தான் பெற்ற நோபல் பரிசை விட உயர்ந்தவர் ‘வெங்கி’ ! – எஸ். குருமூர்த்தி

லோ! நீங்கள்தானே ராமகிருஷ்ண வெங்கட்ராமன்? நான் நோபல் பரிசு பௌன்டேஷன் காரியதரிசி பேசுகிறேன். இந்த ஆண்டு (2009) ரசாயனத்துறையில் ஆய்வுக்கான நோபல் பரிசு உங்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. உங்களுக்கு என்னுடைய நல்வாழ்த்துக்கள்’ – இப்படி ஸ்வீடன் நாட்டு ஆங்கிலத்தில் ஒருவர், லண்டனில் வசிக்கும் விஞ்ஞானி வெங்கட்ராமனுக்கு டெலிஃபோன் செய்து கூறியபோது ‘அம்பி’ என்று வீட்டிலும், ‘வெங்கி’ என்று நண்பர்களாலும் செல்லமாக அழைக்கப்படும் வெங்கட்ராமன், யாரோ தனக்கு காதில் பூ சுற்றுகிறார்கள் என்றுதான் நினைத்தார். 


வெங்கட்ராமன் - thuglak.com
வெங்கட்ராமன்

அக்டோபர் 7-ஆம் தேதி அதிகாலை நேரம். உடனே வெங்கி, நோபல் பௌண்டேஷன் தலைவருக்கு டெலிஃபோன் செய்தார். காரியதரிசி கூறிய செய்தி உண்மையே என்று அவர் கூறிய பிறகுதான், தனக்கு நோபல் பரிசு கிடைத்திருக்கிறது என்று நம்பினார். அவருடைய மனைவி அப்போது வாக்கிங் போயிருந்தார். மனைவியிடம் செல்ஃபோன் கிடையாது. வெங்கியிடம் கார் கிடையாது. சைக்கிள் சவாரி செய்துதான் அவருடைய அலுவலகத்திற்கு தினசரி போய் வருகிறார். அவருடைய அப்பாவும் சகோதரியும் அமெரிக்காவில் சியாட்டில் நகரில் வசிக்கிறார்கள். அப்போது அங்கு இரவு 2 மணி. அகாலத்தில் அவர்களைத் தொந்தரவு செய்ய மனமில்லை. தான் நோபல் பரிசு பெற்ற அரிய செய்தியை யாரிடமும் வெங்கியால் பகிர்ந்து கொள்ள முடியவில்லை. 

வெங்கி தமிழ்நாட்டில் சிதம்பரத்தில் பிறந்தவர். அவருடைய தந்தை ராமகிருஷ்ணன், பரோடா நகரில் உள்ள சயாஜி பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகச் சேர்ந்ததால், அங்கேயே வெங்கி தன்னுடைய படிப்பைத் தொடர்ந்து, பட்டப் படிப்பை முடித்தார். மருத்துவப் படிப்புக்கு தேர்ச்சி அடைந்த பிறகும், வெங்கி பி.எஸ்.ஸி. பௌதிகம் படிக்க விரும்பி கல்லூரியில் சேர்ந்தார். அவர் அதிகமாகக் கூச்சப்படும் மாணவராக இருந்தார், பொறுமைசாலி, கடும் உழைப்பாளி. இப்படியெல்லாம் அவருடைய ஆசிரியர்கள் மாணவரான அவரைப் பற்றி நினைவுகூர்கிறார்கள். 

இப்போது நோபல் பரிசு பெற்ற அவரைப் பற்றிப் பத்திரிகைகள் பலவகையிலும் புகழ்ந்து எழுதியிருக்கின்றன. சர் சி.வி. ராமன், சந்திரசேகர், ஹர்கோபிநாத் கொரனா ஆகிய மூன்று இந்தியர்கள் இதுவரை விஞ்ஞானத்துறையில் நோபல் பரிசு பெற்றிருக்கிறார்கள். இந்த வகையில் இந்திய வம்சாவழியில் நோபல் பரிசு பெற்ற நான்காவது விஞ்ஞானியாகி இருக்கிறார் வெங்கி. 

