி செயல்பட்டு வருகிறார்.  பாஜக தலைவர்களையும், ஆர்.எஸ்.எஸ்., விசுவ ஹிந்து பரிஷத் போன்ற அமைப்புகளில் உள்ள குஜராத்தைச் சேர்ந்த முக்கியத் தலைவர்களையும் மோடி மதிப்பதில்லை. அவர் தன்னிச்சையாகச் செயல்பட்டு வருகிறார் என்ற குற்றச்சாட்டு இருந்து வந்தது.

இதையடுத்து, இப்போது மோடி எந்த ஒரு விஷயமானாலும் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்வதில்லை. நான் கட்சியின் சாதாரணத் தொண்டன்தான். எதுவானாலும் கட்சித் தலைமைதான் முடிவு செய்யும் என்பதுபோல் பேசி வருகிறார். சமீபத்தில் உள்ளாட்சித் தேர்தலில் கிடைத்த வெற்றி எனது செல்வாக்குக்குக் கிடைத்த வெற்றியல்ல, பா.ஜ.க. தலைவர்களின் உழைப்புக்குக் கிடைத்த வெற்றி என்று மோடி கூறியுள்ளார்.
கோத்ரா கலவரச் சம்பவத்துக்குப் பிறகு சரிந்திருந்த தனது செல்வாக்கை மீட்டெடுப்பதிலேயே மோடி கவனம் செலுத்தி வருகிறார். இச் சம்பவத்துக்குப் பின் நாடு முழுவதும் நரேந்திர மோடியைப் பற்றிய தவறான எண்ணம் உருவாகியிருந்தது. மேலும் மேற்கத்திய நாடுகள்கூட மோடியின் வருகையை விரும்பவில்லை.

இதைத் தொடர்ந்தே அவர் மக்கள் பிரச்னையிலும், மாநிலத்தின் வளர்ச்சியிலும் அதிக கவனம் செலுத்தத் தொடங்கினார். சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் இடங்களில் அவர்களுக்குத் தேர்தலில் போட்டியிட வாய்ப்புக் கொடுத்தார். உள்ளாட்சித் தேர்தலில் அமோக வெற்றி பெற்றதும் முஸ்லிம்களின் வாக்குகள்தான் வெற்றிக்கு முக்கியக் காரணம் என்று மோடி கருத்துத் தெரிவித்தார். இதன் மூலம் முஸ்லிம்கள் வாக்கு இல்லாவிட்டால், இந்த வெற்றி சாத்தியமில்லை என்று அவர் மறைமுகமாகக் குறிப்பிட்டார்.

பா.ஜ.க.வில் தலைவர்கள் பலர் இருந்தாலும், நரேந்திர மோடிதான் மக்கள் ஆதரவைத் திரட்டக் கூடிய செல்வாக்கு மிகுந்த தலைவர் என்ற கருத்து ஆர்.எஸ்.எஸ். தலைவர்களிடம் உள்ளது.இதற்குக் காரணம் அவரது தேர்தல் வெற்றிதான். ஆனாலும், அவரை அடுத்த தேர்தலில் பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில், இதை பா.ஜ.க.வின் கூட்டணிக் கட்சியினரே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவர் நிதிஷ்குமாருக்கும் நரேந்திர மோடிக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. அவரை தேர்தல் பிரசாரத்துக்காக எந்தக் காரணத்தைக் கொண்டும் பிகார் மாநிலத்துக்குள் அனுமதிக்க முடியாது என்று திட்டவட்டமாகக் கூறி விட்டார்.

 பாஜக தலைவர்களில் ஒருவரான சுஷ்மா ஸ்வராஜ் கூட்டணிக் கட்சிகளுடன் நெருக்கமான தொடர்பு வைத்திருக்கிறார். எதிர்க்கட்சித் தலைவர் என்ற அந்தஸ்தில் உள்ள அவர், பா.ஜ.க.வுக்கும் கூட்டணிக் கட்சியினருக்கும் பாலமாக இருந்து செயல்பட்டு வருகிறார்.
 நரேந்திர மோடி கட்சித் தலைவராவதற்கு அருண் ஜேட்லி ஆதரவு தெரிவித்து வருகிறார்.  ஒருவேளை மோடி தலைவராவதை ஏற்றுக்கொள்ள முடியாத சூழ்நிலை உருவானால், தனக்கு அந்த வாய்ப்பு உருவாகும்பட்சத்தில், தன்னை மோடி ஆதரிப்பார் என்ற எண்ணம் இதற்குக் காரணமாக இருக்கலாம்.

2012-ம் ஆண்டு குஜராத் தேர்தலுக்குப் பிறகு பா.ஜ.க.வின் தலைமைப் பொறுப்பை ஏற்க நரேந்திர மோடி முயற்சிகள் மேற்கொள்ளக்கூடும்.
உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் அவருக்கு வெற்றிப்படிக்கட்டாக அமைந்துள்ளது. இந்த வெற்றி அவருக்குக் கிடைத்துள்ள மிகப்பெரிய வெற்றியாகும். தனது அரசியல் ராஜதந்திரம் மூலம் கட்சிக்குள் இருக்கும் எதிரிகளை இருக்கும் இடம் தெரியாமல் செய்து விட்டார்.

நரேந்திர மோடி அரசியல் வானில் மிக உயர்ந்த இடத்தை எட்டிப் பிடிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். உள்ளாட்சித் தேர்தல் வெற்றி அவருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. கட்சிக்குள்ளேயே பலராலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய தலைவராக அவர் உருவாகி வருகிறார். நேரம் வரும்போதுதான் ஒரு சிறந்த அரசியல் தலைவர் என்பதை நிரூபிக்கக் காத்திருக்கிறார் மோடி என்றால் மிகையாகாது.

நன்றி: நீரஜா சௌத்ரி   தினமணி 22 Oct 2010