மத மாற்றம் பற்றி காந்திஜி – எல்.கே. அத்வானி

என் தேசம், என் வாழ்க்கை - 34

ந்தியா வேற்றுமையில் ஒற்றுமை என்ற தன்மையுடனும் பெருமையுடனும், அதற்கும் மேலாக முன்னுதாரணமாகவும் திகழ்ந்து, எல்லா வகை வழிபாடுகளையும் மதிக்கிறது. பல்வேறு வகையான மத நம்பிக்கைகளைப் பின்பற்றும் மக்கள், பரஸ்பரம் சகிப்புத்தன்மையுடன் கூடி வாழும் தன்மையை இந்தியா கொண்டிருக்கிறது. அவ்வப்போது உள்ளூர் சூழ்நிலைகளால் வெவ்வேறு மத நம்பிக்கை கொண்ட சமூகத்தவர் இடையேயான உறவில் பூசல் உண்டாகிறது. 



...ஜாதியின் பெயரால், மதத்தின் பெயரால், இனத்தின் பெயரால் நடக்கும் வன்முறையை நியாயப்படுத்த முடியாது. எனவே, சில துரதிர்ஷ்டவசமான, முற்றிலும் கண்டனத்திற்குரிய வன்முறைச் சம்பவங்கள் நமது கிறிஸ்தவ சகோதரர்களுக்கு எதிராக நிகழ்ந்தபோது, அவற்றை பெரிதுபடுத்தி, வாஜ்பாய் ஆட்சி சிறுபான்மையினருக்கு எதிரானது என்பதற்கு அவை அத்தாட்சி என்று சித்தரித்த சமயங்களில், நான் மிகுந்த வேதனை அடைந்தேன். 

பாரதிய ஜனதா கட்சிக்கும், அதன் ஆட்சிக்கும் இந்தியாவிலும் சர்வதேச அளவிலும் களங்கத்தை உண்டாக்க, இடைவிடாத திட்டமிட்ட பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. இந்தப் பிரச்சாரத்தை ஒரிஸ்ஸா மாநிலம் மாகேஹர்பூர் கிராமத்தில் நடந்த சம்பவம் தூண்டி விட்டது. அங்கு 1999 ஜனவரி 22-ஆம் தேதி அதிகாலையில், ஆஸ்திரேலிய மிஷனரியைச் சேர்ந்த கிரஹாம் ஸ்டெயின்ஸும், அவரது இரண்டு இளவயது மகன்களும் உயிருடன் எரித்து கொல்லப்பட்டனர். 

அந்த மிருகத்தனமான குற்றச் செயல், ஒட்டுமொத்தமாக நாட்டையே அதிர்ச்சி அடையச் செய்தது. ஒவ்வொரு இந்தியனையும் அவமானத்தால் தலைகுனியச் செய்தது. எங்கள் ஆட்சி அவசர வேகத்தில் இயங்கி நடவடிக்கை மேற்கொண்டது. சம்பவம் நடந்த ஒரு வார காலத்திற்குள் உள்துறை அமைச்சகம், உச்ச நீதிமன்ற நீதிபதி டி.பி. வாத்வா தலைமையில் விசாரணைக் கமிஷனை நியமித்தது. கமிஷன் தனது விசாரணையை விரைவாக முடித்து, ஆறு மாதங்களுக்குள் தனது அறிக்கையைச் சமர்ப்பித்தது. தாராசிங் என்ற நபரைக் குற்றவாளி என்று கமிஷன் குற்றம்சாட்டியது. அவரும் அவருக்குத் துணை புரிந்தவர்களும் இப்போது சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். 

நியாயமாக நடந்த விசாரணை, குற்றவாளிக்கு விரைவான தண்டனைப் பெற்றுத் தந்தது. மதச்சார்பின்மை மற்றும் சுதந்திரமான நீதித்துறை ஆகியவை நமது நாட்டுக்குப் புகழ் சேர்ப்பதாகும். எனினும் சம்பவம் நடந்தபோது, ஆர்.எஸ்.எஸ்.ஸும், அதன் சார்பு அமைப்புகளும்தான் குற்றம் இழைத்தன என்று அரசியல் வர்க்கத்தில் ஒரு பிரிவினரும், அறிவுஜீவிகளும் அவசர அவசரமாக பிரகடனம் செய்தனர். அவற்றுடன் பாரதிய ஜனதா கொண்டிருக்கிற இணைப்பை வைத்து எங்கள் ஆட்சியைக் களங்கப்படுத்தினர். 

