‘இன்றைய பொருளாதார நிலை’ -திரு. எஸ். குருமூர்த்தி

திரு. குருமூர்த்தியை பேச அழைக்குமுன் ஆசிரியர் சோ கூறியது :

அடுத்து பேச வருகிறவர் எப்போதாவது சென்னைக்கு வருகிற என் நண்பர். டெல்லிக்குப் போவார். அடுத்த நாள் கரூருக்குப் போவார். பிறகு கோயமுத்தூருக்குப் போவார். ஒருநாள் தயானந்த சரஸ்வதி ஸ்வாமி பின்னால் இருப்பார். இன்னொரு நாள் கட்காரி எதிரே இருப்பார். இப்படி 24 மணி நேரம் எப்படி இவரால் உழைக்க முடிகிறது? எப்படி இவரால் இத்தனை விஷயங்களைப் படிக்க முடிகிறது? என்ற திகைப்பை ஏற்படுத்தும் திரு. குருமூர்த்தி அவர்களை (பலத்த கைதட்டல்), பொருளாதாரம் பற்றி பேச அழைக்கிறேன். 

இதையடுத்து ‘இன்றைய பொருளாதார நிலை’ என்ற தலைப்பில் திரு. எஸ். குருமூர்த்தி பேசியதிலிருந்து : 




எஸ். குருமூர்த்தி

நான் பல விஷயங்களைப் பற்றி ‘துக்ளக்’கில் எழுத நினைக்கும்போது, ‘சோ’ என்னிடம் ‘நீங்கள் பொருளாதாரம் பற்றி மட்டுமே எழுதுங்கள்; மற்ற விஷயங்கள் பற்றி வேண்டாம்’ என்பார். ‘மசூதி, சர்ச் – இதையெல்லாம் விட்டு விடுங்கள் சார்’ என்பார். ஏனென்றால் இந்தப் பொருளாதாரத்துறையில் எனக்குத் தேர்ச்சி இருக்கிறதோ இல்லையோ, தனக்கு தேர்ச்சி இல்லை என்று அவர் நினைக்கிறார். பொருளாதாரத்தை புரியாத ஒரு விஷயமாகச் செய்த பெருமை, பொருளாதார நிபுணர்களையே சாரும் (சிரிப்பு, கைதட்டல்). எந்த அளவுக்குப் பொருளாதார நிபுணர்கள் இதை புதிராக மாற்றி விட்டார்கள் என்றால், இன்றைக்குப் பொருளாதார நெருக்கடியா அல்லது பொருளாதார தத்துவமே ஒரு நெருக்கடியா என்ற பெரிய கேள்விக்குறி எழுந்துள்ளது. நம் நாட்டில் இந்தப் பொருளாதார நெருக்கடிகள் பற்றி வெளிவருகிற செய்திகளையோ, கட்டுரைகளையோ பார்த்தால், உலக அளவில் பொருளாதாரம் பற்றியும், அதன் யதார்த்த நிலை பற்றியும், பொருளாதார சிந்தனைப் போக்குகள் பற்றியும் அங்கு எப்படி ஆழ்ந்து கவலைப்படுகிறார்களோ, அந்த அளவு கவலை நம் நாட்டில் இல்லை. 

பொதுவாகப் பார்த்தால், இது ஏதோ ஒரு சாதாரண பொருளாதார நெருக்கடி; இருபது மாதங்களுக்கு முன் பங்கு மார்க்கெட் நிலவரம் எப்படி இருந்ததோ, அப்படி உயர்ந்து விட்டது. அதனால் மறுபடியும் பொருளாதார நிலை உயர்கிறது. உலக அளவிலேயே ஸ்திரமான நிலை வந்து கொண்டிருக்கிறது – என்ற ஒரு மாயையான கருத்து உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இன்றுள்ள நிலை என்னவென்றால், இது ஒரு சாதாரண பொருளாதார நெருக்கடி இல்லை. இந்தப் பொருளாதார நெருக்கடி, ஒரு வாழ்க்கை முறையைப் பின்பற்றுகிற போக்கின் மூலமாக ஏற்பட்டுள்ள சமுதாய நெருக்கடி, கலாச்சார நெருக்கடி. இதை உலக அளவில் பொருளாதார நிபுணர்கள் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்.

