மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆண்டிமுத்து ராசா – அதாவது ஆ. ராசா, இப்போது ‘அலைக்கற்றை முறைகேடு ராசா’ என்று அகில இந்தியப் பிரபலம் அடைந்திருக்கிறார். இந்திய அரசுக்கு சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்த ஊழல்தான், இதுவரையில் இந்தியாவில் நடந்த ஊழல்களுக்கு எல்லாம் ராஜா என்று வர்ணிக்கப்படுகிறது.
ராசா
மொபைல் ஃபோன் தொழில் நுட்பச் சேவை அளிக்கும் நிறுவனங்களுக்கு அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யும் பொறுப்பில், ராசாவின் தொலைத் தொடர்புத் துறை இருக்கிறது. 2008-ஆம் ஆண்டில் தனியார் சேவை நிறுவனங்களுக்குச் செய்யப்பட்ட 2-ஜி ஜி.எஸ்.எம். அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு, அப்போதே அம்பலத்திற்கு வந்தது. இப்போது அவரது துறை அலுவலகத்தில் ஸி.பி.ஐ. சோதனை, விசாரணை, வழக்குப் பதிவு என்ற அளவிற்கு வளர்ந்து, விச்வரூபம் எடுத்திருக்கிறது.
‘2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் எந்த முறைகேடும் நடக்கவே இல்லை. 2001-ஆம் ஆண்டில் எந்த முறை பின்பற்றப்பட்டதோ, அதே முறைதான் இப்போதும் பின்பற்றப்பட்டிருக்கிறது’ என்பது ராசாவின் வாதம்.
ஆனால், 2001-ஆம் ஆண்டில் மொபைல் இணைப்புகளின் எண்ணிக்கை வெறும் 50 லட்சங்கள்தான் இருந்தது. 2008 மார்ச்சில் அது 37.5 கோடியாக உயர்ந்தது. அரசு நடைமுறைப்படுத்திய சீர்திருத்தக் கொள்கைகளின் விளைவாக இந்த பிரமாண்ட உயர்வு நிகழ்ந்தது. மொபைல் சேவைத் துறையின் வர்த்தக வளம் 2001-ஆம் ஆண்டிற்கும், 2008-ஆம் ஆண்டிற்கும் இடையில் பல மடங்கு பெருகி விட்டது என்பது தெளிவு.
தவிர, 2001-ஆம் ஆண்டில், மொபைல் சேவைத் துறையை வளர்க்க வேண்டிய நிலையில் அரசாங்கம் இருந்தது. அதனால், ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ், ஏல முறையில் நிர்ணயிக்கப்படவில்லை. வரும் ஆண்டுகளில் மாபெரும் வளர்ச்சிக்கான வாய்ப்பு இருக்கிறது என்ற உண்மை, தனியார் சேவை நிறுவனங்களுக்கே கூட அப்போது தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. அதனால், தனியார் சேவை நிறுவனங்களை ஊக்குவித்து, ஈர்க்க வேண்டிய நிலையில் இருந்தது அரசாங்கம்.
ஆனால், 2008-ஆம் ஆண்டின் நிலை அதுவல்ல. உள்நாட்டு நிறுவனங்களும், வெளிநாட்டு நிறுவனங்களும் தொலைத் தொடர்புத் துறையில் முதலீடு செய்வதை மிகவும் லாபகரமானதாகக் கருதுகிற சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது. அந்தச் சூழ்நிலையில், 2001-ஆம் ஆண்டின் லைசென்ஸ் கட்டணமே 2008-லும் நிர்ணயிக்கப்படும் என்று எடுக்கப்பட்ட முடிவு, தெரிந்தே அரசாங்கத்திற்கு நஷ்டத்தை ஏற்படுத்தச் செய்த முடிவு என்ற கருத்து நிலவுகிறது.