அவரைப் பற்றி பல விவரங்கள் இப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன. இதுவரை குடத்து விளக்காக இருந்த வெங்கியைப் பற்றி வெளிவரும் விவரங்கள், ஒரு மேதை எப்படி அந்தரங்க ஆன்மீக அனுபவமும், பணிவும் உள்ளவராக இருக்க முடியும் என்பதை விளக்குகின்றன. மேதாவிலாசமும், அடக்கமும் சேர்ந்திருப்பது அரிது. புகழும், எளிமையும் இணைந்திருப்பது கடினம் என்று உள்ள காலகட்டத்தில், வெங்கியின் வாழ்க்கை நம் இளைஞர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்க முடியும். 

‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ பத்திரிகை வெங்கி நோபல் பரிசு பெற்ற செய்தியை வெளியிடும்போது – ‘தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் நோபல் பரிசு பெற்றிருக்கிறார், பணிவுடன்’ என்று தலைப்புக் கொடுத்திருந்தது. ‘பணிவுடன்’ என்று தலைப்புச் செய்தியில் வருவது மிகவும் அரிது. காரணம் – வெங்கி நோபல் பரிசு பெற்றது எப்படி ஒரு அரிதான செய்தியோ, அப்படியே அந்தப் பரிசை அவர் பணிவுடன் ஏற்றுக் கொண்டதும் ஒரு அரிய செய்தி. அவரிடம் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை எப்படிப்பட்ட பணிவை கண்டது என்பதைப் பற்றி பின்பு பார்ப்போம். 

ஒரு மனிதனை உலகம் பொதுவாக எப்படி நோக்குகிறது என்பதைச் சுருக்கமாக பார்க்கலாம். பிரபலமானவர்களின் சாதாரணமான பழக்கங்கள், விவரங்களைப் பற்றி அறிய சாதாரணமான மக்கள் ஆசைப்படுவார்கள். ‘இந்த அரசியல் தலைவருக்கு அந்த வகையான நாய்க் குட்டி பிடிக்கும்; அந்த சினிமா நடிகைக்கு இந்தக் கலர் புடவை என்றால் உயிர்’ – இப்படியான செய்திகளுக்கு மவுசு. பண்பான உள்ளங்களுக்கு சாதாரணமான மனிதனின் அசாதாரணமான குணங்களில் ஈடுபாடு இருக்கும். ஒரு ஏழை பெரிய தொகையை தர்மத்திற்கு அளிப்பது போன்ற அசாதாரணமான விஷயங்களில் அவர்களுக்கு ருசி இருக்கும். 

இப்படி அசாதாரணமான மனிதர்களின் சாதாரண விஷயங்களும், சாதாரணமான மனிதர்களின் அசாதாரணமான குணங்களும்தான் செய்திகளாக வருகின்றன. ஆனால் இவை இரண்டுக்கும் அப்பாற்பட்ட பெரிய மனிதர்களின் ஆன்மீகப் பண்புகள் சாதாரணமாக வெளிவருவதில்லை. அப்படி வெளிவந்தாலும் அது பிரபலமாவதில்லை. இதைத்தான் வெங்கி பற்றி வெளிவந்த செய்திகள் விளக்குகின்றன. அவரைப் பற்றி பிரபலமாக வெளிவந்த பல செய்திகள் அவருடைய பூரணத்துவத்தை வெளிக்கொண்டு வருவதாக அமையவில்லை. அவை எல்லாமே பொதுவாக வெங்கி என்கிற அசாதாரணமான மனிதரின் சாதாரண விஷயங்கள் பற்றியே அமைந்து விட்டன.

ஆனால், வெங்கி ஒரு பண்புள்ள, பணிவுள்ள மேதை மட்டுமல்ல. அவர் பூரணத்துவம் நிரம்பியவர், ஆன்மீக அனுபவம் நிறைந்தவர் என்பதை, அவர் நோபல் பரிசு தனக்கு கிடைத்ததை எப்படி சாதாரணமான ஒரு விஷயமாக ஏற்றுக் கொண்டார் என்பதிலிருந்து புரிந்து கொள்ளலாம்.

