“காஷ்மீர், இந்தியாவில் இருப்பதற்கு ஆர்.எஸ்.எஸ்.தான் காரணம்!” – ராம.கோபாலன் பேட்டி

காஷ்மீர் பிரச்சனை குறித்து ஹிந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராம. கோபாலன் ‘துக்ளக்’கிற்கு அளித்த சிறப்புப் பேட்டி : 

கேள்வி : காஷ்மீர் பகுதியில் தொடர்ந்து பயங்கரவாத, வன்முறை சம்பவங்கள் நடைபெறுகின்றனவே? 



ராம.கோபாலன்

ராமகோபாலன் : பிரிவினைவாத, பயங்கரவாத நடவடிக்கைகளால், ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் நிலைமை வேகமாகச் சீரழிந்து வருகிறது. பாகிஸ்தான் காஷ்மீரைக் கைப்பற்றத் துடித்துக் கொண்டிருக்கிறது. ‘சுதந்திரம்’ என்ற பெயரில் போலீஸாரையும், ராணுவத்தினரையும் அங்கு சிலர் கல்வீசித் தாக்குதல் நடத்தி வருகின்றனர். பிற மாநில முஸ்லிம் மக்களின் அனுதாபத்தைப் பெறவும், அகில உலகப் பிரச்சனையாக இதை மாற்றவும், கலகம் செய்யவும் தீவிர முயற்சிகள் நடந்து வருகின்றன. 

கொள்ளைக்காரர்கள் வேடத்தில் பாகிஸ்தான் ராணுவத்தினர் காஷ்மீரில் புகுந்துள்ளனர். 1988-ஆம் ஆண்டு முதல் உ.பி.யிலிருந்து முல்லா, மௌலிகர் என்று நூற்றுக்கணக்கானவர்கள் காஷ்மீருக்கு அனுப்பப்பட்டுள்ளனர் என்ற தகவல் உள்ளது. இத்தகைய பயங்கரவாதிகளால் காஷ்மீரில் 5965 ராணுவ வீரர்களும், பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட சி.ஆர். பி.எஃப். படையின ரும் கொல்லப்பட்டுள்ளனர். 

கேள்வி : மத்திய அரசு எந்த நடவடிக்கையுமே எடுக்கவில்லை என்று சொல்கிறீர்களா?

பதில் : காஷ்மீர் ஆக்ரமிப்புப் பகுதிகளை மீட்க வேண்டும் என்று பார்லிமென்டில் தீர்மானம் கொண்டு வரப்பட்டும் இன்று வரை அது நிறைவேற்றப்படவில்லை. இப்போது மத்திய அரசு, மூவர் குழுவை அமைத்துள்ளது. இந்தக் குழுவினரால் எதிர்பார்க்கும் பலன் கிடைக்காது என்பதே என் கருத்து. 

பா.ஜ.க. ஆட்சியில் வாஜ்பாய் அரசு அமைந்தவுடன், காஷ்மீர் பிரச்சனைகள், அதன் விவகாரங்கள் முழுவதும் உள்துறை அமைச்சகத்துக்கு மாற்றப்பட்டது. காங்கிரஸ் ஆட்சியில் இருந்தவரை, ஜம்மு-காஷ்மீர் மாநில பிரச்சனையைக் கவனிக்கும் பொறுப்பு வெளியுறவு அமைச்சகத்திடமே இருந்தது. 

காஷ்மீர் பிரச்சனையில் அத்வானியின் இடைவிடாத முயற்சி, அருண் ஜெட்லி பாராளுமன்றத்தில் காஷ்மீர் பிரச்சனையை விலாவாரியாக எடுத்து வைத்த விதம் இவற்றால் ஜம்மு-காஷ்மீர் உள்நாட்டுப் பிரச்சனையே தவிர, வெளிநாட்டுப் பிரச்சனையில்லை என்பது தெளிவாயிற்று. காஷ்மீர் இந்தியாவில் இருப்பதற்கு ஆர்.எஸ்.எஸ்.தான் 99 சதவிகிதம் காரணம் என்பதையும் மறுக்க முடியாது.

கேள்வி : புதுடெல்லி கருத்தரங்கு ஒன்றில் எழுத்தாளர் அருந்ததி ராய், காஷ்மீர் விடுதலை இயக்கத் தலைவர் ஜிலானி ஆகியோர் ‘காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி இல்லை, காஷ்மீருக்கு விடுதலை அளிக்க வேண்டும்’ என்று பேசியுள்ளதைப் பற்றி?

பதில் : இவர்களுடைய பேச்சு, எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றியதாகவே தெரிகிறது. ஜம்மு-காஷ்மீரில் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு எதிராக இவர்கள் பேசியுள்ளது நிரூபிக்கப்பட்டிருப்பதால், அரசு இவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜம்மு-காஷ்மீர் பகுதியில் மக்களைச் சந்தித்து ஆய்வு நடத்திய ஒரு அமைப்பு, 61 சதவிகிதம் பேர் ‘காஷ்மீர் இந்தியாவில் இருக்க வேண்டும்’ என்றும்; 6 சதவிகிதம் பேர் ‘பாகிஸ்தானில் இருக்க வேண்டும்’ என்றும்; 33 சதவிகிதம் பேர் நடுநிலை வகித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. ஆகவே, பிரிவினைவாதத்தைத் தூண்டும் பேச்சுக்கள் கண்டிக்கத்தக்கது.

கேள்வி : காஷ்மீர் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வுதான் என்ன?

பதில் : காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதிதான் என்பதில் யாருக்கும் சந்தேகமில்லை. நமது முன்னாள் இந்திய ஜனாதிபதி அப்துல் கலாம், காஷ்மீரில் உள்ள பயங்கரவாதப் பயிற்சி முகாம்களை முழுமையாக அழிக்க வேண்டும் – என்று கூறியுள்ளார். பொதுவாக, பயங்கரவாதிகளின் ஊடுருவல் தந்திரங்கள் ராணுவத்தினருக்கு அத்துபடி என்பதால், ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களை காஷ்மீரில் குடியேற்ற வேண்டும். ராணுவத்தினரைப் பலவீனப்படுத்தக் கூடாது. ராணுவத்துக்கு முழு அதிகாரம் கொடுக்க வேண்டும். ஜம்மு, லடாக் மற்றும் காஷ்மீர் பள்ளத்தாக்கில் வாழும் மக்கள் மீது உரிய கவனம் செலுத்தப்பட வேண்டும்.
மற்ற மாநிலங்களைப் போல காஷ்மீரும், இந்தியாவின் ஒரு அமைதியான மாநிலமாக மாற வேண்டும். இதற்கு இப்போதைய அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

நன்றி :துக்ளக் 16 /11 /2010