அத்வானி இன் அரசியல் நாகரிகம்

 
கடந்த 08 .11 .2010 அமெரிக்க அதிபர் ஒபாமா பார்லிமென்டில் உரையாற்றினார். அவருடைய பேச்சு முடிந்ததும் சோனியாவும், ராகுலும் கிளம்பினர். வாசலுக்கு வந்தால் அங்கே காரை காணோம். என்ன ஆயிற்று என்று செக்யூரிட்டியை கேட்க, அவர்களுக்கும் விஷயம் தெரியவில்லை. நடந்தது இது தான். பார்லிமென்ட்டிலிருந்து, வாசலிலிருந்த காரில் உட்கார போன ஒபாமா, வண்டியில் அமராமல், தன்னை வழியனுப்ப வந்த சபாநாயகர் மீராகுமாரிடம் பேச ஆரம்பித்தார். பார்லிமென்ட் தன்னை கவர்ந்துவிட்டதாகவும், இங்கு ஏதாவது சரித்திரப் புகழ் பெற்று வரலாற்று சின்னங்கள் ஏதாவது உள்ளதா என்று கேட்டுவிட்டு, காரில் போய் உட்கார்ந்தார். இதனால், ஒபாமா கார் பார்லிமென்டை விட்டு வெளியேறுவது தாமதமாகியது. அவர் வெளியே போகும் வரை பார்லிமென்டின் கேட்கள் மூடப்பட்டிருந்தன. இதனால், சோனியாவின் கார் வரவில்லை. சோனியாவும், ராகுலும் நின்றிருந்ததை பார்த்த பா.ஜ., தலைவர் அத்வானி, "ஒபாமாவிற்காக கேட் மூடப்பட்டிருக்கலாம். எதற்கு இங்கு நிற்க வேண்டும். என் அறை பக்கத்தில் தான் உள்ளது. வாருங்கள்... அங்கு அமர்ந்து டீ குடிக்கலாம்' என்று அழைப்பு விடுத்தார். உடனே சோனியாவும், ராகுலும் அவருடன் சென்றனர். அங்கு அத்வானியின் மகள் அமர்ந்திருந்தார். சோனியாவையும், ராகுலையும் வரவேற்ற அவர், "இன்று அப்பாவிற்கு பிறந்தநாள்' என்றார். மகிழ்ச்சியடைந்த சோனியாவும், ராகுலும் உடனே அத்வானிக்கு வாழ்ந்து தெரிவித்தனர். "பிறந்த நாளுக்கு என்ன புரோகிராம்' என்று, அத்வானியிடம் சோனியா கேட்டார். "ஒபாமாவினால் செக்யூரிட்டி பிரச்னை, எனவே நாளைக்கு தான் கொண்டாடப் போகிறோம். நீங்களும் வர வேண்டும்' என்று, இருவருக்கும் அழைப்பு விடுத்தார். சோனியாவும், ராகுலும் டீ அருந்திவிட்டு சென்றனர். "வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது' என்று ஒரு காலத்தில் நமது கழகங்கள் தொண்ட வறள கூப்பாடு போட்டன. ஆனால், வடமாநில அரசியலில் உள்ள இந்த பண்பாடு எப்போதும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது என்பது கழகங்களுக்கு தெரியவில்லை.