நோபல் பரிசு பெற்ற அவரை பி.பி.சி. நிறுவனம் பேட்டி கண்ட போது, அவர் ‘நோபல் பரிசு தனக்கு கிடைத்தது பெரிய கௌரவம்’ என்று பணிவாகக் கூறி விட்டு, ‘ஆனால் பரிசுகளால் மட்டும் ஒரு படைப்பை காணக் கூடாது. அதாவது, பரிசு பெற்று விட்டால் மட்டுமே அது பெரியதாகி விடாது. பரிசு பெறாததால் அதன் மகிமை குறைந்து விடாது. பரிசுகளால் ஒரு படைப்பின் மதிப்பை காண்பது என்பது தவறு. பத்திரிகைகளும் சரி, பொதுமக்களும் சரி இந்த தவறையே செய்கிறார்கள். ஏன் இரண்டு நாட்களுக்கு முன் கூட எந்த பத்திரிகையும் என்னுடைய ஆய்வை பற்றி ஒரு வார்த்தை பேசவில்லையே?’ என்று நிருபரையே கேட்டார்.

“யார் யாருக்கு எந்த விஷயங்களில் நாட்டம் இருக்கிறதோ அந்த விஷயங்களில் அவரவர்கள் ஆய்வு செய்கிறார்கள். ஆழமாகப் படிக்கிறார்கள். உண்மைகளை அறிகிறார்கள். அதுதான் உண்மையாக வேலை செய்யும் முறை. அப்படி வேலை செய்யும்போது பரிசு கிடைக்கிறதோ, இல்லையோ அது இரண்டாம்பட்சமே. பரிசு கிடைப்பது முக்கியமான விஷயமல்ல” என்றார்.

அதாவது, பரிசைவிடக் கடமை முக்கியம். இதை வேறு யாரோ, எங்கோ கூறியதுபோல் இல்லையா? ஆம். பகவத் கீதையில் கிருஷ்ண பரமாத்மா கூறுகிறார்: ‘கடமையில் ஈடுபடு; பலனை (பரிசை) எதிர்பாராதே’. இதையே கிருஷ்ண பகவான் பல வகையான உதாரணங்களுடன் ‘கர்ம யோகம்’ என்று விவரிக்கிறார்.

வெங்கியும் கடமையைப் பரிசுக்கும் மேலாக கருதுகிறார் என்றால் – அதுவும் அரிய பரிசு கிடைத்த பிறகும் அந்த பரிசை விட தன் கடமைதான் உயர்ந்தது என்று அந்த அரிய பரிசைப் பெற்ற தருணத்தில் கூறுகிறார் என்றால் – கர்ம யோகம் என்பது அவருடைய பண்புடன், சாதாரண வாழ்க்கையின் அனுபவத்துடன் இரண்டறக் கலந்து விட்ட விஷயம் என்று தோன்றுகிறது.

புகழின் உச்சாணிக்குச் சென்று விட்ட விஞ்ஞானியான வெங்கியின் பேச்சில், தற்பெருமை துளியும் இல்லை. பண்பும் பணிவும் இருக்கிறது. காரணம், அவருக்குக் கிடைத்த பரிசினால் அவர் மனம் தடுமாறவில்லை. அந்த நேரத்திலும் பரிசைவிட, கடமைதான் உயர்ந்தது என்பதை அவர் மறக்கவில்லை. திடீரென்று ஏற்பட்ட புகழினால் அவர் தன்னுடைய ஆன்மீக சக்தியை இழக்கவில்லை.