...வாத்வா கமிஷன் தனது அறிக்கையில் இப்படிக் கூறுகிறது: ‘அந்தப் பகுதியில் கிறிஸ்தவ மதம் பரவி வந்ததால், கிறிஸ்தவ மற்றும் கிறிஸ்தவர் அல்லாத கிராமங்களுக்கு இடையில் கலவரச் சூழல் உருவாகி வந்தது. அதற்கான காரணங்கள்: (1) கிராமத் திருவிழாவிற்கு சந்தா செலுத்தி வந்த கிராமத்தினர் கிறிஸ்தவ மதத்தைத் தழுவியபின் சந்தா தராதது. (2) உள்ளூரில் நடக்கும் மத ரீதியான திருவிழாக்களிலும் பழங்குடியினர் நடனம் போன்றவற்றிலும் அவர்கள் பங்கு கொள்ளாதது. (3) ராஜா திருவிழா, மகர சங்கராந்தி பண்டிகை மற்றும் பிற பண்டிகை காலங்களில் நிலத்தை உழுவது பழங்குடியினரின் பாரம்பர்யத்திற்கு எதிரானதாக இருந்து வந்திருக்கிறது. கிறிஸ்தவர்கள் அந்த சமயங்களில் நிலத்தை உழுது இருக்கிறார்கள். இதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள்’ என்று கமிஷன் கூறியிருக்கிறது. 
மேலும், ‘சனாதன தர்மத்தை இழிவுபடுத்தும் விதத்தில் ஸ்டெய்ன்ஸ் பிரச்சாரம் செய்து வந்தார்’ என்றும் குறிப்பிடுகிறது. ‘மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளவர்கள் மத்தியில் தொழுநோயை ஒழிக்கும் பணியில் ஈடுபட்டிருந்ததுடன், ஸ்டெய்ன்ஸ் மிஷனரி வேலைகளிலும் ஈடுபட்டிருந்தார். அந்தப் பகுதியில் வாழும் மக்களிடம் தனது மத நம்பிக்கைகளை பரப்புவதை கடமையாகக் கொண்டு செயல்பட்டு வந்தார். அவரது மிஷனரி நடவடிக்கைகள், பழங்குடியினத்தவரை மத மாற்றம் செய்து கொள்ள வைத்தது’ என்று கமிஷனின் அறிக்கை கூறுகிறது.

கிறிஸ்தவ மிஷனரிகள் மீதான சிறு தாக்குதல்கள், இந்தியாவில் நீண்டகாலமாக நிகழ்ந்து வருகின்றன. ஆனால் வாஜ்பாய் ஆட்சியில் ஆறு ஆண்டு காலத்தில் அதுபோன்ற சம்பவங்களுக்கு இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் முன் எப்போதும் இல்லாத வகையில் பரபரப்பூட்டும் விளம்பரங்கள் தரப்பட்டன.

....இரு வேறு மத நம்பிக்கைகளை பின்பற்றினாலும், அவற்றை பின்பற்றுகிற மக்களிடையே நல்லுறவு வளர்க்கப்பட வேண்டும் என்ற வகையில், ஹிந்துக்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் இடையில் நல்லுறவு வளர்க்கப்பட வேண்டும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

...சமூக சேவை என்ற பெயரில் தாழ்த்தப்பட்ட மக்களையும், மலைவாழ் மக்களையும் மற்ற வகுப்பினரில் துன்பத்தில் உழலும் மக்களையும் திட்டமிட்டு திரள் திரளாக மதமாற்றம் செய்வதை, மதச் சுதந்திரத்தின் பெயரால் நியாயப்படுத்த முடியாது. மதச் சுதந்திரத்தை அப்பட்டமாகத் துஷ்பிரயோகம் செய்யும் இந்த போக்கை எதிர்ப்பதற்காக, ஹிந்து அமைப்புகளைக் குற்றம்சாட்ட முடியாது. மோசடியாக அல்லது ஆசை காட்டி மத மாற்றம் செய்வதற்கு எதிராக சட்டம் கொண்டு வர வேண்டும் என்று அவை கோரிக்கை வைப்பதையும் குற்றம் கூற முடியாது. மத மாற்றம் குறித்த காந்திஜியின் தெள்ளத் தெளிவான கருத்துக்களை இங்கே தர விரும்புகிறேன்.

