மஞ்சளின் மகிமைகள்

மஞ்சள் கிழங்கில் இருந்து தயாரிக்கப்படும் "குர்குமின்' மாத்திரை கேன்சர் நோயாளிகளுக்கு உற்ற நண்பன் என விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர்.
உலகளவில், புற்றுநோய் மருத்துவர்களும், பல்வேறு ஆராய்ச்சி நிறுவனங்களும் தலை மற்றும் கழுத்துப் பகுதிகளில் ஏற்படும் கேன்சர் நோய்க்கு மஞ்சள் சார்ந்த பொருட்களின் பயன்பாடு குறித்து தீவிர ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், பெங்களூரு மஜும்தார் ஷா கேன்சர் சென்டரின் பயோ-டெக்னாலஜி துறை மருத்துவர்கள், வாய்ப்புற கேன்சர் நோயாளிகளுக்கு, "குர்குமின்' மாத்திரையால் ஏற்படும் விளைவுகள் குறித்து ஆய்வு நடத்தினர்.கடந்த மூன்று ஆண்டுகளாக நடந்த ஆய்வு விவரங்கள் தொகுக்கப்பட்டு வருகின்றன. வாய்ப்புற கேன்சர் உள்ள நோயாளிகள் 220 பேர், ஆய்வில் கலந்து கொண்டனர்.அனைவருக்கும், மஞ்சள் கிழங்கில் இருந்து தயாரிக்கப்பட்ட, "குர்குமின்' மாத்திரை (1.2 கிராம்), பல வேளைகளில் சிகிச்சை காலம் முழுவதும் கொடுக்கப்பட்டது. ஆரம்பத்திலேயே பலருக்கு வியத்தகு முன்னேற்றங்கள் இருந்தாலும், சிகிச்சை தொடர்ந்து நடந்தது.""முதலில், வெறும் மஞ்சளை குழைத்து நோயாளிகள் வாயில் தடவப்பட்டது. இதற்கு நல்ல பலன் இருந்தாலும், பற்களில் கறை ஏற்பட்டு பெரும் பிரச்னையாகி விட்டது. பின், "குர்குமின்' மாத்திரை கொடுக்கப்பட்டது.
இதுகுறித்த முழுமையான விவரங்கள் டிசம்பர் மாதத்தில் தான் தெரிய வரும்,'' என, ஆராய்ச்சித் தலைவர் மோனி ஆபிரகாம் தெரிவித்தார்."குர்குமின்' மாத்திரையின் விளைவுகள் குறித்து ஆய்வு செய்த பிரிட்டன் விஞ்ஞானிகளும், கேன்சர் செல்களை அழிப்பதில், "குர்குமின்' மாத்திரை தீவிரமாக செயலாற்றுவதாகக் கூறியுள்ளனர்.தற்போது, அமெரிக்க மற்றும் ஜப்பான் நாட்டு மக்களும், "குர்குமின்' மாத்திரைகளை, பாலில் கலந்து உட்கொள்கின்றனர். இந்தியாவில் அதிக ஆய்வுகள் நடந்ததில்லை என்றாலும், இப்போதைய ஆய்வுகளின் முன்னேற்றம் காரணமாக, "குர்குமின்' மாத்திரைகள் கேன்சர் நோய்க்கு பரிந்துரைக்கப்படுவது அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.அரை டீ ஸ்பூன் அளவு சாதாரண மஞ்சள் தூளை பால் அல்லது வெந்நீரில் கலந்து குடித்தால், கேன்சர் வருவதை முன்கூட்டியே தடுக்க முடியும் எனவும், ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.


நன்றி:தினமலர் 26.10.2010