அதோடு நிற்கவில்லை அவர். ‘நோபல் பரிசு என்பது ஒரு விஞ்ஞானியின் தரத்தைக் குறிப்பிடவில்லை’ என்றும் கூறினார் அவர். நம் நாட்டின் விஞ்ஞானிகளைப் பற்றிக் குறிப்பிட்டு ‘பாரத நாட்டில் தரமான விஞ்ஞானிகள் இருக்கிறார்கள். ஆனால், பத்திரிகைகள் மேற்கத்திய நாட்டின் பரிசான நோபல் பரிசு போன்ற பரிசுகளால் சொக்கிப் போகின்றன. அந்தப் பரிசுகளை ஆதாரமாக வைத்து, நம் நாட்டு விஞ்ஞானிகளின் தரமான பணிகளை அந்தப் பத்திரிகைகள் கணிப்பதால், நமது விஞ்ஞானிகளின் நல்ல செயல்கள் வெளிப்படுவதில்லை’ என்றும் கூறினார்.

அதாவது, நோபல் பரிசு பெற்றால் ஒருவர் உயர்ந்த விஞ்ஞானி, பரிசு பெறாத விஞ்ஞானி உயர்ந்தவர் அல்ல என்கிற போக்கு நம் நாட்டு பத்திரிகைகளுக்கு இருப்பதைக் கண்டிக்கிறார் அவர். இப்படி அவர்தான் உணர்ந்த உண்மையைக் கூறும்போது, தான் பெற்ற பரிசின் மகிமையையே, தன்னுடைய பெருமையையே குறைத்துப் பேசுகிறார்.

நம்முடைய விஞ்ஞானிகளுக்கு அவருடைய வேண்டுகோள் என்ன? ‘நோபல் பரிசை உங்களுடைய படைப்பின் நோக்கமாக அல்லது உங்களுடைய தரத்தின் அங்கீகாரமாகக் கருதி விடாதீர்கள். உங்களுடைய படைப்புகள் நோபல் பரிசுகளை விட உயர்ந்தவை. தரமானவை’.

நம் நாட்டில் சமீபகாலத்தில் அயல் நாட்டுப் பரிசுகளைப் பெற்றவர்கள், அவர்கள் பெற்ற பரிசைப் பதாகையாக ஏந்தி, தங்களை எவ்வளவு பெருமைப்படுத்தி, மற்றவர்களைச் சிறுமைப்படுத்துகிறார்கள் என்பது பலருக்கும் தெரிந்த விஷயம். அவர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது வெங்கி எவ்வளவு வித்தியாசமானவர்; பண்பானவர்; பணிவானவர் என்பது விளங்கும். இதற்குக் காரணம், அவரின் உள்ளே உறங்கும் ஆன்மீகமும், கர்மயோகப் பண்புமே.

நம் நாட்டு இளைஞர்களுக்கு அவர் கூறுவது : ‘இனிமேல் நீங்கள் வெளிநாடு சென்று உயர் படிப்பு, ஆய்வு செய்ய வேண்டிய அவசியமே இல்லை. இங்கேயே அந்த விதமான, தரமான விஞ்ஞான ஆராய்ச்சி சாலைகள் பல இருக்கின்றன. நான் 1971-ல் வெளிநாடு சென்ற போது இருந்த நிலை இப்போது அடியோடு மாறி விட்டது. இப்போது ‘இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சையின்ஸ்’ போன்ற புகழ் பெற்ற நிறுவனங்கள் இருக்கின்றன. தரமான விஞ்ஞானிகள் பலர் இங்கே இருக்கிறார்கள்’ என்றும் கூறினார் அவர்.

வெங்கி அவர்களுக்குக் கிடைத்திருப்பது மிகவும் அரிய, உயர்ந்த பரிசு. ஆனால், பரிசு கிடைத்தாலும், கிடைக்கா விட்டாலும் ஒன்றுதான். தரமான வேலைக்குப் பரிசு கிடைக்கா விட்டாலும் அதன் தரம் குறையாது. பரிசு கிடைத்து விட்டதால் அதன் தரம் உயர்ந்து விடாது என்று நோபல் பரிசு பெற்ற யாரும் கூறாத உண்மையை கூறி, அந்தப் பரிசின் உண்மையான தரத்தை விவரித்திருக்கிறார் அவர். நோபல் பரிசைவிட உயர்ந்தவர் அவர். அதை மக்கள் புரிந்து கொண்டால், அதுவே அந்த உயர்ந்த மனிதருக்கு மக்கள் அளிக்கும் பரிசாக அமையும்.