டெலிகாம் ரெகுலேட்டரி அதாரிட்டி ஆஃப் இந்தியா (TRAI) எனும் தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம், டெலிகாம் துறையில் கட்டணம் மற்றும் கொள்கைகளை வகுப்பதில், அரசின் குறுக்கீடுகளைக் குறைப்பதற்காக அரசாங்கத்தால் 1995-ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட அமைப்பு. அந்த அமைப்பு, ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ்களை வழங்கும் விஷயத்தில் ஏல முறையை கடைப்பிடிக்க வேண்டும் என்ற பரிந்துரைகளை 2001, 2003, 2007-ஆம் ஆண்டுகளில் செய்திருக்கிறது.
ராசாவின் டெலிகம்யூனிகேஷன்ஸ் துறை, ட்ராயின் (TRAI) பரிந்துரைகளுக்கு மாறாக, முதலில் விண்ணப்பிப்பவர்களுக்கு முன்னுரிமை என்று இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஒதுக்கீட்டைச் செய்திருக்கிறது. மேலும் 2008-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 10-ஆம் தேதி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு அறிவிப்புக்குப் பிறகு, ஜனவரி 14-ஆம் தேதி ட்ராயின் தலைவர் நிரூபேந்திர மிஸ்ரா, டெலிகாம் துறைக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். அதில், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ட்ராய் பரிந்துரைகளின் பல்வேறு தொடர்பு அம்சங்களைப் புறக்கணித்து விட்டு, பெயரளவில் பின்பற்றப்பட்டிருப்பதாக சுட்டிக்காட்டி இருக்கிறார்.
தவிர, இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை கோரும் விண்ணப்பங்களைப் பரிசீலிக்கும் கட்டத்தில், டெலிகாம் துறையின் அப்போதையச் செயலாளர் மாத்தூரும், நிதி நிர்வாக உறுப்பினர் மஞ்சுமாதவனும் ட்ராயின் பரிந்துரைகளைக் கருத்தில் கொண்டு, 2001-ஆம் ஆண்டின் விலைக் கொள்கையை மாற்றி, புதிய ஏலமுறையை கொண்டு வர வேண்டும் என்று துறைக்குள் நடைபெற்ற கடிதப் போக்குவரத்தில் குறிப்பிட்டிருக்கிறார்கள். அதில் ‘டெலிகாம் துறையில் தொடர்ந்து எடுக்கப்பட்ட சீர்திருத்த நடவடிக்கைகளால், உலக அளவில் வேகமாக வளரும் டெலிகாம் குழுமமாக, இந்திய டெலிகாம் துறை வடிவெடுத்திருக்கிறது. எனவே, தற்போதைய சந்தை நிலவரத்தின் அடிப்படையில், ஏல முறையில் நுழைவுக் கட்டணத்தை ஏற்படுத்த வேண்டும்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். இந்த குறிப்புக்கு எந்த முக்கியத்துவமும் தரப்படவில்லை. 2001-ஆம் ஆண்டுக் கட்டண முறையே பின்பற்றப்பட்டது.
இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஒதுக்கீடு கேட்டு விண்ணப்பிக்க, கடைசி தேதி 2007 அக்டோபர் 1 என்று செப்டம்பர் 24-ஆம் தேதி அறிவித்தது. ஆனால், செப்டம்பர் 25 – கடைசி நாள் என்று, 2008 ஜனவரி 10-ஆம் தேதி ஒருதலைப்பட்சமாக மாற்றப்பட்டது. இந்த மாற்ற அறிவிப்பின் காரணமாக ஏராளமான விண்ணப்பங்கள் நிராகரிப்புக்கு உள்ளாகின. இந்த நடவடிக்கையும் கூட ‘எந்தவொரு சேவைப் பகுதியிலும் சேவை நிறுவனங்களின் எண்ணிக்கைக்கு உச்சவரம்பு கூடாது’ என்ற ட்ராயின் தெளிவான பரிந்துரைக்குப் புறம்பானதுதான்.