“ஒரு நபரை மற்றொரு நபர் மத மாற்றம் செய்வதில் எனக்கு நம்பிக்கை இல்லை. எனது முயற்சியானது ஒரு போதும் அடுத்தவர்களின் நம்பிக்கையை குலைப்பதாக இருக்கக் கூடாது. எல்லா மதங்களின் உண்மையான நம்பிக்கையும் இதைத்தான் குறிப்பாக உணர்த்துகின்றன... மதம் என்பது ஆழ்ந்த, தனிப்பட்ட ஒரு விஷயம். அது இதயத்தைத் தொடுகிறது... என் சில நோய்களை குணப்படுத்திய மருத்துவர் ஒரு கிறிஸ்தவர் என்பதால், நான் ஏன் எனது மதத்தை கிறிஸ்தவ மதமாக மாற்றிக் கொள்ள வேண்டும்? அவர் உண்டாக்குகிற தாக்கத்தால் நான் மதம் மாறி விட வேண்டும் என்று டாக்டரும் ஏன் எதிர்பார்க்க வேண்டும்?”

(யங் இந்தியா, 23, ஏப்ரல், 1931) 
“என்னிடம் அதிகாரம் இருந்தால், என்னால் சட்டம் இயற்ற முடியுமானால், எல்லா மத மாற்ற நடவடிக்கைகளையும் நிறுத்த சட்டம் இயற்றுவேன். மிஷனரிகளின் செயல்பாடுகள் ஹிந்து குடும்பங்களின் உடை, பொது பழக்கவழக்கங்கள் நடத்தை, மொழி, உணவுப் பழக்கம் ஆகியவற்றில் குறுக்கீடு செய்வதாக இருக்கின்றன”.

(ஹரிஜன், 5, நவம்பர், 1935)

“இந்தியாவிலும் மற்ற இடங்களிலும் இன்று நடக்கும் முறையை பார்க்கும்போது மத மாற்ற யோசனைக்கு ஒத்துப் போவது என்பது என்னால் இயலாது. இது ஒரு பிழை. ஏனென்றால், உலகம் அமைதியை நோக்கி முன்னேற இது மிகப் பெரிய இடையூறு. ஒரு கிறிஸ்தவன், ஒரு ஹிந்துவை ஏன் கிறிஸ்தவ மதத்திற்கு மத மாற்றம் செய்ய விரும்புகிறான்? ஹிந்துவாக இருப்பது நல்லது. ஹிந்துவும் இறைவன் படைத்த மனிதன்தான் என்று ஏன் கிறிஸ்தவனால் திருப்தி அடைய முடியவில்லை?”

(ஹரிஜன், 30, ஜனவரி, 1937)

த மாற்றங்கள் தொடர்பான ஹிந்துக்களின் பயங்களைக் களைய முன்வர வேண்டும் என்று, நல்லுணர்வு கொண்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கும், அவற்றின் தலைவர்களுக்கும் நான் வேண்டுகோள் விடுக்கிறேன். (2005-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மறைந்த) பெரிதும் மதிக்கப்பட்ட ஆர்ச் பிஷப் அருளப்பா ஒரு சமயம் என்னிடம் ‘உங்களது தேசிய கலாச்சார கோட்பாட்டை நான் முற்றிலுமாக ஆமோதிக்கிறேன். பிறப்பினால் நான் ஒரு இந்தியன். கலாச்சாரத்தால் நான் ஒரு ஹிந்து. மத நம்பிக்கையால் நான் ஒரு கிறிஸ்தவன்’ என்று கூறியதை கிறிஸ்தவ அமைப்புகளுக்கும் அவற்றின் தலைவர்களுக்கும் நான் நினைவூட்ட விரும்புகிறேன்.

இந்தியாவின் பொதுவான கலாச்சாரத்தின் சகிப்புத் தன்மை, பெருமை ஆகியவை எல்லோராலும் உண்மையாகவே போற்றத்தகுந்த ஒன்று. அதே சமயம், ஹிந்து அமைப்புகளுக்கான எனது வேண்டுகோள், ‘உணர்ச்சி தூண்டப்பட்ட கோபத்துடனும், தீவிரவாதத்துடனும் கிறிஸ்தவ சமயத்தை அணுக வேண்டாம்’ என்பதாகும். பேச்சுவார்த்தைக்கும், இணக்கத்திற்குமான எல்லாக் கதவுகளையும் நாம் திறந்து வைப்போம். அதற்கு முரணான எல்லாக் கதவுகளையும் மூடுவோம்.