பாகிஸ்தான் பயணம் – எல்.கே. அத்வானி

என் தேசம், என் வாழ்க்கை - 35

மே – ஜூன் 2005-ல் என்னுடைய பாகிஸ்தான் பயணம், மனித முயற்சிகளை மர்பி விதிக்கு உதாரணம் ஆக்கியது. சில நேரங்களில் எதைச் செய்தாலும் தவறாகப் போகக் கூடிய விதியை நினைவுபடுத்தியது. 

...நான் பாகிஸ்தான் போனபோது, அமைதியின் தூதுவனாக இரு நாட்டு உறவுகளும் மேம்பட வேண்டும் என்ற மனப்பூர்வமான ஆவலுடன்தான் சென்றேன். என்னுடைய பயணம் அதற்கு முடிந்தவரை உதவியிருக்கிறது என்றுதான் நான் மனப்பூர்வமாக நம்புகிறேன். முகமது அலி ஜின்னாவின் நினைவகத்துக்குப் போயிருந்தேன். ஜின்னா 1947-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11-ஆம் தேதி பேசியவற்றின் சாரம் தொனிக்கும் சில கருத்துக்களை நான் அப்போது வெளியிட்டேன். ஜின்னாவின் பேச்சு, பாகிஸ்தான் அரசியல் அமைப்பு நிர்ணய சபையில் அப்போது பேசியது. ஆனால் அது இந்தியாவில், அதுவும் என் கட்சியினரிடையே பெரிய சலசலப்பை ஏற்படுத்தி விட்டிருந்தது. நான் ‘ஹிந்துத்துவா’வைப் புறக்கணித்து, கொள்கை ரீதியாகத் தடம் மாறிவிட்டேன் என்று விமர்சிக்கப்பட்டேன். நான் துரோகி என்றும் கூட பேசப்பட்டது. 

இந்தப் பிரச்சனை நான் பாகிஸ்தானில் இருக்கும்போது ஆரம்பித்து, நான் அங்கிருந்து திரும்பி டெல்லி வரும்போது உச்சக்கட்டத்தை எட்டியிருந்தது. 2005 டிசம்பரில் நான் பி.ஜே.பி. தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டேன். எனக்கு அப்பதவி கிடைத்து ஓராண்டே ஆகியிருந்தது. இந்த நிகழ்ச்சி கட்சியினரிடையே பிளவை ஏற்படுத்தும் சூழ்நிலையாக மாறி, பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை தோற்றுவித்திருந்தது. இவை என் மனதில் தீராத வலியையும் ஆழமான சோகத்தையும் ஏற்படுத்தி விட்டன. 

...என்னுடைய பாகிஸ்தான் பயணம் தனிப்பட்டதும் அரசியல் முக்கியத்துவமும் வாய்ந்ததுமாகும். என்னுடைய பிறந்த ஊர் கராச்சி. 57 ஆண்டுகளுக்கு முன் பிரிக்கப்படாத இந்தியாவின் ஒரு பகுதி அது. பிரிவினைக்குப் பின் அங்கு செல்லும் என்னுடைய இரண்டாவது பயணம் அது. இந்தியாவின் செய்தி ஒலிபரப்புத்துறை அமைச்சராக இருந்த காலத்தில் 1979-ல் அங்கு சென்றிருந்தேன். அது கராச்சியை மட்டும் பார்த்த மிகக் குறுகிய பயணம். தவிர, நான் அப்போது தனியாகப் போயிருந்தேன். என்னுடைய மனைவி கராச்சியில் பிறந்து வளர்ந்த சிந்து பெண்ணாக இருந்தாலும், பிரிவினைக்குப் பிறகு அவள் அங்கு போனதே இல்லை. என் மகன் ஜெயந்த், அவன் மனைவி கீதிகா, மகள் பிரதிபா ஆகியோருக்கு இதுவே முதல் பயணம். ஆகவே சிந்து சென்று அங்கு வாழும் சிந்திக்களோடு பழக வேண்டும் என்பது அவர்கள் தணியாத ஆவல். 