விஞ்ஞானி வெங்கட்ராமனின் திடீர் சொந்தங்கள் !
பிரிட்டனில் வாழும் தமிழரான வெங்கட்ராமனுக்கு நோபல் பரிசு கிடைத்தாலும் கிடைத்தது. எல்லோரும் கொண்டாட ஆரம்பித்து விட்டார்கள். இந்தியருக்குக் கிடைத்த பரிசு, தமிழருக்குக் கிடைத்த பரிசு – என்று ஆள் ஆளுக்குத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு கூத்தாடுகிறார்கள். சில நாட்களுக்கு முன்பு ‘வெங்கட்ராமன்’ என்று சொன்னால், யாரோ அனாமதேயப் பேர்வழி என்று, அவரவர் வேலையைப் பார்த்துக் கொண்டு போயிருப்பார்கள். நோபல் பரிசு அறிவிக்கப்பட்டதுமே நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. ஒரே க்ஷணத்தில் புகழின் உச்சாணிக் கொம்புக்குப் போய்விட்டார். அகில உலக பிரமுகராகி விட்டார்.

அவருக்கு இந்தப் பரபரப்பு, புகழ், மீடியா வெளிச்சம் இதில் எல்லாம் துளிக் கூட அக்கறை இருக்கிற மாதிரித் தெரியவில்லை. ‘தேமேனென்று நான் பாட்டுக்கு, நான் உண்டு என் வேலை உண்டு என்று இருந்தேன். என்னைப் போய் பிரபலமாக்கி விட்டார்களே’ என்று அவர் வருத்தப்படாத குறை. எல்லோரும் வலியப் போய் அவரிடம் சொந்தம் கொண்டாட ஆரம்பித்து விட்டார்கள். அவருடைய ஈ-மெயில் பெட்டி நிரம்பி வழிகிறது. ‘தினசரி வந்து குவிகிற ஈ-மெயில்களை சுத்தம் செய்வதற்கே ஒரு மணிநேரம், இரண்டு மணி நேரம் ஆகிறது. என் மீது இரக்கம் இல்லையா? நேற்று வரை இவர்களை யாரென்றே தெரியாதே’ என்று எரிச்சல் பட்டிருக்கிறார் வெங்கட்ராமன். அவருடைய எரிச்சலும், கோபமும் ரொம்ப நியாயமானதுதான்.

பொதுவாகவே உலகம் அசடர்களாலும், மூடர்களாலும் நிரம்பியதுதான். வெகுஜனங்களுக்கு நுண்ணுணர்ச்சி ரொம்பக் குறைவு. இவர்களுக்கு ஏற்ற மாதிரிதான் மீடியாவும் இருக்கிறது. மூடர்களும், அசடர்களும்தானே அங்கேயும் இருக்கிறார்கள்? நோபல் பரிசு கிடைத்தது என்றதும், தங்களுக்கும் அவருக்கும் ஜென்ம ஜென்மாந்திர தொடர்பு இருக்கிற மாதிரி, மேலே விழுந்து எழுதித் தள்ளி விடுவார்கள். தொலைக்காட்சிகள், அந்த நபர் பாத்ரூம் சென்றால் கூட மைக்கும், கேமராவுமாகப் பின்னாலேயே அலையும். இந்த மீடியா போதையை ஏற்றிக் கொண்டு, வெகுஜனங்களும் தலைகால் புரியாமல் ஆடித் தீர்த்து விடுவார்கள். வெங்கட்ராமன் விஷயத்தில் இந்தத் திருக்கூத்துதான் நடந்து கொண்டிருக்கிறது.

மீடியா உலகம் துக்கத்தையும் கொண்டாடும், சந்தோஷத்தையும் கொண்டாடித் தீர்க்கும், விளம்பரப்படுத்தும். சாதாரணமாக, மேல ரத வீதியில் இருக்கிற அகில உலகத் திரைப்பட ரசிகர்கள் சங்கம் தருகிற விருதுகளைப் பற்றியே பக்கம் பக்கமாக எழுதித் தள்ளுகிறபோது, நோபல் பரிசு பெற்றவரைச் சும்மாவா விட்டு வைப்பார்கள்? இல்லை, தொலைக்காட்சிகள்தான் வாயில் விரலை வைத்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்குமா?

