நம்பர் 10, ஜன்பத் பீதி! அம்மாவும் மகனும் திடீர் மாயம் ஏன்?

காஷ்மீர் மீண்டும் பற்றி எரிகிறது... நாடாளுமன்றம் விலைவாசி உயர்வுப் பிரச்னையால் கொதிக் கிறது... காமன்வெல்த் விளையாட்டுத் திடல்கள் ஊழல்களாலும் கொட்டும் மழையாலும் ஒழுகு கிறது...

எரிகிறது! கொதிக்கிறது! ஒழுகுகிறது! இவ்வள வும் நடக்கும்போது இந்தியாவை ஆளும் சோனியா காந்தியையும் ராகுல் காந்தியையும் காணவில்லை என்பது வெறும் வதந்தி அல்ல!


நாடாளுமன்றத்தில் எதிர்க் கட்சிகள் விலைவாசி உயர்வு மற்றும் பெட்ரோல் விலை உயர்வு குறித்து சூடாகப் பேசும்போது, ஆளும் கட்சி தரப்பில், குறிப்பாகக்
கட்சியின் தரப்பில் விளக்கம்அளிக்கப்பட வேண்டும். ''காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அனைத்து உறுப்பினர்களும் தவறாமல் சபைக்கு ஆஜராக வேண்டும்'' என்று கேட்டுக்கொண்ட சோனியாவையே சபையில் காண வில்லை. கூடவே எதிர்காலத் தலைமையான ராகுல் காந்தியின் இருக்கையும் காலி.




'பிரதமர் இருக்கிறார்... நிதி அமைச்சரும் இருக்கிறாரே...' என்று நீங்கள் நினைக்கலாம். இவர்கள் இரண்டு பேரும் முறையே சீஃப் எக்ஸ்கியூட்டிங் ஆபீஸர் மற்றும் எக்ஸ்கியூட்டிங் ஆபீஸர் ரீதியில் இருக்கின்றனர். அரசாங்கத்தின் செயல் அதிகாரிகளைவிட இதை இயக்குபவர் முக்கியம். கட்டளை போடுபவரும் கொள்கையை உருவாக்குபவருமான சோனியா காந்தி எங்கே? எதிர்க்கட்சியான பி.ஜே.பி. முன்பு பெண்கள் மசோதா, விலைவாசிஉயர்வு, இந்திய அமெரிக்க ஒப்பந்தம் போன்ற பல்வேறு பிரச்னைகளில் நெருக்கடிகளைக் கொடுக்கும்போது, கட்சித் தலைமையான சோனியா முன்வரிசையில் இருந்தபடி தனது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, 'இப்படிச் சொல்லுங்கள்... அப்படி நடந்துகொள்ளுங்கள்...' என்று தகவல்களை கொடுத்துக்கொண்டு இருந் தார். இப்படிப்பட்ட டைரக்ஷன்கள் இம்முறை காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு மிஸ்ஸிங். கிட்டத்தட்ட ஒரு வாரம் நாடாளுமன்றம் தடைப்பட்டது. இந்த சமயத்தில் சோனியா, ராகுல் எங்கே என்று கேட்கப் பட்டபோது காங்கிரஸ் பேச்சாளர்கள், ''கட்சியில் எத்தனையோ அமைப்புகள், பொறுப்புகள் உண்டு. கட்சித் தலைமை அவற்றில் கவனம் செலுத்தச் சென்றிருக்கலாம். நாடாளுமன்றத்தில் முக்கியப் பிரச்னைகள் இருக்கும் போது, அவர்கள் வரவில்லையென்றால், இவற்றைவிட முக்கியமான காரணங்கள் இருக்கலாம்!'' என்று சமாதானம் சொன்னார்கள்.
இதுவாவது பரவாயில்லை.. இந்தியாவுக்கு வந்திருந்த பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூனை சோனியா காந்தி சந்திக்கவில்லை. இது ஆச்சர்யமாக இருந்தது.அரை மணி நேரத்தைக்கூட ஒதுக்க முடியாத அளவுக்கு அவர்களுக்கு என்ன தலைபோகிற வேலை இருந்திருக்கும் என்று நாமும் விசாரணையில் இறங்கினோம்.




சோனியா காந்தியின் தாயாரான பாலோ மெய்னோவுக்கு உடல் நிலைசரியில்லை. சோனியா தனது குடும்பத்துடன் இத்தாலிக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார் என்கிற தகவல் முதலில் கிடைத்தது. பாலோ மெய்னோ வுக்கு 81 வயது. சிகிச்சைக்காக அமெரிக்கா செல்லவேண்டியது இருப்பதால் சோனியா, அவர்களுடன் அமெரிக்காவுக்கும் சென்றுள்ளார் என்றார்கள்.



ஆனால், சோனியா 'அவுட் ஆஃப் இந்தியா' விவகாரத்தில் வேறு சில வதந்திகளும் காரணங்களும் கிளப்பப்படுகின்றன. ராஜீவ் காந்தியோடு டூன் ஸ்கூலில் ஒன்றாகப் படித்தவரும் முன்னாள் 'வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' பத்திரிகையாளருமான சுமன் துபேயின் மகன் திருமணமும் வரவேற்பும் அமெரிக்காவில் நடக்க இருக்கிறது. அந்த விஷேசத்துக்காக ஒட்டுமொத்தக் குடும்பமும் அமெரிக்கா சென்றுள்ளது என்றும் சொல்கிறார்கள். சுமன் துபே, ராஜீவ் காந்தியின் நெருங்கிய நண்பர் மட்டுமல்ல, ராஜீவ் அதிகாரத்தில் இருக்கும்போது அவருடைய முக்கிய ஆலோச கராகவும் இருந்தவர். இந்த நட்பு சோனியா, ராகுல் வரை தொடருகிறது. ஆனால், பொதுவாகத் திருமண வரவேற்புகள் ரகசியமாக இருப்பதில்லை. வெளிப்படையாகவே நடக்கும். சுமன் துபே தரப்பினரும் இந்த நிகழ்வுகளை உறுதி செய்ய மறுக்கின்றனர்.

இவற்றையெல்லாம் தாண்டி மற்றொரு செய்தியும் உலாவருகிறது. அது ராகுல் காந்தியின் திருமணம். இது திருமணமா... அல்லது நிச்சயதார்த்தமா என்கிற சந்தேகம் டெல்லி மேல்மட்டங்களோடு பழகுபவர்களுக்கு இருக்கிறது. சோனியா, ராகுல் ஆகியோரின் செயலாளர்கள் விடுமுறை கிடைத்த மகிழ்ச்சியில் அவரவர் ஊர்களுக்கும் சொந்தப் பணிகளுக்கும் சென்றுவிட்டனர். அவர்களிடமும் இதை உறுதிப்படுத்த வாய்ப்பில்லாமல் இருக்கிறது. இதனாலும் கிடைத்த தகவல்களில் எது உண்மை என்கிற குழப்பம் நிலவுகிறது.

ராகுல் காந்தி விரும்பிக் காதலித்தது ஸ்பானிஷ் பெண்மணியை. ஆரம்பத்தில் கொலம்பியா பெண்மணியைக் காதலிப்பதாகத் தகவல் வந்தது. இரண்டும் வேறு வேறு என்று சொல்லப்பட்டு பின்னர், அதுதான் இது, இதுதான் அது என்றும் சொல்லப் பட்டது.

இந்த விவகாரத்தில் சோனியா காந்தியும் ராகுல் காந்தியும் வாய் திறக்காத வரை வதந்திகள் வந்துகொண்டேதான்இருக்கும்!