பாகிஸ்தான் பிரிவினையால் பாதிக்கப்பட்டவர்களாக எங்களை எண்ணியதால், சிந்து பயணம் எங்களுக்கு ஆர்வம் மிக்கதாகவும் தோன்றியதில் வியப்பில்லை. மேலும் எனது பயணத்தின் மூலம் தனிப்பட்ட முறையில் நம் அண்டை நாட்டுடன் உள்ள தற்போதைய உறவு நிலையை மாற்ற முடியும் என்று நான் எண்ணினேன். இடம் பெயர்ந்து வந்த அகதிகள் தான் பிரிவினையின் கொடுமையை உணர முடியும். பிரிவினைக்குப் பின் பல ஹிந்து மற்றும் சீக்கிய குடும்பங்கள் தாங்கள் பிறந்த மண்ணை ஒருமுறை கூட மிதிக்க முடியவில்லை. அதே போன்று ஆயிரக்கணக்கான முஹாஜிர்கள் தங்கள் பிறந்த மண்ணான உத்திரப் பிரதேசம், பீஹார், டெல்லி, மும்பை, போபால், ஹைதராபாத் மற்றும் இந்தியாவில் உள்ள பல இடங்களைக் காண்பதை கனவாகவே எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். 

...விமர்சனம் என்பது ஜனநாயகத்தின் இதயம். அந்த இதயம் எப்போதும் ஆரோக்கியமான சூழ்நிலையில் இருந்து வர வேண்டும். அப்போதுதான் அது தன் சக்தியை நல்ல முறையில் பேணி காக்க முடியும். குறை கூறப்படுவதை வெறுக்கும் அரசியல்வாதி ஜனநாயகவாதியாக நீடிக்க முடியாது. சர்வாதிகாரியாகத்தான் உருமாறித் தீர வேண்டும். ஆனால் இந்தக் குறை கூறல் நிலைத்து நிற்க வேண்டுமானால், சாட்டப்படும் குற்றம் அசைக்க முடியாத ஆதாரத்தைக் கொண்டதாக இருக்க வேண்டும். ஆதாரத்தை அளிக்க அதிகப்படி யான முயற்சி எடுத்துக் கொண்டு, பிறகு குற்றம் சாட்ட வேண்டும். 

..என்னைச் சுற்றி எழுந்த கருத்து வேறுபாடு, நான் பாகிஸ்தான் சென்ற போது பாகிஸ்தானின் தோற்றத்துக்குக் காரணமாக இருந்தவரும், பாகிஸ்தானின் முதல் கவர்னர் ஜெனரலுமான முகமதுஅலி ஜின்னா பற்றியது. நான் அவருடைய நினைவிடத்திற்குச் சென்றிருந்தபோது, அவருடைய முந்தைய நிலை பற்றி தெரிவித்த ஒரு கருத்தே பரபரப்பிற்குக் காரணம்.

...ஜின்னா அவர்களுக்கு என் அஞ்சலியைச் செலுத்தியபின் பார்வையாளர்கள் புத்தகத்தில் கீழ்கண்டவாறு குறிப்பிட்டேன் :


ஜின்னா - thuglak.com
ஜின்னா

“பல மனிதர்கள் சரித்திரத்தில் அழிக்க முடியாத முத்திரையை பதிப்பதுண்டு. ஆனால் வெகு சிலராலேயே சரித்திரம் படைக்க முடியும். காயிதே ஆஸாம் முகமது அலி ஜின்னா அவர்கள் அத்தகைய அபூர்வமான மனிதர். இந்தியாவின் கவிக்குயில் சரோஜினி நாயுடு இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கு பெற்ற ஒப்பற்ற தலைவர். அவர் ஜின்னாவை ‘ஹிந்து முஸ்லிம் ஒற்றுமைத் தூதுவர்’ என்றார். ஜின்னா 1947 ஆகஸ்ட் 11-ல் அரசியல் நிர்ணய சபையில் உரையாற்றியபோது, ‘பாகிஸ்தானை மதச்சார்பற்ற நாடாக உருவாக்க, ஒவ்வொரு குடிமகனும் தன் மதத்தை உண்மையாக பின்பற்றுவது மட்டுமின்றி, பிற மதத்தவர்களின் மத நம்பிக்கைக்கும் அதே மதிப்பு அளிக்க வேண்டும்’ என்றார். அந்த உயர்ந்த மனிதருக்கு என் மதிப்பு மிக்க அஞ்சலி”. 

