வாழ்க்கையைப் புரிந்துகொள்ளும் முயற்சியும், மகிழ்ச்சியும்... – எல்.கே. அத்வானி

என் தேசம், என் வாழ்க்கை - 36

...நான் எனது எண்பது ஆண்டு கால வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கிறேன். சிந்துவில் ஹைதராபாத்தில் ஒரு டென்னிஸ் மைதானத்தில், நான் முதன் முதலாக ‘ராஷ்ட்ரிய சுயம் சேவக்’ என்ற பெயரைக் கேட்டேன். அப்போதே அதை என் வாழ்க்கையின் அழைப்பாகப் புரிந்து கொண்டேன். உடனே 1942-ல் அதில் ஒரு தொண்டனாக இணைந்து கொண்டேன். 



எல்.கே. அத்வானி - thuglak.com
எல்.கே. அத்வானி

...அந்தப் பயணம் இன்னும் முடிவடையவில்லை. பதினான்கரை வயதில் தொடங்கிய அந்தப் பயணம் ஒரே ஒரு குறிக்கோளைத்தான் என் வாழ்க்கைக்கு அளித்துள்ளது. அதுதான் தாய்நாட்டுச் சேவை. 
இந்தச் சேவைக்காக நான் பயணப்பட்டு வந்தபோது, என் கடமை, என் அர்ப்பணிப்பு, உள்ளத் தூய்மை, கடமைக்கான பங்களிப்பு ஆகியவை பலமுறை குறிப்பாக அரசியல் எதிரிகளை எதிர்கொண்டபோது சோதனைக்குள்ளாகி இருக்கிறது. பணிவுடனும், கடமை உணர்வுடனும் ஒன்றை மட்டும் கூற முடியும். என் மனசாட்சியின் கண்கள் என்னைத் தேடும்படி நான் விட்டதே இல்லை. எனது கணிப்புகளில் நான் பல தவறுகளைச் செய்ததுண்டு. என்னுடைய கடமையை நிறைவேற்றுவதிலும் தவறுகள் நடந்துள்ளன. ஆனால், என் சுய லாபத்துக்காகவோ, சுயநோக்கத்துடன் திட்டமிட்டோ அப்படிச் செய்தது கிடையாது. 

அதேபோல, தனிப்பட்ட என் சௌகரியத்துக்காகவும், பயன்களுக்காகவும் நான் அடிப்படைக் கொள்கைகளை ஒருபோதும் துறந்ததில்லை. நான் என் சுயமரியாதைக்கும், நாட்டு நலனுக்கும் எது நல்லதோ அதைச் செய்வதற்குத் தயங்கியதே கிடையாது. அப்படிப்பட்ட செயல்களைச் செய்யும்போது பல ஆபத்துகளை எதிர் கொண்டிருக்கிறேன். 

அவசர நிலை காலத்தின்போது சிறையில் இருக்க நேர்ந்தபோதோ, பொய்யான குற்றத்தைச் சுமத்தி ‘ஹவாலா’ பண மோசடியில் என் பெயரை இணைத்தபோதோ, அயோத்தி இயக்கத்தின்போது என் மீது ‘ஹிந்து வெறியன்’ என்று பழி சுமத்தி அழைக்கப்பட்டபோதோ, பாகிஸ்தான் பயணத்தின்போது என் கொள்கைகள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு அவதூறுகளுக்கு ஆளானபோதோ, நான் மனசாட்சியின் குரலைக் கேட்டுத்தான் தீர்க்கமாக நின்றேன். அது என்னைப் பலப்படுத்தியதோடு மட்டுமல்லாமல் எனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி, வாழ்வின் அர்த்தத்தையும் புரிந்து கொள்ள வைத்தது. 