வெங்கட்ராமன் சிதம்பரத்துக்காரர் என்ற தகவல், எப்படியோ இவர்கள் கையில் கிடைத்துவிட்டது. இதை வைத்து வெங்கட்ராமனைப் பந்தாடி விட்டார்கள் பந்தாடி. ஒரு பத்திரிகை, வெங்கட்ராமன் பிறந்த வீடு என்று, ஒரு வீட்டைப் படம் பிடித்துப் போட்டுக் கட்டுரை எழுதியது. இன்னொருத்தர் “இந்த இடத்தில் நின்று கொண்டுதான் வெங்கட்ராமன், ‘நிலா நிலா ஓடி வா, நில்லாமல் ஓடி வா’ என்று நண்பர்களுடன் நிலாப் பாட்டுப் பாடி விளையாடினார்” என்றார். ஒரு தொலைக்காட்சி சேனல் இந்த இடத்தில்தான் வெங்கட்ராமன் கில்லி விளையாடினார் என்று படம் பிடித்துக் காட்டியது.

கோவிந்தராஜனோ, கோவிந்தசாமியோ, யாரோ ஒருத்தர் “நான்தான் வெங்கட்ராமனுக்கு புரொஃபஸர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அவருக்குப் பாடம் சொல்லிக் கொடுத்தேன்” என்று ஆசிரியச் சொந்தம் கொண்டாடிப் பேட்டி கொடுத்தார். வெங்கட்ராமன் ஆடிப் போய் விட்டார் ஆடி. “நான் சிதம்பரத்திலேயே படித்ததில்லை. மூன்று வயதிலேயே சிதம்பரத்திலிருந்து குஜராத் சென்று விட்டோம்” என்கிறார் வெங்கட்ராமன். அப்படியென்றால் இந்தக் கோவிந்தராஜன், கோவிந்தசாமிகள் எல்லாம் யார்? ஒருவர் திடீரென்று பிரபலமானால் இப்படித்தான் பல பேர் புரூடா விட்டுச் சொந்தம் கொண்டாடிக் கொண்டு கிளம்புவார்கள் என்பது வெங்கட்ராமனுக்குத் தெரியாது. சிதம்பரத்தில் விஞ்ஞானி வெங்கட்ராமன் மன்றம், விஞ்ஞானி வெங்கட்ராமன் நூலகம், விஞ்ஞானி வெங்கட்ராமன் காய்கறிக் கடை என்று வெங்கட்ராமனின் திடீர் அபிமானிகள் கிளம்பினாலும் கிளம்புவார்கள். யாராவது பாட்டி, ‘என் மடியில்தான் வெங்கட்ராமன் படுத்துத் தூங்குவான். நான் அவனுக்கு காக்கா – நரிக் கதையெல்லாம் சொல்வேன்” என்று புரூடா விட்டுத் தன் சொந்தத்தை விரித்தாலும் விரிப்பாள்.



இப்படிச் சொந்தம் கொண்டாடிக் கொண்டு குவிந்தவைதான் அந்த ஈ - மெயில்கள். இதற்காக அவர் வருத்தப்படலாமா? அவர் ஒரிஜினல் அறிவுஜீவி. அதனால் இந்தப் பிடுங்கல்கள் எல்லாம் அவருக்கு அருவருப்பைத் தருகின்றன. எரிச்சலைத் தருகின்றன. அவர் தமிழகம் பக்கமே தலைவைத்துப் படுத்து விடக் கூடாது. இங்கே அவர் வருகிறார் என்கிற விஷயம் வெளியே தெரிந்தால், விருதுகள் வழங்கவும், பொன்னாடைகள் போர்த்தவும் ஒரு பெரும் கும்பல் நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு காத்துக் கிடக்கிறது. ஜாக்கிரதை வெங்கட்ராமன்!