உதாரணமாக ஒன்று சொல்கிறேன். ‘எகானமிஸ்ட்’ பத்திரிகைதான் உலகத்திலேயே பொருளாதார நிலையை, சிந்தனையை மிகவும் ஆழ்ந்துக் கவனித்து, பொருளாதார நிபுணர்களே புரிந்து கொள்ள முடிகிற ஒரு பத்திரிகை. அந்தப் பத்திரிகையின் தலையங்கத்தில், 2009 ஜூலை 18-ஆம் தேதி இதழில் ‘பொருளாதாரத்தின் மதிப்பு குறைந்து விட்டது. 30 வருடங்களாக பொருளாதாரத்துறையில் எந்தெந்த சிந்தனைகள் விரும்பப்பட்டதோ, எந்தெந்த கொள்கைகள் அரசாங்கத்தால் விரும்பப்பட்டதோ, அந்தக் கொள்கைகள் எல்லாம் பல நாடுகளுக்கும் கெடுதலை ஏற்படுத்தி இருக்கின்றன. பொருளாதார முறை என்று நாம் நினைத்தது தவறோ என்று கருதும் அளவுக்கு, பொருளாதாரத்தில் ஒரு சீரழிவு ஏற்பட்டுள்ளது’ என்று அந்தப் பத்திரிகையின் ஆசிரியர் எழுதியிருக்கிறார்.

பொருளாதாரம் என்பது – சமுதாயத்தையும், கலாச்சாரத்தையும், மக்களுடைய வாழ்க்கை முறையையும் தாண்டி அப்பாற்பட்ட ஒன்று; அதற்கும் சாதாரண வாழ்க்கை முறைக்கும் சம்பந்தமில்லை என்கிற அளவிற்கு பொருளாதார நிபுணர்களால் ஒரு கருத்து உருவாக்கப்பட்டது.

பொருளாதார நெருக்கடி ஏற்பட்டவுடன் ஜெர்மனியில் ‘டெர் ஸ்பைகல்’ என்ற பத்திரிகையில், ஐந்து நோபல் பரிசு பெற்ற பொருளாதார மேதைகளை அழைத்து, ‘இந்த நெருக்கடி ஏன் ஏற்பட்டது? இதற்கு என்ன விமோசனம்?’ என்று கேட்டார்கள். அவர்களது பெயர் பால் சாமுவல்ஸன், ரெய்னட் ஸெல்டன், எட்மன்ட் ஃபிலிப்ஸ், ராபர்ட் லுக்கர்ஸ், ஜோஸப் ஸ்டிக்கிஸ் – இந்த ஐவரும் பொருளாதாரத்தில் நோபல் பரிசு பெற்றவர்கள். அவர்களிடம் கேட்டதற்கு அவர்கள் சொன்ன பதிலில், இந்த ஐந்து பேருக்கும் கருத்து ஒற்றுமை இல்லை. ஒருவர் கூறுகிற கருத்தை மற்றவர் ஏற்கவில்லை. அந்த ஐந்து பேரும் சொன்ன ஒருமித்த கருத்து, ‘இந்த நெருக்கடியிலிருந்து எப்படி வெளியே வருவது என்று தெரியவில்லை’ என்பதுதான்.

நோபல் பரிசு பெற்ற அந்த நிபுணர்களாலேயே இந்தப் பொருளாதார நெருக்கடியில் இருந்து வெளியே வருவதற்கான உபாயம் கூற முடியவில்லை என்றால், பொருளாதார நிபுணர்களால் உருவாக்கப்பட்ட பொருளாதாரக் கொள்கைகள்தான் அதற்குக் காரணம்.

இப்போது உலகத்தில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு அடிப்படைக் காரணமே, அமெரிக்கா அதிகமாகக் கடன் வாங்கியதுதான். அமெரிக்கா ஏன் கடன் வாங்கியது? உலகத்திலேயே எல்லா நாடுகளுக்கும் 1980 வரை, மிக அதிகமாகக் கடன் கொடுக்கும் முதலாளி நாடான அமெரிக்கா, எப்படி உலகத்திலேயே பெரிய கடனாளி நாடாக மாறியது? இன்று அமெரிக்கா 12.5 ட்ரில்லியன் டாலர் பிற நாடுகளிடம் கடனாக வாங்கியுள்ளது. ஒவ்வொரு நாளும் 10,000 கோடி கடனாக வாங்கினார்கள். கடந்த ஆண்டு மட்டும் (கடந்த அக்டோபர் முதல் இந்த செப்டம்பர் வரை – அதுதான் அவர்களது நிதியாண்டு) அந்தக் காலகட்டத்தில் 3.2 ட்ரில்லியன் டாலர், கிட்டத்தட்ட 150 லட்சம் கோடி ரூபாய் கடன் வேண்டும் என்ற நிலை. அது அவர்களுடைய பட்ஜெட்டில் விழுந்த துண்டு.

