ஏழை இந்து குழந்தைகளுக்கு கல்வி உதவிதொகை வாங்கும்வரை ஓயமாட்டோம்: பொன்.ராதாகிருஷ்ணன்

ஏழை இந்து குழந்தைகளுக்கு கல்வி உதவிதொகை வாங்கும்வரை ஓயமாட்டோம்: பொன்.ராதாகிருஷ்ணன்


நாகர்கோவில் : தமிழகத்தில் காவி கொடி ஆட்சி கொண்டு வந்தே தீருவோம் என நாகர்கோவிலில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக பா.ஜ. தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் பேசினார்.



நாகர்கோவில் அண்ணா ஸ்டேடியம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அலைகடலென திரண்ட பா.ஜ.வினர் மத்தியில் மாநில தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: பா.ஜ. நடத்தி வரும் ஜூலை போராட்டத்தின் 22வது போராட்டம் இது. இதுவரை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் 21 போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. அனைத்து மாவட்டங்களிலும் கலந்துகொண்டவர்கள் 86 ஆயிரம் பேர். ஆனால் குமரி மாவட்டத்தில் மட்டும் லட்சம் பேர் கலந்துள்ளனர்.



தமிழக முதல்வருக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். தி.மு.க. ஆட்சிக்கு வரும்போது எந்த மாணவர் சக்தியை பயன்படுத்தியதோ, அந்த மாணவர் சக்தி இப்போது பா.ஜ. பக்கம் உள்ளது. எனவே இந்த போராட்டத்தில் நிச்சயம் வெற்றி பெறுவோம்.



இஸ்லாமியர்கள் கல்வியில் பின் தங்கி இருக்கிறார்கள் எனவே கல்வி உதவித்தொகை கொடுக்கிறோம் என மத்திய அரசு சொல்கிறது. நாங்கள் சொல்கிறோம் கட்டாயம் அவர்களுக்கு கல்வி உதவித்தொகை கொடுங்கள். கிறிஸ்தவர்கள் பின்தங்கி இருக்கிறார்கள் என கூறுகிறார்கள். அவர்கள் கல்வியில் பின் தங்கி இல்லை. என்றாலும் அங்கும் ஏழைகள் இருக்கிறார்கள் எனவே அவர்களுக்கும் கட்டாயம் கல்வி உதவித்தொகை கொடுங்கள். ஆனால் பெரும்பான்மை என கூறி ஒதுக்கப்பட்டிருக்கும் இந்துக்களுக்கும் கல்வி உதவித்தொகை கொடுக்க வேண்டும் என கேட்கிறோம்.



அமைச்சருக்கு பதிலடி: அதிகாரத்திற்கு வருவதற்கு ஒட்டுமொத்த கிறிஸ்தவர்களின் ஓட்டுக்களையும் பெறவேண்டுமானால் சிறப்பு சலுகை வழங்க வேண்டும் என்பதற்காக இந்துக்கள் வாயில் மண்ணை அள்ளி போடுகிறார்கள். திருச்சியில் இதுபோன்ற போராட்டம் நடத்தினோம். அப்போது அந்த வழியாக வந்த அமைச்சர் நேரு வேறு வழியாக சென்றுவிட்டார். அதைப்போல் மற்ற மாவட்டங்களிலும் அங்குள்ள அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் பேசாமல் இருந்தனர். ஆனால் இங்குள்ள அமைச்சர் சுரேஷ்ராஜன் தமிழகத்தில் இல்லாத மதங்களின் பெயரை சொல்லி அவர்களுக்கெல்லாம் கல்வி உதவி தொகை கொடுப்பதாகவும், இந்துக்களுக்கும் கல்வி உதவித்தொகை கொடுப்பதாகவும் கூறியுள்ளார். ஒரு கட்சியின் மாநிலத்தலைவர் தெருதெருவாக சென்று பிரசாரம் செய்வது ஆரோக்கியமான அரசியல் அல்ல என கூறியுள்ளார்.



அவருக்கு நான் கூறுகிறேன். பிற மாவட்டங்களில் உள்ள அமைச்சர்கள் அமைதியாக சென்றது போல் இங்குள்ள அமைச்சர் சுரேஷ்ராஜனும் அமைதியாக இருக்க வேண்டும். எங்கள் கொள்கையில் வெற்றி பெறுவதற்காக தெருதெருவாக மட்டுமல்ல ஒவ்வொரு பா.ஜ. தொண்டனின் வீடு வீடாகவும் செல்வேன். குமரி மாவட்டத்தில் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் செல்வேன். ஏழை இந்து குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வாங்கும் வரை ஓய மாட்டோம்.