...என் சகாக்களும், நான் சந்திக்க நேர்பவர்களும், நான் எப்போதுமே பிடிவாதமாக இருக்கிறேன் என்று விமர்சிக்கிறார்கள். ஆனால், நான் என் கட்சியை எப்போதும் தடுமாற்றம் இல்லாமல் நேசிக்கிறேன். என் நாட்டையும் அதே அளவு நேசிக்கிறேன். எனது கட்சி, இந்த நாட்டு நலனுக்காக எனக்கு விதித்த கடமையை என்னால் முடிந்த அளவு நிறைவேற்றி வருகிறேன். நான் பிடிவாதக்காரன் என்ற பலரது விமர்சனம் குறித்து, எனக்கு எந்த வருத்தமும் கிடையாது. நெருக்கடி கால நிலையில் அதை எதிர்த்து நான் மேற்கொண்ட போராட்டமும், மொரார்ஜி தேசாய் அரசில் செய்தி ஒளிபரப்பு அமைச்சராக இருந்தபோது என் பங்களிப்பு குறித்தும் நான் மனநிறைவே கொள்கிறேன். அதே அளவுக்கு இந்தியாவின் பன்முக வளர்ச்சிக்கும், குறிப்பாக உள்நாட்டுப் பாதுகாப்புக்கு ஒரு உதாரணமாக அதைப் பலப்படுத்துவதிலும், உள்துறை அமைச்சராகவும், பின் உதவிப் பிரதமராக அடல்ஜியின் அரசிலும் பணியாற்றினேன். 




வாஜ்பாய் - thuglak.com
வாஜ்பாய்

கட்சியில், அல்லது அரசாங்கத்தில் தீர்மானமான கூட்டு முயற்சியிலும் ஈடுபட்டு நான் ஆற்றிய பணி சிறிதளவே ஆகும். எங்கள் கட்சியின் நூற்றுக்கணக்கான ஒப்பில்லாத சகாக்களுடனும், கூட்டணிக் கட்சிகளுடனும் பணிபுரிந்ததைக் கௌரவமாக எண்ணுகிறேன். பொதுவான குறிக்கோளுடன் அவர்களுடன் பணியாற்றியது என்னுள்ளே மிக்க சந்தோஷத்தை ஏற்படுத்துகிறது. அதே போல, இரண்டு ஆட்சிகளிலும் நான் அமைச்சராகப் பணியாற்றியதும் எனக்குக் கிடைத்த கௌரவமே. 

...வழக்கமான பாணியில் கூறுவதானால் நான் மதம் சார்ந்தவன் அல்ல. நான் தினசரி பூஜைகள் செய்வதில்லை. வழக்கம் மாறாமல் கோவிலுக்குச் செல்பவனும் அல்ல. ஆனால், மதமும், ஆன்மீகமும் என் தோற்றத்திலும் அரசியல் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கின்றன. முரட்டுத்தனமாகவும், வஞ்சகமாகவும், ஊழல் நிறைந்தும் இருப்பது சுலபம். நான் அவற்றை தவிர்த்து விட முடிகிறதென்றால், நான் மத உணர்வுடனும், ஆன்மீக நெறியுடனும் வளர்க்கப்பட்டதே காரணம். நம்மை விட உயர்ந்த சக்தி உள்ளதென்றும், அதன் முன்பு மற்ற அனைத்தும் காணாமல் போய்விடக் கூடியதென்றும், அந்த மாபெரும் சக்திக்கு ஒருநாள் பதில் சொல்லியே ஆக வேண்டும் என்ற எண்ணமே நம்மிடம் பணிவையும், மனிதாபிமானத்தையும், தொலைநோக்குப் பார்வையையும் ஏற்படுத்தி விடுகிறது.

...இன்றைய இந்திய அரசியல், மஹாத்மா காந்தி, தீனதயாள் உபாத்யாயா ஆகியோர் கூறியவற்றிலிருந்து வெகுதூரம் விலகி வந்துவிட்டது. தர்மம் காட்டும் வழியிலிருந்து வெகுதூரம் விலகிவிட்டது. அரசாங்கம் தர்ம ராஜ்யத்திலிருந்து மாறுபட்டு நிற்கிறது. ஆனால், மனபூர்வமாக இந்த உண்மையைப் புரிந்து கொள்வோமேயானால், ஏற்பட்டுவிட்ட இடைவெளி தொலைவை குறைக்க முடியும். நான் என் அரசியல் வாழ்விலும், என் தனிப்பட்ட வாழ்க்கையிலும் இந்தப் பாதையில் சிறிய அடியாவது எடுத்து வைக்க முயன்று வருகிறேன். நான் தடுமாறி இருக்கலாம். ஆனால், முயற்சியை நிறுத்தி விடவில்லை. இதுகூட என் வாழ்க்கையில் நான் பெற்று வரும் மனம் நிறைந்த மகிழ்ச்சிக்கு ஒரு காரணமாக இருந்து வருகிறது.