நம் நாட்டில் பட்ஜெட் பற்றாக்குறை ஏற்படும்போது, வங்கிகளில் இருந்து நம் அரசு கடன் வாங்கும். ஏனென்றால் நம் நாட்டு மக்கள் பணத்தை சேமித்து, வங்கியில் போட்டு வைக்கிறார்கள். இந்த ஆண்டு மட்டும் நம் குடும்பங்களால் வங்கிகளில் 7,50,000 கோடி ரூபாய் சேமிக்கப்பட்டுள்ளது (கைதட்டல்). இந்தப் பணத்தில் அரசு 4 லட்சம் கோடி ரூபாயை கடனாகப் பெறப் போகிறது. அதனால் அரசுக்கு பற்றாக்குறை ஏற்படுகிறபோது, அதை ஈடுகட்டுவதற்கு நம் நாட்டிலேயே சேமிப்பில் பணம் இருக்கிறது. ஆனால் அமெரிக்காவில் சேமிப்பு கிடையாது. அதனால் வெளிநாட்டில் இருந்தெல்லாம் கடன் வாங்கியாக வேண்டும். சீனா கடன் தர வேண்டும், ரஷ்யா கடன் தர வேண்டும், ஜப்பான் கடன் தர வேண்டும், நம் நாட்டில் இருந்தும் கொடுக்க வேண்டும். அப்போதுதான் அமெரிக்க அரசாங்கம் செயல்படும்.

அமெரிக்கா கடன் வாங்கியதால்தான் அமெரிக்கப் பொருளாதாரத்தில் நெருக்கடி ஏற்பட்டது. அதன் விளைவாகத்தான் உலகப் பொருளாதாரத்திலும் நெருக்கடி ஏற்பட்டது. ஆனால் இதில் இருந்து விமோசனம் உண்டா என்றால், அமெரிக்கா இன்னும் கடன் வாங்க வேண்டும் என்ற நிலைதான். எதனால் பிரச்சனை ஏற்பட்டதோ, அதனால்தான் விமோசனமும் என்கிற அளவுக்கு பொருளாதாரத்தில் இன்று ஒரு அர்த்தமற்ற நிலை ஏற்பட்டுள்ளது. 

எந்த அளவு அமெரிக்காவில் – சமுதாய, பொருளாதார குடும்பச் சீரழிவு ஏற்பட்டுள்ளதோ, அதன் பிரதிபலிப்புதான் இன்றைய பொருளாதார நெருக்கடி (பலத்த கைதட்டல்). குடும்பம் என்ற கலாச்சார அமைப்பு இல்லாவிட்டால், சேமிப்பு என்ற விளைவு ஏற்பட முடியாது. அதற்கு ஒரு உதாரணம் அமெரிக்கா (கைதட்டல்). ஐரோப்பாவில் இது இன்னும் அதிகமாக இருக்கிறது. ஆனால், மற்றவர்கள் உடனே நோக்குகிற அளவிற்கு அமெரிக்காதான் பொருளாதாரத்தில் சக்தியாக இருக்கிறது; அமெரிக்கப் பொருளாதாரத்தில் ஏற்படுகிற மாறுதல், உலகப் பொருளாதாரத்தில் விளைவை ஏற்படுத்துகிறது; அமெரிக்காவுடைய பொருளாதாரத் திட்டங்களையும் அதன் கொள்கைகளையும், மற்றவர்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் இருப்பதால், அதன் பொருளாதாரத்தை சரியாகப் புரிந்து கொள்ளாமல், ஒவ்வொரு நாடும் சரியான பொருளாதாரக் கொள்கையை வகுத்துக் கொள்ள முடியாது.