எல்லா பரிந்துரைகளையும் புறக்கணித்து டேடாகாம் சொலுசன்ஸ், எஸ்டெல், ஷ்யாம் டெலிலிங்க், லூப் டெலிகாம், ஸ்பைஸ், ஐடியா செலுலார், டாடா டெலிசர்வீசஸ், ஸ்வான் மற்றும் யுனிடெக் ஆகிய நிறுவனங்களுக்கு இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை லைசென்ஸ் வழங்கப்பட்டது. அதற்காக, இந்த ஒன்பது நிறுவனங்களின் மூலம் அரசாங்கத்திற்குக் கிடைத்த லைசென்ஸ் கட்டணம் 10,772.68 கோடி ரூபாய்.
இந்த ஒன்பது நிறுவனங்களில் ஸ்வான், யுனிடெக் ஆகிய இரண்டு நிறுவனங்கள் மொபைல் ஃபோன் சேவையோ, இணைப்புகளோ அதற்கான கட்டமைப்போ, தொழில் அனுபவமோ இல்லாத நிறுவனங்கள். ஸ்வான் டெலிகாம் நிறுவனம், அகில இந்திய அளவில் பதினான்கு சர்க்கிள்களுக்கான ஸ்பெக்ட்ரம் லைசென்ஸை 1537.01 கோடி ரூபாய் கட்டணத்தில் பெற்றது. யுனிடெக் நிறுவனம் வயர்லெஸ் நிறுவனம், 22 சர்க்கிள்களுக்கு 1651 கோடி ரூபாய் கட்டணத்தில் லைசென்ஸைப் பெற்றது.
லைசென்ஸ் பெற்ற ஆறு மாதங்களுக்குள், இந்த இரண்டு நிறுவனங்களும் தங்களது பங்குகளின் ஒரு பகுதியை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்று விட்டன. ஸ்வான் நிறுவனம் தனது மொத்தப் பங்குகளில் 45 சதவிகிதப் பங்குகளை, ஐக்கிய அரபு எமிரேட்டைச் சேர்ந்த எடிசலாட் நிறுவனத்திற்கு 4050 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்து விட்டது. அதன் மூலம் ஸ்வான் நிறுவனத்தின் மதிப்பு 9990.56 கோடி ரூபாய் அளவிற்கு உயர்ந்து விட்டது.
யுனிடெக் நிறுவனம், தனது மொத்தப் பங்குகளில் 60 சதவிகிதப் பங்குகளை நார்வே நாட்டைச் சேர்ந்த டெலனர் என்ற நிறுவனத்திற்கு, 6120 கோடி ரூபாய்க்கு விற்று விட்டது. அதன் மூலம் யுனிடெக் நிறுவனத்தின் மதிப்பு 10731.5 கோடி ரூபாயாக உயர்ந்து விட்டது. ‘ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ்’ என்ற துண்டுக் காகிதத்தின் மூலம் ஸ்வான் மற்றும் யுனிடெக் ஆகிய நிறுவனங்கள் தங்களது முதலீட்டைப்போல் 700 சதவிகிதம் லாபத்தை – அதுவும் ஆறு மாதங்களுக்குள் – அடைந்து விட்டன.
ராசாவின் அமைச்சகம் ஒன்பது நிறுவனங்களுக்கு லைசென்ஸ் வழங்கி திரட்டிய கட்டணம் 10,772.65 கோடி ரூபாய். ஸ்வான் மற்றும் யுனிடெக் ஆகிய நிறுவனங்கள் தங்கள் பங்குகளின் பாதியளவை மட்டும் விற்று, தாங்கள் பெற்றிருக்கும் லைசென்ஸின் மதிப்பு 20 ஆயிரம் கோடிக்கும் மேல் என்று காட்டிவிட்டன. இந்த இரண்டு நிறுவனங்களின் பங்கு விற்பனை விலையை சந்தை விலையாகக் கொண்டு கணக்கிட்டால், ராசா ஒதுக்கீடு செய்த ஒன்பது நிறுவனங்கள் மூலம் அரசுக்கு 70,022.42 கோடி ரூபாய் லைசென்ஸ் கட்டணமாக கிடைத்திருக்க வேண்டும். அந்த வகையில் ராசாவின் இந்த ஒரு நடவடிக்கையால் மட்டும் நாட்டிற்கு 60,000 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது.