முதன்முறையாக ஆட்சிக்கு வந்த தி.மு.க. இந்துக்களின் ஓட்டுக்களை வாங்கிதான் ஆட்சியை பிடித்தது. இப்போது ஓட்டு போட்ட இந்துக்களையே தி.மு.க. ஏமாற்றுகிறது. இனிமேலும் தி.மு.க.விற்கு ஓட்டு போட குமரி மாவட்டத்தில் மக்களும், இந்துக்களும் தயாராக இல்லை. தேர்தல் நேரத்தில் பணம் கொடுத்து ஓட்டு வாங்கி விடலாம் என நினைக்கிறார்கள். நாங்கள் ஏமாளிகள் இல்லை என்பதை வரும் தேர்தலில் நிரூபிக்க போகிறோம்.



ஏழை இந்து குழந்தைகளை புறக்கணிக்க அனுமதிக்க மாட்டோம் என தமிழகத்தில் யுக புரட்சி வருகிறது. அதன் ஒரு அங்கமாக இங்கு அமர்ந்து இருப்பவர்கள் உள்ளனர். கர்நாடகாவில் எடியூரப்பா பா.ஜ. ஆட்சியை கொண்டு வந்ததுபோல் தமிழகத்திலும் காவி கொடி ஆட்சி கொண்டு வந்தே தீருவோம். எந்த ஒரு காலத்திலும், எந்த ஒரு இந்துவும் விலை போக மாட்டோம் என சவால் விடுகிறோம். இவ்வாறு பொன் ராதாகிருஷ்ணன் பேசினார்.



நாகர்கோவில் : தமிழகத்தில் தி.மு.க., ஆட்சி அகற்றப்படுவதற்கான முதற்கட்ட எழுச்சி ஏற்பட்டு விட்டது என மாநில பொதுச்செயலாளர் தமிழிசை சவுந்தர்ராஜன், நாகர்கோவிலில் குமரிமாவட்ட பா.ஜ., சார்பில் நடந்த போராட்டத்தில் கூறினார். குமரி மாவட்ட பா.ஜ., சார்பில் அணைவருக்கும் கல்வி உதவித்தொகை வழங்ககோரி நாகர்கோவில் ஸ்டேடியம் முன் போராட்டம் நடந்தது.



நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாநில துணை தலைவர் ராஜா கூறியதாவது;- ஜூலை போராட்டம் நடைபெறுவது எங்களுக்கும் கல்வி உதவித்தொகை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தான். சிறுபான்மை மாணவர்களுக்கு கொடுக்கும் கல்வி உதவித்தொகை எங்களுக்கும் வேண்டும் என கேட்டு போராட வந்துள்ளோம்.



சோனியாவின் ஆட்சி ஏற்பட்டவுடன் தான் இது போன்று பிரித்தாளும் சூழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அமைச்சர் சுரேஷ்ராஜன் இந்து குழந்தைகளுக்கும் கல்விஉதவித்தொகை கொடுத்து வுருகிறோம் என கூறுகிறார். இதனை அவர் நிருபிக்க வேண்டும். தி.மு.க., அரசு இந்து சமுதாய மக்களுக்கு அநீதி இழைத்து வருகிறார். தற்போதைய சூழ்நிலையில் மாணவர்கள் மத்தியில் பாகுபாட்டை காட்டி வருகிறார். காங், தி.மு.க., கூட்டணி ஆட்சியை அப்புறப்படுத்த வேண்டும் என்பதை நிருபிக்கும் வகையில் மாணவர்கள் கூட்டம் அலைமோதியுள்ளது. இந்த போராட்டம் குமரியில் எழுச்சியுடன் துவங்கியுள்ளது. ஜூலை போராட்டம் ஜூலை மாதத்துடன் முடிந்து விடுவதில்லை. ஆகஸ்ட், செப்டம்பர். டிசம்பர் தொடர்ந்து மேமாதம் வரை நடைபெறும் அப்போது தி.மு.க., ஆட்சியும் அகலும், தாமரையும் மலரும். இவ்வாறு ராஜா கூறினார்.



தமிழிசைசவுந்தர்ராஜன்: நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தமிழிசைசவுந்தர்ராஜன் போயதாவது;- தமிழகத்தில் எழுச்சியோடு நடைபெறும் போராட்டத்தின் ஒரு பகுதியாக இன்று நாகர்கோவிலில் போராட்டம் நடக்கிறது. இயற்கையே நம்மை வரவேற்கம் விதமாக சூரியனை மறைத்து நமக்கு மாலை நேர தென்றலை தந்து கொண்டு இருக்கிறது. பிரதமர் மன்மோகனுக்கு ஆட்சி செய்ய தெரியாவிட்டால் வாஜ்பாயிடம் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள். இங்கு எழுச்சியுடன் காணப்படும் கூட்டம் தி.மு.க., அரசை வீழ்த்தும் கூட்டமாக அமையும். இவ்வாறு அவர் கூறினார்.