நம் நாட்டில் பதினைந்து வருடங்களாக இருக்கும் ஒரு பெரிய சிந்தனைத் தாக்கம் – என்னவென்றால், அமெரிக்கா மாதிரி நாமும் வளர்வதற்கு, அதே பொருளாதாரத் திட்டம், அதே பொருளாதாரக் கொள்கைகள், அதே மாற்றங்கள் வர வேண்டுமென்ற ஒரே அபிப்ராயம்தான். பல பேருக்கு ஒன்று தெரியாது. அமெரிக்காவில் கடந்த 30 ஆண்டுகளில் எப்படி வளர்ச்சி ஏற்பட்டது என்றால், அதை ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால், ‘அமெரிக்கர்கள் குடும்ப அமைப்பு முறையைச் சீரழித்து, தேசத்தின் பொருளாதாரத்தை வளர்த்தார்கள்’ (பலத்த கைதட்டல்).

நம் நாட்டில் குடும்பங்கள் என்னென்ன பொறுப்பை ஏற்கின்றனவோ, அதை அமெரிக்காவில் அரசாங்கமே ஏற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அரசாங்கம் அதை விரும்பி ஏற்கவில்லை. அரசாங்கத்தின் மீது அந்தப் பொறுப்பு திணிக்கப்பட்டுள்ளது. காரணம் என்னவென்றால், ஒரு வயோதிகரையோ, ஒரு வேலையில்லாத வாலிபரையோ, ஒரு சகோதரியையோ பாதுகாக்கிற பொறுப்பு குடும்பத்திற்குக் கிடையாது என்கிற ஒரு சமுதாயச் சூழ்நிலை, கலாச்சார சூழ்நிலை அங்கு உருவாக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, ‘சமூகப் பாதுகாப்புத் திட்டம்’ என்ற ஒரு திட்டத்தை ஏற்படுத்தி, அவரவர் வருமானத்தில் 16 சதவிகிதத்தை அரசுக்கு வரியாகக் கட்டி விட்டால் போதும். நீங்கள் நோய்வாய்ப்பட்டாலும், விபத்து ஏற்பட்டாலும், வேலை செய்ய முடியாத நிலை ஏற்பட்டாலும் அரசாங்கம் பார்த்துக்கொள்ளும் என்கிற முறையில், கடந்த 30 வருடங்களாக அந்தப் பணத்தைக் கொண்டு அரசு செலவழித்து விட்டது.

இன்று இந்த முறையினால் அரசினால் 104 ட்ரில்லியன் டாலர் கடன் ஏற்பட்டுள்ளது என்று ‘நியூஸ் வீக்’ பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு ட்ரில்லியன் டாலர் என்றால், 48 லட்சம் கோடி ரூபாய். இந்த 104 ட்ரில்லியன் டாலர் கடன், அரசின் பேலன்ஸ் ஷீட் நிதிக் கணக்கில் வராத கடன். ஏன் இந்த நிலை ஏற்பட்டது என்றால், அங்கே குடும்பங்கள் தேசிய மயமாக்கப்பட்டதுதான்.

குடும்பங்கள் என்ற அமைப்பே அங்கு இல்லாமல் போனதால், சேமிப்பு இல்லாமல் போனதால் அந்த நிலை. ஆனால், நம் நாட்டில் இந்த நிலை இல்லை. அங்கு குடும்பங்கள் தேசிய மயமாக்கப்பட்டதால் அரசாங்கம் தனியார் மயமானது. அங்கு அரசாங்கத்தின் பொறுப்புகள் தனியாரிடம் கொடுக்கப்பட்டதன் காரணம் – ரோடு போடுவதற்கோ, குடிநீர் வழங்குவதற்கோ, பாலம் கட்டுவதற்கோ தனியாரிடம் கொடுக்கப்பட்டதற்குக் காரணம் – குடும்பங்களை காக்கும் பொறுப்பை அரசாங்கம் ஏற்றுக் கொண்டதுதான். இதனால் அவர்கள் தனியார் மயத்தை நாட வேண்டிய நிலை ஏற்பட்டது.

