‘வந்தே மாதரம்’ என்போம் ! – பழ. கருப்பையா

‘வந்தே மாதரம் என்போம்’ என்று தொடங்கிய பாரதி, அடுத்த வரியிலேயே அதற்கு மொழிபெயர்ப்புச் செய்து விடுகிறான்; ‘மாநிலத் தாயை வணங்குதும் என்போம்’! 


பழ. கருப்பையா - thuglak.com
பழ. கருப்பையா

வந்தே மாதரம் என்னும் சொல்லுக்குத் தாய் நாட்டை வணங்குவோம் என்பதுதான் பொருள். வணக்கம் என்னும் சொல் பணிவு குறித்த ஒரு சொல். ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ளும்போது சொல்லப்படும் வணக்கம் வழிபாட்டைக் குறிக்காது. ஆனால் ஒரு நிகழ்ச்சி தொடங்கும்போது இறை வணக்கம் பாடப்படுகிறதே, அது வழிபாட்டைக் குறிக்கும். 

‘வந்தே’ என்கிற சொல் மரியாதை குறித்ததா, வழிபாடு குறித்ததா என்பது குறித்து இஸ்லாமியர்களிடையே ஒரு குழப்பம் நிலவுகிறது. மரியாதை குறித்ததுதான் என்று முடிவு கட்டி பள்ளிவாசலுக்கு முன்னரே வந்தே மாதரத்தைப் பாடச் செய்திருக்கின்றனர் ஒரு சாரார்; ஒருவேளை வழிபாடு குறித்ததாக இருக்குமானால், அது இறைக்குற்றம் (ஹராம்) ஆயிற்றே என்று தயங்கி நிற்கின்றனர் இன்னொரு சாரார்; அது வழிபாட்டைத்தான் குறிக்கிறது என்று உறுதியாக முடிவு செய்து கொண்டு ‘ஃபட்வா’ வெளிப்படுத்தி இருக்கின்றனர் மூன்றாவது சாரார். ‘ஃபட்வா’ என்பது கட்டுப்படாத முஸ்லிமுக்கு விதிக்கப்படும் தண்டனையையும் உள்ளடக்கிய கட்டளை. 

ஹிந்து சமூகத்தில் வழிபாடு என்பது தனிமனித விவகாரம். கணவன் காலையில் கோவிலுக்குப் போவான். மனைவி மாலையில் போவாள். காலையில் தொடங்கி இரவு வரை அவரவர்க்கு உகந்த நேரத்தில் வழிபட்டுக் கொள்ளலாம். சாத்தியிருக்கிற கோயிலுக்கு முன்னாலும் கும்பிடலாம்; ராஜாஜியைப் போல் ஒருவர் கோவிலுக்குப் போகாமலும் இருக்கலாம். இந்திய சமயங்கள் நெகிழ்ச்சிப் போக்குடையவை. ஆனால், இஸ்லாமிய சமயம் நெகிழ்வுத் தன்மை உடையதன்று. அங்கே எல்லாமே வரையறைக்கு உட்பட்டவை. 

தொழுகை நேரம் வந்துவிட்டால், தொடர் வண்டியிலோ, ஒட்டகத்திலோ, போர் முனையிலோ கூட வழிபடலாம் என்றாலும், கூடித் தொழுவதுதான் அந்தச் சமயத்தின் அடிப்படை. தொழுகை எத்தனை தடவை என்பதும், என்னென்ன நேரங்களில் என்பதும் கூட இஸ்லாத்தில் வரையறை செய்யப்பட்டிருக்கின்றன. அந்தந்த நேரங்களில் தொழுகையை நினைவூட்டி அழைப்பு விடுக்கும் பொறுப்பைப் பள்ளிவாசல் ஏற்கிறது. தொழும்போது எப்படிக் குனிவது; நிமிர்வது; பக்கவாட்டில் திரும்புவது; மண்டியிடுவது; மீண்டும் எழுவது என்பது வரையிலும் வரையறுக்கப்பட்ட சமயம் அது. அவர்களுடைய சமயம் ராணுவம் போல் கட்டிறுக்கம் உடையது. 