....நான் அரசியலில் பங்கு கொண்ட அறுபதாண்டு காலமும், நாடு சுதந்திரக் காற்றை சுவாசித்து வரும் அறுபது ஆண்டுகளும் ஒன்றாக இருக்கின்றன. நமது நாட்டைப் பலப்படுத்தி, சர்வதேச அரங்கில் அதன் மதிப்பை உயர்த்த உதவியதாக நான் மூன்று சாதனைகளைக் குறிப்பிட விரும்புகிறேன். படிப்பறிவில்லாத பலரைக் கொண்டதாகவும், பலவிதமான மாறுபட்ட எண்ணங்கள் கொண்ட சமூகங்களையும், பல்வேறு பழக்கங்களையும் கொண்டதாகவும் உள்ள இந்தியா, ஒரே நாடாக இருக்கக் கூடாது என்ற வெளிநாட்டவரின் எண்ணத்தையும், ஆரூடத்தையும் பொய்யாக்கி ஒரே நாடாக இருந்து, நமது ஜனநாயகத்தைக் கண் போல் பாதுகாத்து வெற்றி பெறச் செய்து, அவர்களின் எதிர்பார்ப்பை தூள் தூளாக்கி விட்டோம்.

இந்தியா குடியரசு நாடாக இருக்கக் காரணம், அதன் புனிதமான ஹிந்து ஒழுக்க நெறி. ஜனநாயக நாடாக இருப்பது மட்டுமின்றி, மதச்சார்பற்ற தன்மையைப் பேணிக் காக்க உதவி வருவதும் அதன் ஹிந்து ஒழுக்க நெறியே.

இரண்டாவது காரணம் – 1998-ல் நமது முன்னாள் பிரதமர் வாஜ்பாய் எடுத்த துணிவான முயற்சியால், இந்தியா அணுஆயுத சக்தி வாய்ந்த நாடாக மாறியது. ...நமது மூன்றாவது வெற்றி, பொருளாதாரத்துறையில் ஏற்பட்டுள்ள பெருத்த முன்னேற்றம். உலக நாடுகள் இந்தியாவை, நாளைய பலம் பொருந்திய நாடாக எண்ணத் தொடங்கி இருக்கின்றன. இதன் காரணமாக, உலக சமுதாயம் இந்தியர்களை மதிப்புடனும், மரியாதையுடனும் எண்ணத் தொடங்கும் காலம் ஏற்பட்டிருக்கிறது. இத்தகைய நிலை முப்பது ஆண்டுகளுக்கு முன் இல்லாத ஒன்று.

ஒரு இந்தியன், ஒரு அரசியல்வாதி என்ற இரண்டு நிலைகளிலும், என்னை இந்த மூன்று வெற்றிகளும் பெருமைப்படவும், சந்தோஷப்படவும் வைத்துள்ளன. என்னுடைய கட்சி இந்த மூன்றிலும் பங்கு கொண்டிருப்பது கூடுதலான சந்தோஷம்.

.நான் என் அரசியல் வாழ்க்கையில் எனக்கு அளிக்கப்பட்ட ஒவ்வொரு கடமையையும், பொறுப்பையும், அது பெரியதாக இருப்பினும், சிறியதாக இருப்பினும் நேர்மையுடனும், அர்ப்பணிப்புடனும், ஈடுபாட்டுடனும் செய்து வருகிறேன். என் வாழ்வில் நான் பெற்ற பெருமையாக இதை எண்ணுகிறேன். இந்தியா மேலும் ஒற்றுமையானதாக, உறுதியும் பெருமையும் கொண்டதாக, பிரகாசமானதாகத் திகழ, வருங்காலத்திலும் தொடர்ந்து இதே போன்ற அர்ப்பணிப்புடன் எல்லாம் வல்ல இறைவனின் அருளால் எனது பணிவான சேவையைப் புரிவேன்.