அந்த தனியார் மயக் கொள்கையை, இங்கே நாம் பொருளாதாரக் கொள்கையாக அமல்படுத்தினோம். இதை காப்பி அடிப்பதற்கு முன் அமெரிக்காவின் நிலை இங்கு இல்லை என்பதை நாம் உணரவில்லை. பொருளாதார நிபுணர்களின் சிந்தனையோ, பத்திரிகைகளின் கருத்தோ அங்கு இருப்பதை காப்பி அடிக்கத்தான் தெரிந்ததே தவிர, இங்குள்ள சூழ்நிலைக்கும் அங்குள்ள நிலைமைக்கும் இடையே உள்ள மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் யாருக்கும் புரியவில்லை. 

1994-ல் இதுபற்றி நாங்கள் கூறிய போது, ‘வெளிநாடுகளில் இருந்து முதலீடுகள் வராமல் நாம் முன்னேற முடியாது. இந்த நாட்டின் அடிப்படை வசதிகள் மேம்படாது’ என்றெல்லாம் கூறி, ஒரு நிர்வாக இயல் கல்லூரியில் என்னை ஒரு தேசத் துரோகியாக சித்தரித்தார்கள். இப்போது 16 வருடங்களுக்குப் பிறகு, உலக மயமாக்கல், தாராள மயமாக்கல் ஆன பிறகு, வெளிநாட்டிலிருந்து நம் நாட்டிற்கு வந்துள்ள முதலீடு, மொத்த முதலீட்டில் இரண்டு சதவிகிதம்தான் (பலத்த கைதட்டல்). மீதி 98 சதவிகித முதலீடு நம் நாட்டிற்கு உள்ளேயிருந்தே கிடைத்தது. இதற்கு என்ன காரணம்? நம் நாட்டின் குடும்பத்தினர் சேமிக்கும் முறைதான் (பலத்த கைதட்டல்).

கோல்டு மேன் சேக்ஸ் என்ற வங்கி, உலகத்திலேயே பெரிய வங்கி, ஆலோசனை நிறுவனம். அந்த நிறுவனம் ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டது. ‘2025 வரை இந்திய நாட்டில் அந்நாட்டினரின் சேமிப்பு, அந்நாட்டின் வளர்ச்சி விகித்தில் 40 சதவிகித அளவிற்கு இருக்கும். அதனால் அந்த நாட்டின் வளர்ச்சிக்காக ஒரு டாலர் கூட வெளிநாட்டிலிருந்து பெற அவசியம் இருக்காது’ (பலத்த கைதட்டல்) என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளார்கள். இதை ஏன் நான் குறிப்பிடுகிறேன் என்றால், வெளிநாடுகளிலிருந்து பெறும் முதலீட்டினால் நம்மை வளர்த்துக் கொள்ளத் தேவையில்லை. மற்றவர்களுடன் உறவை வளர்த்துக் கொள்ள வேண்டுமானால் அது தேவையாக இருக்கலாம்.

நாம், வளர்ச்சிக்காக ஏற்றுமதியை அடிப்படையாகக் கொண்டிருக்கவில்லை. உள்நாட்டு உற்பத்தி மற்றும் வர்த்தகம்தான் நம் பொருளாதாரத்தின் அடிப்படை. அதனால்தான் நம் நாட்டின் பொருளாதாரத்திற்கு ஒரு ஸ்திரத் தன்மை உள்ளது. நம் பொருளாதாரம், உலகப் பொருளாதாரத்திலிருந்து மாறுபட்டிருப்பதால், உலகப் பொருளாதாரத்தில் இன்று ஏற்பட்டுள்ள பெரிய தாக்குதல், நமது பொருளாதாரத்தை ஸ்திரமில்லாதபடி ஆக்காமல் இருப்பதற்குக் காரணம், நம்முடைய கலாச்சார, சமுதாய முறையே (பலத்த கைதட்டல்). இதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இதை அதிகாரிகள் புரிந்து கொள்ள வேண்டும். இதைப் பொருளாதார நிபுணர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இதைப் பத்திரிகையாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் நமது பொருளாதாரத்தில் ஒரு தெளிவு ஏற்படும் (பலத்த கைதட்டல்). 



http://www.youtube.com/watch?v=l6XoVsUquc0


http://www.youtube.com/watch?v=qzjqElS8yBk&feature=related


துக்ளக் 40 ம ஆண்டு  விழாவில்  திரு . எஸ் .குருமூர்த்தி பேசியது ...