இதைத் தவிர, சி.டி.எம்.ஏ. மொபைல் ஃபோன் வகை சேவையாளர்கள், ஜி.எஸ்.எம். முறைக்கு மாறுவதற்கு அளிக்கப்பட்ட லைசென்ஸ்களைக் குறைவான மதிப்பீட்டில் வழங்கியது; ஏற்கெனவே சேவை அளித்து வரும் ஜி.எஸ்.எம். சேவையாளர்களுக்கு கூடுதலாக ஸ்பெக்ட்ரம் வழங்கியது – ஆகிய வகையில், சுமார் 40,000 கோடி ரூபாய் அளவுக்கு அரசுக்கு நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது என்ற குற்றச்சாட்டும் வலுவாக வைக்கப்படுகிறது.
2-ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகளைப் பற்றி, மத்திய விஜிலென்ஸ் கமிஷன் 2008-ஆம் ஆண்டு நவம்பர் 15-ஆம் தேதி டெலிகாம் துறை செயலருக்கு ஒரு கடிதம் அனுப்புகிறது. அதில் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறித்து அதிருப்தி தெரிவித்து, முறைகேடுகளைப் பட்டியலிட்டுக் கேள்விகளை எழுப்பியிருக்கிறது.
இத்தனைக்குப் பிறகும், அலைக்கற்றை ஒதுக்கீட்டு முறைகேடு பற்றி 2008 டிசம்பர் 15-ஆம் தேதி பாராளுமன்ற மக்களவையில் உறுப்பினர்கள் கேட்ட கேள்விக்குப் பதில் அளித்த ராசா, ‘முதலில் விண்ணப்பித்தவர்களுக்கு முதலில் ஒதுக்கீடு என்ற முறையில் இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்ட விஷயத்தில் மத்திய விஜிலென்ஸ் கமிஷனோ, டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையமோ (ட்ராய்) எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை’ என்று உண்மைக்கு மாறான தகவலை தந்தார்.
ட்ராய் அமைப்பின் தலைவர் நிரிபேந்த்ர மிஸ்ரா 2008-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அளித்த பேட்டியில், “முதலில் விண்ணப்பிக்கிறவர்களுக்கு முதலில் விநியோகம் என்ற வாசகமே தங்களது பரிந்துரையில் இல்லை” என்று தெரிவித்தார்.
தலைமை விஜிலென்ஸ் கமிஷனர் பிரத்யுஷ் சின்ஹா 2009-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒரு பேட்டி அளித்தார். 2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் அப்பட்டமான முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், முறைகேட்டிற்குக்காரணமானவர்களை அதற்குப் பொறுப்பேற்கச் செய்யும் பணியில் ஈடுபட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
இவ்வளவுக்குப் பிறகும் காங்கிரஸ் கட்சியும், பிரதமரும், மத்திய நிதியமைச்சரும் 2ஜி அலைக்கற்றை முறைகேட்டைப் பூசிமெழுகப் பார்ப்பது – நடந்த ஊழலை விட பெரிய அதிர்ச்சியாக இருக்கிறது.
* அலைக்கற்றை (ஸ்பெக்ட்ரம்) – பல அலைவரிசைகளின் தொகுப்பு
* 2-ஜி Second Generation Wireless Telephone technology) – இரண்டாம் தலைமுறை மொபைல் ஃபோன் தொழில்நுட்பம்
* GSM (Global System for mobile communications) – மொபைல் தொடர்புக்கான உலக அளவிலான முறை
* CDMA (Code Division Multiple Access) – குறியீட்டை பலவாக பகிர்ந்தளிக்கும் வசதி
நன்றி : துக்ளக் 05 /11 /2010