இறைவனுக்கு வடிவமில்லை என்கிறபோது, பள்ளிவாசலில் குவிமையம் (focus)கிடையாது என்றாகி விடுகிறது. வடிவமில்லாத இறைவனுக்குப் பள்ளிவாசலால் ஆகப் போவதென்ன என்னும் கேள்வி எழும். பள்ளிவாசல் மக்கள் குவிவதற்கான மையமாகத் திகழ்கிறது. கூட்டமாகக் கூடித் தொழுவதற்கான தேவையைப் பள்ளிவாசல் நிறைவு செய்கிறது. கூட்டமாகக் கூடித் தொழுவதன் மூலம்தான் ஓர் ‘உம்மா’வை உருவாக்க முடியும் என்று நபிகள் நாயகம் கருதுகிறார். உம்மா என்பது ஒரே மாதிரியான வார்ப்புடைய சமூகம். அந்தச் சமூகம் உலகு தழுவியது. 

ஒவ்வொரு முஸ்லிமுக்கும் விதிக்கப்பட்ட ஐந்து கடமைகளில் ஒன்று, அவன் வாழ்நாளைக்குள் ஒரு முறையாவது மெக்காவுக்குச் செல்ல வேண்டும் என்பது. மெக்காவில் ஈராக்கைச் சேர்ந்த ஈசாக்கும், லெபனானைச் சேர்ந்த ரசாக்கும், நம்முடைய இளையான்குடி புதூரைச் சேர்ந்த இபுராம்சா ராவுத்தர் மகன் அப்துல்லாவும் அருகருகே மண்டியிட்டுத் தொழும்போது, அவர்களின் தேச எல்லைகள் உடைபட்டுப் போகின்றன; ஒரு முழுமையான ‘உம்மா’ கட்டிறுக்கம் பெற்று விடுகிறது.

‘லா இலாஹ இல்லல்லாஹ்; முகம்மதுர் ரஸூலுல்லாஹ்’ – வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனே; முகம்மது நபிகள் இறைத் தூதர் என்பதை ஒப்புக் கொள்பவன்தான் இஸ்லாத்திற்கு மாற முடியும். ‘சுன்னத்’ என்பது இஸ்லாத்திற்கு ஒரு புறச்சடங்குதான்.

இஸ்லாத்தில் எல்லாமே அல்லாஹ்வின் வார்த்தைகள்தாம். அந்த வார்த்தைகள் வெளிப்பட்ட வாசல்தான் நபிகள் நாயகம். ஆகவே திருக்குரான் அல்லாஹ் பேசிய அரபு மொழியிலேயே, அல்லாஹ் பேசிய வார்த்தைகளிலேயே பாதுகாக்கப்படுகிறது. இஸ்லாத்திற்குள் இருந்து கொண்டு திருக்குரானைத் திறனாய்வு செய்வதோ, நபிகள் நாயகத்தை மறுப்பதோ அங்கே பொறுத்துக் கொள்ள முடியாத குற்றம்.

சாலமன் ருஷ்டி ஒரு இந்திய முஸ்லிம்; லண்டனில் வாழ்பவர். புகழ் பெற்ற ஒரு இலக்கியவாதி. நபிகள் நாயகத்தைக் குறித்து மதிப்பு குறைவாக எழுதிவிட்டார் என்பதற்காக, அவர் எழுதிய atanic Versus – என்ற நூலை, முஸ்லிம்களின் உணர்ச்சியை மதித்த இந்திய அரசு தடை செய்தது. அன்று அதிபர் கோமேனியின் தலைமையில் இயங்கிய ஈரானிய அரசோ, ‘ருஷ்டியைக் கொலை செய்துவிட்டு வருகிறவர் யாராயினும், அவருக்கு அரசின் சார்பாக ஒரு லட்சம் டாலர் (50 லட்சம் ரூபாய்) பரிசாக வழங்கப்படும், என்று ருஷ்டி மீது ‘ஃபட்வா’ பிறப்பித்தது. அது இன்னும் உயிர்ப்போடு இருக்கிறது. சாலமன் ருஷ்டியும் உயிரோடு இருக்கிறார்.