நான் நினைவகத்தை விட்டு வெளியே வரும்போது, திரளான பத்திரிகை நிருபர்கள் காத்திருந்தனர். செய்தி பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்களுமாக நிறைந்திருந்தார்கள். அவர்களிடம் சில நிமிடங்களுக்கு முன் நான் பார்வையாளர் புத்தகத்தில் என்ன எழுதி விட்டு வந்தேனோ அதே கருத்தைக் கூறினேன். உடனே தொலைக்காட்சி நிறுவனங்கள் ‘முக்கிய செய்தி’ என்ற தலைப்பில் ‘ஜின்னாவை அத்வானி மதச்சார்பற்றவர்’ என்று கூறுகிறார். ‘ஹிந்து – முஸ்லிம் ஒற்றுமையின் தூதர் ஜின்னா என அத்வானி அறிக்கை’ என்று ஒளிபரப்பத் துவங்கின. அதற்கு வலு சேர்க்கும் விதமாக நான் ஜின்னா நினைவிடத்துக்குச் சென்ற காட்சியையும் ஒளிபரப்பினர். 

இந்த ஒளிபரப்பு இடைவிடாமல் தொடர்ந்தது. இதனுடன் பா.ஜ.க.வைச் சேர்ந்த சிலர் என்னை கடுமையாக விமர்சிப்பதையும் சேர்த்து ஒளிபரப்பினர். ‘ஜின்னாவின் துரோகத்தைப் பாராட்டுபவரும், துரோகியே’ என்று கடுமையாக என்னைச் சாடினர். ‘ஜின்னா மதச்சார்பற்றவராக இருந்தால், அத்வானி தன் குடும்பத்துடன் ஏன் இந்தியாவுக்கு ஓடி வர வேண்டும்? பா.ஜ.க.வின் தலைவர் தன்னுடைய உண்மையான சுபாவத்தை காட்டியுள்ளார்’ என்றும் கூறினர். 

அடுத்த சில நாட்களுக்கு இந்த குற்றச்சாட்டும், அதற்குக் காரணமான என் பேச்சுக்களுமே எல்லா பத்திரிகைகள், தொலைக்காட்சி ஒளிபரப்புகள் ஆகியவற்றின் முக்கிய செய்தியாகக் காணப்பட்டன. அன்று மாலை கட்சியின் சில சகாக்களோடு நான் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியபோதுதான், இந்த பிரச்சாரத்தின் கடுமையான தாக்கத்தை என்னால் தெரிந்து கொள்ள முடிந்தது. 

...நான் மனசாட்சிப்படி நடந்து கொண்டதற்கு ஆதரவாக, ஜின்னாவைப் பற்றி பலரும் அறியாத இரண்டு விஷயங்களை குறிப்பிட விரும்புகிறேன். ஏனென்றால் சுதந்திரம் பெறுவதற்கு முன் இந்தியா கொண்டிருந்த இணைந்த சரித்திரத்தை இந்திய மக்களும், பாகிஸ்தான் மக்களும் புரிந்து கொள்ள வேண்டும். அதேபோல் பாகிஸ்தான் சமயச்சார்பற்ற நாடு என்ற ஜின்னாவின் கொள்கையின் பார்வையையும் புரிந்து கொள்ள வேண்டும். அவர் கண்ட கனவு நிலைக்கு மாறாக தற்போது, பாகிஸ்தான் மதச்சார்பு கொண்ட நாடாக மாறி விட்டிருப்பதையும் கவனிக்க வேண்டும். ஜின்னாவின் எண்ணத்திற்கு மாறாக பாகிஸ்தானில் சிறுபான்மை மதத்தவர்கள் உதாசீனப்படுத்தப்பட்டு வருகிறார்கள் என்பதை கவனிக்க வேண்டும்.