தன்னிடம் தஞ்சம் புகுந்துள்ள சாலமன் ருஷ்டியை உயிரோடு பாதுகாப்பதற்கு, இங்கிலாந்து அரசு இன்று வரை பல கோடிகளைச் செலவழித்து விட்டது.

வந்தே மாதரம் பாடலுக்கு விதிக்கப்பட்ட ஃபட்வா இவ்வளவு கடுமையானது இல்லை என்றாலும், ஃபட்வாக்களை இந்தப் பின்னணியில்தான் பார்க்க வேண்டும். இறைவன் யாரென்ற கேள்வி முன்வைக்கப்பட்டபோது, அவன் மிகப் பெரியவன் என்று மொட்டையாகச் சொல்லாமல், பிள்ளைக்குப் பசி நேரம் வந்துவிட்டது என்று முன்னுணர்ந்து பாலூட்டுகிறாளே தாய், அவளை விடச் சாலவும் பெரியவன் என்று மாணிக்கவாசகர் சொல்லும்போது, தாயை நமக்குத் தெரிவதால், அவளை வைத்து இறைவனைப் பற்றிய விளக்கமும் முழுமையாகப் புரிந்து விடுகிறது.

போற்றத்தக்க எதையும் தாய்க்குச் சமமாக வைத்து போற்றுவது நம் இயல்பு. நாட்டைத் ‘தாய்நாடு’ என்கிறோம்; மொழியைத் ‘தாய்மொழி’ என்கிறோம். காவிரியை ‘காவிரித்தாய்’ என்றும், கங்கையை ‘கங்கை மாதா’ என்றும் சொல்கிறோம். பெற்ற தாய் பாலூட்டியது போக, நமக்கு எஞ்சிய காலமெல்லாம் பாலூட்டும் பசுவை இரண்டாம் தாயாகப் போற்றுகிறோம். பசு நமக்கு ‘கோமாதா’. தாயின் கருவறை தாங்கிய காலம் போக எஞ்சிய காலமெல்லாம் நம்மைத் தாங்கி, கடைசியில் தன்னோடு ஐக்கியப்படுத்திக் கொள்ளப் போகும் பூமியை ‘பூமித் தாய்’ என்கிறோம். 

ஆகவேதான் ‘வந்தே மாதரம்’ என்னும் சொல் நமக்கு வசியச் சொல்லானது. அந்த வசியம் ‘தாய்’ என்பதில்தான் இருக்கிறது. நபிகளும் மிகப்பெரிய அளவுக்கு தாயைப் போற்றுகிறார் என்றாலும், அல்லாஹ் மட்டுமே அவர்களுக்கு வணக்கத்திற்குரியவன். ‘பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப் பரிந்து நீ’ (திருவாசகம் – பிடித்த பத்து - 9) என்று தாய் வழியாகத் தாயோடு தொடர்புபடுத்தித்தான் நமக்குக் கடவுள் அறிமுகமாவதால், நமக்குத் தாயும் வணக்கத்திற்குரியவள்.

‘அவள் நொந்து சுமந்தாள்; நொந்து பெற்றாள்; நான் நோகாமல் இருக்கப் பால் சுரந்தாள்; என்னைக் கைக்குள்ளேயே வைத்துப் போற்றிக் காத்தாள்; அப்படிப்பட்டவளின் உடலைச் சுடும்படி சொல்கிறார்களே, எப்படிச் சுடுவேன்?’ என்று கண்ணீர் விட்டு கதறுகிறார் பட்டினத்தார்! எல்லாவற்றையும் துறந்து கோவணத்தை மட்டுமே உடமையாகக் கொண்ட ஞானத் துறவிக்கு, தாயின் செத்துப் போன உடலைச் சுடுவதற்கு இவ்வளவு தவிப்பாய் இருக்கிறது. ‘நொந்து சுமந்து பெற்று நோவாமல் ஏந்தி முலை தந்து வளர்த்தெடுத்து’ (பட்டினத்தார்-392).

தாயைப் பற்றி நமக்கு ஊட்டி வளர்க்கப் பெற்றிருக்கும் மன உணர்வு இத்தகையது என்றால், ‘வந்தே மாதரம்’ என்னும் சொல் நம்மை ஆவேசம் கொள்ளச் செய்வதில் வியப்பென்ன...?

கரிகாற் பெருவளத்தானின் மகள் ஆதிமந்தியின் காதற்பெருங் கணவனான ஆட்டணத்தியை காவிரியில் வந்த பெருவெள்ளம் அடித்துக் கொண்டு போய்விடுகிறது. ‘மகளின் துயரத்தைத் தாய் உணர மாட்டாயா? என் கணவனை எனக்குத் தந்துவிட மாட்டாயா?’ என்று காவிரிக் கரையெங்கும் ஓடி, காவிரிக் கடலில் சங்கமமாகும் இடத்தில் நின்று கண்ணீர் விட்டுக் கதறி நிலைகுலைந்து போகிறாள் ஆதிமந்தி! ‘கன்னவில் தோழாயோ’ (சிலம்பு – வஞ்சினமாலை-13). ஆதிமந்தி, காதல் கணவனைத் ‘தோழா’ என்று விளித்துக் கதறும் கதறல், ஈராயிரம் ஆண்டு கழித்துப் படிக்கும் நமக்கும் கண்ணீரை ஆறாய்ப் பெருக்குகிறதே!

ஒரு தாயே, தன் மகளின் வாழ்வைப் பறித்து விட்டாளே என்னும் தவிப்புத்தானே, நம்முடைய கண்ணீருக்குக் காரணம்?

நமக்கு வரும் கண்ணீர் காதர் மொய்தீனுக்கு வரவில்லையே என்று சண்டை போடுவதால் ஆகப் போவதென்ன? காதர் மொய்தீனுக்குக் காவிரி என்பவள் ஒரு தாயில்லை; அது வெறும் நீரோட்டமே!


வந்தே மாதரம் பாடலை ‘தாய் மண்ணே வணக்கம்’ என்று ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துப் பாடியபோது, கேட்ட நமக்கெல்லாம் மெய்சிலிர்த்தது.

ஒருவேளை அந்தப் பாடல் ஏ.ஆர். ரஹ்மானுக்கே எந்த உணர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கவில்லை என்றால் கூட, அது எந்த வகையில் குற்றம்?

பத்துக் கோடிப் பேர் சேர்ந்து பாட இசையாததால் அவர்களோடு சண்டை போடுவதிலேயே காலத்தைக் கழித்துக் கொண்டு, மீதமுள்ள தொன்னூறு கோடிப் பேர் ‘வந்தேமாதரம்’ என்கின்ற மந்திரச் சொல் ஏற்படுத்துகின்ற உணர்ச்சியை இழந்து விட வேண்டுமா?

வேண்டிய அளவு மோதி முடித்து விட்டோம்; வேண்டிய ரத்தம் இந்திய மண்ணை ஈரப்படுத்தி காய்ந்தும் விட்டது. வேண்டிய மண்ணை மாற்றார்க்குப் பிரித்தும் கொடுத்து விட்டோம். ஓராயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை பிறக்கும் எம்மான் காந்தி சிந்திய ரத்தமே கடைசி ரத்தமாக இருக்கட்டும்.

வந்தே மாதரம்! 

 நன்றி :துக்ளக் 19_11_2009